பெருங்கதை/1 42 நங்கை நீராடியது

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
  • பாடல் மூலம்

1 42 நங்கை நீராடியது

நீராட்டு அரவம்[தொகு]

நீராட் டரவ நெடுநகர் வரைப்பகம்
ஆராட் டரவமொ டமர்ந்துவிழை வகற்றி
பெருநிலை நிதியம் பேணாது வழங்கி

பிரச்சோதனன் பெருமை[தொகு]

இருநில மடந்தைக் கிறைவ னாகிப்
பெருஞ்சின மன்ன ர்ருஞ்சமம் வாட்டித் 5
தம்மொழிக் கொளீஇ வெம்முரண் வென்றியொடு
வழுவில கொள்கை வானவ ரேத்தும்
கழிபெருங் கடவுளை வழிபடி னல்லது
வணக்க மில்லா வணித்தகு சென்னித்
திருச்சே ரகலத்துப் பிரச்சோ தனன்மகள் 10

வாசவதத்தை நீராட வருதல்[தொகு]

அரிமா னன்னதன் பெருமா னகலத்துத்
திருவுநிறை கொடுக்கு முருவுகொள் காரிகை
வால்வளைப் பணைத்தோள் வாசவ தத்தையைக்
கோல்வளை மகளிர் கொட்டையைச் சூழ்ந்த
அல்லியு மிதழும் போல நண்ணிப் 15
பல்வகை மரபிற் பசும்பொன் குயின்ற
ஊர்தியும் பிடிகையுஞ் சீர்கெழு சிவிகையும்
வையமுந் தேரும் வகைவெண் மாடமும்
பொறுப்பவு மூர்பவுஞ் செறித்திடம் பெறாஅர்
நேமி வலவ னாணை யஞ்சிப் 20
பூமி சுவர்க்கம் புறப்பட் டாங்குத்
தீட்டமை கூர்வாள் கூட்டொடு பொலிந்த
வேற்றிற லாளரு மிலைச்சருஞ் சிலதரும்
கோற்றகை மாக்களு நூற்றுவில் லகலகம்
குறுகச் செல்லாச் செறிவுடைக் காப்பிற் 25
பெருங்கடி மூதூர் மருங்கணி பெற்ற
அருங்கடி வாயிலொடு துறைதுறை தோறும்
அம்பணை மூங்கிற் பைம்போழ் திணவையும்
வட்டமுஞ் சதுரமு முக்கோண் வடிவமும்
கட்டளை யானையு மத்தக வுவாவும் 30
வையப் புறத்தொடு கைபுனைந் தியற்றிப்
பூத்தூர் நிலையொ டியாப்புற வமைத்துக்
காமர் பலகை கதழவைத் தியற்றி
வண்ணங் கொளீஇய துண்ணூற் பூம்படம்
எழுதுவினைக் கம்மமொடு முழுதுமுத லளைஇ 35
மென்கிடைப் போழ்வைச் சந்திய வாகி
அரிச்சா லேகமு நாசியு முகடும்
விருப்புநிலைத் தானமும் பிறவு மெல்லாம்
நேர்ந்துவனப் பெய்திய நீரணி மாடம்
சேர்ந்த வீதியுட் சிறப்பொடு பொலிந்த 40
எவ்வெவபண்டமு மவ்வயிற் போத்தந்
தொலியுஞ் சேனை யிணைதனக் கொவ்வா
மலிநீர் மாடத்துப் பொலிவுகொண் மறுகின்
வெயிலழல் கவியாது வியலக வரைப்பின்
உயிரழல் கவிக்கு முயர்ச்சித் தாகிப் 45
பூந்தா ரணிந்த வேந்தல் வெண்குடை
வேந்தன் மகளே விரையா தென்மரும்
பண்டை மகளிர் படிமையிற் பிழையாது
தண்டந் தூக்கித் தலைப்புனல் விழவினைக்
கொண்டுவந் தாடுங் கொழுமலர்த் தடங்கட் 50
பொங்குமலர்க் கோதாய் போற்றென் போரும்
நின்னை யுவக்குநின் பெருமா னேந்திய
வென்வேல் கடுக்கும் வெம்மை நோக்கத்துப்
பொன்னே போற்றி பொலிகென் போரும்
பொருவேட் பேணிப் பொலியுஞ் சேனையுள் 55
பெருவெண் மறைந்து பெரும்புன லாடும்
திருவே மெல்லச் செல்கென் போரும்
பொங்குதிரை ஞாலத்து மயக்க நீக்கும்
திங்க ளன்னநின் றிருமுகஞ் சுடரத்
துன்பப் பேரிரு டுமிக்கத் தோன்றிய 60
நங்காய் மெல்ல நடவென் போரும்
வல்லவ னெழுதிய பல்பூம் பத்திக்
கட்டெழில் சேர்ந்த வட்டணைப் பலகைப்
பளிக்குமணிச் சிவிகையுள் விறக்குறுத் ததுபோல்
தோன்று மாதரைத் தோன்ற வேத்திப் 65
பைங்கேழ்ச் சாந்துங் குங்குமக் குவையும்
மலர்ப்பூம் பந்துந் தலைத்தளிர்ப் போதும்
மல்லிகைச் சூட்டு நெல்வளர் கதிரும்
இனிக்குறை யில்லை யாமு மாடுகம்
எனத்துணிந் திளையோ ரிருநூற் பெய்த 70
அனிச்சக் கோதையு மாய்பொற் சுண்ணமும்
அந்தர மருங்கின் வண்டுகை விடாஅச்
சுந்தரப் பொடியுஞ் சுட்டிச் சுண்ணமும்
வித்தகர் தொடுத்த பித்திகைப் பிணையலும்
மத்தநல் யானை மதமு நானமும் 75
வாசப் பொடியொடு காயத்துக் கழும
அந்தரத் தியங்குநர் மந்திர மறப்ப
நறுந்தண் ணாற்ற முடையவை நாடி
எறிந்துந் தூவியு மெற்றியுந் தெளித்தும்
பல்லோர் பல்சிறப் பயர்வன ரேத்தி 80

