பொன்னியின் செல்வன்/கொலை வாள்/ஒற்றனுக்கு ஒற்றன்
கொலை வாள் - அத்தியாயம் 28
[தொகு]ஒற்றனுக்கு ஒற்றன்
மௌனமாயிருந்த அரசிளங் குமரியைப் பார்த்து முதன் மந்திரி அநிருத்தர், "தாயே! ஏன் பேசாமலிருக்கிறாய்? வந்தியத்தேவனை இன்னமும் நீ நம்புகிறாயா?" என்று கேட்டார்.
"ஐயா! அமைச்சர் திலகமே! நான் என்ன சொல்லட்டும்? இன்னும் சற்று நேரம் தாங்கள் பேசிக் கொண்டே போனால் என்னை நானே சந்தேகிக்கும்படி செய்து விடுவீர்கள் போலிருக்கிறதே!" என்றாள் இளவரசி.
"காலம் அப்படி இருக்கிறது, அம்மா! யாரை நம்பலாம், யாரை நம்பக் கூடாது என்று தீர்மானிப்பது இந்த நாளில் அவ்வளவு சுலபமில்லைதான். நாலாபுறமும் அவ்வளவு விரோதிகள் சூழ்ந்திருக்கிறார்கள்; அவ்வளவு மர்மமான சூழ்ச்சிகள் நடந்து வருகின்றன!" என்றார் முதன் மந்திரி அநிருத்தர்.
"ஆனாலும் தங்களுக்குத் தெரியாத மர்மமும், தாங்கள் அறியாத சூழ்ச்சியும் இராது என்று தோன்றுகிறது. நான் அனுப்பிய தூதனைப் பற்றி அவ்வளவு விவரங்களையும் எப்படித் தெரிந்து கொண்டீர்கள்?" என்று கேட்டாள் குந்தவை தேவி.
"அம்மணி! நான் ஆயிரம் கண்களும், இரண்டாயிரம் செவிகளும் படைத்தவன். நாடெங்கும் அவை பரவியிருக்கின்றன. பழுவூர் அரண்மனையில் என் ஆட்கள் இருக்கிறார்கள். பழுவூர் இளையராணியின் மெய்க்காவலர்களிலே எனக்குச் செய்தி அனுப்புகிறவன் ஒருவன் இருக்கிறான். ஆழ்வார்க்கடியானைப் போல் ஊர் ஊராக அலைந்து திரிந்து செய்தி கொண்டு வருகிறவர்கள் பலர் இருக்கிறார்கள். சுற்றுப்புற நாடுகளிலோ நான் அறியாமல் எந்தக் காரியமும் நடைபெற முடியாது என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறேன். ஆயினும், யார் கண்டது? என்னையும் ஏமாற்றக் கூடியவர்கள் இருக்கலாம். நான் அறியாத மர்மங்களும் நடைபெறலாம்!"
இவ்வாறு முதல் மந்திரி சொன்னபோது, பொன்னியின் செல்வன் இப்போது சூடாமணி விஹாரத்தில் இருப்பதும் இந்தப் பொல்லாத மனிதருக்குத் தெரியுமோ என்ற எண்ணம் குந்தவைக்கு உண்டாயிற்று. அதை அவள் வெளியிடாமல் மிகுந்த சிரமத்துடன் அடக்கிக் கொண்டாள்.
"ஐயா! நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையாக இருக்கலாம்; ஆனால் அந்த வாணர் குல வீரன் பழுவூர் ராணியின் ஒற்றனாயிருப்பான் என்று மட்டும் என்னால் நம்பமுடியவில்லை. அவனைத் தயவு செய்து விடுதலை செய்து விடுங்கள்!" என்றாள்.
