பெருங்கதை/1 55 சவரர் புளிஞர் வளைந்தது

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
  • பாடல் மூலம்

1 55 சவரர் புளிஞர் வளைந்தது

உதயணன் செயல்[தொகு]

புலர்ந்த காலைப் பூங்கழற் குருசில்
மலர்ந்த பொய்கையுண் மணிநிறத் தெண்ணீர்க்
கொழுமலர்த் தடக்கையிற் கூட்டுபு கொண்டு
குழவி ஞாயிற் றெழிலிகந் தெள்ளும்
திருமுக மருங்கிற் செருமீக் கூரி 5
ஒள்ளிழை மகளி ருள்ளங் கவற்றும்
செந்தா மரைக்கண் கழீஇ மந்திரத்
தந்தி கூப்பித் தென்புலக் கிறைஞ்சித்
தமரிற் பிரிந்ததன் றனிமையை நினைஇ
அமரிய தோழி யாகத் தசைந்து 10
சுடர்முகம் புல்லெனப் படரொடு மயர்ந்து
வேனில் வள்ளியின் மேனி வாடி
உள்ளங் கனலு மொள்ளிழை மாதரைக்
குற்ற நலத்துக் குறிப்புநனி காட்டி
உற்ற வெந்நோ யோம்பென வுற்ற 15
காஞ்சன மாலையை யாங்கன மருளி
வருபடைக் ககன்ற வயந்தகன் வருவழிப்
பொருபடை யண்ணல் பொழில்வயி னிருப்பக்
கடுவிசைக் கனலி சுடுகதிர் மருங்கிற்
குடுமி நெற்றிக் கூருளி யன்ன 20
வல்வாய் வயவன் வறன்மரத் துச்சிப்
பல்காற் குரைத்தது பகற்டடை தருமெனப்
பாட்டிற் கூறக் கேட்டன னாகி
வெண்மதி நெடுங்குடை வேற்றவன் படையொடு
நண்மதி யமைச்ச ஷண்மறைந் தொடுங்கி 25
மராவு மாவுங் குராவுங் கோங்கும்
தண்ணிழற் பொதும்பர்க் கண்ணழற் காட்டும்
காழமை கழைத்தொடர்க் கடும்பரிப் போர்வைத்
தாழமை பெரும்பொறித் தச்சுவினைப் பொலிந்த
அரக்கூட் டம்புகர் மரக்கூட் டியானையைச் 30
செறுவுபு நிறீஇய செய்கை யோரா
தெறிபடை யாளரொ டுறுமுரண் செய்யக்
காழ்த்த காலைக் கீழ்த்திசை முன்பகல்
அன்றவட் பாடிய வணிவரி வயவன்
இன்றிவ ணின்னே யிகற்படை தருதல் 35
பொய்த்த லின்றி மெய்த்த தாமென
அங்குபடு புட்குர லாண்டகை யஞ்சி
வெங்கணை திருத்தி வில்லிடந் தழீஇ
இரும்பிடை யிட்ட பெரும்படைக் கச்சையன்
வளிசுழற் றறாஅ முளிமரக் கானத் 40
தென்கொ னிகழு மேத மின்றென
நெஞ்சொ டுசாவுஞ் சிந்தைய னாகி
வெஞ்சின வீர னின்ற காலை

வேடர் இயல்பு[தொகு]

