பொன்னியின் செல்வன்/சுழற்காற்று/பூங்குழலி
சுழற்காற்று - அத்தியாயம் 1
[தொகு]பூங்குழலி
அந்தி நேரம் அமைதி பெற்று விளங்கியது. கோடிக்கரையின் ஓரத்தில் கடல் அலை அடங்கி ஓய்ந்திருந்தது. கட்டு மரங்களும், படகுகளும் கரையை நெருங்கிக் கொண்டிருந்தன. கடலில் இரை தேடச் சென்ற பறவைகள் திரும்பி வந்து கொண்டிருந்தன. கரையில் சிறிது தூரம் வெண்மணல் பரந்திருந்தது. அதற்கு அப்பால் வெகுதூரத்துக்கு வெகுதூரம் காடு படர்ந்திருந்தது. காட்டு மரங்களின் கிளை ஆடவில்லை; இலைகள் அசையவில்லை. நாலா பக்கமும் நிசப்தம் நிலவியது. செங்கதிர்த் தேவன் கடலும் வானும் கலக்கும் இடத்தை நோக்கி விரைந்து இறங்கிக் கொண்டிருந்தான். மேகத்திரள்கள் சில சூரியனுடைய செங்கதிர்களை மறைக்கப் பார்த்துத் தாங்களும் ஒளி பெற்றுத் திகழ்ந்தன.
கரை ஓரத்தில் கடலில் ஒரு சிறிய படகு மிதந்தது. கடலின் மெல்லிய அலைப் பூங்கரங்கள் அந்தப் படகைக் குழந்தையின் மணித் தொட்டிலை ஆட்டுவது போல மெள்ள மெள்ள அசைத்தன. அந்தப் படகில் ஓர் இளம் பெண் இருந்தாள். அவளைப் பார்த்ததும் சேந்தன் அமுதன் தன் மாமன் மகளைக் குறித்து வர்ணனை செய்தது நமக்கு நினைவு வருகிறது. ஆம்; அவள் பூங்குழலியாகத்தான் இருக்க வேண்டும். பெயருக்குத் தகுந்தாற் போல் இவள் கூந்தலில் ஒரு தாழம்பூவின் இதழ் அழகு பெற்றுத் திகழ்ந்தது. நீண்ட கரிய கூந்தல் சுருண்டு சுருண்டு விழுந்து அவளுடைய கடைந்தெடுத்த தோள்களை அலங்கரித்தன. கடல் அலைகள் கரையில் ஒதுக்கும் சங்குகள், சிப்பிகள் முதலியவற்றை ஆரமாக்கி அவள் அணிந்து கொண்டிருந்தாள். ஆனால் இவையெல்லாம் அவளுடைய மேனியில் பட்டதனால் தாங்களும் அழகு பெற்றனவேயன்றி, அவளை அலங்கரித்ததாகச் சொல்ல முடியாது. அழகே ஒரு வடிவம் தாங்கி வந்தால், அதற்கு எந்த ஆபரணத்தைக் கொண்டு அழகு செய்ய முடியும்?
பூங்குழலி படகில் ஒய்யாரமாகச் சாய்ந்து கொண்டு பாடினாள். அவளுடைய கானத்தைக் கேட்பதற்காகவே கடலின் அலை அடங்கி ஓய்ந்திருந்தது போலும்! அதற்காகவே காற்றும் வீசி அடிக்காமல் மெள்ள மெள்ளத் தவழ்ந்து வந்தது போலும்! தூரத்தில் தெரிந்த காட்டு மரங்களும் இலை அசையாமல் நின்று அவளுடைய கானத்தைக் கவனமாகக் கேட்டன போலும்! வானமும், பூமியும் அந்தக் கானத்தைக் கேட்டு மதிமயங்கி அசைவற்று நின்றன போலும்! கதிரவன் கூட அந்த கானத்தை முன்னிட்டே மூலைக் கடலை அடைந்து முழுகி மறையாமல் தயங்கி நிற்கின்றான் போலும்.
தேனில் குழைத்து, வானில் மிதந்து வந்த அப்பாடலைச் சற்றுச் செவி கொடுத்துச் கேட்கலாம்.
"அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்?
நிலமகளும் துயிலுகையில் நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்?
காட்டினில் வாழ் பறவைகளும் கூடுகளைத் தேடினவே!
