பொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/கண் திறந்தது!
தியாக சிகரம் - அத்தியாயம் 10
[தொகு]கண் திறந்தது!
முதலில் நதி வெள்ளத்திலும், பின்னர் உடைப்பு வெள்ளத்திலும் அகப்பட்டுத் திண்டாடியபடியால் பெரிதும் களைப்படைத்திருந்த பழுவேட்டரையர் வெகு நேரம் நினைவற்று, உணர்ச்சியற்று, கட்டையைப் போல் கிடந்து தூங்கினார். வேண்டிய அளவு தூங்கிய பிறகு, இலேசாக நினைவுகளும், கனவுகளும் தோன்றின. ஒரு சமயம் துர்க்கா பரமேசுவரி, கோவில் விக்கிரகத்திலிருந்து புறப்பட்டு நாலு அடி எடுத்து வைத்து நடந்து அவர் அருகில் வந்தாள். அனல் வீசிய கண்களினால் அவரை உற்று நோக்கிய வண்ணம் திருவாய் மலர்ந்தாள். 'அடே, பழுவேட்டரையா! நீயும் உன் குலத்தாரும் தலைமுறை தலைமுறையாக எனக்கு வேண்டியவர்கள். ஆகையால் உனக்கு எச்சரிக்கிறேன். உன்னுடைய அரண்மனையில் நீ கொண்டு வைத்திருக்கிறாயே. அந்த நந்தினி என்பவள் மனிதப் பெண் உருக் கொண்ட ராட்சஸி! உன்னுடைய குலத்தையும், சோழர் குலத்தையும் வேரொடு அழித்துப் போடுவதற்காக வந்தவள். அதற்குச் சரியான சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவளை அரண்மனையிலிருந்தும், உன் உள்ளத்திலிருந்தும் அப்புறப்படுத்திவிட்டு மறு காரியம் பார்! இல்லாவிட்டால், உனக்கும் உன் குலத்துக்கும் என்றும் அழியாத அபகீர்த்தி ஏற்படும்...!'
இவ்விதம் எச்சரித்துவிட்டுத் தேவி திரும்பிச் சென்று விக்கிரகத்துக்குள் புகுந்து கலந்து விட்டாள்...!
பழுவேட்டரையர் திடுக்கிட்டு எழுந்தார். அவர் உடம்பு கிடுகிடென்று நடுங்கிக் கொண்டிருந்தது. தாம் கண்டது கனவுதான் என்று நம்புவது அவருக்குச் சற்றுச் சிரமமாகவே இருந்தது. ஆயினும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார்.
பொழுது நன்றாக விடிந்திருந்தது. புயலின் உக்கிரம் தணிந்திருந்தது. மழை நின்று போயிருந்தது. 'சோ' வென்ற சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. கோவில் வெளி மண்டபத்தின் விளிம்பில் அருகில் வந்து நின்று சுற்று முற்றும் பார்த்தார். அவர் கண்ட காட்சி உற்சாகமளிப்பதாக இல்லை.
கொள்ளிடத்தின் உடைப்பு இதற்குள் மிகப் பெரிதாகப் போயிருந்தது. நதி வெள்ளத்தில் ஏறக்குறையப் பாதி அந்த உடைப்பின் வழியாகக் குபு குபுவென்று பாய்ந்து கொண்டிருந்ததாகத் தோன்றியது. கிழக்குத் திசையிலும், தெற்குத் திசையிலும் ஒரே வெள்ளக் காடாக இருந்தது. மேற்கே மட்டும் கோவிலை அடுத்துச் சிறிது தூரம் வரையில் வெள்ளம் சுழி போட்டுக் கொண்டு, துள்ளிக் குதித்துக் கொண்டு போயிற்று. அப்பால் குட்டை மரங்களும் புதர்களும் அடர்ந்திருந்த காட்டுப் பிரதேசம் வெகு தூரத்துக்குக் காணப்பட்டது. அது திருப்புறம்பியம் கிராமத்தை அடுத்த காடாயிருக்க வேண்டுமென்றும், அந்தக் காட்டின் நடுவில் எங்கேயோதான் கங்க மன்னன் பிருதிவீபதிக்கு வீரக் கல் நாட்டிய பழைய பள்ளிப்படைக் கோயில் இருக்க வேண்டும் என்றும் ஊகம் செய்தார்.
