புது டயரி/புரியாத சங்கிடம்

விக்கிமூலம் இலிருந்து



புரியாத சங்கடம்

இரண்டு பேர் ஒரு சத்திரத்துத் திண்ணையில் படுத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் தெலுங்கர்; அவருக்குத் தமிழ் தெரியாது. அவர் கையில் ஒரு நீண்ட தடி வைத்திருந்தார். அதன் ஒரு பக்கத்தில் ஒரு வளையம் இருந்தது.

மற்ருெருவர் தமிழர். அவருக்குத் தெலுங்கு தெரியாது. அவர் காதில் கடுக்கன் அணிந்திருந்தார். இரண்டு பேரும் வயது முதிர்ந்தவர்கள்.

இரவு நேரம் அது. தெலுங்கர் தம் தலைமாட்டில் தடியை வைத்திருந்தார். சுவரோரமாக அதைப் படுக்க வைத்திருந்தார். வளையம் உள்ள பக்கத்தை வெளியே நீட்டி, மற்ற நுனியைத் தலமாட்டில் வைத்துப் படுத்திருந்தார். வளையம் இருந்த துணிக்குச் சற்றுத் தள்ளித் தமிழர் படுத்திருந்தார். அவர் சற்றே புரண்டார். தடியின் வளையம் நிமிர்ந்திருந்தது. புரண்டபோது அந்த வளையத்தில் கடுக்கன் மாட்டிக் கொண்டது. மறுபடியும் புரண்டபோது தடி அசைந்தது. தெலுங்கர் தடி அசைவதை அறிந்து, மற்றவர் எடுக்கிறாரோ என்று எண்ணி, “நாதிரா” (என்னுடையதடா) என்று தெலுங்கில் சொன்னார். கடுக்கன் அகப்பட்டுக்கொண்ட சங்கடத்தில் தமிழர், “காதுரா” என்றார், தெலுங்கில் காதுரா என்றால்  இல்லையடா என்று பொருள். காதுரா என்பதைக் கேட்ட தெலுங்கர், இவன் இல்லை யென்கிறானே என்று ஆத்திரத்தோடு தடியை இழுத்தார். தமிழர், “ஐயையோ! காதுரா!" என்று அலறினார்.

ஒருவர் மொழியை ஒருவர் புரிந்து கொள்ளாததனால் வந்த சங்கடம் இது.

கன்னடம் பேசும் மாத்துவர்கள் வீட்டில் பெரிய விருந்து நடந்தது. பெரும்பாலும் கன்னடம் பேசுபவர்களே விருந்துண்டார்கள். அவர்களின் நடுவில் ஒரு தமிழர் இருந்தார். அவருக்குக் கன்னடம் தெரியாது. சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ஒருவர் பாத்திரத்தில் எதையோ கொண்டு வந்து, “சாக்கா, பேக்கா” என்று கேட்டார். தமிழர் இரண்டு விதப் பட்சணங்களில் எது வேண்டுமென்று கேட்கிறார் என்று எண்ணிக் கொண்டார். “சாக்கில் ஒன்று போடு; பேக்கில் ஒன்று போடு” என்றார். பரிமாறினவருக்குத் தமிழும் தெரியும். அவர் பக்கென்று சிரித்து விட்டார். கன்னடத்தில் சாக்கா என்றால் போதுமா என்றும், பேக்கா என்றால் வேண்டுமா என்றும் பொருள். போதுமா, இன்னும் வேண்டுமா என்று பரிமாறினவர் கேட்டார். அவர் பேச்சுப் புரியாத சங்கடத்தால் தமிழர் இரண்டுவிதப் பண்டங்கள் என்று நினைத்துக்கொண்டாா்.

