பொன்னியின் செல்வன்/சுழற்காற்று/காட்டுப் பாதை
சுழற்காற்று - அத்தியாயம் 27
[தொகு]காட்டுப் பாதை
கொடும்பாளூர்ப் பெரிய வேளராகிய சேநாதிபதி பூதி விக்கிரம கேசரி வயது முதிர்ந்த அநுபவசாலி; பல போர்க்களங்களில் பழந்தின்று கொட்டையும் போட்டவர். சோழ குலத்தாருடன் நெருங்கிய நட்பும் உறவும் பூண்டவர். அவருடைய சகோதரராகிய கொடும்பாளூர்ச் சிறிய வேளார் சில ஆண்டுகளுக்கு முன்னால் இலங்கைப் போர்க்களத்தில் வீர சொர்க்கம் அடைந்தார். அவருடன் சென்ற சைன்யமும் தோல்வியடைந்து திரும்ப நேர்ந்தது. அந்தப் பழியைத் துடைத்துக் கொடும்பாளூரின் வீரப் பிரதாபத்தை மீண்டும் நிலைநாட்டுவதில் அவர் பெரிதும் ஆத்திரம் கொண்டிருந்தார். ஆகையாலேயே சற்று வயதானவராயிருந்தும் இலங்கைப் படைக்குத் தலைமை வகித்து அங்கு வந்திருந்தார்.
இலங்கைப் போரை நன்கு நடத்த முடியாமல் பழுவேட்டரையர்களால் விளைந்த இடையூறுகளைப் பற்றி முன்னமே பார்த்தோமல்லவா? நெடுங்காலமாக அந்த இரண்டு சிற்றரசர் குலத்துக்கும் ஏற்பட்டிருந்த போட்டியும் பகைமையும் இதனால் இப்போது அதிகமாய் வளர்ந்திருந்தன. எனவே, பழுவூர் முத்திரையிட்ட இலச்சினையுடன் அகப்பட்டுக் கொண்ட வந்தியத் தேவன் பாடு சேநாதிபதி பெரிய வேளாரிடம் கஷ்டமாகத்தான் போயிருக்கும். அதிர்ஷ்டவசமாக அநிருத்தப் பிரமராயரிடம் இதைப்பற்றி அவர் பிரஸ்தாபிக்க நேர்ந்தது. வந்தியத்தேவனைப் பற்றிய உண்மையை ஆழ்வார்க்கடியானிடமிருந்து தெரிந்து கொண்ட அநிருத்தர் அவனையே சேநாதிபதி பூதி விக்கிரம கேசரியிடம் சென்று உண்மையைத் தெரியப்படுத்தும்படி அவசரமாக அனுப்பி வைத்திருந்தார்.
வாணர் குலத்து வீரகுமாரனை மேலும் கீழும் உற்றுப் பார்த்த சேநாதிபதி பூதி விக்கிரம கேசரிக்கு அவனிடம் நல்ல அபிப்பிராயம் உண்டாகியிருக்க வேண்டும். அன்பான குரலில், "தம்பி! உன்னை இங்கே சரியாகக் கவனித்துக்கொண்டார்களா? தங்குவதற்கு இடம், உணவு எல்லாம் சரிவரக் கிடைத்ததா?" என்று கேட்டார்.
"ஆம் சேநாதிபதி! ஒரு குறைவும் இல்லாமல் பார்த்துக் கொண்டார்கள். கூறிய ஏவலைச் செய்வதற்கு வாசலில் ஐந்தாறு சேவகர்கள் எப்போதும் காத்திருந்தார்கள், தங்குவதற்கு இடம் தாராளமாய்க் கிடைத்தது. இராபோஜனத்துக்கு ஒரு பூனையை அனுப்பி வைத்தார்கள். அதை நான் சாப்பிட எண்ணியிருக்கையில் இந்த வீர வைஷ்ணவரைக் கண்டதும் கோபம் வந்துவிட்டது. இவரை நகத்தினால் பிறாண்டிவிட்டு அது ஓடிவிட்டது!" என்றான்.
