உள்ளடக்கத்துக்குச் செல்

பொன்னியின் செல்வன்/கொலை வாள்/விஷ பாணம்

விக்கிமூலம் இலிருந்து

கொலை வாள் - அத்தியாயம் 13

[தொகு]

விஷ பாணம்

அந்த இடத்தில், அந்த நேரத்தில், தேவராளனைப் பார்த்ததும், வந்தியத்தேவனுடைய உள்ளம் சிறிது துணுக்குற்றது. கடம்பூர் அரண்மனையில் தேவராளன் வெறியாட்டம் ஆடியதும், அப்போது அவன் கூறிய மொழிகளும் நினைவுக்கு வந்தன. நடுக்கடலில் சுழற்காற்றுக் குமுறிக் கொண்டிருந்த வேளையில் ரவிதாஸனும், தேவராளனும் சொன்ன செய்திகளும் ஞாபகத்துக்கு வந்தன. அவற்றில் எவ்வளவு உண்மை, எவ்வளவு கற்பனை என்று கண்டுபிடிப்பது கடினம். ஆனாலும் அவர்கள் ஏதோ ஒரு மர்மமான பயங்கரமான சதிச் செயலில் ஈடுபட்டவர்கள் என்பது நிச்சயம். அவர்களில் ஒருவனிடம் இச்சமயம், அதுவும் இந்த நிர்மானுஷ்யமான இடத்தில் அகப்பட்டுக் கொண்டோ மே என்று நினைத்தான். அவனிடமிருந்து தப்பி, குதிரையை வேகமாகத் தட்டி விட்டுக் கொண்டு போய்விடலாமா என்று ஒரு கணம் எண்ணினான். அந்த எண்ணத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தான்! தூரத்தில் தீயின் வெளிச்சம் தெரிந்தது. அது சுடுகாடாய்த்தான் இருக்கவேண்டும்.

'ஏதோ ஒரு மண்ணுடல் தீக்கிரையாகிக் கொண்டிருக்கிறது. அந்த மண்ணுடலில் உயிர் இருந்த காலத்தில் எத்தனை எத்தனை ஆசாபாசங்களால் அலைப் புண்டிருக்கும்? எத்தனை இன்ப துன்பங்களை அது அநுபவித்திருக்கும்! அரை நாழிகை நேரத்தில் மிச்சம் இருக்கப் போவது ஒரு பிடி சாம்பல்தான்! உலகில் பிறந்தவர்கள் எல்லாரும் ஒருநாள் அடைய வேண்டிய கதி அதுவேதான்; மன்னாதி மன்னர்களும் சரி, ஏழைப் பிச்சைக்காரனும் சரி, ஒரு நாள் அக்கினிக்கு இரையாகிப் பிடி சாம்பலாகப் போக வேண்டியவர்களே!'

திகில் வந்தது போலவே திடீரென்று விட்டுப் போய் விட்டது. இந்த வேஷ வஞ்சகக்காரனுக்குப் பயந்து எதற்கு ஓட வேண்டும்? ஏதோ இவன் சொல்லுவதற்குத்தான் வந்திருக்கிறான். அதைக் கேட்டு வைக்கலாமே? ஒருவேளை கொல்லன் உலைக்களத்தில் தான் நுழைந்த போது அங்கிருந்து பின்பக்கம் சென்று மறைந்து கொண்டவன் இவன் தான் போலும்! அந்த அதிசயமான வாள் கூட இவனுடையதாக இருக்கலாம். அதன் கைப்பிடியில் அருகில் மீனின் சித்திரம் இருந்ததல்லவா? இவனுடன் கொஞ்சம் பேச்சுக் கொடுத்தால் புதிய செய்தி ஏதேனும் தெரிய வரக்கூடும்.

ஆகையால் குதிரையை மெதுவாகவே செலுத்தினான் வல்லவரையன். முதன் முதலில் புதிது புதிதாக லாடம் அடிக்கப் பெற்ற அந்தக் குதிரையும் நடப்பதற்குக் கொஞ்சம் கஷ்டப்பட்டதாகத் தோன்றியது. அதை விரட்டியடிக்க மனம் வரவில்லை.

"இங்கே எப்படி அப்பா, திடு திப்பென்று வந்து முளைத்தாய்!" என்று கேட்டான் வல்லவரையன்.

"நான் அல்லவா அந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும்? உன்னை நடுக்கடலில் கப்பல் பாய்மரத்தோடு கட்டிவிட்டு வந்தோமே. எப்படி நீ தப்பி வந்தாய்?" என்றான் தேவராளன்.

