பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்/தியாகத்திற்கோர் திருநாள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

தியாகத்திற்கோர் திருநாள்


“ஈதுல் அள்ஹா” பெருநாள் உலகெங்கும் வாழும் முஸ்லிம் பெருமக்களால் தியாகத் திருநாளாக நினைவு கூறப்படுகிறது.

தனக்கென வாழாது
பிறர்க்கென
வாழும் பெற்றியர்

மனிதப் பண்புகளிலேயே மகத்தானது தனக்கென வாழாது பிறர்க்கென வாழும் தகைசால் பண்பேயாகும். இதுவே மனிதனைப் புனிதனாக மாற்றும் பேரருட் பண்பாகும். இதற்க அடித்தளமாக அமைய வேண்டியது தியாக உணர்வாகும். தன்னொத்த மனிதர்களுக்காக அவர்தம் உயர்வுக்காக மற்றொரு மனிதன் தியாகம் செய்ய முனைவது கடமையாகும் என்பது ஆன்றோர் வாக்கு. மனிதனுக்கு மனிதன் இத்தகைய கடப்பாடுடையவன் எனும் போது தன்னைப் படைத்த இறைவனுக்காக மனிதன் தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்வதைத் தன் உயிர்ப் பண்பாகக் கொண்டிருத்தல் வேண்டும் என்பதை நினைவுறுத்தும் நாளாக அமைந்திருப்பதே ‘ஈதுல் அள்ஹா’ எனும் தியாகத் திருநாள்.

ஓரிறைத் தத்துவம் கண்ட
தியாசீலர் இப்ராஹீம் நபி

ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்னர் இடையறா இன்னல்களுக்கிடையிலும் ‘இறைவன் ஒருவனே’ எனும் ஓரிறைத் தத்துவத்தை வலுவாகப் பிரச்சாரம் செய்து முதுமையின் எல்லைக் கோட்டை எட்டினார் நபி இபுறா ஹீம் (அலை) அவர்கள். முதுமையில் தான் பெற்ற மைந்தன் இஸ்மாயீல் (அலை) எனும் குலக் கொழுந்தை இறைவனுக்குப் பலியிடுவதுபோல் தான் கண்ட தொடர் கனவை இறைக் கட்டளையாகவே ஏற்று, தன் மைந்தனை இறைவனுக்குப் பலியிடத் துணிந்த தியாகச் செயலை நினவுகூறும் நாளாகவே இப்பெருநாள் உலக முஸ்லிம்களால் அனுசரிக்கப்படுகிறது.

இஸ்லாத்தின் வாழ்வியல் நெறிமுறைகள் அனைத்தும் தியாகத் தூண்டுதல்களாகவே அமைந்துள்ளன வெனலாம். இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளான ஈமான் எனும் இறை நம்பிக்கை, தொழுகை, நோன்பு, ஜகாத் எனும் ஏழை வரி, ஹஜ் ஆகிய அனைத்துமே தியாக உணர்வை ஊட்டும் செயற்பாடுகளாகவே அமைந்துள்ளன. தியாக உணர்வின் அடிப்படையிலேயே ஒவ்வொரு முஸ்லிமின் வாழ்வும் உருவாக்கப்படுகிறது.

தொழுகையின் உட்கருத்து

‘உருவமில்லாத, இணை-துணை இல்லாத ஒரே இறைவன்’ எனும் நம்பிக்கை மனிதச் சிந்தனையை, உணர்வை வெவ்வேறு வழிமுறைகளில் சிதற விடாமல் ஒரு முகப்படுத்தி இறைவன்பால் செலுத்த வழியமைக்கிறது. இறைவனாகிய அல்லாஹ்வைப் பற்றிய சிந்தனை, அவன் மனிதனுக்கு வகுத்தளித்த வாழ்வியல் நெறி ஆகியவற்றை இரவு பகல் என்னேரமும் இடையறாது மனித மனம் அசை போடும் வகையில் அமைந்ததே ஐநேரத் தொழுகைகள்.