"நன்றாக யோசித்துப் பார், அம்மா! அந்தப் பெண் நந்தினியிடம் மாயமந்திர சக்தி ஏதோ இருக்கிறது! சிவபக்தன் மதுராந்தகன் அவளுடைய வலையில் விழுந்து இராஜ்யத்தில் ஆசை கொண்டான். சம்புவரையரின் மகன் கந்தமாறன் அவளுடைய ஓலையை எடுத்துக்கொண்டு ஆதித்த கரிகாலனிடம் போயிருக்கிறான். பழுவேட்டரையர்களின் பரம விரோதியாயிருந்த பார்த்திபேந்திரன் இன்று பழுவூர் ராணியின் அடிமையாகி விட்டான். சோழ இராஜ்யத்தை இரண்டாகப் பிரித்து மதுராந்தகனுக்கு ஒரு பகுதியும், ஆதித்த கரிகாலனுக்கு ஒரு பகுதியும் கொடுத்து ராஜி செய்து வைக்கவும் அவன் முன் வந்திருக்கிறான்..."
"இது என்ன அக்கிரமம்! இராஜ்யத்தை இரண்டாகப் பிரிக்கவாவது? எங்கள் குலத்து முன்னோர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு ஒன்று சேர்த்துப் பெரிதாக்கிய மகா இராஜ்யம் இது!"
"இராஜ்யத்தைப் பிரிப்பதை நீ விரும்பமாட்டாய்; நானும் விரும்பவில்லை, தாயே! பத்து நாட்களுக்கு முன் இந்த யோசனையைச் சொல்லியிருந்தால் பார்த்திபேந்திரனும் பொங்கி எழுந்திருந்திருப்பான். இப்போது அவனே இந்த ஏற்பாட்டுக்கு முதன்மையாக நிற்கிறான்..."
"இது என்ன விந்தை! அந்த பழுவூர் ராணியிடம் அப்படிப்பட்ட மாய சக்தி என்னதான் இருக்கும்?"
"இளவரசி! அதை நான் உன்னிடம் கேட்க வேண்டும் என்றிருந்தேன். நீ என்னைக் கேட்கிறாய். போகட்டும்; வந்தியத்தேவன் மட்டும் அவளுடைய மாய சக்திக்கு உட்படமாட்டான் என்று எதனால் நீ அவ்வளவு நிச்சயமாகச் சொல்கிறாய்?"
"ஐயா! காரணங் கேட்டால் எனக்குச் சொல்லத் தெரியாது. மனதுக்கு மனதே சாட்சி என்பார்கள். வாணர்குல வீரன் அத்தகைய துரோகம் செய்ய மாட்டான் என்று என் மனத்தில் ஏனோ நிச்சயமாகத் தோன்றுகிறது."
"அப்படியானால், அதை பரீட்சித்துப் பார்த்துவிடலாம், அம்மா!"
"அப்படி என்ன பரீட்சை?"
"காஞ்சிக்கு ஒரு தூதனை நாம் உடனே அனுப்பியாக வேண்டும். ஆதித்த கரிகாலனுக்கு மிக நம்பிக்கையான ஆளிடம் அவசரமாக ஓலை கொடுத்து அனுப்ப வேண்டும்."
"என்ன விஷயம் பற்றி?"
"சற்று முன்னால், நந்தினியை விஷநாகம் என்று நீ சொல்லிவிட்டு அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டாய். உண்மையில் விஷநாகத்தைவிட அவள் பன்மடங்கு கொடியவள். இந்தச் சோழ குலத்தை அடியோடு நாசம் செய்து பூண்டோ டு ஒழித்து விட அவள் திட்டமிட்டிருக்கிறாள்."
"கடவுளே! என்ன பயங்கரம்!" என்று குந்தவை கூறியபோது அவளுடைய உள்ளக் கடல் பற்பல எண்ண அலைகளினால் கொந்தளித்தது.
