புது டயரி/ஸார் பேப்பர்!

விக்கிமூலம் இலிருந்து


ஸார் பேப்பர்!

“ஸார் பேப்பர்!”

அப்பாடி எனக்கு உயிர் வந்தது. எத்தனை நேரம் காத்திருப்பது ஒரு மணி நேரமாகக் காத்திருக்கிறேன். பேப்பர் வந்த பாடில்லை. கோபம் கோபமாக வந்தது. போன் பண்ணிப் பார்த்தேன். வந்து விடும் என்று சொன்னார்கள். பையன் இப்போதுதான் வந்து போடுகிறான்.

“ஏன் அப்பா, இவ்வளவு நேரம்” என்று கேட்கிறேன்.

“ஏதோ யந்திரக் கோளாறாம். இப்போதுதான் தந்தார்கள்!” என்று சொல்லிக் கொண்டே அவன் போய் விடுகிறான். அவன் அவசரம் அவனுக்கு.

“கால எழுந்தவுடன் காப்பி-பின்பு
கருத்துட னேபடிக்கும் பேப்பர்”

என்று வழக்கப்பட்டுப் போன எனக்கு அந்த நேரத்தில் காபி கிடைக்காவிட்டாலும் கவலைப்படமாட்டேன்; பேப்பர் படிக்காவிட்டால் என்னவோ மாதிரி இருக்கிறது. அட! காபி என்றால் காபிதானா? நான்தான் காபி சாப்பிடுவதில்லையே பால் சாப்பிடுகிறேன். அதைப் பருகின கையோடே பத்திரிகையைப் படிக்க உட்கார்ந்து விடுவேன். என்னோடு பழகின எல்லாருக்கும் தெரியும், அந்த நேரத்தில் நான் என்ன செய்வேனென்று. சரியாகக் காலை ஆறு  மணிக்குப் பேப்பரும் கையுமாக எங்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருப்பதைக் காணலாம்.

பத்திரிகை படிப்பதென்பது இன்று நேற்று வந்த பழக்கம் அல்ல. இளம்பிராயம் முதலே நாள்தோறும் விடாமல் பத்திரிகை படித்து வருகிறேன். இளம்பிராயம் என்றால் தொட்டில் பருவம் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். நாலாம் பாரம் படிக்கிற காலம் முதல் அன்றாடம் பத்திரிகை படிப்பேன். அப்போதெல்லாம் ஞாயிற்றுக் கிழமைகளில் தினப்பத்திரிகை கிடையாது. மற்ற நாட்களில் படிப்பேன்.

ஊரில் படித்துக்கொண்டிருந்த காலம். அந்தக் காலத்தில் காலப் பத்திரிகைகள் இல்லை. சென்னையில் மாலையில் வெளிவரும் செய்தித்தாள் தபாலில் மறுநாள் வெளியூருக்கு வரும். தபாலில்தான் வரும், கடைகளில் பத்திரிகைகளை விற்பதில்லை. சந்தா செலுத்தித் தபால் மூலம் வருவித்துத்தான் படிக்க வேண்டும். ரேடியோ இல்லாத காலம். ஆகவே எல்லாரும் பத்திரிகையை எதிர் பார்த்து நிற்பார்கள். எல்லாரும் பத்திரிகை வருவிக்க மாட்டார்கள். கிராமத்தில் இரண்டொரு பேர்களே வருவித்துப் படிப்பார்கள்; படித்துவிட்டுப் பிறருக்கும் படிக்கக் கொடுப்பார்கள்.