கம்பரைப்பற்றிய கதைகளில் ஒன்று. அவர் சில காலம் தெலுங்கு தேசத்துக்குப் போய்த் தங்கினார். ஒரு நாள் இரவு ஒரு வீட்டுத் திண்ணையில் போய்ப் படுத்துக் கொண்டார். அந்த வீட்டுக்காரி திம்மி என்பவள். அவள்,பாதி ராத்திரியில் கதவைத் திறந்து பார்த்தாள். “ஏமிரா, ஒரி?” (என்னடா, நீ யார்?) என்று கேட்டாள். கம்பருக்குத் தெலுங்கு தெரியாது. திருதிரு என்று விழித்  தார். திம்மிக்குச் சந்தேகம் வந்துவிட்டது. “எந்துண்டி வஸ்தி” (எங்கிருந்து வந்தாய்?) என்று மறுபடியும் கேட்டாள். அதற்கும் அவரால் பதில் சொல்ல முடியவில்லை. ஏதோ சைகை செய்தார். அவள் கோபமாகப் பதில் சொல்லிவிட்டுக் கதவைச் சாத்திக்கொண்டு போய்விட்டாள். இரவில் அவருக்குத் தாகம் ஏற்பட்டது. கதவைத் தட்டினார். திம்மி எழுந்து வந்து கதவைத் திறந்து நாய் போலச் சீறினாள்; என்ன என்னவோ தெலுங்கில் பேசி வைதாள். அவர் சைகையால் தாகம் என்பதைக் குறிப்பித்தார். அவள் அதைக் கவனிக்கவே இல்லை. படபட வென்று தெலுங்கில் பேசிவிட்டுக் கதவை மூடிக் கொண்டு போய்விட்டாள். இரவெல்லாம் கம்பருக்குத் தூக்கமே இல்லை. வேறிடத்துககுப் போய்ப் படுக்கலாம் என்றாலோ, தெரியாத ஊரில் எங்கே போவது? இங்கே ஒரு திம்மி வந்ததுபோல அங்கே ஒரு பொம்மி வந்தால் என்ன செய்வது? இவளாவது வார்த்தையளவிலே நின்றாள். அந்தப் பொம்மி கையில் எதையாவது எடுத்து வந்துவிட்டால்?

எப்பொழுது விடியும் என்று காத்திருந்து விடிந்தவுடன் அவர் புறப்பட்டுவிட்டார். அன்று இரவு மொழி தெரியாமல் தாம் பட்ட அவஸ்தையை ஒரு பாட்டிலே வைத்துப் பாடினார்.

“ஏமிரா வோரி என்பாள்;
எந்துண்டி வஸ்தி என்பாள்;
தாம்இராச் சொன்ன எல்லாம்
தலைகடை தெரிந்த தில்லை;
போம்இராச் சூழும் சோலை
பொரும்கொண்டைத் திம்மி கையில்
நாம்இராப் பட்ட பாடு
நமன்கையில் பாடு தானே!”

(இராச்சூழும் சோலை பொரும் கொண்டை-இரவைப் போல இருள் சூழ்ந்திருக்கும் சோலையைப் போன்ற அடர்ந்த கூந்தலை உடைய)

திம்மி என்ற பொதுமகளோடு கம்பர் ஒரிரவைக் கழித்ததாகவும், அப்போது பட்ட அவஸ்தையைக் குறித்து இப்படிப் பாடியதாகவும் சிலர் சொல்லுவதுண்டு. எப்படியானால் என்ன? பாஷை புரியாத சங்கடத்தில் அவர் அகப்பட்டுக் கொண்டு விழித்தார் என்பது உண்மை.

