உள்ளடக்கத்துக்குச் செல்

பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை/விருந்து ஓம்பும் எயினர்

விக்கிமூலம் இலிருந்து



5. விருந்து ஓம்பும் எயினர்

காஞ்சி வழி கொடுமை அற்றது; காவல் மிக்கது என்பதை உறுதி செய்வதற்காகத், தான் கூறிய விளக்கங்களால், பெரும்பாணனுக்கு வழியச்சம் அற்றிருக்கும். ஆனால், காஞ்சியை ஒரு நாளிலோ, ஓர் இரவிலோ அடைந்து விடுதல் இயலாது. பாலை, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற நிலவகைகளை யெல்லாம் கடந்து சென்றால்தான் காஞ்சியைக் காண இயலும். நாள் பல நடக்க வேண்டியிருக்கும். அத்தனை நாட்களுக்கு வேண்டிய உணவினை உடன்கொண்டு செல்வதும் இயலாது. இரவுக்காலத்தே இருந்து செல்வதற்கு வேண்டிய இடங்களுக்கு என்ன செய்வது! என்ற எண்ண அலைகள் பெரும்பாணனை அலைக்கழிக்கவும் கூடும் என உணர்ந்த காரணத்தால், கடந்து செல்ல வேண்டிய இடைவழியில் குறுக்கிடும் அந்நிலங்களின் இயல்பையும், இந்நிலங்களில் வாழும் மக்களின் இயல்புகளையும், அவர்கள், வழிப்போவார் அனைவர்பாலும் பொதுவாகவும், திரையன் அவை நோக்கிச் செல்லும் பாணர் போலும் இரவலர்பால் சிறப்பாகவும் காட்டும் பேரன்பு நிலைகளையும் விரிவாகவும் எடுத்துக் கூறத் தொடங்கி, பெரும்பாணன் முதற்கண் அடியெடுத்து வைக்கயிருக்கும் பாலை நிலத்தவர் பற்றிக் கூறமுற்பட்டார்.

மழை பெறாக் கடும் வறட்சியாலும், ஞாயிற்றின் கொடும் வெப்பத்தாலும் காய்ந்து தீய்ந்து போன குறுங்காடுகள் இடையிடையே இடம்பெறும் பெருமணல் பரப்பாகிய பாலை நிலக் கொடுமை கண்டு கலங்க வேண்டுவதில்லை; செல்லும் வழியில், அப்பாலை நிலத்து மக்களாம் எயினர் குடியிருப்புக்களை ஆங்காங்கே காணலாம். உழுது பெறவல்ல நெல் போலும் நன்செய்ப் பொருள்களோ, தினை சாமை போலும் புன்செய்ப் பொருள்களோ ஆங்குக் கிடைப்பது அரிது. அவர்களுக்குக் கிடைப்பதெல்லாம் புல் அரிசி ஒன்றே. அப்புல் அரிசியும் எளிதில் கிடைத்து விடாது. சிறிதே மழை பெய்யுங் காலத்தில் முளைத்து முற்றி உதிரும் புல் அரிசியை, எறும்புகள், தங்களுக்கு ஆண்டு முழுமைக்கும் வேண்டும் குறிக்கோளுடன் ஒவ்வொன்றாக ஈர்த்துச்சென்று, தங்கள் வளைகளுள் சேர்த்து வைத்திருக்கும். அத்தகைய வளைகள் உள்ள இடங்களைத் தேடிக் கண்டு பிடித்து வளைகளைத் தோண்டி ஆங்குள்ள புல்லரிசிகளைத் திரட்டிக் கொண்டு வருதல் வேண்டும். எறும்புகள், அரிசியை, வளைகளின் ஆழமான பகுதியில் சேர்த்து வைத்திருக்கும் ஆதலாலும், நிலம் வன்னிலம் ஆதலாலும், வளைகளை எளிதில் தோண்டுவது இயலாது. ஒரு பக்கம் அடிக்க அடிக்க, தலை விரியாதிருப்பதற்காகக் கட்டப்பட்ட இரும்புப் பூணும், மறு பக்கம், கரையில் செருகப்பட்ட உளி போலும் வடிவுடைய இரும்புக் கடப்பாரையும் உடையவாக, ஆச்சா அல்லது கருங்காலி போலும் வயிரம் மிக்க மரத்தால் ஆன, பருத்த தடி கொண்டு, வளைகளைச் சிறிது சிறிதாகக் குத்திக் குத்திக் கிளரி மண்ணை அகற்றி அரிசியைப் பிரித்து எடுக்கவேண்டும். ஒரு வீட்டில் வாழ்வார் அனைவர்க்கும் தேவைப்படும் அவ்வளவு புல்லரிசியையும், ஒரே வளையில் பெற்றுவிட இயலாது. உள்ள எறும்பு வளைகள் அவ்வளவையும் தோண்டி எடுத்தல் வேண்டும். அப்பணி, வீட்டில் உள்ள ஒரு சிலரால் மட்டும் ஆகிவிடாது. வீட்டில் உள்ள அனைவரும் சென்று தோண்டுதல் வேண்டும். அண்மையில் ஈன்று எடுத்த மகவோடு, மெத்தென்ற மான் தோல் மீது முடங்கிக் கிடப்பது அல்லது எழுந்து நடமாட இயலாதவளாகக் காணப்படும் ஒருத்தி தவிர்த்து ஆண், பெண், இளையோர், முதியோர் அத்துணை பேரும் சென்று வளை தோண்டினால் தான் ஓரளவு அரிசியையேனும் கொண்டுவர இயலும், ஆக அவர்கள் ஈட்டி வைத்திருக்கும் அப்புல்லரிசி அவ்வளவு அரும் பாடுபட்டுப் பெற்றதாகும்.

சோறுக்கு வேண்டும் புல்லரிசியாவது, அப்பாலை நிலத்திலேயே ஒரு வகையில் கிடைத்து விடும். ஆனால், துணை உணவாகும் காய்கறியைக் காண்பதே இயலாது. வெகுதொலைவில் உள்ள கடற்கரையைச் சேர்ந்த நெய்தல்நிலத்து மீனவர்கள், பச்சை மீனாக விற்றது போக, விலையாகாது விடப்படும் மீனை உப்பிட்டு உலர்த்தி விற்பனைக்காகக் கொண்டு வரும்போது வாங்கி வைக்கும் கருவாடு தவிர்த்து வேறுபொருள் கிடைப்பது அரிது. அக்கருவாடு தானும் நினைத்தபோது கிடைத்துவிடாது. மீனவர்கள் வரும்போது வாங்கி வைத்திருந்தால்தான் உண்டு.