அந்தப் பள்ளிப்படை உள்ள இடத்தில் நூறு வருஷங்களுக்கு முன்னால் நடந்த மாபெரும் யுத்தம் அவர் நினைவுக்கு வந்தது. அந்தப் போரில் சோழர் குலத்துக்கு உதவியாகத் தமது முன்னோர்கள் செய்த வீர சாகஸச் செயல்களையும் ஞாபகப்படுத்திக் கொண்டார். அப்படிப்பட்ட தமது பழம் பெருங்குலத்துக்கு இந்த நந்தினியினால் உண்மையிலேயே அவக்கேடு நேர்ந்துவிடுமோ? துர்க்கா பரமேசுவரி தனது கனவிலே தோன்றிக் கூறியதில் ஏதேனும் உண்மை இருந்தாலும் இருக்குமோ...?
எப்படியிருந்தாலும் இனி சர்வ ஜாக்கிரதையாகயிருக்க வேண்டும். நந்தினியின் அந்தரங்கம் என்னவென்பதையும் கண்டுபிடித்தேயாக வேண்டும். முதலில், இங்கிருந்து சென்ற பிறகல்லவா, மற்றக் காரியங்கள்? திருப்புறம்பியம் கிராமத்தை அடைந்தால் அங்கே ஏதேனும் உதவி பெறலாம். கவிழ்ந்த படகிலிருந்து தம்மைப்போல் வேறு யாரேனும் தப்பிப் பிழைத்திருந்தால், அவர்களும் அங்கே வந்திருக்கக்கூடும். ஆனால் வெள்ளத்தைக் கடந்து திருப்புறம்பியம் கிராமத்துக்குப் போவது எப்படி?
இந்தக் கோவிலைச் சுற்றி உடைப்பு வெள்ளம் இப்படிச் சுழி போட்டுக்கொண்டு ஓடுகிறதே! இதில் ஒரு மத யானை இறங்கினால் கூட அடித்துத் தள்ளிக் கொண்டு போய்விடுமே? இதை எப்படித் தாண்டிச் செல்வது?
உடைப்பு வெள்ளம் கோவிலைச் சுற்றிக் கீழே கீழே தோண்டிக் குழி பறித்துக் கொண்டிருப்பது திண்ணம். கோவில் எப்போது விழுமோ தெரியாது! துர்க்கா பரமேசுவரியின் சக்தியினால் விழாமலிருந்தால்தான் உண்டு. ஆயினும், அங்கிருந்து வெளியேறுவது எப்படி? உடைப்பு வெள்ளம் வடிந்த பிறகு போவது என்றால், எத்தனை நாள் ஆகுமோ தெரியாது.
நல்லவேளை, வேறொரு வழி இருக்கிறது. கோவிலுக்கு எதிரே பிரம்மாண்டமாக வளர்ந்திருந்த வேப்பமரம் ஒன்று இருந்தது. புயற்காற்றிலே விழாமல் அது எப்படியோ தப்பிப் பிழைத்தது. ஆனால் கோவிலைச் சுற்றித் துள்ளிச் சென்று கொண்டிருந்த உடைப்பு வெள்ளம் அந்த வேப்ப மரத்தைச் சுற்றிலும் சுழியிட்டுக் குழி பறித்துக் கொண்டிருந்ததால், கோவில் விழுவதற்கு முன்னால், அந்த மரம் விழுவது நிச்சயம். மரம் விழுந்தால் அநேகமாக மேற்குத் திசையிலுள்ள காட்டுப் பிரதேசத்துக்கு ஒரு பாலத்தைப் போல் அது விழக் கூடும். இல்லாவிட்டாலும், வெள்ளம் மரத்தை அடித்துக் கொண்டு போய், எங்கேயாவது கரையோரத்தில் சேர்க்கும். மரம் விழுந்தவுடனே அதன் மேல் தொத்தி ஏறிக் கொண்டால், ஒருவாறு அங்கிருந்து தப்பிப் பிழைக்கலாம்.
