புத்தர் பொன்மொழி நூறு/4

விக்கிமூலம் இலிருந்து

14. புத்தர் இயல்

பொன்னினால் ஆன காசே
பொழியினும் மழையே யாக,
தன்கையால் தொட்ட எல்லாம்
தங்கமே ஆகி னாலும்
உன்னியே[1] அவாவில் ஆழ்ந்தோர்
உளம்நிறை வடைவ தில்லை.
இன்னதீ மயக்கம் தீர்ந்தோர்
இறைஞ்சிடத் தக்கார் ஆவர்.

44


துறவியர் கோலத் தோடு
தொப்பை[2] தான் பெருத்திட் டோரும்
அறிவினை சிறிதும் செய்யா
அரும்பெருஞ் செல்வர் தாமும்
வறியவர் காலில் வீழ்ந்து
வணங்கிட உரியர் அல்லர்.
அறநெறி பற்று வோரே
அனைவரும் வணங்கத் தக்கார்,

45


15. மகிழ்ச்சி இயல்


பகைத்திடும் உணர்வில் லாதோர்
பகைத்திடார் எவரும் நோக;
பகைவரின் நடுவி லேயே
பகையிலா தினிது வாழ்வர்.
பகைத்திடும் உணர்வுள் ளோரே
பகையிலா நண்பர் மாட்டும்
பகைகோடு வாழ்வர், இந்தப்
பகையதை[3]ப் பகைத்தல் வேண்டும்.

46


வெற்றியோ பகையை மேலும்
வீறொடு வளரச் செய்யும்
உற்றிடும் தோல்வி தானும்
உறுதுயர் உறுத்து விக்கும்[4]
வெற்றியோ தோல்வி தானோ
விளைத்திடா தியல்பாய் வாழ்வோர்
வெற்றியே பெற்றோ ராவர்;
விதைத்திடார் துன்ப வித்தை[5].

47


உற்றிடும் அவாவை ஒத்த
உறுநெருப் பேதும் இல்லை.
முற்றிடும் பகையை ஒத்த
முட்புதர் யாதும் இல்லை.
பற்றிடும் பிணிமூப் பொத்த
பகைப்பொருள் ஒன்றும் இல்லை.
வற்றிடா மகிழ்ச்சி வாழ்வை
வழங்கிடும் அமைதி உள்ளம்.

48


பேரவா தன்னின் மிக்க
பெரியநோய் ஒன்றும் இல்லை.
ஊறிய மூடக் கொள்கை
உறச்செயும் பெரிய கேடு,
நேரிய உண்மைப் போக்கே
நிலைத்திடச் செய்யும் வாழ்வை.
ஆரிவை உணர்கின் றாரோ
அவருளம் இன்பக் கோட்டை.

49

யாதுமே நோயில் லாத
வாழ்க்கையே யாணர்[6]ச் செல்வம்
போதுமென் றமைதி கொள்ளும்
பொன்னுளம் குறையாச் செல்வம்
சூதிலா மாந்தர் தாமே
சூழ்ந்திடும் பெரிய சுற்றம்
சூதுறு போலி நண்பர்
சூழ்ச்சிசார் பகைவ ராவர்.

50


அறிவரை[7]க் காணும் நேரம்
அரியபொற் கால மாகும்;
அறிவரின் உரையைக் கேட்கும்
அஞ்செவி உண்மைக் காதாம்;
அறிவரின் பணியைச் செய்தே
அவரொடு வாழ்தல் வீடாம்
அறிவிலா ரோடு செய்யும்
அனைத்துமே அளறே யாகும்.

51


16 விருப்ப இயல்

விருப்புறு பொருள்கிட் டாதேல்
விளைந்திடும் பெரிய துன்பம்
வெறுப்புறு பொருள்கிட் டிற்றேல்
வெறுப்புமேல் வெறுப்பு சேரும்
விருப்பொடு வெறுப்பு கொள்வோர்
வீழுவர் பற்றுச் சேற்றில்
விருப்பொடு வெறுப்பில் லோரை
விரும்பிடும் உலக மெல்லாம்

52


அன்பினை ஒருவர் மீதே
அறவிறந் தாற்றக் கொள்ளின்,
வன்புறு[8] முறையில் ஓர
வஞ்சனைக் கிடமுண் டாகும்;
அன்பினால் அவர்குற் றத்தை
அறிந்திடும் வாய்ப்பும் போகும்;
அன்பினைக் கொள்ளு தற்கும்
அளவது பொதுவாய் வேண்டும்

53


புனல்வழி ஓடு கின்ற
புணை[9]யினைப் போலப் பற்றை
மனவழிப் பற்றிச் செல்லல்
மடமையாம்; அடக்கம் என்னும்
அணைவழிந் தோடு கின்ற
ஐம்புல அவாவெள் ளத்தில்
முனைவுடன் எதிர்த்து நீந்தி
முன்னுறச் செல்லல் வேண்டும்.

