உள்ளடக்கத்துக்குச் செல்

புல்லின் இதழ்கள்/இசைப் போட்டி

விக்கிமூலம் இலிருந்து
28. இசைப் போட்டி

சுசீலாவின் சுபாவம் மாறவில்லை. அவள் முயன்றாலும், அதை மாற்றிக் கொள்ள முடியவில்லை. ஹரிக்கு சமூகத்தில் தனி மதிப்பும், அந்தஸ்தும் படிப்படியாக ஏற்பட்டு நிலைத்துங்கூட, வீட்டுக்குள் வந்து விட்டால், சுசீலா ஏதாவது பேசி, அவன் மனத்தைப் புண்படுத்தாமல் இருக்க மாட்டாள். வெளியூர்க் கச்சேரி முடிந்து வந்த அலுப்பைக் கூடப் பார்க்காமல், ஹரி உடனே தஞ்சாவூர்க் கல்யாணராமனை எண்ணிக் கொண்டு ஓடுவதைப் பற்றி அவள் குறை கூறாத நாளே இல்லை.

ஹரியின் உடையிலும் பூசிக் கொள்ளும் சென்டிலும் அவள் பிழை கண்டாள். அதனால், அவன் தனக்காக வாங்கி வருவது தேவாமிருதமாக இருந்தாலும், அதைப் பிரியமாக ஏற்றுக் கொள்வதில்லை.

அதற்காக, ஹரி தன் காரியம் எதையும் நிறுத்தி விடவில்லை; மாற்றிக் கொள்ளவும் இல்லை. மற்றவர்கள் அவனை ஒதுக்கி விடவும் இல்லை. அம்மாவுக்கென்று தஞ்சாவூர்க் குடமிளகாய் கூடை கூடையாய் வாங்கி வருவான். பாகவதர் அவன் தஞ்சாவூருக்குப் புறப்படும் போதே, வண்ணாத்திக் கடைச் சீவலுக்கு ஆர்டர் கொடுத்து விடுவார். காயத்திரிக்கும், வசந்திக்கும் மிகவும் பிடிக்குமென்று வீசைக் கணக்கில் முந்திரிப் பருப்பு வாங்கி வருவான். சுசீலாவுக்கு மட்டும் பிரத்தியேகமாக ஒவ்வொரு தடவையும் விதவிதமான பட்டு ரவிக்கைத் துண்டுகளை வாங்கி வருவான். எல்லாருக்கும் ஐயன் கடைத் தெரு வாசனைக் கதம்பமும், ‘திண்டு’ம் பஞ்சமில்லாமல் வாங்கி வருவான். அன்றே அதைத் திருவிடைமருதூருக்கும் கொண்டு போய்க் கொடுப்பான்.

சுந்தரியும், வசந்தியும் இவற்றைப் பார்த்து மகிழ்ந்து போவார்கள். ஹரியின் அன்பையும், குணத்தையும் எண்ணி வியந்தபடி, ‘பெண் அதிர்ஷ்டக்காரிதான்’ என்று சுந்தரி மனத்துக்குள் எண்ணிக் கொள்வாள். ஆனால், சுசீலா மட்டும் அவன் ஆசையோடு வாங்கி வரும் எதையுமே விரலாலும் தீண்ட மாட்டாள். ஹரி அதைப் பற்றிக் கவலைக் கொள்வதில்லை. மறுமுறையும் அவன் சுசீலாவுக்காக ஏதாவது வாங்கி வருவது தப்பாது.

ஹரி வரும் போதெல்லாம், காந்தாமணி கேலி பண்ணத் தவறவே மாட்டாள். அவன் ஊருக்குப் போகும் போது, ஒவ்வொரு தடவையும் ஏதாவது சாமான்களை வாங்கி நிரப்பிக் கொண்டு செல்வது காந்தாமணிக்கு எப்படியோ தெரிந்து விட்டது. அநேகமாக டிரைவர் மூலந்தான் தெரிந்திருக்க வேண்டும் என்று ஹரி நம்பினான். ஏனெனில், கடைத் தெருவைச் சுற்றிக் கொண்டு, அவன் ஊர்வலம் செல்வதைச் சுசீலாவைப் போல், பின்னால் வந்து நோட்டம் பார்க்கிற சுபாவம் காந்தாமணிககு இல்லை. அவளுடைய பெரும்போக்கு யாருக்குமே வராது.

