பொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/அப்பர் கண்ட காட்சி
தியாக சிகரம் - அத்தியாயம் 83
[தொகு]அப்பர் கண்ட காட்சி
அன்று முன் இரவில் திருவாதிரைத் திருவிழாவை முன்னிட்டு ஐயாறப்பரும், அறம் வளர்த்த நாயகியும் திருவையாற்றின் விசாலமான மாட வீதிகளில் திருவோலக்கம் எழுந்தருளினார்கள். வெள்ளிப்பனி மூடிய கைலையங்கிரியை நினைவூட்டுமாறு வெள்ளியினால் அமைத்த கைலாச வாகனத்தில் அன்று சுவாமியையும் அம்மனையும் அலங்கரித்து வீற்றிருக்கச் செய்திருந்தார்கள்.
ஊர்வலத்தின் முன்னணியில் யானைகளும், ஒட்டகங்களும் பெரிய பெரிய ரிஷபங்களும் சென்றன. அவற்றின் மீது ஏற்றியிருந்த பேரிகைகளும், முரசுகளும் எட்டுத் திசைகளும் எதிரொலி செய்யும்படி முழங்கின. அவற்றின் பின்னால் வரிசை வரிசையாகப் பலவகைத் திருச்சின்னங்களை ஏந்தியவர்கள் சென்றார்கள். விதவிதமான வாத்தியங்களை வாசித்தவர்கள் கோஷ்டி கோஷ்டியாகச் சென்றார்கள். நடன கணிகையர் ஆங்காங்கு நின்று நடனம் ஆடி விட்டுச் சென்றார்கள். நந்தி பகவானும், சண்டிகேசுவரரும், விநாயகரும், வள்ளி தேவயானை சமேதரான முருகக் கடவுளும் தனித்தனி விமானத்தில் அமர்ந்து சென்றார்கள். கடைசியில், பார்வதியும், பரமேசுவரனும் கைலாச வாகனத்தில் அமர்ந்து சேவை தந்து கொண்டு வந்தார்கள்.
இன்னும் பின்னால் தேவார கோஷ்டியினர் வீணை, மத்தளம், தாளம் முதலிய இசைக்கருவிகளுடன் அப்பரும், சம்பந்தரும், சுந்தரரும் பாடிய திருவையாற்றுத் திருப்பதிகங்களை இசையோடு பாடிக்கொண்டு நடந்து வந்தார்கள். முன்னாலும், பின்னாலும் ஆயிரமாயிரம் ஜனங்கள் வீதிகளை அடைத்துக்கொண்டு மெள்ள மெள்ள ஊர்வலத்தோடு போய்க்கொண்டிருந்தார்கள். ஜனங்கள் அவரவர்களுடைய மனப்போக்குக்கு ஒத்தபடி, சிலர் யானை, ஒட்டகை முதலியவற்றைப் பார்ப்பதிலும், சிலர் வாத்தியக் கோஷ்டிகளின் கீதங்களைக் கேட்பதிலும், சிலர் தேவ கணிகையரின் நடனங்களைப் பார்ப்பதிலும், பெரும்பாலோர் திருவோலக்கம் வந்த தெய்வ மூர்த்திகளைத் தரிசித்துப் பரவசமடைந்து துதிப்பதிலும் ஈடுபட்டிருந்தார்கள்.
கண்ணுக்கெட்டிய தூரம் முன்னும் பின்னும் நூற்றுக்கணக்கான தீவர்த்திகள் பிரகாசித்து, அந்த அபூர்வமான தெய்வ ஊர்வலத்தை ஒரு கனவு லோகக் காட்சியாகச் செய்து கொண்டிருந்தது. இந்தக் காட்சியைச் சோழ மாளிகையின் மேன் மாடத்திலிருந்து குந்தவையும், வானதியும், பூங்குழலியும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். முதன் முதலில் வந்த முரசு சுமந்த யானைகளிலிருந்து, கடைசித் தேவார கோஷ்டி வரும் வரையில் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தார்கள். பரவச நிலையிலிருந்த பக்தர்களையும், பலவித வேடிக்கைகளில் மனதைச் செலுத்தியிருந்த பாமர மக்களையும் பார்த்தார்கள். நந்தி தேவர் முதல் சிவன் பார்வதி வரையில் வீதி வலம் வந்த தெய்வ வடிவங்களையும் அவர்கள் தரிசித்து மகிழ்ந்தார்கள்.