அதுவரையில் இக்கோயிலிலேயே இருக்க வேண்டியதுதான். தேவியின் கருணையினால் இன்னும் ஒருநாள் பசியாறுவதற்கும் பிரசாதம் மிச்சமிருக்கிறது. மரம் விழும் வரையில், அல்லது வெள்ளம் வடியும் வரையில் அங்கேயே பொறுமையுடன் காத்திருக்க வேண்டியதுதான். அதைத் தவிர வேறு என்ன செய்வது?
அவசரப்படுவதில் பயன் ஒன்றுமில்லை. நம்மால் இவ்வுலகில் இன்னும் ஏதோ பெரிய காரியங்கள் ஆக வேண்டியிருப்பதனாலேதான், தேவி ஜகன்மாதா, நம்மை வெள்ளத்தில் சாகாமல் காப்பாற்றியிருக்கிறாள். ஆதலின் மேலே நடக்க வேண்டியதற்கும், துர்க்கா பரமேசுவரியே வழி காட்டுவாள் அல்லவா? அன்று பகல் சென்றது. இன்னும் ஓர் இரவும், பகலும் கழிந்தன. புயல், தான் சென்றவிடமெல்லாம் அதாஹதம் செய்து கொண்டே மேற்குத் திசையை நோக்கிச் சென்றுவிட்டது.
தூவானமும் விட்டுவிட்டது. ஆனால் துர்க்கா தேவியின் கோயிலில் அகப்பட்டுக் கொண்ட பழுவேட்டரையருக்கு மட்டும் விடுதலை கிட்டவில்லை. கொள்ளிடத்து வெள்ளம் குறைந்தது போலக் காணப்பட்டது. ஆனால் உடைப்பு வரவரப் பெரிதாகிக் கொண்டு வந்தது. கோயிலைச் சுற்றிச் சென்ற வெள்ளம் குறையவில்லை. ஆழம் என்னமோ அதிகமாகிக் கொண்டே இருக்க வேண்டும். அதை அளந்து பார்ப்பது எப்படி? அல்லது அந்த உடைப்பு வெள்ளத்தில் இறங்கி நீந்திச் செல்லுவது பற்றித்தான் நினைத்துப் பார்க்கவும் முடியுமா?
கடைசியாக, அன்று சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் பழுவேட்டரையர் எதிர்பார்த்தபடி கோயிலுக்கு எதிரேயிருந்த பெரும் வேப்பமரமும் விழுந்தது. விழுந்த மரம் நல்ல வேளையாக உடைப்பு வெள்ளத்தின் மேற்குக் கரையைத் தொட்டுக் கொண்டு கிடந்தது. அதன் வழியாக அப்பால் செல்வதற்குப் பழுவேட்டரையர் ஆயத்தமானார். இரவிலே புறப்பட்டு அந்தக் காட்டுப் பிரதேசத்தில் எப்படி வழி கண்டுபிடித்துப் போவது என்பது பற்றிச் சிறிது தயங்கினார். சில கண நேரத்துக்குமேல் அந்தத் தயக்கம் நீடித்திருக்கவில்லை. உடனே புறப்பட வேண்டியதுதான் என்று முடிவு செய்து, தம்மை அந்தப் பேராபத்திலிருந்து காத்தருளிய துர்க்கா பரமேசுவரிக்கு நன்றி தெரிவிப்பதற்காகச் சந்நிதியை நெருங்கினார். சந்நிதியில் விழுந்து நமஸ்கரித்தார்.
