பெருங்கதை/4 3 யாழ் பெற்றது

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
  • பாடல் மூலம்

4 3 யாழ் பெற்றது

பத்திராபதியின் என்பு முதலியவற்றைக் கொணரும்படி உதயணன் சிலரை அனுப்பல்[தொகு]

பாயநன் னாடு பைத றீர்ந்தபின்
ஏயர் பெருமகன் சேயது நோக்கி
விசையுடை யிரும்பிடி வீழ்ந்த தானம்
அசைவி லாளர்க் கறியக் கூறி
என்புந் தோலு முள்ளவை யெல்லாம் 5
நன்கன நாடிக் கொண்டனிர் வம்மினென்
றங்கவர்ப் போக்கிய பின்றை யப்பால்

பத்திராபதி வீழ்ந்த இடத்தில் அதன் வடிவமெடுப்பித்துப் பூசை முதலியவற்றை நிகழ்த்துவித்தற்கு உதயணன் முயலுதல்[தொகு]

வெங்கட் செய்தொழில் வேட்டுவத் தலைவரொடு
குன்றச் சாரற் குறும்பரைக் கூஉய்
அடவியுள் வீழ்ந்த கடுநடை யிரும்பிடி 10
நம்மாட் டுதவிய நன்னர்க் கீண்டொரு
கைம்மா றாற்றுத லென்று மின்மையின்
உதவி செய்தோர்க் குதவா ராயினும்
மறவி யின்மை மாண்புடைத் ததனாற்
கோடுயர் வரைப்பினோர் மாட மெடுப்பித் 15
தீடமை படிவ மிரும்பிடி யளவா
ஏற்ப வெடுப்பித் தெல்லியுங் காலையும்
பாற்படல் பரப்பிப் பணிந்துகை கூப்பி
வழிபா டாற்றி வழிச்செல் வோர்கட்
கழிவுநன் ககல வரும்பத மூட்டாத் 20
தலைநீர்ப் பெருந்தளி நலனணி கொளீஇ
எனைவ ராயினு மினைவோர்க் கெல்லாம்
முனைவெந் துப்பின முன்னவ ணீகென
விருத்தி கொடுத்துத் திருத்தகு செய்தொழிற்
றச்ச மாக்களொடு தலைநின்று நடாஅம் 25
அச்ச மாக்களை யடையப் போக்கிப்
பத்திரா பதியின் படிம மிடூஉஞ்
சித்திர கார்ருஞ் செல்கெனச் சொல்லி
ஆராக் கவலையி னதுபணித் ததற்பின்

பத்திராபதியின் என்பு முதலியன கொணர்ந்தார்க்கு உதயணன் பொருள்ளித்தல் முதலியன[தொகு]

ஊரக வரைப்பி னுள்ளவை கொணர்ந்தார்க் 30
கின்னுரை யமிழ்தமொடு மன்னவ னீத்துக்
கோப்புக வமைத்த கொற்ற வாயிலும்
யாப்புற வதன்பெயர் பாற்படக் கொளீஇ
வாயின் முன்றி லவைப்புற மாகச்
சேயுயர் மாடஞ் சித்திரத் தியற்றி 35
உயிர்பெற வுருவ மிடீஇ யதனைச்
செயிர்தீர் சிறப்பொடு சேர்ந்தவண் வழிபடு
….
நான்மறை யாளர் நன்றுண் டாகெனத்
தாமுறை பிழையார் தலைநின் றுண்ணும்
சாலையுந் தளியும் பாலமைத் தியற்றிக் 40
கூத்திய ரிருக்கையுஞ் சுற்றிய தாகக்
காப்பிய வாசனை கலந்தவை சொல்லி
எண்ணிய துன்னு மேண்டொழி லறாஅக்
குழாஅ மக்களொடு திங்க டோறும்
விழாஅக் கொள்கென வேண்டுவ கொடுத்துத் 45
தன்னகர்க் கடப்பா டாற்றிய பின்னர்

அருஞ்சுகன் இயல்பு[தொகு]

மதிலுஞ் சேனையுண் மாணி யாகுய
அதிர்வில் கேள்வி யருஞ்சுக னென்னும்
அந்த ணாளன் மந்திரம் பயின்றநல்
வகையமை நன்னூற் பயனனி பயிற்றித் 50
தலமுத லூழியிற் றானவர் தருக்கறப்
புலமக ளாளர் புரிநரப் பாயிரம்
வலிபெறத் தொடுத்த வாக்கமை பேரியாழ்ச்
செலவுமுறை எல்லாஞ் செய்கையிற் றெரிந்து
மற்றை யாழுங் கற்றுமுறை பிழையான் 55
பண்ணுந் திறனுந் திண்ணிதிற் சிவணி
வகைநயக் கரணத்துத் தகைநய நவின்று
நாரத கீதக் கேள்வி நுனித்துப்
பரந்தவெந் நூற்கும் விருந்தின னன்றித்
தண்கோ சம்பிதன் றமர்நக ராதலிற் 60
கண்போற் காதலர்க் காணிய வருவோன்
சதுவகை வேதமு மறுவகை யங்கமும்
விதியமை நெறியிற் பதினெட் டாகிய
தான விச்சையுந் தான்றுறை போகி
ஏனைக் கேள்வியு மிணைதனக் கில்லவன் 65
கார்வளி முழக்கி னீர்நசைக் கெழுந்த
யானைப் பேரினத் திடைப்பட்டயலதோர்
…..

