பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை/பதிப்புரை
பதிப்புரை
இருபதாம் நூற்றாண்டு தமிழகத்தின் வரலாற்றில் தனக்கென ஒரு சிறப்பிடத்தைப் பெறத்தக்க வகையில், நல்ல தமிழ் அறிஞராக, வரலாற்றுத் திறனாய்வாளராக, செந்தமிழ்ப் பேச்சாளராக, இலக்கியப் படைப்பாளராக, பாதை மாறாத பகுத்தறிவுவாதியாக, அப்பழுக்கற்ற அரசியல் தலைவராக, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவராக, என பல்திறன் படைத்த நற்றமிழ்ப் புலவராக விளங்கியவர், புலவர் கா. கோவிந்தனார் அவர்கள்.
"தமிழுக்கும், தமிழ்ப் புலவர்கட்கும், தமிழ் நாட்டுக்கும் தொண்டாற்றத் தன்னையே அர்ப்பணித்தவர்" என்று பேரறிஞர் அண்ணா அவர்களால் பாராட்டப் பெற்ற பேறு பெற்றவர், பைந்தமிழ்ப் புலவராய் உயர்ந்து, சங்கத் தமிழ் ஏடுகளிலெல்லாம் திளைத்து, வரலாற்றுக் கண் கொண்டு ஆய்ந்து, தொல்காலத் தமிழர் வாழ்வை இக்காலத்தவரும் தெளிந்திடுமாறு தேன் தமிழ்ச் சுவடிகளாக வரைந்து வழங்கிய பெருமை உடையவர், புலவர் கா. கோவிந்தனார் அவர்கள்.
புலவர்களுள் பெரும் புலவராய் விளங்கி, திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனத்தாரின் 'புலவரேறு' பட்டம், தமிழக அரசின் 'திரு. வி. க.விருது', மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் 'தமிழ்ப் பேரவைச் செம்மல்' பட்டம் போன்ற சிறப்புகளைப் பெற்ற புலவர் அவர் தமிழ்ப்பணி பொன்விழாக் கண்ட பெருமையினையுடையது."என் தமிழ்ப்பணி" என்ற தலைப்பில், புலவர் எழுதிய கடைசி கட்டுரையில், "என் எழுத்துப்பணி தொடரும். குறள் பற்றி, சங்க இலக்கியங்கள் பற்றி பல தலைப்புகளில் நூல் எழுதக் குறிப்பு எடுத்து வைத்துள்ளேன். "கல்வி கரையில், கற்பவர் நாள் சில." காலம் இடம் தந்தால் என் எழுத்துப்பணி தொடரும்" என்று அவர் தம் தமிழ்ப் பணியைத் தொடர வேண்டும் என்ற தணியா ஆவலை வெளியிட்டுள்ளார். ஆனால், காலம் இடம் தரத் தவறி விட்டதனால், முற்றுப் பெறாத நிலையிலே அவருடைய எழுத்துப் பணி எச்சமாகவே நின்று போயிற்று! காலம் செய்த கொடுமை அது!
தமிழால் உயர்ந்து, தம் தமிழ்ப்பணி மூலம் தமிழுக்கும் உயர்வு தேடித் தரும் வகையில், எழுத்துலகம் நினைவு கொள்ளும் வண்ணம் நூற்பணியாற்றிய புலவர் அவர்கள், 'செத்தும் பொருள் கொடுத்த சீதக்காதி வள்ளல்' போலத் தம் மறைவிற்குப் பின்னும் தமிழுக்கு அணி செய்யும் வகையில் பல இலக்கியப் படைப்புகளைத் தம் கையெழுத்து வடிவிலே அளித்துச் சென்றுள்ளார்.
அந்த எழுத்துச் சுவடிகளையெல்லாம் அச்சு வடிவில் வெளியிடுவதைத் தன் தலையாய கடமையாக எழிலகம் ஏற்று,
"வள்ளுவர் சொல்லாட்சி மாட்சி"
"மனையுறை புறாக்கள்"
ஆகிய இலக்கிய நூல்களையும்,
தமிழக வரலாறு—வரிசை என்ற பெயரில்,
'தமிழக வரலாறு-சங்க காலம்-அரசர்கள்'
'தமிழக வரலாறு-கோசர்கள்'
'தமிழக வரலாறு-கரிகாற் பெருவளத்தான்'
பத்துப்பாட்டு விளக்கம்-வரிசை எண்-2 என நெடுநல்வாடை விளக்கவுரையை 'மனையுறை புறாக்கள்' என்ற தலைப்பில் வெளியிட்ட நாங்கள் இன்று,
பத்துப்பாட்டு விளக்கம்—வரிசை-எண் 3
'பெரும்பாணாற்றுப்படை—விளக்கவுரை'என்ற இந்த நூலைத் தமிழ்கூறு நல்லுலகத்தின் முன் படைக்கிறோம்.
"மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீ இத் தாம் மாய்ந்தனரே"
என்ற புறநானூற்று மொழிகளுக்கேற்ப, புகழுடம்பு பெற்று விட்ட புலவர் பெருந்தகை, இறவாத புகழுடைய இலக்கியங்கள் பலவற்றைத் தமிழன்னைக்கு அணி செய்ய அளித்து விட்டுச் சென்றுள்ளார். புலலர் அவர்களின் முன்னைய படைப்புகளுக்குத் தமிழகத்துப் பெரியோர்களாகிய தாங்கள் காட்டிய பேரன்பையும், பாராட்டையும், ஆதரவையும் தொடர்ந்து அளித்திட வேண்டுகிறோம்.
"தமிழுக்குக் தொண்டு செய்வார் சாவதில்லை' என்றார் பாவேந்தர். தம் வாழ்நாள் முழுவதும், காலம் கரம் பிடித்து அழைத்துப் போன அந்தக் கடைசி நொடி வரை, தமிழ்ப்பணி ஆற்றிய புலவர் அவர்கள் வாழ்வார்: அவர் தமிழ் உலகிற்கு அளித்துச் சென்றுள்ள இலக்கியச் செல்வங்கள் உள்ளவரை என்றென்றும் நிலைத்து வாழ்வார்; தமிழறிந்தோர் நெஞ்சமெல்லாம். நிலைத்து வாழ்வார் என்பது உறுதி!
—எழிலகம் பதிப்பகத்தார்