உள்ளடக்கத்துக்குச் செல்

பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்/இஸ்லாமியப் புத்தாண்டின் புனிதமிகு முஹர்ரம்

விக்கிமூலம் இலிருந்து
இஸ்லாமியப் புத்தாண்டின்
புனிதமிகு முஹர்ரம்


இஸ்லாமியப் புத்தாண்டின் முதல் மாதமாக அமைந்திருப்பது புனிதமிகு ‘முஹர்ரம்’ மாதமாகும். இஸ்லாமிய மாதங்கள் பன்னிரண்டில் முதல்மாதமாக முஹர்ரமும் இறுதி மாதமாக துல்ஹஜ்ஜும் அமைந்துள்ளன.

‘ஹிஜ்ரி’ ஆண்டு, நபிகள் நாயகம் முஹம்மது நபி (சல்) அவர்களின் வாழ்வில் நடந்த மிக முக்கியமான நிகழ்ச்சி யொன்றை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டதாகும்.

இஸ்லாமிய நெறி நிலைபெறுவதற்குப் பன்னெடுங் காலத்திற்கு முன்பிருந்தே, அராபியர்கள் தங்கள் சமுதாயப் பொது வாழ்வில் நிகழ்ந்த முக்கிய நிகழ்ச்சியை ஆதாரமாகக் கொண்டு, கணக்கிட்டு, அதற்கு வெவ்வேறு பெய ரிட்டு அழைத்து வந்தனர். ‘அனுமதி ஆண்டு’ என்றும் ‘நில அசைவு ஆண்டு’ என்றும் ‘யானை ஆண்டு’ என்றும் பல ஆண்டுக் கணக்குகளை அவர்கள் வைத்திருந்தனர். இவ்வாறு பல்வேறு பெயர்களில் ஆண்டுக் கணக்குகள் அராபியர்களிடம் நிலவி வந்தபோதிலும் இஸ்லாம் நிலை பெறத் துவங்கி, மக்களிடையே நன்கு பரவி அழுத்தம் பெறத் தொடங்கிய கால கட்டத்திலேயே, இஸ்லாமியருக்கென ஒரு புதிய ஆண்டை உருவாக்கிக் கொள்ள வேண்டிய அவசர, அவசியத் தேவை ஏற்பட்டது.

இரண்டாவது கலீஃபாவாக இருந்த உமர் (ரலி) அவர்கள் ஒரு சமயம் முக்கியக் குறிப்பு ஒன்றைத் தயாரித்து அதில் ‘ஷஃபான்’ மாதம் என்று குறித்தார்கள். ஆனால், உமர் (ரலி) அவர்கட்கு உடனே ஒரு ஐயப்பாடும் எழுந்தது. நடைமுறையில் இருந்துவரும் மூன்று வகையான ஆண்டுகளில் எந்த ஆண்டின் ‘ஷஃபான்’ மாதம் என வருங்காலத்தில் இக்குறிப்பைக் காண்பவர்கள் விளங்கிக் கொள்ள முடியும் எனும் ஐயம் அழுத்தமாக அவர் உள்ளத்தில் எழுந்தது. எனவே, முஸ்லிம்கள் கடைப்பிடிக்கத்தக்க புதிய இஸ்லாமிய ஆண்டை உருவாக்க வேண்டியதன் அவசியம் பற்றிச் சிந்திக்கலானார். அதை வலியுறுத்தும் வகையில் மற்றுமொரு சந்தர்ப்பம் ஏற்பட்டது. கலீஃபா உமர் (ரலி) அவர்கள் அடிக்கடி பல்வேறு மாநில ஆளுநர்களுக்குக் கடிதம் எழுத வேண்டியிருந்தது. அக்கடிதங்களில் தேதி ஏதும் குறிப்பிடாததால் ஆளுநர்கட்குக் குழப்ப மேற்பட்டது. இக்குறையை கலீஃபா உமர் (ரலி) அவர்கள் முஸ்லிம்களுக்கென புதிய இஸ்லாமிய ஆண்டை உருவாக்க வேண்டியதன் இன்றியமையாமையை உணர்ந்தார்.