அவ்வளவு ஜனக் கூட்டத்துக்கு மத்தியில் ஒரு யானையின் மீது இரண்டு சீன வர்த்தகர்கள் ஏறிக்கொண்டு வருவதையும், அவர்கள் அவ்வப்போது யானை மேலிருந்து கீழிறங்கி ஜனக் கூட்டத்தினிடையில் மறைந்து விடுவதையும், பிறகு மறுபடியும் வந்து யானை மீது ஏறிக்கொள்வதையும் கண்டார்கள்.
"ஆகா! இந்தச் சீனர்கள் இருவரும் உண்மையில் வர்த்தகர்களா? அல்லது அயல் நாட்டிலிருந்து வேவு பார்க்க வந்த ஒற்றர்களா?" என்ற ஐயம் குந்தவையின் உள்ளத்தில் ஏற்பட்டது.
சோழ இராஜ்ஜியத்து அரசுரிமை சம்பந்தமாகச் சில நாளாக ஏற்பட்டிருந்த தகராறுகள், குழப்பங்கள் பற்றிய செய்திகள் உலகெங்கும் பரவியிருக்கக்கூடியது இயல்பேயாகும். அதை முன்னிட்டு, பகை அரசர்கள் இந்த ஒற்றர்களைச் சீன நாட்டு வர்த்தகர்களின் தோற்றத்தில் அனுப்பி வைத்திருக்கக்கூடும் அல்லவா?
இதைப் பற்றிக் குந்தவையும், வானதியும் பேசிக் கொண்டிருந்தது பூங்குழலியின் காதில் விழுந்தது. அந்தப் பெண் "தேவி! அவர்கள் கோவில் கோபுர வாசலில் என்னை அணுகிச் 'சீனத்துப் பட்டு வேணுமா?' என்று கேட்டார்கள். நான் அவர்களிடம் 'சோழ மாளிகைக்கு வாருங்கள்; தஞ்சையிலிருந்து இளவரசிகள் வரப் போகிறார்கள்; அவர்கள் ஒருவேளை வாங்குவார்கள்!' என்று சொல்லியிருக்கிறேன். ஆகையால் ஒருவேளை இங்கு வந்தாலும் வருவார்கள்! உங்கள் சந்தேகத்தை நேரிலேயே கேட்டுத் தீர்த்துக் கொள்ளலாம்!" என்றாள்.
அச்சமயம் கைலையங்கிரி வாகனத்தில் அமர்ந்திருந்த ஐயாறப்பரும், அறம் வளர்த்த நாயகியும் சோழ மாளிகையின் வாசலுக்கு வந்திருந்தார்கள். அங்கே சுவாமியை நிறுத்தச் செய்து தீபாராதனை முதலியன நடந்தன. தெய்வ ஊர்வலத்துடன் வந்த செம்பியன் மாதேவியும் அவருடைய புதல்வரும் விமானம் அங்கிருந்து சென்ற பிறகு அரண்மனைக்குள் பிரவேசித்தார்கள். இளவரசிகள் மேன்மாடத்திலிருப்பதை அறிந்து அங்கேயே வந்து சேர்ந்தார்கள்.
உற்சவத்தின் சிறப்பைக் குறித்துச் சிறிது நேரம் சம்பாஷணை நடந்தது. பின்னர், சிவஞான கண்டராதித்தரின் தேவி, தம் அருமை மகனைப் பார்த்துக் "குழந்தாய்! இந்தத் திருவையாற்றில் அப்பர் பெருமான் கண்ட காட்சியைப் பற்றி ஒரு பதிகம் பாடியிருக்கிறாரே! அதை நீ ஒரு முறை பாடு. கேட்கலாம்! தேவார கோஷ்டியார் பாடக் கேட்டது எனக்கு அவ்வளவாகத் திருப்தி அளிக்கவில்லை!" என்றார்.
