உள்ளடக்கத்துக்குச் செல்

பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை/பாடிய புலவர்

விக்கிமூலம் இலிருந்து


பாடிய புலவர்
கடியலூர் உருத்திரங்கண்ணனார்

பத்துப்பாட்டினுள், பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய இரு பாட்டுக்களைப் பாடிய பெருமை பெற்ற புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் ஆவர். இவ்விரு பெரும்பாக்களே அல்லாமல் நெடுந்தொகை, குறுந்தொகை ஆகிய இரு நூல்களிலும் ஒவ்வொரு செய்யுள் இவர் பாடியனவாகக் காணப்படுகின்றன. பட்டினப்பாலையினைப் பாடக் கேட்ட திருமாவளவன், இவர் பெருமையறிந்து பதினாறு நூறாயிரம் பொற்காக பரிசளித்தான் எனப் பாராட்டுவர் கலிங்கத்துப்பரணி ஆசிரியர் சயங் கொண்டார்.

கடியலூர் உருத்திரங்கண்ணனாரால் பாராட்டப் பெற்றோர் தொண்டைமான் இளந்திரிையனும் சோழன் கரிகாற் பெருவளத்தானுமாவர். இவ்விருவர் குறித்தும் பாராட்டி எழுந்த பாடல்கள் முறையே பெரும்பாணாற்றுப் படையும், பட்டினப்பாலையுமாம்.

உருத்திரங்கண்ணனாருக்குரிய கடியலூர் யாண்டுளது என்பது தெளிவாகத் தெரிந்திலது. கடியலூர், பாண்டி நாட்டு ஊர்களுள் ஒன்று; அது திருநெல்வேலி மாவட்டத்தில் உளது என்பர் சிலர். இவராற் பாடப் பெற்றோர் இருவரும் சோணாட்டினும், அதற்கு வடக்கின் கண்ணதாய தொண்டை நாட்டினும் அரசோச்சியராதலின், உருத்திரங் கண்ணனார் சோணாட்டைச் சேர்ந்தோராவர் எனக் கூறுவர் வேறு சிலர். எந்நாட்டினராயினும், சோணாட்டின் இயல்புகளைச் சிறக்க அறிந்தவர் என்பது அவர் பாடல்களால் புலனாகும்.

உருத்திரங்கண்ணனார், உருத்திரன் என்பாரின் மகனாவர், இவர் அந்தணர். இது, "ஊரும் பேரும்" என்ற தொல்காப்பியம் மரபியற் சூத்திரத்திற்கு உரைகண்ட பேராசிரியர், "கடியலூர் உருத்திரங்கண்ணன் என்பன அந்தணர்க்கு உரியன" எனக் கூறுவதால் தெளிவாம். "இரு நிலம் கடந்த திருமறுமார்பின் முந்நீர் வண்ணன்’ எனத் திருமாலையும், "காந்தளம் சிலம்பில், களிறுபழந்தாங்குப் பாம்பணைப்பள்ளி அமர்ந்தோனாங்கன்" என திருவெஃகாவையும், "நின்ற வுருவின் நெடியோன் கொப்பூழ், நான்முக ஒருவற் பயந்த பல்லிதாழ்த் தாமரைப் பொருட்டு" என திருமாலின் திருவுந்திக் கமலத்தையும் பாராட்டியிருத்தலின், அவர் திருமாலை வழிபடும் சமயத்தினராவர் எனக்கோடல் பொருந்தும்.

"திரையன், திருமாலை .முதல்வனாக கொண்ட குடியிற்பிறந்தவன்; திரைதருமரபின் வழி வந்தவன். காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு நாடாண்டவன். வேள்வி வேட்கும் அந்தணர்கள் நிறைந்த வேங்கடமலையும் அவன் ஆட்சிக்குப்பட்டதே. தொண்டையர் குடிவந்தவன்" என இளந்திரையன் வரலாறு பற்றிய குறிப்புகளை அளித்துள்ளார்.

