உள்ளடக்கத்துக்குச் செல்

பொன்னியின் செல்வன்/சுழற்காற்று/ஆபத்துதவிகள்

விக்கிமூலம் இலிருந்து

சுழற்காற்று - அத்தியாயம் 50

[தொகு]

"ஆபத்துதவிகள்"

இளவரசரைப் படகிலே பார்த்ததும் பார்த்திபேந்திரனுக்கு உண்டான ஆச்சரியம் சொல்லத் தரமன்று. கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்து தரிசனம் தந்ததுமல்லாமல் 'வேண்டிய வரங்களைக் கேள்' என்று சொன்னது போலல்லவா இருக்கிறது? எனினும், இப்படி அவர் தனியாகப் படகில் வருவதன் காரணம் என்ன? பழுவேட்டரையர்களின் கப்பல்கள் என்ன ஆயின?... தன்னுடைய கப்பல் இது என்று தெரியாமல், ஒருவேளை இதுதான் அவரைச் சிறைப்படுத்த வந்த கப்பல் என்று எண்ணிக் கொண்டு வருகிறாரோ?

அப்படியெல்லாம் தவறான எண்ணத்துடன் வரவில்லையென்று விரைவிலேயே தெரிந்து போயிற்று. படகிலிருந்து கப்பலில் இளவரசர் ஏறியதும் பார்த்திபேந்திரன் கேட்கும் வரையில் காத்திராமல் நடந்த சம்பவங்களைச் சுருக்கமாகக் கூறிவிட்டார்.

"அராபியர் வசப்பட்ட கப்பலில் வந்தியத்தேவன் இருக்கிறான். அவனை எப்படியாவது தப்புவித்தாக வேண்டும்" என்றார்.

இளவரசர் கூறிய செய்திகள் பார்த்திபேந்திரனுக்கு மிகக் குதூகலத்தை உண்டாக்கின. "எல்லாம் நன்றாகத்தான் முடிந்திருக்கின்றன. அந்த முரட்டுப் பிள்ளை இவ்வளவு பதட்டமாகக் காரியம் செய்யாதிருந்தால் இன்னும் நன்றாயிருக்கும். ஆயினும் அவனை அயல்நாட்டாரிடம் காட்டிக் கொடுத்துவிடக்கூடாது. அந்தக் கப்பல் வெகுதூரம் போயிருக்க முடியாது; எப்படியும் துரத்திப் பிடித்து விடலாம்" என்றான். பிறகு கலபதியைக் கூப்பிட்டு விவரத்தைக் கூறினான்.

"அதைப் பற்றி என்ன கவலை? காற்று இப்படியே அநுகூலமாக அடித்துக் கொண்டிருந்தால் சாயங்காலத்துக்குள் பிடித்துவிடலாம்! நம்மை மீறி அந்தக் கப்பல் எங்கே போய்விடப் போகிறது! கோடிக்கரை சென்று, பிறகு கடற்கரையோரமாகத் தானே போகவேண்டும்?" என்றான் கலபதி.

ஆனால் வாயுபகவானுடைய திருவுள்ளம் வேறுவிதமாயிருந்தது. வரவரக் காற்றின் வேகம் குறைந்து வந்தது. உச்சி வேளை ஆனதும் காற்று அடியோடு நின்றுவிட்டது. கடல், அலை என்பதே இன்றி அமைதியடைந்திருந்தது. சொல்ல முடியாத புழுக்கம் சூழ்ந்தது. சூரியபகவான் வானத்தில் ஜோதிப் பிழம்பாக விளங்கிக் கடல் மீது தீயைப் பொழிந்தார்! கடல் நீர் தொட்டுப் பார்த்தால் சுட்டிராதுதான். ஆயினும் கடலைப் பார்க்கும்போது தண்ணீர்க் கடலாகத் தோன்றவில்லை; நன்றாகக் காய்ச்சிக் கொதித்துப் புகை எழும்பும் எண்ணெய்க் கடல் போலத் தோன்றியது. சூரிய கிரணங்கள் நேரே பிரதிபலித்த இடங்களில் உருக்கிய அக்கினிக் கடலாகவும் காணப்பட்டது.

கப்பல் அசையவில்லை; பாய்மரங்களிலிருந்து எல்லாப் பாய்களும் நன்றாக விரிக்கப்பட்டிருந்தன. பயன் என்ன? அலை ஓசை நின்றது போல் பாய்மரங்கள் சடபடவென்று அடித்துக் கொள்ளும் ஓசையும் நின்றுவிட்டது. பாய்மரங்களும் தூண்களும் குறுக்கு விட்டங்களும் அசையும்போது ஏற்படும் கறமுற சப்தமும் இல்லை. கப்பல் கடலைக் கிழித்துச் செல்லும் ஓசையும் இல்லை. உண்மையில் அந்த நிசப்தம் சகிக்க முடியாத வேதனையை அளித்தது.

அத்துடன் இளவரசரின் உள்ளத்தில் வந்தியத்தேவனைப் பற்றிய வேதனையும் மிகுந்தது.

"இப்படிக் காற்று நின்று கப்பலும் அடியோடு நின்று விட்டதே! இப்படியே எத்தனை நேரம் இருக்கும்! காற்று எப்போது மறுபடி வரும்? அந்தக் கப்பல் தப்பித்துக்கொண்டு போய் விடாதா?" என்று கவலையுடன் கேட்டார்.

