உள்ளடக்கத்துக்குச் செல்

பொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/கருத்திருமன் கதை

விக்கிமூலம் இலிருந்து

தியாக சிகரம் - அத்தியாயம் 58

[தொகு]

கருத்திருமன் கதை

கரிய திருமால் என்னும் கருத்திருமன் கோடிக்கரைக்குச் சிறிது வடக்கே கடற்கரை ஓரத்தில் உள்ள தோப்புத்துறை என்னும் ஊரினன். அங்கிருந்து ஈழத் தீவுக்குப் படகு செலுத்திப் பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தான். சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் அவன் ஒரு முறை ஈழத்திலிருந்து தோப்புத்துறைக்கு வந்துகொண்டிருந்த போது புயல் அடித்துக் கடல் கொந்தளித்தது. படகு கவிழாமல் கரையில் கொண்டு வருவதற்கு மிகவும் பிரயாசைப்பட்டான். கோடிக்கரைக் கலங்கரை விளக்கின் அருகில் வந்து அவன் கரையை நெருங்கிய போது ஒரு பெண் அக்கொந்தளித்த கடலில் மிதப்பதைக் கண்டான். அவள் பேரில் இரக்கம் கொண்டு படகில் ஏற்றிப் போட்டுக் கொண்டான். அவள் அப்பொழுது உணர்வற்ற நிலையில் இருந்தாள். உயிர் இருக்கிறதா, இல்லையா என்று கூடக் கண்டுபிடிக்க இயலவில்லை. அங்கேயே படகைக் கரையேற்றப் பார்த்தும் முடியவில்லை. காற்று அடித்த திசையில் படகைச் செலுத்திக் கொண்டு போய்க் கடைசியில் திருமறைக்காடு என்னும் ஊர் அருகில் கரையை அடைந்தான். உணர்வற்ற அந்தப் பெண்ணைக் கரையில் தூக்கிக் கொண்டு வந்து போட்டுக் கவலையுடன் கவனித்துக் கொண்டிருந்தபோது குதிரைகள் மேலேறிச் சில பெரிய மனிதர்கள் அப்பக்கம் வந்தார்கள். ஆனால் அவள் பேசவும் இல்லை. மற்றவர்கள் பேசுவது அவன் காதில் விழுந்ததாகவும் தெரியவில்லை. "இவள் பிறவி ஊமைச் செவிடு" என்று அவர்களில் ஒருவர் கூறினார். அவர்களின் தலைவராகத் தோன்றியவர் கருத்திருமனைத் தனியே அழைத்து ஒரு விந்தையான செய்தியைக் கூறினார். புயல் அடங்கியதும் அந்தப் பெண்ணை ஈழ நாட்டுக்கு அழைத்துச் சென்று அந்த நாட்டிலோ அல்லது அருகில் உள்ள தீவு ஒன்றிலோ விட்டுவிட்டு வந்துவிடவேண்டும் என்றும், அதற்காகப் பெரும் பணம் தருவதாகவும் அவர் சொன்னார். அதன்படியே கருத்திருமன் ஒப்புக்கொண்டு பணமும் பெற்றுக் கொண்டான். கடலில் கொந்தளிப்பு அடங்கியதும் அவளைப் படகில் ஏற்றி அழைத்துச் சென்றான். கடல் நடுவில் கட்டை ஒன்றைப் பிடித்துக் கொண்டு ஒருவன் மிதப்பதைக் கண்டான். மிகவும் களைத்துப் போயிருந்த அவனையும் படகில் ஏற்றிக் கொண்டான். முதலில் அந்தப் பெண் புதிய மனிதனைக் கண்டு மிரண்டாள். பிறகு, அவனைக் கவனியாமலிருந்தாள். இருவரையும் அழைத்துக் கொண்டுபோய் அவன் ஈழ நாட்டுக்கு அருகில் உள்ள ஒரு தீவில் இறக்கிவிட்டான்.

அந்தத் தீவில் ஒரு பெரியவர் இருந்தார்; அவர் இந்தப் பெண்ணைத் தமது மகள் என்று கூறினார். முன்னமே அவள் ஊமை என்றும், இப்போது தம்மைக்கூட அவள் அறிந்து கொள்ளவில்லையென்றும் கூறினார். பிறகு, அவளைக் கடலிலிருந்து காப்பாற்றியதைக் கருத்திருமன் சொன்னான்.