ஒர் ஆங்கிலேயர் பல ஆண்டுகளுக்கு முன்னால் திருவல்லிக்கேணி ரோடில் நடந்து போய்க்கொண்டிருந்தார். அப்போது ஒரு சாஸ்திரிகள், ஏதோ அவசரமாகப் போகிறவர் வெகு வேகமாக அவரைக் கடந்து சென்றார், அந்த அவசரத்தில் அந்த வெள்ளைக்காரரை இடித்துக்கொண்டு போனார். அதனால் ஆங்கிலேயர் கையிலிருந்த பொருள் கீழே விழுந்து, அவருக்குக் கோடம் வந்துவிட்டது. ஆங்கிலத்தில் இரண்டு மூன்று வசைகளைச் சொன்னார். அதைக்கேட்ட சாஸ்திரிகளுக்கும் கோபம் வந்துவிட்டது. அவருக்கு அதிகமாக வசவு வார்த்தைகள் சொல்லிப் பழக்கம் இல்லை என்றாலும் கோபம் கொண்டவராய். “கத்திரிக்காய், வாழைக்காய், புடலங்காய், பறங்கிக்காய், பூஷணிக்காய், அவரைக்காய், பாகற்காய்” என்று படபடவென்று சொன்னார். அவர் சொல்லும் தொனியினால் அவர் தம்மை வைகிறாரென்று எண்ணிக்கொண்டார் வெள்ளைக்காரர். அவருக்குக் கோபம் வரவில்லை; வியப்புத்தான் உண்டாயிற்று. “அட தமிழில் வைய இத்தனை வார்த்தைகள் இருக்கின்றனவா என்றுதான் அவர் ஆச்சரியப்பட்டாராம்.

கும்பகோணம் ஆஸ்பத்திரிக்கு ஒரு முதியவர் தம் பேரனை அழைத்துக் கொண்டு மருந்து வாங்கப் போனார். அவர் கிராமத்திலிருந்து வந்திருந்தார். ஆஸ்பத்திரியையே  பார்த்ததில்லை. டாக்டரிடம் உடம்பைக் காண்பித்தார். அவர் மருந்து எழுதிக் கொடுக்க, அதைக் கம்பவுண்டரிடம் காட்டி மருந்து வாங்கிக்கொண்டார். ஆஸ்பத்திரியையும் அங்குள்ள அமைப்புக்களையும் பார்த்து அவர் வியப்பில் மூழ்கியிருந்தார். வீட்டுக்குத் திரும்பும்போது தம் பேரனை ஆஸ்பத்திரியைப் பற்றிப் பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டே வந்தார்.

“என் மார்பில் குழாய் வைத்துப் பார்த்தாரே, அவர் யாா்?”

“அவர்தாம் ஸ்ர்ஜன்.”

“அவருக்கு என்ன சம்பளம்?”

“ஐந்நூறு ரூபாய் இருக்கும்.”

“மருந்து கொடுத்தாரே; அவர் யார்?”

“அவர் கம்பவுண்டர்.”

“அவருக்குச் சம்பளம்?”

“அறுபது ரூபாய் இருக்கும்.”

“அட அறுபது ரூபாய் வாங்குகிறவனை மரியாதையோடு கம்பவுண்டர் என்கிறாய், ஐந்நூறு ரூபாய் வாங்குகிற வரை ஸர்ஜன் என்று மரியாதையில்லாமல் ஒருமையில் சொல்கிறாயே!”

“பின்னே எப்படிச் சொல்ல வேண்டும், தாத்தா?” “பெரிய உத்தியோகஸ்தரை ஸ்ர்ஜர் என்றும், மருந்து தந்தவரைக் கம்பவுண்டன் என்றும் சொல்” என்று தாத்தா சொன்ன போது பேரன் சிரிக்காமல் என்ன செய்வான்? பாஷை புரியாத சங்கடந்தானே இதுவும்?

என்னுடைய ஆசிரியப் பெருமாளாகிய மகாமகோ பாத்தியாய டாக்டர் ஐயரவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது.

ஆயினும், அவர்கள் கல்லூரியில் பாடம் சொல்லிக் கொடுத்தபோது மாணாக்கர்கள் மிகவும் ஆர்வத்தோடு கேட்பார்கள். ஆங்கிலப் பேராசிரியருக்கு உள்ள மதிப்பு அவர்களுக்கும் இருந்தது.