அச்சமயத்தில் அவர் உடம்பு சிலிர்க்கும்படியான குரல் ஒன்று கேட்டது. முதலில் துர்க்கையம்மன் தான் பேசுகிறாளோ என்று தோன்றியது. பிறகு, இல்லை, குரல் வெளியில் சிறிது தூரத்துக்கு அப்பாலிருந்து வருகிறது என்று தெளிவடைந்தார்.
"மந்திரவாதி! மந்திரவாதி!" என்று கூப்பிட்டது அந்தக் குரல்.
பிறகு மறுபடியும் "ரவிதாஸா! ரவிதாஸா!" என்று கூவியது. முன் எப்பொழுதோ கேட்ட குரல் போலத் தோன்றியது.
பழுவேட்டரையர் எழுந்து முன் மண்டபத்துக்கு வந்தார். தூண் மறைவில் நின்று குரல் வந்த இடத்தை நோக்கினார். உடைப்பு வெள்ளத்துக்கு அப்பால், விழுந்த வேப்பமரத்தின் நுனிப் பகுதிக்கு அருகில் ஓர் உருவம் நின்று கொண்டிருக்கக் கண்டார். "மந்திரவாதி! மந்திரவாதி!" என்னும் கூக்குரல், அவருக்குத் தம் சகோதரன் முன்னொரு சமயம் கூறியவற்றை ஞாபகப்படுத்துகிறது. துர்க்காதேவியின் கருணையினால் தாம் அதுவரை அறிந்திராத மர்மத்தை அறிந்து கொள்ளப் போகிறோமோ என்ற எண்ணம் உதித்தது. ஆதலின் அசையாமல் நின்றார்.
அக்கரையில் நின்ற உருவம், விழுந்த வேப்ப மரத்தின் வழியாக உடைப்பு வெள்ளத்தைக் கடந்து வரத் தொடங்கியதைப் பார்த்தார். தம் வாணாளில் அதுவரை செய்திராத ஓர் அதிசயமான காரியத்தைப் பழுவேட்டரையர் அப்போது செய்தார். கோவில் முன் மண்டபத்தில் சட்டென்று படுத்துக் கொண்டார். தூங்குவது போலப் பாசாங்கு செய்தார்.
ரவிதாஸன் என்னும் மந்திரவாதியைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆசை அவரை அவ்வளவாகப் பற்றிக் கொண்டது. அவன் நந்தினியைப் பார்ப்பதற்காகச் சில சமயம் அவர் அரண்மனைக்கு வந்த மந்திரவாதியாகவே இருக்கவேண்டும். அவனுக்கும் நந்தினிக்கும் உள்ள தொடர்பு உண்மையில் எத்தகையது? அவனை இந்த இடத்தில், இந்த வேளையில், தேடி அலைகிறவன் யார்? எதற்காகத் தேடுகிறான்? இதையெல்லாம் தெரிந்துகொண்டால், ஒருவேளை நந்தினி தம்மை உண்மையிலேயே வஞ்சித்து வருகிறாளா என்பதைப் பற்றி அறிந்து கொள்ளலாம் அல்லவா? ரவிதாஸன் மட்டும் அவரிடம் சிக்கிக் கொண்டால், அவனிடத்திலிருந்து உண்மையைத் தெரிந்து கொள்ளாமல் விடுவதில்லை என்று மனத்தில் உறுதி கொண்டார்.
தூங்குவது போல் பாசாங்கு செய்தவரின் அருகில் அந்த மனிதன் வந்தான். மீண்டும் "ரவிதாஸா! ரவிதாஸா!" என்று கூப்பிட்டான்.
ஆகா! இந்தக் குரல்? கடம்பூர் மாளிகையில் முன்னொரு தடவை வேலனாட்டம் ஆடிக் குறி சொன்னானே, அந்தத் தேவராளன் குரல் போல் அல்லவா இருக்கிறது? இவனுடைய கழுத்தைப் பிடித்து இறுக்கி உண்மையைச் சொல்லும்படி செய்யலாமா? வேண்டாம்? இன்னும் சற்றுப் பொறுப்போம். இவன் மூலமாக மந்திரவாதி ரவிதாஸனைப் பிடிப்பதல்லவா முக்கியமான காரியம்?