நடுக்கடலில் படகில் ஏறிய மனிதர் கருத்திருமனிடம் ஓர் ஓலை கொடுத்து அதை இலங்கை அரசனிடம் கொண்டு போய்க் கொடுக்கும்படி அனுப்பினார். அதிலிருந்து அவர் ரொம்பப் பெரிய மனிதராயிருக்க வேண்டுமென்று கருத்திருமன் தீர்மானித்துக் கொண்டான். இலங்கை மன்னனிடம் ஓலையைக் கொடுத்த பிறகு அவனுடைய பேச்சிலிருந்து தன்னால் காப்பாற்றப்பட்டவர் பாண்டிய நாட்டு அரசர் என்பதைத் தெரிந்து கொண்டான். பாண்டிய மன்னரை அழைத்து வருவதற்கு இலங்கை அரசர் பரிவாரங்களை அனுப்பினார். கருத்திருமன் மிகவும் களைத்திருந்தபடியால் அவர்களுடன் போகவில்லை. பாண்டிய அரசர் சில தினங்களுக்குப் பிறகு இலங்கை அரசரின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தார். இரு மன்னர்களும் சேர்ந்து இலங்கையின் தென்கோடியில் மலைகள் சூழ்ந்திருந்த ரோஹண நாட்டுக்குச் சென்றார்கள். அங்கே சில தினங்கள் தங்கியிருந்தார்கள். கருத்திருமன் பேரில் பிரியம் கொண்ட பாண்டிய மன்னர் அவனையும் தம்முடன் அழைத்துப் போனார். ரோஹண நாட்டில் பல இடங்களையும் இலங்கை அரசர் பாண்டிய மன்னருக்குக் காட்டினார். கடைசியாக, யாரும் எளிதில் நெருங்க முடியாத ஒரு பள்ளத்தாக்கிற்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரு மலைக் குகையில் அளவில்லாத பொற் காசுகள், நவரத்தினங்கள், விலை மதிப்பில்லாத ஆபரணங்கள் முதலியவை வைக்கப்பட்டிருந்தன. அவற்றையெல்லாம் பார்வையிட்ட பிறகு, இலங்கை அரசர் ஒரு தங்கப் பெட்டியை எடுத்துத் திறந்து காட்டினார். அதற்குள்ளே ஜாஜ்வல்யமாகப் பிரகாசித்த மணி மகுடம் ஒன்றும், இரத்தின ஹாரம் ஒன்றும் இருந்தன. அரசர்களுடைய சம்பாஷணையிலிருந்து அந்தக் கிரீடம் பாண்டிய வம்சத்து அரசர்களின் புராதனமான கிரீடம் என்றும், இந்த இரத்தின ஹாரம் பாண்டிய குல முதல்வனுக்குத் தேவேந்திரன் வழங்கியதாகச் சொல்லப்பட்ட ஹாரம் என்றும் தெரிந்து கொண்டான். அவற்றை எடுத்துக்கொண்டு போகும்படி இலங்கை அரசர் பாண்டியனை வற்புறுத்தினார். பாண்டிய மன்னர் மறுத்து விட்டார். சோழர்களை அடியோடு முறியடித்துவிட்டு மதுரையில் தாம் முடி சூடிக்கொள்ளும் நாள் வரும்போது, இலங்கையின் அரசரே அவற்றை எடுத்துக் கொண்டு மதுரைக்கு வந்து உலகம் அறியத் தம்மிடம் அளிக்க வேண்டும் என்று கூறினார்.

பிறகு, பாண்டிய அரசர் கருத்திருமனிடம் அவன் எடுத்துப் போகக் கூடிய அளவு பொற்காசுகளைக் கொடுத்து, அந்த ஊமைப் பெண்ணைப் பத்திரமாகப் பராமரிக்க ஏற்பாடு செய்துவிட்டுத் திரும்பப் பாண்டிய நாட்டில் வந்து தம்முடன் சேர்ந்து கொள்ளும்படி அனுப்பி வைத்தார்.