ஒரு நாள் அவர்கள் பாடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். செய்யுட்பாடம் நடந்து கொண்டிருந்தது. ‘அண்டருலகத்தெவரும்’ என்று பாட்டில் ஒரு பகுதி வந்தது. ஐயரவர்கள் ஒரு மாணாக்கனைப் பார்த்து, “அண்டர் உலகம் என்றால் என்ன?” என்று கேட்டார்கள். அவன் உடனே, “அடியில் உள்ள பாதாள லோகம்” என்றான். அண்டர் என்பது தேவரைக் குறிக்கும். அண்டர் உலகம் என்றால் தேவலோகம் என்று பொருள். ஆனால் அந்த மாணாக்கனோ, பாதாள உலகம் என்றான், அது கேட்டு மாணாக்கர்கள் சிரித்தார்கள். அவன் ஏன் அப்படிச் சொல்கிறான் என்று ஐயரவர்களுக்குத் தெரியவில்லை. ஒரு பையன் அந்த மாணாக்கன் சொன்னதற்குரிய காரணத்தை எடுத்துச் சொன்னபோதுதான் உண்மை விளங்கிற்று. ஆங்கிலத்தில் அண்டர் (under) என்றால் அடி என்று பொருள். ஆகவே அண்டர் உலகம் என்பதற்கு அடியில் உள்ள பாதாள லோகம் என்று அவன் பொருள் சொல்லியிருக்கிறான்.

மற்றொரு சமயம் மாநிலக் கல்லூரிக்குக் கவர்னர் வந்தார். ஐயரவர்கள் அங்கே தமிழாசிரியராக இருந்தார்கள். அவர்கள் தமிழிலுள்ள பழைய நூல்களைப் பதிப்பித்து நாட்டில் ஒர் இலக்கிய எழுச்சியை உண்டு பண்ணியவர்கள் என்று கவர்னர் அறிவார். ஆகவே அவர்கள் பாடம் சொல்லிக்கொண்டிருந்த அறைக்கு வந்தார். அவர் வரக்கூடும் என்று எண்ணிய ஆசிரியப்பிரான் சில ஏட்டுச் சுவடிகளைக் கொண்டு வந்து மேசையில்  வைத்திருந்தார்கள். கவர்னர் அவர்களைக் கண்டு, “இப்போது என்ன ஆராய்ச்சி செய்து வருகிறீர்கள்?” என்று கேட்டார். பதிப்பைப் பற்றி விசாரித்தார். அப்போது ஆங்கிலப் பேராசிரியர் மொழிபெயர்ப்பாளராக உடனிருந்து, ஒருவர் சொல்வதை மற்றொருவருக்கு எடுத்துச் சொல்லி வந்தார். ஐயரவர்கள் ஓர் ஏட்டுச் சுவடியை எடுத்துக் காட்டினார்கள். அதைப் பிரித்தும் காட்டினார்கள். கவர்னர், “இந்தச் சுவடிகள் உங்களுக்கு எங்கே கிடைத்தன?” என்று ஆங்கிலத்தில் கேட்டார். சுவடி என்று சொல்லாமல் பனை ஒலைகள் என்ற தொடரை (cudian leaves)ச் சொன்னார். மொழிபெயர்த்த பேராசிரியருக்கு அந்த ஆங்கிலத் தொடருக்குரிய தமிழ் வார்த்தை தோன்றவில்லை. “இந்தச் சருகுகளை எல்லாம் எங்கே சம்பாதித்தீர்கள்?” என்று மொழிபெயர்த்தார். பனை ஒலையைச் சருகு என்று அவர் சொன்னதும் ஐயரவர்களுக்குச் சிரிப்பு வந்து விட்டது. அடக்கிக் கொண்டார்கள். பாவம் எதற்கு எது சரியான வார்த்தை என்று புரியாத சங்கடத்தால் பேராசிரியர் ஒலைச் சுவடியைச் சருகாக்கி விட்டார்.