தான் கொடுத்தனுப்புகிற பணம் பாதிக்கு மேல் இப்படி வழியிலேயே பூவும், காயுமாய் உதிர்ந்து விடுகிறது என்று அறிந்து கொண்டவுடன், அந்தச் செலவை அவளே ஒவ்வொரு தடவையும், வலுவில் வந்து ஏற்றுக் கொண்டு வாங்கி அனுப்புவாள், ஹரி எத்தனை மறுத்தாலும், அவளிடம் பலிக்காது. ஆனால் மறு முறை வந்ததும், ஹரியைக் கேலி செய்யவும் அவள் தவற மாட்டாள்.

“இப்படித் தஞ்சாவூரையே ரெயிலில் ஏற்றிக் கொண்டு போவதற்குப் பதில் உங்கள் குருநாதர் குடும்பத்தையே இங்கே அழைத்து வந்து குடி வைத்து விடுவதுதானே?” என்று ஒரு நாள் அவள் விளையாட்டாகக் கேட்டு விட்டாள். அவ்வளவுதான், அப்படியே தம்பூராவைக் கீழே வைத்து விட்டுப் புறப்பட்டு விட்டான் ஹரி.

அன்று ஹரியைச் சமாதானம் செய்து, திரும்ப வீட்டுக்குள் இருத்துவதற்குள் காந்தாமணியின் தாய்க்குப் போதும் போதுமென்றாகி விட்டது. குருவைப் பற்றியோ, அவர் குடும்பத்தைப் பற்றியோ ஏதாவது கூறி விட்டால், அது ஹரிக்குத் துளிக் கூடப் பொறுக்காது என்று உணர்ந்த காந்தாமணி, அதை நன்றாக முடிச்சுப் போட்டு வைத்துக் கொண்டாள்.

ஆம், அவனுக்குக் கோபமோ, மன வருத்தமோ ஏற்பட் டால்; அந்தக் கண நேரத்துக்குள் தன் மனம் என்ன பாடு படுகிறது என்பதை, அன்றுதான் காந்தாமணி நன்கு உணர்ந்து கொண்டாள். ஹரி கோபித்துக் கொண்டு புறப்பட்டவுடன், தன் தாயால் சமாதானப் படுத்த முடியாமல், அவன் வராமலே போய் விட்டால் என்ன ஆகும் என்று அவளால் எண்ணிக் கூடப் பார்க்க முடியவில்லை.

வர வர, ஹரியை வாரத்துக்கு ஒரு முறையாவது பாராமல் இருக்க நேர்ந்து விட்டால், அவளுக்குப் பைத்தியமே பிடித்து விடும் போல் தோன்றியது. அவனுடைய இனிய குரலை, என்றும அருகில் இருந்து கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல் அவளுள் ஓர் ஆவல் அபரிமிதமாக எழுந்தது.

அவனுடைய பேச்சிலும், அவனுடைய பாட்டைப் போலவே இனிமை கமழ்வதைக் கண்டு கொண்டவள் காந்தாமணி. ‘அந்த இனிமை என்றுமே என்னைச் சுற்றிச் சூழ்ந்திருக்கலாகாதா?’ என்று அவள் அடிக்கடி தன் மனத்துக்குள்ளேயே சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தாள். தன்னிடம் அவனை அழைத்து வந்த தெய்வம் தன்னையும் அவனோடு சேர்த்து விட அருள் புரியட்டும் என்பதே அவளது இடையறாத பிரார்த்தனையாக இருந்தது. பிறகு, பிரார்த்தனைக்கு உரிய பலனையும் அவள் மனம் கனவு காண ஆரம்பித்தது.

