பெருங்கதை/1 33 மாலைப் புலம்பல்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
  • பாடல் மூலம்

உதயணன் செயல்[தொகு]

அரசவை விடுத்தபி னணிநகர் முன்னித்
தொடர்பூ மாலைக் கடைபல போகி
அந்தக் கேணியு மெந்திரக் கிணறும்
தண்பூங் காவுந் தலைத்தோன் றருவிய
வெண்சுதைக் குன்றொடு வேண்டுவ பிறவும் 5
இளையோர்க் கியற்றிய விளையாட் டிடத்த
சித்திரப் பூமி வித்தக நோக்கி

உதயணன் ஐயமுறல்[தொகு]

ஒட்டாக் கிளைஞரை நட்பினுட் கெழீஇய
ஐயிரு பதின்ம ரரக்கி னியற்றிய
பொய்யி லன்ன பொறியிவன் புணர்க்கும் 10
கையுங் கூடுங் கால மிதுவென
ஐயமுற்று மெய்வகை நோக்கிச்
சிறப்புடை மாணகர்ச் செலவங் காண்கம்
உழைச்சுற் றாளரைப் புகுத்துமின் விரைந்தெனத்

உதயணன் தெளிதல்[தொகு]

தலைக்கூட் டுபாயமொடு தக்கோன் றெரிந்து 15
முட்டு முடுக்கு மிட்டிடை கழியும்
கரப்பறை வீதியுங் கள்ளப் பூமியும்
மரத்தினு மண்ணினு மதியோர் புணர்க்கும்
எந்திர மருங்கி னிழுக்க மின்மை
அந்நிலை மருங்கி னாசற நாடி 20
வஞ்ச மின்மை நெஞ்சிற் றேறிச்

உதயணன் காணுங் காட்சி[தொகு]

சந்தன வேலிச் சண்பகத் திடையதோர்
வேங்கையொடு தொடுத்த விளையாட் டூசற்
றூங்குபு மறலு முழைச்சிறு சிலதியர்
பாடற் பாணியொ டளைஇப் பல்பொறி 25
ஆடியன் மஞ்ஞை யகவ வயலதோர்
வெயில்கண் போழாப் பயில்பூம் பொதும்பிற்
சிதர்தொழிற் றும்பியொடு மதர்வண்டு மருட்ட
மாத ரிருங்குயின் மணிநிறப் பேடை
காதற் சேவலைக் கண்டுகண் களித்துத் 30
தளிப்பூங் கொம்பர் விளிப்பது நோக்கியும்
பானிறச் சேவல் பாளையிற் பொதிந்தெனக்
கோண்மடற் கமுகின் குறிவயிற் காணாது
பவளச் செங்காற் பன்மயி ரெருத்திற்
கவர்குர லன்னங் கலங்கல் கண்டும் 35
தனித்துளங் கவல்வோன் றான்வீழ் மாதர்
மணிக்கேழ் மாமை மனத்தின் றலைஇப்
புள்ளுப்புலம் புறுக்க வுள்ளுபு நினைஇ
மன்றனா றொருசிறை நின்ற பாணியுட்

சூரியன் அத்தமித்தல்[தொகு]

சென்றுசென் றிறைஞ்சிய சினந்தீர் மண்டிலம் 40
சூடுறு பாண்டிலிற் சுருங்கிய கதிர்த்தாய்க்
கோடுய ருச்சிக் குடமலைக் குளிப்ப
விலங்கும் பறவையும் வீழ்துணைப் படரப்

மாலைக்கால வருணனை[தொகு]

புலம்புமுத் துகுத்த புன்மைத் தாகி
நிறைகடன் மண்டில நேமி யுருட்டிய 45
இறைகெழு பெருவிற லெஞ்சிய பின்றைக்
கடங்கண் ணரிந்த கைய ராகி
இடந்தொறும் பல்கிய மன்னர் போல
வரம்பில் பன்மீன் வயின்வயின் விலங்கிப்
பரந்துமீ தரும்பிய பசலை வானத்துத் 50

