புது டயரி/பெயர் படுத்தும் பாடு

விக்கிமூலம் இலிருந்து



பெயர் படுத்தும் பாடு

என்னுடைய ஆசிரியப்பிரான் டாக்டர் மகாமகோ யாத்தியாய ஐயரவர்கள் பூவாளுர் சென்றிருந்தார்கள். திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையினுடைய மாணாக்கரும் ஐயரவர்களுக்குக் கும்பகோணம் கல்லூரியில் தாம் பார்த்துக் கொண்டிருந்த தமிழாசிரியர் வேலையை வாங்கித் தந்தவருமாகிய வித்துவான் தியாகராச செட்டியாருடைய ஊர் அது. அங்கே ஐயரவர்கள் அன்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது, “விராட்டி! விராட்டி!” என்று யாரோ ஒருவர் உரக்கக் கூவினர். “ஏன்?” என்று ஒருவர் அவரிடம் வந்து நின்றார், விராட்டி என்று ஏன் அதை மனிதர் உரக்கக் கூவினார் என்பதன் உண்மை ஐயரவர்களுக்குப் பிறகு தெரியவந்தது. வீரராகவ செட்டி என்ற ஒருவரையே அந்த மனிதர் விராட்டி என்று கூவி அழைத்திருக்கிறார், அதைக் கேட்டு ஐயரவர்கள் வியந்தார்கள். வீரராகவ செட்டி என்ற அருமைத் திருநாமமே அந்த மனிதர் வாயில் அகப்பட்டு உருக்குலைந்து விராட்டி ஆகிவிட்டது!

நம்முடைய நாட்டில் ஆண்டவன் திருநாமங்களை மக்களுக்கு இட்டு வழங்குகிறோம். அதனால் அந்தத் திருநாமங்களை நாம் பலமுறை சொல்லவும் காதினாட் கேட்கவும் வாய்ப்புகள் உண்டாகின்றன. இறைவன் திருநாமங்களைத்  தனியே எழுதிப் பாராயணம் செய்யாமலே, அந்த நாமங்களைச் சொல்லவும் கேட்கவும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. நாம் தெருவழியே நடந்து போகும்போது, “ஏ முருகா, ஏ ராமா, ஏ வேங்கடேசா, ஏ சிவசுப்பிரமணியா” என்று ஒருவரை ஒருவர் அழைக்கிறார்கள்; அப்போது அந்தப் பெயர்களெல்லாம் இறைவன் திருநாமங்களாய் இருப்பதனால், அவனுடைய பல திருநாமங்களைச் செவியேற்கும் நிலை நமக்கு உண்டாகிறது. உண்மையான பக்தி உடையவர்கள் அந்த நாமங்களைக் கேட்டு மனம் உருகுவார்கள். “ஒரு நாமம் ஓருருவம் ஒன்றும் இலார்க்கு ஆயிரம், திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ” என்று மாணிக்கவாசகர் பாடுவதை நினைத்துக் கொள்வார்கள்.

இறைவன் திருநாமங்களை மச்களுக்கு இட்டு வழங்குவதன் நோக்கமே மாறிவிடுகிறது. அந்த நாமங்களைச் சிதைத்து வழங்குவதனால், வீரராகவ செட்டி என்ற பெயர் எங்கே? விராட்டி என்ற சிதைவு எங்கே? வீரராகவன் என்ற திருநாமம் நம்மை இராமாயணத்தை நினைக்கச் செய்கிறது; திருவள்ளுருக்கு அழைத்துச் செல்கிறது; விராட்டி என்ற வார்த்தையோ—?