சேநாதிபதி "ஓகோ! இந்தப் பிள்ளை ரொம்ப வேடிக்கைக்காரப் பையனாயிருக்கிறான்! திருமலை! இவன் சொல்வது உண்மையா?" என்று கேட்டார்.
"சேநாதிபதி! இவன் முன்னோர்கள் கவிஞர்களாம். ஆகையால் இவனிடமும் கற்பனா சக்தி அதிகம் இருக்கிறது. மற்றப்படி இவன் சொல்வது உண்மைதான். இவனை நான் பார்க்கப்போன இடத்தில் ஒரு பூனை என் கை கால்களைப் பிறாண்டி விட்டது!" என்றான் ஆழ்வார்க்கடியான்.
அவனுடைய உடம்பில் ஏற்பட்டிருந்த இரத்தக் காயங்களைப் பார்த்துச் சேநாதிபதி பூதி விக்கிரம கேசரி விழுந்து விழுந்து சிரித்தார்.
"ஒரு பூனையா உன்னை இந்தப் பாடு படுத்திவிட்டது! நல்லவேளை! காட்டுப் பாதையில் போவதற்கு இந்த வீரன் உனக்கு வழித்துணையாகக் கிடைத்திருக்கிறான்..."
"சேநாதிபதி! எனக்கு வழித்துணை தேவையில்லை. என்னுடைய கைத்தடியே போதுமானது. அதை எடுத்துக் கொள்ளாமல் நான் இவனைப் பார்க்கப் போனதுதான் பிசகாய்ப் போய்விட்டது..."
"அப்படியானால் இவனுக்கு நீ வழித்துணையாக இரு! புறப்படுவதற்கு முன்னால் இவனுக்குச் சரியாகச் சாப்பாடு பண்ணி வைத்துவிட்டு அப்புறம் கிளம்பு! தம்பி! இப்போது இலங்கையில் சாப்பாட்டு வசதி கொஞ்சம் குறைவு. இங்கேயுள்ள ஏரி குளங்களையெல்லாம் மகிந்தனுடைய சேனா வீரர்கள் கரையை உடைத்துவிட்டுப் போய்விட்டார்கள். அதனால் விவசாயம் சரியாக நடப்பதில்லை. விவசாயம் செய்வதற்கு ஆட்களும் இல்லை. இந்த நாட்டு மக்களே பட்டினி கிடக்கிறார்கள். நம் வீரர்களுக்கு எப்படி உணவு கிடைக்கும்? நம்முடைய நாட்டிலிருந்தும் அரிசி போதிய அளவு அனுப்பி வைப்பதில்லை..."
"சேநாதிபதி! அது எனக்குத் தெரிந்த விஷயந்தான். பழையாறை வீரப் படைவீடுகளின் வழியாக இளைய பிராட்டி சென்றபோது பெண்டுகள் அவரிடம் முறையிட்டதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். 'இலங்கையில் எங்கள் கணவன்மார்களும் பிள்ளைகளும் பட்டினி கிடக்கிறார்களாமே!' என்று முறையிட்டார்கள்..."
"ஓகோ! இது அங்கேயும் தெரிந்து முறையிட்டார்களோ? நல்லது, நல்லது! அதற்கு இளைய பிராட்டி என்ன மறுமொழி சொன்னார்கள்?"
"சேநாதிபதி பெரிய வேளார் இலங்கையில் இருக்கும் வரையில் நம் வீரர்களைப் பட்டினியால் சாகவிட மாட்டார்; நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று ஆறுதல் சொன்னார்..."
"ஆகா! இளைய பிராட்டி அவ்விதம் சொன்னாரா? உலகத்தில் எத்தனையோ இராஜ குலங்களில் எவ்வளவோ புகழ் பெற்ற கன்னிகைகள் பிறந்ததுண்டு. ஆனால் எங்கள் இளைய பிராட்டிக்கு இணையானவர் வேறு யாரும் இல்லை..."
"அடுத்தபடியாகச் சொல்லக் கூடிய இளவரசி ஒருவர் உண்டு, சேநாதிபதி!"
"அது யார், தம்பி?"
"கொடும்பாளூர் இளவரசி வானதி தேவிதான்!"