இதைப்பற்றித் தன் தோழர்களிடம் ஆலோசனை கேட்டார். சிலர் பாரசீக ஆண்டைப் பின்பற்றி அமைக்கலாம் என்றனர். வேறு சிலர் பெருமானார் நபிகள் நாயகம் (சல்) பிறந்த நாளையே இஸ்லாமிய ஆண்டின் தொடக்கமாகக் கொள்ளலாம் என்றனர். அவ்வாலோசனையில் கலந்து கொண்ட பெருமானாரின் மருகர் அலி (ரலி) அவர்கள் அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் மக்காவினின்றும் மதினா சென்ற நாளிலிருந்து புதிய இஸ்லாமிய ஆண்டைத் துவங்கலாம் எனக் கூறினார். இந்த ஆலோசனை எல்லோருக்கும் ஏற்புடைத்ததாக இருந்ததால் கலீஃபா உமர் (ரலி) அவர்கள், பெருமானார் மக்காவி லிருந்து மதினா நோக்கி, ‘ஹிஜ்ரத்’ செய்த நிகழ்ச்சி நடந்த நாளை அடிப்படையாகக் கொண்டு ‘ஹிஜ்ரி’ ஆண்டு துவங்கப்பட்டது.

ஆண்டின் முதல் மாதமாக முஹ்ரம்
ஆன காரணம்

‘ஹிஜ்ரா’ என்ற ‘சொல்லுக்கு இடம் மாறிச் செல்லுதல்’ என்பது பொருளாகும். பெருமானார் மக்கமாநகரிலிருந்து மதினமாநகர் நோக்கி இடம் மாறிச் சென்றது. ‘ரபியுல் அவ்வல்’ மாதத்திலாகும். அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் மக்கமா நகரிலிருந்து ரபியுல் அவ்வல் மாதம் முதல் தேதியன்று புறப்பட்டு சரியாகப் பன்னிரண்டாம் தேதி வெள்ளிக்கிழமை மதினமா நகருள் புகுந்தார்கள். ஆனால் ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதம் பெருமானார் புறப்பட்ட ரபியுல் அவ்வல் மாதம் முதல் தேதியிலிருந்தோ அல்லது மதினமா நகர் போய்ச் சேர்ந்த ரபியுல் அவ்வல் பன்னிரண்டாம் தேதியிலிருந்தோ தொடங்காமல், முன்பாகவுள்ள 69 நாட்களைப் பின்னுக்குத் தள்ளி ‘முஹர்ரம்’ முதல் நாளை, ஹிஜ்ரி ஆண்டின் துவக்க நாளாக, வருடப் பிறப்பு நாளாகக் கொண்டதற்குச் சிறப்பான காரணம் உண்டு.

உழைப்பை உயர்த்திப் போற்றுவது இஸ்லாம். ஒவ்வொரு மனிதனும் கடுமையாக உழைத்தே ஊதியம் தேடி, தம் வாழ்வை நடத்தவேண்டும் எனப் போதித்தவர் பெருமானார் அவர்கள். அஃது உடல் உழைப்பாகவோ மன உழைப்பாகவோ இருக்கலாம். அக்கால அரபு மக்களின் முக்கியத் தொழிலாக அமைந்திருந்தது வாணிபத் தொழிலாகும்.

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஐந்தாவது இறுதிக் கடமையான ஹஜ் கடமையை இனிது வேற்றிய முஸ்லிம் பெருமக்கள், தங்கள் வாணிக நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்பான காலமாக முஹர்ரம் மாதம் அமைந்திருந்ததால் ‘ரபியுல் அவ்வல்’ மாதத்திற்குப் பதிலாக வாணிபத்திற்கான மாதமாகிய ‘முஹர்ரம்’ மாதம் ‘ஹிஜ்ரி’ ஆண்டின் முதல் மாதமாக அமைக்கப்பட்டது. இஸ்லாமிய நெறியும் அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்களும் உழைப்புக்குத் தந்த உன்னதத்தை உலக மக்களுக்கு நினைவூட்டும் மாதமாகவும் ‘முஹர்ரம்’ மாதம் அமைந்திருக்கம் பாங்கு எண்ணியெண்ணி வியந்து போற்றத்தக்கதாகும்.