வாசவதத்தையை மணையிற் சேர்த்தல்[தொகு]

வெல்போர் வேந்தன் மடமகள் விரும்பி
நில்லாத் தண்புன னெடுங்கோட் டொருசார்த்
துறையமைத் தியற்றிய குறைவில் கூடத்
தம்புகை மருங்கிற் செஞ்சுடர் மழுங்கச்
சீயமு மேறும் பாய்பரிப் புரவியும் 85
யானையும் புலியு மன்னமு மகன்றிலும்
ஏனைய பிறவு மேஎ ருடையன
புனைவுகொண் டேற்றி வினைவல ரியற்றிய
கனல்சேர் புகையக லேந்திய கையின்
மூதறி பெண்டிர் காதலொடு பரவி 90
நீர்கால் கழீஇய வார்மண லெக்கர்
முத்து மணியும் பொற்குறு சுண்ணமும்
வெள்ளியும் பவழமு முள்விழுந் திமைப்ப
வண்ண வரிசியொடு மலரிடை விரைஇ
நுண்ணிது வரித்த வண்ண னகர்வயின் 95
தமனியத் தடத்துப் பவழப் பாய்கால்
திகழ்மணி வெள்ளிப் புகழ் மணை சேர்த்திக்
கதிர்நகை முறுவற் காரிகை மாதரை
எதிர்கொண்டு வணங்கி யிழித்தனர் நிறீஇக்
காஞ்சன மாலையுஞ் செவிலியும் பற்றி 100
எஞ்சலில் கம்மத் திணைதனக் கில்லாப்
பஞ்ச வண்ணத்துப் பத்திபல புனைந்த
பொங்குமலர்த் தவிசிற் பூமிசை யாயினும்
அஞ்சுபு மிதியாக் கிண்கிணி மிழற்ற
வேழத் தாழ்கைக் காழொடு சேர்த்த 105
கண்டப் பூந்திரை மண்டபத் திழைத்த
நன்னகர் நடுவட் பொன் மணை யேற்றிப்

மஞ்சனம் ஆட்டல்[தொகு]

பெருந்திசை நோக்கி இருந்தவண் இறைஞ்சி
யாத்த காதலொ டேத்த லாற்றாள்
அடித்தல முதலா முடித்தலங் காறும் 110
மொய்யுறத் தோய்ந்த நெய்தயங்கு பைந்தாள்
மங்கலப் புல்லவ ரின்புறப் பெய்தபின்
நீராடு பல்கல நெரிய வேற்றி
ஆராடு தானத் தைந்நூ றாயிரம்
பசும்பொன் மாலையுந் தயங்குகதிர் முத்தமும் 115
இரவன் மாக்கட்குச் சொரிவன ணல்கித்
தீங்கருங் காதற் செவிலியுந் தோழி
காஞ்சன மாலையுங் கையிசைந் தேத்த
அளற்றெழு தாமரை யள்ளிலை நீரில்
உளக்குறு நெஞ்சி னடுக்கமொடு விம்மித் 120
தோழியர் சூழ வூழூ ழொல்கித்
தலைப்புனன் மூழ்குத லிலக்கண மாதலின்
மணலிடு நிலைத்துறைத் துணைவளை யார்ப்பக்
குடைவனள் குலாஅய்க் குறிப்புநனி நோக்கிப்
படையேர் கண்ணியர் பணிந்துகை கூப்பிப் 125
புடைவீங் கிளமுலைப் பூண்பொறை யாற்றா
திடையே மாக்குமென் றடைவனர் விலக்கிச்
சீலத் தன்ன வெய்வங் கவினிக்
கோலங் கொண்ட கூந்தலொடு குளித்துப்
பிடிக்கையின் வணரு முடிக்குர லாற்றாள் 130
செருக்கய லன்ன சேயரி நெடுங்கண்
அரத்தகம் பூப்ப வலமந் தெழலும்
வாழிய ரெம்மனை வருந்தினை பெரிதென
மொழியறி மகளிர் தொழுதனர் வணங்கி
அத்துமுறைஐ யுரிஞ்சி யாயிரத் தெண்குடம் 135
முத்துறழ் நறுநீர் முறைமையி னாட்டி

