பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்/பெருமானார் போற்றிய எளிமையும் சிக்கனமும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to searchபெருமானார் போற்றிய
எளிமையும் சிக்கனமும்


அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்களின் பிறந்த நாள் விழா நானிலம் எங்கும் உள்ள மக்களால் சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகெங்கும் வாழும் 125 கோடி முஸ்லிம்களும் பிறரும் பெருமானாரின் வாழ்வையும் வாக்கையும் நினைவு கூர்ந்து போற்றுகின்றனர்.

போதித்தவர் மட்டுமல்ல
வாழ்ந்து காட்டியவர்

அண்ணலார் பெருமானார் (சல்) அவர்கள் இறை நெறியை மட்டும் போதிக்க வந்தவர் மாநபி அன்று. மறை கூறும் இறை நெறியை மனித குலத்துக்குச் செயல் வடிவில் வாழ்ந்து காட்டவும் வந்தவராவார். ஆகவே தான், இறைவன் தன் திருமறையில் “அவனிக்கோர் அருட்கொடையான அண்ணலாரை அழகிய முன்மாதிரியாக இவ்வுலகுக்கு அனுப்பியுள்ள”தாகத் தன் திருவேதமாகிய திருக்குர் ஆனிலே கூறியுள்ளான்.

எளிமைச் சிறப்பும்
சிக்கனப் பண்பும்

அண்ணலாரின் வாழ்க்கையின் எந்தப் பகுதியைப் புரட்டிப் பார்த்தாலும் அங்கே நீக்கமற நிறைந்திருக்கும் பண்பு எளிமைத் தன்மையாகும். வாழ்க்கையில் எத்தனைப் படித்தரங்கள் உண்டோ அத்தனைப் படித்தரங்களிலும் வாழ்ந்து காட்டிய இம்மனிதப் புனிதர், தொடக்கம் முதல் இறுதிவரை எளிமையின் உருவமாகவே வாழ்ந்து மறைந்த வராவார். ஏழைச்சிறுவராக வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல, பெருஞ்சொத்துக்கு அதிபதியாக அன்னை கதீஜா பிராட்டியாரின் கணவராக-மாபெரும் இஸ்லாமியப் பேரரசின் தலைமைப் பொறுப்பைப் பெற்றவராக வாழ்ந்த காலத்திலும் இவரை ஆடம்பரப் போக்குகள் அணுகியதே இல்லை. எளிமையின் உருவமாகவே வாழ்ந்து வழிகாட்டிச் சென்றவர் அண்ணல் நபி (சல்) அவர்கள்.

ஆடம்பரமற்ற எளிமையான சிக்கன வாழ்க்கை என்றால் அது கருமித்தனமாக வாழ்வது அல்ல. சிக்கனம் வேறு, கருமித்தனம் வேறு, நல்ல காரியங்களுக்கும் உன்னதமான நோக்கங்களுக்கும் நாம் வாரி வழங்க வேண்டும். அதே சமயத்தில், வீண்செலவுகளைப் பொருத்தவரை, அவற்றைச் சுருக்கி, சிக்கனப்படுத்த வேண்டும் என்பதுதான் பெருமானார் போதனை.

எளிமையின் எல்லைக்கோட்டில் வாழ்ந்த மனிதப் புனிதர் மாநபி அவர்கள் மண்ணால் கட்டப்பட்ட சிறிய அறைகளிலேயே வாழ்ந்து வந்தார்கள். அந்த வீட்டின் கூரை பேரீச்ச மர ஒலைகளாலேயே வேயப்பட்டிருந்தன. அண்ணலாரின் ஆடைகள் முரட்டுத்துணியாலானதாகவே இருக்கும். அவர்களின் படுக்கை மிகவும் எளிமையாக இருக்கும். பெருமானாரின் உடலில் படுக்கைப் பாயின் அழுத்தல் அடையாளங்கள் காணப்படுவதுண்டு அவரது படுக்கையில் சாதாரண தலையணையே இருக்கும்.

எளிமையின் இலக்கணமாக வாழ்ந்த பெருமானார் விரும்பியிருந்தால் ராஜபோகமாக வாழ்ந்திருக்க முடியும் அரபு நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருந்த பெருமானார் எத்தகைய ஆடம்பர வாழ்வையும் அனுபவித்திருக்க முடியும். ஆனால், எளிய வாழ்வே இன்பம் எனக் கொண்ட பெருமானாரின் இறுதிக் காலத்தில் அவரிடம் எஞ்சியிருந்தவை பழைய கட்டில், பழுதடைந்த ஈச்சம் பாய், பழைய கம்பளிப்போர்வை, சில சில்லரைப் பாத்திரங்கள் மட்டுமே.