எங்கள் ஊரில் ஒரு செட்டியார், காங்கிரஸ்காரர், பத்திரிகை வாங்கினார். பிறகு நிறுத்திவிட்டார். இளைஞர்களெல்லாம் சேர்ந்து ‘திலகர் வாசகசாலை’ என்று ஆரம்பித்தோம். அதற்குச் சுதேசமித்திரன் பத்திரிகையை வருவித்தோம். பாதிச் சந்தாவுக்கு அதைக் கொடுத்தார்கள். வாசகசாலை வேலை செய்யாமல் நின்ற பிறகும் அது அரை விலையிலே வந்துகொண்டிருந்தது. அந்தச் செட்டியாரே வாசகசாலையின் தலைவர்.  அந்தக் காலத்தில் சுதேசமித்திரன் பிரபலமான பத்திரிகை. இங்கிலீஷில் ஹிந்து. நான் சுதேசமித்திரனைத் தான் படித்து வந்தேன். பிறகு யாருக்காவது இங்கிலீஷ் பத்திரிகை வந்தால் அதை வாங்கிப் படிப்பேன். சென்னைக்கு வந்த பிறகுதான் ஹிந்துவை நாள்தோறும் படிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதுவும் காலப் பத்திரிகையாக மாறினபிறகு, எழுந்தவுடன் அதன் முகத்தில் விழித்த பிறகுதான் மறுகாரியம் பார்ப்பேன். ஆமாம், பேப்பர்க்காரன் பேப்பர் போட்டிருக்கிறானா என்று பார்த்து விட்டுத் தான் பல் விளக்கப் போவேன்.

பொடி போடுகிறவர்களுக்கும் புகையிலை போடுகிறவர்களுக்கும் ஒரு பழக்கம் உண்டு. பட்டணம் பொடி போடுகிறவர்கள் அதையேதான் போடுவார்கள். சிவபுரிப் புகையிலை போடுகிறவர்களுக்கு வேறு புகையிலை பிடிக்காது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றில் பிடிப்பு. அதுபோலத் தான் பத்திரிகை படிக்கிறவர்களும், ஏதாவது ஒரு பத்திரிகையையே படித்து வழக்கப்படுத்திக் கொள்வார்கள். அந்தக் குறிப்பிட்ட பத்திரிகையைப் படிக்காமல் வேறு பத்திரிகையைப் படித்தால் பத்திரிகை படித்ததாகவே ஒரு திருப்தி இராது. என் சொந்த அநுபவமும் அப்படித்தான். ஹிந்து படிக்காவிட்டால் திருப்தி உண்டாவதில்லை. வெளியூர்களுக்குப் போகும்போது சில இடங்களில் ஹிந்து கிடைக்காமல் போகும். கிடைக்கும் பத்திரிகையை வாங்கி வாசிப்பேன். ஊருக்கு வந்த பிறகு நான் வாசிக்காத அத்தனை நாள் ஹிந்துப் பத்திரிகைகளையும் எடுத்து, விடாமல் படிப்பேன். மற்றவர்களுக்கும் இந்த அநுபவம் உண்டென்றே நினைக்கிறேன்.

பம்பாய், டில்லி, கல்கத்தா போனால் அங்கெல்லாம் என்ன என்னவோ பத்திரிகைகள் வருகின்றன. ஹிந்து யாருக்காவது வரும். அவரைத் தேடிப் பிடித்து வாங்கி  வாசிப்பேன். தமிழ் நாட்டுச் செய்திகளை அதில்தானே பார்க்க முடியும்?