வேட்டுவரும் வில்லியரும் வீடு நோக்கி ஏகுவரே
வானகமும் நானிலமும் மோனமதில் ஆழ்ந்திருக்க
மான்விழியாள் பெண்ணொருத்தி மனத்தில் புயல் அடிப்பதுமேன்?
வாரிதியும் அடங்கி நிற்கும் மாருதமும் தவழ்ந்து வரும்
காரிகையாள் உளந்தனிலே காற்றுச் சுழன் றடிப்பதுமேன்?"
அந்த இளமங்கையின் உள்ளத்தில் அப்படி என்ன சோகம் குடி கொண்டிருக்குமோ, தெரியாது! அவளுடைய தீங்குரலில் அப்படி என்ன இன்ப வேதனை கலந்திருக்குமோ, தெரியாது! அல்லது அப்பாடலில் சொற்களோடு ஒருவேளை கண்ணீரைக் கலந்து தான் பாடலை அமைத்து விட்டார்களோ, அதுவும் நாம் அறியோம். ஆனால் அந்தப் பாடலை அவள் பாடுவதைக் கேட்கும் போது நமக்கு நெஞ்சம் விம்மி வெடித்து விடுவது போன்ற உணர்ச்சி ஏனோ உண்டாகிறது.
பூங்குழலி கானத்தை நிறுத்தினாள். படகின் துடுப்பை நாலு தடவை வலித்தாள். படகு கரை அருகில் வந்து சேர்ந்தது. பூங்குழலி படகிலிருந்து துள்ளிக் குதித்துக் கரையில் இறங்கினாள். படகைக் கரையில் இழுத்துப் போட்டாள். கரையில் சில கட்டு மரங்கள் கும்பலாகக் கிடந்தன. அவற்றின் மிது படகு சாய்ந்து நிற்கும்படி தூக்கி நிறுத்தினாள். சாய்ந்து நின்ற படகில் தானும் சாய்ந்து கொண்டு ஒரு முறை சுற்றுமுற்றும் பார்த்தாள்.
அதோ கலங்கரை விளக்கின் உச்சி மண்டபத்தில் தீ மூட்டியாகி விட்டது. தீ ஜுவாலை விட்டு எரிகிறது. இனி இரவெல்லாம் அந்த ஜோதி எரிந்து கொண்டிருக்கும். கடலில் செல்லும் மரக்கலங்களுக்கு அது 'அருகில் நெருங்க வேண்டாம்!' என்று எச்சரித்துக் கொண்டிருக்கும். கோடிக்கரை ஓரத்தில் கடலில் ஆழமே கிடையாது. கட்டு மரங்களும், சிறிய படகுகளும்தான் அந்தப் பகுதியில் கரை ஓரமாக அணுகி வரலாம். மரக்கலமும் நாவாயும் நெருங்கி வந்தால் தரைதட்டி மணலில் புதைந்து விடும். வேகமாகத் தரையில் மோதினால் கப்பல் பிளந்து உடைந்தும் போய்விடும். ஆதலின், கோடிக்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் கப்பல் ஓட்டிகளுக்கு மிகவும் அவசியமான உதவியைச் செய்து வந்தது. மற்றொரு பக்கத்தில் குட்டை மரங்கள் அடர்ந்த காட்டின் நடுவில் கோபுரம் ஒன்று தலை தூக்கி நின்றது. அதனடியில் கோடிக்கரைக் குழகர், கோயில் கொண்டிருந்தார். சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஸ்ரீசுந்தர மூர்த்தி நாயனார் இந்தக் கோடிக் கரைக்கு வந்தார். காட்டின் மத்தியில் தன்னந்தனியே கோயில் கொண்டிருந்த குழகரைத் தரிசித்தார்.
"அந்தோ! இறைவா! இப்படி இந்தக் கடற்கரைக் காட்டின் மத்தியில் துணையின்றித் தனியே இருக்கிறீரே? இருக்க வேறு இடமாயில்லை? பக்தர்கள் கூட்டங் கூட்டமாக உமது புகழைப் பாடிக்கொண்டிருக்கும் ஸ்தலங்கள் எத்தனையோ இருக்க, இந்தக் கோடிக்கு வந்து பயங்கரக் காட்டிலே தனியே கோயில் கொண்டிருப்பதேன்? இக்கொடியேனுடைய கண்கள் இந்தக் காட்சியையும் காண நேர்ந்ததே!" என்று மனமுருகிப் பாடினார்.