54


நீண்டநாள் கடந்த பின்னர்
நேடுந்தொலை இடத்தி னின்று
மீண்டுவந் தோரை யாரும்
மிகுமகிழ் வுடனே ஏற்பர்;
ஈண்டிடும் பொருள்மீ தெல்லாம்
இணைந்திடும் பற்று நீங்கி
வேண்டிடும் பொருளில் மட்டும்
விருப்பினை அளவாய்க் கொள்க

55

17. சின இயல்
உறுவழி தவறி ஓடும்
ஊர்தியை நிறுத்தாப் பாகன்
வெறுமையாய்க் கடிவா ளத்தை
விதிர்த்தலால் பயனே இல்லை
வெருவரும்[10] சினத்தைக் கொட்டி
வீண்வழி செலும்உள் ளத்தை
அறிவொடு மடக்கி மீட்போர்
அறிஞருள் அறிஞர் ஆவர்.

56


அன்பினால் சினத்தை வெல்க;
அறத்தினால் மறத்தை வெல்க;
நண்பினால் பகையை வெல்க;
நல்கலால் வறுமை வெல்க:
இன்பினால் துன்பம் வெல்க;
என்றுமே வற்றா மெய்மைப்
பண்பினால் பொய்மை வெல்க;
பாருளோர் போற்ற வாழ்க

57


தனதுவாய் பேசா தோனைத்
தருக்கி[11]யென் றுரைப்பர் மக்கள்;
தனதுவாய் மிகவும் பேசும்
தன்மைவா யாடல் என்பர்;
தனதுவாய் அளவாய்ப் பேசின்
தான்பெருஞ் சூதன் என்பர்,
தனதுரை சூழற் கேற்பத்
தருதலே தக்க தாகும்

58


முழுவதும் புகழ்ச்சி பெற்றோர்
முன்னரும் இன்றும் இல்லை;
முழுவதும் இகழ்ச்சி உற்றோர்
முப்பொழுது[12] மில்லை; ஆனால்
முழுவதும் ஆய்ந்து நோக்கி
முனைப்பதாய் உளதைக் கொண்டு
மொழியலாம் கீழோர் என்றோ—
முதிர்ந்தநல் மேலோர் என்றோ !

59


உள்ளலில்[13] உளத்தைக் கட்டி
உயர்ந்ததே உள்ளச் செய்க ;
சொல்லலில் நாவைக் கட்டி
நல்லதே சொல்லச் செய்க ;
வல்லதாய்ச் செயலில் மெய்யை
வணக்கியே நலஞ்செய் விக்க,
உள்ளமும் நாவும் மெய்யும்
ஒன்றுநற் செயல்கள் செய்க.

60


18. மாசு இயல்

இன்றுநீ உலர்ந்த குப்பை ,
எமனுடைத் தூதர் உள்ளார் ;
சென்றுளாய், உலகை விட்டுச்
சென்றிடும் வாயில் நோக்கி ,
சென்றிடும் வழியில் தங்கச்
சிற்றிடம் தானும் மற்றும்
தின்றிடக் கட்டு சோறும்
தினைத்துணை அளவும் இல்லை.

61

அரும்பெரு வெள்ளி சார்ந்த
களிம்பினை அக ற்றல் போல,
உரம்பெறு உளத்தின் மாசை
ஒல்லை[14]யில் ஒழித்தல் வேண்டும்,
இரும்பினில் தோன்றி அந்த
இரும்பையே துருதின் னல்போல்,
தரும்படர் நாமே செய்த .
தகாச் செயல் நமக்குச் சால.

