புறப்பொருள் வெண்பாமாலை/வஞ்சிப் படலம்
Appearance
வஞ்சிப் படலம்
[தொகு]- வாடாவஞ்சி வஞ்சி யரவம்
- கூடார்ப் பிணிக்குங் குடைநிலை வாணிலை
- கொற்றவை நிலையே கொற்ற வஞ்சி
- குற்றமில் சிறப்பிற் கொற்ற வள்ளை
- பேராண் வஞ்சி மாராய வஞ்சி
- நெடுமொழி வஞ்சி முதுமொழி வஞ்சி
- துழுபுல வஞ்சி மழபுல வஞ்சி
- கொடையின் வஞ்சி குறுவஞ் சிய்யே
- பெருவஞ் சிய்யே பெறுஞ்சோற்று நிலையொடு
- நல்லிசை வஞ்சியென நாட்டினர்ஃதொகுத்த
- எஞ்சாச் சீர்த்தி யிருபத் தொன்றும்
- வஞ்சியும் வஞ்சித் துறையு மாகும்.
- வஞ்சி
- வஞ்சியரவம்
- குடைநிலை
- வாணிலை
- கொற்றவை நிலை
- கொற்ற வஞ்சி
- கொற்ற வள்ளை
- பேராண் வஞ்சி
- மாராய வஞ்சி
- நெடுமொழி வஞ்சி
- முதுமொழி வஞ்சி
- உழபுல வஞ்சி
- மழபுல வஞ்சி
- கொடை வஞ்சி
- குறுவஞ்சி
- ஒருதனிநிலை
- தழிஞ்சி
- பாசறை
- பெருவஞ்சி
- பெறுஞ்சோற்று நிலை
- நல்லிசை வஞ்சி
என்று வஞ்சித்திணை 21 (1+20) துறைகள் கொண்டது
வஞ்சி
[தொகு]- வாடாவஞ்சி தலைமலைந்து
- கூடார்மண் கொளல்குறித்தன்று. - கொளு
- வாடாத பொன்மலர் வஞ்சி சூடிக்கொண்டு
- இணக்கம் இல்லாதவர் மண்ணைக் கொள்ளக் கருதியது
- செங்கண் மழவிடையிற் றண்டிச் சிலைமறவர்
- வெங்கண் மகிழ்ந்து விழவமர – அங்குழைய
- வஞ்சி வணங்கார் வணக்கிய வண்டார்ப்பக்
- குஞ்சி மலைந்தானெங் கோ.
- சினம் கொண்ட காளை போல்
- சிலைமறவர் விழாக் கொண்டாட
- வணங்காரை வணக்க
- மன்னன் வஞ்சி மலர் சூடினான்
வஞ்சியரவம்
[தொகு]- வள்வார் முரசமொடு வயக்களிறு முழங்க
- ஒள்வாட் டானை யுருத்தெழுந் தன்று.
- முரசும் களிறும் முழங்க வாள் மறவர் போருக்கு எழுதல்
- பௌவம் பணைமுழங்கப் பற்றார்மண் பாழாக
- வௌவிய வஞ்சி வலம்புனையச் – செவ்வேல்
- ஒளிறும் படைநடுவ ணூழித்தீ யன்ன
- களிறுங் களித்ததிருங் கார்.
- பணைமுரசம் கடல் அலை போல் முழங்க
- பகைவர் மண் பாழாகும்படி
- வஞ்சிப் பூவைத் தலையின் வலப் பக்கம் அணிந்துகொண்டு
- வேல் மறவன் களிற்றின் மேல் சென்றான்
குடைநிலை
[தொகு]- பெய்தாமஞ் சுரும்பிமிரப் பெரும்புலவர் புகழ்பாடக்
- கொய்தார் மன்னவன் குடைநாட் கொண்டன்று.
- மாலையில் வண்டு மொய்க்கவும்
- புலவர் புகழ் பாடவும்
- மன்னன் தன் குடைக்கு நாள்விழா கொண்டாடுதல்
- முன்னர் முரசிரங்க மூரிக் கடற்றானைத்
- துன்னருந் துப்பிற் றொழுதெழா – மன்னர்
- உடைநா ளுலந்தனவா லோதநீர் வேலிக்
- குடைநா ளிறைவன் கொள.