ஆக, எயினர், தங்களுக்கு உணவாகப் பயன்படும் புல்லரிசியையும் கருவாட்டையும் கெடாமல் பேணிக் காப்பதில் விழிப்புடையவர்களாக இருப்பர். மக்கள் உட்கொள்ளும் உணவு வகைகளில் கடைசி தரத்தைச் சேர்ந்தவை இவை. ஆகவே, இவற்றை, அப்பாலை நிலத்து எயினர்களைத் தவிர்த்து வேறு நிலத்து மக்கள் விரும்பமாட்டார்கள். மேலும் எயினர்கள் கொடியவர்கள். மற்றவர் அவர்களைக் காணவும் நடுங்குவர். அதனால், அவ்வுணவுப் பொருள்களுக்கு மக்களால் அழிவு நேராது. ஆனால், இவற்றையும் திருடிச் செல்லும் பகைவர் இல்லாமல் போய்விடவில்லை. பாலை நிலத்தில், இவை தவிர்த்து வேறு உணவுப் பொருள் கிடைக்காது என்றால் அந்நிலத்து வாழ் அணில், எலி போலும் உயிர்களுக்கு வேறு என்ன கிடைத்து விடும். அவையும் இவற்றை நம்பியே உயிர் வாழும். அதனால் அவ்வுணவுப் பொருள்களுக்கு அணில்களாலும், எலிகளாலும் வரும் கேடு மிக மிக அதிகமாம். அதனால், அரும்பாடு பட்டு ஈட்டி வைத்திருக்கும் அவ்வுணவுப் பொருள்கள் அணில் வாயிலும், எலி வாயிலும் விழுந்து விடாதபடிக் காப்பதில் எயினர் மிகவும் கருத்துடையவராக இருப்பர்.

தம்குடில்களைக் சூழ உள்ள இடங்களில் ஆடி மகிழும் அணில்களைக் காணும் எயினர் உள்ளத்தில், மெத்தென்ற பஞ்சுபோலும் மென்மையான மயிர் சிலிர்த்துத் தோன்ற, வரிவரியான கோடுகளோடு கூடிய அவற்றின் அழகிய முதுகு, உயர்ந்த அடியினை உடைய இலவ மரத்தின் நீண்ட கிளைகளில் காய்த்து, அகத்தே இருக்கும் பஞ்சு புறத்தே தோன்றுமளவு முற்றி வெடித்துத் தொங்கும் இலவங் காய்களை நினைவூட்டி மகிழ்ச்சி அளிக்கும் என்றாலும், தங்கள் உணவுப் பொருள்களுக்கு அவ்வணில்களால் ஆபத்து உண்டாகும் என்ற உணர்வு, குடிசைகளுள் அவ்வணில்களையும் நுழையு விடாதபடி பார்த்துக்கொள்வாயாக என நினைவூட்டிவிடும்.

அதனால், தம் குடியிருப்புக்களை அணிலும், எலியும் நுழையாதவாறு அமைத்துக்கொள்வர். ஈச்ச மரத்தின் மட்டைகள், வேலின் முனைபோலும் கூரிய வலிய முனை வாய்ந்த இலைகளை அடர்த்தியாகக் கொண்டவை. அவ்வீச்ச மட்டைகொண்டு குடில்களின் கூரைகளை அமைத்தால், அணிலோ, எலியோ நுழையாது. அதனால், எயினர் ஈச்ச மரங்களைத் தேடிச் சென்று, வெள்ளம் வடிந்த ஆற்றுப் படுகையில் அறவிட்டிருக்கும் மணல்போல் காட்சிதரும் அடியையுடைய அம்மரத்து மட்டைகளை வெட்டிக்கொண்டு வந்து, குடில்களைத் தொலைவிலிருந்து நோக்குவார்க்கு முள்ளம் பன்றியின் முதுகுபோல் காட்சிதரும் வகையில் தம் வீட்டுக் கூரையை அமைத்து இருப்பர்.

வாழிடம் குடில்களே ஆயினும், பாதுகாப்பு மிக்கது. என்பதாலும், புல்லரிசியும் , கருவாடும் வேண்டுமளவு சேமித்து வைக்கப்பட்டுள்ளன என்பதாலும், அக்குடில்களின் இல்லத்து அரசிகளாம் எயிற்றியர் உள்ளத்தில் எப்போதும் மகிழ்ச்சி குடிகொண்டிருக்கும். அவ்வக மலர்ச்சி, வெண்பல் வரிசை புலப்பட வாய்நிறைய வெளிப்படும் சிரிப்பால் நன்கு புலப்படும். அவ்வெயிற்றியர் உணவு சமைக்கும் முறையும் பாராட்டத்தக்கதாகும். முதற்கண், புல்லரிசையை மூடிக்கொண்டிருக்கும் உமியையும் ஆடையையும் நீக்க முனைவர். அதற்கு, அதை உரலில் இட்டுக் குற்றுதல் வேண்டும்.

