பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்/மிகு பயன் விளைவிக்கும் ரமலான்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

மிகு பயன்
விளைவிக்கும் ரமளான்

இறைமறையாகிய திருக்குர்ஆன் பிறந்த ரமளான் மாதத்தின் இறுதியில் வரும் ‘ஈதுல் ஃபித்ர்’ எனும் ஈகைத் திருநாள் உலகெங்கும் வாழும் 125 கோடி முஸ்லிம்களால் உவப்புடன் கொண்டாடப்படும் பெருநாளாகும்.

இறை நம்பிக்கையாளர்களின் நெஞ்சகத்தில் ஆன்மீக எழுச்சியையும் ஈகையுணர்வையும் மனக் கிளர்ச்சியையும் உருவாக்கி, மனிதர்களைப் புனிதர்களாக்கும் இறை மாதமாகவும் ரமளான் மாதம் அமைந்துள்ளது.

திருக்குர்ஆனில் ‘ரமளான்’

இஸ்லாமிய மாதங்கள் பன்னிரண்டில் ஒன்பதாவது மாதமான ரமளான் மாதம் மட்டுமே இறைமறையாகிய திருக்குர்ஆனில் குறிப்பிடப்படுகிறது.

ரமளான் மாதத்தின் சிறப்பு திருக்குர்ஆனில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“ரமளான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய) தென்றால், அதில் தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், நேரான வழியைத் தெளிவாக்கக் கூடியதாகவும் நன்மை தீமையைப் பிரித்தறியக்கூடியதாகவும் உள்ள திருக்குர்ஆன் (என்னும் இம்மறை) அருளப்பெற்றது. ஆகவே, உங்களில் எவர் இம்மாதத்தை அடைகிறாரோ, அவர் நோன்பு நோற்கவும்” (2-185) எனக் கூறப்பட்டுள்ளது.

‘ரமளான்’ என்ற சொல்லுக்கு ‘சுட்டெரித்தல்’ என்பது பொருளாகும். இம்மாதம் முழுவதும் நோன்பு நோற்றும் ‘தராவீஹ்’ என்னும் கூட்டுத் தொழுகை மூலம் மிக அதிகமாக இறைவணக்கம் புரிந்தும், தாங்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களையெல்லாம் சுட்டெரிப்பதால் இம்மாதம் ரமளான் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

வேதங்களின் மாதம்

நபிகள் நாயகம் (சல்) அவர்களுக்கு ‘ஜிப்ரீல்’ எனும் வானவர் மூலம் முதல் இறைச் செய்தி இம்மாதத்தின் இருபத்தியேழாம் நாளன்றுதான் இறைவனால் அருளப்பட்டது. அந்த நாள் லைலத்துல் கத்ர் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த அரபுச் சொல்லுக்குக் ‘கண்ணியமான இரவு’ என்பது பொருளாகும்.

இறைமறையாகிய திருக்குர்ஆன் மட்டுமல்லாது வேறு பல வேதங்களும் நபிமார்களாகிய இறைத்தூதர்கள் மூலம் இறைவன் உலகுக்கு வழங்கியதும் இதே ரமளான் மாதத்தில்தான்.

‘ஏப்ரஹாம்’ என அழைக்கப்படும் இபுராஹீம் நபி அவர்கட்கு சுஹ்பு எனும் வேதம் இதே ரமளான் மாதத்திலேதான் அருளப்பட்டது. அதன்பின் எழுநூறு ஆண்டுகள் கழித்து மோசஸ் எனும் மூஸா நபி அவர்கட்கு தெளராத் எனும் வேதம் இதே ரமளான் ஆறாம் நாளிலே தான் இறைவனால் வழங்கப்பட்டது. அதற்கும் ஐநூறு ஆண்டுகள் கழித்து ‘டேவிட்’ எனும் தாவூது நபி அவர்கட்கு ‘சபூர்’ எனும் இறைவேதம் இதே ரமளான் பன்னிரண்டாம் நாளன்று இறக்கியருளப்பட்டது. அதன் பின் 1200 ஆண்டுகள் கழிந்த பின்னர் ஜீசஸ் எனப் போற்றப்படும் ஈசா நபிக்கு ‘இன்ஜில்’ எனப்படும் ‘பைபிள்’ வேதம் ரமளான் பதினெட்டாம் நாளில் அருளப்பட்டது. அதன் பின்னர் அறுநூறு ஆண்டுகள் கழித்து ‘புர்க்கான்’ எனும் திருக்குர்ஆன் திருமுறை, நபிகள் நாயகம் முஹம்மது (சல்) அவர்களின் மூலம் உலகுக்கு ரமளான் இருபத்தியேழாம் நாளன்று இறக்கியருளப்பட்டது.