"கதிதாய்க் கடற்காற்று வந்தெற்றக் கரைமேல்
குடிதானயலே இருந்தாற் குற்றமாமோ?
கொடியேன் கண்கள் கண்டன கோடிக் குழகீர்
அடிகேள் உமக்கார் துணையாக இருந்தீரே?"
"மத்தம் மலிசூழ் மறைக்காடதன் றென்பால்
பத்தர் பலர் பாடவிருந்த பரமா!
கொத்தார் பொழில் சூழ்தருகோடிக் குழகா
எத்தாற் றனியே யிருந்தாய்? எம்பிரானே!"
ஸ்ரீசுந்தரமூர்த்தி நாயனார் வந்து தரிசித்துவிட்டுப் போன இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகும் கோடிக்கரைக் குழகர் அதே நிலையில்தான் இருந்தார். (ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் இன்றைக்கும் கோடிக்கரைக் குழகர் அதே தனிமை நிலையில்தான் இருந்து வருகிறார்!) சுற்றிலும் இன்னும் கொஞ்சம் காடுகள் மண்டிப் போயிருந்தன. அக்காடுகளில் மரப் பொந்துகளில் ஆந்தைகளும் கூகைகளும் குழறின. பார்ப்பதற்குப் பயங்கரமான வேடுவர்கள் சிலர்தான் காட்டின் மத்தியில் ஆங்காங்கு குடிசை போட்டுக் கொண்டு வசித்தார்கள்.
ஆம்; ஒரே வித்தியாசம் இருந்தது. ஸ்ரீசுந்தரமூர்த்தி நாயனார் இங்கு வந்திருந்தபோது கலங்கரை விளக்கம் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு, முதற் பராந்தகரின் காலத்திலேதான் அது கட்டப்பட்டது. கலங்கரை விளக்கத்தில் பணி செய்வோருக்கென்று சில ஓட்டு வீடுகள் அதைச் சுற்றிக் கட்டப்பட்டன. கோடிக்கரைக் குழகர் கோயிலில் பூஜை செய்யும் பட்டரும் அங்கே வந்து குடியேறினார்.
பூங்குழலி கடற்கரை ஓரத்தில் படகின் மீது சாய்ந்த வண்ணம் நாற்புறமும் பார்த்தாள். கலங்கரை விளக்கத்தைப் பார்த்து அந்தப் பக்கம் போகலாமா என்று யோசித்தாள். பிறகு குழகர் கோயிலின் கோபுரகலசத்தை நோக்கினாள். அச்சமயம் கோயிலில் சேமங்கலம் அடிக்கும் ஓசை கேட்கவே, பூங்குழலி ஒரு தீர்மானத்துக்கு வந்தாள். அதற்குள் வீட்டுக்குப் போய் என்ன செய்வது? கோவிலுக்குப் போகலாம்! பட்டரைத் தேவாரம் பாடச் சொல்லிக் கேட்கலாம். பிறகு பிரசாதமும் வாங்கிக் கொண்டு வரலாம்.
இப்படி முடிவு செய்து கொண்டு பூங்குழலி கோயில் இருந்த திசையை நோக்கி நடந்தாள். ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் துள்ளிக் குதித்துக் கொண்டும் நடந்தாள். வழியில் மான் கூட்டம் ஒன்றைக் கண்டாள். மான்கள் மணல் வெளியைத் தாண்டிக் காட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தன. ஏழெட்டுப் பெரிய மான்களோடு ஒரு சிறிய மான் குட்டியும் பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தது. மான் கூட்டத்தைப் பார்த்ததும் பூங்குழலிக்கு உற்சாகம் உண்டாயிற்று. அவற்றைப் பிடிக்கப் போவதுபோல் தொடர்ந்து குதித்து ஓடினாள். ஆனால் என்னதான் விரைவாக ஓடினாலும் மான்களோடு போட்டியிட முடியுமா? மான் கூட்டம் பூங்குழலியை முந்திக் கொண்டது.