கையில் இருந்த பூனையை இப்படியும், அப்படியும் புரட்டி விளையாடிக் கொண்டிருந்தாள் காந்தாமணி. அன்று அவள் மனம் மிகுந்த குதூகலத்துடன் இருந்தது. அந்த மகிழ்ச்சியில், ஹரி அன்று மிகவும் சோர்ந்து வந்திருப்பதை அவள் கவனிக்கத் தவறி விட்டாள். அவனும் தன் சுகவீனத்தை வெளிக்குக் காட்டிக் கொள்ளவில்லை. ஆனால், வழக்கத்துக்கு மாறாக ஹரி, வந்தவுடன் காந்தாமணியிடம் சூடாக ஒரு தம்ளர் காபி கொண்டு வரும்படி கூறினான். பையில் இருந்த ஒரு மாத்திரையை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு, ஹரி தயாராகக் காத்துக் கொண்டிருப்பதற்குள், அவள் கையில் காப்பியோடு வந்து விட்டாள்.

சூடான காபி நெஞ்சை நனைத்துக் கொண்டு உள்ளே சென்றதும், ஹரிக்குச் சற்றுப் புதுத் தெம்பு வந்தது. வழக்கம் போல், அவள் தம்பூராவைக் கையில் எடுத்துக் கொண்டு அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து மீட்டிக் கொண்டிருந்தாள்.

ஹரி அவளைப் பார்த்து, “என்ன பாடலாம்?” என்று கேட்டான்.

“உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ, சொல்லுங்களேன்.”

“போன தடவை என்ன நடந்தது?”

“நாயகி.”

“அப்போது இன்று ‘தர்பார்’ வைத்துக் கொள்வோமா?” ஹரி வேண்டுமென்றே கேட்டான்.

வேண்டாம். ‘லதாங்கி’ பாடலாம். நான் அரை மணி பாடுகிறேன். நீங்கள் வந்த சங்கதி வராமல், ஒரு மணி பாட வேண்டும்.”

“லதாங்கியையா?” ஹரி பெருமூச்சுடன் கேட்டான்.

“ஏன்? கல்யாணியில் காட்டுகிறீர்களே உங்கள் கை வரிசையை எல்லாம்; இதிலும் காட்டுங்கள். எப்பொழுது பார்த்தாலும், எந்தக் கச்சேரியிலும் கல்யாணிதானா? ஒன்று, நீங்களாக அதை ஆரம்பித்து விடுகிறீர்கள்; அல்லது ரசிகர்கள் அதைக் கேட்காமல் விடுவதில்லை. ஏன்? கல்யாணியைப் போலவே, எழுபத்திரண்டு மேள கர்த்தா ராகங்களையும் அத்தனை பிரமாதமாக உங்களைப் பாட வைக்கட்டுமா? ஆனால் இந்தச் சாதைனக்கு, நீங்களும் என்னுடன் ஒத்துழைக்க வேண்டும்; சரிதானா?” பதிலை எதிர்பார்த்து அவனுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஹூம். சரி, ஆரம்பி. கரும்புத் தின்னக் கூலியா?” என்றான் ஹரி சிரித்துக் கொண்டே.

காந்தாமணி மகிழ்ச்சியோடு கண்களை மூடிக் கொண்டு, இசையில் மூழ்கிப் போனாள். மீட்டுகிற அவள் விரல் நுனிகளிலிருந்து, தம்பூரா வழிப் பாய்ந்து பரவிய நாத வெள்ளம், அறை முழுவதும் நிரம்பியது. சற்றைக்கெல்லாம் அவள் லதாங்கியாகவே மாறி விட்டாள். பூனை அவள் காலடியில் உறங்கிக் கொண்டிருந்தது.