ஐந்தில் நான்கு

ரமளான் மாதத்தின் மற்றொரு சிறப்பு மக்கள் கடைத் தேற்றத்திற்கென அல்லாஹ் விதித்த இறை நம்பிக்கை எனும் கலிமா, தொழுகை, நோன்பு, ஏழைவரி எனும் ஜக்காத், மக்காவிலுள்ள கஃபா எனும் இறையில்ல வணக்கத்திற்கெனச் செல்லும் ஹஜ் புனிதப் பயணம் எனும் ஐம்பெரும் இஸ்லாமியக் கடமைகளில் ஹஜ் தவிர்த்துள்ள நான்கு கடமைகளும் ஒரு சேர முற்றாக நிறைவேற்றப் படுவதும் இந்த ரமளான் மாதத்திலேதான்.

இஸ்லாமிய ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவதான நோன்பு ‘ரமளான்’ மாதத்தில்தான் முழுமையாக நிறைவேற்றப்படுகிறது.

இஸ்லாமிய நோன்பும்
பிற மத விரதங்களும்

உலகத்திலுள்ள எல்லாச் சமயங்களும் நோன்பாகிய விரதத்தை வலியுத்துகின்றன. இந்தியாவிலுள்ள ஹிந்து மதம் போன்ற பெரும் சமயங்கள் விரதமிருப்பதை சமயத் தின் இன்றியமையாச் சிறப்புகளாக அமைத்து, பின்பற்றியொழுகப் பணிக்கின்றன. ஹிந்து சமயத்தவர்களும் விரதமிருப்பதைப் புனிதக் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

இஸ்லாமிய நோன்புக்கு பிற சமய விரதங்களுக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடு உண்டு.

பிற சமயங்களில் மாதத்தில் ஒரு நாளோ அல்லது ஒரு சில நாட்களோ அல்லது ஒரு சில மணி நேரங்களோ விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதிலும் வழக்கமாக உண்பவைகளில் சிலவற்றை நீக்கியோ அல்லது முழுமையாக உணவு மட்டும் உண்ணாமலோ விரதம் மேற் கொள்ளப்படுகிறது. பெரும்பாலான விரதங்களில் நீர் பருகத் தடையிருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால், இஸ்லாமிய நோன்பு ரமளான் மாத முதல் நாள் தொடங்கி அம்மாதம் முழுவதும் இடையறாது தொடர்ந்து முப்பது நாட்கள் நோன்பு நோற்கப்படுகின்றது.

இறையச்சயுணர்வூட்டும் நோன்பு

அதிகாலை நான்கு மணிக்கு முன்னதாகவே, உண்பதும் பருகுவதும் நிறுத்தப்படுகிறது. மீண்டும் முன்னிரவு ஆறரை மணிக்குத்தான் உண்ணவும் பருகவும் முடியும். இவ்வாறு தொடர்ந்து முப்பது நாட்கள் நிகழும். இம்மாதம் முழுவதும் பகற் பொழுதுகளில் ஒரு சொட்டு நீரும் பருகாமல் நோன்பு நோற்க வேண்டும். வழக்கமாக மேற்கொள்ளும் ஐவேளைத் தொழுகையுடன் ‘தராவீஹ்’ எனும் சிறப்புத் தொழுகை ஒவ்வொரு நாள் இரவும் ஒரு மணி நேரம் கூட்டுத் தொழுகையாக நிறைவேற்றப்படுகிறது. இந்நோன்பு நாட்களில் நோன்பாளிகள் முழுக்க முழுக்க இறைச் சிந்தனையாளர்களாக மாறிவிடுகின்றார்கள்.

ரமளான் மாத நோன்பு ஒவ்வொரு முஸ்லிமையும் படம் போட்ட தங்கமாக உருமாற்றும் செயற்பாடாக அமைந்துள்ளது. ஒவ்வொரு முஸ்லிம் உள்ளத்தில் இறையுணர்வு பூரணமாகப் பொங்கிப் பொழிவதோடு, இறைவனைப் பற்றிய அச்சவுணர்வும் அவனுள் அழுத்தம் பெறுகிறது.