62


படிக்கிலோ மாயின் நல்ல
பழமறை[15] மதிப்பி ழக்கும் ;
அடிக்கடி பழுது பார்க்கின்
அகமது கெடுதல் இல்லை ;
திடுக்கிடத் திருட்டுப் போகும்
திருமனை காவா விட்டால் ;
மடிக்குநாம் அடிமை யாயின்
மாண்புறு செயல்கள் செய்யோம்,

63


நெஞ்சினில் இரக்கம், நாணம்,
நேர்மைதான் இல்லா தோர்க்கும்—
வஞ்சனை, பொய்பு ரட்டு,
வழிப்பறி, சூது, யார்க்கும்
அஞ்சுதல், இன்மை, காமம்,
ஆயவை[16] மிக்குள் ளோர்க்கும்—
மிஞ்சுமீவ் வுலக வாழ்வு
மிகமிக எளிதாய்த் தோன்றும்.

64
 

நெஞ்சினிரில் இரக்கம், நாணம்,
நேர்மையோ டொழுக்கம், தூய்மை,
அஞ்சிடும் அடக்கம், மெய்மை,
அமைதியோ டன்பு, பண்பு,
விஞ்சிடும்[17] அவாவே இன்மை,
விளம்பிய இவையுள் ளோர்க்கு
மிஞ்சுமிவ் வுலக வாழ்க்கை
மிகுகடி னமாகத் தோன்றும்.

65


பிறரது வாழ்வைக் கண்டு
பெரியதோர் பொறாமை கொள்வோன்
இரவொடு பகலும் தூங்கான்:
இம்மியும்[18] அமைதி கொள்ளான்.
பிறரது குற்றம் கானும்
பேய்த்தனம் பெரிதும் உள்ளோன்
பெருகுறு தனது குற்றம்
பேணலின் விலகிச் செல்வான்.

66


பதரெனப் பிறர்குற் றத்தைப்
பாரெலாம் தூற்றும் கீழோன்,
அதிர்வுறச் சூதாட் டத்தில்
ஆடிடும் காய்ம றைத்தே
எதிருளார் பலரைச் சால
ஏய்ப்பவர் போலத் தன்பால்
புதரென மண்டு குற்றம்
புலப்படா தொளித்தல் செய்வான்.

67

நெருப்பது வேறொன் றில்லை
நிகர்த்திடக்[19] காமத் தீயை;
விருப்பினைப் போன்றதான
விழும்வலை பிறிதொன் றில்லை;
வெறுப்பினை வெல்லத் தக்க
வேறொரு முதலை இல்லை,
அரிப்பதில் வாழ்வாம் மண்ணை,
அவாவைநேர் வெள்ளம் உண்டோ?

68


வானிலே பாதை போட
வல்லவர் யாரும் உண்டோ?
வானிலே துறவி தோன்றார்;
வருவது மண்ணி லேதான்
ஊனு[20]டல் பெற்ற எல்லாம்
ஒருபொழு தழிந்து போகும்
வீணிலே பொழுது போக்கேல்;
விழிப்புடன் அறமே செய்க.

69


19. சான்றோர் இயல்

வன்முறை கொண்டு நன்மை
வாய்த்திடச் செய்வோன் மூடன்;
பன்முறை பேசும் பேச்சால்
படித்தவன் ஆதல் உண்டோ[21]?
நன்முறை கற்ற வண்ணம்
நடப்பவன் கல்விச் சான்றோன்
இன்முறை கொண்டா ராய்ந்தே .
எதையுமே ஏற்றல் வேண்டும்.

70


தலைமயிர் நரைத்தோ ரெல்லாம்
தகுதிசொல் சான்றோ ராகார் ;
தலைமயிர் புனைந்தோ ரெல்லாம்[22]
தகவுறும் அழக ராகார் ;
தலைமயிர் வழித்தோ ரெல்லாம்
தக்கநல் துறவி ஆகார் ;
நிலைபெற அறஞ்செய் வோரே
நீள்புகழ்க் குரியர் ஆவர்

71


20. நெறி இயல்

மருத்துவர் மருந்தே ஈவார்,
மாந்துதல்[23] பிணியோர் செய்கை ;
அறுத்திட அவாவை, மேலோர்
அறநெறி மட்டும் சொல்வர் ;
அறுத்திடல், அவாவை, மிக்க
அறிவுளோர் கடமை யாகும்.
அறுத்திடா ராயின், தீமை,
அன்னைசேர் சேய்போல் பற்றும்.