பழகிய மானைக் கொண்டு பழகாப் புது மான்களைப் பிடிப்பது ஒரு முறை. அதனால் எயினர் மனை ஒவ்வொன்றிலும், அவ்வாறு பழகிய மான் ஒன்று வளர்க்கப்பட்டு வரும். பார்வை மான் என அழைக்கப்படும் அந்த மானைக் குடிலின் முற்றத்தே வள்ர்ந்து நிற்கும் விளா மரத்தில் கயிறுகொண்டு கட்டி வைப்பர். மான் சுற்றிச் சுற்றி வருவதால், மரத்தில் கட்டிய கயிறும் சுற்றிச் சுற்றி வந்து மரத்தின் அப்பகுதியை தேய்த்துவிட்டிருக்கும். இவ்வாறு பார்வை மான் பிணிக்கும் கட்டுத் தறியாகவும் பயன்படும் அவ்விளா மரம், குடில்வாழ் மக்கள் தளர்ச்சி அற்று உழைப்பதற்கு உறுதுணையாக, முற்றத்தில் நிறை நிழலை பரப்பி நிற்கும். அம்மரத்தின் அடியில் புதைக்கப்பட்டிருக்கும் கல்லுரலில் புல்லரியை இட்ட எயிற்றியர், வயிரம் பாய்ந்த குறுகிய உலக்கை கொண்டு பல முறை குற்றி உமியும் ஆடையும் போக்கி எடுத்துக் கொள்வர். பின்னர் சமைப்பதற்கு வேண்டிய தண்ணீர் கொண்டுவரச் செல்வர். நிலம் வன்னிலம், வறட்சி மிக்கது. அதனால், கிணறு ஆழமாகத் தோண்டியிருப்பினும், கல்லூற்றாகவே இருப்பதால் தண்ணீர் சிறிதளவே கிடைக்கும். அதுவும், பருகுவதற்கு இனிய நன்னீராக இராது. உவர் நீராகவே இருக்கும். ஆயினும் அது தவிர்த்து வேறுநீர் கிடைக்காது. அதனால் அந்நீரை மொண்டு வந்து சேர்வர். அடுப்பில் தீ மூட்டுவர். கொம்மை முரிந்து கிடக்கும் அவ்வடுப்பில், சோற்றுப் பானையை ஒருவாறு நிறுத்துவர். பானை பழைய பானை, அதனால் வாய் உடைந்திருக்கும். அம்மூளிப்பானையில் நீர் ஊற்றித் தீ மூட்டுவர். நீர் கொதிக்கத் தொடங்கியதும், முன்பே உமிபோக்கியும், கல் நீக்கியும் இருப்பதால் புல்லரிசியை நீரில் இட்டு அரித்து எடுக்காமல், நேரே உலையில் இடுவர். இவ்வாறு அரும்பாடுபட்டு ஆக்கிய புல்லரிசிச் சோற்றைக் கருவாட்டுடன் கலந்து, அனைவரும் ஒருங்கிருந்து உண்டு மகிழ்வர்.

அவ்வெயினர்கள் உணவு உண்ணப் புகும் நிலையில் பாணர் போலும் இரவலர்களைப் பார்த்துவிட்டால், உடனே உண்பதை விடுத்து ஓடிச்சென்று எதிர்கொண்டு அழைத்து, வருவர். வந்தவர்களின் ஊர், பேர், உற்றார் பற்றி உசாவுவர். வந்தவர்கள், பிறர்மேல் வலியச் சென்று போரிட விரும்பாது, பிறர் ஆணவம் மிகுந்து, தம் ஆற்றலை நிலை நாட்ட வலிய போர் மேற்கொண்டு வருவராயின், அவரை அழித்து வெற்றி கொண்டு அது பாராட்டி அரசு சூட்டும் பொன்னாலான தும்பை மலர் மாலை அணிந்து சிறக்கும் சிறப்புமிகு வீரர்களுக்குத் தலைவனும், பகைப்படை எவ்வளவு வலிவு மிகுந்த பெரும்படை ஆயினும், அப்படையை வென்று முன்னேறுவதல்லது, தோற்றுப் பின்னிடாப் பெருமை மிகு நாற்படை கொண்டவனும், இவ்வாறு ஆற்றல்மிகு வீரர்களையும் நாற்படைகளையும் உடைமையால், களம், பலவென்று, அது பாராட்ட, காலில், அரிய வேலைப்பாடு அமைய பொன்னால் ஆக்கப்பெற்ற வீரக் கழல் புனைந்தவனும், பல்வேறு வளங்களைக் கொண்டு இருப்பதோடு, நின்ற கோலத்து நெடுமால் கோயில் கொண்டிருக்கும் வேங்கடமலை நாட்டை, உடையவனும் ஆகிய இளந்திரையன் புகழை வாயாரப்பாடிய பின்னர், அவனைப் பாடிப்பாராட்ட அவன் அவை நோக்கிச் செல்லும் பாணர்கள் யாம் எனக்கூறியது கேட்ட அக்கணமே,திருவுடை மன்னனாம் திரையனைத் திருமாலாகவே கருதி அன்பு செலுத்தும் எயினர்கள். அவன் புகழ்பாடும் பாணர்களையும் கடவுளர் வடிவங்களாகவே மதித்துத் தம்பசியையும் மறந்து, பாணனையும் அவன் உடன் வந்திருப்பார் அனைவரையும் அமர்த்தி, அவர் முன் பரப்பிய தேக்கிலைகளில், ஆக்கி வைத்திருக்கும் உணவைத் தெய்வங்களுக்குப் படையல் இடுவது போன்ற உளநிறைவோடு படைத்து, அவர்கள் அது உண்டு மகிழ்வது கண்டு மனம் நிறை மகிழ்வெய்துவர். நிலம் வன்னிலம் ஆயினும் எயினர் உள்ளம் மென்மையானது. அந்நிலத்துக் கிணற்றில் நீர் ஊறாது; ஆயினும் எயினர் உள்ளத்தில் அன்பு ஊறும். நிலம் பாலைதான்; ஆனால்; ஆண்டுவாழும் எயினர் பசுமையான உள்ளம் வாய்ந்தவர். ஆகவே பயம் அற்றுக் செல்வாயாக என்றார்,


"நீள்அரை இலவத்து அலங்கு சினை பயந்த
பூளைஅம் பசுங்காய் புடை விரிந்தன்ன
வரிப்புற அணிலொடு கருப்பை ஆடாது
ஆற்று அறல் புரையும் வெரிக் உடைக் கொழுமடல்
வேல் தலை அன்ன வைந்நுதி நெடும் தகர்
ஈத்து இலை வேய்ந்த எய்ப்புறக் குரம்பை
மான் தோல் பள்ளி மகவொடு முடங்கி
ஈன்பிபணவு ஒழியப் போகி, நோன்காழ்
இரும்புதலை யாத்த திருந்துகணை விழுக்கோல்
உளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி
இடுநிலக் கரம்பைப் படுநீறு ஆடி
நுண்புல் அடக்கிய வெண்பல் எயிற்றியர்
பார்வை யாத்த பறைதான் விளவின்
நீழல் முன்றில் நில உரல் பெய்து
குறுங்காழ் உலக்கை ஓச்சி, நெடுங்கிணற்று
வல் ஊற்று உவரி தோண்டித், தொல்லை
முரவுவாய்க் குழிசி முரி அடுப்பு, ஏற்றி
வாராது அட்ட வாடு ஊன் புழுக்கல்
வாடாது தும்பை வயவர் பெருழகன்
ஓடாத் தானை, ஓண் தொழில் கழற்கால்
செவ்வரை நாடன் சென்னியம் எனினே
தெய்வமடையில் தேக்கி இலை குவைஇ, நும்
பைதீர் கடும்பொடு பதம் மிகப் பெறுகுவீர்".