வாசவதத்தையை அலங்கரித்தல்[தொகு]

அங்கு அரவு அல்குல் நங்கைக்கு இன்று இவை
மங்கல மண்ணுநீ ராவன வென்று
நெஞ்ச நெகிழ்ந்துவந் தன்புகலந் தாடியல்
அரவிற் பரந்த வல்குன் மீமிசைக் 140
கலாஅய்க் கிடந்த குலாத்தரு கலிங்கம்
நிலாவிடு பசுங்கதிர்க் கலாவ மேய்ப்ப
நீரணி கொண்ட வீரணி நீக்கிக்
கதிர்நிழற் கவாஅப் பதுமநிறங் கடுக்கும்
புதுநூற் பூந்துகி லருமடி யுடீஇக் 145
காரிருங் கூந்த னீரற வாரி
வனப்பொடு புணர வகுத்தணி முடிமிசை
நீர்ப்பூம் பிணையல் சீர்ப்பமை சிகழிகை
முல்லையங் கோதை சில்சூட் னணிந்து
தண்ணறுஞ் சாந்த நுண்ணிதி னெழுதிப் 150
பதினோ ராண்டினுட் பாற்படக் கிளந்த
விதிமா ணுறுப்பிற்கு வேண்டுவ வேண்டுவ
கதிர்மாண் பல்கலங் கைபுனைந் தியற்றி
உறுப்பெடுக் கல்லா வுடம்பின ளாயினும்
சிறப்பவை யாதலிற் சீர்மையொ டிருந்து 155
காமர் கோலங் கதிர்விரித் திமைப்பத்
தாமரை யுறையுண் மேவாள் போந்த
தேமலர்க் கோதைத் திருமகள் போலக்
கோமகள் போதுங் குறிப்புநனி நோக்கி

அந்தணமகளிர் முதலியோர்[தொகு]

அரணி கான்ற அணிகிளர் செந்தீக் 160
கிரிசையின் வழாஅ வரிசை வாய்மை
அளப்பரும் படிவத் தான்ற கேளவித்
துளக்கி னெஞ்சத்துத் துணிந்த வாய்மொழி
சால்வணி யொழுக்கி னூலிய னுனித்த
மந்திர நாவி னந்தண மகளிரும் 165
வரும்புன லாடற்குப் பரிந்தனர் வந்த
விரைபரி மான்றே ரரைச மகளிரும்
அறிவினுஞ் செறிவினும் பொறியினும் புகழினும்
எறிகடற் றானை யிறைமீக் கூறிய
செம்பொற் பட்டத்துச் சேனா பதிமகள் 170
நங்கை தோழி நனிநா கரிகியும்
அருந்திணை யாயத் தவ்வயின் வழாஅத்
திருந்திய திண்கோட் பெருந்திணை மகளிரும்
செண்ண மமைத்த செம்பொற் பட்டத்து
வண்ண மணியொடு முத்திடை விரைஇய 175
கண்ணி நெற்றிக் காவிதி மகளிரும்
காலினுங் கலத்தினுஞ் சாலத் தந்த
மாநிதிச் செல்வத்து வாணிக மகளிரும்
நிலத்தோ ரன்ன நலத்தகு பெரும்பொறை
அருங்கடி மூதூர்ப் பெருங்குடி மகளிரொ 180
டெண்ண லாகத்துப் பெண்ணுல கேய்ப்பக்
கன்னி மகளிர் கதிர்த்த கோலமொடு
நன்மணி யைம்பா னங்கையொடு போந்தோர்

நீர் விளையாட்டு[தொகு]