"உன் தமையன் ஆதித்த கரிகாலனைக் கடம்பூர் அரண்மனைக்கு அழைக்கும்படி அவள் சம்புவரையரைத் தூண்டியிருக்கிறாள். சம்புவரையர் மகள் ஒருத்தியையும், பழுவேட்டரையர் குமாரி ஒருத்தியையும் கரிகாலனுக்கு மணம் செய்விப்பது பற்றிப் பேசிவருகிறாள். இராஜ்யத்தை இரண்டாகப் பிரித்து ராஜிசெய்விக்கும் விஷயத்தையும் அங்கே முடிவு செய்யப் போகிறாளாம். இவையெல்லாம் வெளிப்படையான பேச்சு. ஆனால் அவளுடைய அந்தரங்கத்தில் என்ன நோக்கம் வைத்திருக்கிறாளோ அது யாருக்கும் தெரியாது. எல்லாம் அறிந்தவன் என்று கர்வம் கொண்டிருக்கும் என்னால்கூட அவள் நோக்கத்தை அறிய முடியவில்லை."
"அதைப்பற்றி நாம் என்ன செய்யவேண்டும், ஐயா?"
"ஆதித்த கரிகாலன் கடம்பூர் மாளிகைக்குப் போகாமல் எப்படியாவது தடை செய்யவேண்டும். அதற்குத்தான் நீயும் நானும் ஓலை கொடுத்து வந்தியத்தேவனிடம் அனுப்ப வேண்டும். நம்முடைய விருப்பத்தை மீறிக் கரிகாலன் கடம்பூர் மாளிகைக்குப் புறப்படும் பட்சத்தில் வந்தியத்தேவனும் அவனுடன் போக வேண்டும். உடம்பைப் பிரியாத நிழலைப் போல் அவன் உன் தமையனைத் தொடர்ந்து காவல் புரிய வேண்டும். நந்தினியைத் தனியாகச் சந்திப்பதற்குக்கூட அவன் இடந்தரக் கூடாது..."
குந்தவை பெருமூச்சுவிட்டாள்; முதன் மந்திரி கூறுவது எவ்வளவு முக்கியமான காரியம் என்பதை அவள் உணர்ந்தாள். எல்லா விவரங்களும் அறிந்து அவர் சொல்கிறாரா, அல்லது இராஜாங்க நோக்கத்தை மட்டும் வைத்துக் கொண்டு சொல்கிறாரா என்று அவளால் ஊகிக்க முடியவில்லை.
"ஐயா! அவர்களுடைய சந்திப்பைத் தடுப்பது அவ்வளவு முக்கியமான காரியம் என்று ஏன் கருதுகிறீர்கள்!" என்று கேட்டாள்.
"அம்மணி! வீரபாண்டியனுடைய ஆபத்துதவிகள் சிலர் சோழகுலத்தைப் பூண்டோ டு அழிக்கச் சபதம் செய்திருக்கிறார்கள். அவர்களுக்குப் பெரிய பழுவேட்டரையருடைய பொக்கிஷத்திலிருந்து புதிய தங்கக்காசுகள் போய்க்கொண்டிருக்கின்றன. இதைக் காட்டிலும் இன்னும் ஏதேனும் நான் இதைப்பற்றிச் சொல்ல வேண்டுமா?"
"வேண்டாம்" என்று முணுமுணுத்தாள் குந்தவை. சூடாமணி விஹாரத்தில் சுரத்துடன் படுத்திருக்கும் இளவரசனின் நினைவு அவளுக்கு வந்தது. பொன்னியின் செல்வனையும் அபாயங்கள் சூழ்ந்திருக்கலாம் அல்லவா?
"ஐயா! சோழநாட்டுக்கு விபத்துக்கு மேல் விபத்தாக வந்து கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் தாங்கள் முதன் மந்திரியாயிருப்பது அதிர்ஷ்டவசந்தான்! என் தம்பியின் விஷயமாக என்ன ஏற்பாடு செய்தீர்கள்?" என்று கேட்டாள்.
"சோழ நாட்டிலுள்ள எல்லாச் சிவாலயங்களிலும், விஷ்ணு, ஆலயங்களிலும் இளவரசருடைய சுகக்ஷேமத்தைக் கோரிப் பிரார்த்தனை செய்து அர்ச்சனை அபிஷேகம் நடத்தச் சொல்லியிருக்கிறேன். அப்படியே புத்த விஹாரங்களிலும், சமணப் பள்ளிகளிலும் பிரார்த்தனை செய்யப் போகிறார்கள். நாகைப் பட்டினம் சூடாமணி விஹாரத்தில் புத்த பிக்ஷுக்கள் ஒரு மண்டலம் விசேஷப் பிரார்த்தனை நடத்தப் போகிறார்கள். வேறு என்ன செய்யலாம் என்று நீ சொல்கிறாய்?"
