உள்ளடக்கத்துக்குச் செல்

பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்/பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டம்

விக்கிமூலம் இலிருந்து

பெருமானாரின் பிற சமயக்
கண்ணோட்டம்


நாளொன்றுக்கு ஒரு கோடி முறை
உலகெங்கும் ஒலிக்கும் பெயர்

உலகில் உதித்த மாமனிதர்களில் அண்ணல் முஹம்மது நபி (சல்) அவர்கள் பெயர் போன்று வேறொருவர் பெயர் இடையறாது மக்களால் உச்சரிக்கப்படுவதில்லை என்றே கூறலாம்.

நாள்தோறும் ஐந்து வேளைத் தொழுகைக்கென தொழுகை அழைப்புக்கான பாங்கு பள்ளிவாசல் தோறும் ஒலிக்கப்படுகிறது. அதில் வேளைக்கு இருமுறையாகப் பத்து முறை முஹம்மது என்ற அண்ணலார் பெயர் ஒலிக்கப் படுகிறது. உலகெங்கும் பத்து இலட்சம் பள்ளிவாசல்கள் இருப்பதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். எனவே, ஒரு நாளைக்கு ஒரு கோடி தடவைகள் நபிகள் நாயகம் முஹம்மது நபி (சல்) அவர்களின் பெயர் இரவு பகல் எந் நேரமும் இடையறாது உலகெங்கும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அவரது புகழ் நெஞ்சாரப் போற்றப்படுகிறது.

அனைத்துலகுக்கும் ஓர்
அழகிய முன்மாதிரி

மனித வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும், அழகிய முன்மாதிரியாக வாழ்ந்து மறைந்த மனிதப் புனிதர் மாநபி முஹம்மது நபி (சல்) அவர்களின் வாழ்வும் வாக்கும் மனித குலத்திற்கு என்றென்றும் வழிகாட்டும் ஒளி விளக்காக அமைந்துள்ளதெனலாம்.

மற்ற துறைகளைப் போன்றே பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டமும், மனிதகுலம் ஏற்றிப் போற்ற வேண்டிய ஒருமைப்பாட்டுணர்வும் ஒப்பற்ற வழி காட்டியாக மனித குலத்துக்கு விளங்கி உலகை வழி நடத்து கின்றன.

பெருமானாரின் பிற
சமயக் கண்ணோட்டம்

பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டமும் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடும் உலகிலுள்ள அனைத்துச் சமயங்களையும் மரியாதைக்குரியவையாகவே காட்டுகின்றன. பிற சமயத்தவர்களின் வணக்கத் தலங்கள், அவர்கள் போற்றும் வேதங்கள், அவர்கள் மேற்கொள்ளும் சடங்குகள் ஆகிய அனைத்தையும் மதிக்கப் பணிக்கிறது இஸ்லாம். அவற்றைப் பற்றித் தவறாகப் பேசுவதைத் தடுக்கிறது.

“அல்லாஹ்வை விடுத்து அவர்கள் எவற்றை வணங்குகின்றார்களோ அவற்றைப் பற்றி நீங்கள் தீங்கு பேசாதீர்கள்” (குர்ஆன் 6 :108)

அவரவர் மார்க்கம்
அவரவர்க்கு

அவர்கள் மார்க்கத்தை அவரவர் வழியில் பேண இஸ்லாம் எடுத்துக் கூறுகிறது. இதைப் பற்றி திருமறையான திருக்குர்ஆன்,

“உங்களுக்கு உங்கள் மார்க்கம்; அவர்களுக்கு அவர்கள் மார்க்கம்” என எடுத்துக் கூறுகிறது.

இதற்கு எடுத்துக்காட்டான நிகழ்ச்சியொன்று அண்ணலார் வாழ்வில் நடைபெற்றது.

ஒரு சமயம் பெருமானாரை நேரில் கண்டு அவருடன் பேச மதினாவிலுள்ள பள்ளிவாசலுக்குப் பாதிரிகள் குழுவொன்று வந்தது. அதில் பிரதம பாதிரியார் உள்பட நாற்பது கிருஸ்தவப் பாதிரியார்கள் இருந்தார்கள். அவர்கள் தொடர்ந்து பெருமானாரோடு பேச்சு வார்த்தை நடத்த வேண்டியிருந்தது. எனவே, அந்தத் பாதிரிமார்களை பள்ளி வாசல் வளாகத்திலேயே தங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார் பெருமானார். தக்க வசதிகளைச் செய்து கொடுத்துத் தங்க வைத்துக்கொண்டார்.