"உனக்கு மட்டும் தான் மந்திரம் தெரியும் என்று நினைத்தாயோ? எனக்கும் கொஞ்சம் தெரியும்!"

"மந்திரத்தில் உனக்கு நம்பிக்கை ஏற்பட்டது பற்றி எனக்கு மகிழ்ச்சி. என்னுடைய மந்திர சக்தியினால் நீ இங்கே தனியாகப் போய்க் கொண்டிருப்பாய் என்று நானும் அறிந்து கொண்டேன். அதனால்தான் நான் முன்னால் வந்து காத்திருந்தேன்."

"ஏன் காத்திருந்தாய்? என்னிடம் உனக்கு என்ன காரியம்?"

"நீயே யோசித்துப் பார்! அல்லது மந்திர சக்தியினால் கண்டுபிடி!"

"உங்களுடைய இரகசியங்களை நடுக்கடலில் என்னிடம் நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். அவற்றில் எவ்வளவு உண்மை, எவ்வளவு கற்பனை என்பது எனக்குத் தெரியாது. ஆனாலும் அந்த இரகசியங்களை நான் மறந்துவிடத் தீர்மானித்து விட்டேன். யாரிடமும் சொல்லப் போவதில்லை..."

"அதைப்பற்றி நானும் கவலைப்படவில்லை. எப்போது நீ அந்த இரகசியங்களை யாரிடமாவது சொல்லலாம் என்று நினைக்கிறாயோ அப்போது உன் நாக்கு துண்டிக்கப்படும். நீ ஊமையாவாய்!"

வந்தியத்தேவனுக்கு உடல் சிலிர்த்தது. தஞ்சையிலும் இலங்கையிலும் அவன் சந்தித்த ஊமைப் பெண்களைப் பற்றிய நினைவு வந்தது. சற்றுத் தூரம் சும்மா நடந்தான். இந்தப் பாவி எதற்காக நம்மைத் தொடர்ந்து வருகிறான்? இவனிடமிருந்து தப்பிச் செல்வதற்கு என்ன வழி? கோடிக்கரையிலிருந்தது போல் இங்கேயும் சேற்றுப் பள்ளம் இருந்தால் எவ்வளவு உபயோகமாயிருக்கும்? அல்லது ஆற்றில் பிடித்துத் தள்ளிவிட்டுப் போகலாமா? அதில் பயனில்லை. ஆற்றில் தண்ணீர் அதிகம் கிடையாது. வேறு வழி ஒன்றும் இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது உடைவாள். அதை எடுக்க வேண்டியதுதான்.

"தம்பி, நீ என்ன நினைக்கிறாய் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அது கைகூடாது. வீண் முயற்சியில் இறங்காதே!"

வந்தியத்தேவன் பேச்சை மாற்ற விரும்பினான். அவனிடமிருந்து தப்புவதற்குச் சிறிது சாவகாசம் வேண்டும். அதுவரை ஏதேனும் பேச்சுக் கொடுத்து வரவேண்டும்.

"உன் கூட்டாளி ரவிதாஸன் எங்கே?"

தேவராளன் ஒரு பேய்ச் சிரிப்புச் சிரித்துவிட்டு, "அது உனக்கல்லவா தெரியவேண்டும்? ரவிதாஸன் எங்கே?" என்று கேட்டான்.

வந்தியத்தேவன் திடுக்கிட்டான். ரவிதாஸனைப் பற்றிய பேச்சைத் தான் எடுத்திருக்கக்கூடாது; எடுத்தது தவறு. ரவிதாஸனை இவன் பார்த்துப் பேசிவிட்டு நம்மை ஆழம் பார்க்கிறானா? அல்லது-

"என்ன, தம்பி சும்மா இருக்கிறாய்? ரவிதாஸன் எங்கேயென்று சொல்லமாட்டாயா? போனால் போகட்டும்! அந்த ஓடக்காரப் பெண் பூங்குழலி எங்கே? அதையாவது சொல்!"

வந்தியத்தேவன் பாம்பை மிதித்தவன் போல் பதறினான். மேலே பேசுவதற்கே அவனுக்குத் தயக்கமாயிருந்தது.

"அவளைப்பற்றியும் நீ ஒன்றும் சொல்லமாட்டாயாக்கும்; போனால் போகட்டும். அவளை நீ காப்பாற்ற நினைப்பதற்குத் தக்க காரணம் இருக்கலாம். தம்பி! சற்று முன்னால் ஒரு காதல் பாட்டுப் பாடினாயே? அவளை நினைத்துப் பாடினாயா?"