தமிழ் நாட்டில் எங்காவது வெளியூர்களுக்குப் போய் விட்டுச் சென்னைக்கு வருவேன். அநேகமாகக் காலை வண்டியில்தான் திரும்புவேன். வண்டி அரக்கோணத்துக்கோ, சின்ன ரெயிலானல் செங்கற்பட்டிற்கோ வரும்போது பேப்பர் வாங்கிப் படிப்பேன். இப்போதுதான் ஒவ்வொரு நாளும் காலப் பத்திரிகையைத் தமிழ்நாட்டில் எந்த மூலை முடுக்குகளிலும் வாங்கலாமே! அந்த விஷயத்தில் தமிழ்நாடு முன்னேறியிருக்கிற அளவுக்கு மற்ற மாநிலங்கள் முன்னேறியிருப்பதாகத் தெரியவில்லை. வீட்டுக்கு வந்தவுடன் அன்றைப் பத்திரிகையைப் படிக்கலாம். ஆனால் அதற்குப் பொறுமை இருப்பதில்லை. அரக்கோணத்திலோ, செங்கற்பட்டிலோ பேப்பர் வாங்குவேன். ஹிந்து வாங்கமாட்டேன். அதைத்தான் வீட்டில் போய்ப் பார்க்கப் போகிறேனே! ஆகவே வேறு எதையாவது வாங்கிப் படிப்பேன். எதிர்ப் பலகையில் அமர்ந்திருக்கும் ஆசாமி என்னைப்போலவே பத்திரிக்கை படிக்கும் ஆவலுள்ளவராக இருப்பார். ஆனால் என்னைப் போல அவசரக் குடுக்கை அல்ல. வீட்டுக்குப் போய்ப் படிக்கலாம் என்ற எண்ணமுடையவராக இருக்கலாம். என்றாலும் என் கையில் பத்திரிகையைக் கண்டதும் அவருடைய பத்திரிகைக் காதல் மூண்டெழும். ஆனால் காசு கொடுத்து ஒன்றை வாங்கமாட்டார். ஒரு குழந்தை தின்பண்டம் தின்கிறபோது அது கிடைக்காத மற்றொரு குழந்தை அதை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்குமே, அப்படிப் பார்த்துக்கொண்டிருப்பார். நான் பக்திரிகையை விரித்து என் முகத்தை மறைத்துக் கொண்டு படிப்பேன். முதல் பக்கத்தை முடித்துவிட்டு உள்பக்கங்களைப் படித்துக் கொண்டிருப்பேன். அந்த ஆசாமி குனிந்து குனிந்து முதல் பக்கத்தில் இருப்பதைப் பார்ப்பார். என் கை நடுவிலே இருக்கும். தலைப்புக்களை மட்டும் பார்ப்பார் என்று நினைக்கிறேன். கையை மாற்றி வேறிடத்தில் பிடித்துக் கொண்டால் மறுபடியும் ஒரு பக்கமாகச் சாய்ந்து பார்ப்பார். எனக்கு இது தெரியும். ஆனாலும் தெரியாதவனைப் போல வெகு சுவாரசியமாகப் படித்துக் கொண்டிருப்பேன்.

ஒருவன் கையில் எதையாவது வைத்துக்கொண்டு உண்ணும்போது எதிரே நாக்கை நீட்டிக்கொண்டு, ‘நமக்கும் சிறிது போட மாட்டானா?’ என்று ஆவலோடு நாய் காத்திருக்குமே, அந்த நினைவுதான் எனக்கு வரும். அப்படியெல்லாம் ஆறறிவு படைத்த மனிதரை நினைக்கக் கூடாதுதான். என்றாலும் அந்த உபமானந்தான் தோன்றுகிறது. ஏன்? நான்கூட அப்படித்தானே? சில சமயங்களில் ஸ்டேஷனில் பத்திரிகை எனக்குக் கிடைக்காது; தீர்ந்து போயிருக்கும். அப்போது எதிரே ஒருவர் பத்திரிகை வாங்கிப் படித்துக் கொண்டிருப்பார். அந்தச் சமயத்தில் நானும் பைரவர் வாகனத்தைப் போலத்தான் அந்தப் பத்திரிகையை ஆசாபங்கத்தோடு பார்ப்பேன்.

கடைசியில் பத்திரிகையை ஒருவாறு படித்து முடித்து மடிக்கிறபோது அவர் கையை நீட்டுவார். நான் கொடுப்பதற்கு முன்பே லபக்கென்று பிடுங்கிக் கொள்பவரைப் போல வாங்கிக்கொண்டு அதில் ஆழ்ந்துவிடுவார். நான் பத்திரிகை படிக்கும்போது சில பக்கங்களை அவரிடம் கொடுத்திருக்கலாம். என் சுபாவம்; பத்திரிகை முழுவதையும் பக்கம் தவறாமல் வைத்துக்கொண்டு வரிசையாகப் படிப்பேன். நடுவில் ஒரு தாளைக் கொடுத்துவிட்டுப் படிப்பதோ, எதாவது ஒரு பக்கத்தைப் படிப்பதோ கிடையாது. முதலிலிருந்து முடிவு வரையில் முறை பிறழாமல் சாங்கோபாங்கமாகப் படிக்கவேண்டும். அப்படி என்ன பழக்கம் என்று கேட்கலாம். அதற்குக் காரணம் சொல்ல  எனக்குத் தெரியாது. ஆனால் யாராவது வீட்டில் பத்திரிகையில ஒரு பகுதியை எடுத்துககொண்டு மற்றதை எனக்குக் கொடுத்தால் எரிச்சல் எரிச்சலாக வரும்.