அருமையான பெயர்களை எப்படியெல்லாம் சிதைத்து வழங்குகிறோம்! சுப்பிரமணியன் என்ற பெயர் இந்தச் சிதைவு முறையில் அகப்பட்டு எத்தனை வகையான வடிவங்களை எடுத்துக்கொள்கிறது. சுப்பு என்ற சிதைவுதான் அதிகம். சுப்பிரமணி, சுப்பாமணி, சுப்பிணி, சுப்புமணி, சுப்பியா, சுப்பாணி, சுப்புண்டு என்று அந்தப்பெயர் நசுங்கி உருக்குலைந்து பல வடிவங்களில் நிலவுகிறது. பரமேசுவரன் - பம்மேச்சன் ஆகிறான். வேங்கடராமன், வெங்கிட்டு, வெங்கிட்டா, வெங்கட், வெங்கலக்குண்டு ஆகிறான். மகாலக்ஷ்மி மாச்சி, மாஜி, மசும் ஆகிறாள்.  எங்கள் வீட்டில் ஒரு பெண் வேலை செய்கிறாள். சுறுசுறுப்பானவள். அவளைத் தபா, தபா என்று அழைக்கிறார்கள். “எத்தனை தபா உன்னை அழைக்கிறது?” என்று சிலேடை நயத்தோடு கடிந்துகொள்கிறார்கள். அவள் பெயரை முதலில் கேட்டபோது, இந்தத் தபா என்பது எதன் சிதைவு என்று யோசித்து யோசித்துப் பார்த்தேன்;. தெரியவில்லை; விசாரித்த பிறகுதான் தெரிய வந்தது. அவளைப் பெற்றவர்கள் தவமணி என்றுபெயர் வைத்திருக்கிறார்கள். அதுவே தபா, தபா என்று அடிபடுகிறது.

சில பெயர்கள் சிதையும்பொழுது ஒரு பகுதி மட்டும் நிற்கும். அப்போது அது சிதைவாகத் தோன்றாமல் அழகாகவே இருக்கும். சுப்பிரமணியன் என்பதை மணியன் என்றும் மணி என்றும் குறுக்கி வழங்குகிறோம். அதுவும் ஒரு வகையில் சிதைவே. ஆனாலும் அந்தச் சிதைவு தவறாகத் தோன்றவில்லை. சாம்பசிவத்தைச் சிவமென்று குறுக்குவதனால் இறைவன் திருநாமம் முற்றும் மறைவதில்லை. ஆனால் சில சமயங்களில் இவ்வாறு பெயரின் ஒரு பகுதியை வழங்குவதில் விநோதமான நிலை ஏற்படுவதுண்டு. ஆபத் சகாயம் என்பது ஒருவருக்குப் பெயர். அதைச் சுருக்கிச் சகாயம் என்று அழைக்கலாம். அது நன்றாக இருக்கும். ஆனால் ஆபத்து என்று அழைத்தால் எப்படி இருக்கும்? அதைவிடப் பெரிய ஆபத்து வேறு இல்லை!

குழந்தைப் பேச்சில் எத்தனையோ சிதைவுகளைப் பார்க்கிறோம். உம்மாச்சி என்பது கடவுளைக் குறிக்கும் குழந்தை உலகச் சொல். அது எந்த வார்த்தையின் சிதைவு, என்று காமகோடி சங்கராசாரிய சுவாமிகள் ஒரு சமயம் பேசும்போது விளக்கினார்கள். உமாமகேசுவரன் என்பதே அப்படிச் சிதைந்து விட்டதாம். பார்த்தசாரதி பாச்சா வானாலும் ஜகந்நாதன் ஐக்கு ஆனாலும் புரிந்துகொள்ள  முடிகிறது. உமாமகேசுவரன் என்பதுதான் உம்மாச்சி ஆயிற்று என்று நமக்கு எங்கே விளங்குகிறது?

மக்களின் பெயர்கள் மட்டும் இந்தப் பாடுபடுகின்றன என்று எண்ண வேண்டாம். ஊர்களின் பெயர்களுக்கும் இந்தக் கதி நேர்வதுண்டு.