அந்தப் பாதிரிமார்கள் பிரார்த்தனை செய்யும் நேரம் வந்தபோது, கிருஸ்தவ முறைப்படியான சடங்குகளோடு பள்ளிவாசல் வளாகத்திலேயே பிரார்த்தனை செய்து கொள்ளவும் மனப்பூர்வமாக அண்ணலார் அனுமதி அளித்தார். அங்கு வந்திருந்த பாதிரிகளும் பெருமானார் விருப்பப் படியே பள்ளிவாசல் வளாகத்திலேயே தங்கி, தங்கள் மத ஆசாரப்படி பிரார்த்தனையும் செய்து மகிழ்ந்தார்கள். இதன் மூலம் பிற சமயங்களை வெறுக்காதது மட்டுமல்ல. அவற்றை மதிப்பது இஸ்லாம் என்பது தெளிவாகும். நாயகத் திருமேனியின் வாழ்வும் அதையே வலியுறுத்துகிறது.

“இஸ்லாம் எந்தச் சமயத்திற்கும் எதிரானதன்று” என்பது நபிகள் நாயகம் (சல்) அவர்களின் வாக்கமுதாகும்.

கட்டாயத்துக்குக் கடுகளவும்
இஸ்லாத்தின் இடமில்லை

நபிகள் நாயகத்தின் வாழ்க்கையில், யாரையும் இஸ்லாத்தின்பால் இழுத்ததாகக் கடுகளவு செய்தியைக்கூடக் காண முடியவில்லை. இஸ்லாத்தின் உன்னதமான கொள்கை, கோட்பாடுகளைக் கேட்டும் நெறிமுறைகளின் மேன்மையை அறிந்தும் இஸ்லாத்தின்பால் தங்களை இணைத்துக் கொண்டார்களேயன்றி, இஸ்லாத்தின்பால் யாரும் இழுக்கப்படவில்லை என்பதுதான் பெருமானார். வாழ்க்கையும் இஸ்லாமிய வரலாறும் தரும் செய்தியாகும். ஏனெனில், அவ்வாறு செய்வது இஸ்லாமியக் கொள் கைக்கு நேர் மாறானதாகும் என்பது திருமறையின் தீர்ப்பாகும்.

“இஸ்லாத்தின் நிர்ப்பந்தமே இல்லை” (குர்ஆன்-2 :256) என்பது திருமறைக் கோட்பாடு.

மேலும் இதைப் பற்றித் திருமறை,

“(நபியே!) நீர் கூறும் : (முற்றிலும் உண்மையான) இவ்வேதமானது உம் இறைவனால் அருளப் பெற்றது. விரும்பியவர் (இதை) விசுவாசிக்கலாம், விரும்பாதவர் (இதை) நிராகரித்துவிடலாம்.” (குர்ஆன் 18:29)

என்று கூறுவதன்மூலம் இஸ்லாமிய நெறியை மக்கள் ஏற்பது என்பது அவரவர் விருப்பத்தைப் பொருத்து அமைவதேயல்லாமல், கட்டாயத்திற்குக் கடுகளவு இடமும் இல்லை என்பது தெளிவு. இதற்கு மாறான எந்தச் செயலும் இஸ்லாமிய நெறிக்கும் நாயகத் திருமேனியின் வாக்குக்கும், வழிகாட்டுதலுக்கும் நேர் மாறானதாகும் என்பது தெளிவு.

உலகின் அனைத்துச் சமய
வேதங்களுக்கும் அங்கீகாரம்

உலக சமயங்களையும் அவற்றின் வேதங்களையும் இஸ்லாம் ஏற்றுக் கொண்டுள்ளது. முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதாம் (அலை) தொடங்கி இறுதிநபி அண்ணல் நபிகள் நாயகம் (சல்) வரை ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் நபிமார்கள் இறை தூதர்களாக மக்களுக்க நேர்வழி காட்ட இறைவனால் இவ்வுலகுக்கு அனுப்பப் பட்டு உள்ளார்கள்.

“அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் (நம்முடைய) தூதர் வராத எந்த வகுப்பாரும் (பூமியில்) இருக்கவில்லை.” (குர்ஆன் 35 :24)

“ஒவ்வொரு வகுப்பினருக்கும் (நம்மால்) அனுப்பப்பட்ட ஒரு தூதர் உண்டு.” (குர்ஆன் 10:47)

இவ்விருதிருமறை வசனங்களிலிருந்து உலகெங்கும் எல்லா நாட்டிலும், எல்லா இனத்திலும் இறை தூதர்கள் தோன்றி மக்களை நல்வழிப்படுத்தியிருக்கிறார்கள் என்ற பேருண்மை வெளிப்படுகிறது. இவர்கள் மூலமே இறை வேதங்களும் அவ்வக் காலகட்டத்திற்கேற்ப இறக்கியருளப்பட்டுள்ளது என்பதும் திருமறை மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது.

அவரவர் தாய்மொழியில்
இறை வேதம்

இவ்வேதங்கள் அவரவர் தாய்மொழியிலேயே இறைவனால் வழங்கப்பட்டன என்பதை,

“(நபியே!) ஒவ்வொரு தூதரும் (தம் மக்களுக்குத்) தெளிவாக விவரித்துக் கூறும் பொருட்டு, அவரவருடைய மக்களின் மொழியைக் கொண்டே (போதனை புரியுமாறு) நாம் அவர்களை அனுப்பிவைத்தோம்” (குர்ஆன் 14:4)

எனத் திருமறை மொழிகின்றது. இதிலிருந்து மண்ணுலகின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் அவரவர் மொழியிலேயே இறை வேதங்கள் இறைத்தூதர்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளன; அவ்வகையில் இந்தியாவிலும் பலப்பல இறைதூதர்களும், இறை வேதங்களும் வந்திருக்கலாம் என்பதில் ஐயமில்லை.

ஏக இறைவனை வணங்கப் பணித்த
இறைதூதர்களே
இறைவனாக்கப்பட்டார்கள்

இந்த இறை தூதர்கள் எல்லோருமே ஏக இறைவனையே வணங்கப் பணித்தார்கள். தங்களை வணங்குமாறு யாருமே கூறவில்லை. ஆனால், நாளடைவில் அந்த இறை தூதரைப் பின்பற்றியோர் அவர் மீது கொண்ட அன்பால் அவருக்கு இறைத்தன்மைகளை ஏற்றி, இறைவனாகவே ஆக்கிவிடுவார்கள். நீண்டகாலத்துக்குப் பின் தடம்புரண்ட மக்களின் வாழ்வை நேர்தடத்துக்குக் கொணர மீண்டும் ஓர் இறைதூதர் தோன்றி, மக்களை வழி நடத்துவார் என்பதுதான் இறை தூதர்களின் வரலாறாக உள்ளது.

இவ்வாறு இறைவனால் வழங்கப்பட்ட இறைச் செய்திகளெல்லாம் ஒரே மாதிரியாக இருந்து வந்துள்ளன என்பது நபிகள் நாயகம் அவர்களுக்கு வழங்கப்பட்ட இறைச்செய்தி பற்றி திருக்குர்ஆன் மூலம் வெளியிடப்பட்ட இறை அறிவிப்பால் உணர முடிகிறது.

“(நபியே) உமக்கு முன் வந்த தூதுவர்களுக்குக் கூறப்பட்டது எதுவோ அதனையேயன்றி (வேறொன்றும்) உமக்குக் கூறப்படவில்லை.” (குர்ஆன் 41:43)

ஐம்பெரும் கடமைகள்
அனைத்துச் சமய அடிப்படை

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளின் அடித்தளம் உலகத்துச் சமயங்கள் அனைத்தின் அடித்தளமாக அமைந்திருப்பது அகிலத்துச் சமயங்கள் அனைத்தும் இறைவனால் அருளப்பட்டவையே என்பதற்குச் சான்றாக உள்ளது.

