பூவும் கனியும்/பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புக

விக்கிமூலம் இலிருந்து
VI
பகுத்துண்டு
பல்லுயிர் ஒம்புக

பெரியோர்களே! தாய்மார்களே!

அன்பிற்குரிய தம்பிகளே! தங்கைகளே !
'மனம் சேர்ந்ததன் வண்ணமாகும்' என்று பெரியோர் சொல்கின்றனர். உண்மை தான் அது என்பதனை இன்று அனுபவத்தால் அறிகிறேன். இளமையும் எழிலும், ஊக்கமும் உறுதியும், வலிமையும் வாய்ப்பும் கொண்ட இளைஞர்களாகிய உங்களைக் கண்டு நானும் அத்தகைய நிலைகளை அடைந்துள்ள எண்ணத்தில் மகிழ்கிறேன். இந்த மகிழ்ச்சியைப் பெற நல்ல வாய்ப்பளித்த அனைவர்க்கும் என் நன்றி.

நான் வருகையில் உங்கள் தேசிய இராணுவப் படை அணிவகுப்பைக் கண்டு உளம் மகிழ்ந்தேன். ஆண்கள் மட்டுமா அணிவகுத்து நின்றனர்? பெண்களுடைய உதவிப் படையும் அணிவகுத்து, ஆண்மை பெற்று - நின்றதைக் கண்டேன். அப்போது பாரதியார் கனவு கண்ட புதிய சமுதாயம் என் நினைவிற்கு வந்தது. ஏறுபோல் நடையினராய் வாழவேண்டும் என்று பாரதி கண்ட கனவு செயலானதைக் கண்டு உளம் பூரித்தேன். எதிர் காலத்தில் அமையப் போகும் சமுதாயத்தில் எனக்குப் பெரியதொரு நம்பிக்கையும் ஏற்பட்டது.நம்பிக்கையால் விளைவது என்ன? இன்பம் அல்லவா? நம்பிக்கை கொண்டு இன்பம் அடைந்தேன்.

சரிநிகர் சமானம்

அணிவகுப்பிலே, ஆண்களும் பெண்களும் கச்சிதமாக உடுத்தி, மிடுக்காக நடந்து, ஒழுங்காகச் சென்று, அமைதியாகச் செயலாற்றினீர்கள். இந்தக் கச்சிதமும் மிடுக்கும் ஒழுங்கும் அமைதியும் என்றும் உங்களிடம் இருக்கவேண்டும். ' மிடுக்கான நடை ஏறு போன்ற நடை பெண்களுக்கு ஏன், ஆண்களுக்குத்தானே” என்று இங்கே சிலர் எண்ணலாம். அது கடந்த கால எண்ணம். இப்போது ஆண்கள் போன்று ஏறு போன்ற நடையினைப் பெண்களும் பெற வேண்டும். இதனை நான்மட்டும் சொல்லவில்லை. எதிர்காலத்தை நன்குணர்ந்த பாரதியார்

 “நிமிர்ந்த நன்னடை,
      நேர்கொண்ட பார்வையும்

நிலத்தில் யார்க்கும்
      அஞ்சாத நெறிகளும்

திமிர்ந்த ஞானச்
      செருக்கும் இருப்பதால்

செம்மை மாதர்
      திறம்புவ தில்லையாம்”

என்று அறிவுறுத்திச் சென்றுள்ளார். பெண்கள் பல அறிவு பெற்று, நேரிய நெறி பெற்று, நிமிர்ந்த நன்னடையும், நேர் கொண்ட பார்வையும் பெற்று ஒழுகுவதால் எத்தகைய தவறும் வராது என்பது உண்மை. இதனை உணர்ந்து நம் நாட்டுப் பெண் மணிகள் நல்வாழ்வு, உரிமை பெற்ற வாழ்வு, ஒத்த வாழ்வு வாழ வேண்டும்.