பிறைமதியின் தோற்றம்[தொகு]

தலைத்தேர்த் தானைக்குத் தலைவனாகி
மலைப்பாற் காலத்து முடிமுறை யெய்திக்
குடைவீற் றிருந்த குழவி போலப்
பொழில்கண் விளக்குந் தொழினுகம் பூண்டு
புயன்மாசு கழீஇப் புனிற்றுநா ளுலவாது 55
வியன்கண் மாநிலந் தாங்கவிசும் பூர்ந்து
பைந்தொடி மகளிர் பரவினர் கைதொழச்
செங்கோட் டிளம்பிறை செக்கர்த் தோன்றித்
தூய்மை காட்டும் வாய்மைமுற் றாது
மதர்வை யோர்கதிர் மாடத்துப் பரத்தரச் 60
சுடர்வெண் ணிலவின் றொழிற்பயன் கொண்ட
மிசைநீண் முற்றத் தசைவளி போழ
விதானித்துப் படுத்த வெண்கா லமளிச்
சேக்கை மகளிர் செஞ்சாந்து புலர்த்தும்
தேக்க ணகிற்புகை திசைதொறுங் கமழக் 65
கன்றுகண் காணா முன்றிற் போகாப்
பூத்தின் யாக்கை மோ…
…குரால் வேண்டக் கொண்ட
சுரைபொழி தீம்பா னுரைதெளித் தாற்றிச்
சுடர்பொன் வள்ளத்து மடல்விரற் றாங்கி 70
மதலை மாடத்து மாண்குழை மகளிர்
புதல்வரை மருட்டும் பொய்ந்நொடி பகரவும்
இல்லெழு முல்லையொடு மல்லிகை மயங்கிப்
பெருமணங் கமழவும் பிடகைப் பெய்த
வதுவைச் சூட்டணி வண்டுவாய் திறப்பவும் 75
பித்திக்கஃ கோதை செப்புவாய் மலரவும்
அறவோர் பள்ளி யந்திச் சங்கமும்
மறவோன் சேனை வேழச் சங்கமும்
புதுக்கோள் யானை பிணிப்போர் கதமும்
மதுக்கோண் மாந்த ரெடுத்த வார்ப்பும் 80
மழைக்கட லொலியின் மயங்கிய மறுகின்
விளக்கொளி பரந்த வெறிகமழ் கூலத்துக்
கலக்கத வடைத்து மலர்க்கடை திறப்பவும்
ஒளிறுவே லிளையர் தேர்நீ றளைஇக்
களிறுகா லுதைத்த புஞ்சப் பூழியொடு 85
மான்றுக ளவிய மதுப்பலி தூவவும்
தெற்றி முதுமரத் துச்சிச் சேக்கும்
து… க… ரக் குரலளைஇச்
சேக்கை நல்லியாழ் செவ்வழி பண்ணிச்
செறிவிரற் பாணியி னறிவரப்பாடவும் 90
அகினா றங்கை சிவப்ப நல்லோர்
துகிலின் வெண்கிழித் துய்க்கடை நிமிடி
உள்ளிழு துறீஇய வொள்ளடர்ப் பாண்டிற்
றிரிதலைக் கொளீஇ யெரிதரு மாலை

உதயணன் வருந்தல்[தொகு]

