பூவும் கனியும்/கல்லூரி மாணவர்கள் நிலையும் வழியும்
கல்லூரி மாணவர்கள் நிலையும் வழியும்
தாய்மார்களே ! தோழர்களே !
இன்று நல்ல அற நிலையத்தாரால் நடத்தப்படும் ஒரு சிறந்த கல்லூரியின் பெரிய விழாவிலே கலந்து கொள்வதில் மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறேன். இந்த வாய்ப்பு அளித்ததற்காக உங்களுக்கு என் நன்றியும் வணக்கமும். அறிக்கை வாசிக்கக் கேட்டேன்; நீங்களும் கேட்டீர்கள். சென்ற ஆண்டு இக் கல்லூரி நல்ல பணி ஆற்றி இருக்கிறது என்று கண்டோம்.
அறிக்கை படிக்கக் கேட்பதற்கு முன்பே உங்கள் இராணுவ அணிவகுப்பைப் பார்வையிட்டேன்; பூரித்துப்போனேன்.
'ஒளி படைத்த கண்ணிணாய் வா வா வா
ஏறு போல் நடையினாய் வா வா வா'
என்று பாரதி, அவர்கள் இல்லாத இடத்திலே பாடினார். இன்றிருந்தால் ஒளிபடைத்த கண்ணினராய், ஏறு நடையினராய் இன்று இளைஞர்கள் இருக்கிறார்கள் என்று அவர் பூரித்துப்போவார் அவர் கண்ட கனவு இன்று நனவானது கண்டு நானும் பூரித்துப்போனேன். மிக நல்ல நடை நடந்தீர்கள்; பெருமிதத்தோடு நடந்தீர்கள். இரண்டாண்டுகளாகத்தான் இப்படை இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். இரண்டாண்டுகளில் நல்ல நடை நடக்கப் பயிற்சி கொடுத்த உங்கள் ஆசிரியர்கட்கும் உங்களுக்கும் என் வணக்கம்.
அறிக்கையைப் படித்தேன். சாதாரணமாக அறிக்கையில் எதிர்பார்ப்பது எது? தேர்ச்சியைப் பற்றி. தேர்ச்சியில் நீங்கள் பின்னடைய வில்லை. நிறைய-கிட்டத் தட்ட 70 சதவிகிதத்திற்கு மேலும்-தேறியிருக்கிறீர்கள். பிரிவு பிரிவாகப் பார்த்தால் 98 சதவிகிதத்திற்குக்கூடப் போயிருக்கிறீர்கள். ஆனாலும் அதனோடு மன நிறைவு கொள்ளக்கூடாது. ஏன் அப்படிச் சொல்கிறேன்? என்னுடைய நோக்கம் என்னுடைய எண்ணம்-என்னுடைய ஆழ்ந்த முடிவு எல்லோரும், 100-க்கு 100 பேரும், தேறவேண்டும் என்பது. உங்கள் கல்லூரித் தலைவர் அவர்கள் ஆற்றல் மிக்க தலைவர்; எடுத்த காரியத்தை மிகத் திறமையாகச் செய்யக்கூடிய தலைவர் என்று எனக்குத் தெரியும். உங்கள் ஆசிரியர்களைப் பார்க்கிறேன். அவர்கள் இளைஞர்கள். எனக்கு இளைஞர்களிடத்திலே நம்பிக்கை யுண்டு. அப்படிப்பட்ட இளைஞர்களைக் கொண்டுள்ள கல்லூரி நல்ல பணியாற்றும். இதில் ஐயமில்லை. ஆயினும் இன்னும் 80 சதவிகிதம் தவறியிருக்கிறீர்கள் என்றால், அதில் ஆசிரியர்கள் தவறு இல்லை; வசதியில் தவறில்லை; கொஞ்சம் எங்கோ அலட்சியம் இருந்திருக்கிறது. உங்கள் தலைவர் சற்றே சாடை காட்டினார். குறிப்புக்கூடக் காட்டினார், வேறு இடத்திலே. எங்கே? “கால்பந்துப் போட்டியிலே மூன்று ஆண்டுகள் வெற்றி பெற்று நிரந்தரமாக அந்தப் பரிசைப் பெற்றுவிட்டோம்; இவ்வாண்டில் பெறவில்லை; கண்ணேறு பட்டுவிட்டது" என்றார். இல்லை இல்லை; கண்ணேறு பட வில்லை. நமக்குக் கொஞ்சம் அலட்சியம் வந்துவிட்டது. வெற்றி என்பது விரும்பத் தக்கதுதான். அதே நேரத்திலே கொஞ்சம் அதற்கு முக்கணாங் கயிறு போடவேண்டும். ஒரு எழுத்துத் தவறிவிட்டால் வேறுவிதமாக மாறிவிடும். வெற்றி வெறியாக மாறி விடும். நம்மைவிடத் திறமை உடையார் யார் இருககிறார்’ என்ற நினைப்பு அரும்பிவிட்டால் எவ்வளவு பெரிய அறிஞனும் சறுக்கி விழுந்துவிடுவான். அப்படித்தான் அந்தக் கோப்பையை இழந்திருக்கிறீர்கள். கண்ணேறு பட்டு அன்று. அதே போன்று நல்ல ஆசிரியர்கள் இருக்கிறார்கள்; வகுப்பில் நல்ல மதிப்பெண் பெறுகிறோம்; நமக்கு என்ன குறை: என்று இருந்திருப்பீர்கள். அப்படி எண்ணியவர்களே தவறியிருக்கிறார்கள்.