- மன்னன் குடைநாள் விழா கொண்டாடியபோது
- முரசு முழக்கம் முன்னே சென்றது
- கடல் போன்ற படை மன்னனின் வலிமையைத் தொழுதது
வாணிலை (வாள்+நிலை)
[தொகு]- செற்றார்மேல் செலவமர்ந்து
- கொற்றவா ணாடகொண்டன்று. - கொளு
- பகைவர் மேல் செல்ல விரும்பி மன்னன்
- தன் கொற்றவாளுக்கு நாள்விழா கொண்டாடியது
- அறிந்தவ ராய்ந்தநா ளாழித்தேர் மன்னர்
- எறிந்தில கொள்வா ளியக்கம் – அறிந்திகலிப்
- பின்பகலே யன்றியும் பேணா ரகநாட்டு
- நன்பகலுங் கூகை நகும்.
- நன்னாள் அறிந்தவர் ஆய்ந்து சொன்ன நாள்
- ஆழித்தேர் மன்னவன்
- தன் வாளை வெளியில் எடுத்து விழா கொண்டாடினான்
- அப்போது கூகை பகலிலும் குழறிச் சிரித்தது
கொற்றவை நிலை
[தொகு]- நீடோளான் வென்றிகொள்கென நிறைமண்டை வலனுயரிக்
- கூடாரைப் புறங்காணுங் கொற்றவைநிலை யுரைத்தன்று. -கொளு
- கொற்றவை புலால் உண்ணும் மண்டையை வைத்திருப்பவள்
- மன்னன் வெற்றி கொள்ள வேண்டும் என்று அவளுக்கு விழா எடுத்தல்
- அணங்குடை நோலை பொரிபுழுக்கள் பிண்டி
- நிணங்குடர் நெய்த்தோர் நிறைத்துக் – கணம்புகலக்
- கையிரிய மண்டைக் கண்மோடி காவலற்கு
- மொய்யிரியத் தான்முந் துறும்.
- எள்ளுருண்டை
- பொரித்த புளுக் கறிகள்
- பிண்டி என்னும் கொழுக்கட்டை
- கொழுப்பு
- குருதி
- நிறைத்து வைத்த மண்டைகளுடன் சென்று வழிபட்டனர்
இதுவுமது
- மைந்துடை யாடவர் செய்தொழில் கூறலும்
- அந்தமில் புலவ ரதுவென மொழிப. - கொளு
- மறவர் இன்னது செய்வேன் என்று வஞ்சினம் கூறலும்
- அதனைப் புலவர் போற்றலும்
- தமருட் டலையாத றார்தாங்கி நிற்றல்
- எமருள்யா மின்னமென் றெண்ணல் – அமரின்
- முடுகழலின் முந்துறுதன் முல்லைத்தார் வேந்தன்
- தொடுகழன் மைந்தர் தொழில்.
- தமர் முன்னிலையில் தலைகாட்டாமல்
- தார்ப்படையில் நின்றவன்
- இப்படிப்பட்டவன் என்று எண்ண வேண்டாம்
- போரில் முன்னே நிற்பான்
- இவன் வேந்தனுக்குக் வீரக்கழல் சூட்டுபவன்
கொற்றவஞ்சி
[தொகு]- வையகம் வணங்க வாளோச் சினனெனச்
- செய்கழல் வேந்தன் சீர்மிகுத் தன்று. - கொளு
- தன் நாடு வணங்கும்படி போரில் வாளோச்சினான் என்று
- மன்னவன் சீராட்டியது
- அழலடைந்த மன்றத் தலந்தயரா நின்றார்
- நிழலடைந்தே நின்னையென் றேத்திக் – கழலடையா
- செற்றங்கொண் டாடிச் சிலைத்தெழுந்தார் வீந்தவியக்
- கொற்றங்கொண் டெஃகுயர்த்தான் கோ.