"மந்திரவாதி! சூரியன் அஸ்தமிப்பதற்குள்ளேயே தூங்கிவிட்டாயா? அல்லது செத்துத் தொலைந்து போய்விட்டாயா?" என்று சொல்லிக்கொண்டே வந்த மனிதன், பழுவேட்டரையரின் உடம்பைத் தொட்டு அவருடைய முகம் தெரியும்படி புரட்டினான் அப்படிப் புரட்டியும் பழுவேட்டரையர் ஆடாமல் அசையாமல் கிடந்தார்.
பின் மாலையும் முன்னிரவும் கலந்து மயங்கிய அந்த நேரத்தில், மங்கலான வெளிச்சத்தில், தேவராளன் (ஆமாம், அவனேதான்!) பழுவேட்டரையரின் முகத்தைப் பார்த்தான். தன் கண்களை நன்றாகத் துடைத்துக்கொண்டு இன்னொரு தடவை உற்றுப் பார்த்தான். பீதியும், பயங்கரமும், ஆச்சரியமும், அவநம்பிக்கையும் கலந்து தொனித்த ஈனக்குரலில் 'ஊ ஊ!' 'ஓ!ஓ!' 'ஆ!ஆ!" என்று ஊளையிட்ட வண்ணம் அவ்விடத்தை விட்டு ஓட்டம் பிடித்தான்!
பழுவேட்டரையர் கண்ணைத் திறந்து நிமிர்ந்து உட்கார்ந்து பார்ப்பதற்குள்ளே அவன் கோயிலுக்கு முன்னாலிருந்த பலிபீடத் திறந்த மண்டபத்தை இரண்டு எட்டில் தாண்டிச் சென்று, வேப்ப மரப் பாலத்தின் மீது வேகமாக நடக்கத் தொடங்கிவிட்டான். திரும்பிப் பார்ப்பதற்குக்கூட ஒரு கணமும் நில்லாமல் அதிவிரைவாக அம்மரத்தின் மீது ஓட்டமும் தாவலுமாகச் சென்று, அக்கரையை அடைந்தான். மறுகணம் புதர்களும் மரங்களும் அடர்ந்த காட்டில் மறைந்துவிட்டான். பழுவேட்டரையர் அவன் மிரண்டு தாவி ஓடுவதைக் கண்கொட்டா வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். காட்டில் அவன் மறைந்ததும், சமயம் நேர்ந்தபோது அவனைப் பிடிக்காமல் தாம் விட்டுவிட்டது தவறோ என்ற ஐயம் அவரைப் பற்றிக் கொண்டது. உடனே, அவரும் குதித்து எழுந்து ஓடினார். தேவராளனைப் போல் அவ்வளவு வேகமாக மரப் பாலத்தின் பேரில் அவரால் தாவிச் செல்ல முடியவில்லை. மெள்ள மெள்ளத் தட்டுத் தடுமாறிக் கிளைகளை ஆங்காங்கு பிடித்துக் கொண்டுதான் போக வேண்டியிருந்தது.
அக்கரையை அடைந்ததும், காட்டுப் பிரதேசத்துக்குள்ளே ஒற்றையடிப் பாதை ஒன்று போவது தெரிந்தது. அதை உற்றுப் பார்த்தார். சேற்றில் புதிதாகக் காலடிகள் பதிந்திருந்தது தெரிந்தது. அந்த வழியிலேதான் தேவராளன் போயிருக்க வேண்டுமென்று தீர்மானித்து மேலே விரைவாக நடந்தார்.