"திரைதரு மரபின் உரவோன் உம்பல்"
"அல்லது கடிந்த அறம்புரி செங்கோல் பல்வேல் திரையன்"
"கச்சியோனே கைவண் தோன்றல்"
"தொண்டையர் மருக"

—பெரும் பாணற்றுப்படை- (29-37; 319-420; 498-500; 450-454)

திருமாவளவன் சிறையினின்றும் வெளிம்போந்த நிகழ்ச்சியும், அவன் ஒளியர், அருவாளர், ஆகியோரை அடக்கியதும், நாடு வளம் பெறச் செய்ததும், கடியலூர் உருத்திரங் கண்ணனாரால் பட்டினப்பாலையில் விளங்க உரைக்கப்பட்டுள்ளன.


நீரில்வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின்வந்த கருங்கறி மூடையும்
... ... ... ... ... ...
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகு.

—பட்டினப்பாலை-185-193

புகார்த்துறையில், உரிய சுங்கத்தினைப் பெற்றுப் பெறப்பட்ட பொருள்கள் மீது, பெற்றதற்காம் அறிகுறியாகத் தங்கள் அரச இலாஞ்சனையாகிய புலியைப் பொறித்துப் போகவிடுவர் என பட்டினப்பாலையிலும், உள்நாட்டுப் பெருவழிகளில் வண்டிகளில் கொண்டுவரப்படும் பொருள்கள் மீது சுங்கம் கொண்டனர் என பெரும் பாணாற்றுப்படையிலும் அக்கால அரசர்கள் மேற்கொண்ட நடைமுறைகளை புலப்படுத்தியுள்ளார்.


உல்கு செயக் குறைபடாது
... ... ... ... ... ...
புலிபொறித்துப் புறம்போக்கி

—பட்டினப்பாலை-120-135


"அணர்ச்செவிக் கழுதைச் சாத்தொடு வழங்கும்
உல்குடைப் பெருவழி"

—பெரும்பாணாற்றுப்படை-79-82.

சோணாட்டின் செழிப்புக்குக் காரணமான காவிரியை, அதன் பிறப்பிடம் கூறிப் பாராட்டும் புலமை நலம் போற்றற்குரியது.


"வான் பொய்ப்பினும் தான்பொய்யா
மலைத்தலைய கடற்காவிரி
புனல்பரந்து பொன்கொழிக்கும்"

—பட்டினப்புாலை-5-7

கடியலூர் உருத்திரங்கண்ணனார் புலமை நலம் சான்ற பெரியராவர். அவர் பாக்கள் அரிய நயம் பல செறிந்து தோன்றும். அவர் எதைக் கூறினும் ஏதேனும் ஓர் அரும்பொருளை உள்ளடக்கியன்றிக் கூறார். அவர் அழகிய உவமைகளை எடுத்து ஆளவேண்டிய இடம் அறிந்து ஆளும் அறிவினராவார்.


"முழவின் அன்னமுழுமா உருளி"

—பெரும்பாணாற்றுப்படை-47

தான் தனித்திருக்கப் பொருள் தேடிப்போன தலைவனை, பகற்காலமெல்லாம் தான் வாழ்ந்திருந்த மரத்தைத் தனியேவிட்டு பழந்தேடிப்போகும் வெளவாலோடு ஒத்திட்டு, கணவனைப் பிரிந்திருக்கும் தலைவி கூறுவதுபோல உருத்திரங்கண்ணனார் இயற்றியப் பாடல் ஒன்று குறுந்தொகையுள் இடம் பெற்றுள்ளது.


"பகல் உறை முதுமரம் புலம்பப் போகும்
சிறுபுள் மாலை..."

—குறுந்தொகை-352.

பொருள் தேடிப்போகும் தலைவன் கூற்றாக அமைந்த பாடல் அகநானூற்றில் இடம் பெற்றுள்ளது.


வயங்குமணி பொருத வகையமை வனப்பிற்
... ... ... ... ... ...
போர்மடி நல்லிறைப் பொதியி லானே.

—அகம்-167