முன்னால் சென்ற மான்கள் ஓரிடத்தில் நாலு கால்களையும் தூக்கி வானத்தில் பறப்பது போல் நீண்ட தூரம் தாவிக் குதித்தன. அங்கே புதை சேற்றுக் குழி இருக்கிறதென்று பூங்குழலி ஊகித்துக் கொண்டாள். பெரிய மான்கள் எல்லாம் அக்குழியை ஒரே தாண்டலில் தாண்டி அப்பால் பத்திரமாய் இறங்கிவிட்டன. ஆனால் மான்குட்டியினால் முழுவதும் தாண்ட முடியவில்லை. அக்கரை ஓரமாக அதன் பின்னங்கால்கள் சேற்றுக் குழியில் அகப்பட்டுக் கொண்டன. முன்னங்கால்களைக் கரையில் ஊன்றி மான் குட்டி ஆன மட்டும் கரை ஏற முயன்றது. ஆனால் அதன் பின்னங்கால்கள் சேற்றில் மேலும் மேலும் புதைந்து கொண்டிருந்தன. தாய் மான் கரையில் நின்று குட்டியின் நிலையைக் கவலையுடன் நோக்கியது. அதனால் தன் குட்டிக்கு உதவி எதுவும் செய்ய முடியவில்லை.
இதையெல்லாம் ஒரு நொடியில் பார்த்து அறிந்து கொண்ட பூங்குழலி அந்தப் புதை சேற்றுக் குழி எங்கே முடிகிறது என்பதைக் கண்டு தெரிந்து கொண்டாள். புதைகுழி ஓரமாக ஓடிச் சென்று கெட்டியான இடத்தின் வழியாகக் கடந்து எதிர்ப்புறத்தில் மான் குட்டி சேற்றில் அகப்படுக் கொண்டு தவித்த இடத்தை அணுகினாள். தாய் மான் முதலில் அவளைக் கண்டு மிரண்டது. பூங்குழலிக்கு மானின் பாஷை தெரியும் போலும்! மிருதுவான குரலில் அவள் ஏதோ சொல்லவும் தாய் மான் பயம் நீங்கி நின்றது. பூங்குழலி புதை சேற்றுக் குழியின் கரை ஓரத்தில் முன்னங்கால்களை மடித்து உட்கார்ந்து, கைகளை நீட்டி மான் குட்டியைப் பற்றிப் பலமாக இழுத்துக் கரையேற்றினாள்.சில விநாடி நேரம் அந்த மான்குட்டியின் உடம்பு வெடவெட வென்று நடுங்கிக் கொண்டிருந்தது. தாய் மான் அதனருகில் நின்று முகர்ந்து பார்த்துத் தைரியம் கூறியது போலும்! அவ்வளவுதான்! அடுத்த விநாடி தாயும், குட்டியும் மீண்டும் பாய்ந்தோடின.
"சீ! கொஞ்சமும் நன்றியில்லாத மிருக ஜன்மங்கள்!" என்று பூங்குழலி தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள். "ஆனால் மனிதர்களை விட இந்த மான்கள் மட்டமாய்ப் போய்விட்டவில்லை!" என்று அவளே தேறுதலும் சொல்லிக் கொண்டாள்.
பிறகு மறுபடியும் குழகர் ஆலயத்தை நோக்கி நடந்தாள்.
மணல் வெளியைத் தாண்டியதும் மரஞ் செடிகள் அடர்ந்த காட்டு வழியில் போக வேண்டியிருந்தது. மேட்டில் ஏறியும், பள்ளத்தில் இறங்கியும் போக வேண்டியிருந்தது. அந்தக் காட்டை இயற்கையின் விசித்திரங்களில் ஒன்று என்றே சொல்ல வேண்டும். அங்கே கற்பாறைகளினால் அமைந்த மலைகளோ, குன்றுகளோ இல்லை. ஒரே மணல் வெளிதான். ஆங்காங்கு மணல் மேடிட்டு, மணல் மேட்டின்மீது செடிகளும், மரங்களும் முளைத்ததனால் கெட்டிப்பட்டுக் குன்றுகளாகவே மாறிப் போயிருந்தன. குன்றுகளுக்குப் பக்கத்தில் பள்ளங்களும் இருந்தன. அத்தகைய காட்டில் வழி கண்டுபிடித்துப் போவது எளிய காரியமன்று. வெகுதூரம் நடந்துவிட்டது போலத் தோன்றும்; ஆனால் திரும்பத் திரும்பப் புறப்பட்ட இடத்துக்கே வந்து கொண்டிருப்போம்!