இறைவன் தன் திருமறையில் ‘ல அல்லாஹும் தத்தஹூன்’ (இதனால் நீங்கள் இறையச்சமுடையோர்களா கலாம்) எனக் கூறியுள்ளதிலிருந்து இறையச்சவுணர்வைப் பூரணமாக உள்ளத்தில் உருவாக்கி நிலைபெறச் செய்வதே நோன்பின் முழு முதல் நோக்கமாகும்.

இறைவன் மனிதனுக்கு விலக்கிவைத்தவைகளின்றும் அறவே விலகியிருப்பதோடு, அல்லாஹ் இட்ட கட்டளையே இம்மியும் பிசகாது முழுமையாக, மனக் கட்டுப்பாட்டோடு நிறைவேற்றி, அவனது அன்பையும், அவனளிக்கும் வெகுமதியையும் பெறுவதற்கான பயிற்சிக் களமாக ரமளான் மாதம் அமைகிறது.

மனக் கட்டுப்பாட்டை
உருவாக்கும் பயிற்சிக்காலம்

இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் இந்நோன்பு கடமையாக்கப்பட்டாலும், உளவியல் அடிப்படையிலும் மருத்துவவியல் அடிப்படையிலும் மிகுபயன் விளைவிப்பனவாக அமைந்துள்ளன என்பதை அறிவியல் நோக்கோடு அணுகும்போது தெளிவாகப் புலனாகிறது.

நோன்பு நோற்பவர் பகல் முழுவதும் எதையுமே உண்ணாமலும், பருகாமலும் புகைக்காமலும் அளவுக்கதிகமான மனக் கட்டுப்பாட்டுடன் தன் வழக்கமான வாழ்க்கைப் போக்கினின்றும் மாறுபட்டு வாழகிறார். தன் அன்றாட அலுவல்களிலும் தொய்வின்றி ஈடுபடுகின்றார். இதனால் மன உறுதி மிக்கவராகத் தன்னை ஆக்கிக் கொள்கிறார். “எல்லா வகையிலும் மனத்தைக் கட்டுப்படுத்துவது தான் தூய்மையான போராட்டம் (ஜிஹாதுல் அக்பர்)” என்றார் நபிகள் நாயகம்.

மனத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலமே பசியைக் கட்டுப்படுத்த முடியும். பசியைக் கட்டுப்படுத்தும் ஒருவனுக்குப் பிற இச்சைகளையும் விருப்பு வெறுப்புகளையும் கட்டுப்படுத்துவது கடினமான காரியமல்ல.

நோன்பு நோற்கும் காலத்தில் தீய செயல்களைத் செய்யாதிருத்தலோ அல்லது அவற்றை விட்டு நீங்கி யிருத்தலோ மட்டும் முக்கியமன்று. தீய உணர்வுகளே நெஞ்சத்தில் முளைவிடாது தடுக்கும் வகையில் மனத்தின்மை பெற வழி வகுப்பதே நோன்பு நோற்பதன் முக்கிய நோக்கமாகும்.

பகலெல்லாம் அருஞ்சுவை உணவும் சுவைமிகு பானமும் பருகி இன்பமாக வாழும் முஸ்லிம், ரமளான் நோன்பு நாட்களில் இவைகளை அறவே ஒதுக்கி பசியுணர்வும் தாக வேட்கையுமிக்க கடினமான தவ வாழ்வை விரும்பி மேற் கொள்கிறார். இதன் மூலம் தன் உல்லாச வாழ்வுக்கு மாறாகச் சிக்கன உணர்வாளராக மாறுகிறார். மனிதன் உண்பதற்கென இறைவன் அனுமதித் துள்ள உணவு வகைகளையே நோன்பின்போது மனிதனால் விலக்கி வைக்க முடிகிறதென்றால், அவனால் எத்தகைய தீங்கையும் விலக்கி வைக்கவும் பெறுத்தொதுக்கவும், மனம் வலுப் பெற இயலவே செய்யும். எனவே, மனிதன், தன்னைத் தானே அடக்கியாள நோன்பு வழியமைத்து தருகிறதெனலாம்.