இவ்வாறு எளிமையான, சிக்கனமான வாழ்க்கையைத் தான் மேற்கொண்டிருந்ததோடு அவற்றை மற்றவர்களையும் வாழத்துண்டி வழிகாட்டியவர் அண்ணல் நபி (சல்) அவர்கள்.

அண்ணலார் அடிச்சுவட்டில்
ஒளரங்கசீப் ஆலம்கீர்

இதே அடிப்படையில் தன் சிக்கனம் மிகுந்த எளிய வாழ்வைப் பெருமானார் பெருவழியில் வாழ்ந்து காட்டி மறைந்தவர் பாரத நாட்டின் பெரும் பகுதியை ஆண்டு வந்த ஒளரங்கசீப் ஆலம்கீர் என்பதை வரலாறு நமக்குக் காட்டிக் கொண்டிருக்கிறது. தான் நாட்டின் சக்கரவர்த்தியாக இருந்த போதிலும் அரசுப் பணத்தை அறவே தொடாது. தானே உழைத்து, தொப்பி தைத்தும் திருக்குர்ஆனுக்குப் படியெடுத்தும் அதனால் வரும் வருவாயைக் கொண்டு மட்டுமே தன் சொந்த வாழ்க்கைச் செலவுக்குப் பயன்படுத்தினார் ஒளரங்கசீப் சக்கரவர்த்தி அவர்கள்.

உழைப்பைப் போற்றிய
உத்தமத் திருநபி

எளிமைக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த பெருமானார் உழைப்பின் உன்னதத்தைத் தம் வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் உணர்த்தத் தவறவில்லை.

இறைவணக்கத்துக்கு அடுத்தபடியாகப் பெருமானாரால் பெரிதும் போற்றப்பட்ட பண்பு உழைத்து உண்ணும் பண்பாகும். ‘கடுமையாக உழைத்து அதன் மூலம் வரும் வருவாயைக் கொண்டு, தானும் உண்டு, தன் குடும்பத் தையும் வாழச் செய்பவன் மீது இறைவன் தன் கருணையைப் பொழிகிறான்’ எனக் கூறியுள்ளார். இத்தகைய உழைப்பாளிகளே சமுதாய முன்னேற்றத்தின் உந்து சக்திகள் என்பது நாயகத் திருமேனியின் உட்கிடக்கையாகும். இதனை இனிது விளக்கும் அரிய நிகழ்ச்சியொன்று பெருமானார் வாழ்வில் நடைபெற்றது.

ஒரு சமயம் பெருமானார் அவர்கள் பள்ளிவாசலில் தம் தோழர்களுடன் அமர்ந்திருந்தார். வழக்கமாகப் பள்ளிக்கு வருபவர்கள் பெருமானாரின் கரம் பற்றி முத்தமிட்டுச் செல்வது வழக்கம். அன்று வழக்கத்துக்கு மாறாக, தன் கரம் பற்றிய காட்டரபி ஒருவரின் கரத்தைப் பெருமானார் இறுகப்பற்றி, அக் கையை மகிழ்ச்சி பொங்க முத்தமிட்டார்கள். அந்த முரட்டுக் காட்டரபி அங்கிருந்து சென்ற பின்னர், “தங்கள் கையை பிறர் முத்தமிடுவது தான் வழக்கம். ஆனால், அந்த முரட்டுக் காட்டரபியின் கரத்தை இன்று தாங்கள் முத்தமிட்டதற்கு சிறப்பான காரணம் என்ன?” என்று வினவினார்கள்.

அதற்குப் பெருமானார் அவர்கள் “நீங்கள் என் கைகளைத் தொடும்போது, உங்கள் கைகள் மிருதுவாக இருக்கும். அதிகம் உழைக்காததால் அவ்வாறு இருப்பது இயற்கையே. ஆனால், இன்று அந்தக் காட்டரபி என் கரத்தைப் பற்றியபோது மிகவும் முரடாக இருந்தது. அவரது உள்ளங்கையைத் தடவிப் பார்த்தேன். மிகவும் சொர சொரப்பாக இருந்தது. கைகளால் மிகக் கடுமையாக உழைத்திருந்தாலொழிய உள்ளங்கை காய்ப்புக் காய்க்க வழியில்லை. அப்படிப்பட்ட உழைக்கும் கரத்தை முத்தமிடுவது, அதனைப் பாராட்டிப் போற்றுவது இறைவனுக்கு அடுத்த நிலையில் போற்றத்தக்கது உழைப்பு மட்டுமே” எனக் கூறி உழைப்பின் மேன்மையை உணர்த்தினார் பெருமானார் அவர்கள்.

