பொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/கோஷம் எழுந்தது!

விக்கிமூலம் இலிருந்து

தியாக சிகரம் - அத்தியாயம் 28[தொகு]

கோஷம் எழுந்தது!

இளவரசர் அருள்மொழிவர்மரின் அந்த இளம் பொன் முகத்தில் என்ன மாய மந்திர சக்திதான் இருந்ததோ, தெரியாது. இத்தனைக்கும் இளவரசர் அச்சமயம் முகத்தைச் சுளுக்கிக் கொள்ளவும் இல்லை. கோபத்தின் அறிகுறியும் சிறிது கூடக் காட்டவில்லை. வெண்ணெய் திருடி அகப்பட்டுக் கொண்ட கண்ணனைப் போல் குற்றத்தை ஒப்புக் கொள்ளும் பாவனை முகத்தில் தோன்றும்படி நின்றார். சின்னப் பழுவேட்டரையரிடம் குற்றம் கண்டுபிடித்துக் கடிந்து கொள்ளும் அறிகுறியோ, அவரை எதிர்த்துப் போராடும் நோக்கமோ அணுவளவும் அவர் முகத்தில் காணப்படவில்லை.

ஆயினும், அஞ்சா நெஞ்சமும், அளவிலா மனோதிடமும் வாய்ந்தவரான காலாந்தக கண்டரின் கை கால்கள் அந்தக் கணத்தில் வெடவெடத்து விட்டன. முகத்தில் வியர்வை அரும்பியது. இன்னது செய்கிறோம் என்றுகூட அறியாமல் இரு கைகளையும் கூப்பி வணக்கம் செலுத்தியவாறு, "பொன்னியின் செல்வா! ஈழங்கொண்ட வீரா! சோழ நாட்டின் தவப்புதல்வா! இது என்ன கோலம்? இது என்ன காரியம்? இவ்விதம் தண்டிப்பதற்கு என்ன குற்றம் செய்தேன் நான்?... சற்றுமுன் நான் செய்த பிழையைப் பொறுத்துக் கருணை புரிய வேண்டும். 'மன்னித்தேன்' என்று அருள்வாக்குத் தரவேண்டும். கண்ணிருந்து பாராத குருடனாகி விட்டேன்..." என்று நாத் தழுதழுக்கக் குரல் நடுங்கக் கூறினார்.

மேலும் இதே முறையில் பேசப் போனவரை இளவரசர் தடுத்து, "தளபதி! இது என்ன? தாங்களாவது, குற்றம் செய்யவாவது? ஒன்றும் அறியாது இந்தச் சிறுவன் தங்களை மன்னிப்பதாவது?" என்றார்.

"தங்களைப் பிடித்து நிறுத்திய இந்தக் கையை வெட்டினாலும் போதிய தண்டனை ஆகாது. 'அடா' என்று அழைத்த என் நாவை அறுத்துப் போட்டாலும் போதாது...."

"தங்கள் வார்த்தைகள் என் காதில் நாராசமாக விழுகின்றன. போதும், நிறுத்துங்கள்! தங்கள் பொறுப்பை நிறைவேற்றுவதற்காகத் தங்கள் கடமையைச் செய்தீர்கள். அதில் குற்றம் என்ன? தவறு என்னுடையது. நான் இந்த வேடத்தில் யானைப்பாகனாக வருவேன் என்று..."

"நான் எதிர்பார்க்கவே இல்லைதான். இப்படித் தாங்கள் செய்யலாமா? எதற்காக? சோழ நாட்டின் மகா வீரரை இப்படியா நான் வரவேற்றிருக்க வேண்டும்? ஆசார உபசாரங்களுடன் முன் வாசலில் வந்து காத்திருந்து, வெற்றி முரசுகள் எட்டுத் திக்கும் அதிரும்படி முழங்க வரவேற்றிருக்க மாட்டேனா?..."

"தாங்கள் அப்படிச் செய்வீர்கள் என்று அறிந்துதான் நான் இந்த வேஷத்தில் வந்தேன். அதற்கெல்லாம் இது சரியான நேரமல்ல. தங்களுக்குத் தெரியாதா? சதிகாரர்களின் தீய முயற்சிகளைப் பற்றிச் சற்றுமுன் கொடும்பாளூர் இளவரசி கூறினாள் அல்லவா? அது உண்மையாக இருக்கலாமென்றே எனக்குத் தோன்றுகிறது..."

