பொன்னியின் செல்வன்/சுழற்காற்று/அநுராதபுரம்
சுழற்காற்று - அத்தியாயம் 34
[தொகு]அநுராதபுரம்
சூரியன் அஸ்தமனமாகும் சமயத்தில் அவர்கள் அநுராதபுரத்தை அணுகினார்கள். இலங்கைத் தீவின் தொன்மை மிக்க அத்தலைநகரத்தைச் சற்றுத் தூரத்திலிருந்து பார்த்தபோதே வந்தியத்தேவன் அதிசயக் கடலில் மூழ்கிப் பேசும் சக்தியை இழந்தான். அநுராதபுரத்தைப் பற்றி அவன் பலர் சொல்லக் கேள்விப்பட்டதுண்டு. அந்நகரைப் பற்றி அவர்கள் செய்த வர்ணனைகளிலிருந்து அதன் தோற்றம் இப்படி இருக்குமென்று அவன் கற்பனை செய்து பார்த்ததும் உண்டு. ஆனால் அவனுடைய கற்பனைகளையெல்லாம் அந்த மாநகரம் விஞ்சியதாயிருந்தது. அம்மம்மா! இதன் மதில்சுவர் தான் எத்தனை பெரியது? எப்படி இருபுறமும் நீண்டு கொண்டே செல்கிறது? எந்த இடத்திலே அச்சுவர் வளைந்து திரும்புகிறது என்று தெரிந்து கொள்ளவும் முடியவில்லையே? மதில் சுவருக்கு உள்ளே எத்தனை எத்தனை கோபுரங்களும் ஸ்தூபங்களும் மண்டபச் சிகரங்களும் தலை தூக்கிக் கம்பீரமாக நிற்கின்றன! ஒன்றுக்கொன்று அவை எவ்வளவு தூரத்தில் நிற்கின்றன! இவ்வளவும் ஒரே நகரத்துக்குள்ளே, ஒரே மதில் சுவருக்குள்ளே அடங்கியிருக்க முடியுமா? காஞ்சி, பழையாறை, தஞ்சை முதலிய நகரங்களெல்லாம் இந்த மாநகரத்தின் முன்னே எம்மாத்திரம்? அசோக சக்கரவர்த்தியின் காலத்தில் பாடலிபுத்திரமும், விக்ரமாதித்தனின் ஆட்சியில் உஜ்ஜயினி நகரமும், கரிகால்வளவன் காலத்தில் காவேரிப்பட்டினமும் ஒருகால் இந்த நகரத்தைப் போல் இருந்திருக்கலாம்! தற்காலத்தில் உள்ள வேறு எந்தப் பட்டணத்தையும் இதற்கு இணை சொல்ல முடியாது!...
மதில் சுவரும் அதன் பிரதான வாசலும் நெருங்க நெருங்க, நகரை நோக்கிச் செல்வோரின் கூட்டம் அதிகமாகி வந்தது. தமிழர்களும், சிங்களவர்களும், பிக்ஷுக்களும் இல்லறத்தாரும், ஆண்களும், பெண்களும், சிறுவர் சிறுமிகளும் பெருங்கூட்டமாகச் சென்றார்கள். எல்லாரும் தேர் திருவிழாவுக்குச் செல்கிறவர்களைப் போல் குதூகலமாகச் சென்றார்கள். அவர்களில் ஒரு சிலர் நமது பிரயாணிகள் மூவரையும் கவனிக்கவும், சுட்டிக் காட்டவும் தொடங்கினார்கள். இதைக் கண்டதும் பொன்னியின் செல்வர் மற்ற இருவருக்கும் சமிக்ஞை செய்துவிட்டு, இராஜபாட்டையிலிருந்து விலகிக் குறுக்கு வழியில் சென்றார். மரங்களால் மறைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய செய் குன்றத்தின் அடிவாரத்தில் வந்து குதிரையை நிறுத்தினார். பின்தொடர்ந்து வந்த இருவரையும் பார்த்து, "குதிரைகள் வெகு தூரம் வந்திருக்கின்றன. சற்று நேரம் இளைப்பாறட்டும். நன்றாக இருட்டிய பிறகு நகருக்குள் போவோம்!" என்றார்.
குதிரைகள் மீதிருந்து மூவரும் இறங்கி ஒரு கற்பாறை மீது உட்கார்ந்தார்கள். "இவ்வளவு கூட்டமாக ஜனங்கள் போகிறார்களே? இன்றைக்கு இந்த நகரத்திலும் ஏதாவது உற்சவமோ?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.
"இந்த நாட்டில் நடக்கும் திருவிழாக்களுக்குள்ளே பெரிய திருவிழா இன்றைக்குத்தான்!" என்றார் இளவரசர்.