வாசகசாலை முதலிய பொது இடங்களில் படிக்கிறவர்கள் தனித்தனியே பிரித்துப் படிப்பார்கள்; ஒவ்வொரு தாளாகக் கிழித்துப் படிப்பார்கள். காசு கொடுத்து வாங்காமல் ஒசியில் படிக்கிறவர்கள் பழக்கம் அது நான் சொந்தமாக விலை கொடுத்துப் பத்திரிகை வாங்கும்போது அதை என் விருப்பப்படியே படிப்பதை யார் தடுக்க முடியும்?

ஒரு சமயம் செங்கற்பட்டில் பத்திரிகை வாங்கினேன். அதை என் ஆசனத்தில் வைத்துவிட்டுச் சிறிது அந்தப் பக்கம் போனேன். அருகில் இருந்த நண்பர், “படிக்கலாமா?” என்று கேட்டார். “தாராளமாகப் படிக்கலாம்” என்றேன். அவர் எடுத்துப் படிக்கத் தொடங்கினார். நான் போய்விட்டு இரண்டு நிமிஷத்தில் வந்தேன். அந்த மனிதர் வெகு சுவாரசியமாகப் பத்திரிகையை விரித்து முகத்தை மறைத்தபடி வைத்துக் கொண்டு படித்துக் கொண்டிருந்தார். நான் வந்தது தெரிந்திருக்கலாம். ஆனாலும் அவர் பேப்பரை என்னிடம் கொடுக்க வில்லை. எல்லாவற்றையும் மறந்து விட்டவரைப் போல அதில் ஆழ்ந்திருந்தார். நான் சிறிது கனைத்துக் கொண்டேன். அது அவர் காதில் விழுந்தாலும் விழாதவர் போலவே படித்துக் கொண்டிருந்தார். நானும், அவர் என்னதான் செய்கிறார் பார்க்கலாம் என்று இருந்தேன். தாம்பரம் வருகிறவரைக்கும் அந்தப் பத்திரிகையைச் சக்கை வேறு சாறு வேறாக உறிஞ்சிவிட்டு, தாம்பரம் ஸ்டேஷன் வந்தவுடன், “மன்னிக்க வேண்டும். இந்தாருங்கள்” என்று கொடுத்தார். உடனே அங்கே இறங்கி விட்டார். இல்லாவிட்டால் மேலும் படித்துக் கொண்டே இருந்திருப்பார். அவர் படிக்கிற ஜோரைப்  பார்த்து. ‘இது தாமே வாங்கின பத்திரிகை என்ற நினைவில் நாம் கொடுத்ததை மறந்துவிட்டாரோ?’ என்று எண்ணினேன். அப்படியானால் அவர் ஸ்டேஷனில் இறங்கும்போது கையோடே எடுத்துக் கொண்டல்லவா போயிருப்பார்? நான் மிகவும் பொறுமைசாலி என்பதையும் தியாகபுத்தி, உள்ளவன் என்பதையும் எப்படியோ தெரிந்துகொண்டு. அதைப் படித்திருக்கிறார்!

பத்திரிகையை ஒவ்வொரு நாளும் படிக்கிறேன். தினமுமா முக்கியமான சமாசாரம் வருகிறது? தினமுமா மந்திரிகள் ராஜீநாமாச் செய்கிறார்கள்? தினமுமா புயல் வருகிறது? ஆனால் பத்திரிகைக்காரர்கள் எப்படியோ பக்கங்களை நிரப்பிவிடுகிறார்கள். எதிர் வீட்டு நண்பர் என்னைப்போல விழுந்து விழுந்து செய்தித்தாளைப் படிக்க மாட்டார். என்னைக் கண்டால், “என்ன ஸார் சமாசாரம், பேப்பரில்?” என்று கேட்பார்.

“நான் ஓர் இழவும் இல்லை” என்பேன். அதாவது அன்றைப் பத்திரிகையில் சுவாரசியமான செய்தி எதுவும் இல்லை என்று அர்த்தம். அந்த இழவு என்ற வார்த்தைக்கு, அர்த்தம் இல்லை. என்றாலும் ஒருவகையில் அதற்கு அர்த்தம் உண்டென்றே சொல்ல வேண்டும். யாராவது பெரிய மனிதர்கள் இறந்துபோன செய்தி பேப்பரில் வந்தால், நானே வலிய எதிர் வீட்டுக்கார நண்பரை அழைத்து, “சமாசாரம் தெரியுமோ? இன்னார் காலமாகி விட்டாராம்!” என்பேன். அந்த இழவுச் செய்தி பத்திரிகைக்குச் சுவையூட்டுவது போலத் தோன்றும்!

