பொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/நந்தி முழுகியது
தியாக சிகரம் - அத்தியாயம் 4
[தொகு]நந்தி முழுகியது
படகு கால்வாயில் போய்க் கொண்டிருந்த போது இளவரசர் நிமிஷத்துக்கு நிமிஷம் கால்வாயின் நீர்மட்டம் அதிகமாகிக் கொண்டிருப்பதைக் கவனித்தார். படகு தத்தளித்துக் கொண்டிருந்தது. முருகய்யன் அதைச் செலுத்துவதற்கு வெகு பாடுபட்டுக் கொண்டிருந்தான். புயலின் வேகமும் வினாடிக்கு வினாடி அதிகமாகிக் கொண்டிருந்தது. இருபுறமும் மரங்கள் சடசடவென்று முறிந்து விழுந்து கொண்டிருந்தன.
நந்தி மண்டபத்தை நெருங்கிப் படகு வந்தது. இளவரசர் அந்த மண்டபத்தைப் பார்த்தார். நந்தியின் தலைக்கு மேலே தண்ணீர் வந்திருந்தது. இதிலிருந்து நீர் மட்டம் எவ்வளவு உயர்ந்திருந்தது என்று நன்கு தெரிய வந்தது.
"முருகய்யா! படகைச் சிறிது நிறுத்து" என்று இளவரசர் கூறினார். முருகய்யன் படகை நிறுத்தினான். ஆனால் அதன் ஆட்டத்தை நிறுத்த முடியவில்லை.
இளவரசர் படகிலிருந்து தாவிக் குதித்து நந்தி மண்டபத்தில் இறங்கினார். பின்னர் அதன் அருகில் விழுந்திருந்த ஒரு மரத்தைப் பிடித்துக்கொண்டு மண்டபத்தின் மேல் சிகரத்தின் மீது ஏறினார். அங்கேயிருந்து சுற்று முற்றும் பார்த்தார். கால்வாய்க்குக் கீழ்ப்புறம் முழுதும் ஒரே ஜலப்பிரளயமாக இருந்தது. தென்னந்தோப்பில் பாதி மரங்களுக்கு மேல் அதற்குள் விழுந்து விட்டிருந்தன. இடைவெளி வழியாகப் பார்த்தபோது, கடல் பொங்கி அந்தத் தென்னந் தோப்பின் முனை வரையில் வந்து விட்டதாகத் தெரிந்தது.
வடக்கே, சூடாமணி விஹாரம் இருந்த திசையை அருள்மொழிவர்மர் நோக்கினார். விஹாரத்தின் வெளிப் படிக்கட்டுகள் வரையில் கடல் பொங்கிப் பரவியிருந்தது தெரிந்தது.
பொன்னியின் செல்வருடைய மனத்தில் அப்போது ஓர் எண்ணம் உதயமாயிற்று. அது அவருடைய உடல் முழுதும் சிலிர்க்கும்படி செய்தது.
"முருகய்யா! படகைத் திருப்பிக்கொண்டு போ! விஹாரத்தை நோக்கி விடு!" என்றார் இளவரசர்.
அதிகமாகப் பேசிப் பழக்கமில்லாதவனும், இளவரசரிடம் அளவிறந்த பக்தி கொண்டவனுமான தியாகவிடங்கரின் மகன் ஏன் என்றுகூடக் கேளாமல் படகைத் திருப்பிச் சூடாமணி விஹாரத்தை நோக்கிச் செலுத்தினான்.
வரும்போது ஆன நேரத்தைக் காட்டிலும் போகும் போது சிறிது குறைவாகவே நேரமாயிற்று. ஆனால் இளவரசருக்கோ ஒவ்வொரு விநாடியும் ஒரு யுகமாக இருந்து கொண்டிருந்தது. படகு விஹாரத்தை அடைந்த போது பொங்கி வந்த கடல் ஏறக்குறைய விஹாரம் முழுவதையும் சூழ்ந்து கொண்டிருந்தது. நீர் மட்டம் மேலே ஏறிக் கொண்டுமிருந்தது. ஈழநாட்டிலுள்ள விஹாரங்களைப் போல் நாகைப்பட்டினம் சூடாமணி விஹாரம் அக்காலத்தில் அவ்வளவு கம்பீரமாகவோ உயரமாகவோ அமைந்திருக்கவில்லை. இன்னும் கொஞ்சம் தண்ணீர் மேலே ஏறினால் விஹாரத்தின் மண்டப சிகரம்கூட முழுகிவிடும் என்ற நிலைமை ஏற்பட்டிருந்தது.
இளவரசர் படகிலிருந்து தாவித் தண்ணீரில் முழுகாமலிருந்த ஒரு மண்டபத்தின் மேல் தளத்தில் குதித்தார். அங்குமிங்கும் பரபரப்புடன் ஓடினார். விஹாரத்தின் அடித்தளத்துக்கு அவர் போகாமல் மேல் மாடங்களில் ஒவ்வொரு பகுதியாகத் தேடிக் கொண்டு வந்தார். மேல் மாடங்களிலேயே சில இடங்களில் மார்பு அளவு தண்ணீரில் அவர் புகுந்து செல்ல வேண்டியதாயிருந்தது.
மேலும் மேலும் ஏமாற்றம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. கடைசியில் கௌதமபுத்தரின் உருவச் சிலை அமைந்திருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார். அந்தச் சிலையின் மார்பு அளவுக்குத் தண்ணீர் ஏறியிருந்தது. அங்கே இளவரசர் நின்று சுற்று முற்றும் பார்த்தார். தண்ணீரில் குனிந்தும் பார்த்தார். அவருடைய வாயிலிருந்து எழுந்த மகிழ்ச்சியும் வியப்பும் கலந்த 'ஆஹா!' ஒலி அவர் தேடி வந்ததை அடைந்து விட்டார் என்பதற்கு அறிகுறியாக இருந்தது.
ஆம்; புத்தர் சிலையின் அடியில் தண்ணீருக்குள்ளே பகவானுடைய பத்ம சரணங்கள் இரண்டையும் இறுகக் கட்டிக் கொண்டு ஆச்சாரிய பிக்ஷு உட்கார்ந்து கொண்டிருந்தார். பொன்னியின் செல்வர் தண்ணீரில் முழுகிப் பிக்ஷுவின் கரங்கள் இரண்டையும் சிலையிலிருந்து பலவந்தமாக விடுவித்து விட்டு அவரைத் தூக்கி எடுத்தார். தண்ணீருக்குள்ளே பிக்ஷுவைத் தூக்குவது இலேசாக இருந்தது. தண்ணீருக்கு வெளியே வந்த பிறகு அவ்வளவு இலேசாக இல்லை. ஆஜானுபாகுவும், நல்ல பலிஷ்டருமான அந்த பிக்ஷுவின் உடல் கனம் இளவரசரைத் திணறச் செய்தது.
"முருகய்யா! முருகய்யா!" என்று குரல் கொடுத்தார்.
"இதோ வந்தேன்!" என்று சொல்லிக் கொண்டே முருகய்யன் படகைக் கொண்டு வந்தான்.
பொன்னியின் செல்வர் ஆச்சாரிய பிக்ஷுவைத் தூக்கிக் கொண்டு படகை நோக்கி விரைந்து சென்றார். அவருடைய கால்கள் தடுமாறின.