உள்ளடக்கத்துக்குச் செல்

பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை/ஆற்றுப்படை இயல்பு

விக்கிமூலம் இலிருந்து



2. ஆற்றுப்படை இயல்பு

திரையன் புகழ் பாடவும், தம்போலும் புலவர் பல்லோர்க்கு வாழும் நெறிகாட்டவும் ஒரு சேர விழைந்த புலவர், தாம் திரையனைக் கண்டது, அவன் பொருள் வழங்கியது, ஆகிய நிகழ்ச்சிகளை, அப்புலவர்க்குத் தாமே கூறுவது அத்துணை நயம் பயப்பதாகாது என்று எண்ணினார் போலும்! அதனால், புலவர் புதுவழி ஒன்றை வகுத்துக் கொண்டார். புலவர் கண்ட அப்புது வழிக்கு ஆன்றோர் இட்டு வழங்கிய பெயரே ஆற்றுப்படை.

பண்டைத் தமிழகத்தில் பாக்கள் புனைந்து, பாராண்ட காவலரை நாவார வாழ்த்தியதோடு பைந்தமிழ் வளர்க்கும் பெரும் பணியும் புரிந்து வந்த புலவர்களேயல்லாமல், ஆடியும் பாடியும், அரசர்களையும் அவர் தம் குடிமக்களையும் மகிழ்வித்ததோடு ஆடல்பாடல்களாகிய அருங்கலைகளை அழியவிடாமல் பேணிப்புரக்கும் பெருந்தொண்டும் புரிந்துவந்த பாணர் பொருநர் கூத்தர் போலும் இரவலர்களும் வாழ்ந்து வந்தனர். இவர் தம் ஆடல் பாடல்களைக் கண்டும் கேட்டும், மன்னர்களும் மக்களும் மகிழ்ந்து வழங்கும் பொன்னும் பொருளுமல்லது, இவர்களுக்கு வாழத் துணை புரியும் விழுநிதி வேறு கிடையாது. புலவர்களைப் போலவே நாடு பல புகுந்து ஆங்காங்கு ஆட்சி மேற் கொண்டிருக்கும் அரசர்களையும் அரசர் நிகர் செல்வர்களையும் கண்டு பரிசில் பெற்றுத் தம் வறுமையைப் போக்கிக் கொண்டு தம் வறுமை தீர்ந்ததும், பிறரைப் பற்றிய கவலை யற்று அடங்கி விடாது, தமக்குப் பொருள் அளித்த புரவலனை வறுமையால் வாடும் தம்போல்வார் பிறர்க்கும் அறிமுகம் ஆக்கி, அவர்களை அவன்பால் போக்கும் பெரும் போக்கினராய் வாழும் பெருமை அவர்பாலும் பொருந்தி யிருந்தது.

இரவலர்களின் இவ்வியல்பை அறிந்தவர் புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார். அதனால் இவ்வி வலருள் இருபத்தொரு நரம்புகளைக் கொண்ட பேரியாழ் இசைக்கவல்ல பெரும்பாணர் குடியில் வந்தான் ஒருவனைத் தேர்ந்து அவன் வாய் வழியாகத் திரையனை அவன் சென்று கண்டது போலவும், திரையன் அவனுக்குப் பொருள் வழங்கியது போலவும், அப்பொருவளத்தோடு வீடு நோக்கி வருங்கால், வழியில் வறுமையால் வாடும் தன் இனப் பிறிதொரு பாணன் சுற்றத்தோடு எதிர்பட, அவனுக்குத் திரையனை அறிமுகம் செய்து, அவனை அவன்பால் போக்கியதாகவும், அவ்வாறு போக்கும் வகையால் திரையன் நாட்டுப்புரையில் பெருமைகளை முறையே எடுத்து மொழிந்தது போலவும், ஐந்நூறு வரிகளைக் கொண்ட இப்பாடலைப் பாடி முடித்தார். அதனால், இது பெரும்பாணாற்றுப்படை எனும் பெயர் பெறலாயிற்று.


“கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக்காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்று பயன் எதிரச் சொன்னபக்கமும்.’’

—தொல் புறத்திணையியல் பாடாண்திணை

2-1 பேரியாழ் பண்பு

தமிழகத்தின் வடவெல்லை நாடாக விளங்கிய தொண்ட நாட்டைக் கச்சியைத் தலைநகராகக் கொண்டு காத்து வந்தான் திரையன், அவன்பால் பரிசில் பெற்றுத் தன் ஊர் நோக்கி வந்து கொண்டிருந்தான் பெரும்பாணன் ஒருவன். அவ்வாறு வருவோன் இடைவழியில் தன்போலும் பாணன் ஒருவன், பசியால் வருந்தும் பெரிய சுற்றத்தாரோடு தளர்நடையிட்டு வருவதைக் கண்ணுற்றான். பாணர் குடியில் வந்தவனாதலின் அவன் கண்கள் எதிரே வரும் பாணன் கையில் இருந்த யாழ்மீதே முதற்கண் சென்றன. யாழ் இசைக்கும் குடியில் வந்து, யாழின் இயல்பெல்லாம் அறிந்திருந்தவனாதலின், அவ்வியாழின் பல்வேறு உறுப்புக்களின் அமைதியை நோக்கினான். அதிலும் வருவோன் வைத்திருப்பது யாழ்வகையுள் சிறந்ததான பேரியாழ். ஆகவே, அதன் ஒவ்வோர் உறுப்பையும் தனித்தனியே ஊன்றி நோக்கி, அவற்றின் அமைதியின் அழகை அறிந்து மகிழத் தலைப்பட்டு விட்டான்.