இளவரசிகளும், பூங்குழலியும் அந்தக் கோரிக்கையை ஆமோதித்தார்கள். பின்னர், சேந்தன் அமுதனாகிய மதுராந்தகத் தேவர் அந்தப் பதிகத்தைத் தமது இனிய குரலில் பாடினார்:
"மாதர்ப் பிறைக்கண்ணியானை மலையான் மகளொடும்பாடிப்
போதொடு நீர்சுமந்தேத்திப் புகுவாரவர் பின்புகுவேன்
யாதுஞ் சுவடுபடாமல் ஐயாறு அடைகின்றபோது
காதல்மடப் பிடியோடுங் களிறு வருவன கண்டேன்!
கண்டேனவர் திருப்பாதம்! கண்டறியாதன கண்டேன்!"
இந்த அடியுடன் தொடங்கிப் பின்வரும் பத்து அடிகளையும் மதுராந்தகர் தம்மை மறந்த நிலையில் பாடினார்.
கேட்டுக் கொண்டிருந்தவர்களும் தங்களை மறந்திருந்தார்கள். அன்று அப்பர் பெருமான் கண்ட காட்சிகளையெல்லாம் அவர்களும் கண்டார்கள்.
பாடல் முடிந்து, சிறிது நேரம் வரையில் அங்கே மௌனம் குடிகொண்டிருந்தது. பின்னர், குந்தவை செம்பியன் மாதேவியைப் பார்த்து, "அம்மா! அப்பர் இந்தப் பதிகம் பாடிய வரலாற்றை முன்னொரு முறை எனக்குச் சொல்லியிருக்கிறீர்கள். இப்போது இன்னொரு தடவை சொல்லுங்கள்! இவர்களும் கேட்கட்டும்!" என்றாள். மற்றவர்களும் வற்புறுத்திக் கேட்டதன் பேரில் பெரிய பிராட்டி செம்பியன் மாதேவி அந்த வரலாற்றைக் கூறினார்.
அப்பர் சுவாமி பிராயம் முதிர்ந்து உடல் தளர்ச்சியுற்றிருந்த சமயத்தில் கைலையங்கிரிக்குச் சென்று இறைவனைத் தரிசிக்க விரும்பினார். நெடுதூரம் வடதிசை நோக்கிப் பிரயாணம் செய்தார். மேலே நடக்க முடியாமல் களைத்து விழுந்தார். அச்சமயம் ஒரு பெரியவர் அங்கே தோன்றி, "அப்பரே! கைலையைத் தேடி நீ எங்கே செல்கிறீர்? பொன்னி நதிக் கரையிலுள்ள திருவையாற்றுக்குச் செல்லுங்கள்! பூலோக கைலாசம் அதுதான்" என்று அருளிச் செய்து மறைந்தார். அது இறைவன் வாக்கு என்று அறிந்த அப்பர் திரும்பித் திருவையாறு வந்தார். அந்த ஸ்தலத்தை நெருங்கி வந்த போதே அவருடைய உள்ளம் பரவசம் அடைந்தது. பல அடியார்கள் கையில் பூங்குடலையும் கெண்டியில் காவேரி நீரும் ஏந்தி ஐயாறப்பனைத் தரிசிப்பதற்காகச் சென்று கொண்டிருப்பதைப் பார்த்தார். அவர்கள் இறைவனுடைய புகழைப் பாடிக்கொண்டு சென்றார்கள். அவர்கள் பின்னால் அப்பரும் சென்றார். அப்போது திருவையாறு நகர்ப்புறத்தில் ஆணும் பெண்ணுமாக இரு யானைகள் வந்தன. அந்தக் களிறும் பிடியும் சிவமும் சக்தியுமாக அப்பருக்குக் காட்சி அளித்தன. ஆலயத்தை அடைவதற்குள் இவ்வாறு பல விலங்குகளையும் பறவைகளையும் ஆண் பெண் வடிவத்தில் அப்பர் பார்த்தார். கோழி பெடையோடு கூடிக் குலாவி வந்தது; ஆண் மயில் பெண் மயிலோடு ஆடிப் பிணைந்து வந்தது; அருகிலிருந்த சோலையில் ஆண் குயிலோடு பெண் குயில் பாடிக் களித்துக் கொண்டிருந்தது; இடி முழக்கக் குரலில் முழங்கிக் கொண்டு ஏனம் ஒன்று அதன் பெண் இனத்தோடு சென்றது; நாரையும் அதன் நற்றுணையும் சேர்ந்து