72


அவாவெனும் காட்டி னின்றே
அனைத்துள கேடும் தோன்றும்.
கவைமரம் ஒன்றை மட்டும்
களைந்திடல் போதா தாகும் ;
அவாவெனும் காட்டை முற்றும்
அடர்ந்துள புதர்க ளோடு
தவிர்த்திட வேண்டும், பற்றில்
தகுநெறி எரி[24]யை மூட்டி,

73


உறிவுசால் தந்தை தாயோ
உற்றிடும் மக்கள் தாமோ
ஒருவரும் காக்க மாட்டார்
உயிரது பிரியும் வேளை
உறங்கிடும் போது வெள்ளம்
ஊர்முழு வதுமாய்த் தாற்போல்
ஒருவிடின் அறத்தை[25], சாவோ
ஒல்லையில் அடித்துச் செல்லும்.

74


21. பல்வகை இயல்

சிறியதாம் இன்பம் விட்டுச்
சிறந்தபே ரின்பம் நாடீர் !
உரியதைச்[26] செய்யாச் சோம்பும்
உரியதல் லாத ஒன்றைப்
பெரியதாய்ச் செயலும் வேண்டா !
பெற்றிடத் தன்ன லத்தை,
பிறரது நலங்கெ டாமல்
பேணுவீர் நேர்மைப் பாதை.

75


துறப்பதும் கடினம: ஒன்றும்
துறந்திடாத் துய்ப்பும்[27] அஃதே !
சிறப்பொடு, மனைய றத்தைச்
செய்வதும் அரிதே ! தீமை
மறப்பிலா மக்க ளோடு
மகிழ்வதும் இயலா ஒன்றே !
சிறப்புடன் உலகில் வாழ்தல்
செயற்கருஞ் செய்கை யாகும்.

76

ஒழுக்கமும் நேர்மைப் பண்பும்
உயரறி வோடு பெற்றோர்
இழுக்கிடா தெங்கும் என்றும்
ஏற்றமே பெறுவர் சால.
இழுக்கிலாச் சிறந்த பண்பர்
இமயமாய் உயர்ந்து காண்பர்.
வழுக்கியோர் இருளில் எய்த
வன்கணை[28] போலக் காணார்,

77


22. அளறு இயல்

பிறர்மனை விரும்பும் பேதை
பெரியதாம் பழியும் ஏச்சும்
உறுவதற் காளா கின்றான்,
ஒருசிறு மகிழ்ச்சிக் காக;
அரசரின் ஒறுப்பை[29] அன்னான்
அடைவதும் நிகழக் கூடும்
பிறர்மனை விரும்பாப் பண்பு
பெரியதோர் ஆண்மை யாமே!

78


தருப்பையைத் தவறாய் பற்றின்
தன்கையை அறுத்தல் செய்யும்
துறப்பதாம் போர்வைக் குள்ளே
துய்மைஇல் செயல்கள் செய்வோர்
இறப்பவும் அளற்றுத் துன்பம்[30]
எய்துவர்; இளமை நோன்பும்
முறைப்படி செய்யா ராயின்
முயல்வதால் பயனே இல்லை,

79


நகரதைப் புறமும் உள்ளும்
நலமுறக் காத்தல் போல,
அகத்தொடு புறமும் உன்னை
அரண்பெறக் காத்துக் கொள்க
அகமு[31] நா ணுவன நாணி,
அஞ்சுவ அஞ்சிக் காக்க,
மிகத்தவ றான நீக்கி
மேன்மையாய் ஒழுகி வெல்க.

80


23. யானை இயல்

எய்திடும் அம்பை யானை
ஏற்றுமே பொறுத்தல் போல,
வைதிடும் பிறரை நீயும்
வலுவொடு பொறுத்துக் கொள்க
உய்தியில்[32] உலகில் தீயோர்
உறுதவ உள்ள தாலே
வெய்துறத் திட்டு வோரே
வெளியெலாம் திரிவர் சால.

81


பழக்கிய யானை கொண்டு
படுகளம் வெல்வர் மள்ளர்;
பழக்கிய யானை மீது
பார்புரப் பவரும்[33] செல்வர்,
இழுக்கமில் பயிற்சி யாலே
எதனையும் அடக்கல் ஒல்லும்
ஒழுக்கமாய்ப் பயிற்றி உள்ளம்
உயர்ந்திடச் செய்தல் வேண்டும்.

82

பழித்திடும் மலத்தைத் தின்று
பன்றிதான் பெருத்தல் போல,
கொழுத்திடத் தீனி தின்று
குன்றென உடல்வ ளர்த்தால்
இழித்திடத் துயிலும் சோம்பும்[34]
இறுக்கமாய்ப் பற்றிக் கொள்ளும் ;
செழித்திட முடியா துள்ளம்
சிறப்புறு அறிவு பெற்றே.

