பொன்னியின் செல்வன்/தியாக சிகரம்/புலவரின் திகைப்பு
தியாக சிகரம் - அத்தியாயம் 87
[தொகு]புலவரின் திகைப்பு
அருள்மொழிவர்மருக்குத் திருமுடி சூட்டு விழா நெருங்க நெருங்க, சோழ நாடு முழுவதும் ஒரே கோலாகலமாகி வந்தது. பொன்னியின் செல்வருக்குப் பொன் முடி சூடுவது குறித்து மக்களிடையில் மாறுபட்ட அபிப்பிராயமே காணப்படவில்லை. சோழ நாட்டு ஆண்கள், பெண்கள், வயோதிகர்கள், குழந்தைகள், நகர மாந்தர், கிராமவாசிகள், வர்த்தகர்கள், உழவர்கள் அனைவரும், ஒருமுகமாகப் பொன்னியின் செல்வருக்கு முடிசூட்டுவதைக் குதூகலமாக வரவேற்றார்கள். அவர் பிறந்த வேளையைப் பற்றியும், குடிமக்களிடம் அவர் கலந்து பழகும் அருமைப் பண்பைப் பற்றியும் அனைவரும் சொல்லிச் சொல்லி வியந்து மகிழ்ந்தார்கள். இராமருக்குப் பட்டாபிஷேகம் செய்துவைக்கத் தசரதர் முடிவு செய்துவிட்டார் என்று அறிந்ததும் அயோத்தி மக்கள் எல்லோரும் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தார்கள் என்பதை இராமகாதை நன்கு வர்ணிக்கிறது.
வயது முதிர்ந்த பெண்மணிகள் எல்லாரும் கோசலையைப் போல் ஆகிவிட்டார்களாம். தத்தம் புதல்வர்களுக்கே மகுடாபிஷேகம் ஆகப் போவதாக எண்ணி மகிழ்ந்தார்களாம். இளம் பெண்கள் எல்லாரும் சீதா தேவி அடைந்த ஆனந்தத்தைத் தாங்களும் அடைந்து, தத்தம் கணவன்மார்களுக்கே முடிசூட்டப் போவதாகக் கருதித் தங்களை ஆடை ஆபரணங்களால் அலங்கரித்துக் கொண்டார்களாம். அயோத்திமா நகரத்தில் வாழ்ந்த முதிய பிராயத்து ஆண்மக்கள் எல்லாரும் தசரதனைப் போல் ஆகிவிட்டார்களாம்.
மாதர்கள் வயதின்மிக் கார் கோசலை மனத்தை ஒத் தார்;
வேதியர் வசிட்டனொத் தார்; வேறுள மகளிர் எல் லாம்
சீதையை ஒத்தார்; அன்னாள் திருவினை ஒத்தாள்; அவ் வூர்
சாதன மாந்தஎல் லாம் தயரதன் தன்னைஒத் தார்.
என்று அயோத்தி மக்களின் மனோநிலையைக் கம்ப நாடர் அற்புதமாக சித்தரித்திருக்கிறார்.
அவ்வாறு அயோத்தி மக்களின் உள்ளன்பையும் நன்மதிப்பையும் அடைவதற்கு இராமர் என்ன அருஞ்செயல் புரிந்திருந்தார்? அவருடைய கோதண்டத்தின் மகிமையெல்லாம் பிற்காலத்தில் அல்லவா வெளியாவதற்கு இருந்தது. இராவணன் முதலிய ராட்சதர்களை வதம் செய்து மூன்று உலகங்களுக்கும் பயத்திலிருந்து விடுதலை அளித்த பெருமை பின்னால் அல்லவா அவரைச் சேர்வதாக இருந்தது? விசுவாமித்திர முனிவரோடு சென்று அவருடைய யாகத்தைப் பூர்த்தி செய்வித்து விட்டு வந்தார் என்பது அயோத்தி மக்களுக்கு அவ்வளவாக இராமருடைய பெருமையை உயர்த்திக் காட்டியிராதல்லவா? ஏன்? விசுவாமித்திரர் திரும்பி அயோத்திக்கு வந்து அதைச் சொல்லக்கூட இல்லையே?