1. ஈமான் எனும் இறை நம்பிக்கை

2. தொழுகை எனும் இறை வணக்கம்

3. நோன்பு எனும் விரதம்

4. ஜக்காத் எனும் தான தருமங்கள்

5. ஹஜ் எனும் புனிதப் பயணம்

இந்த ஐந்து கோட்பாடுகளும் உலகத்துச் சமயங்கள் அனைத்திலும் காணப்படுவதிலிருந்தே இச்சமயங்கள் அனைத்தும் இறைவனால் அருளப்பட்டவை; ஒரே போக்குடையவை என்பது தெளிவாகிறது.

திருத்தமிலாத் திருமறை
மாற்றமிலா விதிமுறை

ஆனால், இறுதி வேதமாக இஸ்லாம் அமைந்திருப்பதனால் மற்ற வேதங்களில் வலியுறுத்தப்படாத பல்வேறு கட்டுக்கோப்பான வரன்முறையான அம்சங்கள் எந்தக் காரணம் கொண்டும், எவ்வித மாற்றங்களுக்கும் திருத்தங்களுக்கும் உள்படாதவாறு இஸ்லாத்தில் செம்மையாக அமைந்துள்ளன.

எல்லா வேதங்களையும் போல இஸ்லாத்திலும் இறைநம்பிக்கை வலியுறுத்தப்பட்டாலும், ‘ஒரே இறைவன்’ என்ற கோட்பாடு அசைக்கமுடியாத அடித்தளத் திலும் உருவாகியுள்ளது . எல்லாச் சமயங்களுமே இறை வணக்கத்தை வலியுறுத்துகின்றன. ஆனால், இஸ்லாம் ஒரு நாளைக்கு ஐவேளை இறை வணக்கம் கட்டாயம் நடைபெற வேண்டும் என விதிக்கிறது. உலகத்துச் சமயங்கள் அனைத்துமே நோன்பாகிய விரத்ததைப் பேணப் பணிக்கின்றன. ஆனால், இஸ்லாம் ஆண்டில் ஒரு மாதம் முழுமையும் பகல் முழுவதும் உண்ணாமலும், பருகாமலும் நோன்பு தோற்கக் கட்டளையிடுகிறது. தானதருமங்களைச் செய்யச் சொல்லாத சமயமே உலகில் இல்லை எனலாம். ஆனால் இஸ்லாமிய நெறி தங்கள் செல்வத்தில் நாற்பதில் ஒரு பங்கைத் தானம் செய்வதைக் கட்டாயக் கடமையாக்கியுள்ளது. புனிதப் பயணம் சென்று இறையில்லம் முன்பு எல்லோரும் சமம் என்பதை மெய்ப்பிக்க வேண்டுமென விதிக்கிறது. இந்த வரன் முறைக் கோட்பாட்டுக் கடமைகள் மட்டுமே பிற சமயங்களிலிருந்து இஸ்லாத்தை வேறுபடுத்திக் காட்டுகின்றன.

மேலும், இறைவன் தன் திருமறையாகிய திருக்குர்ஆனில்,

“(நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தையும் நாம்தான் உம்மீது அருளினோம். இது தனக்கு முன்னுள்ள (மற்ற) வேதங்களையும் உண்மையாக்கி வைக்கின்றது. அன்றி அவற்றைப் பாதுகாப்பதாகவும் இருக்கிறது.”

(குர் ஆன் 5:48)

எனக் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து இஸ்லாமியத் திருமறை, கடந்த காலங்களில் இறைவனால் தம் தூதர்கள் மூலம் வழங்கப்பட்ட உலகத்து மூல வேதங்களைப் பாதுகாக்கும் ஒன்றாகவும் அமைந்திருப்பதை அறிந்துணர முடிகிறது.

பிற சமயப் பழிப்பு
இஸ்லாமிய நெறிக்கு மாறானது

இவ்வாறு மக்களுக்கு நேர் வழிகாட்ட இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் நபிமார்களின் மீதும் அவர்களுக்கு வழங்கப்பட்ட வேதங்களின் மீதும் நம்பிக்கை வைப்பவனே உண்மையான முஸ்லிமாக இருக்க முடியும் என்பதை,

“(நபியே) அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (இவ்) வேதத்ததையும் உமக்கு முன் (இருந்த நபிமார்களுக்கு) அருளப் பெற்றவற்றையும் விசுவாசங்கொள்வார்கள்.” (குர் ஆன் - 2 : 4) என்று திருமறை கூறுவதன் மூலம் அறியலாம்.