பார்த்திபேந்திரன் நாவாயின் நாயகனை நோக்கினான்.

அப்போது கலபதி, "அதிக நேரம் இப்படியே காற்று அடியோடு ஓய்ந்து இருக்க முடியாது. சுழிக்காற்று எங்கேயோ உருவாகிக் கொண்டிருக்கிறது. சீக்கிரத்தில் அதுவந்து நம்மைத் தாக்கினாலும் தாக்கும்; அல்லது நம்மை ஒதுக்கி விட்டுவிட்டு அப்பால் போனாலும் போய்விடும். நம்மைச் சுழிக்காற்றுத் தாக்கினாலும், தாக்காவிட்டாலும் கடல் சீக்கிரத்தில் கொந்தளிக்கப் போவது நிச்சயம். இப்போது இவ்வளவு அமைதி குடி கொண்டிருக்கிறதல்லவா? இன்று இரவுக்குள் மலை போன்ற அலைகள் எழுந்து மோதுவதைப் பார்ப்போம், மலைகளையும் பார்ப்போம்; அதல பாதாளத்தையும் பார்ப்போம்!" என்றான்.

"சுழிக்காற்று கப்பலைத் தாக்கினால் அபாயந்தான் அல்லவா?"

"சாதாரண அபாயாமா? கடவுள் காப்பாற்றினால்தான் உண்டு!"

"அப்படியானால் அந்தக் கப்பலை நாம் பிடிப்பது துர்லபம்."

"இளவரசே! கடலும் காற்றும் பட்சபாதம் காட்டுவதில்லை. நமக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமைதான் அந்தக் கப்பலுக்கு ஏற்பட்டிருக்கும். தற்சமயம் அதுவும் அசையாமல்தான் நிற்கும்..."

"ஒருவேளை கரையோரம் சென்றிருந்தால்..." என்று இளவரசர் கேட்டார்.

"கரையோரம் போயிருந்தால் அதில் உள்ளவர்கள் இறங்கிக் கரைசேர்ந்து தப்பிக்கலாம்! ஆனால் கப்பல் போனதுதான்!" என்று சொன்னான் கலபதி.

"எவ்வளவு பெரிய அபாயமாயிருந்தாலும் நமக்கு வேண்டியவர்கள் நம் பக்கத்திலிருந்தால் கவலையில்லை!" என்றார் இளவரசர். அவருடைய மனக்கண் முன்னால் வந்தியத்தேவனுடைய குதூகலம் ததும்பும் முகமும், பூங்குழலியின் மிரண்ட பார்வையுடைய முகமும் அடிக்கடி வந்து கொண்டிருந்தன. அவர்கள் இச்சமயம் எங்கே இருப்பார்கள்? என்ன செய்து கொண்டிருப்பார்கள்? என்ன எண்ணிக் கொண்டிருப்பார்கள்?

உண்மையிலேயே அபாயம் சூழ்ந்த நிலையில் நாம் விட்டுவிட்டு வந்த வந்தியத்தேவனிடம் இப்போது நாம் செல்வோம். இளவரசரைச் சிறைப்பிடித்துக் கொண்டு போவதற்காக வந்த பெரிய மரக்கலத்தின் அடித்தட்டில், தட்டு முட்டுச் சாமான்களும், மரக்கட்டைகளும், மூட்டை முடிச்சுகளும், போட்டிருந்த இருண்ட அறையில், அவன் ஒரு கட்டையுடன் சேர்த்துக் கட்டப்பட்டுக் கிடந்தான். வெகு நேரம் வரையில் அவன் பிரமை பிடித்தவன் போலிருந்தான். அவசர புத்தியினால் இத்தகைய இக்கட்டில் அகப்பட்டுக் கொண்டோ மே என்ற எண்ணம் அவனை வதைத்தது. இது என்ன கப்பல், யாருடைய கப்பல், இதில் சில முரட்டு அராபியர்களும் மந்திரவாதி ரவிதாஸனும் சேர்ந்திருப்பது எப்படி, இந்தக் கப்பல் எங்கே போகிறது, தன்னை என்னதான் செய்வார்கள் என்று யோசித்துப் பார்த்ததும் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் தன் வருங்காலத்தைப் பற்றிக் கண்டு வந்த கனவெல்லாம் உண்மையில் கனவுதான் போலும்! இதைவிடப் பெரிய கஷ்டங்களிலிருந்தெல்லாம் தான் தப்பித்திருக்கும்போது, இதிலிருந்து தப்பிக்கவும் ஒருவழி கிடைக்காமலா போகும் என்ற சபலமும் சில சமயம் ஏற்பட்டது. பார்க்கலாம்; உடம்பில் உயிர் இருக்கும் வரையில், அறிவும் ஆலோசனைத் திறனும் இருக்கும் வரையில், அடியோடு நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை.

