உள்ளடக்கத்துக்குச் செல்

பொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/படைகள் வந்தன!

விக்கிமூலம் இலிருந்து

தியாக சிகரம் - அத்தியாயம் 23

[தொகு]

படைகள் வந்தன!

தஞ்சைமா நகரம் அன்று முழுதும் ஒரே அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. புயலையும், மழையையும் அவற்றினால் நேர்ந்த சேதங்களையும் மக்களை அடியோடு மறந்துவிட்டார்கள். "ஈழங்கொண்ட வீராதி வீரரும், சோழ நாட்டு மக்களின் இதயங்கொண்ட இளவரசருமான பொன்னியின் செல்வர் நாகைப்பட்டினத்தில் புயல் அடித்த அன்று வெளிப்பட்டு விட்டார்; பின்னர் தஞ்சையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்; அவரைச் சிங்காதனத்தில் ஏற்றி வைத்துச் சக்கரவர்த்தியாக முடிசூட்டும் நோக்கத்துடன் பெருந்திரளான மக்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறார்கள்" என்னும் செய்திகள் முதலியன வதந்திகளாகக் காற்று வாக்கில் வந்தன. பின்னர், நேரில் இளவரசரை நாகைப்பட்டினத்தில் பார்த்தவர்களே வந்து சொன்னார்கள். இந்தச் செய்தி காரணமாக, இரண்டு தினங்களுக்கு முன் வெளியிலே அடித்த புயலைப் போலவே தஞ்சை நகர மாந்தரின் உள்ளத்தில் உத்வேகப் புயல் அடிக்கத் தொடங்கியது. தஞ்சை நகரம் என்றும் கண்டறியாத அளவில் இளவரசருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று மக்கள் தீர்மானம் செய்தார்கள். கோட்டைக்கு வெளியிலேயிருந்த புறநகரத்தின் வீதிகளை அலங்கரிக்கத் தொடங்கினார்கள். கூட்டம் கூட்டமாகத் தெருக்களிலே நின்று பேசலானார்கள். மேளதாளங்கள், தாரை தப்பட்டைகள் முதலிய வாத்தியங்கள் சேகரிக்கப்பட்டன. ஆடல் பாடல்களில் தேர்ந்தவர்கள் இந்த விசேஷ சந்தர்ப்பத்தில் ஆற்றல்களையெல்லாம் காட்டிவிடுவது என்று எண்ணி ஆயத்தம் செய்யலானார்கள். மாந்தர்களும் இளஞ்சிறார்களும் தங்களை அலங்கரித்துக்கொள்ளும் விதங்களைப்பற்றிச் சிந்தித்தார்கள். மற்றும் பல அவசரக்காரர்கள் இளவரசரை வரவேற்பதில் தாங்கள் முந்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் தஞ்சையிலிருந்து நாலா திசைகளிலும் சென்ற சாலைகளில் கொஞ்ச தூரம் முன்னதாகச் சென்று காத்திருக்கத் தொடங்கினார்கள். அப்படி முன்னதாகச் புறப்பட்டவர்களை வேறு சிலர் பார்த்துப் பரிகசித்தார்கள்.

புறநகரம் இந்தப் பாடுபட்டதென்றால், கோட்டைக்குள்ளேயும் ஏதோ முக்கியமான சம்பவங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன என்பதற்கு விரைவிலேயே அறிகுறிகள் தென்பட்டன.

காலையில் வழக்கம்போல் கோட்டை வாசல் திறந்தது. கறிகாய், தயிர், மோர் விற்பவர்களும் அரண்மனைகளில் அலுவல்களுக்குச் செல்வோரும் வழக்கம்போல் கோட்டைக்குள் சென்று கொண்டிருந்தார்கள். புயல் - மழையினால் ஏற்பட்ட சேதங்களைப் பற்றி முறையிட்டுக்கொள்ள விரும்பியவர்கள் இன்று ஒருசிலர்தான் வந்தார்கள். அவர்களும் கோட்டைக்குள் சென்றார்கள். வழக்கம் போல வேளக்காரப் படையும் கோட்டைக்குள் பிரவேசித்தது.