"ஈழ நாட்டில் ஏதோ யுத்தம் நடக்கிறது என்று கேள்விப்பட்டேன். இங்கே வந்து பார்த்தால் ஒரே உற்சவமாயிருக்கிறதே" என்றான் வந்தியத்தேவன்.
"பழையாறையில் ஸ்ரீ ஜயந்தி உற்சவம் நடந்தது என்று நீர் சொல்லவில்லையா?"
"ஆமாம், ஆனால் பழையாறை சோழ நாட்டில் இருக்கிறது..."
"அநுராதபுரம் ஈழ நாட்டில் இருக்கிறது. அதனால் என்ன? சோழ நாட்டிலும் சுந்தர சோழ சக்கரவர்த்தியின் ஆட்சிதான்; ஈழநாட்டிலும் அவருடைய செங்கோல் ஆட்சிதான்...!"
"ஆனால் இந்த நாட்டில் இன்னும் பகைவர்கள் இருக்கிறார்களாமே?..."
"பகைவர்கள் எங்கேயோ இருக்கிறார்கள். அதற்கு இங்குள்ள ஜனங்கள் என்ன செய்வார்கள்? போர்க்களத்தில போர் நடக்க வேண்டியதுதான்; ஊர்ப்புறத்தில் உற்சவமும் நடக்க வேண்டியதுதான்!.. திருமலை! நீ என்ன சொல்கிறாய்?" என்றார் இளவரசர்.
"இங்கே வெளிப் பகைவர்கள் இருந்தால் அங்கே உட்பகைவர்கள் இருக்கிறார்கள். வெளிப்பகைவர்களைக் காட்டிலும் உட்பகைவர்களே அபாயமானவர்கள். ஆகையால் இளவரசர் இந்த நாட்டிலேயே உற்சவமும், யுத்தமும் நடத்திக் கொண்டிருப்பது நல்லது என்று அடியேன் சொல்லுகிறேன்" என்றான் ஆழ்வார்க்கடியான்.
"அழகாய்த்தானிருக்கிறது. வெளிப்பகைவர்களை விட உட்பகைவர்களே அபாயகரமானவர்கள் என்றால், அங்கே தானே நம் இளவரசர் இருக்கவேண்டும்? அபாயம் அதிக உள்ள இடமே வீர புருஷர்கள் இருக்கவேண்டிய இடம் அல்லவா?" என்றான் வந்தியத்தேவன்.
"வீரம் என்றால், அசட்டுத்தனமாகச் சதிகாரர்களிடமும், கொலைகாரர்களிடமும் போய் அகப்பட்டுக் கொள்ள வேண்டும் என்று அர்த்தமா? வீராதி வீரனாகிய நீ அங்கே போய் அகப்பட்டுக் கொள்வதுதானே? எதற்காகத் தப்பி ஓடி வந்தாய்?" என்றான் திருமலை.
"போதும்! போதும்! நீங்கள் ஒரு யுத்தம் இங்கே ஆரம்பித்து விடவேண்டாம்!" என்று அருள்மொழிவர்மர் சமாதானம் செய்வித்தார்.
இருட்டிய பிறகு மூன்று பேரும் அந்நகருக்குள் பிரவேசித்தார்கள். அன்று யாத்திரீகள் யாரையுமே கோட்டை வாசலில் தடுத்து நிறுத்தவில்லை. எல்லாரையும் தங்குதடையின்றி விட்டுக் கொண்டிருந்தார்கள். காவலர்கள் சும்மா நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். கூட்டத்தோடு கூட்டமாக நம் கதாபுருஷர்கள் மூவரும் நகருக்குள் பிரவேசித்துச் சென்றார்கள்.