கருத்திருமன் பூதத்தீவுக்குச் சென்றபோது அங்கே அந்தப் பெண்ணைக் காணவில்லை. அவளுடைய தகப்பனையும் காணவில்லை. இருவரையும் தேடிக் கொண்டு கோடிக்கரைக்குப் போனான். அங்கே அந்த ஊமைப் பெண்ணைக் கண்டான். ஆனால் அவள் அவனைத் தெரிந்துகொள்ளவில்லை. அவளுடைய வீட்டாரிடமிருந்து சில விவரங்களைத் தெரிந்து கொண்டான். அவளுடைய தகப்பனார் உடல் நலிவுற்றபடியால் அவளை அழைத்துக் கொண்டு வந்து இங்கே விட்டுவிட்டு உயிர் நீத்தார். கலங்கரை விளக்கின் காவலன் அவளுடைய சகோதரர் என்று தெரிந்தது. முதலில் அவளுக்குச் சகோதரன் - சகோதரி யாரையும் நினைவிருக்கவில்லை. மறுபடியும் ஒருதடவை கால் தவறிக் கடலில் விழுந்து காப்பாற்றப்பட்ட பிறகு அவர்களையெல்லாம் அவளுக்கு நினைவு வந்தது. அவள் கர்ப்பவதியாயிருக்கிறாள் என்பதை மற்றவர்கள் தெரிந்து கொண்டார்கள். அதை அவளும் உணர்ந்து பெரும் பீதியில் ஆழ்ந்தாள். கோடிக்கரைக் குழகர் கோவிலுக்கு அடிக்கடி சென்று அங்கே கைங்கரியம் செய்து கொண்டிருந்தாள். கருத்திருமன் எவ்வளவுதான் முயன்றும் அவனை அவள் இப்போது கண்டு கொள்ளவில்லை.

கோடிக்கரையில் இருந்தபோது, அந்த ஊமைப் பெண்ணின் தங்கையை அவன் சந்தித்தான். அவளும் ஊமை என்று அறிந்து அவள் பேரில் பரிதாபம் கொண்டான். அவளை மணந்து கொண்டு வாழவும் எண்ணினான். அதற்கு முன்னால் பாண்டிய மன்னரிடம் போய்த் தகவல் தெரிவித்துவிட்டு வர விரும்பினான். இச்சமயத்தில் சோழ சக்கரவர்த்தி கண்டராதித்தரின் பட்டத்து அரசியும், சிவ பக்தியில் சிறந்தவருமான செம்பியன் மாதேவி கோடிக்கரைக் குழகர் கோவிலுக்குச் சுவாமி தரிசனத்துக்கு வந்தார். அங்கே அந்த ஊமைப் பெண் மந்தாகினியைக் கண்டு அவளைத் தம்முடன் அழைத்துச் சென்றார். அவளுடன் அவள் தங்கை வாணியும் போய்விட்டாள்.

கருத்திருமன் பாண்டிய நாடு சென்றான். அங்கே பாண்டிய மன்னர் போர்க்களம் சென்றிருப்பதாக அறிந்தான். போர்க்களத்தில் சென்று பாண்டிய மன்னரைச் சந்தித்தபோது, அவர் அவனை இலங்கைக்கு மீண்டும் போய் இலங்கை அரசனிடம் ஓலை கொடுத்து விட்டு வரும்படி கூறினார். திரும்பி வரும்போது மறுபடியும் அந்த ஊமைப் பெண்ணை அழைத்து வருவதற்கு ஒரு முயற்சி செய்யும்படியும் தெரிவித்தார்.

கருத்திருமன் இலங்கையிலிருந்து திரும்பிப் பழையாறைக்குச் சென்றான். வாணியின் நினைவு அவன் மனத்தை விட்டு அகலவில்லை. முக்கியமாக அவளைச் சந்திக்கும் ஆசையினால் அவன் பழையாறைக்குப் போனான். ஆனால் அங்கே அவளைக் கண்டபோது அவன் திடுக்கிட்டுத் திகைத்துப் பிரமித்துப் பயங்கரமடையும்படி நேர்ந்தது. அருணோதய நேரத்தில் அவன் அரசலாற்றங்கரை வழியாகப் பழையாறையை நெருங்கிக் கொண்டிருந்தபோது ஆற்றங்கரை ஓரத்தில் பெண் ஒருத்தி குனிந்து குழி தோண்டிக் கொண்டிருப்பதைக் கண்டான். அது கூட அவனுக்கு அவ்வளவு வியப்பளிக்கவில்லை. அவளுக்குப் பக்கத்தில் துணி மூட்டை ஒன்று கிடந்தது. அதற்குள்ளேயிருந்து ஒரு மிக மெல்லிய குரல், சின்னஞ் சிறு குழந்தையின் அழுகைக் குரல் கேட்டது.