ஏழு பெரிய வள்ளல்களில் ஒருவன் அதியமான் நெடுமான் அஞ்சி என்பவன். அவன் தகடூர் என்ற ஊரில் இருந்து ஆண்டு வந்த சிற்றரசன். இன்று அந்தத் தகடூரே தர்மபுரி என்று வழங்குகிறது. அவன் தகடுரில் கோட்டை கட்டி வாழ்ந்தான். அந்தக் கோட்டை இருந்த இடம் இன்றைக்குத் தர்மபுரிக்கு அருகில் இருக்கிறது. அந்த உத்தமனாகிய வள்ளல் வாழ்ந்திருந்த கோட்டையை அதமன் கோட்டை என்று வழங்கினார்கள் மக்கள். அதுவே அதன் இயல்பான பெயர் அன்று. அதியமான் கோட்டை என்ற பெயரே அப்படிச் சிதைந்து வழங்கியது. அதியமானை மக்கள் எச்சில் வாயால் அதமனாக்கிவிட்டார்கள். நல்ல வேளை இப்போது பழையபடி அதியமான் கோட்டை என்று அதன் பழைய உருவத்தைப் பொறித்திருக்கிறார்கள்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பழைய ஐயங் கொண்ட சோழபுரம் என்ற ஊர் இருக்கிறது. அதற்கு இன்று வழங்கும் பெயரைக் கேட்டாலே சங்கடமாக இருக்கிறது. ஆமாம்! இன்று அது பழைய சங்கடம் என்று வழங்குகிறது. குலோத்துங்க சோழன் இருப்பு என்ற ஊரின் பெயர் குளத்துக்கிருப்பு ஆகிவிட்டது. கோபிநாதப் பெருமாள் கோவில் கோணப் பெருமாள் கோவில் ஆகிறது. பழைய காலத்தில் புலவர்கள் ஊர்களின் பெயர்களைப் பாட்டில் வைக்கும்போது பாட்டின் ஒசைக்கு ஏற்பக் குறுக்கி அமைப்பார்கள். தஞ்சாவூரைத் தஞ்சையென்றும்  கோயம்பத்துரைக் கோவை என்றும் சென்னைப்பட்டணத்தைச் சென்னையென்றும் திருநெல்வேலியை நெல்லை என்றும் வைத்துப் பாடினார்கள். செய்யுளில் முழுப் பெயரையும் வைப்பதைவிட இப்படி வைத்துப் பாடுவது எளிதாக இருக்கும். ஆனால் பேச்சுவழக்கில் முழுமையாக வழங்குவார்கள். இப்போது செய்யுளில் இருப்பது போலவே உரைநடையில் எழுதும்போதும் பேசும்போதும் அப்படிச் சுருக்கிவிடுகிறர்கள். அதனால் நமக்குச் சில சமயங்களில் மயக்கம் உண்டாகிறது. தஞ்சைவாணன் கோவை என்ற நூல் தமிழ்ப் புலவர்களுக்கு நன்றாகத் தெரியும், அதில் வரும் தஞ்சை இன்னதென்று பல பேருக்குத் தெரியாது. அது சோழநாட்டில் உள்ள தஞ்சாவூர் அன்று; பாண்டிநாட்டில் உள்ள தஞ்சர்க்கூர் என்ற ஊரையே புலவர் தஞ்சை என்று பாட்டில் வைத்திருக்கிறார்.

நாம் எழுதும்பொழுதும் பேசும் பொழுதும் இந்த முறையை மேற்கொள்ளுவதனால் சில சமயம் மயக்கம் ஏற்படுகிறது என்று சொன்னேன். என்ன மயக்கம் தெரியுமா? கோயம்புத்தூர்க்காரரும் தம்முடைய ஊரைக் கோவை என்று சொல்கிறார். கோயம்பள்ளிக்காரரும் தம் ஊரைக் கோவை என்று குறிக்கிறார்; கோவை என்பதைக் கேட்டவுடன் இன்ன ஊர்தான் என்று திட்டமாகத் தெரிந்து கொள்ள முடிவதில்லை. புதுச்சேரியைப் புதுவை என்று குறிக்கும்போது பழக்கத்தால் நமக்கு விளங்குகிறது. ஆனால் புதுக்கோட்டையையும் புதுப்பாடியையும் புதுப்பாளையத்தையும் புதுவை என்று குறிக்கும்போது நமக்குக் குழப்பம் உண்டாகிறது. ஆகையால் இயல்பான பெயர்களையே வழங்கினால் தெளிவாக இருக்கும்.