போட்டி வேண்டும்

உங்கள் விளையாட்டுப் போட்டிகளைக் கண்டேன் பலரும் பரிசு பெற்றிருக்கிறீர்கள். வெற்றி பெற்றதற்குரியதான பல கோப்பைகளைக் காணுகின்றேன். மற்றத் தலைமையாசிரியர்களும் இவைகளைப் பார்க்க வேண்டும். தங்கள் பள்ளிகளும் இத்தகைய சிறந்த நிலையினை அடையப் பாடுபடவேண்டும். பாடுபட்டால் போட்டி போட்டுக்கொண்டு முன்னேறுவார்கள். சத்தியமங்கலம் மேலும் போட்டி போட்டு முன்னேற்றம் அடையும். சில நேரத்தில் போட்டி போடுவது மூலம் பொறாமை, காய்ச்சல், அவதூறு ஏற்படுவதுண்டு. அது விரும்பத்தகாத போட்டி, தாழ்வான போட்டி. ஆனால் உயர்வுக்குப் போடும் போட்டியில் காய்ச்சலுக்கு இடம் இல்லை. திறமையின் வளர்ச்சிக்குத்தான் இடம் உண்டு. வளர்ச்சிக்குத் தூண்டும் நல்ல போட்டி வேண்டும்.

அன்றைக்கு, ஒரு விளையாட்டு விழாவிற்குப் போயிருந்தேன். அங்கே ஒரு மாணவன் உயரத் தாண்டலில் 9’ 4” தாண்டினான் . `அவனோடு யாரால் போட்டிபோட முடியும்’ எனச் சளைத்துவிடவில்லை; பலர் போட்டி போட்டார்கள். அவனும் விடா முயற்சியோடு போட்டி போட்டான். இறுதியில் 9’ 10" தாண்டி வெற்றிபெற்றான். அவனோடு போட்டிபோட யாரும் முன்வந்திராவிடில், `நானே ராசா’ என்று இறுமாந்து அமர்ந்திருப்பான். 9’ 4" தாண்டிய அவனே அடுத்த ஆண்டு 9’ 2" தாண்டும் நிலைக்கு வந்திருந்தாலும் வந்திருப்பான். இப்படியே தேய்ந்து கொண்டு போனாலும் போவான். போட்டி இருப்பது நல்லது. நல்ல முறையிலே ஒழுங்கான முறையிலே போட்டியிருந்தால் மனிதனுடைய ஆற்றல்கள் வளர்வதற்குத் தூண்டுகோலாக இருக்கும். அந்த வகையில் நல்ல முறையிலே போட்டியை வளர்த்திருக்கிறீர்கள்.

வெற்றியும் வெறியும்

'வெற்றி பெற்றுவிட்டோம்’ என்று மட்டும் ஏமாந்து இருந்துவிடாதீர்கள். வெற்றி என்ற சொல்லிலே இடையிலிருக்கும் வல்லின மெய் போய்விட் டால் என்னவாகும்? வெறியாக மாறிவிடும். ஏமாந்து தன்னடக்கம்விட்டு, நிதானத்தை இழந்துவிட்டால் மனிதன் வெறிகொண்டவனாகி விடுகிறான். அந்த வெறி அவனுக்குத் தோல்வியை உண்டாக்கும்.

நெற்பயிரும் நல்வாழ்வும்

நீங்கள் பள்ளிக்கூடத்திலே பெறுகிற வெற்றி வாழ்க்கை முழுவதற்கும் வெற்றியாகவே இருக்கவேண்டும். உங்கட்கு வெற்றி ஏற்பட ஏற்பட அமைதியும் அடக்கமும் வளரவேண்டும். நாற்று நடும் போது "நெற்பயிர் நிமிர்ந்து நிற்கவேண்டும். குத்திட்டு வளரவேண்டும்" என்று எதிர்பார்க்கிறோம். குத்திட்டு நிமிர்ந்து வரவில்லையானால் "நல்ல வளர்ச்சி யில்லையே” என்று கவல்கின்றன் உழவன். அதே பயிர் வளர்ந்து பால்கட்டி, நல்ல கதிர்விட்ட பிறகு பழுத்துப் படுக்க வேண்டும். நன்றாக விளைந்த கதிர்களையுடைய பயிர், நிறைய மணி பிடித்த கதிர்களை. யுடைய நெற்பயிர் அப்படித்தான் படுக்கும். அதன் படியேதான் நம் வாழ்வும். அறிவு வளர வளர வெற்றி வர வர, அடக்கமும் அமைதியும், தாழ்வு, பணிவும் ஏற்பட வேண்டும். இந்தக் கருத்தினைச் சிந்தாமணிச் செய்யுள் தெளிவாக விளக்குகின்றது

சொல்லருஞ் சூற்பசும்
பாம்பின் தோற்றம் போல்
மெல்லவே கருவிருந்து
ஈன்று மேலலார்
செல்வமே போல்தலை
நிறுவித் தேர்ந்தநூற்
கல்விசேர் மாந்தரின்
இறைஞ்சிக் காய்த்தவே