நான் பல ஆண்டுகளுக்குமுன் முதல் முதலாகப் பம்பாய்க்குச் சென்றேன். பம்பாய்த் தமிழ்ச் சங்கத்தார் என்னைப் பேச அழைத்திருந்தார்கள். பம்பாய் நகரைச் சுற்றிப் பார்க்கவேண்டும் என்ற விருப்பம் எனக்கு உண்டாயிற்று. மாலையில்தான் கூட்டம் நடந்தது. ஆகையால் பகல் நேரங்களில் ஒவ்வொரு நாளும் சில அன்பர்கள் எனக்காக லீவு எடுத்துக்கொண்டு என்னுடன் வந்து நகரத்தைச் சுற்றிக் காட்டினர்கள்.

ஒரு நாள் மலபார் ஹில்லுக்குப் போனோம். அங்கே மகாத்மா காந்தி தங்கியிருந்த பிர்லா மாளிகைக்குப் போக எண்ணினேன். ஒரு பங்களாவில் காவல் காத்து நின்ற தர்வானிடம் நண்பர்கள் ஹிந்தியில் பிர்லா மாளிகை எங்கிருக்கிறதென்று கேட்டார்கள். அவன் ஓரிடத்தை அடையாளம் சொன்னான். அதன்படி போய்ப் பார்த்தால் அது பிர்லா மாளிகை அல்ல; ஜின்னா இருந்த இல்லம், தர்வானிடம் எங்களுக்குக் கோபம் கோபமாக வந்தது. நாங்கள் கேட்டதொன்று, அவன் சொன்னது வேறொன்றாக இருந்ததனால் கோபம். திரும்பி வந்தோம், எங்களுக்குத் தவறான வழியைக் காட்டிய தர்வான் நின்ற பங்களா வழியாகவே மீண்டோம். அப்போது, “நான் ஒரு வேடிக்கை செய்கிறேன். நீங்கள் சிரிக்காமல் கவனியுங்கள்” என்று சொல்லிவிட்டு அந்தத் தர்வானைப் பார்த்துச் சிாித்தபடியே பேசத் தொடங்கினேன். “முட்டாள் பயலே நாங்கள் ஒன்று கேட்க ஒன்று சொன்னயே! மூடா” என்று சிரித்துக்கோண்டே சொன்னேன். நான் முகமலர்ச்சியோடு சிரித்தபடியே சொல்வதைக் கண்டு அவன் தன்னைப் பாராட்டுவதாக எண்ணிக் கொண்டான். “அச்சா! அச்சா” என்று புன்னகையுடன் தலையை ஆட்டினான். அந்த இடத்தை விட்டுப் போன பிறகு உடன் வந்த நண்பர்கள் அடக்கி வைத்திருந்த சிரிப்பைக் கொட்டினார்கள். நான் பேசுவது அந்தக் காவலனுக்குப் புரிந்திருந்தால் என்னைச் சும்மா விட்டிருப்பானா?

“தேசங்கள்தோறும் பாஷைகள் வேறு” என்று சொல்கிறார்கள். ஒரே மொழியைப் பேசுகிறவர்களிடையே கூடச் சில பகுதிகளில் இருப்பவர் பேசும் சில பேச்சுக்கள் மற்றப் பகுதியினருக்கு விளங்குவதில்லை. சென்னை ரிக்க்ஷாக்காரர், “கீது” என்றால் திருநெல்வேலிக்காரர், “இருக்கிறது” என்று புரிந்து கொள்ள முடிகிறதில்லை.  நான் சிறு பையனாக இருந்தபோது சம்பந்த முதலியார் எழுதிய நாடகங்களைப் படித்தேன். எங்கள் ஊர் சேலம் மாவட்டத்தில் உள்ள மோகனூர். சென்னைப் பக்கத்துப் பேச்சுப் புரியாது. சம்பந்த முதலியார் நாடகங்களில் உரையாடலினிடையே, ‘போய்க்கினு, வந்துக்கினு, பேசிக்கினே’ என்று வரும். முதலில் அவை எனக்கு விளங்கவில்லை. சென்னைக்கு வந்த பிறகே, ‘போய்க்கிட்டு’ என்று எங்கள் ஊரில் சொல்வதையே போய்க்கினு என்று சொல்கிறார்கள் என்று புரிந்தது. மேலும் ஆராய்கையில் தெலுங்கு மொழியில், ‘போய்க்கொனி’ என்று வழங்குவதும் தெலுங்கு நாட்டை அடுத்த சென்னையில் ‘போய்க்கினு’ என்று வழங்குவதும் ஒன்றுக்கொன்று உறவுள்ளன என்ற தொடர்பும் தெரிய வந்தது.

