புத்தர் பொன்மொழி நூறு/5

விக்கிமூலம் இலிருந்து

25. பிக்கு இயல்

சுமைகுறை வாயி ருப்பின்
சோர்வுறார் பயணம் செய்வோர்;
சுமைமிகின் ஆற்று நீரின்
சுழலிலே ஓடம் ஆழும்;
அமைவிலா[1] வெறுப்புச் சேறும்
அலர்விடும் விருப்பும் கூடின்,
சுமையது மிகுத லாலே
சுழலுமோ வாழ்க்கை வண்டி?

92


அறம்பிறழ் காமத் தீயை
ஆர்ந்திடத்[2] துடிக்கும் செய்கை
இரும்பினால் ஆன கல்லை
எரியினில் பழுக்கக் காய்ச்சி
விரும்பியே நெஞ்சுக் குள்ளே
விழுங்குவ தொப்ப தாகும்
திறம்பெற அதமே செய்து
தீவினை அகற்றி வாழ்க.

93


ஒவ்வொரு வர்த மக்கும்
உற்றிடும் தலைவர் தாமே.
ஒவ்விடா திடக்கு செய்யும்
உயிரினப் பரியைத் தட்டிச்
செவ்விதின் அடக்கி ஒட்டிச்
சென்றிடும் வணிகர் போல,
வவ்விடும் அகந்தை "நானை"[3]
வளர்த்திடா தடக்கல் வேண்டும்

94


26. பிராமண இயல்

முடியினை வளர்த்து நீள,
முழுவதும் மானின் தோலை
உடையெனக் கொண்டோர் யாரும்
உயர்பிரா மணரா காரே.
உடையதாய்க் கந்தை சுற்றி,
உடல்நரம் புகள்பு றத்தே[4]
அடையவே தெரிய நோன்பை
ஆற்றுவோர் பிராம ணர்தாம்.

95


பிறந்திடும் குலத்தி னாலோ,
பிராமணத் தாய்வ யிற்றில்
பிறந்திடு வாய்ப்பி னாலோ
பிராமணர் ஆகார் யாரும்.
பறந்திட[5]ப் பற்றை நீக்கிப்
படுபொருள் இல்லா தோரே
சிறந்திடும் பிராம ணப்பேர்
சீரொடு கொள்ளத் தக்கார்.

96


மயக்கிடும் வாழ்வாம் சேற்று
வழியினைத் தாண்டி மாறி,
கயக்கிடும்[6] அவாவாம் ஆற்றின்
கரையினைக் கடந்தே ஏறி,
உயக்கொளும் நல்லெண் ணத்தால்
உயிர்க்கெலாம் அறமே செய்து,
வியக்கவே கலந்து வாழ்வோர்
வியன்பிரா மணராம் காண்பீர்.

97

தாமரை இலையில் ஒட்டாத்
தண்ணிய[7] நீரே போல,
தாமமார் ஊசிக் கூரில்
தங்கிடாக் கடுகு மான,
காமமும் சினமும் பற்றும்
கழிந்திடச் செயவல் லோரே
ஆமென ஏற்கும் வண்ணம்
அரும்பிரா மணரே யாவர்.

98


உயிர்களைத் துன்பு றுத்தல்,
உறுபெருங் கொலையும் செய்தல்,
துயருறக் கொலைகள் செய்யத்
தூண்டுதல், வேள்வித் தீயில்
உயிருடல் வெட்டிப் போட்டே
உயர்மறைக் கூற்றின்[8] பேரால்
உயர்வற உண்ணல், செய்வோர்
உயர்பிரா மணரே யாகார்.

99


ஆர்க்குமே பகையால் தீமை
ஆர்ந்திடச் செய்யாப் பண்பர்.
போர்க்கெழும் முரடர் நாப்பண்[9]
பொறுமையோ டிருந்து வாழ்வோர்.
ஈர்க்குமெப் பற்றும் உள்ளோ
ரிடையிலே பற்றற் றுள்ளோர்.
ஓர்க்கரு நோன்பு கொள்வோர்,
உயர்பிரா மணரே யன்றோ!

100


மண்ணுல கப்பற் றோடு
மறுவுல கத்தின் பற்றும்
திண்ணமாய் நீக்கி யோரும்,
தீர்ந்திடா இன்ப துன்பம்
என்னுமாத் தளை[10]வென் றோரும்,
இன்னருள் மிக்குள் ளோரும்,
துன்னரும் பிராம ணப்பேர்
துளங்கிடப் பெற்று வாழ்வர்.

101
  1. 91
  2. 92
  3. 93
  4. 94
  5. 95
  6. 96
  7. 97
  8. 98
  9. 99
  10. 100
"https://ta.wikisource.org/w/index.php?title=புத்தர்_பொன்மொழி_நூறு/5&oldid=1148425" இலிருந்து மீள்விக்கப்பட்டது