"ஆகா! இந்தப் பிள்ளை ரொம்பப் பொல்லாதவன். இவனுடைய கற்பனாசக்தி என்னையே மயக்கிவிடும் போலிருக்கிறது. தம்பி! பழையாறையில் எங்கள் குலவிளக்கை நீ பார்த்தாயா?"
"பார்த்தேன், ஐயா! இளைய பிராட்டியுடன் இணை பிரியாமல் இருந்து வருகிறவரை எப்படிப் பார்க்காமல் இருக்கமுடியும்? வைத்தியர் வீட்டிலிருந்து வழி அனுப்ப இரண்டு பேருமாகத்தான் யானைமீது ஏறி வந்தார்கள். தீபத்தை ஒளியும், மலரை மணமும், உடம்பை நிழலும் பிரியாததுபோல் வானதி தேவியும் இளைய பிராட்டியைப் பிரிவது கிடையாது..."
"அடேடே! இந்தப் பிள்ளை வெகு புத்திசாலி! திருமலை! இவனை நம் பொக்கிஷ சாலைக்கு அழைத்துச் சென்று வேண்டிய ஆடை ஆபரணங்களைக் கொடுத்து அழைத்துப் போ!"
"ஐயா! எல்லாம் தற்சமயம் பொக்கிஷத்திலேயே இருக்கட்டும், திரும்பிப் போகும்போது நான் வாங்கிக்கொண்டு போகிறேன்."
"தம்பி! எங்கள் வீட்டுப் பெண்ணைப்பற்றி, வானதியைப் பற்றி, - இளைய பிராட்டி எனக்குச் செய்தி ஒன்றும் அனுப்பவில்லையா-?"
"சேனாதிபதி! தங்களிடம் நான் பொய் சொல்ல விரும்பவில்லை."
"யாரிடமும் எப்பொழுதும் பொய் சொல்ல வேண்டாம், தம்பி!"
"இந்த வீர வைஷ்ணவர் விஷயத்தில் மட்டும் தயவு செய்து விலக்கு அளிக்க வேண்டும். சேநாதிபதி; இவரிடம் உண்மை சொன்னால் என் தலை வெடித்துப் போய்விடும்..."
"வேண்டாம், வேண்டாம்!... இளைய பிராட்டி எனக்கு ஒன்றும் செய்தி அனுப்பவில்லையாக்கும்!"
"தங்களுக்குச் செய்தி அனுப்பவில்லை. ஆனால்..."
"ஆனால், என்ன?"
"யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவருக்கு அனுப்பியிருக்கிறார்கள். வானதி தேவியைப் பற்றி இளவரசரிடம் நேரில் சில செய்திகளைச் சொல்லும்படி பணித்திருக்கிறார்கள்..."
"உன்னைப் போன்ற புத்திசாலிப் பிள்ளையை நான் பார்த்ததேயில்லை!" என்று கூறிச் சேநாதிபதி பெரிய வேளார் வந்தியத்தேவனை மார்போடு அணைத்துக்கொண்டார். பின்னர், "சரி; இனி வீண் பொழுது போக்க வேண்டாம்; புறப்படுங்கள்!" என்று சொன்னார்.
"ஐயா! இந்த வீர வைஷ்ணவர் என்னோடு அவசியம் வரத்தான் வேணுமா? இவர் இல்லாமல் நான் தனியே போகக் கூடாதா?"
"இவர் வருவதில் உனக்கு என்ன ஆட்சேபம்?"
"எனக்கு ஆட்சேபம் இல்லை. என் இடையில் செருகியுள்ள கத்தி சுத்த வீரசைவக் கத்தி. அது 'வீர வைஷ்ணவ இரத்தம் வேண்டும்' என்று வெகு நாளாகக் கேட்டுக்கொண்டிருக்கிறது. என்னை மீறி அது வெளிக் கிளம்பிவிட்டால் இவர் பாடு ஆபத்தாய்ப் போய்விடும் என்று பார்க்கிறேன்."