பின்னர், கோட்டை வாசற் கதவுகள் எல்லாம் சடசடவென்று சாத்தப்பட்டன. பெரிய பெரிய இரும்புத்தாழ்களைக் கொண்டு கதவுகளை இறுக்கும் சத்தமும் பூட்டுக்களை மாட்டிப் பூட்டும் சத்தமும் கேட்கத் தொடங்கின. பிற்பாடு வந்தவர்கள் காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். முற்பகல் நேரத்தில் இம்மாதிரிக் கோட்டைக் கதவுகளைச் சாத்தித் தாழிடும் காரணம் என்னவென்று ஜனங்கள் பேச ஆரம்பித்த சமயத்தில் இன்னொரு அதிசயம் நடந்தது. கோட்டையைச் சுற்றியிருந்த அகழியைக் கடப்பதற்கு ஏற்பட்ட பாலமும் தூக்கப்பட்டது. அதற்குப் பிறகு யாரும் கோட்டை வாசலை நெருங்குவதற்கே முடியாமல் போய்விட்டது.

கோட்டையின் பிரதான வாசலாகிய வடக்கு வாசலுக்குச் சமீபமாக இருந்தவர்கள் மேற்கு வாசலையும் தெற்கு வாசலையும் பற்றி விசாரித்தார்கள். அந்த வாசல்களும் வடக்கு வாசலைப் போலவே சாத்திப் பூட்டப்பட்டன என்றும், பாலங்கள் தூக்கிவிடப்பட்டன என்றும் அறிந்ததும் மிக்க வியப்படைந்தார்கள்.

"இது என்ன? யுத்தம் ஒன்றும் நடக்கவில்லையே? பகைவர்களின் சைன்யங்கள் படை எடுத்து வருவதாகத் தெரியவில்லையே? அப்படிப் படையெடுத்து வருவதற்கு ஆற்றல் வாய்ந்த பகைவர்கள் வடக்கே, தெற்கே, மேற்கே, கிழக்கே, எங்கும் சமீபப் பிரதேசத்தில் இல்லையே? அப்படி ஒருவேளை வடக்கே இரட்டை மண்டலத்திலிருந்து பகைவர்கள் திடீர்ப் பாய்ச்சலில் வந்து விடுவதாக இருந்தாலும் கொள்ளிடத்தையும் காவேரியையும் மற்றுமுள்ள நதிகளையும் தாண்டி இப்போது எப்படி வர முடியும்? அந்த மாநதிகளில் வெள்ளம் பூரணப் பிரவாகமாக அல்லவா போய்க் கொண்டிருக்கிறது?" இவ்விதமெல்லாம் தஞ்சைக் கோட்டையின் புற நகரத்தில் வசித்த ஜனங்கள் பேசிக்கொண்டார்கள். ஒருவேளை பொன்னியின் செல்வரைக் கோட்டைக்குள் பிரவேசியாமல் தடுப்பதற்காகவே இந்த ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்படுகின்றனவோ என்று சிலர் கேள்விகளைப் போட்டுக்கொண்டு, "அப்படித்தான் இருக்கவேண்டும்" என்று மறுமொழி கூறிக்கொண்டார்கள். இந்த வதந்தி பரவப் பரவ, நகரமாந்தரின் உத்வேகம் அதிகமாயிற்று. "விஜயாலய சோழரின் வம்சத்தில் வழிவழியாக வந்த இளவரசரைக் கோட்டைக்குள்ளே வராமல் தடுப்பதற்கு இந்தப் பழுவேட்டரையர்கள் யார்? அப்படிப் பழுவேட்டரையர்கள் உண்மையில் முயல்வதாயிருந்தால் கோட்டை மதில்களையே இடித்துத் தகர்த்துவிட வேண்டியதுதான்!" என்ற தோரணையில் பேசுவோரும் இருந்தனர்.