அமைதி போற்றும் புனிதமிகு
மாதம் முஹர்ரம்

இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பிருந்தே அரபிகள் ‘முஹர்ரம்’ மாதத்தைப் புனிதமிகு மாதமாகக் கருதிவந்தார்கள். இம்மாதத்தின் கோபம், குரோதம்,வன்மம், பலாத் காரம், வன்முறை போன்ற உணர்ச்சிகளை நெஞ்சத்திலிருந்து அறவே நீக்கி அன்பு, அருள் அமைதி, சாந்தம், மகிழ்ச்சி ஆகிய உணர்வுகளை நெஞ்சத்தில் நிரப்பி வாழ வேண்டிய மாதமாக இம்மாதத்தைக் கருதி வந்தார்கள்.

இம்மாதத்தில் சண்டை, சச்சரவுகள் இல்லாது வாழ்வதில் கண்ணுங் கருத்துமாக இருந்தார்கள். போர் செய்வதை அறவே விலக்கி வாழ்ந்து வந்தார்கள். எனவே, வன் செயல் உணர்வற்ற, போர் விலக்கப்பட்ட, அதாவது ஹராமாக்கப்பட்ட புனிதமாதம் எனும் பொருளிலேயே ‘முஹர்ரம்’ எனும் பெயரமைந்துள்ளது.

மேலும், எல்லாம் வல்ல இறைவனாகிய அல்லாஹTத் ஆலா தன் திருமறையாம் திருக்குர்ஆனில் புனித மாதங்களைப் பற்றி சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளான்.

“நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை (ஒர் ஆண்டிற்கு) பன்னிரண்டுதான். இவ்வாறே வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்து அல்லாஹ்வால் கற்பனை செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 4 மாதங்கள் சிறப்புற்றவை. இது தான் நேரான மார்க்கமாகும். ஆகவே, இவற்றில் (நீங்கள் போர் புரிந்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ள வேண்டாம்” (9:36) என இறைவன் தன் திருமறையில் அழுத்தத்திருத்தமாக, இம்மாதத்தில் போர்புரியக் கூடாதென விதித்துள்ளான்.

இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி (சல்) அவர்கள், புனித மாதங்கள் நான்கு எனவும் அம்மாதங்களில் தவிர்க்க முடியாத நிலையில், தற்காப்புக்காக அன்றி மற்ற எக்காரணத்திற்காகவும் சண்டை, சச்சரவு கூடாது எனக் கூறியுள்ளார்கள். அந்த நான்கு மாதங்களில் முஹர்ரம் மாதமும் ஒன்று என்பது இம்மாதத்தின் புனிதமிகு தனித் தன்மையைக் காட்டுவதாக உள்ளது.

மறுமை நினைவூட்டும் முஹர்ரம்

அமைதி போற்றும் மாதமாக மட்டுமல்லாது மறுமை தினமாகிய இறுதித் தீர்ப்பு நாளை நினைவூட்டி மனித குலத்தை அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் மாதமாகவும் முஹர்ரம் மாதம் அமைந்துள்ளது.

மனுக்குலத்தின் இறுதித் தீர்ப்பு முஹர்ரம் 10-ம் நாளில் அமையும் என்பது இறைவாக்காகும்.

“என்றைக்குமாக நிலைத்திருக்கும் தன்மையற்றது இவ்வுலகம். இதில் இடம் பெற்றுள்ள எல்லாவற்றுடனும் ஒரு நாள் இந்நிலவுலகம் அழிந்தே தீரும்” என்பது திருமறை தரும் இறைவாக்கு.