வெந்துயர்க் கண்ணின் வேலிட் டதுபோல் 95
வந்திறுத் தன்றால் வலியெனக் கில்லெனக்
கையறு குருசிலை வைகிய தெழுவென
இலங்குசுடர் விளக்கொ டெதிர்வந் தேத்திப்
புறங்காப் பிளையர் புரிந்தகம் படுப்ப
எண்ணா லிலக்கணத்து நுண்ணூல் வாங்கித் 100
திணைவிதி யாள ரிணையற வகுத்த
தமனியக் கூடத்துத் தலையள வியன்ற
மயன்விதி யன்ன மணிக்காழ் மல்லத்துச்
சித்திர வம்பலஞ் சேர்ந்துகுடக் கோங்கிய
அத்தம் பேரிய வணிநிலை மாடத்து 105
மடையமைத் தியற்றிய மணிக்கா லமளிப்
படையகத் தோங்கிய பல்பூஞ் சேக்கைப்
பைத னெஞ்சத்து மையல் கொள்ளா
எஃகொழி களிற்றின் வெய்துயிர்த் துயங்கி
உண்டெனக் கேட்டோர் கண்டினித் தெளிகெனத் 110
திருவின் செய்யோ ளுருவமெய்த் தோன்றத்
தீட்டிரும் பலகையிற் றிருத்தித் தேவர்
காட்டி வைத்ததோர் கட்டளை போலக்
கலன்பிற வணிந்து காண்போர் தண்டா
நலந்துறை பொகிய நனிநா ணொடுக்கத்து 115
மணிமுகிழ்த்தன்ன மாதர் மென்முலைத்
தணிமுத் தொருகாழ் தாழ்ந்த வாகத்
திலமர்ச் செவ்வா யெயிறு விளக் குறுக்க
அலமரு திருமுகத் தளகத் தப்பிய
செம்பொற் சுண்ணஞ் சிதர்ந்த திருநுதல் 120
பணபிற் காட்டிப் பருகுவனள் போலச்
சிதர்மலர்த் தாமரைச் செந்தோடு கடுப்ப
மதரரி நெடுங்கண் வேற்கடை கான்ற
புள்ளி வெம்பனி கரந்த கள்விதன்
காரிகை யுண்டவென் பேரிசை யாண்மை 125
செறுநர் முன்னர்ச் சிறுமை யின்றிப்
பெறுவென் கொல்லென மறுவந்து மயங்கி
எவ்வமிக் கவனும் புலம்ப வவ்வழிக்

வாசவதத்தை வருந்தல்[தொகு]

குழவி ஞாயிறு குன்றிவர் வதுபோல்
மழகளிற் றெருத்தின் மைந்துகொண் டிருந்த 130
மன்ன குமரன் றன்னெதிர் நோக்கி
ஒழிகுபு சோர்ந்தாங் குக்கதென் னெஞ்சென
மழுகிய திருமுக மம்மரோ டிறைஞ்சித்
தருமணற் பேரிற் றமரொடு புக்குத்
திருமணி மாடத் தொருசிறை நீங்கிப் 135
பெருமதர் மழைக்கண் வருபனி யரக்கிக்
கிளையினும் பிரித்தவன் கேடுதலை யெய்தித்
தளையினும் பட்டவன் றனிய னென்னான்
வேழம் விலக்கிய யாழொடுஞ் செல்கெனச்
சொன்னோ னாணை முன்னர்த் தோன்றி 140
உரக்களி றடக்குவ தோர்த்து நின்ற
மரத்தி னியன்றகொன் மன்னவன் கண்ணெனப்
பைந்தார்த் தந்தையை நொந்த நோயன்
உள்ளகத் தெழுதரு மருளின ளாகித்
தெளிதல் செல்லா டிண்ணிறை யழிந்து 145
பொறியறு பாவையி னறிவறக் கலங்கிக்
காம னென்னு நாமத்தை மறைத்து
வத்தவ னென்னு நற்பெயர் கொளீஇப்
பிறைக்கோட் டியானை பிணிப்பது மன்றி
நிறைத்தாழ் பறித்தென் னெஞ்சகம் புகுந்து 150
களவன் கொண்ட வுள்ள மின்னும்
பெறுவன் கொல்லென மறுவந்து மயங்கித்
தீயுறு வெண்ணெயி னுருகு நெஞ்சமொடு
மறைந்தவ ணின்ற மாதரை யிறைஞ்சிய

நீங்கிய தோழிமார் வந்து வாசவதத்தையைக் காண்டல்[தொகு]