- இவன் போர்க்களத்தில்
- தனக்கு நிழலாய் இருந்து
- பகைவர் கொற்றம் அவிய,
- தன் வேலை உயர்த்தினான்
- என்று மன்னவன் பாராட்டினான்
கொற்றவள்ளை
[தொகு]- மன்னவன் புகழ்கிளந்
- தொன்னார்நா டழிபிரங்கிற்று. - கொளு
- தன் அரசன் புகழைப் பாடும்போது
- பகைவன் நாடு அழிகின்றதே என்று இரங்குதல்
- தாழார மார்பினான் றாமரைக்கண் சேந்தனவாற்
- பாழாய்ப் பரிய விளிவதுகொல் – யாழாய்ப்
- புடைத்தே னிமிர்கண்ணிப் ப்பூங்கட் புதல்வர்
- நடைத்தே ரொலிகறங்கு நாடு.
- ஆர மார்பின்
- தாமரைக் கண்ணான்
- என் மன்னன் கண் சிவந்தான்
- யாழ் போல் வண்டொலிக்கும்
- கண்ணி சூடிய புதல்வர்கள்
- நடைத்தேர் ஒலி கறங்கும் நாடு
- அழிந்துவிடுமோ
பேராண் வஞ்சி
[தொகு]- கேளல்லார் முனைகெடுத்த
- மீளியாளர்க்கு மிகவுய்த்தன்று. - கொளு
- பகைவர் போர்முனையை அழித்த மீளியாளர்க்கு
- மன்னன் கொடை வழங்கி மேம்படுத்தியது
- பலிபெறு நன்னகரும் பள்ளி யிடனும்
- ஒலிகெழு நான்மறையோ ரில்லும் – நலிவொரீஇப்
- புல்லா ரிரியப் பொருதார் முனைகெடுத்த
- வில்லார்க் கருள்சுரந்தான் வேந்து.
- பலி பெறும் கோயில்களும்
- பள்ளித் தலங்களும்
- நலிவு இல்லாமல் இருக்க,
- பகைவரைப் போரில் அழித்த வில்லாளனுக்கு
- வேந்தன் அருள்கொடை வழங்கினான்
இதுவுமது
- அருந்திறை யளப்ப வாறிய சினத்தொடு
- பெரும்பூண் மன்னவன் பெயர்தலு மதுவே. - கொளு
- பகைவர் திறை கொடுக்க,
- சினம் மாறிய அரசன் திரும்புதல்
- கூடி முரசிரங்கத் கொய்யுளைமா முன்னுகளப்
- பாடி பெயர்ந்திட்டான் பல்வேலான் – கோடி
- நிதியந் திறையளந்தார் நேராருந் தன்கீழ்
- முதியமென் றாறி முரண்.
- பகைவர் திறை அளந்து தந்து
- உன் அயியில் முதியோம் என்று கூற
- முரசு முழக்கத்துடன்
- குதிரை துள்ளி வர
- அரசன் பாடியிலிருந்து திரும்பினான்
மாராய வஞ்சி
[தொகு]- மறவேந்தனிற் சிறப்பெய்திய
- விறல்வேலோர் நிலையுரைத்தன்று. - கொளு
- வேந்தன் வெற்றி மறவனுக்கு "மாராயன்" என்னும் விருது வழங்கிச் சிறப்பித்தான்
- நேராரம் பூண்ட நெடுந்தகை நேர்கழலான்
- சேரார் முனைநோக்கிக் கண்சிவப்பப் – போரார்
- நறவேய் கமழ்தெரிய னண்ணா ரெறிந்த
- மறவே லிலைமுகந்த மார்பு.
- பகைவரின் மறவேலை மார்பில் தாங்கிச்
- சினத்துடன் பகைவரை வென்று
- மீண்ட மறவனுக்கு
- மார்பில் ஆரமும்
- காலில் கழலும் அணிவித்து
- அரசன் மாராய விருது வழங்கினான்
நெடுமொழி வஞ்சி
[தொகு]- ஒன்னாதார் படைகெழுமித்
- தன்னாண்மை யெடுத்துரைத்தன்று.
- பகைவர் படை நடுவில்
- மறவன் தன் ஆண்மைத் திறத்தை எடுத்துக் கூறுவது
- இன்ன ரெனவேண்டா வென்னோ டெதிர்சீறி
- முன்னர் வருக முரணகலும் – மன்னர்
- பருந்தார் படையமருட் பல்லார் புகழ
- விருந்தா யடைகுறுவார் வீண்.
