பொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/சாலையில் சந்திப்பு
தியாக சிகரம் - அத்தியாயம் 79
[தொகு]சாலையில் சந்திப்பு
பொன்னியின் செல்வரின் முடிசூட்டு விழா விரைவிலேயே நடைபெறப் போகிறது என்று நாடு நகரமெல்லாம் தெரிந்து போயிருந்தது. மக்கள் ஒரே ஆர்வத்துடன் அந்த வைபவத்தை எதிர் நோக்கியிருந்தார்கள்.
ஆதித்த கரிகாலரின் அகால மரணம், மந்தாகினியின் உயிர்த் தியாகம், பெரிய பழுவேட்டரையரின் சபத நிறைவேற்றம் ஆகிய நிகழ்ச்சிகள் சக்கரவர்த்தியின் உள்ளத்தைப் பெரிதும் துன்புறச் செய்திருந்தன. ஆயினும் இராஜ்ய உரிமை சம்பந்தமான சச்சரவுகள் ஒரு மாதிரி தீர்ந்து போய் அருள்மொழிவர்மருக்கு முடிசூட்டுவதைச் சிற்றரசர் பொதுமக்கள் அனைவரும் ஒருமுகமாக ஆதரித்தது அவருடைய நொந்து போன உள்ளத்துக்கு ஓரளவு ஆறுதல் அளித்து வந்தது.
தை மாதம் பிறந்தவுடனே நல்ல நாள் குறிப்பிட்டுப் பொன்னியின் செல்வரின் தலையில் சாம்ராஜ்ய பாரத்தைச் சுமத்தி விட்டுக் காஞ்சிக்குப் புறப்பட்டுச் செல்லச் சக்கரவர்த்தி முடிவு செய்திருந்தார். அங்கே தமது வீரப் புதல்வன் கரிகாலன் தமக்கென்று நிர்மாணித்த பொன் மாளிகையிலே மிச்சமுள்ள தம் வாழ்நாளைக் கழித்து விடவும் தீர்மானித்திருந்தார். முடிசூட்டு வைபவத்தை அதிக ஆடம்பரமில்லாமல் நடத்தி விட வேண்டும் என்று சுந்தர சோழர் எண்ணியதிலும் வியப்பில்லை அல்லவா?
இந்த விஷயத்தில் அருள்மொழிவர்மரும் பரிபூரணமாகத் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற எண்ணியிருந்தார். ஆகையால் முடிசூட்டு விழா முடியும் வரையில் நாடு நகரங்களில் பொதுமக்களிடையில் அதிகமாகப் போவதில்லை என்று தீர்மானித்திருந்தார். கொள்ளிடத்தின் படகுத் துறையிலிருந்து தஞ்சைக்கு நேர் வழியாகப் போவதென்றால், திருவையாறு நகரின் வழியாகப் போக வேண்டும். அந்த நகருக்குள் சென்றால், மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு ஆரவாரம் செய்வார்கள் என்பது நிச்சயம். ஆகையால், நண்பர்கள் இருவரும் அந்த நகர் வழியாகப் புகாமல், சிறிது மேற்கே ஒதுங்கிச் சென்று காவேரி நதியைக் கடந்தார்கள். குடமுருட்டி நதியை அடைந்ததும், அதன் கரையோடு தஞ்சை ராஜபாட்டையை நோக்கிச் சென்றார்கள்.
ஐந்து நதிகள் அடுத்தடுத்துப் பாயும் அந்த அற்புதமான பிரதேசத்தின் நீர்வளமும் நிலவளமும் மார்கழி மாதத்தில் கண்கொள்ளாக் காட்சியாகத் திகழ்ந்தன. இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு வெள்ளம் ஓடும் காலத்தைக் காட்டிலும், அரை ஆறு இனிய புனலும், அரை ஆறு மணல் திடலுமாகத் தோன்றிய காட்சி வனப்பு மிகுந்ததாயிருந்தது. நதியின் இரு புறங்களிலும், தென்னையும், கமுகும், கதலியும், கரும்பும் செழித்து வளர்ந்திருந்தன. தோப்புக்கள் இல்லாத இடங்களிலெல்லாம் நன்செய் வயல்களில் பொன்னிற நெற்பயிர்கள் செந்நிறக் கதிர்களின் பாரந்தாங்காமல் தலை சாய்ந்து கிடந்தன. இடையிடையே வாவிகளிலும் ஓடைகளிலும் தலை நிமிர்ந்து நின்ற தாமரைகளும், குமுதங்களும், செங்கழு நீர்களும் வர்ணச் சித்திரக் காட்சியாகத் திகழ்ந்தன.