யாழ் வல்லான் பெருமை, அவன், அவ்வியாழைப் பேணி வைத்திருக்கும் வகையினாலேயே புலனாகும். யாழின் அருமை அறிந்தவன் அப்பெரும்பாணன் அதனால் காட்டு வழியில், யாழிற்குச் சிறுகேடும் நேராவாறு காப்பதில் பெரு விழிப்புடையவனாய் விளங்கினான். யாழ் மரத்தைத் தோலால் ஆன போர்வையால் நன்றாக மூடியிருந்தான். பரிசில் பெற்று வரும் பாணன் கண்களுக்கு முதற்கண் அத்தோற் போர்வையே தென்பட்டது. மேலும் தொலைவில் வந்து கொண்டிருந்த அவன் கருத்தை, அவ்வியாழ் நோக்கி ஈர்த்தது, அப்போர்வையின் கண்ணொளிக் கெடுக்கும் செந்நிறம். அவன் கண்களைக் கூசப்பண்ணி வியப்பிற்குள்ளாக்குமளவு சிவந்து விளங்கிய அச்செந்நிறம், அதைக் கண்ணுற்ற பாணனுக்கு வந்த வழியில் மலர்ந்து கிடந்த பாதிரி மலரை நினைப்பூட்டிற்று. பாதிரிப்பூவைப் பிளந்தால், அதன் உள்ளகம் காட்டும் செந்நிறத்தையொத்திருந்தது, அத்தோற்போர்வைக்கு ஊட்டப்பட்டிருந்த செந்நிறம்.

தோலின் செந்நிறத்திற்கு உவமை காணும் முகத்தான் பாதிரிமலரை நினைந்து கொண்ட பாணன் கருத்தில், பாதிரி மலரும் வேனிற்பருவம், வளமான மலர்களை வேனிற் பருவத்தில் மலர்வான் வேண்டி, அப்பருவம்வரும் முன் பாதிரி தன் இலைகளை உதிர்த்து விடுவது, தொடக்கத்தில் இலைகளை உதிர்த்துக் கேடு செய்வது போல் தோன்றிப், பின்னர் மணமும் மனம்மகிழும் நிறமும் உடைய மலர்களை மலர்த்தும் மாண்புமிக்க வேனிலுக்கு வெம்மை ஊட்டும் வெய்யில், அவ்வெய்யிலைக் காலும் ஞாயிறு, வெய்யிலால் வெம்மை ஊட்டிக் கொடுமை புரிவதுபோல், தோன்றினும், உலகோர் வெறுக்கும் இருளைப் போக்கி, விரும்பி வரவேற்கும் ஒளியை அளிக்கும் ஞாயிற்றின் பெருமை, அஞ்ஞாயிறு உலாவரும் வான்வெளி, அவ்வெளியின் பரப்பும் அகலமும், இலைகளை உதிர்ப்பதும் இருளை ஒழிப்பதுமாகிய அழிவுத்தொழில் மேற்கொண்டு கொடுமையுடையதுபோல் தோன்றினும், அத்தொழில்களைத் தொடர்ந்து மலர்களை மலர்த்துவதும், ஒளியைத் தருவதுமாகிய ஆக்கத்தொழில் மேற்கொண்டு நல்லனவே புரியும் தன்னாட்டு இயற்கைகளாகிய வேனிலும் ஞாயிறும் போலவே, கொடுங்கோல் கொன்று செங்கோல் வளர்க்கும் திரையன் ஆட்சி நலம் ஆகியவைகளை நினைப்பூட்ட, அந்நினைவலைகளால் சிறிது நேரம் அசைவற்றிருந்தான். இத்தனை எண்ணக் கோர்வைகள் எழுதற்குக் காரணமாயிருந்தது தோலின் செந்நிறம்.