"அப்படியானால் அந்தக் கத்தியை இங்கே விட்டுவிட்டு வேறு கத்தி எடுத்துக்கொண்டு போ! திருமலை உன்னோடு வராவிட்டால் நீ இளவரசரைக் கண்டுபிடிக்க முடியாது. அவர் இருக்குமிடமே யாருக்கும் தெரியாது. மேலும் இளவரசரிடம் கொடுப்பதற்கு இவனும் ஒரு முக்கியமான ஓலை கொண்டு வருகிறான். ஆகையால் இரண்டு பேருமாகச் சேர்ந்து போவதே நல்லது! வழியில் ஒருவரோடொருவர் சண்டை பிடித்துக் கொண்டு காரியத்தைக் கெடுத்து விடாதீர்கள்!"
இவ்விதம் சொல்லிவிட்டுப் பெரிய வேளார் மறுபடியும் வந்தியத்தேவனை அருகில் அழைத்து அவன் காதோடு இரகசியமாகச் சொன்னார்.
"தம்பி! இவனால் உன் காரியத்துக்கு இடைஞ்சல் ஒன்றும் நேராது. ஆனாலும் ஜாக்கிரதையாகவே இரு! இளவரசரிடம் இவன் என்ன செய்தி சொல்லுகிறான் என்பதைத் தெரிந்து வந்து என்னிடம் சொல்லு!"
ஆழ்வார்க்கடியானைத் தனக்கு ஒற்றனாகப் பின்னோடு அனுப்புகிறார்கள் என்று முதலில் வந்தியத்தேவன் எண்ணியிருந்தான். இப்போது அவனுக்குத் தான் ஒற்றன் என்று ஏற்பட்டது. இந்த நிலைமை வந்தியத்தேவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
வந்தியத்தேவன் ஆழ்வார்க்கடியானும் இரண்டு வீரர்கள் துணையுடன் அன்றிரவே புறப்பட்டார்கள். பிரயாணம் தொடங்கி இரண்டு நாள் கிழக்கு நோக்கிச் சென்றார்கள். முதலில் கொஞ்சதூரம் ஊர்ப்புறங்களாக இருந்தன. ஓரளவு ஜன நடமாட்டமும் இருந்தது. வர வரக் காட்டுப் பிரதேசமாக மாறி வந்தது. முதலில் குட்டை மரங்கள் நிறைந்த காடாயிருந்தது. பின்னர் வானை அளாவிய பெரிய மரங்கள் அடர்ந்த அரண்யங்களாக மாறின. இடையிடையே ஏரிகள் தென்பட்டன. ஆனால் அவற்றின் கரைகள் பல இடங்களில் இடிந்து கிடந்தன. தண்ணீர் நாலாபுறமும் ஓடிப்போய் ஏரிகள் வறண்டு கிடந்தன. கழனியில் பயிர் செய்யப்படாமல் கிடந்தன. இன்னும் ஓரிடத்தில் விசாலமான பிரதேசத்தில் தண்ணீர் தேங்கியிருந்தது. பாலாவி நதியின் கரை வெட்டப் பட்டபடியால் அதன் தண்ணீர் நதியோடு போகாமல் வெளியில் கண்டபடி சிதறிச் சென்று அப்படித் தண்ணீர்த் தேக்கம் உண்டானதாகத் தெரிந்தது.
இந்தக் காட்சிகளையெல்லாம் பார்த்துக்கொண்டு அவர்கள் சென்றார்கள். நீடித்த யுத்தத்தினால் அந்தப் பிரதேசத்தில் ஏற்பட்டிருந்த அழிவுகளைப் பற்றி ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவனுக்கு எடுத்துச் சொல்லிக்கொண்டு போனான். யுத்தம் எவ்வளவு கொடுமையானது என்று அடிக்கடி அவன் கூறினான். அதைப்பற்றி இருவருக்கும் விவாதம் பலமாக நடந்தது.