அதிகாலை ஐந்து மணிமுதல் இரவு எட்டரை மணிவரை குறிப்பிட்ட இடைவெளிகளில் ஐந்து முறை நிறைவேற்றப்படும் தொழுகை முறைகள் தியாக உணர்வின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. இன்பமான அதிகாலைத் தூக்கத்தைத் தியாகம் செய்து இறைவணக்கத்தில் ஈடுபடுகிறான். ஐந்நேரத் தொழுகையின்போது தனக்குப் பொருட்பயன் தரும் உலக நடவடிக்கைகளிலிருந்து முற்றாக ஒதுங்கி அருட்பயன் பெற இறைச் சிந்தனை ஒன்றை மட்டுமே பற்றுக் கோடாகக் கொண்டு இறை வணக்கம் புரிகிறான். இதன் மூலம் இறைவனுக்காக நேரத்தையும் பொருள் வேட்கையையும் தியாகம் செய்யும் மன உணர்வு அவனுள்ளே அழுத்தம் பெறுகிறது.

மூன்றாவது கடமையான நோன்பை மேற்கொள்ளும் ஒவ்வொரு முஸ்லிமும் முப்பது நாட்கள் தொடர்ந்து பகலில் உண்ணாமலும் பருகாமலும் நோன்பு நோற்கிறார்கள். தான் வழக்கமாகப் பகலில் துய்த்துவந்த இன்ப மூட்டும் பழக்கவழக்கங்கள் அனைத்தையும் முற்றாகத் துறந்து விடுகிறான்.

அவ்வாறே நான்காவதான ஜகாத் கடமையும் அமைந்துள்ளது. பொருள் வேட்கையோடு தான் உழைத்துத் தேடிய பொருளில் நாற்பதில் ஒரு பங்கை அதாவது இரண்டரை சதவீதத்தை இஸ்லாம் விதித்துள்ள நியதிப்படி ஏழை எளியோர்க்கு வழங்குகிறான். தான் தேடிய பொருளோடு எவ்வித தொடர்புமில்லா அன்னியர்க்கு தன் கைப்பட உவக்கும் உள்ளத்தோடு இரண்டரை சதவீதச் சொத் தைப் பகிர்ந்தளிக்கும் ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளமும் தியாக வேட்கையின் ஊற்றுக் கண்களாக உருவெடுக்கின்றன.

ஹஜ் கடமை

இத்தகைய தியாக உணர்வுகளுக்கு மகுடம் சூட்டுவது போல் தியாகத் திருநாளின்போது நிறைவேற்றுவதாக ஐந்தாவது கடமையாக ஹஜ் கடமை அமைந்துள்ளது. சுய வருமானமும் நல்ல உடல் நலமும் உள்ள வசதி படைத்த முஸ்லிம்கள் வாழ்வில் ஒரு முறையேனும் நிறைவேற்ற வேண்டிய கடமையாக ஹஜ் கடமை அமைந்துள்ளது. சுய வருமானமும் நல்ல உடல் நலமும் உள்ள வசதி படைத்த முஸ்லிம்கள் வாழ்வில் ஒரு முறையேனும் நிறைவேற்ற வேண்டிய கடமையாக ஹஜ் கடமை அமைந்துள்ளது. மக்காவிலுள்ள கஃபா இறையில்லம் சென்று மீள்தலே ஹஜ் கடமையாகும்.

ஹஜ் செய்யச் செல்லுபவர் தன் மனைவி, மக்கள் உற்றார் உறவினர் தான் தேடிய சொத்துக்கள் அனைத்தையும் விட்டு நீங்கிச் செல்கிறார். தான் வாழ்ந்த சுக வாழ்வைத் துறந்து கடின வாழ்வை விரும்பி மேற்கொள்கிறார். இதன்மூலம் தியாக உணர்வின் எல்லை நோக்கிப் பீடு நடை போடத் தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறார்.

உண்மைத் துறவை உணர்த்தும்
இஹ்ராம் வெள்ளுடை

இஸ்லாம் துறவறத்தைப் போற்றாவிடினும் தனக்கென உள்ள அனைத்தையும் துறந்த உணர்வின் வெளிப்பாடாக ஹஜ்ஜுக்குச் செல்லுபவர் தைக்கப்படாத ஒரு முண்டுத் துணியை இடுப்பில் அணிந்தும் மற்றொரு முண்டுத் துணியை உடல்மீது போர்த்திக் கொள்கிறார். இவ்வுடை ‘இஹ்ராம்’ என அழைக்கப்படுகிறது. இதற்கு ‘அனுமதிக்கப்பட்ட சில காரியங்களை நிறுத்திக் கொள்வது அல்லது விலக்கி (ஹராமாக்கி)க் கொள்வது’ என்பது பொருளாகும். இதன் மூலம் தான் மகிழ்ச்சியுடன் அனுபவித்துவந்த ஆடம்பர வாழ்வை, அலங்கார அணிமணிகளை ஆடைகளை முற்றாக விலக்கித் தியாகம் செய்கிறார். எந்நேரமும் பொருள் வேட்கையும் இன்ப உணர்வும் மிக்கவராக வாழ்ந்தவர் ஹஜ்ஜின்போது இறைச்சிந்தனை தவிர்த்து வேறு எந்தச் சிந்தனையும் இல்லாத மனத்திலிருந்து விலக்கிய தியாகச் சீலர் ஆகிறார்.