அநுராதபுரத்தின் வீதிகளிலும் ஜனக்கூட்டம் அளவில்லாமலிருந்தது. 'சாது! சாது!' என்ற கோஷம் வானை அளாவியது. ஆங்காங்குப் பல மாடமாளிகைகளும், விஹாரங்களும் இடிந்து கிடப்பதை வந்தியத்தேவன் கண்டான். இடிந்துபோன பல கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டிருப்பதையும் பார்த்தான். புதுப்பிக்கும் திருப்பணி இளவரசர் கட்டளையின் பேரிலேதான் நடந்திருக்கவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். இப்படியெல்லாம் இவர் செய்து வருவதின் நோக்கம்தான் என்ன? ஜயிக்கப்பட்ட நாட்டின் மக்களுக்கு இவர் ஏன் இவ்வளவு சலுகை காட்டுகிறார்? ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்துடன் அடிக்கடி சண்டை போட்டு வருகிறார்கள் இந்தச் சிங்கள அரசர்கள். இத்தகைய நெடுங்காலப் பகைவர்களின் தலைநகரத்தை அழித்துக் கொளுத்தித் தரைமட்டமாக்குவதற்கு மாறாக, இடிந்து போன கட்டிடங்களைப் புதுப்பித்துத் திருவிழாக்கள் நடத்த இவர் அனுமதித்து வருகிறாரே? இது என்ன அதிசயம்! இதில் ஏதோ மர்மம் இருக்கத்தான் வேண்டும்; அது என்னவாயிருக்கும்? வந்தியத்தேவனுடைய உள்ளத்தில் ஒரு விந்தையான எண்ணம் உதித்தது. ஆம், ஆம்! அப்படித்தான் இருக்கவேண்டும். சோழ நாட்டில் இவருக்கு உரிமை எதுவும் இல்லை. பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலர் இருக்கிறார். அவருடன் போட்டியிட மதுராந்தகத்தேவர் இருக்கிறார். ஆகையால் இந்த மாஇலங்கைத் தீவில் இவர் ஒரு தனி ராஜ்யத்தை ஸ்தாபித்துச் சுதந்திர மன்னராக விரும்புகிறார் போலும்! யார் கண்டது? இவருடைய விருப்பம் நிறைவேறினாலும் நிறைவேறலாம்! குடந்தை சோதிடர் சொன்னார் அல்லவா? "அருள்மொழிவர்மர் துருவ நட்சத்திரம் போன்றவர்! அவரை நம்பினவர்களுக்கு ஒரு குறையும் இல்லை!" என்று அத்தகைய வீர புருஷரிடம் தான் வந்து சேர்ந்து விட்டதை நினைத்து அவனுடைய உள்ளம் மகிழ்ச்சியால் பூரித்தது.
வெளிப்புறங்கள் இடிந்து இருளடைந்திருந்த ஒரு பழைய மாளிகையின் வாசலில் வந்து அவர்கள் நின்றார்கள். குதிரைகளின் மீதிருந்து இறங்கினார்கள். அந்த இடம் முக்கியமான வீதிகளிலிருந்து சற்று ஒதுக்குப்புறமாக இருந்தது. ஆகையால் அங்கே ஜனக்கூட்டம் இல்லை. இளவரசர் மூன்று தடவை கையைத் தட்டினார். உடனே இந்திர ஜாலத்தினால் நடந்தது போல் அந்த மாளிகையின் ஒரு பக்கத்தில் கதவு திறந்து வழி உண்டாயிற்று. ஆட்கள் யாருமே இருந்ததாகத் தெரியவில்லை. இளவரசர் இருட்டிலேயே நுழைந்து மேலே சென்றார். வந்தியத்தேவன் பின்னால் திரும்பிக் குதிரைகளின் கதி என்னவென்று ஆவலுடன் பார்த்தான். இளவரசர், "குதிரைகளுக்கு வழி தெரியும்!" என்று கூறி வந்தியத்தேவனைக் கையைப்பிடித்து இழுத்துச் சென்றார். சற்றுத் தூரம் இருளிலேயே நடந்தார்கள். பிறகு 'மினுக் மினுக்'கென்று வெளிச்சம் தெரிந்தது. பின்னர் பிரகாசமான ஒளி தென்பட்டது. அது ஒரு பழையகாலத்து அரண்மனையின் உட்புறம் என்று வந்தியத்தேவன் கண்டான்.
"இங்கே கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்கவேண்டும். மகாசேன சக்கரவர்த்தியின் அந்தப்புரம் இது. திடீரென்று சக்கரவர்த்தி விஜயம் செய்து நம்மைத் துரத்தப் பார்த்தாலும் பார்ப்பார்!" என்றார் இளவரசர்.
"மகாசேனர் என்பவர் யார்?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.
"மகாசேனர் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இந்த இலங்கா ராஜ்யத்தை ஆண்ட சக்கரவர்த்தி. அவர் பொது ஜனங்களுக்குப் பல நன்மைகளைச் செய்தார். ஆகையால் அவருடைய ஆவி இந்த நகரத்தில் இன்னமும் உலாவிக் கொண்டிருப்பதாக ஜனங்கள் நினைக்கிறார்கள். அவருடைய ஆவியானது துணியில்லாமல் குளிரில் கஷ்டப்படப் போகிறதே என்று மரக் கிளைகளில் துணிகளைக் கட்டித் தொங்க விடுகிறார்கள்! இந்த அரண்மனையிலும் அவருக்குப் பிறகு யாரும் வசிப்பதில்லை. வெறுமனேதான் விட்டு வைத்திருக்கிறார்கள்!" என்றார் இளவரசர்.
இளவரசருக்கும், அவருடன் வந்தவர்களுக்கும் பணிவிடை செய்ய அங்கு ஏவலாளர் இருந்தார்கள். குளித்து உணவருந்திய பிறகு மூவரும் அந்த அரண்மனையின் உச்சி மாடத்துக்குச் சென்றார்கள். அவர்கள் இருந்த இடத்திலிருந்து சுற்றுப்புறமெங்கும் பார்க்கலாம். ஆனால் அவர்களைக் கீழேயுள்ளவர்கள் பார்க்க முடியாது. அப்படிப்பட்ட இடத்தில் போய் அமர்ந்தார்கள்.
