உள்ளடக்கத்துக்குச் செல்

பெருங்கதை/4 12 பந்தடி கண்டது

விக்கிமூலம் இலிருந்து
  • பாடல் மூலம்

4 12 பந்தடி கண்டது

வாசவதத்தையும் பதுமாபதியும் பந்தடி காணுதல்

[தொகு]

அன்புமிகச் சிறந்தாண் டமருங் காலை
மன்பெருஞ் சிறப்பின் மறப்போ ருதயணன்
அருமை சான்ற வாருணி யரசன்
உரிமைப் பள்ளியுட் டெரிவனன் கொண்ட
ஆயிரத் தெண்ம ரரங்கியன் மகளிர் 5
மாசி றாமரை மலர்மக ளனையோர்
ஆடலும் பாடலு நாடொறு நவின்ற
நன்னுதன் மகளிரை மின்னேர் நுண்ணிடை
வாசவ தத்தைக்கும் பதுமா பதிக்கும்
கூறுநனி செய்து வீறுயர் நெடுந்தகை 10
கொடுத்த காலை யடுத்த வன்போ
டரச னுலாவெழு மற்ற நோக்கித்
தேவிய ரிருவரு மோவியச் செய்கையின்
நிலாவிரி முற்றத்துக் குலாவொ டேறிப்
பந்தடி காணிய நிற்ப விப்பால் 15

வயந்தகன் உதயணனுக்குக் கூறுதல்

[தொகு]

வெங்கோ லகற்றிய வென்றித் தானைச்
செங்கோற் சேதிபன் செவிமுதற் சென்று
வயந்தக னுரைக்கு நயந்தனை யருளின்
மற்றுநின் றோழியர் பொற்றொடிப் பணைத்தோட்
டோழியர் தம்மோ டீழீ ழிகலிப் 20
பந்துவிளை யாட்டுப் பரிந்தன ரதனாற்
சிறப்பின் றுலாப்போக் கறத்தகை யண்ணனின்
மாண்குழைத் தேவிய ரிருவரு மிகறலிற்
காண்டகை யுடைத்தது கரந்தனை யாகி
வடிவேற் றடக்கை வத்தவ ரிறைவ 25
பிடிமிசை வந்து பிணாவுரு வாகிச்

உதயணன் மறைந்துசென்று பந்தடி காணல்

[தொகு]

சென்றனை காண்கென நன்றென விரும்பிப்
படையுலாப் போக்கி யிடைதெரிந் திருந்தாங்
கியாவரு மறியா வியல்பிற் கரந்து
காவலன் பிடிமிசைக் காண்டக வேறிப் 30
பல்வகை மகளிரொடு பையெனச் சென்றுதன்
இல்லணி மகளிரொ டியைந்தன னிருப்ப
இகலும் பந்தி னிருவரும் விகற்பித்
தடிநனி காண்புழி யணங்கேர் சாயற்

இராசனை

[தொகு]

கொடிபுரை நுண்ணிடைக் கொவ்வைச் செவ்வாய் 35
மதுநாறு தெரியன் மகதவன் றங்கை
பதுமா பதிதன் பணியெதிர் விரும்பி
விராய்மலர்க் கோதை யிராசனை யென்போள்
கணங்குழை முகத்தியை வணங்கினள் புகுந்து
மணங்கமழ் கூந்தலும் பிறவுந் திருத்தி 40
அணங்கெனக் குலாஅ யறிவோர் புனைந்த

பந்துகள்

[தொகு]

கிடையும் பூளையு மிடைவரி யுலண்டும்
அடையப் பிடித்தவை யமைதியிற் றிரட்டிப்
பீலியு மயிரும் வாலிதின் வலந்து
நூலினுங் கயிற்றினு நுண்ணிதிற் சுற்றிக் 45
கோல மாகக் கொண்டனர் பிடித்துப்
பாம்பின் றோலும் பீலிக் கண்ணும்
பூம்புன னுரையும் புரையக் குத்திப்
பற்றிய நொய்ம்மையிற் பல்வினைப் பந்துகள்
வேறுவே றியற்கைய கூறுகூ றமைத்த 50
வெண்மையுஞ் செம்மையுங் கருமையு முடையன
தண்வளி யெறியினுந் தாமெழுந் தாடுவ
கண்கவ ரழகொடு நெஞ்சக லாதன
ஒண்பந் தோரேழ் கொண்டன ளாகி
ஒன்றொன் றொற்றி யுயரச் சென்றது 55
பின்பின் பந்தொடு வந்துதலை சிறப்பக்