100-க்கு 100 மதிப்பெண்கள் வாங்கித் தேற வேண்டும் என்று சொல்வோரில்லை; 100-க்கு 60 மதிப் பெண்கள் வாங்கித் தேறவேண்டும் என்று சொல்வோர்களுமில்லை. 100-க்கு 40,35 வாங்கினாலே மேல் வகுப்புக்குப் போகமுடியும் என்று வைத்திருக்கிறார்கள். அதுகூட வாங்க முடியாத மாணவர்கள் உங்களிலே இருக்கிறீர்களா? நீங்கள் அப்படி நம்பினால் அதை இன்றோடு மறந்துவிடுங்கள். நீங்கள் எல்லோரும் தேற முடியும். எப்போது முடியும்? உங்களிடம் உங்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும். நாம் தவறுவதற்காகப் பள்ளிக்கு வரவில்லை, கல்லூரிக்கு வரவில்லை. பல்கலைக் கழகத் தேர்வில் வடிகட்டித் தான ஆகவேண்டும் என்பதற்காகத் தேர்வு நடத்துவதில்லை. நீங்கள் வடிகட்டும்படி விட்டுவிடுகிறீர்கள்; அலட்சியம் செய்து ஏமாந்துவிடுகிறீர்கள்.
ஆகவே, நீங்கள் நம்பிக்கையோடு முயற்சி செய்யவேண்டும். அசட்டுத் துணிவு வாழ்க்கைக்குப் பயன்படாது. நல்ல கவனம் செலுத்தி முயற்சியை மேற்கொள்ள வேண்டும். எந்த நேரத்தில் முயற்சி வேண்டுமோ அந்த நேரத்தில் முயலவேண்டும். இதைத்தான் வள்ளுவர்
ஞாலம் கருதினும்
கை கூடும் காலம்
கருதி இடத்தாற்
செயின்
என்று கூறுகிறார். ஆகவே நூற்றுக்கு நூறுபேர் தேர்வதில் எப்படித் தவறு ஆகமுடியும்? காலத்தாலே செய்ய வேண்டும். இடம் கருதிச் செய்ய வேண்டும். அப்படி நீங்கள் படித்துப் படித்து இரண்டொரு ஆண்டுகளுக்குள் எல்லோரும் தேறும் நிலை வர வேண்டும். தேற வேண்டும் என்பது என் அவா.
அந்த இரண்டாண்டிலே இன்னொன்றும் ஆகி விடவேண்டும். என்ன? இது அன்று இரண்டாந்தரக் கல்லூரியாக இருக்கக்கூடாது. முதல்தரக் கல்லூரி யாக பட்டப் படிப்புக்கு ஆயத்தம் செய்யும் கல்லூரியாக இருக்கவேண்டும். இந்த அறநிலையத்தார் முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை. பல அறநிலையங்களை நடத்துகிறார்கள், வளர்ந்துகொண்டே வருகின்றன. ஆகவே இன்னொரு படி வளர்வது முடியாத அன்று. எனவே அப்படி வளர்ந்து முதல்தரக் கல்லூரியாக-நிலையிலேமட்டு மல்லாமல் தகுதியிலேகூட நூற்றுக்கு நூறு மாணவர்கள் தேறுகிறார்கள் என்ற உயர்நிலையுடைய சிறந்த கல்லூரியாக இருக்க வேண்டும்.