பூங்குழலி அந்தக் காட்டு வழியில் புகுந்து அதி விரைவாக நடந்து ஆலயத்தினருகே வந்து சேர்ந்தாள். கோவிலுக்கு வெளியிலும், உட்பிரகாரத்திலும் கொன்னை, பன்னீர் முதலிய மரங்கள் ஓங்கி வளர்ந்து மலர்ந்து குலுங்கிக் கொண்டிருந்தன. பூங்குழலி ஆலயத்துக்குள் போனாள். பட்டர் அவளைப் பார்த்து முகமலர்ந்தார். அந்தக் கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்வதற்காக வருவோர் அருமை. ஆதலின் அருமையாக வருகிறவரைப் பார்த்துப் பட்டர் மகிழ்வது இயல்புதானே?
தேங்காய் மூடியும், பிரசாதமும் கொண்டு வந்து பட்டர் கொடுத்தார். "அம்மா கொஞ்சம் காத்திருக்கிறாயா? நானும் இதோ சந்நிதியைப் பூட்டிக்கொண்டு வீட்டுக்கு வருகிறேன்!" என்றார். இருட்டிய பிறகு அந்தக் காட்டு வழியில் செல்வது கொஞ்சம் சிரமமான காரியந்தான். ஆனால் வழிகாட்டுவதற்குப் பூங்குழலி இருந்தால் கவலையே கிடையாது.
"இருக்கிறேன், ஐயா! எனக்கு அவசரம் ஒன்றுமில்லை. மெதுவாகக் கோயில் கைங்கரியங்களை முடித்துக்கொண்டு புறப்படுங்கள்!" என்று பூங்குழலி கூறிவிட்டுக் கோயில் பிரகாரத்துக்கு வந்தாள். மரக்கிளை ஒன்றைப் பிடித்துக் கொண்டு பிரகாரத்தின் மதில் சுவரின் மேல் தாவி ஏறினாள். மதில் மூலையில் நந்தி பகவானுடைய பெரிய சிலை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்தச் சிலைமீது சிறிது சாய்ந்த வண்ணம் மதில் மீது காலை நீட்டிப் படுத்தாள். தேங்காய் மூடியைப் பல்லினால் சுரண்டிச் சாப்பிடத் தொடங்கினாள்.
நாலாபுறமும் இருள் சூழ்ந்து வரும் விசித்திரத்தைப் பூங்குழலி பார்த்துக் கொண்டேயிருக்கையில், குதிரையின் காலடிச் சத்தத்தைக் கேட்டாள். சத்தம் வந்த வழியே ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். குதிரைக் காலடியின் சத்தம் அவளுடைய உள்ளத்தில் ஏதேதோ பழைய ஞாபகங்களை எழுப்பி அவளைக் கனவு லோகத்துக்குக் கொண்டு போயிற்று. எங்கிருந்தோ இனந் தெரியாத ஒரு துக்கம் வந்து நெஞ்சை அடைத்தது. வருகிறது யாராயிருக்கக்கூடும்? யாராயிருந்தால் நமக்கு என்ன கவலை? கொஞ்ச காலமாகப் புது ஆட்கள் வருகிறதும் போகிறதும் அதிகமாய்த் தானிருக்கிறது. இராஜாங்க காரியமாக வருகிறார்களாம்; போகிறார்களாம். நேற்றைக்குக் கூட இரண்டு பேர் வந்திருந்தார்கள். அவர்களைப் பார்ப்பதற்கே அருவருப்பாயிருந்தது. அண்ணனைப் படகு வலிக்கச் சொல்லி ஈழத்துக்குச் சென்றார்கள். பணமும் நிறையக் கொடுத்தார்கள். அவர்களுடைய பணத்திலே இடி விழட்டும்! யாருக்குப் பணம் வேண்டும்! பணத்தை வைத்துக் கொண்டு இந்த நடுக் காட்டில் என்ன செய்வது? ஆனால் அண்ணனுக்கும் அண்ணிக்கும் பணம் என்றால் ஒரே ஆசை. எதற்கோ தெரியவில்லை! சேர்த்துச் சேர்த்துப் புதைத்து வைக்கிறார்கள்.