இராசனை பந்தடித்தல்

[தொகு]

கண்ணிமை யாம லெண்ணுமி னென்று
வண்ண மேகலை வளையொடு சிலம்பப்
பாடகக் கான்மிசைப் பரிந்தவை விடுத்தும்
சூடக முன்கையிற் சுழன்றுமா றடித்தும் 60
அடித்த பந்துக ளங்கையி னடக்கியும்
மறித்துத் தட்டியுந் தனித்தனி போக்கியும்
பாயிர மின்றிப் பல்கல னொலிப்ப
ஆயிரங் கைநனி யடித்தவ ளகல

காஞ்சனமாலையின் பந்தடி

[தொகு]

அன்ன மென்னடை யவந்திகை யுவந்தவள் 65
கண்மணி யனைய வொண்ணுதற் பாவை
காஞ்சன மாலை வாங்குபு கொண்டு
பிடித்த பூம்பந் தடித்துவிசும் பேற்றியும்
அடித்த பந்தால் விடுத்தவை யோட்டியும்
குழன்மேல் வந்தவை குவிவிரற் கொளுத்தியும் 70
நீழன்மணி மேகலை நேர்முகத் தடித்தும்
கண்ணியிற் சார்த்தியுங் கைக்குட் போக்கியும்
உண்ணின்று திருத்தியும் விண்ணுறச் செலுத்தியும்
வேயிருந் தடந்தோள் வெள்வளை யார்ப்ப
ஆயிரத் தைந்நூ றடித்தன ளகலச் 75

அயிராபதியின் பந்தடி

[தொகு]

செயிர்தீர் பதுமைதன் செவிலித் தாய்மகள்
அயிரா பதியெனு மம்பணைத் தோளி
மானேர் நோக்கிற் கூனி மற்றவள்
தானேர் வாங்கித் தனித்தனி போக்கி
நாற்றிசைப் பக்கமு நான்கு கோணமும் 80
காற்றினுங் கடிதாக் கலந்தன ளாகி
அடித்தகைத் தட்டியுங் குதித்துமுன் புரியா
அகங்கை யொட்டியும் புறங்கையிற் புகுத்தியும்
தோண்மேற் பாய்ச்சியு மேன்மேற் சுழன்றும்
கூன்மேற் புரட்டியுங் குயநடு வொட்டியும் 85
வாக்குறப் பாடியு மேற்படக் கிடத்தியும்
நோக்குநர் மகிழப் பூக்குழன் முடித்தும்
பட்ட நெற்றியிற் பொட்டிடை யேற்றும்
மற்றது புறங்கையிற் றட்டின ளெற்றியும்
முன்னிய வகையான முன்னீ ராயிரங் 90
கைந்நனி யடித்துக் கையவள் விடலும்

விச்சுவலேகையின் பந்தடி

[தொகு]

பேசிய முறைமையி னேசா நல்லெழில்
வாசவ தத்தைக்கு வலத்தோ ளனைய
அச்சமில் காரிகை விச்சுவ லேகையென்
றுற்ற நாமப் பொற்றொடிக் குறளி 95
யானிவ ணிற்பக் கூனியைப் புகழ்தல்
ஏலா தென்றவள் சேலந் திருத்திக்
கருவிக் கோனனி கைப்பற் றினளாய்
முரியுங் காலைத் தெரிய மற்றதிற்
றட்டின ளொன்றொன் றுற்றன ளெழுப்பிப் 100
பத்தியிற் குதித்துப் பறப்பன ளாகியும்
வாங்குபு கொண்டு வானவிற் போல
நீங்கிப் புருவ நெரிவுட னெற்றியும்
முடக்குவிர லெற்றியும் பரப்புவிரற் பாய்ச்சியும்
தனித்துவிரற் றரித்து மறித்தெதி ரடித்தும் 105
குருவிக் கவர்ச்சியி னதிரப் போக்கியும்
அருவிப் பரப்பின் முரியத் தாழ்த்தியும்
ஒருபாற் பந்தி னொருபாற் பந்துற
இருபாற் றிசையு மியைவன ளாகிப்
பாம்பொழுக் காக வோங்கின வோட்டியும் 110
காம்பிலை வீழ்ச்சியி னாங்கிழித் திட்டும்
முன்னிய வகையான் முன்னீ ராயிரத்
தைந்நூ றடித்துப் பின்னவள் விடலும்