"ஐயா! பன்னிரண்டு நாழிகைக்கு எங்கேயோ வரும்படி புத்தர் சிலை, செய்தி சொன்னதாகக் கூறினீர்களே?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.
"இன்னும் நேரமிருக்கிறது. சந்திரன் இப்போதுதானே உதயமாயிருக்கிறான்? அதோ அந்தத் 'தாகபா'வின் உச்சிக்கு நேரே சந்திரன் வந்ததும் புறப்பட்டுவிடுவோம்!" என்றார் இளவரசர்.
அவர் சுட்டிக்காட்டிய இடத்தில் ஒரு பெரிய குன்று போன்ற தாகபா ஸ்தூபம் நின்றது. புத்தர் பெருமானுடைய திருமேனியின் துகளை அடியில் வைத்து எழுப்பிய ஸ்தூபங்களாதலால் அவை 'தாது கர்ப்பம்' என்று அழைக்கப்பட்டன. தாது கர்ப்பம் என்னும் பெயர்தான் பின்னர் 'தாகபா' ஆயிற்று.
"எதற்காக இவ்வளவு பெரிய கட்டிடங்களைக் கட்டினார்கள்?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.
"முதன் முதலில், புத்தர் எவ்வளவு பெரியவர் என்பதை ஜனங்களுக்கு உணர்த்துவதற்காக இவ்வளவு பெரிய சின்னங்களை நிர்மாணித்தார்கள். பின்னால் வந்த அரசர்களோ தாங்கள் எவ்வளவு பெரியவர்கள் என்பதைக் காட்டுவதற்காக முன்னால் கட்டியிருந்த ஸ்தூபங்களைக் காட்டிலும் பெரிதாகக் கட்டினார்கள்!" என்றார் இளவரசர்.
சிறிது நேரத்துக்கெல்லாம் சமுத்திரத்தின் கொந்தளிப்பைப் போன்ற பேரிரைச்சல் ஒன்று கேட்டது. வந்தியத்தேவன் இரைச்சல் வந்த திக்கைத் திரும்பிப் பார்த்தான். தூரத்தில் ஒரு பெரிய சேனா சமுத்திரத்தைப் போன்ற பெருங்கூட்டம், - வீதிகளில் முடிவில்லாது நீண்டு போய்க் கொண்டிருந்த ஜனக் கூட்டம் வருவது தெரிந்தது. அந்த ஜன சமுத்திரத்தின் நடுவே கரிய பெரிய திமிங்கலங்கள் போல் நூற்றுக்கணக்கில் யானைகள் காணப்பட்டன. கடல் நீரில் பிரதிபலிக்கும் விண்மீன்களைப் போல் ஆயிரம் ஆயிரம் தீவர்த்திகள் ஒளி வீசின. ஜனங்களோ லட்சக்கணக்கில் இருந்தார்கள்.
வந்தியத்தேவன், "இது என்ன? பகைவர்களின் படை எடுப்பைப்போல் அல்லவா இருக்கிறது?" என்றான்.
"இல்லை, இல்லை! இதுதான் இந்த இலங்கை நாட்டிலேயே மிகப்பெரிய உற்சவமாகிய பெரஹராத் திருவிழா!" என்றார் இளவரசர்.
ஊர்வலம் நெருங்கி வரவர வந்தியத்தேவனுடைய வியப்பு அதிகமாகிக் கொண்டிருந்தது. அந்த மாதிரி காட்சியை அவன் தன் வாழ்நாளில் பார்த்ததில்லை.
முதலில் சுமார் முப்பது யானைகள் அணிவகுத்து வந்தன. அவ்வளவும் தங்க முகபடாங்களினால் அலங்கரிக்கப்பட்ட யானைகள். அவற்றில் நடுநாயகமாக வந்த யானை எல்லாவற்றிலும் கம்பீரமாக இருந்ததுடன், அலங்காரத்திலும் சிறந்து விளங்கியது. அதன் முதுகில் நவரத்தினங்கள் இழைத்த தங்கப் பெட்டி ஒன்று இருந்தது. அதன்மேல் ஒரு தங்கக் குடை கவிந்திருந்தது. நடுநாயகமான இந்த யானையைச் சுற்றியிருந்த யானைகளின் மீது புத்த பிக்ஷுக்கள் பலர் அமர்ந்து வெள்ளிப் பிடிபோட்ட வெண் சாமரங்களை வீசிக்கொண்டிருந்தார்கள். யானைகளுக்கு இடையிடையே குத்து விளக்குகளையும், தீவர்த்திகளையும், இன்னும் பலவித வேலைப்பாடமைந்த தீவர்த்திகளையும், தீபங்களையும் ஏந்திக்கொண்டு பலர் வந்தார்கள். கரிய குன்றுகளை யொத்த யானைகளின் தங்க முகபடாங்களும் மற்ற ஆபரணங்களும் பிக்ஷுக்களின் கைகளில் இருந்த அந்த வெண் சாமரங்களும் பல தீபங்களின் ஒளியில் தகதகவென்று பிரகாசித்துக் கண்களைப் பறித்தன.