இராமேசுவரத்துக்குத் தேவை என்று ஒரு பெயர்; தேவகோட்டையையும் தேவை என்று சிலர் குறிக் கிறார்கள். இந்த இரண்டில் இராமேசுவரத்துக்கு ஏன் தேவை என்று பெயர் வந்தது என்பதற்கு விளக்கம் தேவை. தேவைஉலா என்று இராமேசுவரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானைப் பற்றிய பிரபந்தம் ஒன்று உண்டு. “வளமருவு தேவை அரசே” என்று தாயுமானவர் அங்கே எழுந்தருளியுள்ள மலைவளர் காதலியைப் பாடுகிறார். இந்த இடங்களில் தேவை என்ற பெயர் வருகிறது. அது எதன் சிதைவு என்று எல்வளவோ காலம் ஆராய்ந்து பார்த்தேன்; தெரியவில்லை. கடைசியில் தேவநகரம் என்பதன் மரூஉ அது என்று தெரிய வந்தது. ராஜாராம் ராவ் என்பவர் இராமநாதபுர ஸமஸ்தானத்து வரலாற்றைப் பல ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். அதில் இராமேசுவரத்துக்குத் தேவ நகரம் என்ற பெயர் உண்டு என்று குறித்திருக்கிறார்.

இாாமநாதபுரத்துக்கு முகவை என்ற பெயர் இலக்கியங்களில் வழங்குகிறது. முகவாபுரி என்றும் இருக்கிறது. இராமநாதபுரத்துக்கும் முகவைக்கும் என்ன தொடர்பு? சேதுபதி மன்னர்கள் இராமேசுவரத்திலுள்ள பெருமானாகிய இராமநாதர் பெயரால் தம் தலைநகரத்துக்கு இராமநாதபுரம் என்று பெயர் வைத்தார்கள். செய்யுளில் அது முகவையான காரணம் பல பேருக்குத் தெரியாது.

இராமேசுவரத்துக்குப் போகிறவர்கள் பழங்காலத்தில் இராமநாதபுரம் சென்று மன்னரைக் கண்டு விடைபெற்றுப் பிறகு இராமேசுவரம் சென்று தரிசித்தார்கள். “சேதுபதி தரிசனமே இராமலிங்க தரிசனமாச் செப்பலாமே” என்று ஒரு பழம் பாட்டில் வருகிறது. இராமபிரான் தான் கட்டிய அணைக்கு மறக்குல வீரன் ஒருவனைக் காவலனாக வைத்தான் என்றும், சேதுவைக் காத்த அந்த மறவனுடைய பரம்பரையினரே சேதுகாவலர், சேதுபதி என்ற பட்டத்துடன்  சிற்றரசர்களாக விளங்குகிறார்கள் என்றும் சொல்லுவார்கள். ஆகவே, இராமேசுவரம், தனுஷ்கோடி ஆகியவற்றைத் தரிசிக்கச் செல்பவர்கள் முதலில் இராமநாதபுரம் போய்விட்டுப் பிறகு அவ்விடங்களுக்குப் போவார்கள். இராமேசுவரத்துக்குப் போகும்முன் முதலில் காணுவது இராமநாதபுரம். இராமேசுவர யாத்திரைக்கு முகப்புப் போன்றது இராமநாதபுரம். அதனால் முகவை என்ற பெயர் வந்தது. முகம் போன்றது என்ற பொருளை உள்ளடக்கியது அந்தப் பெயர்.

அமரர் சேதுப்பிள்ளையவர்கள் எழுதிய‘ஊரும் பேரும்’ என்ற நூலில் இப்படி ஊரின் பெயர்கள் சிதைவுற்றும், மாற்றுருக் கொண்டும் வழங்குவதுபற்றிப் பல செய்திகளைக் காணலாம்.

பெயர்கள் படும் பாட்டைப் பற்றிச் சொன்னேன். பெயர்களின் முதலெழுத்தைக் குறிக்கும் (Initials) பழக்கம் ஒன்று உண்டு. கு. ப. ராஜகோபாலனைக் கு. ப. ரா. என்று சொல்கிறோம். ஊர்ப் பெயர், தந்தையார் பெயர் இவற்றின் முதலெழுத்துக்களை முதலில் எழுதிப் பிறகு தம் பெயரை எழுதுவது தமிழ்நாட்டில் பெருவழக்காக இருக்கிறது. சில பேர் ஊர்ப் பெயரைச் சேர்க்காமல் தந்தை பெயரின் முதலெழுத்தை மட்டும் போடுவது உண்டு. வ. ரா. என்பது போலப் பலர் தம் பெயரை எழுதுவார்கள். கல்கி தம் பெயரை ரா. கி. என்றும் சுருக்கி எழுதி வந்தார்.

இப்படித் தலை எழுத்துக்களைப் (Initials) போடுவதில் சில விநோதங்கள் ஏற்பட்டதுண்டு.