இந்த உலகில் சிலர் செயற்கரிய வீரச் செயல்களும், பரோபகாரச் செயல்களும் புரிந்து மக்களின் உள்ளத்தைக் கவர்கிறார்கள். இன்னும் சிலர் இசை பாடியும், நடனம் ஆடியும், கவிதை புனைந்தும், சித்திர சிற்பக்கலைகளில் அற்புதங்களை அளித்தும் பிறருடைய போற்றுதலுக்கு உள்ளாகிறார்கள். வேறு சிலர் கருவிலேயே திருவுடையோராய், பிறக்கும்போதே சிறப்புடையோரமாய்ப் பிறந்து விடுகிறார்கள். குறிப்பிடக்கூடிய காரணம் எதுவும் இன்றிப் பார்ப்பவர்களுடைய உள்ளங்களையெல்லாம் கவர்ந்து வசீகரிக்கக் கூடிய சக்தியை இயற்கை அன்னை அவர்களுக்கு அளித்து விடுகிறாள். ஆகா! இயற்கை அன்னை மிக்க பாரபட்சம் உடையவள் போலும்! ஆனாலும் நாம் என்ன கண்டோம்? இயற்கை அன்னை அத்தகைய வசீகர சக்தியை அவர்களுக்கு அளிக்கும்போது அதற்கு இணையாக வேறு என்ன பிரதிகூலமான அம்சங்களையும் அளித்திருக்கிறாளோ, நமக்கு என்ன தெரியும்?
அவ்வளவு தூரம் அயோத்தி மாந்தரின் உள்ளன்பைக் கவர்ந்து அவர்களுடைய போற்றுதலுக்கு உரியவராயிருந்த இராமர், உலகில் சாதாரண மனிதர் யாரும் அடையாத துன்பங்களையெல்லாம் அடைய வேண்டியிருந்ததல்லவா? நாட்டைத் துறந்து, காட்டுக்குச் சென்று, காதல் மனைவியைப் பறிகொடுத்து, சொல்லுவதற்கு இயலாத மனவேதனைப் படவேண்டி நேர்ந்ததல்லவா?
அருள்மொழிவர்மர் இயற்கை அன்னையின் பட்சபாதமான சலுகைக்குப் பாத்திரமானவர். அவருடைய தோற்றமே அவரைப் பார்த்தவர்கள் அனைவர் மனத்தையும் வசீகரித்தது. அவருடைய இனிய பேச்சும் பண்புகளும் அவருடன் பழக நேர்ந்தவர்கள் எல்லாருடைய அன்பையும் கவர்ந்தன. ஈழ நாட்டுப் போர்க்களத்துக்கு அவர் சென்றிருந்தபோது அவ்வளவாக வீர தீரச் செயல்கள் புரிவதற்குச் சந்தர்ப்பங்கள் கிட்டவில்லை. ஆயினும் அவருடைய வீரப் பிரதாபங்களைப் பற்றிய கற்பனைச் செய்திகள் பல சோழ நாடெங்கும் பரவி வந்தன. ஒருவரிடம் நாம் அன்பு கொண்டு விட்டால், அவரைப் பற்றிய எவ்வளவு மிகைப்படுத்தப்பட்ட புகழுரைகளையும் எளிதில் நம்புவதற்கு ஆயத்தமாகி விடுகிறோம் அல்லவா?
சுந்தர சோழர் நோய்வாய்ப்பட்டு நடமாடவும் சக்தியில்லாமல் போன காலத்திலிருந்து, அரசுரிமை சம்பந்தமான குழப்பங்கள் சோழ நாட்டில் ஏற்படக்கூடுமோ என்று மக்கள் கவலைப்பட்டு வந்தார்கள். பழுவேட்டரையர், சம்புவரையர் முதலிய குறுநில மன்னர்களும், பெருந்தரத்து அதிகாரிகளும் சுந்தர சோழரின் புதல்வர்களுக்கு விரோதமாகக் கண்டராதித்தருடைய மகனுக்குப் பட்டம் கட்டச் சதி செய்கிறார்கள் என்னும் வதந்தியும் பரவியிருந்தது. கண்டராதித்தருடைய குமாரன் மதுராந்தகனுக்கு விரோதமாகச் சொல்லக் கூடியது எதுவும் மக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் மதுராந்தகன் மக்களிடையில் வந்து கலந்து பழகியதுமில்லை. தந்தையைப்போல் உலக வாழ்க்கையில் வெறுப்புற்றுச் சிவபக்தியில் ஆழ்ந்திருக்கிறான் என்பது மட்டும் தெரிந்திருந்தது. விஜயாலய சோழர் காலத்திலிருந்து சோழ ராஜ்யம் விரிந்து பரந்து வந்ததையும், வர்த்தகம் செழித்து மக்களின் வாழ்க்கை உயர்ந்து வந்ததையும், சோழ சைன்யங்கள் வெற்றி கொண்ட நாடுகளிலிருந்து பலவிதச் செல்வங்கள் சோழ நாட்டில் வந்து குவிந்து கொண்டிருந்ததையும் பார்த்துக் களித்துப் பெருமிதம் அடைந்திருந்த மக்கள், சோழப் பேரரசு மேலும் மேலும் பல்கிப் பரவித் தழைக்க வேண்டுமென்று நம்பினார்கள். சிவபக்தியில் முழுக்க முழுக்க ஈடுபட்ட மதுராந்தகர் சிங்காதனம் ஏறினால், சோழ ராஜ்யத்தின் முன்னேற்றம் தொடர்ந்து நடைபெற முடியுமா என்று ஐயுற்றார்கள். அதுமட்டுமன்றி, மதுராந்தகர் பட்டத்துக்கு வந்தால் சிற்றரசர்கள் வைத்ததே சட்டமாயிருக்கும் என்று மக்கள் அஞ்சினார்கள்.