உழைப்பும் ஒருவகை
இறைவணக்கமே

மற்றொரு சமயம் பெருமானார் முன்பாக ஒரு விவாதம் நடைபெற்றது. “இஸ்லாமியத் தோழர் ஒருவர் எப்போதும் இறைச் சிந்தனையிலேயே லயித்தபடி உள்ளார். ஐவேளைத் தொழுகையோடு அமையாது பகல் இரவு எந்நேரமும் இறை வணக்கத்திலேயே நாட்டமுடையவராக இருக்கிறார். யாரோடும் அதிகம் பேசுவதுமில்லை. வணக்கத் தலத்தை விட்டு வெளியே சுற்றித் திரிந்து எவ்வித வெளி இன்பத்தை நுகர்வதுமில்லை. இறைச் சிந்தனைக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்த இறையடியாராக உள்ளார்” என நபித் தோழர்கள் புகழ்ந்து பேசி, “இவர் எல்லோரிலும் மேம்பட்டவர் அல்லவா?” என வினவினர்.

இதைக்கேட்ட பெருமானார் அவர்கள் “இத்தொழுகையாளி உணவுக்கு என்ன செய்கிறார்?” என்று தம் தோழர்களை நோக்கிக் கேட்டார். அதற்கு நபித் தோழர்கள், “இவருக்கு ஒரு தம்பி உண்டு. இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் வேண்டிய உணவை அத் தம்பிதான் உழைத்துச் சம்பாதித்து அளித்து வருகிறார். அவர் ஐவேளைத் தொழுகைக்கு மேல் தொழுவதில்லை” என்று கூறினர்.

இதைக் கேட்ட பெருமானார் “அண்ணனினும் மேலானவர் அவர் தம்பி தான். மேலும், தம்பிக்கே சுவனப் பேரின்பமும் இறைவனால் வழங்கப்படும். ஏனெனில், கடுமையாக உழைத்து உண்பதை, பிறருக்கு உண்ணக் கொடுப்பதையே இறைவன் மிகவும் விரும்புகிறான். அவர்களே இறையருளைப் பெறத் தகுதி படைத்தவர்கள், இறைவன் பார்வையில் மேன்மைமிக்கவர்கள்” எனக் கூறி உழைப்பின் மேன்மையை, உழைத்துண்ணும் இன்பத்தையே உயரிய இன்பம், அதுவும் ஒரு வகையான வணக்க முறையே என்பதை உணர்த்தினார் பெருமானார் அவர்கள்.

உழைப்பின் பயனை அனுபவிக்கும்
உரிமை உழைப்பாளிகட்கே யுண்டு

அது மட்டுமல்ல, சிலர் உழைப்பதும் அவ்வுழைப்பின் பலனைப் பலர் அபகரித்து அனுபவிப்பதையும் இஸ்லாம் எதிர்க்கிறது. உலகில் எழும் பெரும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கெல்லாம் ஊற்றுக் கண்ணாக விளங்கும் இச்சுரண்டல் வாழ்க்கையைப் பெருமானார் கடுமையாக எதிர்க்கிறார். உழைப்பின் பலனை முழுமையாக அனுபவிக்கும் உரிமை உழைப்பாளிகட்கே உண்டு என முழங்குகிறது இஸ்லாம்.

“உழைத்துத் தொழில் செய்யும் இறையடியார் மீது இறைவன் அளவற்ற அன்பு காட்டுகிறான். உழைத்துத் தொழில் செய்யாது, பிறர் உழைப்பைச் சுரண்டி வாழ்வோர் மீது இறைவன் கடுங்கோபம் கொள்கிறான்.” என அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் மொழிந்துள்ளார்கள்.

இவ்வாறு என்றென்றும் போற்றிப் பின்பற்றத்தக்க உயரிய வாழ்க்கைப் பண்புகளைச் செயல் வடிவாக உலகத்துக்கு உணர்த்தி வழிகாட்டிச் சென்றவர் பெருமானார்.

நன்றி: அனைத்திந்திய வானொலி நிலையம், சென்னை.