தோலின் செந்நிறச் சிறப்பில் சிந்தையைப் பறிகொடுத்த, பாணன் சிறிது நாழிகை சென்றதும், அத்தோலை இணைக்க, தோலின் விளிம்புகளில் இட்டிருக்கும் துளைகளை உற்று நோக்கினான். ஒத்த வடிவுடையவாய், ஒரு சேர ஒழுங்காக, நெடுங்க இடப்பட்டிருந்த அத்துளைகள், பாக்கு மரத்தின் விரியாத இளம் பாளையைப் பிளந்து நோக்கியபோது, அதனகத்தே கமுசுங்கரு, இடையிடையே சிறுசிறு இடைவெளிகள் மட்டும் இடம்பெற, நெருங்க அடுக்கி வைத்திருக்கும் காட்சியை நினைவூட்டின. இயற்கையின் விளைவாம் அதுபோலும் இணைப்பைச் செயற்கையால் செய்துகாட்டிய, போர்வை புனைந்தவனின் கைத்திறன் அந்த அளவோடு நின்றுவிடவில்லை. துளை பல இட்டுத் தைக்க்ப்பெற்றிருப்பினும், அத்துளை காண்பவர் கண்களுக்கு அத்துளை எளிதில் புலனாகிவிடா, துளைகளின் ஊடே நுழைத்துத் தைத்திருக்கும் வார்கள் புலப்படாதபடி இணைப்புறும் இரு விளிம்புகளையும் உருக்கி ஒன்றாக்கி இணைத்தாற்போல், ஊசியிட்டுத் தைத்திருந்தான். இத்திறமெல்லாம் அமைய ஆக்கப்பெற்ற அத்தோற் போர்வையின் பெருமையை எண்ணி எண்ணிப் பெருமிதம் உற்றான் அப்பெரும் பாணன்.


"அகல் இருவிசும்பில் பாய் இருள் பருகிப்
பகல் கான்று எழுதரு பல்கதிர்ப் பருதி
காய்சினம் திருகிய கடுந்திறல் வேனில்
பாசிலை ஒழித்த பராஅரைப் பாதிரி
வள் இதழ் மாமலர் வயிற்றிடை வகுத்ததன்
உள்ளகம் புரையும் ஊட்டுறு பச்சைப்
பரியரைக் கமுகின் பாளைஅம் பசும்பூக்
கருவு இருந்தன்ன கண்கூடு செறிதுளை
உருக்கி அன்ன பொருத்துறு போர்வை"

(1-9)

அகல் இரு விசும்பில்—அகன்ற பெரிய வானத்தில், பாய் இருள் பருகி — பரந்து கிடக்கும் இருளைப் போக்கி, பகல் கான்று — ஒளியைப் பரப்பியவாறே, எழுதரு — எழுகின்ற; பல்கதிர்ப் பருதி — ஒளிக்கதிர்கள் எண்ணிலாதன உடைய ஞாயிற்றின், காய்சினம் திருகிய — காயும் வெய்யில் கொளுத்துவதால், கடுந்திறல் வேனில் — அழிவாற்றல் மிகுந்த வேனிற் பருவத்தில், பாசிலை ஒழித்த — பசுமை நிறம் வாய்ந்த
இலைகளை உதிர்ந்துவிட்ட, பராஅரைப்பாதிரி — பருத்த அடிமரத்தையுடைய பாதிரி மரத்தின், வள்இதழ் மாமலர் — வளமான இதழ்களைக் கொண்ட பெரிய மலரை, வகுத்ததன் உள்ளகம் புரையும் — இரண்டாகப் பிளந்தால் அதன் உட்புறத்தை யொக்கும், ஊட்டுறு பச்சை — செந்நிறம் ஊட்டப்பெற்ற தோலில், பாரிஅரைக் கமுகின் — பருத்த அடியினையுடைய பாக்கு மரத்தின், பாளைஅம் பசும்பூ — பாளையாகிய அழகிய இளம் பூ கருவுஇருந்தன்ன — விரியாமல் கருவாய் இருக்கும் காட்சிபோல், கண்கூடு செறிதுளை — நெருங்க இடப்பெற்ற துளைகள், உருக்கி அன்ன — உருக்கி ஒன்றாக இணைத்தாற்போன்று. பொருத்துறு போர்வை — வேறுபாடு தெரியாவாறு பொருத்தப் பெற்ற போர்வை.)

நல்லன ஆற்றுமுன் நல்லன அல்லனவற்றை அழிக்க வேண்டுவதன் இயல்பை உணர்த்தவே, வள்ளிதழ் மலர்களை மலர விடுவதன் முன்னர். பாதிரி பாசிலைகளை உதிர்த்து விடுவதைக் குறிப்பிட்டார் ஆசிரியர். இச்சிறப்பல்லது, அத்தொடரில் வேறு பொருள் காண இடமில்லையாகவும் "பாதிரி மரமாவது பாடலிமரம்; அது, இலையுதிர்ந்து நிற்கும் நிலையைக் கூறியது, இத்திரையன் காலத்தில் பாடலி அரசர் வலி குன்றியதனைக் குறிப்பால் உணர்த்தியதாம்" என்று விளக்கம் காண முயன்றுள்ளார் ஒருவர்.

பாலாற்றங்கரைப் பல்வேல் திரையனுக்கும், கங்கைப் பேரியாற்றுப் பாடலி அரசர்க்கும், அக்காலை எவ்விதத் தொடர்பும் இருப்பதற்கு வாய்ப்பே இல்லையாதலின் அவ்வாறு தொடர்பு படுத்தி வலிந்து பொருள் கொள்வது தேவையற்ற ஒன்று.