எனவே, மனிதப் பிறப்பில் இறுதிக் குறிக்கோள் மறுமை தான். அந்த மறுமை வாழ்வு எவ்வாறு அமையும் என்பது இவ்வுலக வாழ்வினைப் பொருத்துள்ளது. இதுவே, இறைவனின் தூதர்களும் நல்லடியார்களும் தொன்று தொட்டு பின்பற்றி வந்த உண்மையாகும். ஆதலால் மனிதன் இவ்வுலக வாழ்க்கையில் தீயனவற்றைக் களைந்து, நல்லனவற்றைப் பின்பற்றக் கடமைப் பட்டுள்ளான். எவை நல்லவை, எவை தீயவை என்பதை இறைவனின் திருமறையிலிருந்தும், திருத்தூதர்களின் வழிமுறைகளிலிருந்தும் அறியப் பெறலாம். மனிதன் இவ்வுலகில் செய்த நல்ல-தீய நடத்தைகளைப் பற்றித் தீர்ப்பு அளிப்பதற்காக, இறைவன் ஒரு நாளினை நிர்ணயித்துள்ளான். அந்த நாளில் இவ்வுலகங்கள் எல்லாம் அழியப் பெற்று, மனிதர்கள் எல்லோரும் மறுபடியும் உயிர்ப்பிக்கப்படுவர். பிறகு ஒவ்வொருவரின் நடத்தையும் நல்லவை - தீயவை அடிப்படையில் கணக்கிட்டும் எடையிட்டும் இறைவன் தன் தீர்ப்பினை அளிப்பான். அந்தத் தீர்ப்பில் தேறியவர்கள் என்றும் நிலைத்திருக்கக்கூடிய, இன்பகரமான, சொர்க்க வாழ்வினை அடையப் பெறுவர். ஆனால், அந்தத் தீர்ப்பில் தோல்வியுற்றவர்கள் என்றும் வேதனையே தரக்கூடிய நரகத்தில் இடப்படுவர். அந்த மாபெரும் இறுதித் தீர்ப்பு நாள், முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள், வெள்ளிக்கிழமையன்று ஏற்படும் என இறைத் தூதர் நபி பெருமானார் அவர்கள் மொழிந்திருப்பது முஹர்ரம் மாதத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றது.

எண்ணிக்கைக்காக மட்டுமல்ல
எண்ணத்தையும் வளர்க்க

இஸ்லாமிய ஆண்டான ஹிஜ்ரி கணக்கு சந்திரப் பெயர்ச்சியை ஆதாரமாகக் கொண்டு கணிக்கப்படுவதாகும்.

கிருஸ்தவ ஆண்டுக் கணக்குச் சூரியனை அடித்தளமாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது.

சூரியக் கணக்குப்படி ஓராண்டிற்கு 365 நாட்கள். சந்திரக் கணக்குப்படி ஓராண்டிற்கு 354 நாட்கள். இரண்டிற்குமிடையே குறைந்தது 10 நாட்கள் வித்தியாசம் உள்ளது.

இஸ்லாமியப் புத்தாண்டு மாதமான முஹர்ரம் நாட்களைக் குறிப்பதாக மட்டும் அமையாமல் இறை வனின் கட்டளைகளையும் இறைவனுக்கும் மனிதனுக்கு முள்ள நேசத்தையும் அதை அடைவதற்கு நாம் மேற் கொள்ள வேண்டிய நல் உணர்வுகளையும் செயற்பாடுகளையும் நினைவூட்டுவதாகவும் அமைந்துள்ளது எண்ணத் தக்கதாகும்.

மார்க்க அடிப்படை மட்டுமல்ல,
வரலாற்று அடிப்படையிலும்

முஹர்ரம் மாதம் இஸ்லாமிய மார்க்க அடிப்படையிலும் வரலாற்று அடிப்படையிலும் சிறப்புமிக்க மாதமாக அமைந்துள்ளது.

முஹர்ரம் மாதத்தின் முக்கியத்துவத்தை மார்க்க அடிப்படையில் கூறவந்த பெருமானார் (சல்) அவர்கள் ‘முஹர்ரம் மாதத்தின் முதல் நாளில் நோன்பு நோற்பவர்கள் அடுத்த இரண்டு ஆண்டுப் பாவங்களிலிருந்து காக்கப்படுவர் எனக் கூறியுள்ளார்.

‘இம்மாதத்தில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நோன்பு நோற்பவர் கொடிய நரக நெருப்பிலிருந்து, எழுநூறு ஆண்டுப் பயணத் தொலைவிற்கு அப்பாற்படுத்தப்படுவர்’ என அண்ணல் முஹம்மது நபி (சல்) அவர்கள் கூறியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இவ்வாறு இறைவணக்கம் புரிவதற்கும் நோன்பு நோற்றுப் பாவச் செயல்களிலிருந்து விடுபடுவதற்கும் ஏற்ற புனித மாதமாக முஹர்ரம் மாதம் அமைந்துள்ளது.