"இல்லை, சத்தியமாய் இல்லை!" என்று வல்லவரையன் பரபரப்போடு கூறினான்.

"ஏன் உனக்கு இவ்வளவு பரபரப்பு? ஏன் இவ்வளவு ஆத்திரம்?"

"சரி, சரி! அதைப்பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருக்க இப்போது அவகாசம் இல்லை. ஏன் என் குதிரையின் முகக் கயிற்றைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய்? விட்டுவிடு! நான் போகிறேன், அவசர காரியம் இருக்கிறது."

"நான் வந்த காரியத்தை நீ இன்னும் கேட்கவில்லையே?"

"சொன்னால்தானே கேட்கலாம்?"

"இந்த முல்லையாற்றங்கரைக்கு ஓர் அதிசய சக்தி உண்டு. இங்கே யார் எதை விரும்புகிறார்களோ, அது உடனே அவர்களுக்குச் சித்திக்கும்."

"நான் ஒன்றும் விரும்பவில்லையே."

"அது பொய்! நீ யாரை நினைத்துக் கொண்டு உன் காதல் பாட்டைப் பாடினாயோ அவள் உன்னைப் பார்க்க விரும்புகிறாள்! நீ இஷ்டப்பட்டால் பார்க்கலாம்."

"எப்போது?"

"இன்றிரவே பார்க்கலாம்."

"இது என்ன கதை?"

"கதையல்ல தம்பி! அதோ பார்!" என்று தேவராளன் சுட்டிக்காட்டினான். அவர்கள் சென்ற வழியில் சற்றுத் தூரத்தில் ஏதோ ஒரு பொருள் மங்கலாகத் தெரிந்தது. வந்தியத்தேவன் உற்றுப் பார்த்தான். அது ஒரு பல்லக்கு - மூடு பல்லக்கு என்று அறிந்தான்.

ஆகா! அந்தப் பல்லக்கு! எங்கே பார்த்திருக்கிறோம்? ஏன், பழுவூர் இளையராணியின் பல்லக்கு அல்லவா அது? ஒரு வேளை அதற்குள்ளே நந்தினி இருக்கிறாளா, என்ன? அதைத் தெரிந்து கொள்ளும் ஆவலை அவனால் கட்டுபடுத்திக் கொள்ள முடியவில்லை.

குதிரையை அந்தப் பல்லக்கின் அருகில் கொண்டு போய் நிறுத்தினான். பனைச் சித்திரம் போட்ட பல்லக்கில் மூடுதிரை தெரிந்தது. திரை அசைவது போலவும் இருந்தது.

உடனே வந்தியத்தேவன் குதிரை மீதிருந்து கீழே குதித்தான்.

அதே கணத்தில் தேவராளன் தொண்டையிலிருந்து ஒரு விசித்திரமான சப்தம் வெளிவந்தது.

அக்கம் பக்கத்திலிருந்து புதர்களின் மறைவிலிருந்து ஏழெட்டுப் பேர் திடும் திடும் என்று எழுந்து பாய்ந்து வந்தார்கள் வந்தியத்தேவன் மீது விழுந்தார்கள். அவனால் மீறி அசையவும் முடியாதபடி பிடித்துக் கொண்டார்கள். கால்களையும், கைகளையும் துணியினால் கட்டினார்கள். கண்ணையும் ஒருவன் கட்டினான் உடைவாளை ஒருவன் பலவந்தமாக எடுத்துக் கொண்டான். பிறகு வந்தியத்தேவனை அந்தப் பல்லக்கினுள்ளே தூக்கிப் போட்டார்கள். சிலர் உடனே பல்லக்கைத் தூக்கிக் கொண்டு விரைந்து நடந்தார்கள். மற்றவர்கள் முன்னும் பின்னும் சென்றார்கள். தேவராளன் முன்னால் வழிகாட்டிக் கொண்டு சென்றான். ஒருவன் குதிரையைப் பிடித்துக்கொண்டு நடந்தான்.

இவ்வளவும் அதிவிரைவில் நடந்து விட்டன. 'கண் மூடித் திறக்கும் நேரத்தில்' என்று சொல்வதும் மிகையாகாது. வந்தியத்தேவன் தன்னைப் பலர் வந்து ஏககாலத்தில் தாக்கியதும் திகைத்துப் போய்விட்டான். அத்தகைய தாக்குதலை அவன் எதிர்பார்க்கவேயில்லை. பல்லக்கில் அவனைத் தூக்கிப் போட்டுப் பல்லக்கு நகர ஆரம்பித்தவரையில் அவனால் எதுவும் சிந்திக்கவும் முடியவில்லை. என்ன நடக்கிறதென்று தெரிந்து கொள்ளவும் முடியவில்லை.