(83–105)

(நீள்அரை இலவத்து—நீண்ட அடியினை உடைய இலவமரத்தின்; அலங்கு சினை பயந்த—ஆடுகின்ற கொம்பு காய்த்த; பூளைஅம்பசுங்காய்—பஞ்சினை உடைய அழகிய பசுங்காயின்; புடை விரிந்தன்ன—முதுகு அகத்துள பஞ்சு புறத்தே தோன்றுமாறு—சிறிதே வெடித்துத் தோன்றினாற் போல; வரிப்புற அணிலொடு —வரிகளை முதுகிலே உடைய அணிலோடு; கருப்பை ஆடாது—எலியும் திரியாதவாறு ஆற்று அறல் புரையும்—நீர் ஓடிவற்றிய ஆற்றின் அறலை ஒக்கும்; வெரிந் உடைக் கொழுமடல்—முதுகினை அதாவது அடிமரத்தை உடையதும், வளமான மடல்களை—யுடையதும் ஆகிய; வேல்தலை அன்ன வைநுதி ஈத்தலை—வேலின் முனையை ஒத்த கூரிய முனையினையுடைய ஈச்ச மரத்தில் இலையால, வேய்ந்த நெடுந்தகர்—வேயப்பட்ட கூரையின் நெடிய மேட்டினையும், எய்புறக் குரம்பை—முள்ளம் பன்றியின் முதுகுபோல் காட்சிதரும் புறத்தினையும் உடைய குடிலின்கண்; மான்தோல் பள்ளி—மான் தோலாகிய படுக்கையில்; மகவோடு முடங்கி பிள்ளையோடு முடங்கி கிடக்கும், ஈன்பிளவு ஒழியப் போகி—மகவு ஈன்ற எயிற்றி ஒழிய ஏனையோர் சென்று; இரும்பு தலையாத்த—பூண் தலையிலே கட்டப்பட்ட, திருந்து கணை—நல்ல பருமன் வாய்ந்த, நோன்காழ்—நல்ல வயிரம் பாய்ந்த, விழக்கோல்—சிறந்த கோலினை உடைய, உளிவாய்ச் சுரையின்—உளிபோலும் வாயை உடைய பாரைகளால், மிளிர மிண்டி—மண்கீழ்மேலாகுமாறு நன்கு குத்தி; இருநிலக் கரம்பை—கரிய நிலமாகிய கரம்பை நிலத்தில், படுநீறு ஆடி—புழுதியைச் சலித்து, முன்புல் அடக்கிய—மெல்லிய புல்லரிசியை வாரிக்கொண்ட, வெண்பல் எயிற்றியர்—வெள்ளிய பற்களை உடைய எயினர் குல மகளிர், பார்வை யாத்த—பார்வை மான் கட்டப்பட்டிருக்கும், பறைதாள் விளவின்— தேய்ந்த அடி மரத்தினையுடைய விளா
மரத்தின், நீழல் முன்றின்—நிழல் படர்ந்தமனைமுற்றத்தில், நில உரல் பெய்து— நிலத்தில் புதைக்கப்பட்டிருக்கும் உரலில் புல்லரிசியை இட்டு, குறும்காழ் உலக்கை ஒச்சி— குறுகிய வயிரம் வாய்ந்த உலக்கையால் குற்றி, நெடுங்கிணற்று— ஆழமான கிணற்றில், வல் ஊற்று உவரி தோண்டி— சிறிதே ஊறும், உவப்பு நீரை முகந்து கொண்டு, தொல்லை முரவு வாய்க் குழிசி— பழைய வாய் உடைந்து போன மூளிப் பானையை, முரி அடுப்பு, ஏற்றி— கொம்மை முரிந்த அடுப்பில் ஏற்றி, வாராது—அரித்து எடுக்காமல், அட்ட— ஆக்கிய, வாடு ஊன்—உலர்ந்த கருவாட்டுடனே கூடிய, புழுக்கல்— சோற்றை வாடாத்தும்பை— பொன்னாலான தும்பை சூடிய வயவர் பெருமான்— வீரர்களுக்குத் தலைவனாகிய ஓடாத்தானை— போரில் புறம்காட்டாத படையினை உடைய, ஒண்தொழில் கழல்கால்—அரிய வேலைப்பாடு அமைந்த வீரக்கழல் விளங்கும் கால்களை உடைய செவ்வரை நாடன்— சிறந்த மலைநாடாளும் திரையனுடைய, சென்னியம் எனினே— பாண்சாதியேம்யாம் என்று கூறுவீராயின், தெய்வ மடையின்— தெய்வங்களுக்கு இடும் பலிபோல, தேக்கு இலை குவைஇ—தேக்கு இலையில் உணவைக்குவிப்பர் ஆகையினாலே, நும் பை தீர்குடும்பொடு— நும்முடைய பசுமைதீர்ந்த சுற்றத்தாருடன்; பதம் மிகப்பெருகுவீர்— உணவினை மிகவும் பெறுகுவீர்கள்.)

5-1 கூடி உண்ணும் கானவர்

பாலைநிலத்துக் குடிமக்களாம் எயினர்களின் குடியிருப்புக்களில் கிடைக்கும் வரவேற்பு நன்றாகவே இருக்கும் ஆனால், அப்பாலை நிலம் தமக்கே உரியது எனும் உணர்வோடு, அந்நிலத்துக் குறுநில மன்னர்கள் போல், எல்லைகளில் குறும்பு என அழைக்கப்படும் சிறுசிறு அரண் அமைத்து வாழும் அந்நிலத்து வீரர்களின் போக்கு எவ்வாறு இருக்குமோ என எண்ணி, பெரும்பாணன் அஞ்சி விடுதல் கூடாது என்பதால், அத்தகைய எயினக் குறும்புகளின் இயல்பையும் அவற்றிற்கு உரியராகிய எயினவீரர்களின் இயல்பையும், எடுத்துரைக்கத்தொடங்கியவர், முன்னதாக, கடந்து செல்ல வேண்டிய குறுங்காடுகளில், இரவிலும் பகலிலும் உணவிற்காகக் காட்டு விலங்குகளுக்குக் கண்ணிவைப்பதல்லது வேறு கேடு அறியாக்கானவர் வாழ்க்கையை விளக்கினார்.

