உள்ளடக்கத்துக்குச் செல்

புது டயரி/தூங்குகிற சுகம்

விக்கிமூலம் இலிருந்து

தூங்குகிற சுகம்!

நான் யாரையும் தூங்குமூஞ்சி என்று வைகிறதில்லை. தூங்குவது என்னவோ தவறாண காரியம் என்று எண்ணினால்தானே அப்படி வையத் தோன்றும் மனிதன் அநுபவிக்கும் சுகங்களில் நன்றாக அயர்ந்து தூங்கும் சுகத்துக்கு இணையாக ஏதாவது உண்டா? சில வகையான சுகங்களைச் சில பருவத்தில்தான் அநுபவிக்க முடியும். ஆனால் குழந்தை முதல் கிழவன் வரைக்கும் எல்லாரும் துயிலினால் சுகம் அடைகிறார்கள். பசியாற உணவு உண்ணுவதும் தன்னை மறந்து தூங்குவதும் கண்கண்ட சுகத்தைத் தருபவை. தெரியாமலா தாயுமானவர், “யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும் உறங்குவதுமாக முடியும்” என்று சொன்னார்?

எல்லாருமே இரவில் நன்றாக உறங்கிச் சுகம் பெறுகிறார்கள் என்று சொல்ல முடியாது. தூக்கம் வரவில்லையே என்று ஏங்குகிறவர்களே பல பேர். யாராவது தொழிலாளி வெட்டின கட்டை போலச் சுகமாகப் படுத்து உறங்கும் போது அத்தகையவர்கள் கண்டால் அவர்களுக்கு எத்தனை பொறாமை உண்டாகிறது, தெரியுமா? “இந்த மகானுபாவனைப் போலத் தூங்க நாம் கொடுத்து வைக்கவில்லையே” என்று அங்கலாய்ப்பார்கள்.

மனத்தைக் கட்டுப்படுத்தியவர்களுக்கு எந்தச் சமயத்தில் நினைத்தாலும் தூக்கம் வருமென்று சொல்கிறார்கள். நெப் போலியன் குதிரையின்மேல் இருந்தபடியே தூங்குவாணாம். மகாத்மா காந்தி நினைத்தபோது நினைத்த அளவுக்குத் தூங்குவாராம். நித்திராதேவி அவர்கள் ஆணைக்கு அடங்கி எப்படி நடந்தாள் என்ற சூட்சுமம் தெரியவில்லை.

நன்றாகத் தூக்கம் வருகிறவர்களுக்கு மெத்தை வேண்டும் என்பது இல்லை; தலையணை வேண்டுமென்பதில்லை. எந்த இடத்திலும் அவர்கள் தூங்கி விடுகிறார்கள். ஆனால் பல பேருக்கு அப்படி இல்லை. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமாகப் படுத்தால்தான் உறக்கம் வரும். வெளியூர்களுக்குப் போகும் பழக்கம் இல்லாதவர்களுக்கு இடம் மாறிப் படுத்தால் தூக்கம் வராது. சிலருக்கு இரண்டு மூன்று தலையணைகளை உயரமாக வைத்துக் கொண்டு படுத்தால்தான் துயில் கொள்ள முடியும். சிலருக்கு அதிக உயரமே கூடாது. சிலர் கையையே தலைக்கு உயரமாக வைத்துக் கொண்டு தூங்கி விடுகிறார்கள். அவர்கள் மகா பாக்கியசாலிகள். சிலர் தங்கள் தலைமேல் தலையணையை வைத்தபடியே தூங்குவதை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் தலைக்குக் கீழும் தலயணை இருக்கும்; தலைக்கு மேலும் இருக்கும்.

சிலர் இடப்பக்கமாக ஒருக்களித்துத் தூங்குவார்கள்; சிலர் வலப்பக்கமாகத் திரும்பி உறங்குவார்கள். மல்லாக்கப் படுத்தால்தான் சிலருக்குத் தூக்கம் வரும். சிலர் குப்புறப் படுத்துக்கொண்டு உறங்குகிறார்கள்; அப்படி உறங்குவது உடம்புக்கு நல்லதல்ல என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். இடப்பக்கமாகத் திரும்பிப் படுப்பதுதான் ஆண்களுக்கு நல்லதாம்.