இவற்றையெல்லாம் பார்த்துப் பார்த்து வியந்து கொண்டு வந்த வந்தியத்தேவனை நோக்கி பொன்னியின் செல்வர் "நண்பரே! இவ்வளவு வனப்பும் வளமும் பொருந்திய இடம் இந்த உலகில் வேறு எங்கேனும் இருக்க முடியுமா? இப்படிப்பட்ட நாட்டின் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொள்வது எவ்வளவு பெரிய பாக்கியம்? இந்தப் பாக்கியத்தைச் சில காலத்துக்கு முன்பு வரையில் நான் வேண்டாம் என்று மறுதளித்துக் கொண்டிருந்ததை நினைத்தால் எனக்கே வியப்பாயிருக்கிறது!" என்றார்.
"எனக்கு அதில் வியப்பு ஒன்றுமில்லை, ஐயா! அரச குலத்தவர்களின் சஞ்சல உள்ளத்தைப் பற்றி அடிக்கடி பெரியோர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன்!" என்றான் வந்தியத்தேவன்.
"நீர் ரொம்ப பொல்லாதவர். அதோடு நன்றியும் இல்லாதவர். ஈழ நாட்டுப் போர்ப் படைக்கு உம்மைத் தளபதி ஆக்கியதற்கு இன்னும் நன்றி கூடச் செலுத்தவில்லை. என்னை சஞ்சல புத்தியுள்ளவன் என்று வசை கூறுகிறீர்!"
"சாதாரண மக்கள் விஷயத்தில் வசையாக இருப்பது அரச குலத்தவரிடையில் புகழுக்குக் காரணமாயிருக்கக் கூடும் அல்லவா? இன்றைக்கு ஒருவனுக்கு மரண தண்டனை விதிக்கிறீர்கள். மறுநாள் அவனை மன்னித்துத் தளபதி ஆக்குகிறீர்கள். இத்தகைய சஞ்சல புத்தியினால் அரசர்களுடைய புகழ் அதிகமாகத்தானே செய்யும்? 'ஆகா! நம் மன்னர் எத்தனை கருணை உள்ளவர்!' என்று மக்கள் புகழ்வார்கள் அல்லவா?"
"ஆம், ஆம்! ஆனால் இன்றைக்கு தளபதியாகச் செய்தவனுக்கு, நாளைக்கு மரண தண்டனையும் விதிக்கலாம் அப்போது ஜனங்கள் என்ன சொல்வார்கள்?"
"நடுநிலைமை தவறாமல் நீதி வழங்கும் மன்னர் பெருமான் என்றும், மனு நீதிச் சோழரின் புனர் அவதாரம் என்றும் சொல்லிப் பாராட்டுவார்கள்!"
பொன்னியின் செல்வர் கலகலவென்று சிரித்துவிட்டு, "அப்படியானால், உமக்கு அளித்த வாணகப்பாடி இராஜ்யத்தையும், ஈழத்துச் சேனையின் தளபதி பதவியையும் நான் திரும்பப் பிடுங்கிக் கொண்டால், உமக்கு அதில் அதிசயம் ஒன்றுமே இராதல்லவா?" என்றார்.
"அதிசயப்படவும் மாட்டேன். துயரப்படவும் மாட்டேன். இப்போது கூடத் தாங்கள் என்னை ஈழ நாட்டுக்கு அனுப்புவது எனக்குப் பெரிய தளபதி பதவி தரும் நோக்கத்துடனா அல்லது என்னை இந்த அழகிய சோழ நாட்டில் இருக்கக் கூடாது என்று தேச பிரஷ்டனாக்கும் நோக்கத்துடனா என்பது எனக்குச் சந்தேகமாகவே இருக்கிறது!"