போர்வையின் பண்பு நலம் கண்டு பாராட்டிய பாணன் பார்வை, பின்னர்ப் பேரியாழின் உறுப்புக்களை அடைவே நோக்கவிரும்பி, முதற்கண் வாய் எனும் உறுப்பின் வனப்பைக் கண்ணுற்றது. யாழ் நரம்புகளை இயக்கியவிடத்து எழும் இசை, தெளிந்த ஒலியுடையதாக வெளிப்படுவது வாய் எனும் அவ்வுறுப்பின் வழியே யாம். யாழ் உறுப்புக்களுள் ஓசையை எழுப்புவது நரம்பேயல்லது வாய் எனும் அவ்வுறுப்பன்று. அதனால் உயிர்களின் வாயகத்தே ஒலியெழும்பும் உள்நாக்கு அமைந்திருத்தல்போல், யாழ் உறுப்பாம் வாயகத்தே உள்நாக்கு அமைந்திராது. மேலும் அது, அதற்குத்தேவையுமில்லை. ஆகவே, இவ்வாய், தொழிற்படாவெறும் வாயே யாம். வாய்போல் அகம் குடைந்து அங்காந்திருக்கும் உருவொப்புமை கண்டு வாயெனப்பட்டதல்லது. தொழில் ஒப்புமையால் அப்பெயர் பெற்றதன்று.

அவ்வாயின் குடைந்து குவிந்த அகத்தை நோக்கிய புலவர்க்கு. ஆங்கு இடங்கொண்டிருந்த இருட்செறிவு, வரும் வழியில், நீர்வேட்கை மிகுந்தபோது நெடிது அலைந்து கண்ட சுனைகள் எல்லாம் நீர் இன்றிக்கிடந்தமையால், நிழல் தோற்றுவிக்காது இருண்டு காட்டிய காட்சியைக் காட்டுவதாயிற்று. சுனையைக் கண்ணுற்றதும் நீர் நிறைந்து வழியும் எனும் நினைவினராய் நோக்குவார், ஆங்கு நீர் இல்லாமல் இருள் நிறைந்திருக்கக்கண்டு ஏமாந்து நெடுமூச்செறிவது போல், வாய் எனும் பெயருடையதாதலின், ஒலி எழுப்பும் உள்நாக்கு இதனகத்தும் அமைந்திருக்கும் எனும் அறிவினராய் அதன் அகத்தே நோக்குவார், ஆங்கு அதைக் காணாமை மட்டும் அன்று, மாறாக இருள் செறிந்த வெற்றிடத்தையே காண்பர். வாய் எனும் உறுப்பின் வனப்பு இத்தகைத்து.

வாய் எனும் அவ்வுறுப்பை அடுத்து பாணன் கண்கள் கடை எனும் உறுப்பில் சென்று நின்றன. ஏற்றியும் இறக்கியும் யாழ் நரம்புகளின் அமைப்பைச் சீர்செய்யப் பயன்படுவது அவ்வுறுப்பு. நரம்பினை ஏற்றவேண்டின், அதைவலமாகத் திருகவேண்டும். இறக்கவேண்டின் இடமாகத் திருகவேண்டும். அச்செயலை எளிதாக்குவதற்கு வாய்ப்பளிக்கும் வகையில், அதைக் கை எளிதில் பற்றித் திருகிச் செயற்படுத்துவதற்கு ஏற்ப, மூன்றாம் பிறைபோலும் வடிவினதாய், வெண்ணிறத் தந்தத்தால் வனைந்து பிறையைக் கவிழ்த்து வைத்த நிலையில் பொறுத்தி, யாழ் நரம்புகளை, அதில் வரிசையாக முடுக்கி வைத்திருப்பர். கடையின் பண்பும் பயனும் இது.

கடையின் வடிவழகும் வெண்ணிறமும் கண்டு வியந்த அவன் விழிகளை வார்க்கட்டு ஈர்த்தது. வார்க்கட்டை நோக்குவார் எவரும், அதற்கு இடமளிக்கும் யாழின் தண்டைக் காணாது, வார்க்கட்டைக் காண்பது இயலாது ஆதலின், வார்க்கட்டைக் கண்ணுறும் கண்கள், தம்மை அறியாமல் தாமாகவே தண்டையும் கண்ணுற்றன. மலை வளர் மூங்கில் போன்ற பருமையும் மென்மையும் பொருந்திய தோள்களைப் பெற்ற தோகை நல்லாரின் முன்கைகளும் வனப்புடையவாம் என்பது கூறாதே அமையும். அம்முன்கை போன்ற வடிவும் வனப்பும் உடையது அத்தண்டு. முறையே ஏற்றியும் இறக்கியும் ஏழிசைகளையும் எழுப்புதற்கு ஏற்ப, நரம்புகளைப் பிணிக்கும் வார்க்கட்டு, அத்தண்டில் அமைந்து கிடக்கும் காட்சி, மகளிர் முன்கையில் இறுகச் செறிந்திருக்கும் குறுவளைக் காட்சியைக் காட்ட கண்டு களிப்புற்றான் பாணன்.