யானைகளுக்குப் பின்னால் ஒரு பெரும் ஜனக் கூட்டம். அந்தக் கூட்டத்தின் மத்தியில் சுமார் நூறு பேர் விசித்திரமான உடைகளையும், ஆபரணங்களையும் தரித்து நடனமாடிக் கொண்டு வந்தார்கள். அவர்களில் பலர் உடுக்கையைப் போன்ற வாத்தியங்களை தட்டிக்கொண்டு ஆடினார்கள். இன்னும் பலவகை வாத்தியங்களும் முழங்கின. அப்பப்பா! ஆட்டமாவது ஆட்டம்! கடம்பூர் அரண்மனையில் தேவராளனும், தேவராட்டியும் ஆடிய வெறியாட்டமெல்லாம் இதற்கு முன்னால் எங்கே நிற்கும்! சிற்சில சமயம் அந்த ஆட்டக்காரர்கள் விர்ரென்று வானில் எழும்பிச் சக்கராகாரமாக இரண்டு மூன்று தடவை சுழன்று விட்டுத் தரைக்கு வந்தார்கள். அப்படி அவர்கள் சுழன்றபோது அவர்கள் இடையில் குஞ்சம் குஞ்சமாகத் தொங்கிக் கொண்டிருந்த துணி மடிப்புகள் பூச்சக்கரக் குடைகளைப் போலச் சுழன்றன. இவ்விதம் நூறு பேர் சேர்ந்தாற்போல் எழும்பிச் சுழன்றுவிட்டுக் கீழே குதித்த காட்சியைக் காண்பதற்கு இரண்டு கண்கள் போதவில்லை தான்! இரண்டாயிரம் கண்களாவது குறைந்த பட்சம் வேண்டும். ஆனால் அத்தகைய சமயங்களில் எழுந்த வாத்திய முழக்கங்களைக் கேட்பதற்கோ இரண்டாயிரம் செவிகள் போதமாட்டா! நிச்சயமாக இரண்டு லட்சம் காதுகளேனும் வேண்டும். அப்படியாக உடுக்கைகள், துந்துபிகள், மத்தளங்கள், செப்புத் தாளங்கள், பறைகள், கொம்புகள் எல்லாம் சேர்ந்து முழங்கிக் கேட்போர் காதுகள் செவிடுபடச் செய்தன!
இந்த ஆட்டக்காரர்களும், அவர்களைச் சுற்றி நின்ற கூட்டமும் நகர்ந்ததும், மற்றும் முப்பது யானைகள் முன்போலவே ஜாஜ்வல்யமான ஆபரணங்களுடன் வந்தன. அவற்றில் நடுநாயகமான யானையின் மேலும் ஓர் அழகிய வேலைப்பாடு அமைந்த பெட்டி இருந்தது. அதன் மேல் தங்கக்குடை கவிந்திருந்தது. சுற்றி நின்ற யானை மீதிருந்தவர்கள் வெண் சாமரங்களை வீசினார்கள். இந்த யானைக் கூட்டத்துக்குப் பின்னாலும் ஆட்டக்காரர்கள் வந்தார்கள். இந்த ஆட்டக்காரர்களுக்கு நடுவில் ரதி, மன்மதன், முக்கண்ணையுடைய சிவபெருமான் வேடம் தரித்தவர்கள் நின்றார்கள். சுற்றி நின்றவர்கள் ஆடிக் குதித்தார்கள்.
"இது என்ன? சிவபெருமான் இங்கு எப்படி வந்தார்?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.
"கஜபாகு என்னும் இலங்கை அரசன் சிவபெருமானை அழைத்து வந்தான். அதற்குப் பிறகு இங்கேயே அவர் பிடிவாதமாக இருக்கிறார்!" என்றார் இளவரசர்.
"ஓ வீர வைஷ்ணவரே! பார்த்தீரா? யார் பெரிய தெய்வம் என்று இப்போது தெரிந்ததா?" என்று வந்தியத்தேவன் கேட்டு முடிவதற்குள் மற்றும் சில யானைகள் அதேமாதிரி அலங்காரங்களுடன் வந்துவிட்டன. அந்த யானைகளுக்குப் பின்னால் வந்த ஆட்டக்காரர்களுக்கு மத்தியில் கருடாழ்வாரைப் போல் மூக்கும் இறக்கைகளும் வைத்துக் கட்டிக் கொண்டிருந்த நடனக்காரர்கள் சுழன்றும், பறந்தும், குதித்தும் மூக்கை ஆட்டியும் ஆர்ப்பாட்டமாக ஆடினார்கள்.