ஆதித்த கரிகாலரைப் பற்றி வீராதி வீரர் என்ற பெருமதிப்பு மக்களுக்கு இருந்தாலும், அவர் சிங்காதனம் ஏறுவது பற்றியும் அவ்வளவாக உற்சாகம் கொள்ள இடமில்லாமலிருந்தது. ஆதித்த கரிகாலரிடம் மக்களை வசீகரிக்கும் இனிய சுபாவம் இல்லை. எல்லாருடனும் அவர் சரளமாகக் கலந்து பழகுவதில்லை. இதையன்றி, கரிகாலரைப் பற்றி மர்மமான பல வதந்திகள் உலாவி வந்தன. அவர் ஏதோ பெரிய குற்றம் செய்துவிட்டார் என்றும், அவருடைய மனச்சாட்சியே அதற்காக அவரை வருத்திக் கொண்டிருக்கிறதென்றும், அதனாலே தந்தை சுந்தர சோழரின் அபிமானத்தை இழந்து விட்டார் என்றும் வதந்திகள் பரவியிருந்தன. இன்னும் பலவிதமான கற்பனைக் கதைகளும் கட்டிவிடப்பட்டிருந்தன. ஆகையால் அவர் அகால மரணமடைந்த போது ஒரு மகா வீரனுக்குரிய மரியாதையை மக்கள் செலுத்தினாலும் அதிகமாக துக்கப்பட்டுக் கொண்டிருக்கவில்லை. வால் நட்சத்திரத்தின் பேரில் பழியைப் போட்டுவிட்டு ஒருவாறு மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டார்கள்.
பெரிய பழுவேட்டரையரின் மரணமும், அது நேர்ந்த விதமும் மக்களுடைய உள்ளத்தில் அவர் பேரில் புதியதொரு அபிமானத்தையும், மரியாதையையும் உண்டாக்கியிருந்தது. அந்த வீரக் கிழவர் முதுமைப் பிராயத்தில் மணந்துகொண்ட மாய மோகினி உண்மையில் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளைச் சேர்ந்தவள் என்றும், அவளுடைய தூண்டுதலினாலேதான் பெரிய பழுவேட்டரையரின் மனம் கெட்டுப் போயிருந்ததென்றும், ஆதித்த கரிகாலரின் அகால மரணத்துக்குப் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளே காரணம் என்றும், உண்மையை அறிந்துகொண்டதும் பெரிய பழுவேட்டரையர் செய்த குற்றத்துக்குப் பிராயச்சித்தமாகத் தம்மைத் தாமே மாய்த்துக் கொண்டார் என்றும் வதந்திகள் பரவிவிட்ட பிறகு, ஜனங்கள் பெரிய பழுவேட்டரையரைக் குறித்து, "ஐயோ! பாவம்!" என்று அனுதாபப்பட்டார்கள். அவர் இறப்பதற்கு முன்னால், "மதுராந்தகருக்குப் பட்டம் கட்டும் எண்ணத்தை விட்டு விடுங்கள், பொன்னியின் செல்வருக்கே முடிசூட்டுங்கள்!" என்று மற்ற குறுநில மன்னர்களுக்குக் கட்டளையிட்டு விட்டுச்சென்றார் என்பதும் அவரிடம் மக்களின் மரியாதையை அதிகப்படுத்தியது. மக்களின் மனத்தில் உள்ள விருப்பம் நிறைவேறுவதற்கு ஒரு பெரிய தடங்கலை நிவர்த்தி செய்துவிட்டல்லவா அந்த மாபெரும் வீர கிழவர் உயிரை நீத்தார்? அவருடைய நினைவு வாழ்க! அவருடைய குலம் வாழ்க! இவ்வாறு ஜனங்கள் நன்றி உணர்ச்சியுடன் அவரைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள்.