- இன்னார் எனல் வேண்டா
- யார் வேண்டுமானாலும் வருக
- என்னோடு போரிடுக
- அவர்களையும்
- அவர்களின் மன்னனையும்
- பருந்துக்கு விருந்தாக்குவேன்
- மறவன் இவ்வாறு கூறுகிறான்
முதுமொழி வஞ்சி
[தொகு]- தொன்மரபின் வாட்குடியின்
- முன்னோனது நிலைகிளந்தன்று. - கொளு
- மறவன் ஒருவனின் தொல்குடி மரபினை
- மற்றவர்கள் புகழ்ந்து கூறுதல்
- குளிறு முரசங் குணில்பாயக் கூடார்
- ஒளிறுவாள் வெள்ள முழக்கிக் – களிறெறிந்து
- புண்ணொடு வந்தான் புதல்வற்குப் பூங்கழலோய்
- தண்ணடை நல்கல் தரும்.
- பார்க்களத்தில் முரசு முழங்கிற்று
- இந்த மறவன் தன் வாளைப் பகைவர் வாளோடு முழக்கினான்
- பகைவர் களிற்றை வெட்டி வீழ்த்தினான்
- புண்ணுடன் வந்திருக்கிறான்
- அரசன் இவலுக்குத் தண்ணடை (நன்செய் நிலம்) தருகிறான்
உழபுல வஞ்சி
[தொகு]- நேராதார் வளநாட்டைக்
- கூரெரி கொளீஇயன்று - கொளு
- பகைவர் நாட்டை எரித்தல்
- அயிலன்ன கண்புதைத் தஞ்சி யலறி
- மயிலன்னார் மன்றம் படரக் – குயிலகவ
- ஆடிரிய வண்டிமிருஞ் செம்ம லடையார்நாட்
- டோடெரியுள் வைகின வூர்.
- மயில் அன்னார்
- வேல் போன்ற கண்களைக்
- கைகளால் மூடிக்கொண்டு
- அசி, அலறி ஊர் மன்றம் வரும்படியாக
- குயில்கள் அகவும்பறியாக
- ஆடுகள் வெருவி ஓடும்படியாக
- வண்டுகள் பறக்கும்படியாக
- தழைமரங்கள் மிக்க ஊர்
- தீ பற்றி எரிந்தது
மழபுல வஞ்சி
[தொகு]- கூடார்முனை கொள்ளைசாற்றி
- வீடறக்கவர்ந்த வினைமொழிந்தன்று. - கொளு
- பகைவர் ஊரிலுள்ள பொருள்களை
- மக்களிடமிருந்து பிடுங்கிக்கொண்டு வருதல்
- களமர் கதிர்மணி காலேகஞ் செம்பொன்
- வளமனை பாழாக வாரிக் – கொளன்மலிந்து
- கண்ணார் சிலையார் கவர்ந்தார் கழல்வேந்தன்
- நண்ணார் கிளையலற நாடு.
- உழவர் விளைச்சல்
- பொன் மணிகள்
- முதலானவற்றை
- மனை பாழாகும்படி
- வில் மறவர்கள் அள்ளிக்கொண்டு வந்தனர்
- வேந்தன் பகைவர் சுற்றம் அலறிற்று
கொடை வஞ்சி
[தொகு]- நீடவுங் குறுகவு நிவப்பவுந் தூக்கிப்
- பாடிய புலவர்க்குப் பரிசினீட் டின்று. - கொளு
- தன்னைப் போற்றிப் பாடிக்கொண்டு வந்த புலவர்களுக்கு,
- கவர்ந்துவந்த பொருள்களைப் பரிசிலாக வழங்குதல்
- சுற்றிய சுற்ற முடன்மயங்கித் தம்வயி
- றெற்றி மடவா ரிரிந்தோட – முற்றிக்
- குரிசி லடையாரைக் கொண்டகூட டெல்லாம்
- பரிசின் முகந்தன பாண்.
