பெருங்கதை/3 15 யாழ் நலம் தெரிந்தது

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
  • பாடல் மூலம்

3 15 யாழ்நலந் தெரிந்தது

யாப்பியாயினியின் செயல்[தொகு]

மறையோம் பொழுக்கின் மதலை கேண்மதி
நிறையோம் பொழுக்கி னின்னல முணரேம்
ஒருபே ருலகம் படைத்த பெரியோன்
உருவுகரந் தொழுக லுணரா ராகக்
கொன்றையம் பசுங்காய் பெருக்கியும் பயற்றின் 5
நன்றுவிளை நெற்றினைச் சிறுக்கியுங் குன்றா
இன்றீங் கரும்பினைச் சுருக்கியும் விண்டலைத்
துன்னரும் விசும்புற நீட்டிய நெறியும்
இன்னவை பிறவு மிசைவில வெல்லாம்
படைத்தோன் படைத்த குற்ற மிவையென 10
எடுத்தோத் துரையி னியம்பி யாஅங்
கியானை வணக்கு மைங்கதி யருவினை
வீணை வித்தகத் தவனினு மிக்கதன்
மாணல முணரே மடவிய னிவனென
நாணக் காட்டு நனித்தொழில் புனைந்தேம் 15
மாணக் காட்டுநின் மாணாக் கியரேம்
ஆயினெ மினியென வசதி யாடிய
மைதவழ் கண்ணி கைதவந் திருப்பாச்
செவ்வழி நிறீஇச் செவ்விதிற் றம்மெனச்
செதுவன் மரத்திற் சேக்கை யாதலின் 20
உதவா திதுவென வுதயணன் மறுப்ப
யாணர்க் கூட்டத் தியவனக் கைவினை
மாணாப் புணர்ந்ததோர் மகர வீணை
தரிசகன் றங்கைக் குரிதென வருளிய
கோல நல்லியாழ் கொணர்ந்தனள் கொடுப்பத் 25

உதயணன் யாழ்நரம்பின் குற்றங்களைத் தெரிவித்தல்[தொகு]

தினைப்பக வனைத்தும் பழிப்பதொன் றின்றி
வனப்புடைத் தம்மவிவ் வள்ளுயிர்ப் பேரியாழ்
தனக்கிணை யில்லா வனப்பின தாகியு
நிணக்கொழுங் கோல்க ளுணக்குத லின்மையின்
உறுபுரிக் கொண்டன பிறநரம்பு கொணர்கென 30
மதுக்கமழ் கோதை விதுப்பொடு விரும்பிப்
புதுக்கோல் கொணர்ந்து பொருக்கென நீட்ட
நோக்கிக் கொண்டே பூக்கமழ் தாரோன்
வகையில விவையெனத் தகைவிரல் கூப்பி
அவற்றது குற்ற மறியக் கூறினை 35
இவற்றது குற்றமு மெம்மனந் தெளியக்
காட்டுதல் குறையென மீட்டவ ளுரைப்ப
நன்னுதன் மடவோய் நன்றல மற்றிவை
முன்னைய போலா மூத்து…. தைந்த
வாவிசா …. ன வாயினும் 40
பண்ணறச் சுகிர்ந்து பன்னுத லின்மையும்
புகரற வுணங்கிப் புலவற லின்மையும்
குறும்புரிக் கொள்ளாது நெடும்புரித் தாதலும்
நிலமிசை விடுதலிற் றலைமயிர் தழீஇ\
மணலகம் பொதிந்த துகளுடைத் தாதலும் 45
பொன்னே காணெனப் புரிமுறை நெகிழ்த்துத்
துன்னார்க் கடந்தோன் றோன்றக் காட்ட
யாழும் பாட்டும் யாவரு மறிவர்
வீழா நண்பி னிவன்போல் விரித்து
நுனித்துரை மாந்த ரில்லென நுவன்று 50
மன்றப் புகன்று மாழை நோக்கி
மறித்தும் போகி நெறித்துநீர்த் தொழுகிப்
பொன்றிரித் தன்ன நிறத்தன சென்றினி
தொலித்த லோவா நலத்தகு நுண்ணரம்
பாவன கொடுப்ப மேவனன் விரும்பிக் 55
கண்டே யுவந்து கொண்டதற் கியைய
ஓர்த்தன னமைந்துப் பேர்த்தனன் கொடுப்ப
வணங்குபு கொண்டு மணங்கம ழோதி
மாதர் கைவயிற் கொடுப்பக் காதல்
உள்ளங் குளிர்ப்ப வூழி னியக்கக் 60
கூடிய குருசில் பாடலின்மகிழ்ந்து

உதயணன் பதுமாபதியாகிய இருவர்நிலை[தொகு]

கோடுயர் மாடத்துத் தோடுயர் தீரக்
குறிவயிற் புணர்ந்து நெறிவயிற் றிரியார்
வாயினுஞ் செவியினுங் கண்ணினு மூக்கினும்
மேதகு மெய்யினு மோத லின்றி 65
உண்டுங் கேட்டுங் கண்டு நாறியும்
உற்று மற்றிவை யற்ற மின்றி
ஐம்புல வாயிலுந் தம்புலம் பெருக
வைக றோறு மெய்வகை தெரிவார்
செய்வளைத் தோளியைச் சேர்ந்துநல னுகர்வதோர் 70
தெய்வங் கொல்லெனத் தெளித லாற்றார்
உருவினு முணர்வினு மொப்போ ரில்லென
வரிவளைத் தோளியொடு வத்தவர் பெருமகன்
ஒழுகினன் மாதோ வொருமதி யளவென்.

3 15 யாழ்நலந் தெரிந்தது முற்றிற்று.