பெரியார் — ஒரு சகாப்தம்/தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பண்பு
தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பண்பு
"நான் பெரியாரவர்களர்களுடன் வடநாடு சுற்றுப்பயணம் சென்றிருந்தேன், அங்குள்ளவர்கள் நம்மக்களைவிட மூடநம்பிக்கையுள்ளவர்கள். பெரியாரவர்களின் தோற்றத்கை கண்டு, அவர் தென்னாட்டிலிருந்து வந்திருக்கும் பெரிய சாமியார் என்றும், நான் அவரது சிஷ்யன் என்றும் கருதிவிட்டார்கள். அப்படி நினைத்துத்தான், ஆரியதர்மத்தை வளர்ப்பதற்காக
வென்றே செயல்பட்டவரான சிரத்தானந்தா கல்லூரியின் தலைவர்,பெரியார் அவர்களைப் பார்த்துத் தங்கள் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்குத் தாங்கள் வந்து அறிவுரை கூறவேண்டுமென்று கேட்டார். அவரும் ஒத்துக்கொண்டார். தான் எதைச் சொல்லுகிறாரே அதை மற்றவர்கள் உடனடியாகக் கடைப்பிடிக்க வேண்டும்; அதன்படி நடக்கவேண்டும்
என்று கருதுபவர் அல்ல பெரியார். பிறர் கடைப்பிடிக்கும் மார்க்கத்தில் சென்று, அவர்கள் மனம் புண்ப்டாமல் அதனை எடுத்துக் கூறுவதுதான் அவர் பண்பு.
வடநாட்டு மாணவர்களைக் கவர்ந்த
பெரியார்
சிரத்தானந்தா கல்லூரிக்குச் செல்லவேண்டுமென்றதுமே எனக்குச் சற்றுப் பயமாகத்தான் இருந்தது. அங்குப்போய் நமது கருத்தைச் சொன்னால், அவர்கள். எப்படி நடந்துகொள்வார்களோ என்று பயந்தேன்; என்றாலும் துணிந்து பெரியாரவர்கள் பின்சென்றேன். கல்லூரிக்குள் நுழையும்போதே அங்கிருந்த மாணவர்கள் தங்கள் வழக்கப்படி என் முகத்திலும், அவர் முகத்திலும் சந்தனத்தை அள்ளிப் பூசினார்கள். எனக்குச் சங்கடமாக இருந்தது. என் நிலையினைக்கண்ட பெரியார் நான் எங்குத் தவறாக நடந்து கொண்டுவிடுவேனோ என்று தொடையைக் கிள்ளி ஜாடை காட்டினார். அதன்பின் நானும் சற்று அமைதியடைந்து பொறுமையாக இருந்தேன். பின் பெரியார் அவர்கள் பேச ஆரம்பித்து, ஒவ்வொரு சங்கதியாக எடுத்து விளக்க ஆரம்பித்ததும் அவர்களுக்கு உற்சாகம் ஏற்பட்டுவிட்டது. இதுபோன்ற கருத்தை அவர்கள் அதுவரை கேட்டதே இல்லை.. அப்போதுதான் அவர்கள் புதுமையாகக் கேட்கின்றனர். இராமாயணத்தைப் பற்றி அவர் விளக்கியதைக் கேட்கக் கேட்க, சற்றுத் தெளிவு ஏற்பட்டிருக்கிறது. கூட்டம் முடிந்ததும் அம்மாணவர்கள் 'ராவணாக்கி ஜே!' என்று கோஷம் போட ஆரம்பித்துவிட்டனர். அதுபோன்று இருக்கின்ற உண்மையினை எடுத்துக்கூறினால், மக்கள் ஒத்துக்கொள்ளாமல் போகமாட்டார்கள். அவர்களை விட நம் மக்கள் தெளிவு பெற்றவர்களாவார்கள்.
பெரியார் பணியை
எல்லோரும் மேற்கொள்ள வேண்டும்
நம் நாட்டில் உத்தியோகத் துறையிலிருந்து ஓய்வுபெற்ற பெரும் புலவர்கள், படித்துப் பட்டம் பெற்றவர்கள், மேதாவிகள் என்பவர்கள் முன்வந்து தங்களுக்கு உண்மையென்று தோன்றியதைத் தாங்கள் பதவியிலிருக்கும்போது சொல்லப்பயந்ததைத் துணிந்து எடுத்துச் சொல்லவேண்டும். பெரியாரவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் பணியினை மேற்கொண்டு தொண்டாற்ற முன்வரவேண்டும். நமது பெரியவர்கள் எவன் எப்படிப் போனால் நமக்கென்ன என்ற எண்ணத்தை விட்டுப் பொதுத்தொண்டு செய்ய முன் வரவேண்டும்.
கல்வி முறையை மாற்றியாக வேண்டும்.
நமது பள்ளிக்கூடங்களில் கங்கை. எங்கே உற்பத்தியாகிறது என்பதை பூகோள வகுப்பில் சொல்லிக்கொடுக்கும்போது, 'அது ஹரித்துவாரிலே உள்ள மலையில் உற்பத்தியாகி வருகிறது' என்று பூகோள ஆசிரியர் சொல்லிக்கொடுக்கிறார். தமிழ் வகுப்பில் சொல்லிக்கொடுக்கும்போது தமிழாசிரியர்கள், 'கங்கை சிவபெருமானின் ஜடாமுடியில் உற்பத்தியாகிறது' என்று சொல்லிக்கொடுக்கின்றனர். பரீட்சையில் மாணவன் தமிழ் வகுப்பில் சொல்லிக் கொடுத்ததைப் பூகோள பரீட்சையிலும், பூகோள வகுப்பில் சொல்லிக் கொடுத்ததைத் தமிழ்ப் பரீட்சையிலும் எழுதினால், அவனுக்கு என்ன கிடைக்கும் ? அவன்மேல் தவறு இல்லை என்றாலும் அவனுக்கு மார்க்குக் கிடைப்பதில்லை. இதுபோன்ற மாறுபாடான கல்வி முறையானது மாற்றியமைக்கப்பட வேண்டும். உண்மையான அறிவை மாணவர்கள் பெற வழி வகுக்கப்படவேண்டும். அத்தகையதான அறிவுப் புரட்சியினைச் செய்ய, நாம் தயாராக இருந்தாலும் மக்கள் அதற்குத் தயாரான நிலையில் இல்லை. அதற்குப் பெரியாரவர்கள் தொண்டும் பிரசாரமும் மிகவும் தேவையாகும்."
[மத்தூர்,'அரசினர் உயர்நிலைப் பள்ளி'
கட்டிடத் திறப்பு விழாவில் 19-12-67
அன்று ஆற்றிய உரையின் ஒரு பகுதி]
சமூக அபிவிருத்திக் கேடு