இரண்டு தினங்களுக்குப் பிறகு பிரயாணத்திசை மாறியது. கிழக்குத் திசையில் சென்றவர்கள் இப்போது தெற்கு நோக்கித் திரும்பினார்கள். வர வரப் பிரதேசங்கள் அடர்த்தியாகிக் கொண்டு வந்தன. சமவெளிப் பிரதேசம் மாறிப் பாறைகளும் சிறிய குன்றுகளும் எதிர்ப்பட்டன. இன்னும் தூரத்தில் பெரிய மலைத் தொடர்கள் வானை அளாவிய சிகரங்களுடன் தென்பட்டன. காடுகளின் தோற்றம் பயங்கரமாகிக் கொண்டு வந்தது. பட்சிகளின் இனிய குரல்களோடு ஏதேதோ இனந் தெரியாத கோரமான சப்தங்கள் கலந்து எழுந்தன.
அத்தகைய காட்டு வழிகளில் கொடிய மிருகங்களினால் ஏற்படக் கூடிய அபாயங்களைப் பற்றிப் பேச்சு எழுந்தது. நரிகள், சிறுத்தைப் புலிகள், கரடிகள், யானைகள் ஆகிய மிருகங்கள் அக்காடுகளில் உண்டு என்று ஆழ்வார்க்கடியான் கூறினான்.
"நரிகள் கூட்டமாக வந்தால் அபாயம் அல்லவா?" என்று வந்தியத்தேவன் கேட்டான். கடம்பூர் மாளிகையில் அவன் கண்ட பயங்கரக் கனவு அவனுக்கு நினைவு வந்தது.
"நரிகள் கூட்டத்தைக் காட்டிலும் ஒற்றை நரியின் ஊளையினால் அபாயம் அதிகம்" என்று ஆழ்வார்க்கடியான் கூறினான்.
"அது எப்படி, சுவாமிகளே!"
"இந்தக் காடுகளில் நரியும் சிறுத்தையும் சேர்ந்து வேட்டைக்குப் போகும். சிறுத்தை அங்கங்கே பதுங்கிக் கொண்டிருக்கும். நரி அங்குமிங்கும் ஓடி இரை தேடும். மனிதனையோ மான் முதலிய சாது மிருகத்தையோ, கண்டால் ஒற்றைக் குரலில் ஊளையிடும். உடனே சிறுத்தை பாய்ந்து வந்து விழுந்து கொல்லும். இப்படிச் சிறுத்தைக்கு ஒற்றன் வேலை செய்யும் நரிக்கு 'ஓரி' என்று பெயர்..."
இப்படி இவர்கள் பேசிக்கொண்டு போனபோது சற்றுத் தூரத்தில் கடல் குமுறுவது போன்ற சப்தம் கேட்டது.
"கடற்கரையிலிருந்து வெகு தூரம் வந்துவிட்டோ மே? இது என்ன சத்தம்?" என்று வந்தியத்தேவன் கேட்டான்.
"பக்கத்தில் எங்கேயோ ஏரி அல்லது குளம் இருக்க வேண்டும். அதில் தண்ணீர் குடிப்பதற்கு யானைமந்தை வருகிறதுபோல் தோன்றுகிறது!" என்றான் ஆழ்வார்க்கடியான்.
"ஐயையோ! யானை மந்தையில் நாம் அகப்பட்டுக் கொண்டால்...!"
"அதைப் பற்றிக் கொஞ்சமும் பயமில்லை. மந்தையில் வரும் யானைகள் நம்மை ஒன்றும் செய்துவிடமாட்டா. நாம் ஒதுங்கி நின்றால் அவை நம்மைத் திரும்பி கூடப் பாராமல் வழியோடு போய்விடும்!"
இதற்குள் அவர்களுடன் வந்த வீரர்களில் ஒருவன் ஒரு மரத்தின் மேல் ஏறி நாலு பக்கமும் பார்த்தான்.
"ஐயா! ஐயா! ஒற்றை யானை வருகிறது! மத யானை! மரங்களை முறித்து அதம் செய்துகொண்டு வருகிறது!" என்று கூவினான்.
"ஐயோ! இது என்ன சங்கடம்! எப்படித் தப்புகிறது!" என்று ஆழ்வார்க்கடியான் பீதியுடன் கூறி அங்குமிங்கும் பார்த்தான்.