விளையாட்டிலும் நீங்கள் புலிகளாக இருக்கிறீர்கள் பல போட்டிகளில் வெற்றி பெற்றீர்கள். சில போட்டிகளில் தவறிவிட்டீர்கள். தவறியதற்காக நீங்கள் வருத்தப்படக் கூடாது. நான் போட்டிகளியே வெற்றி பெறாதவன். ஆனால் வருத்தப்படாமல் இருக்கவும் கற்றுக்கொண்டவன். மேலும், ஓர் இளைஞன், முதல் தமிழன், தமிழ் நாட்டிலே கல்வித்துறை தலைவனாக இளம்வயதிலே வந்துவிட்டானே' என்று பலர் வியப்படைகிறார்கள். பலர் பலவித மாகக் கூறுவார்கள். காரணம் ஒன்று சொல்வேன். துணிச்சல் வேண்டும். பெரிய நிலைக்கு வர யார் முயற்சி செய்தாலும் துணிச்சல் வரவேண்டும். ஆகவே போட்டிகள் பலவற்றிலும் கலந்துகொள்ள வேண்டும். தோற்றுவிடுவோமோ, வெற்றி பெறாவிடின் ஊரார் கிண்டல் செய்வார்களோ, ஏளனம் செய்வார்களோ என்று அச்சப் பட் டு க் கலந்து கொள்ளாமல் பின்னடைந்து போகிற மக்கள் என்றும் முன்னேற முடியாது. `வெற்றியோ தோல்வியோ நமக்குக் கவலை இல்லை. முயற்சிக்குத்தான் நாம் பொறுப்பாளர். பலனு க்கு நாம் பொறுப்பாளர் அல்லர்’ என உழைக்க வேண்டும் போட்டியில் ஈடுபடுகிறவர்கள் வெற்றி பெற்றாலும், தோல்வி யடைந்தாலும் அந்தப் பயிற்சி காரணமாகப் பின்னர் வெற்றியே பெறுவர். எ ன க் குக் காத்திருந்தது போன்ற வெற்றிகள் பல உங்களுக்கும் காத்துக் கொண்டிருக்கின்றன. ஆகவே, அந்த வெற்றிகளை அடைய உங்களே ஆயத்த மாக்கிக்கொள்ளுங்கள். தவறிவிடுவோமோ என்று அச்சப்படாமல் ஊக்கத் தோடு நல்ல பெயர் எடுங்கள்..
அறிவு பெறுகிறீர்கள், நல்ல ஆற்றல் பெறுகிறீர்கள். போதுமா? கல்வி என்பது அறிவைமட்டும் 'வளர்ப்பது அன்று; ஆற்றலைமட்டும் வளர்ப்பது அன்று; கல்வி மனிதனிடத்திலே மற்றொன்றையும் வளர்க்கவேண்டும். அது மிகச் சிறப்பான ஒன்று. சிறப்பான ஒன்று என்னும்போது நமக்கு - ஆறாவது அறிவு-பகுத்தறிவு நினைவுக்கு வருகிறது. ஆம், அத
னையும் வளர்க்கவேண்டும். நமது சிந்தனை-ஆறாவது அறிவு-வளர்ந்து கொண்டே இருக்கவேண்டும் யாரோ சொன்னார்கள் என்பதற்காக எதனையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. சிறப்பான ஒன்று என்று நான் குறிப்பிடுவது அந்த ஆறாவது அறிவை மட்டுமன்று. அதைவிடச் சிறந்தது ஒன்று இருக்கிறது. அதுதான் மனிதனை மனிதன் என்ற பெயருக்கு உரியவனாக ஆக்குகின்றது. அஃது எது? அதைத்தான் மனம் என்று சொல்வார்கள்- ஆத்மா என்று சொல்வார்கள் - உள்ளம் என்று சொல்வார்கள். அந்த உள்ளத்தை உருவாக்குவது மிகவும் முக்கியம். கல்வியின் நோக்கம் உள்ளத்தை உருவாக்குவது; மனத்தைச் செம்மைப்படுத்துவது; சீலத்தைக் கொடுப்பது; சான்றாண்மையைத் தருவது. சான்றோன் ஆக்குவதே கல்வியின் குறிக்கோள். சான்றாண்மை இல்லாத கல்வி பயனற்ற கல்வி; கேடான கல்வி. இந்தக் கல்லூரியிலே அந்தச் சான்றாண்மையை ஆக்கும் நல்ல செயல்களும், நிகழ்ச்சிகளும் நடந்து வருவதனை அறிய மகிழ்கின்றேன்; பாராட்டுகின்றேன்.