யாழ் தண்டின் வடிவழகைக் கண்ணுற்றார்க்கு அதன் வண்ணம் புலப்படாது போகாதன்று. அதனால், அதன் வடிவமைதி அளிக்கும் வியப்பிலிருந்து விடுபடுவதற்கு முன்பே, அதன் வண்ணம் அவன் எண்ணத்தை ஈர்த்தது, தண்டின் நிறம் கறுப்பே என்றாலும், அக்கறுப்பு காண வேறுக்கும், கறுப்பு ஆகாமல், நவமணிகளில் சிறந்த கருநீல மணிகளை வரிசை வரிசையாகப் பொருத்தி வைத்தால், அவ்வரிசையினின்றும் வெளிப்படும் காண்பவர் கண்ணொளி கெடுக்கும் கருநீல நிறத்தையே, தண்டின் கருநிறமும் காட்டிக்க வினுாட்டித் திகழ்ந்தது.

யாழ்த்தண்டின் ஒளி கண்டு உளம் களித்த பாணன் இறுதியாக, யாழ் உறுப்புக்களில் சிறந்தனவும், தலையாயினவுமாகிய நரம்புகளின் அமைப்பினைக் கண்ணுற்றான். நரம்பு ஓரிடத்தே மெலிந்து, ஓரிடத்தே தடித்து ஒழுங்கற்று இருக்குமாயின், அந்நரம்பிலிருந்து எழும் இசையும் ஒழுங்கற்றுப் போய்விடுமாதலின் அந்நரம்புகள் ஒத்தபுரிகளை உடையவாயிருத்தல் மிக மிக இன்றியமையாததாகும். இக்கருத்தோடு, அந்நரம்புகளின் அமைப்பில் ஆராய்ச்சியைப் போக்கிய பாணன் அவை, உருக்கி நீட்டிய பொன் கம்பிகள் போல் புரியடங்கியும் கொடிமுறுக்கற்றும் ஆக்கப் பெற்றிருப்பதைக் காணவே, இவ்வாறு குற்றமற்ற உறுப்புக்களையே கொண்டு குறைவற அமைந்து, கேட்கக் கேட்க இனிக்கும் கேள்விச் செல்வமாம் ஏழிசை வெள்ளத்தை இனிமையுற எழுப்பும் அப்பேரியாழின் பண்பு நலம் பலவும் கண்டு பேரின்பமும் பெருமிதமும் கொண்டாள்.


"சுளை வறந்தன்ன இருள்தூ ங்கு வறுவாய்
பிறை பிறந்தன்ன பின் ஏந்து கவைக்கடை
நெடும்ப ணைத் திரள்தோள் மடங்தை முன்கைக்
குறுந்தொடி ஏய்க்கும் மெலிந்து வீங்கு திவவின்
மணிவார்ந்த தன்ன மரஇரு மருப்பின்
பொன்வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின்
தொடைஅமை கேள்வி."

(10-16)

(சுனைவறந்தன்ன—சுனைவற்றி உள் இருண்டுத் தோன்றுவது போன்ற, இருள்தூங்கு—இருள்செறிந்த வறுவாய்—உள்நாக்கு இல்லாத வாயினையும், பிறை

பிறந்தன்ன—பிறந்த மூன்றாம் பிறையை ஏந்தியிருப்பது போன்ற, பின்ஏந்து—பின்னால் ஏந்தி இருக்கின்ற, கவைகடை — இரண்டாகக்கவைத்த கடையினையும் நெடும்பணைத் திரள் தோள் மடந்தை—பருத்த மூங்கில் போல் திரண்ட தோள் அமைப்பினையுடைய மகளிருடைய, முன்கைக் குறுந்தொடி ஏய்க்கும்—முன் கையில் கிடக்கும் குறுவளைகளை யொக்கும், மெலிந்து விங்குதிவவின்—நெகிழவேண்டிய விடத்தில் நெகிழ்ந்தும் இறுக வேண்டிய விடத்தில் இறுகியும் ஏழிசை எழுதற்குத் துணை புரியும் வார்க்கட்டினையும், மணிவார்ந்தன்ன—நீலமணிகளை வரிசைப்படுத்தி வைத்தாற் போன்ற, மாஇரு மருப்பின்—கரியநிறம் காட்டும் பெரிய தண்டினையும் உடைய, பொன்வார்ந்தன்ன—பொன்னை உருக்கி நீட்டினாற்போன்ற, புரி அடங்கு நரம்பின—முறுக்கு அடங்கிய நரம்புகளின், தொடை அமை கேள்வி—கட்டு அமைந்த கேள்விச் செல்வமாம் ஏழிசை எழுப்பும் பேரியாழை.)

2-2 பாணன் பண்பு

பேரியாழின் பண்புநலம் கண்டு வியந்து நின்ற பாணன் "உறுப்புநலம் எல்லாம் ஒருசேர அமையப்பெற்ற இத்துணைச் சிறந்த இப்பேரியாழிற்கு உரிமையுடையவன் எத்துணைச் சிறந்தனாதல் வேண்டும், இதன் அருமை பெருமையறிந்து பேணிக் காக்கவல்ல பெருமையாரிடத்து மட்டுமல்லவோ இது இருக்கற்பாலது?" என்பன போலும் எண்ணங்கள் எழவே, அதைத் தொடர்ந்து, இத்தகு பேரியாழிற்குரிய அப்பெரும் பாணன் யாவன்? யாது அவன் இயல்பு? என்பன காணும் ஆர்வம் உந்த, அவன் கண்கள், யாழை விட்டு யாழிற்கு உரியானைக் காணத் துடித்தன.