உலகெங்கிலுமிருந்து வந்து குழுமும் பல்வேறு நாடு, மொழி, இன, நிற, கலாச்சார சார்புடையவர்கள் அனைவருமே தங்கள் நாட்டுப்பற்றை, மொழிப்பற்றை, இனப்பற்றை பெருமையை, கலாச்சார பெருமிதத்தை துறந்தவர்களாக ஒரே இறைச் சிந்தனையுடன், அனைவரும் மனிதர்கள், ஆதாம் (அலை) பெற்ற மக்கள், சகோதரர்கள் என்ற உணர்வுடையவர்களாகத் திகழ்கிறார்கள். ஆண்டான், அடிமை, உயர்ந்தவன் - தாழ்ந்தவன் என்ற எண்ணங்கள் இருந்தவிடம் தெரியாமல் மறைந்தொழிகின்றன.

வாழ்வின் ரகசியத்தை
வெளிப்படுத்தும் அரஃபாத்

ஹஜ்ஜின் முத்தாய்ப்பாக அரஃபாத் பெருவெளியில் ஹாஜிகள் அனைவரும் இஹ்ராம் பெருமையுடன் பகல் முழுமையும் தங்குவர். அனைத்தையும் விட்டு விடும் தியாகச் சின்னமான இந்த உடையே இறந்தவரின் மையத்தின் மீதும் போர்த்தப்படுகிறது. தனக்கென உள்ள அனைத்தையும் இறைவன் பொருட்டுத் தியாகம் செய்யும் தன் உள்ளுணர்வின் வெளிப்பாடே இவ்வுடை. தற்காலிகமாக அமைக்கப்பட்ட இக்கூடாரங்கள் அன்று மாலையே கலைக்கப்படுகிறது. இதன் மூலம் தங்கள் உயிரும் தற் காலிகமான இவ்வுடலிலிருந்து எந்நேரமும் பிரிக்கப்பட்டு விடும் என்பதை இஃது நினைவூட்டுவதாக அமைகிறது.

ஹஜ்ஜின் இறுதி நிகழ்வாக ‘குர்பான்’ கொடுக்கப்படுகிறது. இறைவன் பொருட்டுத் தன் மகனைப் பலியிடத் துணிந்த நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் செயலாக இது அமைந்துள்ளது. அல்லாஹ்வின் பெயரால் குர்பானி தரப்படும் உயிரின் இறைச்சியோ இரத்தமோ இறைவனைச் சென்றடைவதில்லை. மக்களின் இறைபக்தியும், தியாக உணர்வும் இறைவனுக்குக் கீழ்ப் படிந்து நடக்கும் தன்மையும் மட்டுமே இறைவனைப் போய்ச் சேருகின்றன.

தியாகப் பிழம்பாகும் ஹாஜிமார்

இஸ்லாம் விதித்த நியமப்படி ஒழுகித் தன்மை தியாகப் பிழம்பாக உருமாற்றிக் கொள்ளும் ஹாஜி, தான் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களையெல்லாம் தியாக வேள்வியில் போட்டு பொசுக்கியவராகப் புதுவாழ்வு பெறுகிறார். இதைப்பற்றிப் பெருமானார்.

“எவர் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்து தீய சொல் பேசாமலும் தீய செயல் செய்யாமலும் திரும்புவாரோ அவர் தன் தாயின் வயிற்றிலிருந்து அன்று பிறந்த பாலகனைப் போன்று பாவமற்றவராகத் திரும்புகிறார்.” என்று கூறியுள்ளார்.

இவ்வாறு ‘ஈதுல் அள்ஹா’ எனும் தியாகத் திருநாளும் ஹஜ் பெரு நாளும் இறை நெறியில் தியாக வாழ்வு வாழ இறையுணர்வு பொங்கும் இனிய வாழ்வு பெற வழி காட்டும் நாளாக அமைகிறது.

நன்றி : தினமணி