பெருங்கதை/3 13 கோயில் ஒடுங்கியது

விக்கிமூலம் இலிருந்து
  • பாடல் மூலம்

3 13 கோயில் ஒடுங்கியது

உதயணன் மறைந்திருத்தல்[தொகு]

கரந்த வுருவொடு காவல் புரிந்தவர்
ஒடுங்குதல் வலித்துடன் போகிய பின்றை
முனைவெந் துப்பின் மன்னனு முன்போல்
புனைவகை மாடம் புக்குமறைந் திருத்தலின்

பதுமாபதியின் செயல்[தொகு]

தண்டடு திண்டோட் குருசிலைத் தன்னொடு 5
கொண்டுட் போகுங் குறிப்பின ளாகித்
தீது தீண்டாத் தெரிவொடு புகுதரும்
வாயி னாடி வைய நீக்கிப்
பல்வகைத் தான நல்குக மின்றென
எல்லிற் போதர லியையு மாதலிற் 10
சிலத மாக்களொடு சிவிகை வருகென

பதுமாபதி மன்மதன் கோயிலை யடைந்து உதயணனைக் காண்டல்[தொகு]

அலர்ததை யைம்பா லணியிழை யேறிப்
போந்தன ளாகிப் பூந்தண் கானத்துள்
எழுதுவினை மாடத்து முழுமுத லிழிந்து
தாமகத் திருக்கு மாமணிப் பேரறை 15
வாயில் சேர்வுற வையம் வைக்கென
அமைத்தன ளாகி யவ்வயி னொடுங்கிய
சினப்போ ரண்ணலொடு வளப்பா டெய்தி
அப்பகல் கழித்த பின்றை மெய்ப்பட

பதுமாபதி தானமளித்தல்[தொகு]

மாண்டகு கிளவி பூண்ட நோன்பிற் 20
கன்றுகடை யாதலிற் சென்றோர் யார்க்கும்
மணியு முத்தும் பவழமு மாசையும்
அணியு மாடையு மாசி லுண்டியும்
பூவு நானமும் பூசுஞ் சாந்தமும்
யாவை யாவை யவையவை மற்றவர் 25
வேண்டே மெனினு மீண்ட வீசலின்
இந்நில வரைப்பிற் கன்னியர்க் கொத்த
ஆசி லாசிடை மாசில மாண்பின்
மந்திர நாவி னந்த ணாளரும்
அல்லோர் பிறருஞ் சொல்லுவனர் போயபின் 30
கோலக் காமன் கோட்டத் தகவயின்
மாலை யாமத்து மணிவிளக் கிடீஇ
மோகத் தான முற்றிழை கழிந்தபின்

பதுமாபதி உதயணனுடன் செல்லுதல்[தொகு]

மரபறி மகளிர் பற்றினர் பாடக்
கரும மமைந்தபிற் கடிமனை புகீஇயர் 35
திருமதி முகத்தியைச் சேர்ந்துகை விடாஅ
அருமதி நாட்டத் தந்தணி போந்து
பட்டினிப் பாவை கட்டழ லெய்தும்
நீங்குமி னீரெனத் தான்புற நீக்கிப்
பஞ்சி யுண்ட வஞ்செஞ் சீறடி 40
ஒதுங்க விடினும் விதும்பும் வேண்டா
வாயிலுள் வைத்த வண்ணச் சிவிகை
ஏற நன்றெனக் கூறி வைத்தலின்
மணங்கமழ் மார்பன் மாடப் பேரறை
இருந்தன னாங்குப் பொருந்துபு பொருக்கெனக் 45
கட்டளைச் சிவிகையுட் பட்டணைப் பொலிந்த
பூம்பட மறையப் புக்கன னொடுங்க
வண்டொடு கூம்பிய மரைமலர் போல
ஒண்டார் மார்பனை யுட்பெற் றுவகையின்
மணிவரைச் சாரன் மஞ்ஞை போல 50
அணிபெற வியலி யடிக்கல மார்ப்பத்
தொய்யில் வனமுலைத் தோழி மாரொடு
பையப் புக்குப் பல்வினைக் கம்மத்துச்
சுருக்குக் கஞ்சிகை விரித்தனர் மறைஇப்
பள்ளிப் பேரறைப் பாயலு ளல்லது 55
வள்ளிதழ்க் கோதையை வைக்கப்பெறீரென
யாப்புறக்கூறிக் காப்போர் பின்செல
வலிகெழு மொய்ம்பிற் சிலத மாக்கள்
அதிர்ப்பி னுசும்ப மதிற்புறம் பணிந்த
காவும் வாவியுங் காமக் கோட்டமும் 60
பூவீழ் கொடியிற் பொலிவில வாக
வாழ்த்துப்பலர் கூறப் போற்றுப்பல ருரைப்ப
வழுவில் கொள்கை வான்றோய் முதுநகர்
மணியுமிழ் விளக்கின் மறுகுபல போகிக்
கொடியணி கோயில் குறுகலும் படியணி 65
பெருங்கடை காவலர் பெருமான் றங்கை
மருங்கடை மழைக்கட் கனங்குழைப் பாவை
முடித்த நோன்பி னெடித்தவகை யறியார்
இருளின் குற்றங் காட்டி நங்கைதன்
உரிமையுள் படுநரைக் கழறுவன ராகி 70
முழுநிலைக் கதவ மகற்றிமுன் னின்று
தொழுத கையர் புகுதுகென் றேத்த
வாயில் புக்குக் கோயில் வரைப்பிற்
கன்னி மாடத்து முன்னறை வைத்தலிற்
பகலே யாயினும் பயிலா தோர்கள் 75
கவலை கொள்ளுங் கடிநிழற் கவினி
மாடெழு மைந்தரு மூடுசென் றாடா
அணியிற் கெழீஇ யமர ராடும்
பனிமலர்க் காவின் படிமைத் தாகி
இருளொடு புணர்ந்த மருள்வரு மாட்சித் 80
தன்னகர் குறுகித் துன்னிய மகளிரை
அகல்க யாவிரு மழலு மெனக்கெனத்
திலக முகத்தி திருந்துபடந் திறந்து
கூன்மகள் வீச வானா வகத்தே
தக்க வெல்லை யிருத்தலின் மிக்க 85
காழகி னறும்புகை யூழ்சென் றுண்ட
மணிக்காற் கட்டிலுள் வல்லோன் படுத்த
அணிப்பூஞ் சேக்கை யறைமுத லாகப்
பக்கமுந் தெருவும் புக்குமுறை பிழையா
தாராய்ந் தந்தணி யமைத்ததன் பின்றைப் 90
பேரிசை யண்ணலும் பெருநல மாதரும்
ஆரிருள் போர்வை யாக யாவரும்
அறிதற் கரிய மறையரும் புணர்ச்சியொடு
கரப்பறை யமைத்துக் கைபுனைந் தோர்க்கும்
உரைக்க லாகா வுறுபொறிக் கூட்டத்துப் 95
புதவணி கதவிற் பொன்னிரை மாலை
மதலை மாடத்து மறைந்தொடுங் கினரென்.

3 13 கோயில் ஒடுங்கியது முற்றிற்று.