இந்த ஆசை தோன்றிய பிறகு சுற்றுமுற்றும் பார்த்தான். இருட்டில் முதலில் கண் தெரியவில்லை. வரவரத் தெரியலாயிற்று. அவனுக்குச் சமீபத்திலேயே பலவகை ஆயுதங்கள் குவிந்து கிடப்பதைக் கண்டான். அவனுடைய உடம்பு இறுக்கிக் கட்டப்பட்டிருந்ததே தவிர, கைகள் இறுக்கிக் கட்டப்பட்டவில்லை. கைக்கட்டைத் தளர்த்திக்கொண்டு ஒரு கையை நீட்டி அங்கே கிடந்த கத்திகளில் ஒன்றை எடுக்கலாம்; உடம்பையும் கால்களையும் பிணைந்திருந்த கயிறுகளையும் அறுத்துவிடலாம். ஆனால் பிறகு என்ன செய்வது? இந்த அறைக் கதவோ சாத்தப்பட்டிருக்கிறது. இதிலிருந்து வெளியில் போவது எப்படி? போன பிறகு அவ்வளவு அராபியர்களுடன் மந்திரவாதியுடனும், அவன் தோழனுடனும் சேர்ந்தாற்போல் சண்டை போடமுடியுமா? அப்படிச் சண்டை போட்டு எல்லாரையும் கொன்றுவிட்டாலும் அப்புறம் என்ன பண்ணுவது? கப்பலைத் தன்னந்தனியாகத் தன்னால் செலுத்த முடியுமா? கப்பலைப் பற்றிய சமாசாரம் ஒன்றுமே தனக்குத் தெரியாதே!

ஆம்; மறுபடியும் அவசரப் படக்கூடாது; பொறுத்திருந்து பார்க்கவேண்டும். தன்னை உடனே கொல்ல முயலாமல் அவர்கள் கட்டிப் போட்டிருப்பதே கொஞ்சம் நம்பிக்கை இடமளிக்கிறதல்லவா? என்னதான் செய்யப் போகிறார்கள், பார்க்கலாமே?

ஆனால் நேரமாக ஆக வந்தியத்தேவனுடைய பொறுமை பெரிதும் சோதனைக் கிடமாயிற்று. அடுப்புக்குள்போட்டு அவனை வேகவைப்பது போல் அந்த அறை அவ்வளவு புழுக்கமாயிருந்தது. உடம்பில் வியர்வை வியர்த்துக் கொட்டியது. கடற் பிரயாணம் இவ்வளவு வெதுப்புவதாயிருக்கும் என்று அவன் கனவிலும் எண்ணியதில்லை. பூங்குழலியுடன் அன்றிரவு படகில் சென்றதை நினைத்துக் கொண்டான். அப்போது எப்படிக் குளிர் காற்று வீசிற்று? உடம்புக்கு எவ்வளவு இதயமாயிருந்தது. அதற்கும் இதற்கும் எத்தனை வித்தியாசம்? சுண்ணாம்புக் காளவாயில் போடுவது என்பார்களே, அதுபோல அல்லவா இருக்கிறது?

திடீரென்று ஏதோ ஒரு மாறுதலை அவன் உணர்ந்தான். ஆம், கப்பலில் ஆட்டம் நின்றுவிட்டது. கப்பல் நகராமல் நின்ற நிலையில் நிற்பதாகத் தோன்றியது. புழுக்கம் இன்னும் அதிகமாயிற்று. தாகம் மிகுந்து நாவும் தொண்டையும் வறண்டன. ஏது? இனி வெகு நேரம் பொறுக்க முடியாது. கத்தியை எட்டி எடுத்து, கட்டுக்களை அறுத்துகொண்டு, புறப்பட்டுப் போய்ப் பார்க்க வேண்டியதுதான். கப்பலில் எங்கேயாவது குடிதண்ணீர் வைத்திராமலா இருப்பார்கள்?

வந்தியத்தேவன் சுற்று முற்றும் பார்த்தான். ஒரு மூலையில் சில தேங்காய்கள் கிடந்தன. ஆகா! வெண்ணெய் இருக்க நெய்க்கு அழுவானேன்? அந்தத் தேங்காய்களைக் கொண்டு பசி, தாகம் இரண்டையும் தீர்த்துக் கொள்ளலாமே? கையின் கட்டுக்களை வந்தியத்தேவன் நன்றாய்த் தளர்த்தி விட்டுக்கொண்டான். கத்தியை எட்டி எடுக்கக் கையை நீட்டியும் விட்டான். அச்சமயம் காலடிச் சத்தம் கேட்டது. கதவு திறக்கும் சத்தமும் கேட்டது. நீட்டிய கையை மடக்கிக் கொண்டான்.

முன்னொரு தடவை வந்துவிட்டுப் போன மந்திரவாதி ரவிதாஸனும் அவனுடைய தோழனும் உள்ளே வந்தார்கள். இருவரும் வந்தியத்தேவனுக்கு இரு புறத்திலும் நின்று கொண்டார்கள்.

"கப்பல் பிரயாணம் எப்படி, அப்பா! சுகமாயிருக்கிறதா?" என்று ரவிதாஸன் கேட்டான்.

வந்தியத்தேவன், "தாகம் கொல்லுகிறது; கொஞ்சம் தண்ணீர்!" என்று பேச முடியாமல் பேசினான்.

"ஆ! எங்களுக்கும் தாகந்தான். அந்தப் பாவிகள் கப்பலில் தண்ணீர் வைக்கவில்லையே?" என்றான் ரவிதாஸன்.

"காளிக்கு எல்லாரையும்விட அதிக தாகமாயிருக்கிறது. இரத்த தாகம்!" என்றான் இன்னொருவன்.