"உண்மையில் இவ்வளவு சாமர்த்தியசாலியான உம்மை எனக்கு முதல் மந்திரியாக்கிக் கொண்டு என் அருகிலேயே வைத்துக்கொள்ளவே எனக்குப் பிரியமாக இருக்கிறது. ஆனால் முதன்மந்திரி அநிருத்தர் உமக்காகத் தமது பதவியை விட்டு விலகிக் கொள்வார் என்று தோன்றவில்லை".
"அது ஒன்றுதான் காரணமாயிருந்தால், நானே முதன்மந்திரி அநிருத்தர் அவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்".
பொன்னியின் செல்வர் நகைத்துவிட்டு, "இல்லை; வேறு காரணமும் இருக்கிறது!" என்றார்.
"அப்படித்தான் நானும் நினைத்தேன்."
"என்ன நினைத்தீர்?"
"தாங்கள் இப்போதெல்லாம் மனத்தில் ஒன்றை வைத்துக் கொண்டு வெளியில் ஒன்று சொல்கிறீர்கள் என்று."
"வல்லத்தரசரே! தங்களுடைய குற்றசாட்டை மெய்ப்பிக்க ஓர் உதாரணம் சொல்ல முடியுமா?"
"நன்றாக முடியும். தங்களுடைய மகுடாபிஷேக வைபவத்துக்குத் தை மாத ஆரம்பத்திலேயே நாள் வைத்திருக்கிறது. அது தங்களுக்கு தெரியும். அப்படியிருக்கும்போது சற்று முன் நம்மைப் பிரிந்து சென்றவர்களிடம், 'நீங்கள் இல்லாமல் என் மகுடாபிஷேகம் நடைபெறாது' என்றீர்கள். அதைப்பற்றி நான் வேறு என்ன நினைப்பது?" என்று கேட்டான்.
பொன்னியின் செல்வர் மறுபடியும் நகைத்துவிட்டு "ஆமாம், முன்னேயெல்லாம் நான் மனத்தில் தோன்றுவதை அப்படியே வெளிப்படையாகச் சொல்வது என்றுதான் வைத்துக் கொண்டிருந்தேன். வந்தியத்தேவரோடு சிநேகமான பிறகு மந்திர தந்திரங்களில் பயிற்சி பெற்று வருகிறேன்!" என்றார்.
"வீணாக எனக்கு புகழ்ச்சி கூறுகிறீர்கள். தங்களுக்குத் தெரியாத மந்திர தந்திரம் உலகில் வேறு என்ன இருக்க முடியும்? யானையின் காதில் ஓதிய மந்திரத்துக்கும், யானைப்பாகன் வேஷம் போட்டு உலகை ஏமாற்றிய தந்திரத்துக்கும் இணையானவை என்ன உண்டு?"
"அப்படியே இருக்கட்டும்! என்னிடமே நீர் இனி மந்திர தந்திரங்களைக் கற்றுக் கொள்ளலாம்."
"அவ்வாறு நான் அதிகமாகக் கற்றுக் கொண்டு விடப் போகிறேனே என்றுதான் என்னை இலங்கைக்கு விரட்டிவிடப் பார்க்கிறீர்களோ?"
"நண்பரே! ஈழ நாட்டுக்குப் போவதில் தங்களுக்கு ஒரு வேளை விருப்பம் இல்லையா, என்ன?"
"யார் சொன்னார்கள், இலங்கைக்கு அப்பால் இன்னும் தூரத்திலுள்ள இடங்களுக்குப் போகும்படி கட்டளையிட்டாலும் புறப்பட ஆயத்தமாயிருக்கிறேன். எவ்வளவு சீக்கிரம் அனுப்புகிறீர்களோ, அவ்வளவுக்கு மகிழ்ச்சி அடைவேன்!"
"என்னை விட்டுப் பிரிந்து போவதில் அவ்வளவு மகிழ்ச்சியா தங்களுக்கு?"
"ஆம், ஐயா! பேரரசர்களிடமிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறோமோ, அவ்வளவுக்கு நல்லது என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். தூரத்தில் இருந்தால், அரசர்களுடைய சிநேகத்தை இழந்து விடாமல் காப்பாற்றிக் கொள்ளலாம்."
"அப்படியானால் தாங்கள் ஏமாற்றத்துக்கு உள்ளாக நேரிடும்..."