ஆம், தேர்ந்த கல்வி பெற்றவர்க்கு அடக்கம் இயற்கையானதுதான். அடக்கம் ஏற்படவில்லை யென்றால் அறிவு பெற்றும் பயனில்லை; வெற்றி பெற்றும் பயனில்லை. செருக்குக்கு இடம் கொடுத்தால் இறுதியில் அறியாமையும் தோல்வியுமே ஏற்படும் என்பதனை உங்கட்கு நினைவூட்டுகிறேன். வள்ளுவரும் இதனையே,

‘அடக்கம் அமரருள்
      உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து
      விடும்’

என்று தம் குறட்பாவில் கூறி வலியுறுத்துகிறார். ஒழுக்கமும் கட்டுப்பாடும் தமிழின் தனிச் சொத்து. அதனைப் போற்றிப் பாதுகாத்துப் பெருமை தாருங்கள். அப்போதுதான் கல்வியின் பயன் பெருகும்.

அரசியலாரின் பங்கும் நம் கடமையும்

நமது அரசியலார் நம்முடைய கல்வி வளர்ச்சிக்குப் போதிய ஆத ரவு கொடுத்துவருகிறார்கள். தொடக்கப்பள்ளி இல்லாத ஊரே இனி இருக்காது. 500-க்கு மேற்பட்ட மக்கட் தொகையுள்ள ஊர் தோறும் பள்ளிகள் நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாட்டுப்புறங்களில் 140 உயர் நிலைப் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட் டுள்ளன. இவைகளைப் பயன்படுத்தி எல்லோரும் நல்ல கல்வி பெற்று, ஆழ்ந்த கல்வி பெற்று, முழுக் கல்வி பெற்று, இந்நாட்டு மன்னர்களாக வளர வேண்டும். அப்போது தான் அரசியலாரின் முயற்சி பயனளித்த தாகும்.

உடலுக்குச் சோறு, உயிருக்குக் கல்வி

பள்ளிக்கூடங்கள் பலதுறைக் கல்விக்கு இட மளிக்க வேண்டும். வரப்போகும் ஒன்றை முன் கூட்டியே அறியும் அறிவு பெற்றவர்கள் கவிஞர்கள். அவர்களுள் ஒருவரே பாரதியார். அவர்,

'வயிற்றுக்குச் சோறிட வேண்டும்-இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்:
பயிற்றிப் பல கல்வி தங்து-இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்'

என்று கூறிச் சென்றுள்ளார். `பள்ளிகளில் பல துறைக் கல்விமட்டும் தந்தால் போதாது. கல்வி கற்கும் குழந்தைகளின் வயிற்றுக் கவலை போகச் சோறிட வேண்டும் என்கிறார். ஏன்? சோற்றுக் கவலை வந்துவிட்டால் எதனையும் செய்யமுடியாது. ஆகவே, 'சோறிட்டுப் பல கல்வி தரவேண்டும்' என்கிறார்.

பல கல்வி

பிள்ளைகள் திறமையும் அறிவும் பல திறப்பட் டவை. அவர்கள் ஆற்றலுக்கும் திறமைக்கும் ஏற்ற கல்வி தரவேண்டும். ஏட்டுப் படிப்புமட்டும் படிப் பாகாது. தொழிற்படிப்பும் படிப்பாகும். ஏட்டுப்படிப்புக்கு எவ்வளவு அறிவு வேண்டுமோ, அவ்வளவு அறிவு தொழிற் படிப்புக்கும் வேண்டும். அந்த அறிவையும் திறனையும் ஐம்பதில் பெற முடியாது. இளமையிலேதான் பெற முடியும். ஐந்திலேயே குழந்தைகளின் அறிவுக்கும், ஊக்கத்திற்கும், ஆர்வத்திற்கும் ஏற்ற கல்வியைத் தரவேண்டும். அப்படிச் செய்யத் தவறும் கல்வியமைப்பு சிறந்த அமைப்பு ஆகாது. 'உழுகிற காலத்தே ஊர் சுற்றிவிட்டு, அறுவடை காலத்தில் அரிவாள்கொண்டு வந்தால் என்ன கிடைக்கும்?' என்ற பழமொழியை இங்கே எண்ணிப் பார்த்தால் 'பருவத்தே பயிர் செய்யும்’ பண்பு ஏற்பட்டுவிடும். எதிர்காலத்தில் நல்ல செல்வம் உடையதாக இந்திய நாட்டை அமைக்க ஏட்டுப்படிப்பும் வேண்டும்; தொழிற் படிப்பும் வேண்டும். இவைகளைத்தான் பாரதியார் பல கல்வி என்று பாடுகிறா.ர்.