ஸ்ரீரங்கத்தில் சுப்பிரமணிய ஐயர் என்ற தமிழாசிரியர் இருந்தார். அவருடைய தந்தையார் பெயர் குருசாமி ஐயர். அவர் கு. சுப்பிரமணிய ஐயர் என்று தம் பெயரை எழுது வதில்லை; குரு. சுப்பிரமணிய ஐயர் என்றே எழுதுவார். கு. சுப்பிரமணிய ஐயர் என்று போட்டு வழக்கமானால் தலை எழுத்துக்களை மட்டும் குறிக்கும்படி நேரும்போது நாற்றம் அடிக்கும் அல்லவா?

பன்மொழிப் புலவர் ஒருவர் ஒரு நூல் எழுதினார். அதில் தம் பெயரை விரிவுபடுத்தி ஊர்ப் பெயர், தந்தையார் பெயர், தம் பெயர் எல்லாவற்றையும் முழுமையாகப் போட்டிருந்தார். அந்தப் புத்தகத்தின் ஒரு பிரதியைத் தம்முடைய நண்பர் ஒருவர் மூலம் எனக்கு அனுப்பினார். முகப்புப் பக்கத்தைப் பிரித்துப் பார்த்தேன். பின்னத்துார்ச் சாரநாதருடைய குமாரர். சுந்தரம் (உண்மைப் பெயர்களை இங்கே சொல்லவில்லை. ஆனால் முதலெழுத்துக்கள் மாத்திரம் அந்தப் பெயர்களில் உள்ளனவை.) என்று விளக்கமாக இருந்தது. என் மூளையில் ஒரு குயுக்தி தோன்றியது. புத்தகத்தை அளித்த அன்பரைப் பார்த்து, “ஐயா, இவர் தம் பெயரின் முதற்குறிப்பை எப்படிப் போடுவார்?” என்று கேட்டேன். அவர் சற்றே யோசித்து, பின்னத்துாரின் முதலெழுத்தாகிய பி என்பதையும், சாரநாதர் என்பதன் முதல் எழுத்தாகிய சா என்பதையும், சுந்தரம் என்பதன் முதல் எழுத்தாகிய சு என்பதையும் சேர்த்து, ‘பி.சா. சு’ என்று சொல்லும்போதே சிரித்து விட்டார். ‘பிசாசு’ என்று சொல்லி நானும் சிரித்தேன். அதன் விளைவு என்ன ஆயிற்று, தெரியுமோ? அந்த அன்பர் புத்தக ஆசிரியரிடம் போய் இந்த வேடிக்கையைச் சொல்லியிருக்கிறார். அந்த ஆசிரியர் அத்தனை புத்தகப் பிரதிகளின் முகப்புத்தாளையும் கிழித்து எறிந்துவிட்டுப் புதிய தாளைச் சேர்த்தார். அதில் தம் பெயரை, P. S. சுந்தரம் என்று அச்சிடச் செய்துவிட்டார்.

கம்பம் போடைய நாயக்கர் பிள்ளை திருமலை நாயக்கர் தம் பெயரில் ஊர்ப் பெயரின் முதலெழுத்தைச் சேர்க்காமல்  போ. திருமலை நாயக்கர் என்று போட்டால், அதற்குக் காரணம் எதுவென்று நமக்குத் தெரியும். பெயரின் முதற் குறிப்பைப் போடும்போது அவர் ‘கபோதி’ ஆகாமல் ‘போதி’ ஆகலாம் அல்லவா?

என்னுடைய ஆசிரியப் பிரானுடைய நினைவோடு தொடங்கிய இந்தக் கட்டுரையை அவர்களைப் பற்றிய செய்தி ஒன்றோடு முடித்துக் கொள்கிறேன். அவர்கள் வே. சாமிநாதன் என்றே கையெழுத்துப் போடுவது வழக்கம். ‘இனிஷியல்ஸ்’ போடும்போது வே. சா. என்று போட வேண்டும். சா என்பது அமங்கலமாகத் தொனிப்பதால் அப்படி அவர்கள் போடுவதில்லை. வே. ச். என்றே போடுவார்கள். அவர்கள் குறிப்புக்கள் எழுதினால் கீழே வே. ச். என்று தம் பெயரின் முதற்குறிப்பைக் குறிப்பார்கள்.