"எவ்வளவு தூரம் போனாலும் தங்கள் சிநேகத்தை நீடித்துக் காப்பாற்றிக் கொள்ள முடியாது என்கிறீர்களா?"
"இல்லை, இல்லை, அதிக காலம் என்னைத் தாங்கள் பிரிந்திருக்க முடியாது என்று சொல்கிறேன். சில தினங்களுக்கெல்லாம் நானும் ஈழத்துக்கு வந்து தங்களுடன் சேர்ந்து கொள்வதாக உத்தேசித்திருக்கிறேன். தங்களை உடன் அழைத்துக் கொண்டு கடல்களைக் கடந்து அப்பாலுள்ள தீவாந்தரங்களுக்கெல்லாம் போகத் திட்டமிட்டிருக்கிறேன். நம்முடன் சமுத்திரக் குமாரியையும் அழைத்துப் போக முடியவில்லையே என்றுதான் வருத்தமாயிருக்கிறது..."
"ஐயா! என்னுடன் சேர்ந்து தாங்கள் மந்திர தந்திரங்கள் கற்றுக் கொண்டீர்கள். தங்களுடன் சிநேகமானதிலிருந்து நான் உண்மையைப் பேசுவது என்று விரதம் எடுத்துக் கொண்டேன். இப்போது என்னுடைய மனத்தில் உள்ளதைத் தங்களிடம் சொல்லட்டுமா?"
"தாராளமாகச் சொல்லுங்கள்!"
"என் நண்பர் சேந்தன் அமுதனாரிடமிருந்து, தங்கள் சித்தப்பா மதுராந்தகத்தேவரிடமிருந்து சோழ சாம்ராஜ்யத்தை தாங்கள் எடுத்துக் கொள்கிறீர்கள். அதற்கு ஒரு மாதிரி நியாயம் உண்டு. தாங்களே முடிசூட வேண்டும் என்பது மக்களின் விருப்பம் என்று காரணம் காட்டலாம். ஆனால் அவரிடமிருந்து பூங்குழலியை அபகரித்திருந்தால், அது போன்ற பெரும் துரோகச் செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. அதற்கு நியாயமே சொல்ல முடியாது. சமுத்திரகுமாரி இப்போது மதுராந்தகத்தேவரின் தர்ம பத்தினி என்பதைத் தாங்கள் நினைவு வைத்துக் கொள்ளுங்கள்!" என்றான் வந்தியத்தேவன்.
பொன்னியின் செல்வர் கலகலவென்று சிரித்து விட்டு, "என்னைத் தசகண்ட இராவணனோடு சேர்த்து விடுவீர்கள் போலிருக்கிறதே!" என்றார்.
பின்னர், "தங்களுடைய நண்பருக்குப் பரிந்து தாங்கள் பேசுவது நியாயந்தான்! ஆனால், பூங்குழலியின் நிலைமை என்ன? அவள் என் சித்தப்பாவை மனமுவந்து கல்யாணம் செய்து கொண்டாளா?" என்று கேட்டார் அருள்மொழிவர்மர்.
"அதற்கு என்ன சந்தேகம்? கோமகனே! தாங்கள் இந்தச் சோழ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாகலாம். இந்தப் பூமண்டலம் முழுவதையும் வென்று ஒரு குடை நிழலில் கொண்டு வந்து ஆட்சி புரியலாம். ஆனால் பூங்குழலி அம்மையை மட்டும் அவருடைய விருப்பத்திற்கு விரோதமாக எந்தக் காரியமும் செய்யும்படி கட்டாயப்படுத்த முடியாது. செம்பியன்மாதேவியின் செல்வப்புதல்வரிடம் பூங்குழலி அம்மை கொண்டிருந்த அன்பின் ஆழத்தை நான் அறிந்துகொள்ளும் பேறு பெற்றேன். அதற்கு இணையான அன்பை இன்னும் ஓரிடத்திலே தான் கண்டிருக்கிறேன்!"
"அது எங்கே கண்டீர்கள்? என்னிடம் அதைப் பற்றிச் சொல்லலாம் என்றால், சொல்லுங்கள்!"