வந்தியத்தேவன், திரும்பி அவனை உற்றுப் பார்த்தான். "என்னை ஞாபகமில்லையா, தம்பி! மறந்துவிட்டாயா? கடம்பூர் அரண்மனையில் குரவைக் கூத்துக்குப் பிறகு தேவராளன் வந்து வெறியாட்டம் ஆடினானே? 'காளித்தாய் பலி கேட்கிறாள்; ஆயிரம் வருஷத்து அரச குல இரத்தம் கேட்கிறாள்' என்று ஆவேசம் வந்து சொன்னானே?..."

"ஆ! இப்போது ஞாபகம் வருகிறது! நீதான் அந்தத் தேவராளன்!" என்று வந்தியத்தேவன் முணுமுணுத்தான்.

"ஆமாம்; நான்தான்! ஆயிரம் வருஷத்து அரசகுமாரனைக் காளிக்குப் பலி கொடுக்கலாம் என்றுதான் இலங்கைக்கு வந்தோம் அது சாத்தியப்படவில்லை. அந்த வீரவைஷ்ணவனை வைகுண்டத்துக்கு அனுப்பப் பார்த்தோம் அதுவும் முடியவில்லை. நீயாவது வலுவில் வந்து சேர்ந்தாயே? மிக்க சந்தோஷம். இப்போதைக்குக் குறுநில மன்னர் குலத்து இரத்தத்தோடு காளி திருப்தியடைய வேண்டியதுதான்!" என்றான் தேவராளன்.

"அப்படியானால் ஏன் தாமதிக்கிறீர்கள்?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.

"வீர வாலிபனாகிய உன்னைக் கண்ட இடத்தில் பலி கொடுத்து விடலாமா! கரை சேர்ந்த பிறகு எல்லாப் பூசாரிகளையும் அழைத்து உற்சவம் கொண்டாடியல்லவா பலி கொடுக்கவேண்டும்? முக்கியமாகப் பூசாரிணி வரவேண்டுமே?"

"பூசாரிணி யார்?"

"யார் என்று உனக்குத் தெரியாதா? பழுவூர் இளையராணிதான்."

வந்தியத்தேவன் சிறிது யோசித்துவிட்டு, "உங்களுக்கு உண்மையில் அத்தகைய எண்ணம் இருந்தால் உடனே கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள். இல்லாவிடில் இங்கேயே தாகத்தினால் செத்துப்போவேன்!" என்றான்.

"தண்ணீர் இல்லையே, தம்பி!"

"நீதான் மந்திரவாதியாயிற்றே?"

"நன்றாகச் சொன்னாய்? மந்திரம் போட்டிருக்கிறேன் பார்! இப்போது கப்பல் அசையாமல் நிற்கிறது தெரிகிறதல்லவா? இரவுக்குள் சுழற்காற்று அடிக்கப் போகிறது. மழையும் வரும்!"

"மழை வந்தால் எனக்கு என்ன பயன்? நீங்கள் மேல்தட்டில் இருப்பீர்கள்! நான் இங்கே..."

"நீயும் மேல் தட்டுக்கு வரலாம். நாக்கை நீட்டி நீர் அருந்தி தாகத்தைப் போக்கிக் கொள்ளலாம். நாங்கள் சொல்கிறபடி கேட்பதாயிருந்தால்..."

"என்ன சொல்லுகிறீர்கள்?"

"அந்த அராபியப் பிசாசுகளைச் சமுத்திர ராஜனுக்குப் பலி கொடுக்க வேண்டுமென்று சொல்லுகிறோம்."

"ஏன்?"

"அவர்கள் கலிங்க நாட்டுக்கு இந்தக் கப்பலைக் கொண்டு போக வேண்டும் என்கிறார்கள். நாங்கள் கோடிக்கரையிலாவது நாகப்பட்டினத்திலாவது இறங்க வேண்டும் என்கிறோம்..."

"அவர்கள் ஆறு பேர், அதோடு பெரும் முரடர்களாயிருக்கிறார்களே?"

"அவர்களில் மூன்று பேர் தூங்குகிறார்கள்; மற்ற மூன்று பேர் உறங்கி வழிகிறார்கள். நாம் மூன்று பேரும் தூங்குகிற மூன்று பேரையும் வேலை தீர்த்துவிட்டால், அப்புறம் மூன்று பேருக்கு மூன்று பேர் சமாளிக்கலாமே?" வந்தியத்தேவன் சும்மாயிருந்தான்.

"என்ன, தம்பி சொல்கிறாய்? எங்கள் யோசனைக்குச் சம்மதித்தால் உன் கட்டை அவிழ்த்து விடுகிறோம்."

இளவரசரின் முகம் வந்தியத்தேவன் மனக் கண் முன்னால் வந்து நின்றது. ஆம்; அவர் இதை ஒப்புக்கொள்ள மாட்டார். தூங்குகிறவர்களைக் கொல்லுவதற்கு ஒரு நாளும் உடன்படமாட்டார்.

"என்னால் முடியாது; தூங்குகிறவர்களைத் தாக்கிக் கொல்வது நீசத்தனம்."

"முட்டாளே! சோழ நாட்டு மாலுமிகள் தூங்கிக் கொண்டிருந்த போதுதான் இந்த அராபியர்கள் அவர்களைத் தாக்கிக் கொன்றார்கள்."

"மற்றவர்கள் இழிவான செயல் புரிந்தால் நானும் அவ்வாறு ஏன் செய்யவேண்டும்?"