ஹரி பிரமிப்போடு அவள் பாடுகிற அழகைப் பார்த்துக் கொண்டும்; கேட்டுக் கொண்டும் இருந்தான். காந்தாமணியின் கற்பனைத் திறன் அவனைத் திணற அடித்து விடும் போலிருந்தது. ‘இனிப் பாட என்ன மீதம் வைத்திருக்கிறாள்? ஒரு மணி நேரம் இன்று, இவளுக்கு நான் எப்படிப் பதில் சொல்லி மீளப் போகிறேன்?’— என்று அவன் மனம் கவலைப்பட்ட போது, காந்தாமணி பாட்டை முடித்து விட்டு, தம்பூராவை ஹரியின் பக்கம் திருப்பினாள்.

ஹரி அவளை பரிதாபமாகப் பார்த்தான். ‘இன்று என்னை விட்டு விடு. நான் மிகவும் சோர்ந்து போய், உடல் நலமில்லாமல் வந்திருக்கிறேன். நம்முடைய போட்டியை இன்று ஒரு நாள் ஒத்தி வைத்துக் கொள்ளலாமே!’ என்று அவன் விழிகள், அவளிடம் கூறாமல் கூறின. ஆனால் அதைப் புரிந்து கொள்ள முடியாத காந்தாமணி, “என்ன யோசிக்கிறீர்கள்? இப்படியே ஒவ்வொரு தடவையும், பயப்படுகிற மாதிரி நடித்து விட்டுப் பிறகு நான் பாடின இடமே தெரியாமல் அடிப்பதுதானே உங்கள் வழக்கம்? இன்று மட்டும் என்ன?” என்று துரிதப்படுத்தினாள்.

காப்பியின் தெம்பும், மாத்திரையின் சக்தியும் அடங்கி ஓய்ந்து கொண்டிருந்த வேளையில், காந்தாமணியின் உற்சாகமூட்டும் வார்த்தைகள், அவனை எங்கோ கொண்டு செல்வது போல் இருந்தன. அவள் கையில் இருந்த தம்பூராவை ஹரி கையில் வாங்கிக் கொண்டான். சற்றைக்கெல்லாம் தன்னை மறந்து ஆவேசம் வந்தவனைப் போல், அவன் பாடிக் கொண்டே இருந்தான். காந்தாமணி கூறிய வார்த்தைகள் மெய்யோ, பொய்யோ; ஆனால், உண்மையிலேயே அவன் அந்த ராகத்தைப் பாட ஆரம்பித்த பிறகு, அவள் அத்தனை நேரம் கொண்டு வந்து நிறுத்திய லதாங்கி எங்கோ ஓடியே போய் விட்டாள்.

கடிகாரம் அறுபது நிமிஷத்தை எப்பொழுதோ கடந்து சென்று விட்டது. கண்களில் மாலை, மாலையாக நீர் வழிந்தோட, ஹரியைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

திடீரென்று ஹரியின் பார்வையில் ஒரு பயங்கரத்தை அவள் கண்டாள். அவன் கையில் இருந்த தம்பூரா, அவன் பிடியிலிருந்து நழுவியது. இமைக்கும் நேரத்துக்குள், அவள் சட்டென்று விழப் போன தம்பூராவைக் கையில் தாவிப் பிடித்துக் கொண்டாள். ஆனால், அதே சமயம் ஹரி அப்படியே சுருண்டு, தன் மீது விழுந்ததை அவள் எதிர் பார்க்கவேயில்லை. வாயிலிருந்து ரத்தம் வழிந்தது. திடுக்கிட்டுப் போன அவள், பரபரப்புடன் அவனைத் தூக்கித் தன் மடியில் கிடத்திக் கொண்டு, “அம்மா!” என்று அலறிய அலறல், அந்த வீடு முழுவதும் எதிரொலித்தது. விழித்துக் கொண்ட பூனை எதையோ கண்டு பயந்து விட்டது போல், படிக்கட்டுகளின் வழியே பாய்ந்து ஓடியது.