இதிலிருந்து, பிற மதங்களை தூஷிப்பது, மதப் பெரியோர்களை அவமதிப்பது, பிற சமய வேதநூல்களை அவமதிப்பது, பிற சமய வேத நூல்களை இழிவு படுத்துவது, வணக்கத் தலங்களை சேதமுறச் செய்வது ஆகிய செயல்கள் இஸ்லாமியக் கொள்கைக்கு மாறானவை என்பது தெளிவாகிறது.

ஒவ்வொரு மனிதனுக்கும் தான் விரும்பும் மார்க்கத்தைப் பேணி நடக்க முழு உரிமையுண்டு என இஸ்லாம் விதிக்கிறது. இஸ்லாமிய ஆட்சி நடத்திய முஸ்லிம் மன்னர்கள் பிற சமயச் சடங்குகளில், மத அமைப்பு முறைகளில் தலையிடாமல், அந்தந்த சமயத்தைச் சார்ந்த நீதிபதிகளைக் கொண்டே அவ்வச் சமயப் பிரச்சினைகளில் தீர்ப்பு வழங்கச் செய்தனர் என்பது உண்மை வரலாறாகும். இதுவே பெருமானாரும் திருக்குர்ஆன் திருமறையும் காட்டிய வழி.

ஒவ்வொரு மனிதனும்
இறைவனின் பிரதிநிதியே

இஸ்லாத்தின் பார்வையில் மனிதன் மாபெரும் சிறப்புக்குரியவனாக மதிக்கப்படுகிறான். இன்னும் சொல்லப்போனால் மனிதன் இறையம்சம் பொருந்தியவனாக உள்ளான். மண்ணுலகில் மனிதன் இறைவனின் பிரநிதியாகவும் கருதப்படுகிறான். ஏனெனில், இறைவன் மனிதனைத் தன்னிலிருந்து படைத்தான்.

மனித குலம் முழுமையின் தோற்றுவாயாக விளங்குபவர்கள் ஆதாமும், ஹவ்வாவும் (ஏவாள்) ஆவர். இவர்கள் மூலம் மனித குலம் தழைத்ததைப் பற்றித் திருக்குர்ஆன்:

“மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால்) உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேலானவர் என்று பாராட்டிக் கொள்வதற்கில்லை. (எனினும்) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக்க கண்ணியவான்.” (குர் ஆன் 49 : 1.3)

ஆதாம் (அலை) ஹவ்வா வழியிலே பிறந்தவர்களின் பிறப்பு எண்ணிக்கை, இன்று அகில உலகிலும் இறந்தோர் போக எஞ்சியோர் ஐந்நூறு கோடிப் பேர்களாகும். இவர்கள் அனைவருமே ஒரே மூலத் தாய் தந்தையர் வழிவந்த சகோதரர்கள்; உடன் பிறப்புகள் என்பதுதான் நபிகள் நாயகம் போதித்த கோட்பாடு. அதுவே திருமறை தரும் கொள்கை.

அனைவரும் சோதரரே

எனவே, உலக மக்கள் அனைவரும் ஒரே குலத்தை, ஒரே இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதைத் திருமறை பல இடங்களில் வலியுறுத்திக் கூறுகிறது.

பெருமானாரும் இந்தக் கருத்தையே தம் வாழ்நாள் முழுமையும் போதித்து வந்தார். உடன்பிறந்த சகோதரர்கள் என்ற முறையில் சமத்துவமாக வாழ வேண்டியவர்கள் என்பதை எல்லா வகையிலும் வலியுறுத்தி வந்தார்.