ஆரியையின் பந்தடி

[தொகு]

சீரியல் பதுமைதன் சிந்நைக் கொட்டெனும்
காரியை மயிலன வாரியை புகுதா 115
நுணங்குகொடி மருங்கு நோவ வசைஇ
மணங்கமழ் கூந்தல் வகைபெற முடித்தும்
சூடக மேற்றியும் பாடகந் துருத்தியும்
நாடக மகளிரி னன்கன முலாவியும்
இருகையு மடிப்ப விசும்பொடு நிலத்திடை 120
திரிபுவீழ் புட்போ லொருவயி னில்லா
தெழுந்துவீழ் பந்தோ டெழுந்துசெல் வனள்போற்
கருதரு முரிவொடு புருவமுங் கண்ணும்
வரிவளைக் கையு மனமு மோட
அரியார் மேகலை யார்ப்பொடு துளங்கவும் 125
வருமுலை துளும்பவுங் கூந்த லவிழவும்
அரிமலர்க் கோதையொ டணிகலஞ் சிதறவும்
இருந்தன ணின்றன ளென்பதை யறியார்
பரந்த பஃறோள் வடிவின ளாகித்
திரிந்தன ளடித்துத் திறத்துளி மறித்தும் 130
முரியுந் தொழிலொடு மூவாயி ரங்கை
முறையி னேற்றிப் பந்துநிலத் திடலும்

வாசவதத்தை தன் தோழியரை நோக்கல்

[தொகு]

வரிநெடும் பந்து வந்தெதிர் கொள்ளுநர்
ஒருவரு மின்றி நின்றுழிப் பொருவரும்
வாளேர் தடங்கண் வாசவ தத்தை 135
கோளேர் மதிமுகங் கோட்டி நோக்கக்

கோசல நாட்டின் பெருமை

[தொகு]

கடையோர் போலக் காமத்திற் கழுமா
திடையோ ரியல்பின தாகி யில்ல
துடையோர்க் குரிய வுதவி நாடி
ஆனாச் சிறப்பின் யாவர்க் காயினும் 140
தானப் பெரும்பயந் தட்டுத லின்றி
ஓசை யோடிய வுலவாச் செல்வத்துக்
கோசல வளநாட்டுக் கோமாற் பிழையாத்

கோசலத்தரசன் மகள் வருணனை

[தொகு]

தேவியர்க் கெல்லாந் தேவி யாகிய
திருத்தகு கற்பிற் றீங்குயிற் கிளவி 145
வரிக்குழற் கூந்தல் வசுந்தரி தன்மகள்
மானே யன்ன மயிலே மால்வரைத்
தேனே பவளந் தெண்கட னித்திலம்
கயலே காயதள் புயலே பொருவிற்
பையே பொற்றுடி படைநவில் யானைக் 150
கையே குரும்பை கதிர்மதி வேயே
நோக்கினு மொதுக்கினு மாக்கே ழணிந்த
சாயல் வகையினுஞ் சால்புடை மொழியினும்
ஆசில் வாயினு மணிபெற நிரைத்த
பல்லினுங் கண்ணினு மெல்விரல் வகையினும் 155
நறுமென் குழலினுஞ் செறிநுண் புருவத்
தொழுக்கினு மிழுக்கா வல்குற் றடத்தினும்
மெல்லிய விடையினு நல்லணி குறங்கினும்
குற்றமின் முலையினு முகத்தினுந் தோளினும்
மற்றவை தொலையச் செற்றொளி திகழத் 160
தனக்கமை வெய்திய தவளையங் கிண்கிணி
வனப்பெடுத் துரைஇ வையகம் புகயினும்
புகழ்ச்சி முற்றாப் பொருவரு வனப்பிற்
றிருக்கண் டன்ன வுருக்கிளர் கண்ணி
கோசலத் தரசன் கோமகட் பூவணி 165
வாசச் சுரிகுழன் மாணிழை யொருத்தியென்
றாங்கொரு காரணத் தவள்வயி னிருந்தோள்