வல்லிருள் புதைப்பச் செல்சுடர் சுருக்கி 155
வெய்யோ னீங்கிய வெறுமைத் தாகிக்
கையற வந்த பைதன் மாலைத்
தீர்ந்தவ ணொழிந்த திருநல் லாயம்
தேர்ந்தனர் குழீஇப் பேர்ந்தனர் வருவோர்
இணையி லொருசிறைக் கணையுளங் கிழிப்பத் 160
தனித்தொழி பிணையி னினைப்பன ணின்ற
எல்லொளிப் பாவையைக் கல்லெனச் சுற்றி
அளகமும் பூணு நீவிச் சிறிதுநின்
திலக வாணுதற் றிருவடி வொக்கும்
பிறையது காணா யிறைவளை முன்கை 165
திருமுகை மெல்விரல் கூப்பி நுந்தை
பெரும்பெயர் வாழ்த்தாய் பிணையென் போரும்
செம்பொன் வள்ளத்துத் தீம்பா லூட்டும்
எம்மனை வாரா ளென்செய் தனளெனப்
பைங்கிளி காணாது பயிர்ந்துநிற் கூஉம் 170
அஞ்சொற் பேதா யருளென் போரும்
மதியங் கெடுத்து மாவிசும் புழிதரும்
தெறுதரு நாகநின் றிருமுகங் காணிற்
செறிதலு முண்டினி நெழுகென் போரும்
பிசியு நொடியும் பிறவும் பயிற்றி 175
நகைவல் லாய நண்ணினர் மருட்டி
முள்ளெயி றிலங்கு முறுவ லடக்கிச்
சொல்லெதிர் கொள்ளாண் மெல்லிய லிறைஞ்சிப்
பந்தெறி பூமியுட் பாணி பெயர்ப்புழி
அஞ்செங் கிணகிணி யடியலைத் தனகொல் 180
திருக்கிளர் வேங்கையும் பொன்னும் பிதிர்ந்து
மருப்பியல் செப்புங் குரும்பையு மிகலி
உருத்தெழு மென்முலை முத்தலைத் தனகொல்
பிணைய லலைப்ப நுதநொந் ததுகொல்
இனையவை யிவற்றுள் யாதுகொ லிந்நோய் 185
பெருங்கசி வுடையளிப் பெருந்தகை மகளெனத்
தவ்வையுந் தாயுந் தழீஇயினர் கெழீஇச்
செவ்வி யிலளெனச் சேர்ந்தகம் படுப்பச்
செம்பொன் விளக்கொடு சேடியர் முந்துறத்
திண்ணிலைப் படுகா றிருந்தடிக் கேற்ற 190
மடிக்கல மொலிப்ப மாட மேறி
அணிக்காற் பவழத் தியவன ரியற்றிய
மணிக்கால் விதானத்து மாலை தொடர்ந்த
தமனியத் தியன்ற தாமரைப் பள்ளிக்
கலனணி யாயங் கைதொழ வேறிப் 195
புலம்புகொண் மஞ்ஞையிற் புல்லெனச் சாம்பிப்
புனல்கொல் கரையி னினைவனள் விம்மிப்
பாவையும் படரொடு பருவரல் கொள்ள
இருவர் நெஞ்சமு மிடைவிட லின்றித்
திரிதர லோயாது திகிரியிற் சுழல 200
ஊழ்வினை வலிப்பி னல்லதி யாவதும்
சூழ்வினை யறுத்த சொல்லருங் கடுநோய்க்
காமக் கனலெரி கொளீஇ யாமம்
தீர்வது போலா தாகித் திசைதிரிந்
தீர்வது போல விருளொடு நிற்பச் 205
சேர்ந்த பள்ளி சேர்புணை யாகி
நீந்தி யன்ன நினைப்பின ராகி
முழங்குகடற் பட்டோ ருழந்துபின் கண்ட
கரையெனக் காலை தோன்றலின் முகையின
பூக்கண் மலரப் புலம்பிய பொய்கைப் 210
பாற்கே ழன்னமொடு பல்புள் ளொலிப்பப்
பரந்துகண் புதைஇய பாயிரு ணீங்கிப்
புலர்ந்தது மாதோ பொழிறலைப் பெயர்ந்தென்.

33 மாலைப்புலம்பல் முற்றிற்று.