நீர்தலைக் கொண்ட நெடும்பெருந் துறைவயின்
போர்தலைக் கொண்டு பொங்குபு மறலிக் 185
கொங்கலர் கோதை கொண்டுபுறத் தோச்சியும்
அஞ்செஞ் சாந்த மாகத் தெறிந்தும்
நறுநீர்ச் சிவிறிப் பொறிநீ ரெக்கியும்
முகிழ்விரற் றாரை முகநேர் விட்டும்
மதிமரு டிருமுகத் தெதிர்நீர் தூவியும் 190
பொதிபூம் பந்தி னெதிர்நீ ரெறிந்தும்
சிவந்த கண்ணினர் வியர்ந்த நுதலினர்
அவிழ்ந்த கூந்தலர் நெகிழ்ந்த வாடையர்
ஒசிந்த மருங்குல ரசைந்த தோளினர்
நல்கூர் பெரும்புனல் கொள்க வென்றுதம் 195
செல்வ மெல்லாஞ் சேர்த்திறைத் தருளி
இளையா விருப்பிற்றம் விளையாட்டு முனைஇக்
கயம்பா னவியப் புறங்கரை போந்து
பொறிமயிற் றொழுதி புயல்கழி காலைச்
செறிமயி ருளர்த்துஞ் செய்கை போற்றம் 200
நெறிமயிர்க் கூந்த னீரற வாரிச்
செழும்பூம் பிணைய லடக்குபு முடித்துக்
குழங்கற் சாந்த மழுந்துபட வணிந்து
பைங்கூற் பாதிரிப் போதுபிரிந் தன்ன
அங்கோ சிகமும் வங்கச் சாதரும் 205
கொங்கார் கோங்கின் கொய்ம்மல ரன்ன
பைங்கேழ்க் கலிங்கமும் பட்டுத் தூசும்
நீலமு மரத்தமும் வாலிழை வட்டமும்
கோலமொடு புணர்ந்த வேறுவே றியற்கை
நூலினு முலண்டினு நாரினு மியன்றன 210
யாவை யாவை யவையவை மற்றவை
மேவன மேவன காமுற வணிந்து
கம்மியர் புனைந்த காமர் பல்கலம்
செம்மையி னணியுஞ் செவ்விக் காலத்துச்

உதயணன் செயல்[தொகு]

சிந்தைபின் ஒழிக்குஞ் செலவிற்று ஆகி 215
அந்தர விசும்பி னமரர் பொருட்டா
மந்திர முதல்வன் மரபிற் படைத்த
இந்திரன் களிற்றொ டிணைந்துடன் பிறந்த
இரும்பிடி தானு மிதற்கிணை யன்றென
அரும்பிடி யறிவோ ராராய்ந் தமைத்தது 220
காலினுங் கையினும் படைத்தொழில் பயின்றது
கோலினும் வேலினு மறலினுங் குமைத்தது
தட்பமும் வெப்பமுந் தாம்படிற் றீர்ப்பது
பகலினு மிருளினும் பணியிற் பயின்ற
திகலிருல் கும்பத் தேந்திய சென்னியது 225
மேலிற் றூயது காலிற் கடியது
மத்தக மாலையொடு நித்தில மணிந்த
துத்தரா பதத்து மொப்புமை யில்லாப்
பத்திரா பதிமிசைப் பனிக்கடற் பிறந்த
வெஞ்சூர் தடிந்த வஞ்சுவரு சீற்றத்து 230
முருகவே ளன்ன வுருவுகொ டோற்றத்
துதையண குமரன் புதைவா ளடக்கிச்

உதயணன் கருதுதல்[தொகு]

சிறை எனக் கொண்ட மன்னவன் செல்வமும்
துறைவயி னாடுநர் துதைந்த போகமும்
நெய்பெய் யழலிற் கையிகந்து பெருகிப் 235
புறப்படல் செல்லா வாகி மற்றவை
மனத்திடை நின்று கன்றறுபு சுடுதலின்
மாற்றுச் செய்கை யென்னு நீரால்
ஆற்ற வெவ்வழ லவிப்பக் கூடுதல்
வயிரத் தோட்டி யன்றியும் பயிரிற் 240
சொல்லியது பிழையாக் கல்விக் கரணத்துப்
பிடியொடு புணர்ந்த விப்பக லாயினும்
முடியு மென்னு முயற்சிய னாகிப்
பாப்புரி யன்ன மீக்கொ டானை
இருபுடை மருங்கினும் வருவளிக் கொசிந்து 245
வீச்சுறு கவரித் தோற்றம் போல
மிக்குவாய் கூரு மீட்சி வேட்கையன்
கொக்குவா யன்ன கூட்டமை விரலினன்
நண்ணா மன்னனை நலிவது நாடும்
எண்ணமொ டிருந்தன னிரும்பிடி மிகையென்.

1 42 நங்கை நீராடியது முற்றிற்று.