"கொடும்பாளூர் இளவரசி வானதியிடந்தான் கண்டேன். அத்தகைய அன்பை வேறு எங்கே காணமுடியும்?"
"பொய்! பொய்! உண்மை பேசும் விவரத்தை அதற்குள்ளே மறந்து விட்டீரோ? மனத்தில் ஒன்றை ஒளித்து வைத்துக் கொண்டு, வெளியில் ஒன்றைத் திரித்துச் சொல்லுகிறீரே?"
"இல்லவே இல்லை, ஐயா! மனத்தில் எண்ணியதைத்தான் சொல்கிறேன்!"
"வேறு எங்கேயும் அத்தகைய காதலை நீர் கண்டதில்லையா?"
"இல்லை என்றுதான் சொல்கிறேனே?"
"அடே பாதகா! இரக்கமற்ற அரக்கனே! உனக்காக ஒரு பெண் தன் உயிரைத் தியாகம் செய்ய முன் வந்து மதியை இழந்து பிச்சியாகியிருக்கிறாள்! அவளுடைய காதல் பெரியதாகத் தோன்றவில்லையா?" என்று பொன்னியின் செல்வர் உண்மையான கோபத்துடன் கேட்டார்.
வந்தியத்தேவன் சிறிது நேரம் வரை மௌனமாக இருந்தான். பின்னர், "ஐயா! தாங்கள் காரண காரியங்களை மாற்றிச் சொல்கிறீர்கள். மணிமேகலையிடம் எனக்கு இரக்கம் இல்லாமற் போகவில்லை. அவளை நினைத்துக் கண்ணீர் வடிக்கிறேன். ஆனால் அவள் 'பிச்சி'யாகப் போனதற்குக் காரணம் நான் அல்ல! அவளுடைய சகோதரன் கந்தமாறன்! மேலும் நாங்கள் இருவருமே அந்தப் பெண்ணுக்கு இறந்தவர்களாகிவிட்டோம். இனி அதைப் பற்றிப் பேசி என்ன பயன்?" என்றான்.
"நான் சற்றுமுன் கோபமாகப் பேசியதற்காக வருத்தப்படுகிறேன்..." என்று பொன்னியின் செல்வர் ஆரம்பித்தார்.
"எனக்கு அதில் வருத்தமும் இல்லை, வியப்புமில்லை. இம்மாதிரி திடீர்க் கோபத்தை எதிர் நோக்கித்தான் சீக்கிரமே இலங்கைக்குப் புறப்பட விரும்புவதாகச் சொன்னேன்."
"தங்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு இன்னொரு காரணமும் உண்டு என்று சொன்னேன் அல்லவா?"
"ஆம், பிரபு!"
"சில காலம் தாங்கள் தூரதேசத்தில் இருந்துவிட்டுத் திரும்பி வந்தால், ஒருவேளை தங்களை மணிமேகலை அடையாளம் கண்டு கொள்ளலாம் என்று என் தமக்கையார் கருதுகிறார்!"
"தெரிந்து கொண்டேன், ஐயா! என்னைத் தூர தேசத்துக்கு அனுப்புவதில் தங்களைவிட இளைய பிராட்டிக்கு அதிக சிரத்தை இருப்பதைத் தெரிந்து கொண்டேன்! நாம் யாரைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோமோ, அவர்களே அதோ வருகிறார்கள்!" என்று வந்தியத்தேவன் சுட்டிக்காட்டினான்.
குடமுருட்டி நதிக்கரையோடு வந்த அந்த நண்பர்கள் இருவரும் அச்சமயம் திருவையாற்றிலிருந்து தஞ்சாவூர் போகும் இராஜபாட்டையை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த இராஜபாட்டையில் முன்னும் பின்னும் பரிவாரங்கள் புடைசூழப் பல்லக்கு ஒன்று வந்து கொண்டிருந்தது. அதில் குந்தவை தேவியும், கொடும்பாளூர் இளவரசியும் வீற்றிருந்தார்கள். குதிரைகள் மீது வந்த நண்பர்கள் இருவரையும் பார்த்ததும் அப்பெண்மணிகளின் கண்கள் வியப்பினால் விரிந்தன. அவர்களுடைய முகங்கள் மகிழ்ச்சியால் மலர்ந்தன.