"சரி; உன் இஷ்டம்!" என்றான் ரவிதாஸன். அருகில் கிடந்த ஆயுதக் கும்பலிலிருந்து ஒரு கூரிய பட்டாக் கத்தியை அவன் எடுத்துக்கொண்டான். தேவராளனோ, நுனியில் இரும்புப் பூண் கட்டியிருந்த சிறிய உலக்கை போன்ற தடியை எடுத்துக்கொண்டான்.

இருவரும் அங்கிருந்து சென்றார்கள். ஆனால் அறையின் கதவைச் சாத்தி வெளியில் தாள் போடவில்லை. அவர்கள் போன உடனே வந்தியத்தேவன் கையை நீட்டிக் கத்தி ஒன்றை எடுத்துத் தன்னைக் கட்டியிருந்த கயிறுகளை அறுத்துக்கொண்டான். குதித்து எழுந்து சென்று, மூலையில் கிடந்த தேங்காய் ஒன்றை எடுத்து உடைத்தான். இளநீரை வாயில் விட்டுக்கொண்டான். மிச்சமிருந்த தேங்காய்களை ஒரு சாக்கைப் போட்டு மூடினான்.

பிறகு, போருக்குத் தகுதியான நல்ல வாள் ஒன்றைக் கையில் எடுத்துக்கொண்டான். எந்த நிமிஷத்திலும் வெளியில் பாய்ந்து செல்வதற்கு ஆயத்தமாயிருந்தான். கொஞ்சம் நேரத்துக்கெல்லாம் 'தட்', 'தட்' என்று இரு முறை சத்தம் கேட்டது. இரு உடல்கள் கடலில் எறியப்பட்டன என்று அறிந்து கொண்டான். உடனே பயங்கரமான பெருங்கூச்சல், கை கலப்பு, கத்திகள் மோதும் சப்தம் - எல்லாம் மேல் தட்டிலிருந்து வந்தன.

வந்தியத்தேவன் கையில் பிடித்த கத்தியுடன் பாய்ந்தோடினான். ரவிதாஸனையும் தேவராளனையும் மற்ற நாலு அராபியர்களும் தாக்கி நெருக்கிக் கொண்டிருந்தார்கள். நெருக்கப்பட்டவர்களின் நிலை நெருக்கடியான கட்டத்தை அடைந்திருந்தது. வந்தியத்தேவன் பெருங்கூச்சல் போட்டுக் கொண்டு ஓடினான். அராபியர்களில் ஒருவன் திரும்பி அவனைத் தாக்க வந்தான். வந்தியத்தேவனுடைய கத்தி அராபியனுடைய கத்தியைத் தாக்கி அது கடலில் போய் விழச் செய்தது; அராபியனுடைய முகத்தில் ஒரு வெட்டுக் காயத்தையும் உண்டாக்கிற்று. இரத்தம் வழிந்த பயங்கர முகத்தையுடைய அராபியன் கை முட்டியை ஓங்கிக்கொண்டு வந்தியத்தேவனுடைய மார்பில் குத்த வந்தான். வந்தியத்தேவன் சிறிது நகர்ந்து கொண்டான். அராபியன் தடாலென்று விழுந்தான். அவன் விழுந்த வேகத்தினால் இடம் பெயர்ந்த பாய்மரக் குறுக்குக் கட்டை ஒன்று அவன் தலையில் படார் என்று விழுந்தது. இன்னொரு அரபியனோடு வந்தியத்தேவன் சிறிது நேரம் துவந்த யுத்தம் செய்து அவனைக் கடலில் தள்ளினான்.

மந்திரவாதி ரவிதாஸனும், தேவராளனும், போர்த்திறமை வாய்ந்தவர்கள் அல்ல. ஆகையால் அராபியர் இருவருடன் தனித்தனி சண்டை போடுவதே அவர்களுக்குக் கஷ்டமாயிருந்தது. நேரமாக ஆகக் களைப்படைந்து வந்தார்கள். அச்சமயம் கடலில் ஏதோ விழுந்த சப்தம் கேட்டு அராபியர் இருவரும் தங்கள் தோழர்களின் கதி என்னவோ என்று திரும்பிப் பார்த்தார்கள். அதுதான் சமயம் என்று ரவிதாஸனும் தேவராளனும் அவர்களைத் தீர்த்துக் கட்டினார்கள்.

எல்லாம் முடிந்ததும் வெற்றி பெற்ற மூவரும் இளைப்பாற உட்கார்ந்தார்கள். "அப்பனே! நல்ல சமயத்தில் வந்தாய்! எப்படி வந்தாய்?" என்று கேட்டான் ரவிதாஸன்.

"நீ ஏதோ மந்திரம் போட்டாய் போலிருக்கிறது. என்னைக் கட்டியிருந்த கட்டுக்கள் தாமாகவே அவிழ்ந்து கொண்டன. கையில் இந்தக் கத்தி வந்து ஏறியது!" என்றான் வந்தியத்தேவன்.

"உன் தாகம் என்ன ஆயிற்று?"

"தேங்காய் ஒன்று என் தலைக்கு மேலாக வந்தது. அதுவாக உடைத்துக்கொண்டு என் வாயில் கொஞ்சம் இளநீரை ஊற்றியது!"