ஆனால் பல்லக்கு நகர ஆரம்பித்ததும் சிறிது சிறிதாக மனம் தெளிவடைந்தது. கண்ணின் கட்டுச் சுலபமாக நழுவிவிட்டது. கட்டியிருந்த கைகளினால் பல்லக்கின் திரையை விலக்கிக் கொண்டு பார்த்தான். நதிக்கரையிலிருந்து குறுக்கே இறங்கிப் பல்லக்கு எங்கேயோ போகிறது என்பதை அறிந்து கொண்டான்.

அவனுடைய கையின் கட்டுக்களையும், காலின் கட்டுக்களையும் அவிழ்த்துக்கொண்டு விடுதலை பெறுவது அவ்வளவு கஷ்டமான காரியம் அன்று. பல்லக்கிலிருந்து குதிப்பதும் எளிதாகத்தான் இருக்கும். குதிரையோ பின்னால் வந்து கொண்டிருந்தது. அந்த ஏழெட்டுப் பேரையும் உதறித் தள்ளி விட்டுக் குதிரையின் மீது பாய்ந்தேறிச் செல்வதும் அவனுக்கு முடியாத காரியமாகாது. அவ்விதம் செய்யலாமா என்று யோசித்தான். ஆனால் ஏதோ ஒன்று குறுக்கே நின்று தடை செய்தது. அந்தப் பல்லக்கினுள்ளே ஓர் அபூர்வமான மணம் சூழ்ந்திருந்தது. அது முதலில் அவனுக்கே உற்சாகத்தை அளித்தது. அதன் கவர்ச்சியிலிருந்து விடுவித்துக் கொண்டு போக எளிதில் மனம் வரவில்லை. இந்தப் பல்லக்குத் தன்னை எங்கே கொண்டு போய்ச் சேர்க்கப் போகிறது? நந்தினியிடந்தான் சேர்க்கும் என்று ஊகிப்பதற்குக் காரணங்கள் இருந்தன. அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவன் உள்ளத்தின் அடிவாரத்தில் இலேசாகத் தலைகாட்டியது. வரவர அது பெரும் ஆர்வமாக வளர்ந்தது. அதற்கு எவ்வளவோ ஆட்சேபங்கள் தோன்றின. ஆட்சேபங்களையெல்லாம் மீறி ஆசை விசுவரூபம் கொண்டது. என்னதான் செய்து விடுவாள் நம்மை? என்னத்துக்காகத்தான் அழைக்கிறாள் என்று பார்த்து விடலாமே? ஏதாவது தெரிந்து கொள்ள முடிந்தால் தெரிந்து கொள்ளலாமே? சூழ்ச்சிக்குச் சூழ்ச்சி செய்யத் தன்னால் முடியாமலா போய்விடும்? மறுபடியும் அவளைப் பார்க்கும்படியான சந்தர்ப்பம் கிடைக்குமா என்பது சந்தேகந்தான். தஞ்சாவூருக்குப் போக வேண்டிய அவசியம் இனி ஏற்படப் போவதில்லை. அங்கே போவது அபாயகரம். அதைக் காட்டிலும் வழியிலேயே பார்த்து விடுவது எளிதான காரியம். இன்னும் ஒரு தடவை அவளையும் பார்த்துத்தான் வைக்கலாமே?...

ஆம்; ஆம்! நந்தினியைப் பார்க்க வேண்டும் என்பதற்கு இன்னொரு அவசியமான காரணமும் இருந்தது. இலங்கையில் அவன் பார்த்த அந்த ஊமை அரசி! அவள் நந்தினி போலிருப்பதாகத் தான் எண்ணியது சரியா? அதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா?

இவ்விதம் வந்தியத்தேவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவன் தலை சுழன்றது. தூக்கம் வருவது போலத் தோன்றியது. இல்லை, இல்லை! இது தூக்கம் இல்லை! பகலிலே தான் அவ்வளவு நேரம் தூங்கியாகி விட்டதே! இது ஏதோ மயக்கம். இந்தப் பல்லக்கில் சூழ்ந்துள்ள மணந்தான் நம்மை இப்படி மயக்குகிறது. ஐயோ! இது என்ன பயங்கர அபாயம்! பல்லக்கிலிருந்து குதித்து விட வேண்டியதுதான்.