யாழ்ப்பாணத்தில் வாழ்பவர்கள் தமிழர்கள். அவர்கள் பேசும் தமிழில் பல சொற்கள் நமக்கு விளங்காதவை. நாம் ‘பேசிக் கொண்டிருந்தேன்’ என்பதை அவர்கள் ‘கதைத்துக் கொண்டிருந்தேன்’ என்பார்கள்; இங்கே கதைத்தல் என்றால் கதைவிடுதல் அல்லது பொய் கூறுதல் என்று பொருள்படும். பாரதியார் கூட அந்தப் பொருளில்தான், ‘உறவென்றும் நட்பென்றும் கதைக்கிறான்’ என்று ஆள்கிறார். ‘பேசினான்’ என்றால் அங்கே வைதான் என்று பொருள் கொள்வார்கள், ‘தூங்கினான்’ என்று உறங்குவதைச் சொல்கிறோம். அவர்கள் ‘நித்திரை கொண்டான்’ என்றே சொல்வார்கள். தூங்கினான் என்பதற்குத் தூக்குப் போட்டுக்கொண்டான் என்று அவர்கள் அர்த்தம் பண்ணிக் கொள்வார்கள். ‘சோப்பு நான் உபயோகிப்பதில்லை’ என்று நாம் சொல்வதை அவர்கள், ‘சோப்புப் பாவிப்பதில்லை’ என்பார்கள்.

முதல் முதலாக நான் இலங்கைக்குப் போயிருந்த போது யாழ்ப்பாணத்துக்கும் போனேன். அங்கே நீர் வேலி என்னும் இடத்தில் உள்ள இராசேந்திர குருக்கள் என்பவர் வீட்டில் தங்கியிருந்தேன். அதன்பின் எப்போது யாழ்ப்பாணம் போனாலும் அவர் வீட்டிலேதான் தங்குவேன். அவர் எனக்கு நெருங்கிய நண்பராகி விட்டார்.

முதல் முதலில் அங்கே போயிருந்தபோது இராசேந்திர குருக்களிடம் அவருடைய குடும்பநலனைப் பற்றி விசாரித்தேன். அவர் தம் சகோதர சகோதரிகளைப் பற்றியும் தந்தையாரைப் பற்றியும் சொன்னார். பேச்சினிடையே, “ஒரு தங்கை மோசம் போய்விட்டாள்” என்றார். அதைக் கேட்டு எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவள் ஒழுக்கம் தவறி எங்கோ ஓடிவிட்டாள் என்றல்லவா தோன்றுகிறது? அதைப் போய் என்னிடம் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? என்று யோசித்தேன். அதற்கு மேல் அதைப்பற்றித் தூண்டித் துருவிக் கேட்கக் கூடாது என்று சும்மா இருந்துவிட்டேன்.

பிறகுதான் உண்மை தெரிய வந்தது. யாழ்ப்பாணத்துக்காரர் பேச்சு வழக்கைப் புரிந்துகொண்ட பிறகு, மோசம் போனாள் என்பது இறந்து போனாள் என்ற பொருளில் வருகிறது என்பது தெளிவாயிற்று. மோட்சம் போனாள் என்பதுதான் அப்படியாயிற்றுப் போலும்! நான் எண்ணியது என்ன? உண்மையான பொருள் என்ன? புரிந்து கொள்ளாத சங்கடத்தினால் நான் முதலில் எப்படியெல்லாம் தப்புக் கணக்குப் போட்டுவிட்டேன்!