செங்கடல் பிளந்த நாள்

முஹர்ரம் மாதம் வரலாற்றுச் சிறப்புமிக்க மாதமாக வும் அமைந்துள்ளது. முற்காலத்தில் எகிப்து நாட்டை ‘பிர் அவ்ன்’ (ராம்செஸ்) எனும் கொடுங்கோலன் ஆண்டு வந்தான். மமதையும் செறுக்குமே உருவாயமைந்தவன். தன்னைத் தவிர்த்து வேறு இறைவன் இல்லை என்றும் மக்கள் தன்னையே கடவுளாகக் கருதி வணங்க வேண்டும் என்றும் கட்டளையிட்டான். இதனை ஏற்கத் தயங்கியவர் களைக் கொடுமையாக நடத்தி வந்தான். வணங்க மறுத்தவர்களைக் கொன்று குவித்தான்.

அச்சமயத்தில் இறைதூதரான மூஸா (அலை) (மோசஸ்) அவர்கள் ‘மனிதர்களையும் மற்ற உயிர் வர்க்கங்களையும் உலகையும் படைத்துக் காப்பவன் இறைவனாகிய அல்லாஹ்வே’ என்பதை மக்களிடையே பிரச்சாரம் செய்து வந்தார்கள். இதைக் கண்டு வெகுண்ட கொடுங்கோலன் ‘பிர்அவ்ன்’, தன்னையே கடவுளாக ஏற்று வணங்குமாறு மூஸா நபியைப் பணித்தான். அரசனின் ஆணையை அடியோடு மறுத்த இறைத்தூதர் மூஸா (அலை) அவர்கள், இறைவன் ஒருவனே என்றும், அவனே வணக்கத்திற்குரியவன் என்றும் இறைவனால் படைக்கப்பட்ட எதுவும், அவன் மன்னனாக இருந்தாலும் வணங்கு தற்குரியவன் அல்லவே அல்ல என்றும் கூறி, ஒரே இறை வனாகிய அல்லாஹ்வை வணங்கி உய்தி பெறுமாறு அறிவுறுத்தினார்.

தன்னை வணங்கிப் பணிய மறுத்ததோடு தனக்கு இறைவனைப் பற்றி அறிவுரை கூறிய மூஸா (அலை) அவர்கள் மீது அளவிலா கோபடைந்தான் பிர்அவ்ன். இறைதூதர் மூஸா அவர்களையும் அவரது சமூகத்தைச் சேர்ந்த பனு இஸ்ராயில் கூட்டத்தாரையும் தன் படைகளை ஏவி, அழிக்க ஆணையிட்டான். கொடுங்கோல் மன்னன் பிர்அவ்னின் கொடிய பிடியிலிருந்து விடுபட விரும்பிய இறை தூதர் மூஸா (அலை) அவர்களும் அவர் தம் கூட்டத்தினரும் இறைவனின் விருப்பப்படி எகிப்தை விட்டு வெளியேறிச் சென்றனர். எதிரே செங்கடல் குறுக்கிட்டது. இறை ஆணைப்படி செங்கடல் பிளந்து வழி விட்டது. மூஸா நபியையும் அவரது கூட்டத்தினரையும் பிர் அவ்னின் படைகள் துரத்திச் சென்றனர். மூஸா நபியும் அவரைச் சார்ந்த இறையடியார்களும் அக்கரை சேர்ந்தவுடன் பிளந்து நின்ற கடல் மீண்டும் ஒன்றிணைந்தது. பிளந்து நின்ற செங்கடலுள் துரத்திச் சென்ற கொடுங்கோலன் பிர்அவ்னும் அவனது படையினரும் செங்கடலுள் மூழ்கி மாண்டனர். இந்நிகழ்ச்சி நிகழ்ந்த நாள் முஹர்ரம் பத்தாம் நாள் ஆகும்.

‘ஆஸுரா நாள்’

அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் மதினா நகர் வந்த புதிதில் பனீ இஸ்ராயில் கூட்டத்தைச் சேர்ந்த யூதர்கள் முஹர்ரம் 10 ஆம் நாள் நோன்பு நோற்றிருப்பதைக் கண்டு, அதற்கான காரணத்தை வினவினார்.