கலைமானும், காட்டுப்பன்றியும், குறுமுயலும் வாழும் குறுங்காடு அது. பாதை எனச் சொல்லத்தக்க நிலையில் முறையாக அமைந்த பாதை எதுவும் இராது. மேலும் மான்கள் கூட்டம் கூட்டமாய்த் திரிவதால், வழியெங்கும் அம்மான்களின் காலடிகளே தெரிவதல்லது, மக்கள் காலடியைக் காண்பது இயலாது. அதனால், செல்லும் வழி இதுதானா என்ற மயக்கமும் ஒரோவழி எழக்கூடும். ஆனால், அந்த மயக்கத்தைப் போக்கி, இதுவழிதான் என்பதைக் கூறாமல் கூறும் சில குறியீடுகளும் ஆங்கே உள்ளன. அது பாலை நிலம், ஆங்கு மழைபெய்வது அரிது. அவ்வாறு வானம் வறண்டுபோகும் காலத்தில் ஆங்கு வாழ்வார் குடிநீர் பெறுவான் வேண்டி வெட்டும் குழிகள், அவ்வழியின் இருமருங்கிலும் நிறைந்து தோன்றும். அதுகொண்டு வழி தெரிந்து செல்வது எளிதாகும், மேலும், இரவில் காட்டுப் பன்றி வேட்டை குறித்தும், பகலில் குறுமுயல் வேட்டை குறித்தும் திரியும் கானவர்களை அவ்வழிகளில், ஆங்காங்கே காணலாம். ஆகவே வழி அச்சமும் தேவையில்லை என்றவர், அவர்களின் வேட்டை முறைகளையும் சிறிதே விளக்கத் தொடங்கிவிட்டார்.

பன்றி வேட்டை பற்றிய விளக்கக்தை முதற்கண் எடுத்துக்கொண்டவர்க்குப் பன்றியின் உடலமைப்பைப் பற்றியும் சிறிது கூற விருப்பம் எழுந்ததுபோலும். ஆனால், காட்டுப் பன்றிகள் திரியும் காலம் இராக்காலம்; மேலும் அதன் நிறமே கறுப்பு, அதனால் உடலமைப்பைக் காட்ட முடியவில்லை, என்றாலும், கார் இருள் இடையேயும், கறுப்பு நிறத்து ஊடேயும், காண்டார் கண்களுக்கு, அதன் வாயின் இருபுறங்களிலும் முளைத்து வெளிப்பட்டுத் தோன்றும் கொம்புகள் தெற்றெனப் புலப்பட்டுவிடும், வளைந்து தூய வெண்ணிறம் வாய்ந்த அக்கொம்புகள் வடிவாலும் நிறத்தாலும் அகத்தில் பூவை—நினைவூட்ட, அவ்வகத்தி இலைகள், தம்மொத்த வடிவுடைய இலைகளைக் கொண்டதும், பாலையின் புறத்திணை உரிப்பொருளாகிய, வெற்றிக்கு உரியதாகிய வாகை எனும் பெயரே தாங்கி அப்பாலை நிலத்தில் வளர்ந்து நிற்பதுமாகிய வாகை மரத்தை நினைவூட்ட, அந்நினைவு ஆட்டத்தில் சிறிதே மயங்கியபின்னர் கானவர் காட்டுப் பன்றியை வேட்டையாடும் விதத்தை விளக்கத் தலைப்பட்டார்.

காட்டுப் பன்றிகள் உள்ள இடத்தை அறிந்து அடைவதும் அரிது. அவற்றை நேர்நின்று வளைத்துப் பிடிப்பதும் இயலாது. அதனால், வாழிடம் விட்டு, அவை தாமாகவே வெளிப்பட்டு வருவதை எதிர்நோக்கி இருப்பர், காட்டில், வேறு எங்கும் தண்ணீர் இல்லாமையால் தம் நீர்வேட்கையைப் போக்கிக்கொள்ள, அவையும், கானவர், அகழ்ந்து. வைத்திருக்கும் குழிகளுக்கே வருதல் வேண்டும். இதை அறிந்து வைத்திருக்கும் கானவர், அத்தகைய குழிகளைச் சூழவும் வேறு குழிகளை அகழ்ந்து, அவை குழிகள் எனத் தோன்றாவாறு, மேற்புறத்தைத் தழைகளால் மறைத்து விட்டு, அக்குழிகளின் அகத்தே ஒரு புறமாக ஒடுங்கிக்கிடப்பர். நீர் உண்ணவரும் பன்றி, அக்குழிகள் மீதுஅறியாது கால்வைத்ததும், நிலைகுலைந்து, அதன் அகத்தே வீழ்ந்து விடும். உடனே, அங்கே ஒடுங்கியிருக்கும் கானவர் அப்பன்றியை அகப்படுத்திக்கொள்வர்.