மடப்பிடி வீழ்ந்த மணிமலைச் சாரல்
அடக்கருஞ் சீறூ ரரணக வுறையுளர் 45
கணங்கொ டலைவனைக் கைக்கொண் டியங்கா
அணங்கரும் பெருஞ்சாத் தவிய நூறிப்
பல்விலைப் பண்டங் கவர்ந்துபய மறியார்
சில்விலைக் கிடூஉஞ் செல்லா வாழ்க்கையர்
சுரஞ்செல் வம்பல ரரும்பத மடக்கி 50
மாணிறி யாத்த வாணத் தானையர்
அடுகணை மறவ ரகலிலை யோமை
நெடுநிலைத் திரடா ணேர்துணித் ததர்வைக்
கொடிபுரை கயிற்றொடு கொளுத்தினர் சமைப்ப
வடியி னன்ன வாளரித் தடங்கட் 55
பைங்குழை மகளிர் பல்காழ்க் கலையோ
டங்குழைச் செயலைத் தண்டழை யுடீஇக்
காலி னியங்குநர் கற்குழிக் கொளினும்
நூலி னியன்றவை நோக்கார் சாபமென்
றாடூஉவு மகடூஉவு மாடு மறியார் 60
காடுதேர் முயற்சியர் கைப்பட் டோர்களைப்
பாடற் பாணிப் பல்லிசை கேட்கும்
ஆடென வணங்கிற் கருந்தலை துமித்தும்
வீளை யோட்டின் வெருவ வெய்தவர்
ஊளைப் பூசலோ டாடல்கண் டுவந்தும் 65
காட்டுயிர் காணார் கைப்பயில் குறியொடு
வேட்டன செய்யும் வேட்டுவினைக் கடுந்தொழிற்
கவர்கணை வாழ்க்கைச் சவரர் புளிஞர்

வேடர் செயல்[தொகு]

காலை யெழுந்து கணங்கொண் டீண்டிச்
சோலைப் கோதகச் சுவடுறுத் துழல்வோர் 70
காஅட்டுப் பிடிமற் றன்றிது கருதின்
நாஅட்டுப் பிடியே நடந்தது தானென
முதிர்புலா னாற்றமொடு முன்முன் வீசி
உதிர வழியே யதிர வோடிப்
பிடியது வீழ்ச்சியும் பெணபாற் சுவடும் 75
அடுதிற லாடவ ரற்றமும் பிறவும்
படியி னாய்ந்து கடுகுவன ரோடி
வெள்ளிடை வெண்மணன் மிதித்த சுவடுதொறும்
புள்ளடி யொழுக்கம் புருவனர் நோக்கி
நெருந னீடிரு ணீங்குநர் சுவடிவை 80
அருமை யுடைத்தவர்த் தலைப்பட னமக்கென
அடியுறி னடையு மம்புடை யெயினர்
கடிகை வெள்ளிலுங் கள்ளி வற்றலும்
வாடிய வுவலொடு நீடதர் பரப்பி
உழைவயிற் றரியாது முழைவயி னொடுங்கிய 85
ஆறலை யிளையரை யாண்மை யெள்ளி
வேறினி நும்மொடு விளிகநுங் களவெனச்
சேறல் வலியாச் செய்கை நோக்கி

நிமித்திகன் கூற்று[தொகு]

வாய்ச்சிறு புதுப்புள் வீச்சுறு விழுக்குரல்
கேட்டுப்பொரு டெரியுமோர் வேட்டுவ முதுமகன் 90
பெருமக னென்னப் பெறலருங் கலத்தோ
டொருமக னுளவழி யெதிர்த்து மம்மகன்
நடுங்குதுய ருறுத்துங் கடுங்க ணாண்மையன்
ஆண்மை யழிய நாண்மீக் கூரி
மெய்ப்பொரு ணேர்ந்து கைப்படு நமக்கெனக் 95
காட்டக மருங்கி னல்லது மற்றவர்
நாட்டகம் புகுத னன்கிருள் கழியினும்
இல்லை யெழுகெனச் செல்வோர் முன்னர்ப்

வேடர் செல்லுதல்[தொகு]