கோசலத்தரசன் மகளின் பந்தடி

[தொகு]

பூங்குழை தோற்றது பொறாஅ நிலைமையள்
எழுந்தன டேவியைப் பணிந்தனள் புகுந்து
மடந்தைய ராடலை யிகழ்ந்தன ணகையா 170
வந்தரி வையரெதிர் வரசதி வகையாற்
பந்தா டிலக்கண் நின்றுபல பேசி
இளம்பிறைக் கோடெனக் குறங்கிரு பக்கமும்
விளங்கியேர் பிறழ வேற்கணி யிருந்து
முரண்டெழு வனப்பின் மூவே ழாகிய 175
திரண்டவொண் பந்து தெரிவன ளாகி
ஓங்கிய வாடலி னொன்றிது வாகலிற்
றான்சம நின்ற பாங்குறப் புகுந்து
மண்டல மாக்கி வட்டணை முகத்தே
கொண்டனள் போக்கிக் குறிவயிற் பெயர்த்துப் 180
பூவீழ்த் தெழுப்பிப் புறங்கையின் மற்றவை
தான்மறித் தடித்துத் தகுதியி னெழவெழக்
காம தேவியர் காண்பன ருவப்பப்
பூமி தேவியிட் புறம்போ வனள்போற்
பைய வெழுவோள் செய்தொழிற் கீடாக் 185
கையுங் காலு மெய்யு மியையக்
கூடுமதி முகத்திடைப் புருவமுங் கண்ணும்
,,,,,,
ஆடன் மகளி ரவிநயம் வியப்பவும்
பேசிய விலயம் பிழையா மரபிற்
பாடன் மகளிர் பாணி யளப்பவும் 190
மருவிய கதியிற் கருவிக் கூற்றோர்
இருபதம் பெழர்க்கு மியல்கொண் டாடவும்
சிந்தை பெயராத் திறத்திற் மவையவை
பந்தாட் டியலோர் தந்தமி லுவப்பவும்
ஓதிய முறைமையின் யாதுங் காணார் 195
தேவிய ரிருவருந் திகைத்தன ரிருப்பவும்
காயதண் முகிழ்நனி கவற்றுமெல் விரலின்
ஏந்தின ளெடுத்திட் டெறிவுழி முன்கையிற்
பாய்ந்தவை நிலத்தினும் விசும்பினு மோங்கிச்
சூறை வளியிடைச் சுயலிலை போல 200
மாறுமா றெழுந்து மறிய மறுகி
ஏறுப விழிபவா காய நிற்பன
வேறுபடு வனப்பின் மும்மைய வானவை
ஏர்ப்பொலி வளைக்கை யிரண்டே யாயினும்
தேர்க்கா லாழியிற் சுழன்றவை தொழில்கொள 205
ஓடா நடவா வொசியா வொல்காப்
பாடாப் பாணியி னீடுயிர்ப் பினளாய்க்
கண்ணின் செயலினுங் கையின் றொழிலினும்
விண்ணவர் காணினும் வீழ்வர்கொல் வியந்தெனப்
பாடகத் தரவமுஞ் சூடகத் தோசையும் 210
ஆடுபந் தொலியுங் கேட்பி னல்லதை
ஐயபந் தெழவெழ வதனுட னெழுதலிற்
கையுங் காலு மெய்யுங் காணார்
மண்ணினள்விண்ணின ளென்றறி யாமை
ஒண்ணுதன் மாதரை யுள்ளுழி யுணரும் 215
தன்மையு மரிதெனத் தனித்தனி மயங்கி
மாயங் கொல்லிது மற்றொன் றில்லென
ஆய நவின்றமை யறிந்தன ளாகிச்
சொல்லிய மகளி ரெல்லாங் காணச்
சில்லரிக் கண்ணி மெல்லென முரியாச் 220
செந்தளிர் பொருவச் சிலந்த காயாற்
கந்துக மேந்திக் கசிந்த கோதைக்கு
மிகைக்கை காணார் நகைப்படு மவளென
உகைத்தெழு பந்தி னுடனெழு வனபோற்
சுழன்றன தாமங் குழன்றது கூந்தல் 225
அழன்றது மேனி யவிழ்ந்தது மேகலை
எழுந்தது குறுவிய ரிழிந்தது சாந்தம்
ஓடின தடங்கண் கூடின புருவம்
அங்கையி னேற்றும் புறங்கையி னோட்டியும்
தங்குற வளைத்துத் தான்புரிந் தடித்தும் 230
இடையிடை யிருகா றெரிதர மடித்தும்
அரவணி யல்குற் றுகினெறி திருத்தியும்
நித்திலக் குறுவியர் பத்தியிற் றுடைத்தும்
பற்றிய கந்துகஞ் சுற்றுமுறை யுரைத்தும்
தொடையுங் கண்ணியு முறைமுறை யியற்றியும் 235
அடிமுதன் முடிவரை யிழைபல திருத்தியும்
படிந்தவண் டெழுப்பியுங் கிடந்தபந் தெண்ணியும்
தேமலர்த் தொடைய றிறத்திறம் பிணைத்தும்
பந்துவர நோக்கியும் பாணிவர நொடித்தும்
சிம்புளித் தடிந்துங் கம்பிதம் பாடியும் 240
ஆழியென வுருட்டியுந் தோழியொடு பேசியும்
சாரிபல வோட்டியும் வாழியென வாழ்த்தியும்
அந்தளிர்க் கண்ணி யவந்திகை வெல்கெனப்
பைந்தொடி மாதர் பற்பல வகையால்
எண்ணா யிரங்கை யேற்றின ளேற்றலும் 245