சூடாமணி விஹாரத்தைப் பற்றிச் சொல்லும் போது முதன் மந்திரியின் முகத்தில் ஏதேனும் மாறுதல் ஏற்படுகிறதா என்று குந்தவை கவனித்தாள், ஒன்றுமே தெரியவில்லை.
"ஐயா! சூடாமணி விஹாரம் என்றதும் ஒரு விஷயம் ஞாபகம் வருகிறது. சூடாமணி விஹாரத்தின்மீது பெரிய பழுவேட்டரையர் ஏதோ கோபம் கொண்டிருக்கிறாராம். இலங்கையில் பிக்ஷுக்கள் இளவரசருக்கு முடிசூட்டுவதாகச் சொன்ன செய்தி வந்ததிலிருந்து அந்தக் கோபம் முற்றியிருக்கிறதாம். இளவரசர் காணாமற் போனதற்குப் பழியைச் சூடாமணி விஹாரத்திலுள்ள பிக்ஷுக்களின் மீது சுமத்தினாலும் சுமத்துவார்கள். அதற்குத் தக்க பாதுகாப்பு, தாங்கள்தான் செய்யவேண்டும்" என்று சொன்னாள்.
"உடனே செய்கிறேன், அம்மா! சக்கரவர்த்தியின் கட்டளையுடன் சூடாமணி விஹாரத்தைப் பாதுகாக்க ஒரு சிறிய சைன்யத்தையே வேணுமானாலும் அனுப்பி வைக்கிறேன். வந்தியத்தேவனைக் காஞ்சிக்கு அனுப்புவது பற்றி என்ன சொல்கிறாய்?"
"ஐயா! அவ்வளவு முக்கியமான காரியத்துக்கு வேறு யாரையாவது அனுப்புவது நல்லதல்லவா?"
"உனக்கு மட்டும் அவனிடம் நம்பிக்கையிருந்தால் அவனையே அனுப்ப விரும்புகிறேன். அவனுடைய வீர சாகஸச் செயல்களைப் பற்றியும் தெரிந்து கொண்டிருக்கிறேன். எதற்கும் அஞ்சாத அஸகாய சூரனையே இந்தக் காரியத்துக்கு நாம் அனுப்ப வேண்டும். இன்றைக்கு நான் அரண்மனை முற்றத்துக்கு வந்து கொண்டிருந்தபோது என் கண்ணாலேயே பார்த்தேனே! அந்த வைத்தியனை என்ன பாடுபடுத்திவிட்டான். நான் குறுக்கிட்டுத் தடுத்திராவிட்டால் வைத்தியர் மகன் யமனுக்கு வைத்தியம் செய்யப் போயிருப்பான்..."
இளைய பிராட்டி இதைக் கேட்டுப் பூரிப்பு அடைந்தாள். ஆயினும் சிறிய தயக்கத்துடன், "வீரனாயிருந்தால் மட்டும் போதுமா? படபடப்புக்காரனாயிருக்கிறானே? எவ்வளவு விரைவில் சண்டை தொடங்கிவிட்டான்!"
"அதற்கு வேணுமானால் பின்னோடு என்னுடைய சீடன் திருமலையையும் அனுப்பி வைக்கிறேன். நிதானமான யோசனைக்குப் பெயர்போனவன் ஆழ்வார்க்கடியான்!" என்றார் அநிருத்தர்.
இளையபிராட்டி தன் மனத்திற்குள், இவருடைய உள்ளத்தில் இருப்பதைக் கடவுளும் அறிவாரோ, என்னமோ தெரியவில்லை; ஒற்றனுக்குத் துணையாக ஒற்றன் ஒருவனையே அனுப்பி வைக்க விரும்புகிறார் போலும்!" என்று எண்ணிக் கொண்டாள்.