"ஓகோ! நீ வெகு பொல்லாதவன்!" என்றான் தேவராளன். இருவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

"தம்பி! உன்னைப் பரிசோதித்தோம், வேண்டுமென்றே உன் கட்டுக்களைத் தளர்த்தி விட்டிருந்தோம். ஆயுதங்களைப் பக்கத்தில் வைத்திருந்தோம், தேங்காய்களை உனக்குத் தெரியும்படி போட்டிருந்தோம்!" என்றான் ரவிதாஸன்.

இவையெல்லாம் பொய்யா, உண்மையா என்று வந்தியத்தேவனால் தெரிந்து கொள்ள முடியவில்லை. சற்று மௌனமாகயிருந்தான்.

"அப்பனே! யோசித்துச் சொல்! நீ உயிர் பிழைக்க வேண்டுமா? பிழைத்துக் கரை சேர்ந்து உன் உற்றார் உறவினர் முகத்தைப் பார்க்கவேண்டுமா? பொருளும் போகமும், பதவியும் பட்டமும் பெற்று வாழ வேண்டுமா? விருப்பமிருந்தால் சொல்; எங்களுடன் சேர்ந்துவிடு! இவ்வளவு நலங்களையும் அடையலாம்!" என்றான் ரவிதாஸன்.

"தூங்கிக் கொண்டிருந்த மனிதர்களைக் கொன்றீர்கள் அல்லவா?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.

"இரண்டு பேரைத்தான் கொல்ல முடிந்தது. மற்றவன் விழித்துக்கொண்டான். நீ முன்னமே எங்களுடன் சேர்ந்திருந்தால், இன்னும் சிறிது சுலபமாய்ப் போயிருக்கும்."

"தூங்கிக் கொண்டிருப்பவர்களைக் கொல்லுகிறது எந்த தர்மத்தில் சேர்ந்தது? அவ்விதம் செய்ய எப்படி உங்களுக்கு மனம் வந்தது?"

"இந்தக் கடுகுக்கு நீ பயப்பட்டால் பெரிய பெரிய பூசணிக் காய்களை எப்படி விழுங்குவாய்? எங்களுடன் நீ சேர்வதாயிருந்தால்..."

"உங்களுடன், உங்களுடன் என்கிறீர்கள்? நீங்கள் யார்?"

ரவிதாஸன் தேவராளனைப் பார்த்து, "இனி இவனிடம் இரகசியம் தேவை இல்லை. ஒன்று, இவன் நம்முடன் சேரவேண்டும். அல்லது கடலுக்குப் பலியாக வேண்டும். ஆகையால் இவனிடம் எல்லாம் சொல்லி விடலாமே!" என்றான்.

"எல்லாவற்றையும் நன்றாய்ச் சொல்லு!" என்றான் தேவராளன்.

"கேள், தம்பி! நாங்கள் வீர பாண்டிய மன்னருடைய ஆபத்துதவிகள், 'அவரைக் காத்து நிற்பதாக ஆணையிட்டுச் சபதம் செய்தவர்கள்..."

"உங்களால் அது முடியவில்லை! ஆதித்த கரிகாலர் வெற்றி பெற்றார்..."

"எப்படி வெற்றி பெற்றார்? ஒரு பெண் பிள்ளையின் மூடத்தனத்தினால் வெற்றி பெற்றார். அவள் தன் மோகவலையின் சக்தியில் அதிக நம்பிக்கை வைத்திருந்தாள். அந்தச் சோழ குல நாகப் பாம்பைத் தன்னால் படம் எடுத்து ஆடச் செய்ய முடியும் என்று நம்பினாள். பாம்பு படம் எடுத்து ஆடத்தான் ஆடியது. ஆனால், அதன் விஷப் பல்லின் சக்தியை நடுவில் காட்டி விட்டது. எங்கள் மன்னரின் தலை புழுதியில் உருண்டது. தஞ்சாவூர் வரையில் கொண்டு போனார்கள். தலையைப் பல்லக்கில் வைத்து ஊர்வலம் விட்டார்கள். ஆகா! தஞ்சாவூர்! தஞ்சாவூர்! அந்த நகரம் அடையப் போகிற கதியைப் பார்த்துக் கொண்டிரு தம்பி!"

இவ்விதம் கூறியபோது ரவிதாஸனுடைய சிவந்த அகன்ற கண்கள் மேலும் அகன்று அனலைக் கக்கின. அவனுடைய உடல் நடுங்கியது. பல் வரிசைகள் ஒன்றோடு ஒன்று உராயும் சப்தம் நறநறவென்று பயங்கரமாய்க் கேட்டது. தேவராளனுடைய தோற்றமும் அவ்விதமே கோரமாக மாறியது.

"போனது போயிற்று அதற்காக இனிமேல் என்ன செய்யப் போகிறீர்கள்? இறந்துபோன வீர பாண்டியனை உயிர்ப்பிக்க முடியுமா?"

"வீரபாண்டியரை உயிர்ப்பிக்க முடியாது. அவ்வளவு சக்தி என்னுடைய மந்திரத்துக்கு கூடக் கிடையாது. ஆனால், அவரைக் கொன்றவனையும், அவனைச் சேர்ந்தவர்களையும் பூண்டோ டு அழித்துப் பழிக்குப் பழி வாங்குவோம். சோழகுலப் பாம்பு வர்க்கத்தைக் குஞ்சு குழந்தைகள் உள்பட நாசம் செய்வோம். எங்களுடன் நீ சேர்க்கிறாயா? சொல்!"