வந்தியத்தேவன் கைக்கட்டை அவிழ்த்துக் கொள்ள முயன்றான்; முடியவில்லை, கைகள் அசையவேயில்லை. எழுந்து உட்கார முயன்றான்; அதுவும் முடியவில்லை. கால்களை அடித்துக் கொள்ளப் பார்த்தான்; கால்களும் அசைய மறுத்தன. அவ்வளவுதான்! கண்ணிமைகள் மூடிக்கொண்டன; அறிவு விரைவாக மங்கியது, மயக்கம் அவனை முழுவதும் ஆட்கொண்டது.

வந்தியத்தேவன் மயக்கம் தெளிந்து காண் விழித்த போது பழைய நினைவுகள் வந்து பல்லக்கிலிருந்து குதிக்க முயன்றான். ஆனால் விந்தை! விந்தை! அவன் இப்போது பல்லக்கில் இல்லை! விசாலமான ஓர் அறையில் இருந்தான். அந்த அறை தீபங்களினால் பிரகாசமாக விளங்கிற்று. இங்கேயும் ஏதோ மணம் சூழ்ந்திருந்தது! ஆனால் பழைய மாதிரி மணம் இல்லை, அகிற் புகையின் மணம் போலத் தோன்றியது; முன்னே அவன் அநுபவித்தது அறிவை மயக்கிய மணம், இது அறிவைத் தெளிவு செய்த மணம். படுத்திருந்த ஆசனத்திலேயே எழுந்து உட்கார்ந்தான்! சுற்று முற்றும் பார்த்தான். கதவு ஒன்று திறந்திருந்தது. வந்தியத்தேவன் ஆவலுடன் பார்த்தான்.

திறந்த கதவின் வழியாக நந்தினி வந்தாள். வந்தவளைக் கண்கொட்டாமல் அவன் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய வியப்புக்கும், திகைப்புக்கும் பல காரணங்கள் இருந்தன. வர்ணனைக் கெட்டாத அவளுடைய சௌந்தரியம் ஒரு காரணம். எதிர்பாராத முறையில் அவளைச் சந்திக்கும்படி நேர்ந்தது இன்னொரு காரணம். இலங்கையில் அவன் பார்த்திருந்த மூதாட்டியின் உருவத்தோடு இந்த யுவதியின் உருவம் எவ்வளவு ஒத்திருக்கிறது என்ற எண்ணம் மற்றொரு காரணம். உருவங்கள் ஒத்திருக்கின்றனவா? அல்லது அந்த மூதாட்டி தான் உயரிய ஆடை ஆபரணங்களை அணிந்தபடியினால் இப்படித் தோற்றமளிக்கிறாளா?

இனிய கிண்கிணி நாதக்குரலில், "ஐயா! நீர் மிகவும் நல்லவர்!" என்று கூறினாள் நந்தினி.

வந்தியத்தேவன் "வந்தனம்!" என்றான்.

"நல்லவருக்கு அடையாளம் சொல்லாமற் போவதுதானே? தஞ்சை அரண்மனையிலிருந்து என்னிடம் சொல்லிக் கொள்ளாமலே போய் விட்டீர்கள் அல்லவா!"

வந்தியத்தேவன் நகைத்தான்.

"தஞ்சைக் கோட்டைக்குள் வருவதற்கு உமக்கு நான் உதவி செய்தேன். என் கைவிரலிலிருந்து பனை முத்திரை மோதிரத்தை எடுத்துக் கொடுத்தேன். அதை என்னிடம் திருப்பிக் கொடுத்து விட்டாவது போயிருக்க வேண்டாமா?"

வந்தியத்தேவன் வெட்கித்து மௌனமாக நின்றான்.

"எங்கே? இப்போதாவது அதைத் திருப்பிக் கொடுக்கலாம் அல்லவா! அதன் உபயோகம் தீர்ந்து போயிருக்குமே? மறுபடியும் தஞ்சைக்கோட்டைக்கு வரும் எண்ணம் உமக்கு இல்லைதானே?" என்று கூறி, நந்தினி தன் அழகிய மலர்க் கரத்தை நீட்டினாள்.

"தேவி! அந்த முத்திரை மோதிரத்தை இலங்கைத் தளபதி பூதி விக்கிரம கேசரி கைப்பற்றிக் கொண்டு விட்டார். ஆகையால் அதைத்திருப்பிக் கொடுக்க இயலவில்லை, மன்னிக்க வேண்டும்" என்றான் வந்தியத்தேவன்.

