பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்/பெருமானாரும் அறிவியலும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
 
பெருமானாரும்
அறிவியலும்


மனிதப் பிறப்பின்
மாபெரும் சிறப்பு

படைப்புகளிலே மிக உயர்ந்த படைப்பாக அமைந்திருப்பவன் மனிதன். இறைவனின் பிரதிநிதியாக, இறையம்சம் உடையவனாக இறைவனால் படைக்கப்பட்டிருப்பவன் மனிதன்.

மனிதனைத் தவிர்த்துள்ள மற்றையய உயிரினங்களுக்கு வேண்டியவற்றையெல்லாம் இறைவன் வேண்டுமளவுக்கு வெளிப்படையாக கண் முன்னாலேயே கொடுத்துள்ளான். பிற உயிரினங்கள் அதிக முயற்சியின்றியே உண்ண உணவு, குடிக்க நீர், இருக்க இடம் ஆகிய அனைத்தும் அவை பெற்றுவிட முடியும். ஆனால், மனிதன்?

மனிதன் தனக்கு வேண்டிய எதனையும் தானாகவே முயன்று தேடிக் கண்டறிந்து பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்குத் துணையாக மனிதனுக்கு இறைவன் கொடுத்துள்ள அரிய வெகுமதிகளே பகுத்தறிவும் சிந்தனையாற்றலும்.

பகுத்தறிவின் துணைகொண்டு எதனையும் ஆய்ந்தறிந்து உண்மையுணர்ந்து பின்பற்றப் பணிப்பது இஸ்லாம். மக்களை வழிநடத்த இறைவனால் அனுப்பப்பட்ட அத்தனை நபிமார்களும் ஏதேனும் அற்புதங்கள் வியக்கத் தக்க வகையில் நிகழ்த்தி, அதன்மூலம் மக்களுக்கு அச்சம் கலந்த இறை நம்பிக்கையை ஊட்டி இறைவழி செலுத்தினர்.

ஆனால், இறுதித் தூதராக அவனிபுரக்க வந்த அண்ணல் நபிகள் நாயகம் (சல்) மக்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய, அற்புதங்களை நிகழ்த்தவில்லை. மந்திர தந்திரங்களால் மக்களின் அறிவுக்கு அப்பாற்பட்ட அமானுசிய காரியங்களை - இயற்கை கடந்த செயல்களைச் செய்து, அதன் மூலம் இறை நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. பகுத்தறிவைப் பயன்படுத்தி, சிந்திக்கத் தூண்டி, அதன் மூலம் உண்மையைத் தாங்களே உணர்ந்து தெளிந்து அதன் வழி ஒழுக, வழிகாட்டியவர் பெருமானார் அவர்கள்.

மனிதன் துய்த்து
மகிழவே அனைத்தும்

மனிதனுக்கு ஏவல் செய்ய, அவனுக்கு முழுமையாகப் பயன்படுவதற்கென்றே இறைவன் நிலத்தையும் வானத்தையும் நீரையும் காற்றையும் மலைகளையும் படைத்துள்ளான். அவற்றில் அவனுக்கு வேண்டிய அனைத்தையும் பொதிந்து வைத்துள்ளான். ஆனால், அவற்றில் பலவற்றை நேரடியாகக் கண்டு அனுபவிக்கும் வகையில் வைக்கவில்லை. மறை பொருளாக உள்ள அவற்றை, மனிதன் தன் பகுத்தறிவைக் கொண்டு, தன் சிந்தனை ஆற்றலின் துணையால் ஆய்ந்து கண்டறிய வேண்டும். அதன் பின்னரே அவற்றை அனுபவிக்கும் உரிமை மனிதனுக்கு உண்டு என்பது திருமறை கூறும் இறை கட்டளையாகும்.

மறை பொருளறிய
ஆய்வறிவு

“ஒரு நாழிகை நேரம் இறைவனின் படைப்புகளைப் பற்றிச் சிந்தனை செய்து நல்லறிவைப் பெற முயல்வது எழுபதாண்டுத் தொழுகையைவிட மேலானது.

இது மறைவழியே பெருமானார் உணர்த்தும் பேருண்மையாகும்.

ஒவ்வொரு மனிதனும் ஆய்வறிவோடு விளங்க வேண்டும் என்பதே இறைவனின் பெருவிருப்பமாகும்.

பெருமானார் அவர்கள் இறைவனிடம் மிகுதியாகக் கேட்டது “இறைவா! என் அறிவைப் பெருகச் செய்!” என்பதுதான்.

அறிவு வளர்ச்சிக்கு அடிப்படையான கல்விக்கு, பெருமானார் அளவுக்கு முக்கியத்துவம் அளித்தவர்கள்ள வேறு யாரும் இல்லை.