அதுகாறும் அக்கண்கள் யாழின்மீதே சென்றிருந்தமையால், பெரும் பாணன் உடல் உறுப்புக்களுள், யாழ் ஏந்தி நிற்கும் இடக்கையே முதற்கண் புலப்பட்டது. யாழை,மார்பின் இடப்புறத்தில், அஃதாவது, அகத்தில் உடலின் உயிர்நிலையாகிய இரத்தப்பை கொலுவீற்றிற்கும் இடத்திற்கு நேராகக் கொண்டு, இடக்கையால் தன் அன்பெலாம் கவர்ந்து கொண்டாரை ஆரத் தழுவி நிற்பது போல் அணைத்துக் கொண்டிருந்தான். யாழ் மீட்டற்கு ஏற்ற நிலை அதுவாகவே, அவ்வாறு ஏந்தியிருந்தான் என்று கொள்ளலாம் என்றாலும், அது, அப்பேரியாழ்போல் அவன் கொண்டிருக்கும் அளவிறந்த பற்றையும் பாசத்தையுமே புலப்படுத்தி நிற்பதாக, அந்நிலை கண்டு, அப்பெரும் பாணன்பால் அவன் கொண்ட மதிப்பு அளவிறந்து பெருகிவிட்டது. ஆகவே, அவன் நலத்தின்பால் ஆர்வமும் மிகுந்து விட்டது.

பெரும்பாணன் உடலைப் பார்க்கின்றான். உரம் ஊட்டும் உணவு பெறாது உருக்குலைந்து போயிருந்தது அவ்வுடல். எலும்பும் தோலுமாய்க் காட்சி அளித்த அவ்வுடல் தனக்கு இயல்பாக இருந்த அழகையும் இழந்து காட்சி அளித்தது. வறுமைக் கொடுமை, அவ்வுடலையும், அவ்வுடல் தாங்கி நிற்கும் உள்ளத்தையும் அந்தளவு துன்புறுத்தி விட்டது.

பேரியாழ்இயல்புணர்ந்து பண் இசைக்குமளவு பண்பட்ட உள்ளம் உடையான் ஒருவன், தன் வாழ்க்கையில் உளவாம் செல்வ நிறைவு கண்டு செம்மாந்து போவதோ, அதன் தேய்வு கண்டு துயர்வுற்றுத் துடித்துப்போவதோ, செய்யான். ஆகவே இவன் மேனியின் வனப்பினை மாற்றுமளவு வாட்டுவது, இவன் வறுமைத் துயர்மட்டுமாதல் இயலாது, அதற்கு வேறு சிலவும் காரணமாதல் வேண்டும். பண்புமிகு உள்ளம் வாய்க்கப் பெற்ற பாணனின் மேனியையும் வாட்டி வருத்தும் அது யாதாதல் கூடும் என்று எண்ணி யிருக்கும் நிலையில், அவன் காதுகளில், பலர்கூடி ஓலமிடும் அழுகையொலி வந்து புகுந்தது. புகவே, அது வந்த திசைக்கள் தன் பார்வையைப் போக்கினான். ஆங்கே வறுமையின் நிலைக்களமாய் ஒரு பெருங் கூட்டம் காட்சி அளித்தது. ஒட்டிய வயிறும் உருக்குலைந்த உடலும் உடையவாய அவரெல்லாம் இப்பாணனால் புரக்கத்தக்கவர். இவன் பெரும் பரிசில் பொருளால் உண்டு வாழ்பவர்; இவனுக்குப் பரிசில் கிடைக்காதாயின் தாம் பசியால் துடிக்க வேண்டியவர். ஆக, தன்னால் தாங்க வேண்டிய அவர்கள் தளர்ச்சி கண்டே இவன் மனம் கலங்குகின்றான். அவ்வுள்ளக் கலக்கமே இவன் உடல் நலத்தை நசுக்கிவிட்டது.

அம்மட்டோ! "பாணன் பறையன் துடியண் கடம்பன் என்று இந்நான்கல்லது குடியுமில்லை" எனப் போற்றத்தக்க பழம் பெரும் சிறப்பு வாய்ந்ததுதான் நான் பிறந்த பாண்குடி. ஆனால், அக்குடிப் பெருமையால், என் குடி வந்தாரின் வறுமைத் துயரைப் போக்க முடியவில்லையே. பேரியாழ்வல்லவன்தான் யான். ஆனால் நான் பெற்றிருக்கும் இசைக்கலை அறிவால், இவர்கள் வறுமையைப் போக்க வழியில்லையே, வாடும் சுற்றத்தின் வயிற்றுப் பசியைப் போக்க மாட்டா எனக்குக் குடிப்புகழ், குறை காணலாகா இசைக்கலை அறிவு இவையும் ஒரு கேடா?" எனப் பிறந்த குடியையும் பெற்ற கல்வியையும் பழிக்கத் தலைப்பட்டு விட்டது இவன் வாய்.