"என்னுடைய ஜன்ம சத்துருவிடம் நான் உமக்குக் கொடுத்த மோதிரத்தைக் கொடுத்து விட்டீர் அல்லவா? மிக்க நன்றியுள்ள மனிதர் நீர்."

"நானாகக் கொடுத்து விடவில்லை. பலவந்தமாக எடுத்துக் கொண்டார்கள்."

"வாணாதி ராயர் குலத்தில் உதித்த வீராதிவீரர் பலவந்தத்துக்கு உட்பட்டு ஒரு காரியம் செய்தீரா? என்னால் நம்பமுடியவில்லை!"

"அம்மணி! இங்கே இச்சமயம் நான் வந்திருப்பதும் பலவந்தம் காரணமாகத்தானே? தங்களுடைய ஆட்கள்..."

"உண்மையாகச் சொல்லும், ஐயா! நன்றாய் நினைத்துப் பார்த்துச்சொல்லும்! பலவந்தத்தினால் மட்டும் நீர் இங்கே வந்தீரா? இஷ்டப்பட்டு வரவில்லையா? பல்லக்கில் ஏற்றப்பட்ட பிறகு கீழே குதித்து ஓடுவதற்கு உமக்குச் சந்தர்ப்பம் இல்லையா?" என்று நந்தினி கேட்ட கேள்விகள் கூரிய அம்புகளைப் போல் வந்தியத்தேவன் நெஞ்சைத் துளைத்தன.

"ஆம்? இஷ்டப்பட்டுத்தான் வந்தேன்" என்றான்.

"எதற்காக வந்தீர்?"

"தாங்கள் எதற்காக என்னை அழைத்துவரச் செய்தீர்கள்?"

"என் முத்திரை மோதிரத்தைத் திருப்பிக்கேட்பதற்காக"

"அது மட்டும்தானா?"

"இன்னும் ஒரு காரணம் இருக்கிறது. என் கணவரின் பாதுகாப்புக்கு உட்பட்ட பொக்கிஷ நிலவறையில் நீர் அன்றிரவு இருந்தீர் அல்லவா?"

வந்தியத்தேவன் திடுக்கிட்டான்.

"எனக்குத் தெரியாது என்றா எண்ணினீர்? அழகுதான்! எனக்குத் தெரிந்திராவிட்டால் அன்றிரவு நீர் தப்பிச் சென்றிருக்க முடியுமா?"

"தேவி..."

"ஆம்! எனக்குத் தெரியும், பெரிய பழுவேட்டரையருக்கும் தெரியும். உம்மை அங்கேயே கொன்று போட்டுவிடும்படி பழுவேட்டரையர் சுரங்க வழிக்காவலனுக்குக் கட்டளையிட்டார். அவர் அப்பால் சென்றதும் நான் அந்தக் கட்டளையை மாற்றிவிட்டேன் அதனால் நீர் பிழைத்தீர். உம்முடைய அழகான நண்பன் ஆபத்துக்கு உள்ளானான். இல்லாவிடில், அந்தப் பொக்கிஷ நிலவறையில் முத்துக் குவியல்களுக்குப் பக்கத்தில் உம்முடைய எலும்புகள் இப்போது கிடைக்கும்!"

வந்தியத்தேவன் வியப்புக்கடலில் மூழ்கினான். அவள் கூறியவையெல்லாம் உண்மையென்று அவனால் நம்பமுடியவில்லை. உண்மையில்லாவிட்டால் தான் அன்று அங்கு ஒளிந்திருந்தது எப்படி தெரிந்தது? சம்பிரதாயத்துக்காகவாவது நன்றி கூறவேண்டியது அவசியம் என்று கருதி, "அம்மணி...!" என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தான்.

"வேண்டாம்! மனத்தில் இல்லாததை வெளியில் எதற்காகச் சொல்லப் பார்க்கிறீர்? எனக்கு நன்றி செலுத்த முயல வேண்டாம்!"

"இல்லை தேவி..."

"உம்முடைய உயிரை அன்று காப்பாற்றியதைப் பற்றி எதற்காகச் சொன்னேன் தெரியுமா? உம்முடைய நன்றியை எதிர்பார்த்தல்ல. மறுபடியும் அந்தச் சுரங்க வழியை உபயோகிக்கப் பார்க்க வேண்டாம் என்று எச்சரிப்பதற்காகத்தான். அங்கே இப்போது மிகவும் வலுவான காவல் போடப்பட்டிருக்கிறது. தெரிகிறதா?"