"அப்பனே! பார்த்தாயா? இங்கே கருட வாகனத்தில் எங்கள் திருமாலும் எழுந்தருளியிருக்கிறார்!" என்றான் ஆழ்வார்க்கடியான்.
மீண்டும் ஒரு யானைக் கூட்டம் வந்தது. அதற்குப் பின்னால் வந்த ஆட்டக்காரர்களோ கைகளில் வாள்களும், வேல்களும் ஏந்திப் பயங்கரமான யுத்த நடனம் செய்து கொண்டு வந்தார்கள். தாளத்துக்கும், ஆட்டத்துக்கும் இசைய அவர்கள் கையில் பிடித்த வாள்களும், வேல்களும் ஒன்றோடொன்று 'டணார் டணார்' என்று மோதிச் சப்தித்தன.
இவ்வளவுக்கும் கடைசியாக வந்த யானைக் கூட்டத்துக்குப் பின்னால் ஆட்டக்காரர்கள் அவ்வளவு பேரும் இரண்டு கையிலும் இரண்டு சிலம்புகளை வைத்துக் கொண்டு ஆடினார்கள். அவர்கள் ஆடும்போது அத்தனை சிலம்புகளும் சேர்ந்து 'கலீர் கலீர்' என்று சப்தித்தன. ஒரு சமயம் அவர்கள் நடனம் வெகு உக்கிரமாயிருந்தது. இன்னொரு சமயம் அமைதி பொருந்திய லளித நடனக் கலையாக மாறியது. இந்தக் காட்சிகளையெல்லாம் கண்டும், பலவித சப்த விசித்திரங்களைக் கேட்டும் பிரமித்து நின்ற வந்தியத்தேவனுக்கு இளவரசர் இந்த ஊர்வலத் திருவிழாவின் வரலாற்றையும் கருத்தையும் கூறினார்.
தமிழகத்து அரசர்களும் இலங்கை அரசர்களும் நட்புரிமை பாராட்டிய காலங்களும் உண்டு. கடல் சூழ் இலங்கைக் கஜபாகு மன்னனும், சேரன் செங்குட்டுவனும் அவ்விதம் சிநேகமாயிருந்தார்கள். சேரன் செங்குட்டுவன் கண்ணகி என்னும் பத்தினித் தெய்வத்துக்கு விழா நடத்தியபோது கஜபாகு அங்கே சென்றிருந்தான். அந்நாட்டில் நடந்த மற்றத் திருவிழாக்களையும் கண்டு களித்தான். பின்னர் ஒருசமயம் சேரன் செங்குட்டுவன் இலங்கைக்கு வந்திருந்தபோது கஜபாகு மன்னன் விழா நடத்தினான். தமிழகத்தின் தெய்வமாகிய சிவபெருமான், திருமால், கார்த்திகேயர், பத்தினித் தெய்வம் ஆகிய நாலு தெய்வங்களுக்கும் ஒரே சமயத்தில் திருவிழா நடத்தினான். இந்த விழாக்களில் மக்கள் அடைந்த குதூகலத்தைக் கண்டு, பின்னர் ஆண்டுதோறும் அந்த விழாக்களை நடத்தத் தீர்மானித்தான். புத்தர் பெருமானுக்கு அவ்விழாவில் முதல் இடம் கொடுத்து மற்ற நாலு தெய்வங்களையும் பின்னால் வரச்செய்து விழா நடத்தினான். அன்று முதல் அந்த விழா இலங்கையில் நிலைத்து நின்று மிகப்பெரிய திருவிழாவாக ஆண்டு தோறும் விடாமல் நடந்து வருகிறது.
"ஆனால் தெய்வங்களை எங்கும் காணவில்லையே?" என்றான் வல்லவரையன்.
"ஒவ்வொரு யானைக் கூட்டத்திலும் நடுநாயகமாக வந்த யானை மீது வைத்திருந்த பெட்டியைப் பார்த்தீரா?"
"பார்த்தேன்! அந்தப் பெட்டிக்குள் தெய்வங்களைப் பூட்டி வைத்திருக்கிறார்களா, தப்பித்துக்கொண்டு தமிழகத்துக்குப் போய்விடக் கூடாது என்று?"
இதைக் கேட்ட பொன்னியின் செல்வர் நகைத்து விட்டு, "அப்படியில்லை; முதலில் வந்த யானை மீதிருந்த பெட்டிக்குள்ளே புத்த பெருமானுடைய பல் ஒன்றைப் பத்திரமாய்ப் பூட்டி வைத்திருக்கிறார்கள். புத்த சமயத்தார் இந்நாட்டில் போற்றிக் காப்பாற்றும் செல்வங்களுக்குள்ளே விலை மதிப்பற்ற செல்வம் அது. ஆகையால் அந்த மனிதப் பொருளை அழகிய பெட்டியில் வைத்து யானை மீது ஏற்றி ஊர்வலமாய் எடுத்துச் சென்றார்கள்!" என்றார்.