அருஞ்சுகன் வேங்கைமரத்திலேறி நோக்குதல்[தொகு]

இமையோ ருலகிற் கேணி யாகிய
கான வேங்கைக் கவர்சினை யேறி
அச்ச மெய்தி யெத்திசை மருங்கினும் 70
நோக்கின னருகே யாக்க மின்றி

உதயணனது யாழின் நிலை[தொகு]

இறைவற் பிரிந்த வில்லோள் போலவும்
கருங்கக ஞெகிழ்ந்து….
….
பத்தற் கேற்ற பசையமை போர்வை
செத்துநிறங் கரப்பச் செழுவளங் கவினிய 75
கொய்தகை கொடியொடு மெய்யுற நீடிய
கரப்பமை நெடுவேய் நரப்புப்புறம் வருடத்
தாஅந் தீமெனத் தண்ணிசை முரலத்
தீந்தொடைத் தேனினஞ் செற்றி யசைதர
வடிவேற் றானை வத்தவர் பெருமகன் 80
படிவ விரதமொடு பயிற்றிய நல்லியாழ்
கடிமிகு கானத்துப் பிடிமிசை வழுக்கி
வீழ்ந்த வெல்லை முதலா வென்றும்
தாழ்ந்த தண்வளி யெறிதொறும் போகா
அந்தர மருங்கி னமரர் கூறும் 85
மந்திரங் கேட்குஞ் செவிய போலக்
கையுங் காலு மாட்டுதல் செய்யா
மெய்யொடு மெய்யுறக் குழீஇ மற்றவை
பிறப்புணர் படைபோ லிறப்பவு நிற்ப
… வேழ மெல்லாம் 90
சோர்ந்து கடுங்கதஞ் சுருங்குபு நீங்கக்

அருஞ்சுகன் செயல்[தொகு]

கிடந்தது கண்டே நடுங்குவன னாகி
யானை நீங்கலுந் தானவட் குறுகிக்
கின்னர ரிட்டன ராயினு மியக்கர்
மெய்மறந் தொழிந்தன ராயினு மேலைத் 95
தேவ ருலகத் திழிந்த தாயினும்
யாவ தாயினும் யான்கொள றுணிந்தனென்
வலியா தெனக்கு வம்மி னீரெனப்
பலியார் நறுமலர் பற்பல தூஉய்
வழுக்கா மரபின் வழுத்தினன் கொண்டு 100
கான நீந்திச் சளனை வேந்தன்
அழுங்கலி லாவணச் செழுங்கோ சம்பி
மன்னவன் கோயி றுன்னிய வொருசிறை
இன்பல செற்றமொடு நன்கனங் கெழீஇத்
தண்கெழு மாலைத் தன்மனை வரைப்பில் 105
இன்ப விருக்கையுள் யாழிடந் தழீஇ
மெய்வழி வெந்நோய் நீங்கப் பையெனச்
செவ்வழி யியக்கலிற் சேதியர் பெருமகன்

உதயணன் ஆராயந்து துணிதல்[தொகு]

வழிப்பெருந் தேவியொடு வான்றோய் கோயிற்
பழிப்பில் பள்ளியுட் பயின்றுவிளை யாடி 110
அரிச்சா லேக மகற்றின னிருந்துழி
ஈண்டையெம் பெருமகன் வேண்டா யாகி
மறந்தனை யெம்வயின் வலிதுநின் மனனென
இறந்தவை கூறி யிரங்குவ தொப்பத்
தொடைப்பெரும் பண்ணொலி துவைத்துச்செவிக் கிசைப்பக் 115
கொடைப்பெரு வேந்தன் குளிர்ந்தன னாகியென்
படைப்பருங் பேரியாழ்ப் பண்ணொலி யிதுவென்
ஓர்த்த செவியன் றேர்ச்சியிற் றெளிந்து

உதயணன் செயல்[தொகு]

மெய்காப் பாளனை யவ்வழி யாய்வோன்
மருங்கறைக் கிடந்த வயந்தக குமரன் 120
விரைந்தனன் புக்கு நிகழ்ந்ததை யென்னெனக்
கூட்டமை வனப்பிற் கோட பதிக்குரல்
கேட்டனன் யானுங் கேண்மதி நீயும்
விரைந்தனை சென்றுநம் மரும்பெறற் பேரியாழ்
இயக்கு மொருவனை யிவட்டர னீயென 125

வயந்தகன் செயல்[தொகு]

மயக்கமில் கேள்வி வயந்தக னிழிந்து
புதிதின் வந்த புரிநூ லாளன்
எதிர்மனை வரைப்பக மியைந்தனன் புக்கு
வீறமை வீணைப் பேறவன் வினாவ
நருமதை கடந்தோர் பெருமலைச் சாரற் 130
பெற்ற வண்ண மற்றவ னுரைப்பக்
கொற்றவன் றலைத்தாட் கொண்டவன் குறுகி
வேற்றோன் பதிநின் றாற்றலிற் போந்த
அன்றை நள்ளிரு ளரும்பிடி முறுகக்
குன்றகச் சாரற் றென்றிசை வீழ்ந்த 135
பேரியா ழிதுவெனப் பெருமகற் குரைப்பத்

உதயணன் செயல்[தொகு]

தாரார் மார்பன் றாங்கா வுவகையன்
வருகவெ னல்லியாழ் வத்தவ னமுதம்
தருகவென் றனித்துணை தந்தோய் நீயிவண்
வேண்டுவ துரையென றாண்டவன் வேண்டும் 140
அருங்கல வெறுக்கையொடு பெரும்பதி நல்கி
அந்நக ரிருக்கப் பெறாஅய் நீயெனத்
தன்னக ரகத்தே தக்கவை நல்கி
உலவா விருப்பொடு புலர்தலை காறும்
உள்ளியு முருகியும் புல்லியும் புணர்ந்தும் 145
பள்ளிகொண் டனனாற் பாவையை நினைந்தென்.

4 3 யாழ் பெற்றது முற்றிற்று.