"மறுபடியும் அந்தப் பக்கம் போகும் உத்தேசமே எனக்கு இல்லை."

"அது ஏன் இருக்கப் போகிறது? உதவி செய்தவர்களை நினைக்கும் வழக்கமேதான் உமக்கு இல்லையே? உம்மால் உம்முடைய சிநேகிதன் ஆபத்துக்கு உள்ளானான். அவனை என்னுடைய அரண்மனைக்கே எடுத்துவரச் செய்து அவனுக்கு வைத்தியம் பண்ணுவித்துக் குணப்படுத்தி, அனுப்பினேன். அதில் உமக்குத் திருப்திதானே? அல்லது நம்பிக்கைத் துரோகத்தைப் போல் சிநேகத் துரோகமும் உம்முடன் பிறந்ததா?"

நந்தினியின் வார்த்தை ஒவ்வொன்றும் விஷபாணத்தைப் போல் வந்தியத்தேவனுடைய உள்ளத்தில் ஊடுருவிச் சென்றது. அவன் துடிதுடித்து மௌனமாயிருந்தான்.

"உம்முடன் கோடிக்கரைக்கு வந்த வைத்தியர் மகனைத் தான் உமக்குப் பதிலாகப் பிடித்துக் கொடுத்து அனுப்பினீர்; அவன் என்ன ஆனான் என்று விசாரித்தீரா?"

"தங்களைக் கேட்க எண்ணினேன்."

"சொல்கிறேன்; ஆனால் உம்முடன் இலங்கையிலிருந்து புறப்பட்ட இளவரசர் அருள்மொழிவர்மர் என்ன ஆனார்? அதைச் சொன்னால் நான் வைத்தியர் மகனைப் பற்றிச் சொல்லுவேன்."

வந்தியத்தேவனுக்கு உடம்பை ஒரு உலுக்கி உலுக்கிப் போட்டது. இளவரசரைப் பற்றி அறிவதற்காகத்தான் தன்னை இவள் இப்படிப் பாடாய்ப் படுத்தினாளோ என்று தோன்றியது. ஏமாந்துபோகக்கூடாது என்று தீர்மானித்துக் கொண்டான்.

"அரசி! அதைப்பற்றி மட்டும் என்னைக் கேட்கவேண்டாம்" என்றான்.

"ஆம்! அதைப்பற்றி மட்டும் கேட்கக் கூடாதுதான்! கேட்டாலும் உம்மிடமிருந்து மறுமொழி வராது என்று எனக்குத் தெரியும். உம்முடைய காதலி எப்படியிருக்கிறாள்? அதைப்பற்றியாவது எனக்குச் செல்லலாமா?"

வந்தியத்தேவனுடைய கண்களில் தீப்பொறி பறந்தது. "யாரைச் சொல்லுகிறீர்கள்? ஜாக்கிரதை!" என்றான்.

"ஆகா! நான் ஜாக்கிரதையாகத்தான் இருக்கிறேன். அந்தப் பழையாறை மகாராணியைச் சொல்வதாக எண்ண வேண்டாம். அவள் உம்மைக் கண்ணெடுத்தும் பார்க்க மாட்டாள். தன் காலில் ஒட்டிய தூசிக்குச் சமானமாக உம்மை மதிப்பாள். உம்மை இலங்கையில் கொண்டு சேர்த்துத் திரும்பியும் அழைத்து வந்தாளே, அந்த ஓடக்காரப் பெண்ணைப்பற்றிக் கேட்கிறேன். பூங்குழலி உமது காதலி அல்லவா?"

"இல்லை, இல்லவே இல்லை! அவளுடைய காதலர்களை அவளே எனக்குக் காட்டினாள். நள்ளிரவில் கோடிக்கரைச் சதுப்பு நிலத்தில் கிளம்பும் கொள்ளிவாய்ப் பிசாசுகளை எனக்குக் காட்டினாள். அவர்கள்தான் தன்னுடைய காதலர்கள் என்று சொன்னாள்."