இலங்கைக்குக் கலைமகள் பத்திரிகை போகிறது. அங்கே ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். ஒருமுறை எங்கள் அலுவலக மானேஜர் ஏஜெண்டுகளுக்கு ஒரு சுற்றறிக்கை  விட்டார். “உங்கள் ஊரில் இன்னும் அதிகமான பிரதிகள் விற்க ஏற்பாடு செய்யவேண்டும்” என்பது அதன் சாரம். அங்கங்கே உள்ள ஏஜெண்டுகள் தங்கள் யோசனைகளைத் தெரிவித்திருந்தார்கள். யாழ்ப்பாணத்து ஏஜெண்டும் ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

மானேஜர் அதை எடுத்துக்கொண்டு என்னிடம் வந்தார். “இதைப் பாருங்கள் ஸார்! இந்த ஏஜெண்டு போக்கிரித்தனமாக எழுதியிருப்பதைப் பாருங்கள்” என்று கடிதத்தைக் காட்டினார்.

“எல்லாரும் பாவிக்கும் புடைவை விற்கும் கடைகளிலும் பத்திரிகைகளைக் கொடுத்து விற்பனவு செய்யச் செய்கிறோம். இன்னும் மிச்சம்பேர் வாங்கும்படி தெண்டிக்கிறோம்” என்று அந்தக் கடிதத்தில் இருந்தது.

“பாவிக்கும் புடைவை விற்கிறதாவது! வாங்கும்படி தெண்டிக்கிறதாவது! இவர்கள் என்ன போலீஸ்காரர்களா?” என்று மானேஜர் சற்றே கோபக்குரலோடு சொன்னார்.

நான் வாய்விட்டுச் சிரித்தேன். “எல்லாரும் உபயோகப்படுத்தும் ஆடைகளைவிற்கும் பாபுலர் ஜவுளிக்கடைகளில் பத்திரிகைகளைக் கொடுத்து விற்பனை செய்யச் செய்கிறோம்; இன்னும் அதிகம் பேர் வாங்கும்படி முயற்சி செய்கிறோம் என்ற அர்த்தத்தில் அல்லவா அவர் எழுதியிருக்கிறார்?” என்றேன் நான். புடைவை என்பது எல்லா ஆடைகளையும் குறிக்க வழங்கும் சொல் என்றும், விற்பனை என்பதே யாழ்ப்பாணத்தில் விற்பனவு என்று ஆயிற்றென்றும்,மிச்சம் என்பதற்குப் பொருள் அதிகம் என்றும், தெண்டிக்கிறோம் என்பது முயற்சி செய்கிறோம் என்ற பொருளுடைய தென்றும் மானேஜர் புரிந்துகொள்ளவில்லை. அதனால் அவருக்குக் கோபம் வந்தது. புரியாத சங்கடந்தானே இது?

அவ்வளவு தூரம் போவானேன்? நாமெல்லாம் ‘பாட்டுப் படிக்கிறான்’ என்றால் புத்தகத்தில் உள்ள பாட்டை வாசிக்கிறான் என்றுதான் அர்த்தம் பண்ணிக் கொள்வோம். ஆனால் திருநெல்வேலிக்காரர்களோ பாட்டுப் பாடுவதையே, ‘பாட்டுப் படிக்கிறான்’ என்கிறார்கள்; பாரதியாரே, “அமுது பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான் என்று கண்ணன் பாட்டிலே அந்தத் திருநெல்வேலி முத்திரையை வைத்திருக்கிறார். அதைப் புரிந்து கொண்டால் தானே தெளிவு பிறக்கும்?