விளையாட்டுப் போல, நாலு நாட்கள் ஓடிப் போய் விட்டன. தஞ்சாவூர்ப் பாடத்துக்குச் சென்ற ஹரியை இன்னும் காணவில்லை என்றவுடன், வீட்டிலுள்ள எல்லாருமே தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தனர். பாகவதரும், லட்சுமியம்மாளும் சரியாகச் சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆயின. வாய் ஓயாமல், அவனைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர்.

கவலைப்பட அவன் பச்சைக் குழந்தை அல்ல; என்றாலும், கவலையாக இருந்தது. திருவிடைமருதூருக்கும் வரவில்லையாம். பஞ்சு அண்ணாவும், ராஜப்பாவும் ஊரில் இல்லாததனால், அங்கே போய்த் தேட வேண்டிய அவசியம் இல்லை என்று பாகவதர் தடுத்து விட்டார். பின், எங்கே போயிருப்பான் என்பது யாருக்குமே புரியாவிட்டாலும், பாகவதருக்கும், காயத்திரிக்கும் உள்ளூற ஒரு விதச் சந்தேகம் இருந்தது.

‘ஒரு வேளை, அரசூருக்குப் போயிருப்பானோ, அல்லது பக்கிரியினால் ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருக்குமோ? இப்போது அரசூருக்குப் போக வேண்டிய அவசியம் இல்லையே! அவன் அப்படி அந்தக் குடும்பத்துடன் எவ்விதத் தொடர்பும் கொண்டாடுபவன் அல்லவே! அரங்கேற்றத்துக்கே செல்ல மறுத்தவனாயிற்றே. ஆனால், பக்கிரியைப் பற்றிப் பயப்பட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? ஹரிதான் அவன் கேட்கும் போதெல்லாம், பணம் கொடுத்துக் கொண்டு வருகிறானே. பின் எங்கேதான் போயிருப்பான்? ஒரு வேளை தஞ்சாவூரிலேயே இருக்கிறானோ? புறப்பட்டுப் போய் ஒரு நடை பார்த்து வருவதற்கு இல்லா விட்டாலும், தந்தி அடிப்பதற்குக் கூட விலாசம் கேட்டுத் தெரிந்து வைத்துக் கொள்ளவில்லையே!” என்று பாகவதர் கவலைப்பட்டுப் புலம்பிக் கொண்டிருந்தார்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு, லட்சுமியம்பாள் பிரமை பிடித்தாற் போல், மூலையில் இடிந்து போய் உட்கார்ந்திருந்தாள்.

சுசீலா மட்டும் அடிக்கொரு தரம், எல்லாரிடமும் சீறி விழுந்து கொண்டே இருந்தாள். “தஞ்சாவூரிலே எந்தக் கல்யாணராமன் வீடு என்று யார் கண்டார்கள்? எங்கே போய்த் தேடுவது?” என்று திரும்பத் திரும்பக் கூறினாள்.

“இத்தனை சாமர்த்தியமாய் இப்போது பேசுகிறவள்; நீதான் அவன் போய் வருகிற இடத்து விலாசத்தைக் கேட்டுக் குறித்து வைத்துக் கொள்ளுவதற்கு என்ன? ஏன் செய்யவில்லை?” என்று லட்சுமியம்மாள் பொறுக்க முடியாமல், சுசீலாவிடம் கோபித்துக் கொண்டாள்.

வீட்டில் நடக்கும் இத்தனையையும் பார்த்துக் கொண்டு ஒன்றும் தெரியாதவள் போல்; ஒன்றுமே கூற முடியாமல், காயத்திரி தவித்துக் கொண்டிருந்தாள்.

‘நிச்சயமாக ஹரி தஞ்சாவூரில் காந்தாமணியின் வீட்டில்தான் இருக்க வேண்டும். ஏதோ தவிர்க்க முடியாத காரணத்தினால்தான், அவன் அங்கே தங்கியிருக்க வேண்டும்; போன இடத்தில், அங்கே அவர்களில் யாருக்கு என்ன உடம்போ, ஹரி உதவிக்குத் தங்கி விட்டான் போல இருக்கிறது. இருந்தாலும் ஒரு கடிதங்கூடவா போடக் கூடாது?’ என்று எண்ணிய காயத்திரி சிறிது மனவேதனை கொண்டாள்.