புதிய அறிவு புதிய செய்தி எங்கிருந்தாலும் எம் முயற்சியை மேற்கொண்டேனும் அதனைப் பெறத் தவறக் கூடாது எனப் பணித்தவர் அண்ணலார். ஆகவேதான், அக்காலத்தில் எண்ணிப் பார்க்க முடியாத தொலைதூரத்தில் கனவுலகம் போல் இருந்த சீனாவுக்குச் சென்றேனும் சீர் கல்வி பெற்றுத் திரும்பப் பணித்தார் பெருமானார் அவர்கள்.

“கல்வியைத் தேடுங்கள்; ஏனென்றால் இறைவனின் நல்லருளோடு அதைத் தேடுபவன் தூய செயல் செய்தவனாவான்; கல்வியைப் பற்றிப் பேசியவன் இறைவனைத் துதி செய்தவனாவான்; அதைக் கற்றுக் கொடுப்பவன் தர்மம் செய்தவனாவான்; தகுதியுடையவர்களிடையே அதைச் செம்மையாகப் பரப்புவன் இறைவனுக்கு வணக்கம் செய்தவனாவான்” என்பது நபி மொழியாகும்.

ஆன்ம வளர்ச்சிக்குப் பள்ளிவாசல்
அறிவு வளர்ச்சிக்கு மதரஸா

இறை வணக்கத்திற்கென பள்ளிவாசலை உருவாக்கிய பெருமானார் அவர்கள் அதன் ஒரு பகுதியிலே நாளும் அறிவை வளர்க்க, பெருகச் செய்ய ‘மதரஸா’ வையும் உருவாக்கிய அறிவுப் புரட்சிக்கு வித்திட்டார்கள். பள்ளிவாசல்களின் ஒரு பகுதியே பள்ளிக்கூடங்களாயின. அறிவுக்குத் துணை செய்யும்-வளர்க்க வழிகாணும் அனைத்துக் கல்விகளும் அங்கே வளர்க்கப்பட்டன.

இவ்வாறு இன்றைய விஞ்ஞானத்தின் அனைத்து கூறுகளும் வளமாக வளரும் வளர்ப்புப் பண்ணைகளாக அமைந்தவைகளே அன்றைய மதரஸாக்கள் என்பது மறக்கவோ மறுக்கவோ முடியாத வரலாற்று உண்மைகளாகும்.

‘அறிவு எங்கே இருந்தாலும் அதனைக் கற்றுக்கொள்’ எனப் பணித்த பெருமானாரின் அன்புக் கட்டளைக்கிணங்க, கிரேக்க நாட்டு அறிஞர்களால் வளர்த்து வளமாக்கப்பட்டிருந்த அறிவுச் செல்வங்கள் அனைத்தையும் கிரேக்க, லத்தீன் மொழிகளிலிருந்து அரபி மொழியிலே முனைப்பாக மொழிபெயர்க்கப்பட்டன.

அறிவியல் வளர்ச்சிக்கு
அடிப்படை அமைத்த முஸ்லிம்கள்

இதன் விளைவாக ஏழாம் நூற்றாண்டு முதல் பதினான்காம் நூற்றாண்டுவரை அரபு நாட்டில் விஞ்ஞானம் மிக வேகமாக வளர்ந்து வளமடைந்தன. இக்கால கட்டத்திலேதான் பூகோளம், பெளதிகம், இரசாயனம், மருத்துவம் என இன்றுள்ள அறிவியல் துறைகளுக்கெல்லாம் அழுத்தமான அடிப்படைகள் போடப்பட்டன.

இதன் பயனாக, பத்தாம் நூற்றாண்டின் உலகில் இருபெரும் மேதைகளாக அல்-புரூனியும் இப்னு சினாவும் விளங்கி, இன்றைய இயற்பியல், வேதியியல், மருத்துவம், முதலாகவுள்ள அறிவியல் துறைகளின் துரித வளர்ச்சிக்குப் பெருங்காரணமாய் அமைய முடிந்தது.

அரபி மொழியில் செழுமையாக வளர்ந்து அறிவொளி பாய்ச்சி நின்ற அறிவியல் உண்மைகளையெல்லாம் கிரேக்க, லத்தீன் மொழி அறிஞர்கள், அறிவியல் விற்பன்னர்கள் தங்கள் கிரேக்க, லத்தீன் மொழிகளில் முனைப்போடு அரபி மொழியிலிருந்து மொழி பெயர்த்துக் கொண்டார்கள். இந்த விஞ்ஞான அறிவுச் செல்வங்கள் மீண்டும் பதினைந்து, பதினாறாம் நூற்றாண்டுகளில் ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டன. இதுவே, ஐரோப்பிய விஞ்ஞான மறுமலர்ச்சிக்கு வித்திட்ட நிகழ்ச்சி.