கொடுங்கோல் மன்னன் பிர்அவ்னையும் அவனது படையினரையும் செங்கடலில் மூழ்கடித்து, இறை தூதர் மூஸா அவர்களையும் அவரது கூட்டத்தாரையும் காப்பாற்றிய நாள் என்பதால், இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக யூத சமூகத்தவர்கள் முஹர்ரம் பத்தாம் நாளை ‘ஆஸூரா’ தினமாக அனுசரிப்பதாக அண்ணலாரிடம் கூறினார்கள்.

இதைக் கேட்ட பெருமானார் அவர்கள் அவ்விதமானால் நானும் மற்ற முஸ்லிம்களும் மற்றவர்களைவிட மூஸா நபி அவர்களோடு மிக மிக அதிகம் நெருக்கமுடைய வர்கள் என்ற வகையில், இந்த ‘ஆஸூரா’ நோன்பை ஆண்டுதோறும் கடைப்பிடிக்குமாறு முஸ்லிம்களைப் பணித்தார்கள். அன்று முதல் முஹர்ரம் 10ஆம் நாள் உலக முஸ்லிம்கள் அனைவராலும் ஆஸூரா நோன்பு கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது.

சிறப்பு நோன்பு நாள்

ரமளான் நோன்பிற்கு அடுத்தபடியாக சிறப்புமிகு நோன்பாக ஆஸூரா நோன்பு கருதப்படுகிறது. யூதர்கள் ஆஸூரா தினத்தன்று மட்டுமே நோன்பு இருப்பார்கள். ஆனால், பெருமானார் பணித்தபடி ஆஸூராவிற்கு முதல் நாளான முஹர்ரம் 9-ம் நாளோ ஆஸூராவிற்கு அடுத்த நாளான முஹர்ரம் 11-வது நாளோ ஆஸூரா நோன்போடு இணைத்து நோற்க வேண்டும் எனப் பெருமானார் அவர்கள் பணித்துள்ளார்கள். இவ்வாறு ஒரு நாள் அதிகமாக ஆஸூரா நோன்பு நோற்பது ஓராண்டு முழுவதும் நோன்பு நோற்பதற்குச் சமமாகும். அத்துடன் நோன்பு நோற்பவரது ஓராண்டுப் பாவத்திற்குப் பரிகாரம் ஆகும் என்றும் கூறியுள்ளார்கள். இவ்வாறு பெருமானார் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் கூறிய நடைமுறையைப் பின்பற்றி ஒழுகுவது ‘சுன்னத்’ எனும் தகுதியைப் பெறுகிறது.

‘ஆஸூரா நாளின்போது நோன்பு நோற்பது, அன்று ஏழை எளிய மக்களுக்குத் தருமம் தருவது, அனாதைகளான எத்தீம்களை அன்போடு அரவணைத்து அவர்களை மகிழ்ச்சிப் படுத்துவது, மார்க்க ஞானம் மிக்க அறிஞர் பெருமக்களை நாடிச் சென்று காண்பது, தன் குடும்பத்தினருக்காகவும் தன்னைச் சார்ந்தவர்களுக்காகவும் தாராளமாகப் பணம் செலவு செய்வது, அதிகப்படியான நஃபில் தொழுகைகளை இந்நாட்களில் தொழுவது இறையருளை மழையெனப் பெறுவதற்கு வழிகோலும் என்பது பெரியோர் வாக்கு.

படைப்பு நாள்

இஸ்லாமியக் கோட்பாட்டின்படி வானம், பூமி, கதிரவன், சந்திரன், கோளங்கள், சொர்க்கம், நரகம் ஆகிய அனைத்தும் முஹர்ரம் பத்தாம் நாளன்றே படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நாளில்தான் இறைவனின் பேரருளால் முதன் முதலாக உலகில் மழை பெய்தது. மனித குலத்தின் முதல் தந்தையாகிய ஆதாம் (அலை) அவர்களும் அன்னை ஹவ்வாவும் இறைவனால் படைக்கப்பட்டது இதே முஹர்ரம் பத்தாம் நாளன்றுதான். அது மட்டுமல்ல ஆதித் தந்தை ஆதாமும் ஹவ்வாத் தாயாரும் சுவன பதிக்கு இறைவனால் அனுப்பப்பட்டதும் இதே முஹர்ரம் பத்தாம் நாள் அன்று தான்.

நன்றி : தினமணி