அம்மட்டோ பாணன் வாய், கற்ற கல்வியையும் பிறந்த குடியையும் பழிக்கிறது என்றால், இவன் உள்ளம் இந்த உலகையே பழிக்குமளவு துணிந்திருந்தது. "பார்த்தவர் பசியையும் போக்குமளவு பரந்து கிடக்கும் கடல் நீரால் சூழ்ந்ததுதான் இவ்வுலகம் இருந்தும் என்ன பயன்? அக்கடல் நீர் நா வேட்கையைத் தணிக்க மாட்டாமை ஒருபுறம் கிடக்கட்டும். உடல் மாசைப் போக்கவாவது அது ஒருப்படுமோ? ஒரு சிறிதும் படாது. பெரு நீர்நிலைதான், ஆனால் பயனற்றது. அத்தகு கடலால் சூழப்பட்டிருப்பதால் இவ்வுலகம் என் ஒருவனை மட்டுமோ அலைய விட்டுளது? தாங்கித் தளர்ச்சி நீக்குவாரைப் பெறாமல் யானும் என் சுற்றமும் மட்டுமோ அலைகிறோம்? இல்லை; வறுமையால் வருந்தும் எம்மைக் கொடு வெய்யிலால் கொளுத்தி மேலும் வருத்துகிறதே இதோ இந்த ஞாயிறு இதுவும் அலைகிறது. இதன் சுற்றமும் அலைகின்றன; திங்களும் அலைகிறது; அதன் சுற்றமும் அலைகிறது. யானும் என் சுற்றமும் பகலில் மட்டுமே அலைகிறோம். இரவில் எங்கேனும் ஓய்வு கொள்கிறோம்; ஆனால் இவையோ என்றால், ஓய்வு ஒழிவு இன்றி, இரவு பகல் இருபோதுமல்லவோ அலைகின்றன! என்னே இவ்வுலகின் கொடுமை! பலர் நின்று போற்ற பெருமித நிலையில் வீற்றிருக்கத் தக்க விழுக்குடிப் பிறப்பும், பழிப்பில் கல்வியும் பெற்றிருந்தும், வாழ்விழந்து வருந்துவாரைத் தாங்கிப் புரக்கவல்ல தண்ணளி அற்ற இவ்வுலகும் ஓர் உலகா? இதில் இருந்து வாழ்வதைக் காட்டிலும் இறந்து மறைந்து போவதே மாண்படைத்து. ஆனால் அந்தோ! அவ்விறப்பு தானும் எம்மை எட்டிப் பாரேன் என்கிறதே என் செய்வோம்?" என்று கூறாமல் கூறி ஏங்கி இரங்குகிறது அவன் இனிய உள்ளம். அவ்வுள்ளத் துடிப்பைப் பாணன் முகக் குறிப்புப் பறைசாற்றி நின்றதாக உணர்ந்து கொண்ட பரிசிலொடு மீள்பவன், அவன் உள்ளம் உணர்ந்து உரைக்கத் தலைப்பட்டான்.