வதந்தி என்றும் மாயா பூதம் எப்படிக் கிளம்புகின்றது, எப்படி அவ்வளவு விரைவில் பிரயாணம் செய்கின்றது என்பது யாராலும் கண்டுபிடிக்க முடியாத மர்மமான காரியம்தான். திடீரென்று இன்னொரு பயங்கரமான வதந்தி மக்களிடையே பரவத் தொடங்கியது. வெகு காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த சுந்தர சோழசக்கரவர்த்தியின் மரணம் நேர்ந்துவிட்டது என்பது தான் அவ்வதந்தி. "சக்கரவர்த்தி காலமாகி விட்டாராமே? அது உண்மையா?" என்று முதலில் கேட்டார்கள். அன்று அதிகாலையில் வால் நட்சத்திரம் ஒரு நிமிடம் ஜோதி மயமாக ஒளி வீசிவிட்டுப் பூமியை நோக்கி விழுந்து மறைந்ததைப் பார்த்தவர்கள் சிலர், அதையே அத்தாட்சியாகக் கொண்டு சுந்தர சோழர் காலமானதை ஊர்ஜிதம் செய்தார்கள். "இது உண்மையாயின், மேலே என்ன நடக்கப் போகிறது?" என்பது பற்றிக் கவலையுடன் விவாதிக்கப்பட்டதும் இயல்பேயல்லவா? இராஜ்ய உரிமை சம்பந்தமாகத் தகராறுகள் ஏற்படுமா? சிற்றரசுகள் இரு கட்சியாகப் பிரிந்து நின்று சண்டையிடுவார்களா? இத்தகைய உள் நாட்டுச் சச்சரவுகள் காரணமாகச் சோழ சாம்ராஜ்யமே சின்னாபின்னமாகி விடுமா? நூறு ஆண்டுகளாகத் தழைத்து ஓங்கி வளர்ந்து வந்த சாம்ராஜ்யத்தில் மீண்டும் பகைவர்களின் படைகள் உட்புகுமா?

இவ்விதமெல்லாம் ஜனங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே "அதோ படை வருகிறது!" என்று கூக்குரல் ஒன்று எழுந்தது. பலரும் அங்குமிங்கும் ஓடிச் சென்று பார்த்தார்கள். உயர்ந்த கட்டடங்களின் மீதும், உயரமான மரங்களின் மீதும் ஏறிப் பார்த்தார்கள். அவ்வாறு பார்த்தவர்கள் கண்ட காட்சி ஒரேயடியாக வியப்பையும், திகைப்பையும் அளிப்பதாக இருந்தது.

தஞ்சையிலிருந்து மேற்கேயும், தென்மேற்குத் திசையிலேயும் புறப்பட்டுச் சென்ற மூன்று பெரிய சாலைகள் அக்காலத்தில் இருந்தன. ஒன்று கொடும்பாளூர் வழியாக இராமேசுவரம் போகும் சாலை; மற்றொன்று மதுரை வழியாகத் தென்பாண்டிய நாட்டுக்குச் சென்ற சாலை; இன்னொன்று உறையூர் வழியாகக் கரூருக்கும், சேர நாட்டுக்கும் சென்ற நீண்ட அகன்ற சாலை.

அன்று பிற்பகலில் மேற்கூறிய மூன்று சாலைகள் வழியாகவும் படைகள் அணிவகுத்து வந்துகொண்டிருந்தன. அவற்றில் முன்னால் வந்த அணிகள் கண்ணுக்குத் தெரிந்தனவே தவிர, பின்னால் அந்த அணிவரிசைகள் எங்கே முடிகின்றன என்பதே தெரியவில்லை. அவ்வாறு அப்படை வீரர்களின் அணிகள் பின்னால் பின்னால் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தன.

நல்ல வேளையாக, அப்படைகளின் முன்னணியில் பெரிய புலிக்கொடிகள் பறந்துகொண்டிருந்தபடியால் பகைவர்களின் படைகள் என்று சந்தேகிக்க இடம் ஏற்படவில்லை. சோழ சாம்ராஜ்யத்துச் சைன்யங்கள்தான் அவை! ஆனால் எதற்காக வருகின்றன? எங்கிருந்து வருகின்றன?