எந்தச் சண்டாளப் பாதகி உயிரோடு குழந்தையைப் புதைப்பதற்கு ஏற்பாடு செய்கிறாள் என்ற ஆத்திர அருவருப்புடன் அவன் அருகில் நெருங்கியபோது, குழி தோண்டிய பெண் நிமிர்ந்தாள். அவள்தான் வாணி என்று கருத்திருமன் அறிந்து கொண்டான்.

"தம்பி எனக்கு அப்போது எப்படி இருந்திருக்கும்? நீயே ஊகித்துக் கொள்!" என்றான் கரிய திருமால்.

"அதை ஊகித்துக் கொள்கிறேன். அப்புறம் கதையைச் சொல்!" என்றான் வந்தியத்தேவன்.

"அப்புறம் நடந்ததைச் சொல்ல இயலாது. அரச குலத்தைச் சேர்ந்தவர்கள் காதிலேதான் சொல்லலாம்! நான் மட்டும் அப்போது பழையாறைக்குப் போயிராவிட்டால் எனக்குப் பின்னால் நேர்ந்த கஷ்டங்கள் ஒன்றும் நேராமற் போயிருக்கும்!" என்றான் கருத்திருமன்.

"அப்படியானால், கிளம்பு! நேரே அரச குலத்தைச் சேர்ந்தவர்களிடம் போய்ச் சொல்லலாம்!" என்று கூறி நகைத்துக் கொண்டே வந்தியத்தேவன் அங்கிருந்து எழுந்தான்.

கருத்திருமனையும் அழைத்துக் கொண்டு பொக்கிஷ நிலவறையை அணுகினான். அங்கே அப்போது யாரும் இல்லை. நிலவறைக் கதவு பெரிய பூட்டினால் பூட்டப்பட்டிருந்தது. ஆனால் தெரியாதவர்கள் கண்டுபிடிக்க முடியாதபடி அமைக்கப்பட்டிருந்த அதன் உட்கதவை வந்தியத்தேவன் அழுத்தியதும் திறந்து கொண்டது. இருவரும் உள்ளே புகுந்து உட்புறம் தாளிட்டுக் கொண்டார்கள்.

வழியில் பொன்னும், மணியும், முத்தும், நவரத்தினங்களும் குவித்து வைத்திருந்த இடத்தில் வந்தியத்தேவன் பிரவேசித்தான். கருத்திருமகனிடம், "உன்னுடைய ரோஹண நாட்டு மலைக் குகையில் இவ்வளவு செல்வங்கள் உண்டா?" என்று கேட்டான்.

"இதைவிட நூறு மடங்கு உண்டு!" என்று சொன்னான் கரியதிருமால்.

வந்தியத்தேவன் சில தங்கக் காசுகளை எடுத்து மடியில் வைத்துக் கட்டிக் கொண்டதும் மறுபடியும் கிளம்பினார்கள். நிலவறைப் பாதை வழியாக வந்தியத்தேவன் முன்னால் சென்றான். மதில் சுவரில் அமைந்திருந்த இரகசியக் கதவையும் திறந்தான். அங்கே இப்போது காவலன் யாரும் இருக்கவில்லை. வெளியிலே முதலில் தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்தான். வடவாற்றில் வெள்ளம் இரு கரையும் தொட்டுக் கொண்டு சென்றது. வெகு தூரத்தில் தீவர்த்தி வெளிச்சம் தெரிந்தது. அந்த இடத்தில் அருகில் யாரும் இல்லை என்று தெரிந்து கொண்ட பிறகு வந்தியத்தேவன் வெளியே வந்தான். கருத்திருமனும் வந்த பிறகு கதவைச் சாத்தினான். வடவாற்றை எப்படிக் கடப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தபோது பக்கத்தில் சாய்ந்திருந்த மரத்தடியில் படகு ஒன்று மரத்தின் வேர்களில் மாட்டிக் கொண்டு நின்றது தெரிந்தது.