பறந்து சென்றன; பைங்கிளியும் அதன் பேடையும் பசுமரக்கிளைகளில் மழலை பேசிக் கொண்டிருந்தன; காளையும் பசுவும் கம்பீரமாக அசைந்து நடந்து சென்றன. இவ்வாறு ஆணும் பெண்ணுமாக அப்பர் சுவாமிகளின் முன்னால் தோன்றியவையெல்லாம் சிவமும் சக்தியுமாக அவருடைய அகக்கண்ணுக்கு புலனாயின. உலகமெல்லாம் சக்தியும் சிவமுமாக விளங்குவதைக் கண்டார். "இந்த உலகமே கைலாசம்; தனியாக வேறு கைலாசமில்லை" என்று உணர்ந்தார். இத்தகைய மெய்ஞான உணர்ச்சியோடு மேலே சென்றபோது, ஐயாறப்பரும், அறம் வளர்த்த நாயகியும் கைலாச வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வருவதையும் பார்த்தார். தாம் அன்று புறக்கண்ணாலும் அகக்கண்ணாலும் பார்த்து அனுபவித்ததையெல்லாம் ஒவ்வொன்றாக இனிய தமிழில் இசைத்துப் பாடி அருளினார். இத்தனை காலமும் தாம் கண்ணால் கண்டும் கருத்தினால் அறியாமலிருந்தவற்றை இன்று திருவையாற்றில் கண்டு அறிந்து கொண்டதாக ஒவ்வொரு பாடலின் முடிவிலும் "கண்டறியாதன கண்டேன்!" என்று திரும்பத் திரும்ப வியந்து கூறினார்.
முதிய எம்பிராட்டியார் கூறி வந்த இந்த வரலாற்றை எல்லாரும் மெய்மறந்து கேட்டுக்கொண்டு வந்தார்கள்.
வரலாறு முடிந்த பிறகு கொடும்பாளூர் இளவரசி ஒரு கேள்வி கேட்டாள்: "அம்மா! அப்பர் சுவாமிகள் விலங்கின பறவை இனங்களின் காதலைக் குறித்து இப்படியெல்லாம் வியந்து வியந்து கூறியிருக்கிறாரே? மனித இனத்தைப் பற்றி மட்டும் ஏன் குறிப்பிடவில்லை?" என்றாள்.
பூங்குழலி "மனித குலத்தில் பிரதிப் பயனை விரும்பாமல் உண்மையான அன்பு கொண்ட ஆண் - பெண்கள் இல்லவே இல்லை. அதனாலே தான் அப்பர் மனித குலத்து ஆண் பெண்களைக் குறிப்பிடவில்லை!" என்றாள்.
"அது சரியல்ல, மகளே! உன்னையும், என் மகனையும் அப்பர் சுவாமிகள் பார்த்திருந்தால், மனித குலத்தின் காதலையும் சேர்த்துக் கொண்டு பாடியிருப்பார்!" என்றார் செம்பியன் மாதேவி.
"ஆமாம்; ஆமாம்!" என்று மற்ற இரு பெண்மணிகளும் ஆமோதித்தார்கள்.
இந்தச் சமயத்தில் அந்த மாளிகையின் வாசலில் ஏதோ சலசலப்பு உண்டாயிற்று. சேவகன் ஒருவன் உள்ளே வந்து, "சீனத்துப் பட்டு வர்த்தகர்கள் இருவர் வந்திருக்கிறார்கள். இளவரசிகளைப் பார்த்து விட்டுத்தான் போவோம் என்கிறார்கள்!" என்றான்.
இளைய பிராட்டி வியப்பும், கோபமும் அடைந்து, "அவர்கள் யார் அவ்வளவு அதிகப்பிரசங்கிகள்? இப்போது ஒன்றும் வேண்டாம் என்று சொல்லி அவர்களைப் போகச் சொல்!" என்றாள்.
இதற்குள் பூங்குழலி, "தேவி! அவர்களை நான் வரச் சொல்லியிருந்தேன். மன்னிக்க வேண்டும்!" என்றாள்.
"அப்படியானால் வந்து விட்டுப் போகட்டும்!" என்றாள் இளையபிராட்டி.
சற்று நேரத்துக்கெல்லாம் சீனத்து வர்த்தகர்கள் இருவரும் இரண்டு மூட்டைகளுடனே அங்கு வந்தார்கள்.