இன்னும் சற்று அருகில் அப்படைகள் நெருங்கி வந்தபோது புலி உருவம் தாங்கிய கொடிகளில் சிறிய அளவில் பதித்திருந்த இலச்சினைகளும் கண்ணில் பட்டன. அவற்றிலிருந்து, கொடும்பாளூர்த் தலைமைக்கு உட்பட்ட பராந்தகச் சோழப் பெரும் படையும், தென்பாண்டிய நாட்டிலிருந்த தெரிந்த கைக்கோளர் பெரும் படையும், ஈழத்துப்போரில் ஈடுபட்டிருந்த அரிஞ்சய சோழப் பெரும் படையும் சேர்ந்து வந்துகொண்டிருந்தனவென்று தெரியவந்தது. இன்னும் சிறிது நேரத்திற்கெல்லாம், தென்திசைச் சேநாதிபதியான பூதி விக்ரம கேசரியே மேற்கூறிய படைகளுடன் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தஞ்சை நகர மாந்தர்களுக்குத் தெரிந்துபோய்விட்டது. இதிலிருந்து, சைன்யங்கள் எதற்காக வருகின்றன என்பதை ஊகித்து உணர்வதும் எளிதாயிற்று. கொடும்பாளூர் பெரிய வேளாரான பூதி விக்கிரம கேசரி, ஈழத்துப்பட்ட சிறிய வேளாரின் திருமகளாகிய வானதியைப் பொன்னியின் செல்வருக்கு மணம் புரிந்து கொடுத்து, அவரையே சோழ நாட்டுச் சிம்மாதனத்தில் ஏற்றிவைக்க விரும்புகிறார் என்பது சோழ நாட்டில் எல்லாருக்கும் தெரிந்திருந்த செய்தியேயாகும். கிழக்கேயிருந்து இளவரசர் அருள்மொழிவர்மர் பொது ஜனங்களின் ஆரவாரத்துடன் அழைத்து வரப்படுவதும், மேற்கேயிருந்து சேநாதிபதி பூதி விக்கிரம கேசரி மாபெரும் சைன்யத்துடன் அதே சமயத்தில் தஞ்சையை நோக்கி வருவதும் ஒன்றுக்கொன்று பொருத்தமாயிருந்தன.

பழுவேட்டரையர்களும், அவர்களுடன் தோழமை பூண்ட சிற்றரசர்களும் மதுராந்தகருக்குப் பட்டம் சூட்டப் பிரயத்தனம் செய்கிறார்கள் என்பதை ஏற்கெனவே மக்கள் அறிந்திருந்தார்கள். ஆதலின் அவர்களுடைய அன்புக்கு உகந்த அருள்மொழிச் செல்வரைச் சிங்காதனம் ஏற்றுவதற்காகவே கொடும்பாளூர்ப் பூதிவிக்கிரம கேசரி தமக்கு உட்பட்ட மாபெரும் தென்திசைப் படைகளுடன் வருகிறார் என்று தஞ்சை நகர மக்கள் ஊகித்துக் கொண்டார்கள். இதனால் அவர்களுடைய உற்சாகம் மேலும் கரைபுரண்டு ஓடத் தொடங்கியது. சமுத்திரம் போல் பொங்கிவந்த படை வீரர்கள் அனைவரையும் வரவேற்று உபசரிக்கவும் விருந்து அளிக்கவும் அவர்கள் சித்தமானார்கள்.

தஞ்சை நகரில் அக்காலத்தில் பல பெரிய வர்த்தகக் குழுவினர் நடத்திய சத்திரங்கள் இருந்தன. கொடும்பாளூர் மணிக்கிராமத்தார், திருப்புறம்பயம் வலஞ்சியர், ஊறையூர்த் தர்ம வணிகர், நானா தேசத்திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் ஆகிய வர்த்தகக் குழுவினர் நடத்திய சத்திரங்களில் அன்று பிற்பகலிலிருந்தே ஆயிரக்கணக்கானவர்களுக்கு உணவு அளிக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.