“இடது கையில் படுப்போம்” என்று தேரையர் சொல்கிறார். ஆனால்,அந்தத் தேரையரைக் கேட்டுக் கொண்டா நமக்குத் தூக்கம் வருகிறது? சில பேருக்குத் தூக்கம் வருவிக்கும் மருந்து புத்தகங்கள். புத்தகத்தைப் படித்துக் கொண்டே தூங்கிப் போய்விடுவார்கள். எங்கள் ஆசிரியப் பெருமான் டாக்டர் ஐயரவர்கள் நண்பகலில் உண்டவுடன் சிறிது படுத்து இளைப்பாறுவது வழக்கம். அப்போது யாரையாவது பாடம் கேட்கச் சொல்வார்கள். பாடம் சொல்லிக் கொண்டே உறங்கி விடுவார்கள்; அல்லது யாரையாவது எந்தச் செய்யுள் நூலையாவது படிக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டே துயிலில் ஆழ்ந்து விடுவார்கள்.

சிலருக்கு வெளிச்சம் இருந்தால் உறக்கமே வராது. பகலில் தூங்க வேண்டுமானால், கண்ணைக் கட்டிக் கொண்டு தூங்குவார்கள். இன்னும் சிலருக்கு இராத்திரியில் விளக்கு இருந்தால்தான் தூக்கம் வரும். ஒரு கணவனுக்கு விளக்கு இருந்தால் உறக்கம் வராது. மனைவிக்கோ விளக்கு இருக்க வேண்டும். அவன் எழுந்தால் விளக்கை அணைத்து விடுவான். அவன் மனைவி எழுந்தால் மறுபடியும் விளக்கை ஏற்றி விடுவாள். இப்படி மாறி மாறிச் செய்தால் இரவு முழுவதும் அவர்கள் தொடர்ந்து தூங்கமுடியுமா?

எப்போதும் வெளியூர்களுக்கு ரெயிலில் போகிறவர்களில் சிலர் வண்டியில் படுத்தவுடன் தூங்கிவிடுகிறார்கள், ரெயிலின் சப்தம் அவர்களுக்குத் தாலாட்டுப் போல இருக்கும் போலும்! அவர்கள் தம் வீட்டில் உறங்கும்போது யாரையாவது ஒரு கட்டையை எடுத்துத் தட்டிக் கொண்டிருக்கும்படி செய்து தான் தூங்க முடியும் என்று நினைக்கிறேன்.சத்தம் இல்லாவிட்டால் அவா்களால் தூங்க முடியாதே!

தூங்கும்போது குறட்டை விடுகிறவர்கள் தம்மை மறந்து தூங்குகிறவர்களாக இருப்பார்கள். அந்தக் குறட்டையின் சுரபேதத்தாலேயே அவர்களுடைய தூக்கத்தின் செறிவை அளவெடுத்து விடலாம். குறட்டை நின்றால் தூக்கத்தின் மயக்கம் சிறிது குறைந்திருக்கிறதென்று தெரிந்து கொள்ளலாம். குறட்டை விடுவதில்தான் எத்தனை விதமான பேதங்கள்! சிலபேர் ராக ஆலாபனை மாதிரி நீண்டு குறட்டை விடுவார்கள். சிலபேர் துரிதகால சுரம்போல ஒலியெழுப்புவார்கள். சிலர் குறட்டை விடும்போது மோட்டார் சைக்கிள் விடுவதுபோல இருக்கும். அம்மியில் அரைப்பது போன்ற ஒலியை எழுப்புகிறவர்களும் இருக்கிறார்கள்.

என்னுடைய இளம் பிராயத்தில் எனக்கு உண்டான அநுபவத்தைச் சொல்கிறேன். நான் ஒர் ஊருக்குப் போயிருந்தேன். அந்த ஊரில் திருடர் பயம் அதிகம் என்று கேள்விப் பட்டிருந்தேன் இராத்திரி நான் படுத்துத் தூங்கினேன். நள்ளிரவில் ஏதோ சத்தம் கேட்டு விழிப்புக் கொடுத்தது. கரகர என்ற ஒலி கேட்டது. பிறகு கடுக்கடுக் என்ற தொனி வந்தது. யாரோ திருடர்கள் வந்து கன்னம் போடுகறார்கள் என்றே எனக்குப் பட்டது. நடுநடுவிலே கிசுகிசு கிசுகிசு என்ற ஓசை கேட்டது. இரண்டு மூன்று திருடர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள், இரகசியமாக என்று எண்ணினேன். சிறுபிள்ளை நான். எனக்குப் பயம் பிடித்துக் கொண்டது. யாரையாவது எழுப்பலாம் என்றால், அந்தத் திருடர்கள் என்னை அமிழ்த்தி வாயில் துணி அடைத்து விட்டால் சத்தம் கேட்கக் கேட்க என் வயிறு குழம்பிக் கொண்டே இருந்தது. ‘நிச்சயமாகத் திருடர்கள் கன்னம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்; விடியற்காலையில் என்ன என்ன திருட்டுப் போயிற்றென்று தெரியவரும்’ என்று எண்ணிப் பலமாக மூச்சுக்கூட விடாமல் படுத்திருந்தேன். எப்போதப்பா விடியும் என்று காத்திருந்தேன்.