ஈகையுணர்வளிக்கும் நோன்பு

ஒரு மாத கால நோன்பின்போது பசித்துன்பம் எத்தகையது; தாகத்துடிப்பு எப்படிப்பட்டது என்பதையெல்லாம் அனுபவித்து உணரும்போது, பசியாலும் தாகத்தாலும் வருந்தும் ஏழை எளியவர்கள் மீது அன்பும், பரிவும் ஏற்படுவது இயல்பேயாகும். எனவே, இத்தகைய பாதிப்புக் குள்ளாகும் மக்கள் பசித் துன்பத்தினின்றும் மீள, வாரிவழங்கும் ஈகையுணர்வு பூரித்தெழுகிறது. அவர்களின் துன்பத்தில் பங்கு கொள்ள விழைகிறது. எனவேதான் முஸ்லிம்கள் ரமளான் நோன்பு நாட்களில் ஏழை எளியவர்களுக்கு வாரி வழங்கி மகிழ்கிறார்கள். நோன்புப் பெரு நாளையே ‘ஈகைத் திருநாளாக’க் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

நோயழிக்கும் நோன்பு

மருத்துவவியல் அடிப்படையிலும் நோன்பு மிகச் சிறப்பான இயற்கை மருத்துவ முறையாக அமைந்துள்ளது. உடலில் கொழுப்பு மிகுந்திருந்தால், நீரிழிவு நோய், இதய நோய்கள், இரத்த அழுத்தம், மூத்திரக்காய் வீங்கியிருத்தல், நாள்பட்ட கீழ்வாத நோய் போன்றவைகளை இஸ்லாமிய நோன்பு முறையால் குணமாக்க இயலும் என அண்மைக் கால மருத்துவ ஆய்வுகள் எண்பித்துள்ளன.

நாள்தோறும் கொழுப்புச் சத்துமிக்க புலால் உணவுகளையும் சுவையான இதர உணவு வகைகளையும் மிகுதியாக உண்பதால் உடலில் கொழுப்புச் சத்து சேர உடல் பரமனாகிறது. இவ்வாறு தடித்த உடலைக் கொண்டோர் எளிதாக இதய நோய், நீரிழிவு நோய் போன்றவைகளுக்கு இலக்காகின்றனர். இதனால் மாரடைப்பு போன்ற கொடிய நோய்கள் எளிதாகத் தலை தூக்க ஏதுவாகின்றன. எனவே, தேவைக்கதிகமாக உடலில் சேர்ந்துள்ள கொழுப்புப் பொருளைக் கரைக்கவும், உடல் பருமனைக் குறைக்கவும் இதன் மூலம் பற்பல நோய்த் தொல்லைகளிலிருந்து விடுபடவும் ‘நோன்பு’ முறை எளிய இயற்கையான வழி முறையாக அமைந்துள்ளது.

ரமளான் மாதம் முழுமையும் நோன்பு இருப்பதால் உடல் எடை வெகுவாகக் குறைய நேர்கின்றது. இதனால், இரத்தக் கொதிப்பு போன்ற நோய்கள் சீரடைகின்றன, அல்லது குறைந்து விடுகின்றன.

ஏனெனில், நோன்பு நாட்களில் உண்ணும் உணவின் அளவு வெகுவாகக் குறைவதால், ‘ஹார்மோன்’ சுரப்பதும் குறையவே செய்கிறது. இதனால் இரத்தக் கொதிப்பும் மட்டுப்பட நேர்கின்றது.

உடல் உறுப்புகளில் ஓய்வும்
பெறும் புத்துணர்வும்

தொடர்ந்து முப்பது நாட்கள் நோன்பு நோற்பதால், உடலில் ஜீரண உறுப்புகளெல்லாம் நன்கு ஒய்வு பெற வாய்ப்பேற்படுகின்றது. நோன்பு முடிந்த பின்னர் இவ்வுறுப்புகளெல்லாம் புத்துணர்வோடு இயங்க இயலுகிறது.

மிக இளமைதொட்டே ஆண், பெண் அனைவருக்கம் ரமளான் மாத நோன்பு கட்டாயமானாலும் நோயாளிகள், பிரயாணிகள், கர்ப்பிணிகள், பால் குடிக்கும் குழந்தையுடைய தாய்மார்கள், உடல் நலிவடைந்த வயோதிகர் ஆகியோருக்கு இஸ்லாம் நோன்பினின்றும் விலக்களித்துள்ளது.

சமய அடிப்படையிலும் உளவியல், மருத்துவ அடிப்படையிலும் மிகுபயன் விளைவிக்க வல்ல ரமளான் மாத நோன்பு ஒவ்வொருவருக்கும் ஆன்மீக பலத்தையும் உடல் வலுவையும் பெருக்கும் அருமருந்தாக அமைந்துள்ளது.

நன்றி : தினமணி