பாணன் துயர்போக்கத் துணிந்தவன், பாணன் வாய் உற்றகுடியையும் கற்ற கல்வியையும் பழிக்க, அவன் உள்ளம் இவ்வுலகையை வெறுத்து ஒதுக்குகிறது என்றாலும், அவன் உள்ளத்தில் அடித்தளத்தில், இத்தகைய உலகிலும் தளர்ந்தாரைத் தாங்கும் தண்ணளிமிக்கார் சிலர் எங்கேனும் இருத்தல் வேண்டும்; நம் கண்ணிற்கும் கருத்திற்கும் எட்டாதிருக்கும் அவரை அணுகிவிட்டால் நம்துயரெல்லாம் தீர்ந்துவிடும் என்ற் நம்பிக்கை வேரூன்றியுள்ளது என்பது உண்மை. அந்நம்பிக்கை இல்லாதிருந்தால், இவன், தன் சுற்றத்தைக் கூட்டிக்கொண்டு, இக்கோடையில், இத்துணை தூரம் கால் கடுக்க அலைத்து திரிய மாட்டான். எங்கோ, எப்போதோ இவனும் இறந்து போயிருப்பான்; இவன் சுற்றமும் மறைந்து போயிருக்கும். அவ்வாறு உயிரிழந்து போய்விடாது தன் பெரும் சுற்றத்திற்கு உறுதுணையாகி ஓடி வருகின்றான். ஆகவே, இவன் உள்ளத்திலும், உயிர் வாழ உறுதுணைபுரிய வல்லாரைப் பெறலாம் என்ற நம்பிக்கை உளது. ஆகவே, இவன் மனத் தடுமாற்றத்தை மாற்றி நம்பிக்கை ஊட்டி, நற்றுணை புரிவது இயலும் என்ற துணிவு பிறக்கவே, நின்று உரையாடும் ஆங்கே நிற்கும் ஒரு நெடிய குன்)ைப் பாணனுக்குக் காட்டி, "பாண! நின்முன் காட்சி அளிக்கும் இக்குன்று, மழைதரு , முகிற்கூட்டத்தால் சூழ்ந்து கிடப்பதற்கு மாறாக, வேனில் வெப்பம் தாளாது, வியன் ஞாலம் வியர்த்து வெளிப்படுத்தும் நீராவியால் சூழ்ந்து கிடக்கும் காட்சியைக் காணும் நீ, 'இவ்வுலகில் மழை நீர் என வாரி வழங்கும் வள்ளல்கள் மறைந்து விட்டாராக, புகை மண்டலம் போல் பிறர்க்குப் பயன்படல் ஆகா மக்கட்பதர்களின் வாழ்விடமாகி விட்டதே இவ்வுலகம்! இவ்வுலகில் பிறர் அளிக்கும் பரிசில் பெற்று பிழைப்பதல்லது, பிழைக்கும் வழி வேறு காணா எம்போல்வார் எங்ஙனம் வாழ்வோம்' என்றெல்லாம் எண்ணி எண்ணி வருந்துவை என்பதை யான் அறிவேன்; ஆனால், பாண! அவ்வாறு நம்பிக்கை இழக்க வேண்டுவதில்லை. பாணர்க்கும் பொருநர்க்கும் பரிசில் அளித்துப் புரக்கவல்ல பெரியோர் சிலர் இலைமறை காய் போல் ஆங்காங்கே இருப்பது உறுதி. இதோ பார்; வேனிற் கொடுமையால் மரங்களெல்லாம் வாடி நிற்கும் இக்காலத்திலும் பறவைகள் பெருங்கூட்டமாய்ப் பறந்து பறந்து திரிகின்றன என்றால், தமக்கு உணவாகிப் பயன் அளிக்க வல்ல பழ மரங்கள் சில, இவ்வேனிற் பருவத்திலும் எங்கேனும் இருக்கும். அவற்றைத் தேடிக் காண்பதே நாம் செய்ய வேண்டுவது என்ற நம்பிக்கையால் அன்றோ, அவை ஓயாமல் பறந்து, தேடித் திரிகின்றன. அப்பறவைக் காட்சி, உன் உள்ளத்திலும் அந்நம்பிக்கையைத் தலை தூக்கச் செய்யவில்லையோ? கோடையின் கொடுமையுணராது. சேணெடும் தொலைவு சென்று பறக்கும் பறவைக்குள்ளது போலும் பறக்கும் வாய்ப்பு இல்லாததையும் பொருட்படுத்தாது. காடு என்றும் மேடு என்றும் கருதாது, மணல் என்றும் மடுவு என்றும் மருளாது, இரவு பகல் இருபோதும் ஒய்வின்றிக் கால்கடுக்க அலைந்து தேடினால் தளர்ந்தாரைத் தாக்கும் தண்ணளிமிக்காரைப் பெறலாம்; அந்நம்பிக்கை உடைமையால் நான் பெற்ற பயன்களும் பலவாம். நின் கவலை விடுத்து யான்கூறும் சிலவற்றிக்குச் சிறிதே காது கொடுப்பாயாக!" என்ற தோற்றுவாயோடு வழித்துணை புரியத் தொடங்கினான்.


"தொடையமை கேள்வி இடவையின் தழீஇ
வெந்தெறல் கனலியொடு மதி வலம் திரிதரும்
தண்கடல் வரைப்பில் தாங்குநர்ப் பெறாது
பொழிமழை துறந்த புகைவேய் குன்றத்துப்
பழுமரம் தேரும் பறவை போலக்
கல்லென் சுற்றமொடு கால்கிளர்ந்து திரிதரும்
புல்லென் யாக்கைப் புலவுவாய்ப் பாண!"

(16-22)

(தொடை அமைகேள்வி—கட்டு அமைந்த கேள்விச் செல்வமாம் ஏழிசை எழுப்பும் பேரியாழை; இடவயின் தழிஇ—மார்பின் இடப்பக்கத்தில் வைத்து அணைத்துக் தொண்டு; வெந்தெறல் கன்வியொடு—கொடிய அழித்தல் தொழிலையுடைய ஞாயிறோடு; மதி வலம் திரி தரும்—திங்களும் வலமாகத் திரியும்; தண்கடல் வரைப்பில்—குளிர்ந்த கடல் சூழ்ந்த உலகில்; தாங்குநர்ப் பெறாது—பொருள் அளித்துப் புரப்பவரைப் பெறாமல்: பொழிமழைதுறந்த — பெய்யும்
மழை மறந்துவிட்டமையால்; புகைவேய் குன்றத்து—நிலத்திலிருந்து வெளிப்படும் நீராவி படர்ந்த மலை நாட்டகத்தில்; பழுமரம் தேடும் பறவுை போல; கல்லென் சுற்றமொடு—பசி மிகுதியால் அழுது புலம்பும் சுற்றத்தாரோடு; கால்கிளர்ந்து திரிதரும்—ஓரிடத்தும் அடங்கியிராமல் கால்கடுக்க அலைந்து திரியும்; புல்லென் யாக்கை—வறுமையால் நலிந்து வனப்பிழந்து போன உடலையும்; புலவுவாய்—வறுமை தீர்ந்து வாழ்வளிக்கமாட்டாக் கல்வியே எனக் கற்ற கல்வியை பழிக்கும் வாயையும் உடைய; பாண—பாணர் தலைவனே!)