"பின்னால் வரும் பெட்டிகளுக்குள்ளே என்ன இருக்கிறது?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.
"சிவன், விஷ்ணு, முருகன், கண்ணகி ஆகியவர்களின் பற்கள் கிடைக்கவில்லை! ஆகையால் அவற்றுக்குப் பதிலாக அந்தந்தத் தேவாலயத்தின் தெய்வங்கள் அணியும் திரு ஆபரணங்களை அந்தப் பெட்டிகளில் பத்திரமாய் வைத்துக் கொண்டு போகிறார்கள்" என்று இளவரசர் கூறினார்.
வந்தியத்தேவன் சிறிது சிந்தனையில் ஆழ்ந்திருந்துவிட்டு,"ஆகா! தங்களுக்குப் பதிலாகப் பெரிய பழுவேட்டரையர் மட்டும் இங்கே படையெடுத்து வந்திருந்தால்?..." என்றான்.
அச்சமயத்தில் திருவிழா ஊர்வலத்தின் கடைசிப் பகுதி அந்த வீதி முடுக்கில் திரும்பிச் சென்றது. வாத்திய முழக்கம், ஜனங்களின் ஆரவாரம்... இவற்றின் ஓசை குறையத் தொடங்கியது.
"குறிப்பிட்ட நேரத்துக்கு இன்னும் ஒரு நாழிகைதான் மிச்சமிருக்கிறது. வாருங்கள், போகலாம்!" என்று இளவரசர் மேடையிலிருந்து இறங்கினார். மூவரும் கீழே வீதிக்கு வந்தார்கள். ஊர்வலம் சென்றதற்கு நேர் எதிர்ப்பக்கம் நோக்கி நடந்தார்கள். நகர மக்கள் அனைவரும் பெரஹராத் திருவிழாவில் ஈடுபட்டிருந்தபடியால் இவர்கள் போன வீதிகளில் ஜன நடமாட்டமே இல்லை. சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு விஸ்தாரமான ஏரியின் கரைக்கு வந்து சேர்ந்தார்கள். அந்த ஏரியில் தண்ணீர் ததும்பிக் கரையில் அலைமோதிக் கொண்டிருந்தது. சந்திர கிரணங்கள் அந்த அலைகளில் தவழ்ந்து விளையாடி வெள்ளி அலைகளாகச் செய்து கொண்டிருந்தன.
ஏரிக்கரையிலிருந்து கீழே இறங்கிச் சென்றார்கள். அவ்விடத்தில் செண்பக மலர்களின் நறுமணம் பரவியிருந்தது. இன்னும் பலவகைப் புஷ்பச் செடிகளில் வெள்ளை மலர்கள் கொத்துக் கொத்தாகப் பூத்துத் திகழ்ந்தன. ஆங்காங்கே சிறிய சிறிய செய்குன்றுகளும், படித்துறைத் தடாகங்களும் காணப்பட்டன. தடாகம் ஒன்றின் மேலே அமைந்திருந்த அத்தகைய சிங்க முகத்துவாரத்திலிருந்து நீர் அருவி பொழிந்து கொண்டிருந்தது. அந்தத் தடாகக் கரை அருகில் நெருங்கிச் சென்று மூவரும் நின்றார்கள்.
அநுராதபுரத்துக்கு வெளியே சாலை ஓரத்தில் நின்ற புத்தர் சிலையின் தோற்றம் வந்தியத்தேவனுடைய மனக் கண் முன்னால் வந்தது. 'சிலையின் அடிப்பீடத்தில் வரிசையாக வைத்திருந்த தாமரை மொட்டுக்களை இளவரசர் எண்ணிப் பார்த்துப் பன்னிரண்டு என்று சொன்னார். அவை பன்னிரண்டு நாழிகையைக் குறித்தன போலும். தாமரை மலர்களாயிராமல் மொட்டுக்களாயிருந்த படியால் இரவைக் குறித்தன போலும்! அந்த மொட்டுக்களுக்கு அருகில் இருந்த சிங்க முகத்துக் கிண்டியும் வந்தியத்தேவனுடைய நினைவில் இருந்தது. அந்தப் பாத்திரம் இந்தச் சிங்க முக அருவி விழும் தடாகத்தை குறிப்பிட்டது போலும்!'
'இதெல்லாம் சரிதான்! ஆனால் இங்கு எதற்காக, யார் இளவரசரை வரச் செய்திருக்கிறார்கள்? இதில் என்னென்ன அபாயங்கள் நேரிடுமோ, என்னமோ தெரியவில்லையே? ஆயுதம் ஒன்றும் கொண்டுவரக் கூடாது என்று இளவரசர் தடுத்ததின் கருத்து என்ன? ஒரு வேளை இங்கு ஏதேனும் காதல் நிகழ்ச்சி நடைபெறப் போகிறதோ?'