"மந்தை யானைகளுக்குப் பயமில்லை என்றீர். ஒற்றை யானைக்கு ஏன் இவ்வளவு பயம்!" என்று வந்தியத்தேவன் கேட்டான்.
"அப்பனே! மதங்கொண்ட ஒற்றை யானை சாதாரண ஆயிரம் யானைகளுக்குச் சமமானது. அதன் மூர்க்கத்தனத்துக்கு முன்னால் யாரும் எதிர்த்து நிற்க முடியாது..."
"எங்கள் மூன்று பேர் கையில் வேல் இருக்கிறது. உம்முடைய கையில் ஒரு தடி இருக்கிறதே!"
"ஒரு மத யானையை ஆயிரம் வேல்களாலும் எதிர்க்க முடியாது அதோ ஒரு செங்குத்தான குன்று தெரிகிறதே! அதில் நாம் ஏறிக்கொண்டால் ஒருவேளை தப்பித்துக் கொள்ளலாம் ஓடிப்பாருங்கள்!"
இவ்வாறு சொல்லி ஆழ்வார்க்கடியான் குன்றை நோக்கி ஓடினான். மற்றவர்களும் பின் தொடர்ந்தார்கள். ஆனால் கொஞ்ச தூரம் ஓடியதும் எதிரில் ஓர் ஆழமான செங்குத்தான பள்ளத்தாக்கு இருப்பதைப் பார்த்தார்கள். அவர்கள் நின்ற இடத்துக்கும் சற்றுத் தூரத்தில் இருந்த குன்றுக்கும் மத்தியில் அந்தப் பள்ளத்தாக்கு இருந்தது. பள்ளத்தாக்கின் விளிம்பில் வந்து அவர்கள் நின்றார்கள். யானையோ அதி வேகமாக அவர்களை நெருங்கி வந்து கொண்டிருந்தது. மனிதர்களைப் பார்த்ததும் அதன் வெறி அதிகமாகியிருக்கவேண்டும். துதிக்கையைத் தூக்கிக் கொண்டு அந்த மத யானை பிளிறியபோது அதன் சப்தத்தில் அண்ட கடாகங்கள் வெடிக்காமலிருந்தது அதிசயந்தான். அதைக் கேட்ட மனிதர்கள் நாலு பேரும் காதைப் பொத்திக் கொண்டார்கள். தலைக்கு ஒரு பக்கம் சிதறி ஓடினார்கள்.
யானை மேலும் நெருங்கி வந்தது; மேலும் மேலும் நெருங்கி வந்தது. ஆழ்வார்க்கடியனைக் குறி வைத்துக்கொண்டு, அவன் நின்ற இடத்தை நோக்கி அது வருவது போலத் தோன்றியது. இன்னும் இரண்டு அடி அப்பால் எடுத்து வைத்தால் ஆழ்வார்க்கடியான் அதல பாதாளத்தில் விழும்படி நேரிடும். பக்கவாட்டில் ஓடுவதற்கும் வசதியாக இல்லை. செடி கொடிகள் அடர்ந்திருந்தன; ஓடித் தப்பிக்கத்தான் முடியுமா?
வந்தியத்தேவன் கையில் வேலை எடுத்தான். ஆனால் அந்த மதயானையின் வேகத்தை இந்திரனுடைய வஜ்ராயுதத்தினால் கூட அச்சமயம் தடுக்க முடியாது என்று அவனுக்குத் தோன்றியது. வேலைப் பிடித்த கை பலவீனமுற்றுத் தளர்ந்து சோர்ந்தது.
அந்நேரத்தில் ஆழ்வார்க்கடியானுடைய செய்கை வந்தியத்தேவனுக்கு ஒரு பக்கத்தில் சிரிப்பை உண்டாக்கிற்று. கையில் தடியை ஓங்கிய வண்ணம், "நில், நில்! அப்படியே நில்! மேலே வந்தாயோ தொலைந்தாய்! உன்னைக் கொன்று குழிவெட்டி மூடி விடுவேன்! ஜாக்கிரதை!" என்று ஆழ்வார்க்கடியான் மதயானையைப் பார்த்து இரைந்தான்!