நம்மால் என்ன செய்ய முடியும்? நம்மால் ஆன உதவியை மற்றவருக்குச் செய்யவேண்டும். `யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்று எண்ணி நம்மால் ஆன தொண்டினை ஆற்றவேண்டும். ஆகவே உங்களுக்காகமட்டும் நீங்கள் அறிவு பெறாமல், ஆற்றல் பெறாமல், மற்றவர்க்குத் தொண்டு செய்ய ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும். அதுதான் நல்ல மனிதத் தன்மை அந்த மனிதத் தன்மை உங்களோடு மட்டும் இருக்கக்கூடாது. அது நாளும் பலரிடம் பரவும்படியாகச் செய்யவேண்டும்.
இந்த நேரத்திலே பாரதி பாட்டு ஒன்று நினைவுக்கு வருகிறது. அவர் கேட்கிறார்; என்ன என்று கேட்கிறார் ?
'தேடிச் சோறு நிதம்தின்று
சின்னம் சிறு கதைகள் பேசி-மனம்
வாடித் துன்பம் மிக உழன்று
பிறர்வாடப் பலசெயல்கள் செய்து- நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங்கூற்றுக்கு இரையெனப் பின்மாயும்-பல வேடிக்கை மனிதரைப் போல
நான் வீழ்வேன் என்று நினைத் தாயோ?'
என்று கேட்கிறார். அந்தப் பாடலை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இந்தப் பாடலைப்பற்றி இதுவரை சிந்தி க்காமல் இருந்தால் இப்போது சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் வேடிக்கை மனிதரல்லர்; இந்நாட்டு மன்னர்மட்டு மல்லர், எதிர் காலத்திலே உலக மன்னராகப் போகிறீர்கள்! ஆகவே அந்த நிலைக்கு உங்களை ஆயத்தம் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். அந்த
நிலைக்கு இன்றுமுதல் ஆயத்தம் பண்ணிக்கொள்ளுங்கள். இந்த நாட்டின் மன்னர்களாக இருக்க உலகத்தின் குடியாக இருக்க-உலகத்துக்கு வழி காட்டக்கூடிய உத்தமர்களாய், அறிவாளிகளாய், திறமைசாலிகளாய் வாழக்கூடிய நிலைக்கு உங்களை ஆயத்தப் படுத்திக்கொள்ள வேண்டும் என்று சொல்ல ஆசைப்படுகிறேன். அதே பாரதியார்,
நல்லதோர் விணைசெய்தே அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி எனைச் -
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி ! நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ ?'
என்று கேட்கிறார். வீணை; நல்ல வீணை. எல்லோரும் செய்யக்கூடிய வீணையன்று; பெரு முயற்சியோடு, பெரும் ஆய்வோடு செய்யப்படுகிற வீணே. அப்படிப்பட்ட வீணை செய்தபிறகு அதை நலங்கெட வீணாக எறிந்துவிடுவார்களா? புழுதியிலே எறிந்து விடுவார்களா? எறிந்துவிட மாட்டார்கள். அதைப் பயன்படுத்துவார்கள். யாருக்குப் பயன் வீணையை மீட்டுகிறவருக்கு மாத்திரம் மகிழ்ச்சியா? கேட்கிறவர் களுக்கெல்லாம் மகிழ்ச்சியை அந்த வீணை கொடுக்கிறது. முயற்சியை மேற்கொள்கிறார் வீணையைச் செய்தவர்; நல்ல வீணையை வாங்கியவரும் முயற்சியை மேற்கொள்கிறார். அதுபோல் அறிவு பெற்றிருக்கிறோம். அது மாநிலம் பயனுற வாழ்வதற்கு. நம் முடைய நாடு மட்டும் பயனுறுவதற்கு அன்று. ஆகவே நீங்கள் பெற்ற அறிவால் நீங்களும், உங்கள் நாடும் உலகமும் பயனுற வாழ வழி செய்துகொண்டு நல்ல நிலையில் வாழ்க என வாழ்த்துகிறேன்.
(பீளமேடு, பூ. சா. கோ. கலைக் கல்லூரி ஆண்டு விழாவில் தலைமை தாங்கி ஆற்றிய சொற்பொழிவு.)