உள்ளத்தில் உறுதி

ஆகவே இந்தக் குழந்தைகளெல்லாம் எதிர்கால அரசர்க ளாகவும், அரசிகளாகவும் திகழ்வதற்குப் பல துறைக் கல்வி மிகவும் வேண்டப்படுவது ஒன்றாகும். அப்போதுதான் எல்லோரும் தங்கள் `காலிலே நின்று’ செயலாற்ற முடியும். அவர்களை அம்முறையிலே பயிற்றுவிக்கப் பெற்றோரும், ஆசிரியரும், மற்றோரும் பாடுபட வேண்டும். அதற்கு வேண்டுவது உள்ளத்தே உறுதிதான்.

'எண்ணிய எண்ணி யாங்

கெய்துப எண்ணியார்
திண்ணிய ராகப்

பெறின்'

என்ற வள்ளுவர் வாக்கை நோக்குங்கள். நல்ல முறையில் நல்லனவற்றை எண்ணுங்கள்; எண்ணம் செயலாக வே ண் டு ம் என்ற உறுதிப்பாட்டினைக் கொள்ளுங்கள்; வெற்றி கிடைக்கும். எண்ணிச் செயலாற்றும் உறுதி பெற்று, இடன் அறிந்து, உரிய அறிவையும் காலத்தில் முயற்சியையும் செலுத்தினால் உலகத்தையே பெறவேண்டும் என்ற எண்ணம் கொண்டாலும் வெற்றி பெறலாம். இதனைத்தான் நம் செந்நாப்போதார்,

‘ஞாலம் கருதினும்

கைகூடும், காலம்
கருதி இடத்தால்

செயின்'

என்று கூறினர்.

கல்விப் பயன்

ஏட்டுப்படிப்பும் தொழிற் படிப்பும் படிப்பதால் உயர்ந்த ஒரு பயன் ஏற்பட வேண்டும். என்ன பயன்? நல்ல பண்பாடு வந்தடைய வேண்டும். இல்லையென்றால் கல்வியால் பயனில்லை. பண்பற்ற கல்வி கல்வியாகாது. பண்பில்லாத அறிவு அறிவும் ஆகாது. படித்தவனிடம் வேற்றுமை தோன்றாது. ‘இவன் கரியன்; இவன் வெள்ளையன்' என்ற வேறுபாடு இருக்காது. ‘இவன் தாழ்ந்தவன், இவன் உயர்ந்தவன்' என்ற எண்ணமும் வராது. பிறர் வாழத்தான் வாழவேண்டும். தான் பெற்ற பொருளால் பிறரை வாழச் செய்ய வேண்டும். பிறர் துன்பம் கண்டவிடத்து அவர்கள் துன்பம் போக்கப் பாடுபட வேண்டும்.

'யாதானும் நாடா மால்

ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத
வாறு'

'பகுத்துண்டு பல்லுயிர்
ஒம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம்

தலை'

'அறிவினால் ஆகுவ
துண்டோ பிறி தினோய்
தன்னோய்போல் போற்றாக்
கடை'

என்ற பொய்யாமொழிகள் மேற்கூறிய கருத்துக்களை வலியுறுத்தும்.

பசியே வெறுப்புக்கும் பொறாமைக்கும் வித்து

கற்றவர்க ளாகிய நீங்கள் ஒன்று செய்ய வேண்டும். எண்ணிப்பார்க்க வேண்டும். எதனை? பள்ளிக் கூடத்திற்கு வந்து செல்லும் குழந்தைகளைப் பற்றி எண்ணிப்பார்க்க வேண்டும். பள்ளிக்கு வரும் குழந்தைகள் பல பட்டினியோடு ப.ள்ளிக்கு வந்து போகின்றன. பசியோடு படித்தால் பாடம் ஏறுமா? 'பசி வந்திடப் பத்தும் பறந்து போம்’ என்பதனை அறியாதவர் யார்! கல்வியின் தரம் குறைந்துவிட்டது என்று அங்கலாய்ப்பவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். பட்டினியோடு படிக்கும் குழந்தைகள் நல்ல தரம் உடைய கல்வி பெற முடியுமா? முடியவே முடியாது. பசியைப் போக்கப் பாடுபட வேண்டும்.