இந்த நினைவு வந்ததும் வந்தியத்தேவனுடைய உள்ளம் கொந்தளித்தது. அவனுடைய மனம் கடல் கடந்து பழையாறைக்குப் பாய்ந்து சென்றது. இளைய பிராட்டியும், வானதி தேவியும் அவன் மனக்கண் முன் வந்தார்கள்.
இளவரசரின் வாயைப் பிடுங்கிப் பார்க்கலாம் என்று வந்தியத்தேவன் எண்ணினான். "ஐயா! இந்த இடத்தைப் பார்த்தால் பழைய காலத்து அரண்மனை நந்தவனம் மாதிரி அல்லவா தோன்றுகிறது!" என்றான்.
"ஆம்; இது அரண்மனை நந்தவனம் இருந்த இடந்தான். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த நந்தவனத்தை யொட்டி துஷ்டகமனுவின் அரண்மனை இருந்தது. அதோ பார்! இன்னமும் இந்த அரண்மனையில் சில பகுதிகள் அழியாமல் இருக்கின்றன!" என்றார்.
வந்தியத்தேவன் அங்கே சற்றுத் தூரத்தில் தெரிந்த பழைய அரண்மனை மாடங்களைப் பார்த்துவிட்டு, "அந்தக் கட்டிடங்கள் அரண்மனை அந்தப்புரமாயிருந்திருக்கலாம். இந்தத் தடாகத்தில் அரசிளங் குமரிகள் இறங்கி ஜலக்கிரீடை செய்து மகிழ்ந்திருப்பார்கள்!" என்றான்.
"இந்த நந்தவனத்திலே நடந்த அதிசயமான சம்பவம் வேறு ஒன்று உண்டு. ஆயிரம் வருஷத்துக்கு முன்னால் நடந்தது. துஷ்டகமனு மன்னனின் புதல்வன் ஸாலி என்பவன் இங்கே ஒருநாள் உலாவிக் கொண்டிருந்தான். ஒரு பெண் இந்தத் தடாகத்தில் தண்ணீர் மொண்டு புஷ்பச் செடிகளுக்கு ஊற்றிக் கொண்டிருப்பதைக் கண்டான். அந்தப் பெண்ணிடம் காதல் கொண்டான். அவள் ஒரு சண்டாளப் பெண் என்றும், அவள் பெயர் அசோகமாலா என்றும் அறிந்தான். சண்டாளப் பெண்ணாயிருந்தாலும் அவளையே மணந்து கொள்வேன் என்று பிடிவாதம் பிடித்தான். 'அப்படியானால் நீ சிம்மாசனம் ஏற முடியாது!' என்று தந்தை கூறினார். 'சிம்மாசனம் வேண்டாம்; எனக்கு அசோகமாலா தான் வேண்டும்' என்று ஸாலிவாஹனன் பிடிவாதமாகக் கூறி விட்டான். இந்த உலகத்தில் இன்னொரு ராஜகுமாரனால் இப்படிக் கூற முடியும் என்று தோன்றுகிறதா?"
இவ்வாறு பொன்னியின் செல்வர் கூறியபோது, கோடிக்கரைக் கடலில் படகு செலுத்திய சமுத்திர குமாரியின் நினைவு வந்தியத்தேவனுக்கு வந்தது. ஆகா! ஒரு வேளை இவரும் அந்தப் பெண்ணை நினைத்துக் கொண்டுதான் இந்தக் கதையைச் சொல்லுகிறாரா, என்ன?
பூங்குழலியின் பேச்சை எப்படி எடுக்கலாம் என்று அவன் எண்ணிக் கொண்டிருந்த போது, அங்கே ஓர் அதிசயம் நிகழ்ந்தது. சிங்க தாரைத் தடாகத்தின் பின்புறச் சுவரில், உட்பக்கம் குழிவாக அமைந்து, அதற்குள்ளே இருவர் அமரும் படியான ஒரு கல் ஆசனம் இருந்தது. அப்படி அமைந்திருந்த அறையின் ஓர் ஓரத்தில் திடீரென்று விளக்கு வெளிச்சம் காணப்பட்டது. விளக்கைப் பிடித்துக் கொண்டிருந்தவரின் கரம் முதலில் வெளிவந்தது. பிறகு புத்த பிக்ஷு ஒருவரின் திருமுகமும் காணப்பட்டது.
வந்தியதேவன் அந்த இந்திரஜாலக் காட்சியை அடங்கா வியப்புடன் பார்த்துக்கொண்டு நின்றான். மேலே என்ன நடக்கப் போகிறது என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தினால் அவன் மூச்சும் சிறிது நேரம் நின்றிருந்தது.