விடிந்தது. அந்த வீட்டில் இருந்த என் நண்பனாகிய சிறுவனிடம், “இராத்திரி திருடன் வந்தானா? என்ன திருட் டுப் போயிற்று?” என்று கேட்டேன். அவன் திருதிரு வென்று விழித்தான். “நீ என்ன சொல்கிறாய்? திருடன் வருகிறதாவது” என்றான். “பின்னே இராத்திரி கன்னம் போடுகிற சத்தமும் கிசுகிசு என்று பேசுகிற சத்தமும் கேட்க வில்லையா?” என்றேன். அவன் சற்று நிதானித்தான். பிறகு, இடியிடி என்று சிரித்தான்.

“எங்கள் மாமா ஊரிலிருந்து வந்திருக்கிறார். அவர் போட்ட குறட்டையைக் கேட்டு நீ பயந்து போயிருக்கிறாய்” என்று அவன் கூறியபோதுதான் எனக்கு உண்மை விளங்கிற்று. ‘அப்படி எப்படி அவரால் இடைவிடாமல் நிதானமாகக் குறட்டை விடமுடிகிறது?’ என்று நினைத்தேன்.

குறட்டை விடுபவர்களின் மனைவிமார் இரவு நேரங்களில் மிகவும் துன்பப்படுவார்கள் என்று நினைத்திருந்தேன். குறட்டை விடும் நண்பர் ஒருவரையே கேட்டேன். “ஏன் ஐயா, உம்முடைய குறட்டையைச் சகித்துக்கொண்டு எப்படி ஐயா உம்முடைய மனைவி துரங்குகிறாள்?” என்றேன். அவர் என்ன சொன்னார் தெரியுமோ? “ஆரம்ப காலத்தில் கொஞ்சம் கஷ்டப்பட்டாள். பிறகு பழகிவிட்டது. அது மட்டுமல்ல. இப்போதெல்லாம் நான் குறட்டை விட்டால்தான் அவளுக்கு நன்றாகத் தூக்கம் வருகிறதாம்!” என்றாரே பார்க்கலாம். இவர்கள் அல்லவா உண்மையான வாழ்க்கைத் துணைவர்கள்?

தூக்கம் வருவதற்காக எத்தனையோ விதமான மருந்துகள் வந்திருக்கின்றன. வாழ்க்கையில் அளவுக்கு மிஞ்சிய சுறுசுறுப்புள்ளவர்களுக்கு உறக்கம் எளிதில் வருகிறதில்லை. அவர்களின் கெடுபிடியால் தாக்கம் அவர்களை விட்டு எங்கேயோ ஓடி விடுகிறது. அத்தகைய பெரிய மனிதர்கள்  ஒவ்வொரு நாளும் இஞ்செக்க்ஷன் போட்டுக் கொண்டுதான் உறங்குவார்கள்.

தூக்கம் வராமல் இரவுப் பொழுதைக் கழிப்பது போன்ற சங்கடம் வேறு இல்லை. காதலர்கள் ஒருவரை ஒருவர் பிரிந்தால் இரவெல்லாம் தூங்க மாட்டார்களாம். இராத்திரி ஒரு யுகம் போல இருக்குமாம். இலக்கியங்களில் இந்த உறக்கமில்லாத அநுபவத்தைப்பற்றி நூற்றுக் கணக்கில் பாடல்கள் இருக்கின்றன. கம்பராமாயணத்தில் ராமனும் சீதையும் சந்தித்த பிறகு இரவு முழுவதும் அவர்கள் தூங்கவில்லையாம். கொட்டுக் கொட்டென்று விழித்திருந்து பொழுதைப் போக்கினார்களாம்.

இராமாயணத்தில் இரண்டு பாத்திரங்கள். ஒருவன் பதினான்கு வருஷம் தூங்காமலே இருந்தானம். எப்படித் தான் இருந்தானோ? லக்ஷ்மணனை உறங்காவில்லி என்று சொல்கிறார்கள். ஒரு நாள் சரியானபடி தூக்கம் இல்லா விட்டால் மறுநாள் நமக்குக் கொட்டாவியாக வருகிறது. ஒரு வேலை ஒடுவதில்லை. ஏதோ சொப்பனத்தில் நடப்பது போல இருக்கிறது.

வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய திகம்பர சாமியார் என்ற நாவலில் படித்த ஒரு நிகழ்ச்சி என் நினைவுக்கு வருகிறது. ஒருவரிடமிருந்து உண்மையைக் கக்குவதற்காக இரண்டு மூன்று நாள் தூங்க விடாமலே செய்தார்களாம். அவர் தம்மை அறியாமலே தூக்கம் இல்லாத மயக்கத்தில் எல்லாவற்றையும் சொல்லிவிட்டாராம்.

இராமாயணத்தில் மற்றொரு பாத்திரம் கும்பகர்ணன். அவன் தூங்குவதற்காகவே பிறந்தவன். மற்ற ராட்சசர்களைவிட அவன் நிச்சயமாகக் குறைவாகத்தான் பாவம் செய்திருக்கவேண்டும். அவன் வாழ்நாளில் பெரும் பகுதி  தூக்கத்தில்தானே கழிந்துவிட்டது? பாவம் செய்வதற்குரிய சந்தர்ப்பம் அவனுக்குக் குறைவுதானே? உண்மையைச் சொல்லப் போனால், தூங்கும்போது திருடனானாலும் குழந்தையானாலும் சந்நியாசியானாலும் கொலைகாரனானாலும் எல்லோரும் ஒரே நிலையில், எந்தப் பாவமும் செய்யாமல் இருக்கிறார்கள். தூக்கத்துக்கு அத்தனை மகிமை!

தூக்கம் வராத சங்கடத்தைப் போலப் பெரிய துன்பம் வேறு இல்லை என்று சொன்னேன். அநுபவித்தவர்களுக்கு அந்த வேதனை நன்றாகப் புரியும். எல்லாரும் தூங்குகிறார்கள். நாம் மட்டும் விழித்துக்கொண்டிருக்கிறோம். கடிகாரத்தின் டக் டக் ஒலி தெளிவாகக் கேட்கிறது. எப்போதோ இடையில் சிறிது கண் அயர்கிறோம். மறுபடியும் விழிப்பு. இராத்திரிப்போது நீள்கிற மாதிரி தெரிகிறது. கடிகாரம் மணி அடிக்கிறது. ஒவ்வொன்றாக எண்ணுகிறோம். நான்கு மணி ஆகியிருக்கும் என்று எண்ணுகிறோம்.சீக்கிரம் விடிந்து விடும் என்ற நம்பிக்கை. மணி அடித்துக் கொண்டே இருக்கிறது. நான்கைத் தாண்டிவிட்டது. ஐந்து, ஆறு, ஏழு, எட்டு ஒன்பது — இன்னும் முடியவில்லை. பத்து, பதினென்று, பன்னிரண்டு சே! இப்போது தான் பன்னிரண்டு ஆகிறது. இன்னும் விடிய ஐந்து மணி நேரம் இருக்கிறது. அதற்குள் சிறிது மயக்கம். மறுபடியும் மணி காதில் விழுகிறது. ஒரே மணி அடிக்கிறது. ‘ஒ! சற்றே உறங்கிவிட்டோம். நாலரை மணியாக இருக்கும்; அடுத்தது ஐந்து மணிதான்’ என்று எண்ணி ஆவலோடு விடியற்காலத்தை எதிர்பார்க்கிறோம். மறுபடியும் ஒரு மணி அடிக்கிறது. ‘ஒ முன்பு அடித்தது ஒரு மணி; இது ஒன்றரை மணி என்று நினைத்து வேதனை அடைகிறோம். அடுத்தது இரண்டு மணி அடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மறுபடியும் அந்தப் பாழும் ஒற்றை மணியே அடிக்கிறது. அப்போதுதான் உண்மை தெரிய  வருகிறது. பன்னிரண்டு மணி அடித்த பிறகு நாம் ஒன்றும் அதிகமாகத் தூங்கிவிடவில்லை. சில நிமிஷங்கள் கண் அயர்ந்திருக்கிறோம். தொடர்ந்து பன்னிரண்டரை மணி, ஒரு மணி, ஒன்றரை மணி என்று மூன்று முறை அந்த ஒற்றை மணி கேட்கிறது.

அப்படியானால் விடிவதற்கு இன்னும் நெடுநேரம் இருக்கிறதே!

இப்படி அவஸ்தைப்பட்டவர்களுக்குத் தெரியும், தூக்கத்தின் சுகம் இன்னதென்று. “தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவதெக் காலம்?” என்று யாரோ பாடியிருக்கிறார்கள். அந்தத் தூங்காத தூக்கமெல்லாம் நமக்கு வேண்டாம். நமக்குத் தூங்கித் தூங்கியே சுகம் பெற வேண்டும். அந்தக் காலமே நல்ல காலம்.