பன்றிவேட்டை, கானவர் எண்ணியவாறு எப்போதும் வாய்த்துவிடுவதில்லை. இரவெல்லாம் காத்திருந்தாலும் பன்றி வராமலே போய்விடுவதும் உண்டு, பன்றி வந்தாலும், வெட்டிய குழிகளில் வீழ்ந்துவிடாமல் நீர் உண்டு சென்று விடுவதும் உண்டு. குழியில் வீழ்ந்தாலும் கானவரைத் தன்வலிய கொம்புகளால் குத்தித் துன்புறுத்திவிட்டுத் தப்பி விடுவதும் உண்டு. அதனால் பன்றி வேட்டை பயனற்றும் போவதும் நிகழும். அவ்வாறு ஏமாற்றம் காணும் கானவர், இரவில், பன்றிவேட்டை ஆடுவதைக் கைவிட்டுப், பகலில் முயல்வேட்டை மேற்கொள்வர். முயல் விரைந்து ஓடவல்லது. தப்பி ஓடும் போது உடன் ஓடித் துரத்திப் பிடித்தல் தம்மால் இயலாது என்பதால் வேட்டை நாய்களையும் உடன்கொண்டு செல்வர். வேட்டை வாய்த்ததும் விரைந்து கவ்விக்கொள்ளும் உணர்வோடு எப்போதும் வாய் அங்காந்தே திரியும் நாய்களுடன் செல்லும் கானவர், குறு முயல்கள் அடங்கியிருப்பனவாகவும், வெளிப்படும் முயல்கள் குறுகிய ஒருவழி தவிர்த்து, வேறு பக்கங்களில் தப்பிவிடாத வாறு, நாற்புறமும் வேலிகளால் சூழ்ப்பெற்றனவுமாகிய தூறுகளைத் தேர்ந்து, ஒன்றோடொன்று பிணைத்துப் பின்னப்பட்ட வலையை, அக்குறுகிய வழியில் கட்டிவிட்டு, ஆங்கே சிலர் காத்திருக்க, சிலர் உள்ளே புகுந்து முயல் அடங்கியிருக்கும் தூறுகளைத் தடிகொண்டு தாக்குவர் அத்தாக்குதலுக்கு அஞ்சி வெளிப்படும் முயல், பல திசைகளிலும் ஓடியும், அங்கெல்லாம் வேலி நின்றுதடுக்கவே, வேறு வழியின்றி, அச்சிறுவழியாக வெளிப்பட விரையுங்கால், ஆங்கே கட்டப்பட்டிருக்கும் வலையுள் வீழ்ந்துவிட, கானவர் அதை அகப்படுத்திக் கொள்வர். வலையுள் அகப்பட்டு, கிடக்கும் முயலை அகக் கண்களால் பார்க்கின்றார் புலவர். முயல் உறுப்புக்களில் எளிதில் புலப்படுவன இரு காதுகளே. எப்போதும் நிமிர்ந்தே நிற்கும் அக்காதுகளின் தோற்றம், தாமரை மலரின் புறஇதழ்களை நினைவூட்ட, அத்தாமரை மலரின் அழகிய தோற்றம், அம்மலரைத் தாங்கி நிற்கும் தாமரைத்தண்டு, அத்தண்டைக் கைப்பற்றுவார் கைகளைக் குத்தும் சிறுசிறு முட்கள் ஆகியவற்றை எண்ணி மகிழும் இன்ப உணர்வோடு, மீண்டும் முயலை நோக்கியபோது அவ்வின்ப உணர்வுகளுக்கெல்லாம் நிலைக்களமாகக் கிடக்கும் . அம்முயலின்பால் அன்பு பாராட்டுவதற்கு மாறாக, அம்முயலைக் கொன்று தின்னும் கானவர் செயல்கண்டு கொதிப்பேறி, அவரைக் கடுங்கண் மறவர் என வசைபாடித் தீர்த்தாலும், கொன்ற முயலைத்தான் மட்டும் தனித்து இருந்து தின்ன எண்ணாது, கானவர் அனைவரையும் அழைத்து, அவர்க்கும் அளித்து உண்ணும் அவர் செயலை, அவர் உள்ளம் ஓரளவு பாராட்டவும் செய்தது. குறுங்காட்டுவழியின் இயல்பு இதுவாகும்.


"மான் அடி பொறித்த மயங்கு அதர் மருங்கின்
வான் மடி பொழுதில் நீர் நசைஇக் குழித்த
அகழ்சூழ் பயம்பின் அகத்து ஒளித்து ஓடுங்கிப்,
புகழா வாகைப் பூவின் அன்ன
வளைமருப்பு ஏனம் வரவு பார்த்து இருக்கும்
அரைநாள் வேட்டம் அழுங்கின்பகல் நாள்
பகுவாய் ஞமலியொடு பைம்புதல் எருக்கித்
தொகுவாய் வேலித் தொடர் வலை மாட்டி
முள்அரைத் தாமரைப் புல் இதழ் புரையும்
நெடும்செவிக் குறுமுயல் போக்கு அறவளை இக்
கடுங்கல் கானவர் கடறுகூட்டு உண்ணும்
அரும் சுரம் இறந்த அம்பர்"

(106–117)

(மான் அடி பொறித்த—மான்களின் அடிச்சுவடுகள் அழுந்திக் கிடக்கும்; மயங்கு அதர் மருங்கின்—வழியோ, அல்லவோ என மயங்குதற்குக் காரணமான வழிகளின் பக்கத்தில்; வான்மடி பொழுதில்—மழை பெய்யாமல்
பொய்த்துவிட்ட காலத்தில்; நீர் நசைஇக் குழித்த—நீர் விரும்பித் தோண்டிய; அகழ் சூழ் பயம்பின் அகத்து—ஆழ்ந்த பள்ளங்களைச் சூழ்ந்து உள்ள மூடு குழிகளின் உள்ளே; ஒளித்து ஒடுங்கி—மறைந்து ஒதுங்கி; புகழா வாகை—அகத்தியின், பூவின் அன்ன—வெண்ணிறம் வாய்ந்து வளைந்த மலரை ஒத்த; வளைமருப்பு ஏனம்—வளைந்த கொம்பினையுடைய காட்டுப் பன்றியின்; வரவு பார்த்து இருக்கும்—வருகையை எதிர்நோக்கி இருக்கும்; அரைநாள் வேட்டம் அழுங்கின்—நடுயாமத்து வேட்டை பயனளிக்காது போகவே; கைவிடுவராயின்; பகல்நாள்—பகற்போழ்தில்; பகுவாய் ஞமலியோடு—அங்காந்த வாயையுடைய வேட்டை நாய்களுடன்; பைம்புதல் எருக்கி—பசிய சிறுதூறுகளை அடித்து; தொகுவாய் வேலி—குறுகிய இடத்தையுடைய வேலியில்; தொடர்வலை மாட்டி—பின்னப்பட்ட வலைகளைமாட்டி; முள்அரைத்தாமரை—முள்ளைத்தண்டிலே உடைய தாமரை மலரின்; புல் இதழ் புரையும்—புற இதழை ஒக்கும்; நெடும் செவிக் குறு முயல்—நெடிய காதுகளையுடைய குறிய முயல்களை; போக்கு அற வளைஇ—தப்பிப் போகவிடாமல் வளைத்துப் பிடித்து; கடுங்கண் கானவர்—கொடிய கானவர்; கடறு—காட்டகத்தே; கூட்டு உண்ணும்—உறவினரோடு கூடி இருந்து உண்ணும்; அருஞ்சுரம்—அரிய பாலைநிலத்தை; இறந்த அம்பர்—கடந்துவிட்ட பின்னர்த்தாகிய இடத்தில்.)