இதை அறிந்ததும் நகர மாந்தர்களின் உல்லாசம் அதிகமாகி விட்டது. அங்குமிங்கும் திரிவதும், கூடிக்கூடிப் பேசுவதுமாக இருந்தார்கள். அவர்களில் நூற்றுக்கு நூறு பேரும் அருள்மொழிவர்மரின் கட்சியைச் சேர்ந்தவர்களாயிருந்தபடியால், வரப் போகும் சம்பவங்களைப் பற்றிப் பேசுவதில் ஒளிவு மறைவு ஒன்றும் அவசியமாகக் கருதவில்லை. படை வீரர்கள் தஞ்சையை அணுகி வந்து ஆங்காங்கே கூடாரம் அடித்து முகாம் போடத் தொடங்கியதும், நகரமாந்தர்கள் அந்த முகாம்களுக்கே சென்று வீரர்களுடன் சல்லாபம் செய்யத் தொடங்கி விட்டார்கள்.

சூரியன் மறைந்து நன்றாக இருட்டுவதற்குள்ளே தஞ்சை நகரின் மூன்று பக்கங்களையும் சேனா வீரர்கள் சூழ்ந்து கொண்டு விட்டார்கள். நாலாவது பக்கத்தில் வடவாறு தஞ்சைக் கோட்டையையொட்டிச் சென்றபடியாலும், வடவாற்றில் பெரு வெள்ளம் போய்க் கொண்டிருந்தபடியாலும், அந்தப் பக்கம் வீரர்கள் போவதற்கு வசதியாக இல்லை. அதற்கு அவசியமுமில்லையென்று கருதி விட்டு விட்டார்கள். தஞ்சைக் கோட்டையின் பிரதான வடக்கு வாசலை முன்னம் நாம் பார்த்திருக்கிறோம் அல்லவா? முதன் முதலாக, நந்தினி தேவியைத் தொடர்ந்து வந்தியத்தேவன் கோட்டைக்குள் பிரவேசித்த வாசல் அதுவன்றோ? அதன் கோட்டை வாசல் கண்ணுக்குத் தெரியும்படியான இடத்தில் சேனாதிபதி பூதி விக்கிரம கேசரியின் ஜாகை அமைக்கப்பட்டது.

இருட்டி ஒரு ஜாமம் ஆனபிறகு சேனாதிபதி கோட்டையைச் சுற்றிப் பார்த்துவிட்டுத் தமது ஜாகைக்கு வந்து சேர்ந்தார். அவருக்கு முன்னாலேயே அங்கே ஏறக்குறைய நூறுபேர் வந்து சேர்ந்திருந்தார்கள். அவர்களில் வேளிர் படைத்தலைவர்களும், கைக்கோளர் படைத்தலைவர்களும், பாண்டிய மண்டலத்தின் தலைவர்களும், கொங்கு நாட்டுத் தலைவர்களும் இருந்தார்கள். ஈழ நாட்டுப்போரில் வெற்றி கண்ட சோழர் படைத் தலைவர்களும் பலர் இருந்தார்கள். இவர்களைத் தவிர பற்பல வர்த்தக மகாசபைகளின் தலைவர்கள் இருந்தார்கள்: முக்கியமாக 'நானா தேசத்திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர்' என்று உலகமெல்லாம் புகழ்பெற்ற வர்த்தக மண்டலத்தின் தலைவர்கள் வந்திருந்தார்கள். இவர்கள் அயல் நாடுகளுடன் கப்பல் வாணிகம் செய்யும் பெரும் தனவந்தர்கள். வர்த்தகப் பொருள்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களைக் காவல் புரிவதற்காகத் தாங்களே யுத்தக் கப்பல்களை அனுப்பக் கூடிய வசதி வாய்ந்தவர்கள். இவர்களைத் தவிர, தஞ்சாவூர் நகரத்தைச் சேர்ந்த ஐம்பெருங் குழுவினரும், எண்பேர் ஆயத்தின் தலைவர்களும் அழைக்கப்பட்டு அந்தக் கூடாரத்தில் வந்து கூடியிருந்தார்கள்.