பெருமானார் ஒரு சமயம் சில தோழர்களுடன் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அத்தெரு வழியே யூத சமயத்தைச் சார்ந்த யூதர் ஒருவருடைய இறந்த சடலத்தைச் சிலர் தூக்கி வந்தனர். இதைக் கண்ட அண்ணலார், அச்சடலம் தன்னைக் கடந்து செல்லும்வரை எழுந்து நின்று மரியாதை செய்தார். அவரது தோழர்களும் அவ்வாறே எழுந்து நின்று மரியாதை செய்தனர். பிண ஊர்வலம் சென்ற பின்னர் அமர்ந்தனர். அப்போது வியப்புடன் அவரது தோழர்கள் அண்ணலாரை நோக்கி, “இவ்வாறு எழுந்து நின்று மரியாதை செய்ததற்கு ஏதாவது சிறப்புக் காரணம் உண்டா?” என வினவினர். அதற்குப் பெருமானார் புன்னகை புரிந்தாவாறு, “அவரும் நம் சகோதரரே, ஒரு சகோதரன் மற்றொரு சகோதரனுக்குச் செய்யும் மரியாதையைச் செய்தேன்” என்று கூறி தோழர் தம் ஐயம் போக்கினார்.

இறந்தவர் மாற்றுச் சமயத்தைச் சேர்ந்தவர் என்று தெரிந்திருந்தும், அவரும் ஆதாம் (அலை) வழி வந்த தம் சகோதரரே எனக் கொண்டு, அவரது இறுதிப் பயணத்திற்கு எழுந்து நின்று மரியாதை செய்த மாநபியின் செயல் ஒவ்வொருவரும் பின்பற்றி ஒழுகத்தக்க வழிமுறையாகும்.

மனிதனின் சிறப்பு குலத்தாலும்
கோத்திரத்தாலும் இல்லை

தான் பிறந்த குலத்தின் காரணமாகவோ, தான் சார்ந்த இனத்தின் பேராலோ, தான் பேசும் மொழியின் காரணமாகவோ, பிறந்த நாட்டினாலோ, தான் பெற்ற கல்வியினாலோ ஒருவன் உயர்வு பாராட்டினால், அல்லது பேதம் காட்டினால் அது சாத்தானின் செயலாக இருக்குமே தவிர இறையம்சமான மனிதனின் செயலாக இருக்க முடியாது என்பது பெருமானாரின் உள்கிடக்கையாகும்.

அதே சமயத்தில் மனிதனுக்கு என்று ஓர் உயர்வுத் தன்மை உண்டு. ஒரு மனிதன் எந்த அளவுக்குத் தன்னை யொத்த மனிதர்களை நடத்துகிறான்; ஒழுக்க நியதிகளைப் பேணி நடக்கிறான்; மனிதர் என்ற அளவில் மற்றவருடைய உயிர், பொருள்களை கண்ணியப்படுத்துகிறான்; அவர் பின்பற்றும் சமயத்தை மதிக்கிறான்; எந்த அளவுக்கு யச்சமுடையவனாக, இறைவன் வகுத்தளித்த வழியில் வாழ்கிறான் என்ற அளவுகோல்களின் அடிப்படையில் அவன் உயர்வும் தாழ்வும் கணிக்கப்படுமே தவிர வேறு எவ்வகையிலும் அல்ல என்பது நாயகத்திருமேனியின் நல்லுபதேசத் திரட்டாகும்.

மனித குலம் முழுமையும்
இறைவனின் குடும்பம்

மனித குலம் முழுவதையுமே இறைவனின் குடும்பம் என இஸ்லாம் வர்ணிக்கிறது. மனிதர் ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் உபகாரம், தொண்டு அவர் முஸ்லிமாக இருந்தாலும் அல்லாது மற்ற சமயத்தவராக இருந்தாலும் அச்சேவையை இறைவணக்கம் என்று இஸ்லாம் சிறப்பித்துக் கூறுகிறது.

“உங்களின் சேவைகளுக்கும் தொண்டுகளுக்கும் முதல் உரிமை பெறுபவர்கள் உங்களின் அண்டை வீட்டார், அடுத்து உங்கள் பகுதி மக்கள், அடுத்து நாட்டு மக்கள்,” என்பது இஸ்லாம் வகுத்தளித்துள்ள வாழ்க்கை நெறியாகும்.

“யாரிடமிருந்து மனிதகுலத்துக்கு நன்மை கிடைத்துக் கொண்டிருக்கிறதோ அவன்தான் மனிதர்களில் சிறந்தவன்” என்பது நபிகள் நாயகத்தின் திருவாக்காகும்.

நன்றி : தினமணி