- சுற்றத்தார் மயங்கினர்
- மகளிர் ஓடினர்
- நெல் கூடுகள் கொள்ளை அடித்துக் கொண்டுவரப்பட்டன
- அவை பாணர்களுக்கும் பரிசிலாக வழங்கப்பட்டன
குறுவஞ்சி
[தொகு]- மடுத்தெழுந்த மறவேந்தர்க்குக்
- கொடுத்தளித்துக் குடியோம்பின்று. - கொளு
- போரில் துணைநின்ற மன்னர்க்கு,
- அள்ளிக்கொண்டு வந்த பொருள்களைக் கொடுத்து
- அவர்களின் குடிமக்களைக் காப்பாற்றுவது
- தாட்டாழ் தடக்கைத்தனிமதி வெண்குடையான்
- வாட்டானை வெள்ளம் வரவஞ்சி – மீட்டான்
- மலையா மறமன்னன் மால்வரையே போலும்
- கொலையானை பாய்மாக் கொடுத்து.
- போரில் கவர்ந்து வந்த
- யானை, குதிரைகளை
- உதவிய மன்னர்களுக்கு வழங்கினான்
இதுவுமது
- கட்டூரது வகைகூறினும்
- அத்துறைக் குறித்தாகும் - கொளு
- கட்டிய ஊராகிய பாசறை பற்றிக் கூறினாலும் குறுவஞ்சித் துறை ஆகும்
- அவிழ்மலர்க் கோதைய ராட வொருபால்
- இமிழ்முழவம் யாழோ டியம்பக் – கவிழ்மணிய
- காய்கடா யானை யொருபாற் களித்ததிரும்
- ஆய்கழலான் கட்டூ ரகத்து.
- பாசறையில் மகளிர் ஆடினர்
- முழவு முழங்கிற்று
- யாழ் இசை எழுந்தது
- யானை முழங்கிற்று
ஒருதனிநிலை
[தொகு]- பொருபடையுட் கற்சிறைபோன்
- றொருவன்றாங்கிய நிலையுரைத்தன்று. - கொளு
- ஆற்று வெள்ளத்தைத் தடுத்து நிற்கும் தனிப்பாறை போல்
- போரைத் தடுத்து நின்ற ஒருவன் பற்றிச் சிறப்பித்துக் கூறுதல்
- வீடுணர்ந் தோர்க்கும் வியப்பாமா லிந்நின்ற
- வாடன் முதியாள் வயிற்றிடம் – கூடார்
- பெரும்படை வெள்ள நெரிதரவும் பேரா
- இரும்புலி சேர்ந்த விடம்.
- முதியாள் வயிற்றிடம் வீடுபேறு போல் தோன்றுவதில் வியப்பு ஒன்றுமில்லை
- இவள் மகன் பெரும்படையைப் புலிபோல் நின்று காத்தான்
தழிஞ்சி
[தொகு]- அழிகுநர் புறக்கொடை யயில்வா ளோச்சாக்
- கழிதறு கண்மை காதலித் துரைத்தன்று. - கொளு
- அழியும் படை புறங்கொடுக்குபடி
- வாளோச்சிய தறுகண்மையைப் பாராட்டுதல்
- கான்படு தீயிற் கலவார்தன் மேல்வரினும்
- தான்படை தீண்டாத் தறுகண்ணன் – வான்படர்தல்
- கண்ணியபி னன்றிக் கறுத்தார் மறந்தொலைதல்
- எண்ணியபின் போக்குமோ வெஃகு.
- காட்டுத் தீ போலப் பகைவர் தாக்கினாலும்
- தடுத்து நிற்பானே அல்லாமல்
- தன் உயிருக்கு இறுதி நேரும் என்னும் நிலை வருவதற்கு முன்னர்
- தன் வேலை அந்த மறவன் வீசமாட்டான்
பாசறைநிலை
[தொகு]- மதிக்குடைக்கீழ் வழிமொழிந்து மன்னரெல்லா மறந்துறப்பவும்
- பதிப்பெயரான் மறவேந்தன் பாசறை யிருந்தன்று. - கொளு
- மன்னர் எல்லாரும் போரை விட்டுவிட்டு வழிமொழிந்து காத்திருக்கும்போது
- பாசறையில் குடை நிழலில் வீற்றிருக்கும் வேந்தன் ஊர் திரும்பாமல் இருக்கும் நிலையைக் கூறுவது
- கரும்பொடு காய்நெற் கனையெரி யூட்டிப்
- பெரும்புனல் வாய்திறந்த பின்னும் – சுரும்பின்
- தொகைமலிந்த தண்குவளைத் தாமலர்த் தாரான்
- பகைமெலியப் பாசறையு ளான்.