நான்கு நாளாக ஹரியைக் காணோம் என்றதும், சுசீலா திருவிடைமருதூருக்குப் போய் வந்தாளே தவிர, அங்கே சுந்தரியிடமோ, வசந்தியிடமோ ஹரியைத் தேடிக் கொண்டு வந்திருப்பதாகக் கூறவே இல்லை.

எதேச்சையாக வந்தவள் போல், ஹரி அங்கும் வரவில்லை என்ற விஷயத்தை மட்டும் கிரகித்துக் கொண்டு திரும்பி விட்டாள். ஆனால், அன்று அப்பாவைப் பார்த்துப் போக வசந்தி சுவாமிமலைக்கு வந்த போதுதான், அவளுக்கு இந்த விஷயமெல்லாம் தெரிய வந்தது.

ஹரியை நான்கு நாளாகக் காணவில்லை. தேடிக் கொண்டிருக்கிறார்கன் என்று அறிந்தவுடன், வசந்தி திடுக்கிட்டுப் போனாள். சொல்லொணாத கவலையும், வேதனையும் அவளைச் சூழ்ந்து கொண்டன. அந்த நிமிஷமே அங்கிருந்து ஓடிப் போய், அம்மாவிடம் இந்தச் செய்தியைக் கூற அவள் உள்ளம் துடித்தது. ஆனால், அங்கே இருந்த அத்தனை பேருடைய கவலையையும், வேதனையையும் விடவா அது முக்கியம்? அப்படி உடனே புறப்பட்டுச் செல்லுவது அப்பட்டமான சுயநலம் அல்லவா என்று அவள் மனமே குத்திக் காட்டியது.

ஆயினும், அவளுக்குச் சுசீலாவின் மீது வந்த கோபத்தை மட்டும் அடக்கவே முடியவில்லை. ஊருக்கு வந்தவள் ஒரு வார்த்தை சொல்லவில்லையே! காயத்திரி அக்காவும், பெரியம்மாவும் இல்லாத போது சுசீலாவைத் தனியாகச் சந்தித்து, வாய்க்கு வந்தபடிப் பேசித் தீர்த்து விட வேண்டுமென்று அவள் துடித்தாள். அதற்கான சந்தர்ப்பத்தை அவள் மனம் எதிர் பார்த்துக் கருவிக் கொண்டிருந்தது. ஆனால், சோதனையைப் போல் வசந்தி ஊருக்குப் புறப்பட்டுப் போகிற வரையில், சுசீலா அவள் கண்ணில் அகப்படவே இல்லை.

காயத்திரிதான் வீட்டுக் காரியங்களைக் கவனித்தாள். லட்சுமியம்மாளின் நிலையைப் பார்த்ததும், வசந்திக்கு ஒன்றுமே பேசக் கூடத் தைரியம் வரவில்லை. அவளையும் அறியாமல் கண்களில் நீர் கசிந்தது.

“வருகிறேன் பெரியம்மா” என்று சொல்லிக் கொண்டு புறப்பட்ட வசந்தியை, லட்சுமியம்மாள் கையைப் பிடித்து அருகில் அமர்த்திக் கொண்டாள்.