"இளவரசே! என்னையும் அந்தப் பாண்டியச் சதிகாரர்களுடன் சேர்த்து விட்டீர்களா?..."

"கடவுளே! என் தந்தை சக்கரவர்த்தியைப் பாதுகாப்பதற்குத் தாங்கள் செய்திருக்கும் ஏற்பாடுகளைப் பார்த்து மனதிற்குள் மகிழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறேன். முதலில் என் தந்தையைப் பார்த்து விட்டு, பிறகு..."

"ஐயா சக்கரவர்த்தியைத் தாங்கள் பார்க்கக் கூடாதென்று நான் தடுத்து விடுவேன் என்று நினைத்தீர்களா? அத்தகைய பாவி நான் என்று யாரேனும் தங்களுக்குச் சொல்லியிருந்தால்...."

"ஒருநாளும் நான் நம்பியிருக்க மாட்டேன், தளபதி!"

"பின் ஏன் இந்த வேஷம்?"

"வேறு முறையில் நான் கோட்டைக்குள் வந்திருக்க முடியுமா, யோசியுங்கள்! கோட்டையைச் சுற்றி தென்திசைச் சேனைகள் வந்து சூழ்ந்திருக்கின்றன. பெரிய வேளாரும் வந்திருக்கிறார் எதற்காக வந்திருக்கிறார் என்று தங்களுக்குத் தெரிந்திருக்கும்...."

"கோட்டைக் கதவுகளை நான் மூடச் செய்தது நியாயமே அல்லவா? அதில் ஏதேனும் குற்றம் உண்டா?"

"ரொம்ப நியாயம், பெரிய வேளாரின் புத்தி கெட்டுப் போயிருக்கிறது. அவரால் நான் கோட்டைக்குள் வருவது தடைப்படும் என்றுதான் இந்த வேடத்தில் வந்தேன். அவர் மகளையும் அழைத்துக் கொண்டுவந்தேன். நல்ல வேளையாக அவர் என்னைக் கவனிக்கவில்லை. தங்களுடைய கூர்மையான கண்கள் கண்டுபிடித்துவிட்டன..."

"என் கண்கள் மூடிப் போயிருந்தன. அதனால்தான் பார்த்தவுடன் தெரிந்துகொள்ளவில்லை. தங்களை யானைப்பாகன் என்று கூறிய வார்த்தைகளைத் தாங்கள் கருணை கூர்ந்து மன்னித்துவிடுங்கள்..."

"அவ்விதம் சொல்லவேண்டாம். தாங்கள் வேறு, என் தந்தை வேறு என்றே நான் எண்ணவில்லை. என்னைச் சிறைப்படுத்திக் கையோடு கொண்டு வருவதற்காகத் தாங்கள் ஆள்களை அனுப்பியிருந்தீர்கள்..."

"கடவுளே! இது என்ன வார்த்தை? நானா சிறைப்படுத்த ஆட்களை அனுப்பினேன்? தங்களை உடனே பார்க்கவேண்டும் என்பதற்காகத் தங்கள் தந்தை - சக்கரவர்த்தி - அனுப்பினார்..."

"அது எனக்குத் தெரியாதா, தளபதி! இலங்கையில் நான் இருந்தபோது அவர்கள் வந்தார்கள். 'சக்கரவர்த்தியின் கட்டளை அல்ல; பழுவேட்டரையர்களின் கட்டளை" என்று என் அருகில் இருந்தவர்கள் சொன்னார்கள்..."

"எங்கள் விரோதிகள் அப்படிச் சொல்லியிருப்பார்கள்..."

"நான் அவர்களுக்கு 'என் தந்தையின் கட்டளை எப்படியோ, அப்படியே பழுவேட்டரையர்களின் கட்டளையும் என் சிரமேல் கொள்ளத்தக்கது' என்று கூறினேன். கடலையும் புயலையும், மழையையும் வெள்ளத்தையும் தாண்டி வந்தேன். அரண்மனையின் முன் வாசலைத் தாண்டி உள்ளே போனதும் தங்கள் விருப்பத்தைத் தெரிந்து கொள்ளலாம் என்று எண்ணினேன் தங்கள் கட்டளையின்றி தந்தையைப் பார்க்கவும் நான் விரும்பவில்லை..."