83


வெருவரு[35] போரில் தோற்ற
வேந்தனும் விட்டோ டல்போல்,
அறிவொடு பண்புள் ளோரை
அன்புசால் நண்ப ராகப்
பெறுவது முடியா தாயின்
பிரிந்துநீ தனித்து வாழ்க.
அறிவறு மூடர் கூட்டம்
அணுகலும் தீய தாகும்.

84


24. அவா இயல்

உரங்கொளா அவாஆர் உள்ளம்
உறுபொருள் பெறுதற் காகக்
குரங்குபோல் அங்கும் இங்கும்
குதித்துமே தாவிச் செல்லும்.
தரங்குறை அவாமே லிட்டுத்
தாக்கிய போர்தோற் றோரை
அரங்கவும்[36] அழிக்கத் துன்பம்
அறுகுபோல் ஆழ ஊன்றும்.

85


முடுக்குறு[37] வேரை வெட்டின்
முளைத்திடா மரங்கள் மீண்டும் ;
அடக்கரும் அவாவ றுத்தோர்
அயர்ந்திடத் துன்பம் பற்றித்
தடுக்குதல் என்றும் இல்லை ;
தாமரை இலையில் தண்ணீர்
வெடுக்கென விலகு தல்போல்
விலகிடும் துன்பம் யாவும்.

86


உற்றிடும் அவாவோ நீண்ட
ஒடைபோல் ஓயா தோடும் ;
பற்றெனும்[38] கொடியோ ஆண்டு
படர்ந்திடும் வளமாய் நீள ;
கற்றுறும் அறிவு கொண்டு
களைந்திடல் வேண்டும் முற்றும்.
வெற்றிநீ கொள்ளா யாயின்
விடாப்பிடி யாகும் துன்பம்.

87


வேட்டையில் முயல்கள் தோன்றின்
விரைந்திடும் அங்கும் இங்கும் ;
வேட்டையில்[39] சிக்கு மாந்தர்
திரிகிறார் இங்கும் அங்கும்.
சாட்டிடும் தீய பற்றாம்
சங்கிலி பிணைக்கப் பெற்றோர்
மீட்டிடாச் சிறைத்துன் பத்தில்
மேவுவார் நிலையாய் மன்னி.

88


இரும்பினால் மரத்தி னாலே
இயற்றுவ தளைகள் ஆகா;
விரும்பிகும் மனைவி மக்கள்
வியனிலம் மணிகள் இன்ன
இரும்பெரும் தளைகள்; தானே
இழைத்திடும் வலையில் சிக்கித்
திரும்பிடாச் சிலந்தி போலத்
திகைக்கலீர்[40] பற்றுள் சிக்கி.

89


ஆர்ந்திடும்[41] செல்வத் தாலே
அழிகிறார் மூட மாந்தர்;
ஓர்த்திடும் அறிஞர் என்றும்
ஒழிந்திடார் செல்வத் தாலே.
சேர்ந்திட நுகர்ச்சி இன்பம்,
சிற்றறி வுடையோர், தம்மைச்
சார்ந்திடும் இனத்தி னோடு
சாலவும் அழித்துக் கொள்வர்.

90


பயிரினைக் களைகள் சுற்றிப்
பற்றியே அழித்தல் போல,
மயர்வுறு காம வேட்கை
மாய்த்திடும் நலங்கள் எல்லாம்.
செயிரு[42] றும் பகைமைப் பண்பு
செறுத்திடும் தனைக்கொண் டோரை.
துயரறப் பற்று நீங்கித்
தூயவர்க் கறமே செய்க.

91
  1. 49
  2. 50
  3. 51
  4. 52
  5. 53
  6. 54
  7. 55
  8. 56
  9. 57
  10. 58
  11. 59
  12. 60
  13. 61
  14. 62
  15. 63
  16. 64
  17. 65
  18. 66
  19. 67
  20. 68
  21. 69
  22. 70
  23. 71
  24. 72
  25. 73
  26. 74
  27. 75
  28. 76
  29. 77
  30. 78
  31. 79
  32. 80
  33. 81
  34. 82
  35. 83
  36. 84
  37. 85
  38. 86
  39. 87
  40. 88
  41. 89
  42. 90
"https://ta.wikisource.org/w/index.php?title=புத்தர்_பொன்மொழி_நூறு/4&oldid=1148422" இலிருந்து மீள்விக்கப்பட்டது