"சோழ குலத்தை நாசம் செய்த பிறகு? அப்புறம் என்ன செய்வீர்கள்?"

"எங்கள் மகாராணி யாருக்குப் பட்டம் சூட்டச் சொல்கிறாளோ, அவனுக்குச் சூட்டுவோம்..."

"மகாராணி யார்?"

"தெரியாதா, தம்பி! பழுவூர் இளையராணியாக இப்போது நடிப்பவள்தான்!"

"அப்படியானால் மதுராந்தகருக்கு..."

"அவனும் ஒரு பாம்புக் குட்டிதானே?"

"பழுவேட்டரையர்?..."

"ஆ! அந்தக் கிழவனை எங்கள் அரசனாக்குவோம் என்றா நினைக்கிறாய்? அவனுடைய செல்வாக்கையும் பணத்தையும் உபயோகப்படுத்துவதற்காக..."

"உங்கள் மகாராணி அவன் வீட்டில் இருக்கிறாளாக்கும்!"

"நன்றாகத் தெரிந்து கொண்டாயே? நல்ல யூகசாலி நீ!"

"வீரபாண்டியனுடைய மரணத்துக்குக் காரணம் ஒரு பெண்பிள்ளை என்று சொன்னீர்களே?"

"அதுவும் பழுவூர் ராணிதான்! போரில் காயம் பட்டுக் கிடந்த வீரபாண்டியரைத் தான் காப்பாற்றுவதாக அவள் வாக்களித்தாள். அதை நிறைவேற்றவில்லை. அவளே துரோகம் செய்து விட்டாள் என்று நினைத்து அவளை உயிருடன் கொளுத்த நினைத்தோம். பழிக்குப் பழி வாங்குவதாக எங்களுடன் சேர்ந்து அவளும் சபதம் செய்தபடியால் அவளை உயிரோடு விட்டோ ம். இன்று வரையில் அவள் வாக்கை நிறைவேற்றி வருகிறாள். ஓ! அவளுடைய உதவி மட்டும் இல்லாவிட்டால் நாங்கள் இவ்வளவு செய்திருக்க முடியாது."

"இன்னும் நீங்கள் ஒன்றும் சாதித்து விடவில்லையே?"

"கொஞ்சம் பொறு, அப்பனே! பார்த்துக்கொண்டேயிரு!" என்றான் ரவிதாஸன்.

"நம்மிடமிருந்து இவன் எல்லாம் தெரிந்துகொண்டான். நாம் கேட்டதற்கு மறுமொழி ஒன்றும் சொல்லவில்லையே?" என்றான் தேவராளன்.

"தம்பி! என்ன சொல்கிறாய்? எங்களுடன் சேர்கிறாயா? யார் கண்டது? உனக்கே ஒருவேளை அதிர்ஷ்டம் அடிக்கலாம். நீயே ஒருவேளை தென் தமிழகத்தின் வீர சிம்மாசனத்தில் ஏறினாலும் ஏறலாம். என்ன சொல்கிறாய்?

சில காலத்துக்கு முன்னேயென்றால் வந்தியத்தேவன், "ஆஹா! உங்களுடன் சேர்கிறேன்!" என்று சொல்லியிருப்பான். ஆனால் இளவரசருடன் மூன்று நாள் பழகியது அவனுடைய மனப்போக்கில் ஒரு பெரிய மாறுதலை உண்டு பண்ணியிருந்தது. பொய் புனை சுருட்டுகள், சமயோசித தந்திரங்கள் - இவற்றில் அவனுக்குப் பற்று விட்டுப்போயிருந்தது. ஆகையால் பேச்சை மாற்ற விரும்பி, "இந்தக் கப்பலை எப்படிப் பிடித்தீர்கள்? சற்று முன் யமனுலகுக்கு அனுப்பிய அரபு நாட்டாருடன் எப்படிச் சினேகமானீர்கள்!" என்று கேட்டான்.

"எல்லாம் என்னுடைய மந்திரசக்தி, அப்பனே! திரிகோணமலையில் இவர்களிடமிருந்துதான் நாங்கள் குதிரைகளை விலைக்கு வாங்கினோம். அந்தக் குதிரைகளைக் கொண்டு உங்களைத் தொடர்ந்து முன்னும் பின்னுமாக வந்து கொண்டிருந்தோம். 'யானை இறவு'த் துறையில் இளவரசர் இறங்கி ஓடியதைப் பார்த்தோம். அவருக்கு முன்னால் இங்கு வந்துவிடத் தீர்மானித்துக் குறுக்கு வழியில் வந்து சேர்ந்தோம். இங்கே வந்து பார்த்தால், எங்கள் பழைய சிநேகிதர்கள் இந்தக் கப்பலைக் கைப்பற்றியிருந்தார்கள். அவர்கள் ஏறி வந்த கப்பல் முல்லைத் தீவுக்கு அருகில் கரைதட்டி உடைந்து போய் விட்டதாம். இங்கே ஒளிந்திருந்து இந்தக் கப்பலைக் கைப்பற்றிக் கொண்டார்கள். கடலோரத்தில் வழிகாட்டுவதற்கு எங்களையும் வருகிறீர்களா என்று கேட்டார்கள். பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று."

"அது எப்படி?"