“ஊருக்குப் போனதும், அம்மாவிடம் இங்கேயுள்ள விஷயத்தைச் சொல்லாதே. சுந்தரியால் இதைத் தாங்கிக் கொள்ள முடியாது. கேட்டால், பிராணனையே விட்டு விடுவாள். ஹரி சின்னக் குழந்தையா, கவலைப் பட்டுத் தேடித் திரிய? அவனுக்கு எத்தனையோ சிநேகிதம்; எவ்வளவோ காரியங்கள். கச்சேரி பண்ணிச் சம்பாதிக்கிறது போதாதென்று, இந்தக் குடும்பத்தையும் அவன்தானே கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது? பெற்ற பிள்ளை கூட இந்தக் காலத்தில் உருக மாட்டான்; ‘ஐயா இப்படி ஒரேயடியாகப் படுத்துக் கொண்டு விட்டாரே’, என்று அவன் அத்தனை கவலைப்பட்டுக் கொண்டு கிடக்கிறான். ‘ஐயாவுக்குச் சீக்கிரமே ஏதாவது நல்ல வைத்தியமாகச் செய்தாக வேண்டும். எத்தனை ஆயிரம் செலவானாலும்; பெரிய டாக்டர் யாரையாவது பிடித்து, உடம்பைக் குணப்படுத்தினால்தான் எனக்கு நிம்மதி’, என்று ஓயாமல் கூறிக் கொண்டே இருப்பான். நமக்காக, எங்கே, யாரைத் தேடிக் கொண்டு அலைகிறானோ? அவனுக்காக, நாம் அநாவசியமாக இங்கே, கவலைப் பட்டுக் கொண்டு கிடக்கிறோம், அதனால்தான், சுசீலாவைத் திருவிடை மருதூருக்கு அனுப்புகிற போது, உன் அம்மாவிடம், ‘ஹரியைக் காணவில்லை; தேடிக் கொண்டு வந்திருக்கிறேன்’ என்று காட்டிக் கொள்ளாமல் பார்த்து விட்டு வா என்று நான் சொல்லி அனுப்பினேன்” என்று லட்சுமியம்மாள் கூறிக் கொண்டிருந்த போதே, வசந்திக்குச் ‘சுரீர்’ என்றது. ‘நல்ல வேளையாகச் சுசீலாவின் வாயில் அகப்பட்டுக் கொள்ளாமல் தப்பினோம்’ என்ற ஆறுதல் அவளுக்குப் பிறந்தது. ஆனால், பெரியம்மா சொன்னபடி ஊருக்குப் போனதும், அம்மாவிடம் எதையும் ஒளித்துக் கூற அவள் விரும்பவில்லை. உடனே அம்மாவிடம் சென்று ஹரியைப் பற்றிய விஷயத்தைக் கூறினால்தான், சமாதானம் ஆகும் போலிருந்தது. அதற்காகவே அவள் சீக்கிரம் புறப்பட்டு விட்டாள்.

வசந்தி வாசற் பக்கம் வந்தபோது; கையில் ஏதோ கடிதத்துடன் உள்ளே நுழைந்த சுசீலா, வசந்தியைக் கண்டதும் தலையை இடத் தோள் பட்டையில் இடித்துக் கொண்டு வேகமாக உள்ளே சென்றாள். அவளுடைய அவமதிப்பைத் தாங்க வசந்தியால் முடியவில்லை. அந்தக் கணத்தில், அவளுக்கு எப்படித்தான் அத்தனை ஆவேசம் வந்ததோ தெரியவில்லை. “சுசீலா!” என்று உரக்கக் கூவிக் கொண்டே, வீட்டினுள் திரும்பினாள்.

ஆனால் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதவள் போல், கையில் இருந்த கடிதத்தைத் தந்தையிடம் படித்துக் காட்டி விட்டு, “ஹரிக்கு உடம்பு சரியில்லையாம் அம்மா” என்று தாயினிடம் கடிதத்தைக் கொடுத்துச் சுசீலா கண்ணிர் விட்டாள்.

வசந்தியால் இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. ‘அடேயப்பா, என்னமாக நீலிக் கண்ணீர் வடிக்கிறாள்! நேரில் இருந்தால் திட்டிக் கொண்டே இருப்பதும், கண் காணாத போது கண்ணீர் விடுவதும் — என்னமாய்த்தான் வேஷம் போடுகிறாள்! எங்கிருந்துதான் இதையெல்லாம் கற்றுக் கொண்டாளோ மாய்மாலக்காரி!’ என்று மனத்துக்குள் சுசீலாவைத் திட்டிக் கொண்டே சென்றாள் வசந்தி.