5-2 குறும்பில் எயினர் விருந்து

குறுங்காட்டு வழிச் சென்று பாலைநிலத்து எல்லையை அடைந்த வழி ஆங்குப் பெரும்பாணர் கண்களில் புலப்படும் எயினக் குறும்புகள் பற்றிக் கூறத் தொடங்கினார். குறும்பு என அழைக்கப்படும் அச்சிற்றரசன் அகத்தே, படைக்கலன்களை இட்டுவைக்கும் படைக்கலக்கொட்டில் ஒன்று இருக்கும். அதன் உள்ளே ஒரு பக்கத்தில், வேற்படைகள் வரிசையாகச் சார்த்திவைக்கப்பட்டிருக்கும். அவற்றை அணுகினால், புலால் நாறும்; ஊன்றி நோக்கினால், கூரிய முனை மழுங்கியும் வளைந்தும் காணப்படும். இதற்கு ஏன் இந்தக் கதி என்ற வினா எழுப்பினால், ஆங்கு உள்ளார், இவ்வேற்படைகளெல்லாம் அண்மையில் நடந்த ஒரு போரில் ஈடுபட்டு, களத்தில் மடிந்து வீழும் வீரர் உடல்களைத் தின்பதற்காக வந்து வட்டமிட்ட பருந்துக்கூட்டத்தால் களமே நிழல்பட்டுப் போய்விட்டது எனக் கூறுமளவு, பகைவர் பல்லாயிரவர் உடலிற்பாய்ந்து உயிர் போக்கியதோடு, எஞ்சியோரை அஞ்சி ஓடச் செய்து களம் வென்ற சிறப்போடு இவண்வந்து சேர்ந்துள்ளன, அதுதான் காரணம் என்றுகூற, அவ்வேற்படையின் வீரம் கண்டு பாராட்டி அப்பால் நகர்ந்தால், ஆங்கு, வலதுகையில் ஏந்தும் வேற்படை பகைவரை அழிக்கும் நேரத்தில், பகைவர்படை தம் மெய்யில் பாய்ந்து விடாவாறு மெய்யை மறைத்துக் கொள்ள, வீரர் இடது கையில் ஏந்தும், பலகைபோல் படர்ந்த கேடயங்கள் வரிசை வரிசையாகச் சார்த்தி வைக்கப்பட்டிருக்கும். அடுத்துச் சென்றால், போர் என்றதுமே பயன் கொள்ளும் நிலையில், ஏற்றிய நாண் ஏற்றியவாறே உள்ள நெடிய பெரிய விற்படைகள் சார்த்தி வைக்கப்பட்டிருக்கும். அவ்வில் வரிசைக்கு அணித்தாக வகைவகையான அம்புகள், குவியல் குவியல்களாகக் கொட்டிக் கிடக்கும்.

படைக்கலக் கொட்டிலைவிட்டு வெளியே வந்ததும், ஆங்கே, பருத்து உயர்ந்த கால்களை நாட்டிப் போடப்பட்டிருக்கும் பெரிய பந்தலைக் காணலாம். மலையளவு உயரம் உடையனவாகக் காணப்படும் அப்பந்தலின் கால்கள் தோறும், ஒரு காலில் அம்புகள் நிறைந்த அம்பூறாத்துாணி, ஒரு காலில், கேட்ட அளவிலேயே பகைவரை அஞ்சி ஒடுங்கச் செய்துவிடவல்ல கடிய ஓசையை எழுப்பும் துடிப்பறை என மாறி மாறிக்கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் மிக உயர்ந்த கால்களின் உச்சியில் கட்டப்பட்டுத் தொங்கும் அப்பறாத்துாணி, பெரும்பாணன், அடுத்துப்புக இருக்கும் மலைநாட்டில், மலை உச்சிகளில் கட்டப்பட்டிருக்கும் தேன் கூடுகளை நினைவூட்டுவதாய் இருக்கும்.

பந்தலின் வேறு ஒரு புறத்தில், மற்றும் ஒரு மனைகாட்சி தரும். அம்மனை வாயிலில் கொடிய வேட்டை நாய்கள் இரும்புச் சங்கிலிகளால் கட்டிவைக்கப்பட்டிருக்கும். அந்நாய்களைக் காண்பார் எவரும், அம்மனையை அணுகுதற்கும் அஞ்சுவர். அம்மட்டோ! அத்தகைய நாய்கள் இருந்து காப்பதோடு, மேலும் வலுவான காவலும் ஆங்குப் போடப்பட்டிருக்கும். இவற்றையெல்லாம் நோக்கின் அது, அக்குறும்பின் தலைவன் உறையுளாம் போலும் ` என எண்ணத் தோன்றும்.

அவ்விடம் விட்டு அகன்றால், இவ்விடங்களையெல்லாம் உள்ளடக்கிய மிக உயர்ந்த சுற்றுமதில் காட்சிதரும். மதில், மழையாலும், வெய்யிலாலும் பாழ்பட்டுபோகாவாறு, அதன் தலை ஊகம் புல்லால் வேயப்பட்டிருக்கும். மதில் வாயிலை அணுகினால், அவ்வாயில், வலிய பலகைகள் பலவற்றை ஒட்டுச்சேர்த்துச் செய்யப்பட்ட கதவால் மூடப்பட்டிருப்பதும், அக்கதவினை, எளிதில் திறந்துவிடாதபடி அடைப்பதற்காக, உருண்டு திரண்ட கணையமரம் பொருத்தியிருப்பதும் புலப்படும். கதவைத் திறந்து கொண்டு வாயிற் புறத்தே வந்தால், ஆங்குப், பகைவர்களைக் குத்திக்கொலை செய்யவல்ல கழுமரங்கள் வரிசையாக நாட்டப்பட்டிருப்பதைக் காணலாம்.

குறும்பைவிட்டு வெளியே வந்தால், அக்குறும்பைச் சூழப் பகைவர் எளிதில் நுழைந்துவிடாதபடி, தடுத்து நிறுத்தவல்ல பருத்து உயர்ந்த மரங்கள் அடர்ந்த காடுபோல் வளர்ந்து நிற்பதைக் காணலாம். காவற்காடாகிய அப்பகுதியினின்றும் வெளிப்பட்டு வந்து பார்த்தால், காவற்காட்டைச் சூழ, முள்நிறை மரங்கள் முளைத்து வேலியாக அமைந்திருப்பதைக் காணலாம். எயினக் குறும்பின் அமைப்பு இதுவாகும்.