வாசவதத்தையின் எண்ணம்

[தொகு]

கண்ணார் மாதர் மதிமுகங் காணிற்
காலன் மன்னன் கலங்கலு முண்டெனத்
தேவியு முணர்வா டீதென நினைஇ

உதயணன் கோசலத்தரசன் மகளை விரும்பல்

[தொகு]

நின்ற வளவிற் சென்றவண் முகத்தே
ஒன்றிய வியல்போ டொன்றுக் கொன்றவை 250
ஒளித்தவும் போலுங் களித்தவும் போலும்
களித்தவு மன்றி விளித்தவும் போலும்
வேலென விலங்குஞ் சேலென மிளிரும்
மாலென நிமிருங் காலனைக் கடுக்கும்
குழைமே லெறியுங் குமிழ்மேன் மறியும் 255
மலருங் குவியுங் கடைசெல வளரும்
கழலு நிற்குஞ் சொல்வன போலும்
கழுநீர் பொருவிச் செழுநீர்க் கயல்போல்
மதர்க்குந் தவிர்க்குஞ் சுருக்கும் பெருக்கும்
இவைமுத லினியன வவிநயப் பல்குறி 260
நவையற விருகண் சுவையோடு தோன்ற
நீலப் பட்டுடை நிரைமணி மேகலை
கோலமொ டிலங்கத் தானுயிர்ப் பாற்றி
ஓடரிக் கண்ணி யுலவர நோக்கிப்
பூண்டிகழ் கொங்கைப் புயலேர் கூந்தல் 265
மாண்குழை புதுநலங் காண்டகச் சென்ற
உள்ளந் தன்னை யொருப்படுக் கல்லா
வெள்ளத் தானை வேந்தன் பெயர்ந்து
பிடிமிசைத் தோன்றலும் பேதையர் தத்தம்
இடவயிற் னெயர்ந்தன ரெழுந்தனர் விரைந்தென். 270

4 12 பந்தடி கண்டது முற்றிற்று.