"இளவரசே! இன்னும் என்னைச் சோதிக்கிறீர்களா? தங்கள் தந்தையைத் தாங்கள் சந்திப்பதற்கு நான் என்ன கட்டளையிடுவது? தங்களுடன் வரச் சொன்னால் வருகிறேன். இங்கேயே நிற்கச் சொன்னால் நின்று விடுகிறேன்? இளவரசரின் விருப்பமே என் சிரசின்மேல் சூடும் கட்டளை" என்று பணிவுடன் கூறினார் சின்னப் பழுவேட்டரையர்.

"தளபதி தாங்கள் இங்கேயே நிற்க வேண்டித்தான் நேரும் போலிருக்கிறது. அதிக நேரம் நாம் இங்கு நின்று பேசிக்கொண்டிருந்து விட்டோ ம். அதோ பாருங்கள்!" என்றார் இளவரசர்.

சின்னப் பழுவேட்டரையர் திரும்பிப் பார்த்தார். சற்று முன், தூரத்தில் நின்ற அவருடைய ஆட்கள் எல்லாம் நெருங்கி வந்திருப்பதைக் கண்டார். 'அவர்கள் மட்டுமல்ல; அரண்மனை வாசற் காவலர்களும் வந்துவிட்டார்கள். இன்னும் தூரத்திலே நின்ற வேளக்காரப் படையினரிலும் சிலர் பிரிந்து வந்து கொண்டிருந்தார்கள்.

அருகில் வந்துவிட்டவர்கள் அனைவரும் பொன்னியின் செல்வரைக் கண்கொட்டாத ஆரவாரத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சின்னப் பழுவேட்டரையர் திரும்பிப் பார்த்த நேரத்தில் இளவரசரின் திருமுகத்தில் விளக்கு வெளிச்சம் நன்றாக விழுந்து மிகப் பிரகாசமாகத் தெரிந்தது.

வீரர்களில் ஒருவன் "வாழ்க இளவரசர்!" என்றான். "வாழ்க பொன்னியின் செல்வர்!" என்றான் இன்னொருவன். "மகிந்தனைப் புறங்கண்டு ஈழம்கொண்ட வீராதி வீரர் வாழ்க!" என்றான் மற்றொருவன்.

இந்தக் குரல்களைக் கேட்டவுடன் வேளக்காரப் படையினர் அனைவரும் அங்கு விரைந்து வரத் தொடங்கினார்கள். பற்பல குரல்களிலிருந்து "வாழ்க பொன்னியின் செல்வர்!" என்ற வாழ்த்தொலிகள் எழுந்தன.

அரண்மனை வாசலான படியாலும், சின்னப் பழுவேட்டரையர் அங்கிருந்தபடியாலும் அந்த ஒலி மிக மெல்லியதாகத் தான் அப்போது எழுந்தது. இளந்தென்றல் காற்று புதிதாகத் தளிர்த்த அரசமரத்தின் மீது அடிக்குங்கால் ஏற்படும் 'சல சலப்பு'ச் சத்தத்தைப் போலத்தான் கேட்டது. நேரமாக ஆக, நாள் ஆக ஆக, அந்த மெல்லிய ஒலி எப்படி வளர்ந்து வளர்ந்து பெரிதாகி மகா சமுத்திரத்தின் ஆயிரமாயிரம் அலைகளின் ஆரவாரத்தையும் மிஞ்சிய மாபெரும் கோஷமாயிற்று என்பதைப் பின்வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.

"தளபதி! நாம் இங்கே நின்று பேசியது தவறாகப் போயிற்று. அரண்மனைக்குள்ளே பிரவேசிக்கும் வரையில் நான் என்னைத் தெரியப்படுத்திக்கொள்ள விரும்பாததின் காரணம் இப்போது தெரிகிறது அல்லவா?" என்று இளவரசர் கேட்டார்.

"தெரிகிறது, அரசே! நான் இவர்களுக்குச் சமாதானம் சொல்லிவிட்டு வருகிறேன். தாங்கள் தயவு செய்து விரைந்து உள்ளே செல்லுங்கள்!" என்றார் காலாந்தக கண்டர்.