தொழிற்புரட்சிக்குத் தூண்டுகோள்

இதுவே, இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற் புரட்சிக்கான மறைமுகக் காரணம். பின்னர், மின்னல், வேகத்தில் இன்றைய விஞ்ஞானம் வளர்ந்து உலகை வளமடையச் செய்து வருகிறது. அறிவியல் வரலாற்றாசிரியர்களால் சிலுவைப் போரின் பின்னணியில் இந்த வரலாற்று உண்மைகள் நீண்ட காலமாக மறைக்கப்பட்டு வந்தாலும், இன்றைய விஞ்ஞான ஆசிரியர்களால் மறக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள் ஆதார பூர்வமாக மெய்ப்பிக்கப்பட்டு வருகின்றன.

உலகத்திற்கு விஞ்ஞான வளர்ச்சிக்கு வித்தூன்றிய இஸ்லாமிய நெறியே அறிவியல் அடிப்படையில் அமைந்தது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெள்ளத் தெளிவான உண்மையாகும்.

திருமறை தரும்
அறிவியல் உண்மை

இன்னும் சுருக்கமாகச் சொல்வோமானால், இஸ்லாமிய நெறிகளின் வனப்பையும் வலுவையும் இன்றைய விஞ்ஞான உண்மைகளே மெய்ப்பித்து உறுதிப்படுத்தி வருகின்றன.

சான்றாக, ஒவ்வொரு முஸ்லிமும் தன் மறுமை நாளின் மீது அழுத்தமான நம்பிக்கை கொள்கிறான். இறுதித் தீர்ப்பின்போது அவரவர் செயல்களுக்கேற்ப இறைவனின் தண்டனையும் வெகுமதியும் அமையும்.

அந்த இறுதித் தீர்ப்பு நாளின்போது விசாரிக்கப்படும் ஒவ்வொரு மனிதனும் அவனது ஒவ்வொரு உறுப்பும் சாட்சியளிக்கும் என்பதைப் பற்றி, திருமறை.

“மறுமையில் மனிதனின் ஒவ்வோர் உறுப்பும் அவனுடைய உடல்தோறும் பேச ஆரம்பிக்கும். அவை இவ்வுலகில் மனிதன் செய்த ஒவ்வொரு செயலைப் பற்றியும் ஓர் அணுவும் விடாமல் அப்படியே ஒப்புவிக்கும். மனிதனுக்கு அவனுடைய உடல் உறுப்புகளே சாட்சி பகரும்.” (திருக்குர் ஆன்) எனத் தெளிவாகக் கூறுகிறது.

இதனை முழுமையாக எண்பிக்கும் அறிவியல் கண்டுபிடிப்பொன்றைக் கண்டறிந்துள்ளார் அமெரிக்க விஞ்ஞானி டாக்டர் ஆர்லன் கார்னே என்பவர். அவரது கண்டுபிடிப்புச் செய்தி 30-5-1984 அன்று வெளியான ‘டைம்ஸ் ஆஃப் இண்டியா’ இதழில் வெளிவந்துள்ளது.

“செவிப்பறை கிழிந்து விட்டாலோ, கடுமையான நோய்வாய்ப்பட்டாலோ பிறகு காதுகளால் ஒலிகளைக் கிரகிக்க முடியாது. அத்தகைய சந்தர்ப்பங்களில் விஷேசமாகத் தயாரிக்கப்பட்ட சில எலெக்ட்ரானிக் இயந்திரங்களின் துணைகொண்டு உடல் தோலையே காதுகளாகப் பயன்படுத்தலாம்” என்பது அவர் கூற்று. இந்தப் புதிய முறைக்கு அவர் ‘ஸ்கின் ஸ்பீச்’ (Skin Speech) எனப் பெயரிட்டுள்ளார்.

ஒவ்வொரு மனிதனும் பேசும் பேச்சொலியை உடலின் தோல்களே ஒலிப்பதிவு செய்து கொள்கின்றன. மின்னணுப் பொறியின் துணை கொண்டு பதிவான ஒலிகளை மீண்டும் கேட்க முடியும் என்பது இன்றைய அறிவியல் கண்டு பிடிப்பு. இதே உண்மையைத்தான் திருமறையும் தெளிவாக ‘மறுமையில் மனிதனின் ஒவ்வோர் உறுப்பும் அவனுடைய உடல்தோறும் பேச ஆரம்பிக்கும்’ எனக் கூறுகிறது.

இவ்வாறு, விஞ்ஞான நுட்பத்தின் அடிப்படையில் இறைமார்க்கமான இஸ்லாம் அமைந்துள்ளது என்பதை, பெருமானாரால் வளர்ச்சிக்கு வழி கோலப்பட்ட விஞ்ஞான உண்மைகளே எண்பித்து வருகின்றன என்பது அறிவுக்கு விருந்துட்டும், நெஞ்சினிக்கும் செய்தியாகும்.

நன்றி: தமிழ் முஸ்லிம் ஜமாத் தகவல் மடல் (சிங்கப்பூர்)