குதிரைக் காலடிச் சத்தம் இதோ அருகில் நெருங்கி வருகிறது. ஒரு குதிரை அல்ல; இரண்டு குதிரைகள் வருவது போலத் தோன்றுகிறது. இதோ அவை தென்படுகின்றன. பள்ளத்திலிருந்து மெள்ள மெள்ள மேட்டில் ஏறி வருகின்றன. நெடுந்தூரம் பிரயாணம் செய்து களைத்துப் போன குதிரைகள். ஒவ்வொரு குதிரை மீதும் ஓர் ஆள் வருகிறான். முதலில் வருகிற குதிரை மேல் வருகிறவன் வாலிபப் பிராயத்தவன். பார்க்க இலட்சணமாக இருக்கிறான்; வாட்டச்சாட்டமாகவும் இருக்கிறான் முகத்தில் கம்பீரம் இருக்கிறது. ஆனால் அவளுடைய இருதய அந்தரங்கத்தில் குடிகொண்டிருக்கும் அந்த இன்னொரு முகத்தின் அழகும், கம்பீரமும் எங்கே? இவனுடைய முகம் எங்கே? பார்க்கப் போனால் இவனுடைய முகம் மரப்பொந்தில் இருக்கும் ஆந்தை முகம் மாதிரியல்லவா சப்பட்டையாயிருக்கிறது?
குதிரை மேல் வந்த இருவரில் முதலில் வந்தவன் நமது பழைய நண்பனாகிய வல்லவரையன் வந்தியத்தேவன்தான். பின்னால் வந்தவன் வைத்தியருடைய மகன். இருவரும் பழையாறையிலிருந்து இங்கே வந்து சேர்வதற்குள் இளைத்துக் களைத்துச் சோர்வுற்றுப் போயிருக்கிறார்கள். ஆயினும் வந்தியத்தேவனுடைய முகம், கோயில் மதில் மேல் காலை நீட்டிச் சாய்ந்து கொண்டிருந்த பூங்குழலியைக் கண்டதும் சிறிது மலர்ந்தது. அவள் தன்னுடைய முகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று தெரிந்ததும் அவனுக்கு இயற்கையான உற்சாகமே பிறந்து விட்டது. அவனும் குதிரையை நிறுத்தி விட்டு அவளுடைய முகத்தை ஆர்வத்துடன் உற்றுப் பார்க்கலானான். தன் முகத்தை மரப்பொந்திலுள்ள ஆந்தையின் முகத்தோடு அவள் ஒப்பிடுகிறாள் என்று மட்டும் அவன் அறிந்திருந்தால் அவ்வளவு உற்சாகப்பட்டிருக்க முடியாது தான். ஒரு மனத்திலுள்ளதை இன்னொருவர் முழுதும் அறிய முடியாமலிருப்பது எவ்வளவு அநுகூலமாயிருக்கிறது?
குதிரை மேல் வந்தவன் தன்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை பூங்குழலி அறிந்தாள். கையில் தான் தேங்காய் மூடி வைத்துக்கொண்டு பல்லினால் சுரண்டித் தின்று கொண்டிருப்பதையும் நினைத்தாள். உடனே எங்கிருந்தோ ஒரு நாண உணர்ச்சி வந்து அவளைப் பற்றிக் கொண்டது. பிரகார மதில் சுவரிலிருந்து வெளியே வெண் மணலில் குதித்தாள். மதில் சுவர் ஓரமாக ஓடத் தொடங்கினாள்.
அதைப் பார்த்த உடனே வந்தியத்தேவனுக்கும் குதிரை மேலிருந்து குதிக்கத் தோன்றியது. குதித்துப் பூங்குழலியைப் பின்தொடர்ந்து பிடிப்பதற்கு ஓட வேண்டும் என்று தோன்றியது. அவ்வாறே அவளைத் துரத்திக் கொண்டு ஓடினான். இந்த அர்த்தமற்ற செயலின் காரண காரியங்களை யார் கண்டுபிடித்துச் சொல்ல முடியும்? ஆயிரம் பதினாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த மனித குலத்தின் பரம்பரை இயற்கைதான் பூங்குழலியை ஓடச் செய்தது என்றும், அதுவே வந்தியத்தேவனைத் துரத்திப் பிடிக்கச் செய்தது என்றும் சொல்ல வேண்டியதுதான்.