அதுமட்டுமா? தரம் குறைந்தாலும் குறையட்டும். கல்வியற்றோர் எண்ணிக்கை வளர்ந்தாலும் வளரட்டும். பட்டினியால் அவற்றைவிடக் கொடிய ஒரு விளைவு உண்டு. 5, 10, 15 வயதிலேயே குழந்தைகள் உள்ளத்திலே வெறுப்புணர்ச்சி தோன்றிவிடுகிறது; பொறாமை வளர்கிறது. பொறாமையையும், வெறுப்பு உணர்ச்சியையும் வளரவிட்டால் எதிர் காலம் எப்படி அமையும்? 40 பிள்ளைகள் படிக்கும் இடத்தில் 20 பிள்ளைகள் பட்டினி என்றால், அவர்கள் என்ன எண்ணுவார்கள்? அவர்களிடையே வெறுப்பும் பகையும் ஏற்படுவது இயல்புதானே? அன்பும், நட்பும், உறவும் ஏற்பட்டு மகிழ்வாக வாழவேண்டிய இளம் பருவத்திலேயே அவைகள் வாழ வழியில்லா\மல் போய்விடுகின்றது. ஆகையால் அவ்வகை வேற்று மைகளைத் தொலைக்க-பசிக்கொடுமையைப் போக்க அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும். அம்முயற்சி பள்ளிக்கூடத்திலேயிருந்து தொடங்கட்டும். நல்ல சமுதாயம் உருவாகப் பாடுபடுங்கள். பள்ளிகளிலே பட்டினியோடு படிக்கும் குழந்தைகளே இல்லை என்ற நிலையை ஏற்படுத்துங்கள்.

நம் நாட்டு மக்கள் நல்ல மக்கள். வருபவர்க் கெல்லாம் வாரி வழங்கும் பண்புடையவர்கள். செல்வர்கள் மட்டு மல்லாமல் நம் நாட்டு ஏழைகளும் தங்களிடத்தே உள்ளதனைப் பகிர்ந்துகொடுத்து மகிழும் பண்புடையவர்கள். உண்ணும் நேரத்திலே ஏழை யொருவனின் குடிசையிலே நுழைந்துவிட்டால் தன் னிடம் உள்ள கஞ்சியினைப் பகிர்ந்து உண்ணும் பான்மையினை இன்றும் நாம் பார்க்கிறோம். இந்தப் பண்பு படித்தவர்களிடமும் பணக்காரர்களிடமும் நாட்டுமக்கள் அனைவரிடமும் பரவ வேண்டும்; வளர வேண்டும். பள்ளிகளிலே சோறு போடுவது என்றால் யாருக்கும் பாரம் இல்லை. பகுத்துண்ணும் பண்பே வேண்டும்.

செல்வர்கள் நிறையத் தரட்டும். ஏழை எளியவர்கள் தங்களால் இயன்றவரை கொடுக்கட்டும். பல துளிகள் சேர்ந்துதான் பெருவெள்ள மாகிறது. இப்படிச் சேர்த்துச் சேர்த்து, வளம் உடைய எதிர்கால மன்னர்களை உருவாக்கும் பணிக்கு உதவுங்கள்; பசியறியாப் பாலகர்கள் பள்ளிகள்தோறும் நிறைஙந்திருக்கும் நிலையினை ஏற்படுத்துங்கள். அப்போது தான் கல்வியின் தரம் உயரும். நல்ல அறிஞர்கள் தோன்றுவார்கள். போட்டி ஒழியும். பகைமை அழியும்.

"என்னரும் தமிழ்நாட் டின் கண்
எல்லோரும் கல்வி கற்றுப்
பன்னரும் கலைஞா னத்தால்,
பராக்கிர மத்தால், அன்பால்
உன்னத இமமலை போல் ஓங்கிடும்
கீர்த்தி யெய்தி
இன்புற்றார் என்று மற்றோர்
இயம்பக்கேட் டிடல்எஙந் நாளோ"

என்று தமிழர் நலம் பேணிக் கவிபாடும் கவிஞர் கேட்கிறார். அப்பாடலுக்குப் பெருமிதத்தோடு விடை தருவோமாக. பகுத்துண்டு பல்லுயிர் ஒம்பும் உறுதி பெற்று உழையுங்கள் என உங்களைக் கேட்டுக் கொண்டு எ ன து உரையினே முடித்துக்கொள்கிறேன்.


(14-2-57ல் சத்தியமங்கலம் நாட்டாண்மைக் கழக உயர்நிலைப் பள்ளியில் பேசியது.)