"அந்தச் சோழகுலத்து இளநாகம் சோழ சேநாதிபதியுடன் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டோ ம். எப்படியும் சோழ நாட்டுக்கு அவன் திரும்பி வந்து சேர்வான் என்று அறிந்து கொண்டோ ம். அது மட்டுமல்ல, தம்பி! இலங்கையில் ஊமைப் பெண் பூதம் ஒன்று இருக்கிறது. அந்தப் பூதம் எங்கள் மந்திரத்துக்குப் பதில் மந்திரம் போட்டு அருள்மொழிவர்மனைக் காப்பாற்றிக் கொண்டிருந்தது. ஆனால் சோழ நாட்டுக்கு அது வராது..."

வந்தியத்தேவன் அன்றிரவு அநுராதபுரத்தில் நடந்ததையெல்லாம் நினைத்துக் கொண்டான்.

ரவிதாஸன் திடீரென்று சிரித்தான்.

"இது என்ன சிரிப்பு? எதைக் கண்டு?" என்றான் வந்தியத்தேவன்.

"ஒன்றுமில்லை தம்பி! இந்த அரபு நாட்டாரின் சுபாவத்தை எண்ணினேன்; சிரிப்பு வந்தது. இவர்கள் இவ்வளவு முரட்டு மனிதர்கள் அல்லவா? மனிதர்களைக் கொல்வது இவர்களுக்கு வாழைக்காயை அரிவது போன்றது. ஆனால் குதிரைகளிடம் இவர்களுக்கு அளவில்லாத அபிமானம். குதிரைகளின் கால் குளம்பில் இரும்புப்பூண் அடித்துத்தான் அவர்கள் நாட்டில் குதிரைகளை ஓட்டுவார்களாம். நாம் குதிரைகளை வெறுங்காலுடன் ஓடச் செய்கிறோமாம். அதனால் நாம் கருணையற்ற, அநாகரிக மிருகங்களுக்கும் கேடான மனிதர்களாம்! நம்மிடம் குதிரைகளை விற்பதே பாவமாம்!... இன்று காலையில் என்ன நடந்தது தெரியுமா?..."

"சொல்லுங்கள்!"

"கப்பலில் எல்லோரும் ஏறிக் கொண்டோ ம். பாய்மரங்கள் விரித்தோம் கப்பல் கிளப்பிவிட்டது. அப்போது கரையில் ஒரு குதிரையின் காலடிச் சத்தம் கேட்டது. அவ்வளவுதான், முல்லைத் தீவில் உடைந்த கப்பலிலிருந்து தப்பிக் கரையேறிய அவர்களுடைய குதிரைகளில் ஒன்றாயிருக்கலாம் என்று சந்தேகித்தார்கள். அவர்களில் ஒருவன் கப்பலிலிருந்து இறங்கிப் பார்த்து விட்டுத்தான் வருவேன் என்றான். எங்களையும் அவனுடன் சேர்த்து அனுப்பினார்கள்..."

"பிறகு?"

"குதிரை அகப்படவில்லை. தம்பி! நீ அகப்பட்டாய்! எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று, பார்! இந்தக் குதிரைப் பிரியர்களை வேலை தீர்ப்பதற்கு எவ்வளவு சௌகரியமாய்ப் போயிற்று."

"எல்லாம் சரிதான்; இந்தப் பிள்ளை நம்முடைய கேள்விக்கு இன்னும் விடை சொல்லவில்லை" என்று ஞாபகப் படுத்தினான் தேவராளன்.

"சொல்லுகிறேன், ஐயா! சொல்லுகிறேன், நான் சோழகுலத்திற்கு ஊழியம் செய்ய ஏற்றுக்கொண்டவன். ஒரு நாளும் உங்களுடன் சேரமாட்டேன்..."

"வேளக்காரப் படையைச் சேர்ந்திருக்கிறாயா? சத்தியம் செய்து கொடுத்திருக்கிறாயா!"

"அதெல்லாம் இல்லை."

"பின்னே என்ன தயக்கம்? நீ போர் வீரன். எந்தக் கட்சியில் அதிக அநுகூலம் இருக்கிறதோ, அதில் சேரவேண்டியது தானே!"

சோழ குலத்தாருடன் உறவு பூணுவதற்கு எல்லாச் சபதங்களைக் காட்டிலும் பலம் அதிகம் கொண்ட காரணம் தனக்கு இருக்கிறது என்பதை வந்தியத்தேவன் அவர்களிடம் சொல்லவில்லை. இளையபிராட்டியின் கடைக்கண் பார்வையையும், முல்லை நிகர்ப் புன்னகையையும் காட்டிலும் சோழ குலத்தாருக்கு உயிரைக் கொடுக்க வேறு காரணம் தனக்கு வேண்டுமா? அப்புறம் இளவரசரின் இணையில்லா சிநேகம் இருக்கிறது! அவருடன் ஒரு தடவை சிநேகமானவன் மறுபடி மாற முடியுமா?

"எது எப்படியிருந்தாலும், உங்களுடைய கொலைகாரக் கூட்டத்தில் நான் சேரமாட்டேன்!" என்றான் வந்தியத்தேவன்.

"அப்படியானால் உன் உயிரைச் சமுத்திர ராஜனுக்குப் பலியிட ஆயத்தப்படு !" என்றான் ரவிதாஸன்.