"அவள் பாக்கியசாலி! ஏனெனில் அவளுடைய காதலர்கள் ஒளிவடிவம் பெற்றிருக்கிறார்கள். பிரகாசமாகக் கண்முன் தோன்றுகிறார்கள். என்னுடைய காதலர்களோ இருள் வடிவமானவர்கள்! உருவம் அறிய முடியாதவர்கள். இருள் அடைந்த பாழும் மண்டபத்தில் நீர் எப்போதாவது நள்ளிரவு நேரத்தில் படுத்திருந்ததுண்டா? வௌவால்களும், ஆந்தைகளும் இறகுகளைச் சடபடவென்று அடித்துக்கொண்டு அந்த இருண்ட மண்டபங்களில் உருத்தெரியாத வடிவங்களாகப் பறந்து திரிவதைப் பார்த்ததுண்டா? அம்மாதிரி வடிவங்கள் என் உள்ளமாகிய மண்டபத்தில் ஓயாமல் பறந்து அலைகின்றன. இறகுகளை அடித்துக் கொள்கின்றன. என் நெஞ்சைத் தாக்குகின்றன. என் கன்னத்தை இறகுகளால் தேய்த்துக் கொண்டு செல்கின்றன! அந்த இருள் வடிவங்கள் எங்கிருந்து வருகின்றன? எங்கே போகின்றன? ஏன் என்னைச் சுற்றிச்சுற்றி வட்டமிடுகின்றன? ஐயோ! உமக்குத் தெரியுமா?" - இவ்விதம் கூறிவிட்டு நந்தினி வெறிகொண்ட கண்களால் அங்குமிங்கும் பார்த்தாள்.

வந்தியத்தேவனுடைய வயிர நெஞ்சமும் கலங்கிப் போயிற்று. ஒரு பக்கம் இரக்கமும், இன்னொரு பக்கம் இன்னதென்று தெரியாத பயமும் அவன் மனத்தில் குடிகொண்டன.

"தேவி! வேண்டாம்! கொஞ்சம் சாந்தி அடையுங்கள்!" என்றான்.

"என்னைச் சாந்தி அடையும்படி சொல்வதற்கு நீர் யார்?" என்று கேட்டாள் நந்தினி.

"நான் வாணர் குலத்தில் வந்த ஏழை வாலிபன். தாங்கள் யார் தேவி!"

"நான் யார் என்றா கேட்கிறீர்? அதுதான் எனக்கும் தெரியவில்லை. அதைக் கண்டுபிடிக்கத்தான் முயன்று கொண்டிருக்கிறேன். நான் யார்; மானிடப் பெண்ணா? அல்லது பேயா, பிசாசா என்று கேட்கிறீரா?"

"இல்லை, இல்லை! தெய்வ லோகத்திலிருந்து தவறி விழுந்த தேவப் பெண்ணாகவும் இருக்கலாம் அல்லவா? தெய்வ சாபத்தினால்..."

"ஆம்! தெய்வ சாபம் என் பேரில் ஏதோ இருக்கிறது. அது என்னவென்று மட்டும் தெரியவில்லை. நான் யார், எதற்காகப் பிறந்தேன் என்பதை அறிவேன். இதுவரையில் ஒரே ஒரு சூசகத்தை மட்டும் தெய்வம் எனக்கு அளித்திருக்கிறது. இதோ பாரும்!" என்று கூறி நந்தினி அவள் அருகில் இருந்த வாளை எடுத்துக் காட்டினாள், புதிதாகச் செப்பனிடப்பட்ட அந்தக் கூரிய வாள் தீப வெளிச்சத்தில் பளபளவென்று ஜொலித்துக் கண்ணைப் பறித்தது.

வந்தியத்தேவன் அந்த வாளைப் பார்த்தான். பார்த்த உடனே அது கொல்லன் பட்டறையில் தான் பார்த்த வாள் என்பதைத் தெரிந்து கொண்டான். இதுவரையில் நந்தினியின் வார்த்தைகளாகிற விஷபாணங்களினால் அவன் துடிதுடித்துக் கொண்டிருந்தான். இப்போது இரும்பினால் செய்த வாளாயுதத்தைப் பார்த்ததும் அவனுடைய மனம் திடப்பட்டது. ஏனெனில் வாள், வேல் முதலிய ஆயுதங்கள் அவனுக்குப் பழக்கப்பட்டவை. பிறந்தது முதல் அவனுடன் உறவு பூண்டவை, ஆகையால் பயமில்லை. நந்தினி அந்த வாளைத் தன் பேரில் பிரயோகிப்பதாயிருந்தாலும் பயம் கிடையாது!

"தேவி! பார்த்தேன்! வாளைப் பார்த்தேன். வேலைப்பாடு அமைந்த வாள்! அரச குலத்துக்கு உரிய வாள். வீராதி வீரர்களின் கைக்கு உகந்த வாள். அது மெல்லியல் கொண்ட தங்கள் அழகிய கையில் எப்படி வந்தது? அதன் மூலம் தெய்வம் தங்களுக்கு அளித்திருக்கும் சூசகந்தான் என்ன?" என்று கேட்டான்.