எயினக் குறும்பின் இயல்புகளை கூறக்கேட்ட பெரும்பாணன் உள்ளத்தில் அச்சம் குடிகொண்டு விட்டதை அறிந்த புலவர், "எயினர் குறும்பு இத்துணைக் காவல் உடையது; கொடுமை மிக்கது என்றாலும், திரையன் புகழ்பாடும் பெரும்பாணராம் நும்போலும் இரவலர்க்கு நுழைவதற்கு எளிமையானது; இனிமை தருவது; உங்களைக் கண்டதுமே, கொடிய வில்லேந்தித் திரியும் எயினர்கள், தம் கொடுமையை மறந்து விடுவர்: உங்கள் முன் பணிந்து நிற்பர். உங்களை வரவேற்று அழைத்துச் சென்று, சோறும் கறியும் கொடுத்து உம் பசி போக்கி வழி அனுப்புவர். ஆங்கு அவர் இடும் சோறு, எயினர் குரம்பையில் உண்ணும் புல்லரிசிச் சோறுபோல் இராது. ஈங்கு, படைக்கப்படுவது நெல் அரிசிச் சோறு; அதிலும் மேட்டு நிலத்தில் விளைந்த செந்நெல் அரிசிச் சோறு அச்சோறு எப்படி இருக்கும் தெரியுமா? கடந்து செல்லும் களர் நிலத்தில் வளர்ந்து நிற்கும் ஈச்ச மரத்தின் கொட்டைகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவைபோல் கொட்டை கொட்டையாகச் சிவந்து காட்சி அளிக்கும். படைக்கும் சோறு மட்டுந்தான் சிறப்புடையதாக இருக்கும் என எண்ண வேண்டாம். சோற்றோடு உடன் படைக்கும் கறி, அதை விடச் சிறப்புடையதாகும். கறி, எளிதில் கிடைக்காத உடும்புப் பொறியல். தம்முடைய வேட்டை நாய்களை ஏவிக் கொண்டு வந்த அவ்வுடும்புப் பொரியலைப், படைத்த சோறு மறைந்து விடுமளவு நிறையப் படைப்பர். அத்தகைய சிறந்த உணவினை, வழியில் காணலாம் ஒவ்வொரு குறும்பிலும் பெறுவீர்கள். ஆகவே, பால்லையை இனிது சுடிந்து செவ்வாயாக" என்றார்.

"பருந்துபட
ஒன்னாத் தெவ்வர் நடுங்க ஒச்சி
வைநுதி மழுங்கிய புலவு வாய் எஃகம்
வடிமணிப் பலகையொடு நிரைஇ, முடிநாண்
சாபம் சார்த்திய கணை துஞ்சு வியன்நகர்,
ஊகம் வேய்ந்த உயர்நிலை வரைப்பின்
வரைத்தேன் புரையும் கவைக்கடைப் புதையொடு
கடுந்துடி தூங்கும் கணைக்கால் பந்தர்த்
தொடர்நா யாத்த துன் அரும் கடிநகர்,
வாழுமுள் வேலிச் சூழ்மிளை படப்பை
கொடுநுகம் தழீ இய புதவின் செந்நிலை
நெடுநுதி வயக்கழு நிரைத்த வாயில்
கொடுவில் எயினக் குறும்பில் சேப்பின்
களர்வளர் ஈந்தின் காழ்கண்டன்ன
சுவல்விளை நெல்லின் செவ்அவிழ்ச் சொன்றி
ஞமலி தந்த மளவுச்சூல் உடும்பின்
வரை கால்யாத்தது வயின்தொறும் பெருகுவிர்"

(117–133

(பருந்துபட—வீழ்ந்தவர் உடலைக்கொத்தித் திண்பதற்காகப் பருந்துகள் வந்து நிறையுமாறு; ஒன்னாத் தெவ்வர்—தம்மோடு பொருத்திவராத பகைவர்; நடுங்க ஒச்சி—அஞ்சுமாறு குத்தியதால்; வைநுதி மழுங்கிய—கூரிய முனை மழுங்கிய; புலவு வாய் எஃகம்-புலால் நாறும் வாயையுடைய வேற்படைகளை; வடி மணிப் பலகையொடு நிரைஇ—வடித்த மணிகள் கட்டிய கேடயங்களோடு வரிசையாக வைத்து; முடிநாண் சாபம் சார்த்திய—ஏற்றிய நாணோடு கூடிய வில்லைச் சார்த்தி வைத்த; கணைதுஞ்சு வியன் நகர்—அம்புகள் குவிந்து கிடக்கும் பெரிய வீட்டையும்; ஊகம் வேய்ந்த—ஊகம் புல்லாலே வேயப்பட்ட; உயர்நிலை

வரைப்பின்—உயர்ந்த நிலையையுடைய மதிலையும்; வரைத்தேன் புரையும்— மலையில் கட்டப்பட்டிருக்கும். தேனடையை ஒக்கும்; கவைக்கடை புதையொடு—கவர்த்த அடிப்பகுதியையுடைய அம்புக்கட்டுகளுடன்; கடுந்துடிதூங்கும்— கடிய ஓசையை எழுப்பும் துடி எனும் தோல் கருவியும் தொங்கவிடப்பட்டிருக்கும்; கணைக்கால் பந்தல்— பருத்தகால்களையுடைய பந்தலையும்; தொடர்நாய் யாத்து—சங்கிலிகளால் நாயைக் கட்டிவைத்துள்ள; துன்னரும் கடிநகர்—அணுகுதற்கு அரிய காவல் அமைந்த வீட்டையும்; வாழ்முள் வேலி—முள் உயிரோடு கூடிய, முள் நிறைந்த மரங்களால் ஆன வேலியினையும், மிளைசூழ் படப்பை—காவற்காடு சூழ்ந்த பக்க இடத்தினையும்; கொடு நுகம் தழிஇய புதலின்—உருண்டு திரண்ட கணைய மரம் பொருத்தப் பெற்ற கதவினையும்; செந்நிலை நெடுநுழி வயக்கழு நிரைத்த வாயில்—சாயாது நிற்கும் நிலையினையும், கூரிய முனையினையும் உடைய வலிய கழுமரங்கள் வரிசையாக நிறுத்தப்பட்ட வாயிலையும் உடைய; கொடுவில் எயினக் குறும்பில் சேப்பின்—கொடிய வில்லேந்திய எயினருடைய அரண்களில் சென்று தங்கினால்; களர் வளர் ஈந்தின்—களர் நிலத்தில், வளரும் ஈச்ச மரத்தின்; காழ் கண்டன்ன—கொட்டைகளைக் கண்டாற் போன்ற; சுவல்வளர்—மேட்டு நிலத்தில் விளைந்த; நெல்லின் செல் அவிழ்ச்சொன்றி—நெல்லின் சிவந்த அரிசியாலாகிய சோற்றை; ஞமலி தந்த—நாய் பற்றிக்கொண்டு வந்த; மளவுசூல் உடும்பின்—அக்குமணி போலும் முட்டைகளையுடைய உடும்பினது; வறை கால்யாத்தது—பொரியலாலே மறைத்த உணவை; வயின் தொறும் பெறுகுவீர்—வீடுகள் தோறும் பெறுவீர்கள்.)