- நெல், கரும்பு வயல்களை எரித்த பின்னரும்
- நீர்த் தேக்கங்களை உடைத்த பின்னரும்
- குவளை மலர் மாலை அணிந்த வேந்தன்
- பகைவர்கள் மேலும் மெலியும்படிப் பாசறையில் இருக்கிறான்
பெருவஞ்சி
[தொகு]- முன்னடையார் வளநாட்டைப்
- பின்னருமுடன் றெரீகொளீஇயன்று. - கொளு
- தன்னை வணங்காதவர் வளநாட்டை,
- படையுடன் சென்று எரி மூட்டியது
- பீடுலா மன்னர் நடுங்கப் பெரும்புகை
- ஊடுலாய் வானத் தொளிமறைப்ப – நாடெலாம்
- பின்னும் பிறங்கழல் வேய்ந்தன பெய்கழற்கால்
- மன்னன் கனல மறம்.
- வேந்தன் மறத்தால் கனன்று
- பெருமை மிக்க மன்னர் நடுங்க
- வானில் ஒளி மறையும்படி
- பகைவர் நாடெல்லாம் தீ மூட்டினான்
பெருஞ்சோற்று நிலை
[தொகு]- திருந்தார் தெம்முனை தெறுகுவ ரிவரெனப்
- பெருஞ்சோ றாடவர் பெறுமுறை வகுத்தன்று. - கொளு
- இவர் பகைவர் போர்முனையை அழிப்பர் என்று ஊக்குவிக்க
- முன்கூட்டியே மறவர்க்குப் பெருஞ்சோறு அளித்து அவர்கள் பெற்றதைக் கூறுவது
- இயவர் புகழ வெறிமுர சார்ப்பக்
- குயவரி வேங்கை யனைய – வயவர்
- பெறுமுறையாற் பிண்டங்கோ ளேவினான் பேணார்
- இறுமுறாயா லெண்ணி யிறை.
- இயவரின் முரசு முழக்கத்துடன்
- வேங்கை போன்ற வயவர்க்கு
- அவர்களின் தரவரிசை முறைப்படி
- வேந்தன் பெருஞ்சோற்றுப் பிண்டம் கொடுத்தான்
நல்லிசை வஞ்சி
[தொகு]- ஒன்னாதார் முனைகெடவிறுத்த
- வென்வேலாடவன் விறன்மிகுத்தன்று. - கொளு
- பகைவர் போர்முனையை அழித்த
- வேல்வீரனின் ஆற்றலைப் புகழ்ந்தது
- மடங்கலிற் சீறி மலைத்தெழுந்தார் மண்மேல்
- இடங்கெடச் சென்றிறுத்த பின்னும் – நுடங்கெரிபோல்
- வெல்லப் பெருகும் படையாற்கு வேந்தர்மேற்
- செல்லப் பெருகும் சினம்.
- போருக்கெழுந்தவர் நாட்டின்மீது மடங்கல் போல் சீறித் தாக்கிய பின்னரும்
- தீயைப் போல் வெல்லச் செல்லும் படையானின் சினத்தைப் பாராட்டியது
இதுவுமது
- இறுத்தபி னழிபிரங்கல்
- மறுத்துரைப்பினு மத்துறையாகும் - கொளு
- போர் நடத்திய பின்னர்
- பகைவர் அழிவுக்கு இரங்க மறுத்துக் கூறுவதும் அத் துறை
- குரையழன் மண்டிய கோடுயர் மாடம்
- கரையொடுபேய்ப் பீர்க்குஞ் சுமந்த – நிரைதிண்டேர்ப்
- பல்லிசை வென்றிப் படைக்கடலான் சென்றிறுப்ப
- நல்லிசை கொண்டடையார் நாடு.
- வேந்தன் புகழை ஏற்றுக்கொள்ளாதவர் நகர மாடங்கள் தீ பற்றி எரிந்து அவிந்து
- சுரை, பீர்க்கங் கொடிகள் படர்ந்திருந்தன
மூன்றாவது வஞ்சிப்படலம் முற்றிற்று.