அது முன்னிலாக் காலமானாலும், வானத்தில் இன்னும் மேகங்கள் சூழ்ந்திருந்தபடியால் நல்ல இருட்டாகவே இருந்தது. காட்டுப் பிரதேசத்தில் என்னவெல்லாமோ சத்தங்கள் கேட்டன. புயலிலும் மழையிலும் அடிபட்டுக் கஷ்டங்களுக்கு உள்ளாகியிருந்த காட்டில் வாழும் ஜீவராசிகள் கணக்கற்றவை மழை நின்றதினால் ஏற்பட்ட மிக்ழ்ச்சியைத் தெரிவித்துக் குரல் கொடுத்துக்கொண்டு அங்குமிங்கும் சஞ்சரித்தன.
ஒற்றையடிப் பாதை சிறிது தூரம் போய் நின்று விட்டது. ஆனால் பழுவேட்டரையர் அத்துடன் நின்றுவிட விரும்பவில்லை. அன்றிரவு முழுவதும் அந்தக் காட்டில் அலைந்து திரியும்படி நேர்ந்தாலும் அந்தத் தேவராளனையும், அவன் தேடிப் போகும் மந்திரவாதி ரவிதாஸனையும் பிடித்தே தீருவது என்று தீர்மானித்துக் கொண்டு, காட்டுப் புதர்களில் வழிகண்ட இடத்தில் நுழைந்து சென்றார். ஒரு ஜாம நேரம் காட்டுக்குள் அலைந்த பிறகு சற்றுத் தூரத்தில் வெளிச்சம் ஒன்று தெரிவதைப் பார்த்தார். அந்த வெளிச்சம் நின்ற இடத்தில் நில்லாமல் போய்க் கொண்டிருந்தபடியால் அது வழி கண்டுபிடிப்பதற்காக யாரோ கையில் எடுத்துச் செல்லும் சுளுந்தின் வெளிச்சமாகவே இருக்க வேண்டும் என்பது தெரிந்தது.
அந்த வெளிச்சத்தைக் குறி வைத்துக் கொண்டு வெகு விரைவாக நடந்தார். வெளிச்சத்தை நெருங்கிச் சென்று கொண்டிருந்தார். கடைசியாக, அந்தச் சுளுந்து வெளிச்சம் காட்டின் நடுவே ஒரு பாழடைந்த மண்டபத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதுபோல் காட்டிவிட்டு உடனே மறைந்தது. அந்த மண்டபம் திருப்புறம்பியத்திலுள்ள பிருதிவீபதியின் பள்ளிப்படைக் கோவில்தான் என்பதைப் பழுவேட்டரையர் பார்த்த உடனே தெரிந்துகொண்டார். பள்ளிப்படையை நெருங்கி ஒரு பக்கத்துச் சுவர் ஓரமாக நின்று காது கொடுத்துக் கேட்டார்.
ஆமாம்; அவர் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. இரண்டு பேர் பேசிகொண்டிருந்தது கேட்டது. உரத்த குரலில் பேசிய படியால் பேசியது தெளிவாகக் கேட்டது.
"மந்திரவாதி! உன்னை எத்தனை நேரமாகத் தேடிக் கொண்டிருக்கிறேன், தெரியுமா? நீ ஒருவேளை வர முடியாமற் போய் விட்டதோ, அல்லது உன்னையுந்தான் யமன் கொண்டு போய் விட்டானோ என்று பயந்து போனேன்!" என்றான் தேவராளன்.
மந்திரவாதி ரவிதாஸன் கடகட வென்று சிரித்தான். "யமன் என்னிடம் ஏன் வருகிறான்? சுந்தர சோழனையும், அவனுடைய இரண்டு பிள்ளைகளையும்தான் யமன் நெருங்கிக் கொண்டிருக்கிறான். நாளைய தினம் அவர்களுடைய வாழ்நாள் முடிந்துவிடும்!" என்றான் மந்திரவாதி.
அச்சமயம் வானத்தையும் பூமியையும் பிரகாசப்படுத்திக் கொண்டு மின்னல் ஒன்று மின்னியது.