பத்திரிகை, படிப்பதற்கு உபயோகப்படுவது மட்டுமா? சில சமயங்களில் அவசரமாக டிக்கெட் வாங்கும்போது படுக்கை வசதிக்குரிய டிக்கெட் கிடைக்காது. உட்கார்த்து போகத்தான் முடியும். இரவில் எப்படியோ சமாளித்துக் கொண்டு கீழே படுத்து உறங்க வேண்டியிருக்கும். மாலைப்  பத்திரிகையை ஸ்டேஷனில் படித்துவிட்டுப்பிறகு அதையே விரிப்பாக விரித்து அதன்மேல் படுத்துக் கொள்ளலாம். துணி அழுக்கு ஆகாது. பத்திரிகைக்குக் கொடுத்த விலைக்கு அதிகமாகவே பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேல்நாட்டில் பத்திரிகைகளைப் படித்தவுடன் அப்படி அப்படியே அதை வண்டியில் போட்டு விட்டுப் போய்விடுகிறார்கள். இங்கே அப்படிச் செய்ய முடியுமா? மறந்து போய் யாராவது வைத்துவிட்டுப் போனால் அதையும் எடுத்துக் கொண்டு வரத்தான் தோன்றும். பழைய பேப்பரோடு சேர்த்துக் கடையில் போடலாமே!

குழந்தை குட்டிகளோடு செல்கிறவர்களுக்கு, அதுவும் கைக் குழந்தையோடு பயணம் செய்கிறவர்களுக்குத் தினசரிப் பத்திரிகை எப்படியெல்லாம் உபயோகப்படுகிறது! கந்தைத் துணிகளையெல்லாம் சேர்த்துக் காகிதம் செய்கிறார்களாம். அந்தக் காகிதத்தில் துணியின் அம்சம் இருக்கத்தானே இருக்கிறது? ஆகையால் அதையே துணியாக எண்ணித் தாய்மார்கள் பயன்படுத்துவதில் என்ன தவறு?

எஸ். வி. வி. அவர்கள் பத்திரிகைகளைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அவர் அலுவலகத்துக்குப் போகும்போது அவர் மனைவி தயிருஞ்சாதத்தைப் பத்திரிகைக் காகிதத்தில் பொட்டலம் கட்டித் தருவாராம். ஒரு நாள் பொட்டலத்தைப் பிரித்தபோது இலை கிழிந்திருந்த படியால் சாதம் பிதுங்கிச் செய்தித் தாளில் ஒட்டியிருந்ததாம். அந்த இடத்தில் ஒரு மந்திரியினுடைய படம்! “மந்திரி வாயில் என் தயிருஞ்சாதம்” என்று எழுதியிருந்தார். அவர் தயிருஞ்சாதத்தை மந்திரி சாப்பிட்டாலும் சாட்பிடலாம். என் கதை வேறு. நான் ஒரு முறை ஊருக்குப்போகும் போது ராத்திரியில் உண்ணும்படி என் மனைவி சாம்பார் சாதம் கட்டித் தந்தாள். மேலே பத்திரிகைத் தாள். நான் ரெயில் வண்டியில் அதைப் பிரித்தேன். சாதம் இலையினின்றும் பிதுங்கிப் பத்திரிகையில் ஒட்டியிருந்தது. ஒரு வெங்காயத் தானும் சிறிது சாதமும் ஒட்டியிருந்தன. அங்கே ஒரு படம். சரியாக அந்தப் படத்தில் உள்ளவர் வாயில்தான் வெங்காயம் புகுந்திருந்தது. படம் யாருடையது தெரியுமோ? வெங்காயத்தின் மணத்தையே அறியாத ஒரு சந்கியாசியின் படம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=புது_டயரி/ஸார்_பேப்பர்!&oldid=1534717" இலிருந்து மீள்விக்கப்பட்டது