புரக்கூட் டமைந்த வரக்கூட் டரத்தம்
பவளத் துணியிற் பசுமையொடு கிடப்ப 100
இன்னணிப் புக்கோரிவ்வழி யல்லது
மற்றவ ரெங்கு மறைந்திலர் காண்கெனச்
செல்வோ ரொருங்குடன் வல்லையும் வழியும்
வான்கரப் பொதும்புங் கானமுங் கடறும்
முழைவளர் குன்றுங் கழைவளர் கானமும் 105
பயம்பும் பாழியு மியங்குவனர் வதியும்
முதுமரப் பொத்தும் புதுமலர்ப் பொய்கையும்
இனையவை பிறவு மனையவ ருள்வழிச்
செருக்கய லுண்கட் சீதையைத் தேர்வுழிக்
குரக்கினத் தன்ன பரப்பின ராகிப் 110
பிடிமுதற் கொண்டுமல ரடிமுத லொற்றிச்

வேடர் உதயணனைக் கண்டு தாக்கல்[தொகு]

செல்வோர் கதுமெனச் செம்மலைக் கண்டே
கல்லெனத் துவன்றிக் கார்கிளர்ந் ததுபோல்
ஆர்ப்பும் வீளையு மவ்வழிப் பரப்பிக்
கார்க்கலைக் கோட்டொ டார்ப்பொலி மயங்கி 115
அரவச் செய்கையர் வெருவரத் தாக்கப்

உதயணன் செயல்[தொகு]

பல்பனி பரந்த சில்லரி மழைக்கண்
நச்சுயிர்ப் பளைஇய வச்ச நோக்கமொடு
விம்முவன ணடுங்கும் பொம்ம லோதியை
மாஞ்சினை யிளந்தளிர் மனிநிற மேனிக் 120
காஞ்சன மாலாய் காவல் போற்றுமதி
அப்பாற் புகுதரு மற்ற மின்மையின்
இப்பால் வருவந ரின்னுயி ருண்கெனக்
கைச்சிலை வளைத்துக் கணைநாண் கொளீஇ
முற்றிய கோங்கின் முழுத்தாள் பொருந்தி 125
ஒற்றுபு நோக்கு மொற்றை யாளன்
வார்கணை செவியுற வாங்கி மற்றவர்
ஆருயிர் வௌவ்வதன் றாண்முதல் பொருந்தி
உடும்பெறிந் ததுபோற் கடுங்கணை முள்க
விட்ட வேந்தன் விற்றொழில் கண்டும் 130
கண்டுகை விடுதல் கரும மன்றென
விண்டல ரிலவத் தண்டைசார்ந் தவனைக்

வேடர் உதயணனை நோக்கிக் கூறுதல்[தொகு]

கண்ட வேட்டுவர் தண்டாது நெருக்கி
மையணி யிரும்பிடிவீழ மற்றுநீ
உய்வலென் றெண்ணி யொளித்தனை போந்தனை 135
எவ்வழிப் போதிநின் னின்னுயி ருண்குவம்
யாரை நீயெமக் கறியக் கூறென
வீர வெம்மொழி நீரல பயிற்றி

உதயணன் வேடரை நலிதல்[தொகு]

உடுவமை பகழி யொருங்குடன் றூவ
விடுகணை விடலை வில்லின் விலக்கி 140
வதிபயின் றடைந்த மறவரை யதிரக்
கைவயிற் கடுங்கணை யொவ்வொன்று கொண்டவர்
மெய்வயிற் கழிந்து வியனிலத் திங்க
வீரருள் வீரன் விசைபெற விடுதலின்
வீர வேட்டுவர் சார்த லாற்றார் 145

வேடர் கலங்கிக் கூறல்[தொகு]

கால வுருவொடு குன்றிடைப் போந்தவோர்
காலன் கொல்லிவன் கானத் தோர்க்கெனப்
பன்முகத் தானும் பற்றடைந் தன்னவன்
வின்முகம் புகாஅர் வேட்டுவ ரஞ்சிப்
புட்கூற் றாளனை யுட்கூற் றாகி 150
அழித்தனை கொணர்ந்தெனப் பழித்தனர் கழறி
உளைப்பொலி மான்றே ருதயண குமரனை
வளைத்துநின் றனரால் வலிப்பது தெரிந்தென்.

1 55 சவரர் புளிஞர் வளைந்தது முற்றிற்று.