மதுராந்தகத்தேவர் விஷயத்தில் ஆள் மாறாட்டம் நடந்திருக்கிறது என்னும் விவரம் பொதுமக்களில் யாருக்குமே தெரிந்திருக்கவில்லை. அரச குடும்பத்தினரையும், அவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களையும் தவிர வேறு யாருக்கும் அந்தச் செய்தி தெரியாது. பழைய மதுராந்தகர் பெரும்பாலும் அரண்மனைக்குள்ளேயே பொழுதைக் கழித்தார். மிக அபூர்வமாகவே வெளிப்புறப்பட்டார். அந்தச் சந்தர்ப்பங்களிலும் அவர் பொதுமக்களுடன் கலந்து பழகுவதில்லை. அவருக்கு முடிசூட்டும் பேச்சு நடந்து கொண்டிருந்தபோது மூடுபல்லக்கில் வைத்து அவரை அழைத்துக்கொண்டு போவது வழக்கமாயிருந்தது. அவருடைய அங்க அடையாளங்களைக் கூர்ந்து கவனிக்கப் பொது ஜனங்களுக்குச் சந்தர்ப்பம் ஏற்படவில்லை. ஆகையால் பழைய மதுராந்தகர் போய்ப் புதிய மதுராந்தகர் வந்துள்ள விவரமே மிகப் பெரும்பாலான மக்களுக்குத் தெரியாமலிருந்தது.
ஆதலின் திருவையாற்றில் நடந்த திருவாதிரைத் திருவிழாவில் புதிய மதுராந்தகரைப் பார்த்தவர்கள் எவரும் ஆள் வேற்றுமை எதுவும் இருப்பதாக அறியவில்லை. அவர் மனைவி பூங்குழலி மட்டும் சிலருடைய கவனத்தைக் கவர்ந்தாள். அந்தப் பெண் 'சின்னப் பழுவேட்டரையருடைய மகள்' என்று சிலர் கூறியதை மற்றும் சிலர் மறுத்துரைத்தார்கள். கடலில் படகு செலுத்தி வந்த ஓடக்காரப் பெண் இவள் என்றும், மதுராந்தகர் சமீபத்தில் இவளை மணந்து கொண்டார் என்றும் சொன்னார்கள்.
அரச குடும்பத்தினரும், குறுநில மன்னர்களும் பலதார மணம் செய்துகொள்வது அந்நாளில் சாதாரணமாக இருந்தபடியால் யாரும் அதைப் பற்றி வியப்பு அடையவில்லை. சிற்றரசர்கள் பலர் தூண்டியும் மதுராந்தகத்தேவர் தமக்குப் பட்டம் வேண்டாம் என்று சொல்லி விட்டார் என்னும் வதந்தி மக்களுக்குப் பொதுவாகவே அவரிடம் மரியாதையை உண்டுபண்ணியிருந்தது. சிவபக்தியில் திளைத்துப் பரவச நிலையை அடைந்திருந்த அவருடைய தோற்றமும் அந்த மரியாதையை வளர்த்தது. "ஓடக்காரப் பெண்ணாகிய பூங்குழலியை முன்னிட்டே மதுராந்தகர் சோழ சிங்காதனத்தை விரும்பவில்லை" என்ற பேச்சு இன்னும் பலருடைய அபிமானத்தை அவர் கவர்ந்துகொள்ளக் காரணமாயிருந்தது. பொன்னியின் செல்வருக்குப் பட்டாபிஷேகம் நடந்ததும், மதுராந்தகத்தேவருக்கு ஏதேனும் பெரிய பதவி அளிப்பார் என்றும் பேசிக் கொண்டார்கள்.
முடிசூட்டு விழாவுக்கு இரண்டு தினங்களுக்கு முன்னாலிருந்து சோழ நாட்டின் நானா திசைகளிலிருந்தும் ஜனங்கள் தஞ்சையை நோக்கி வரத் தொடங்கிவிட்டார்கள். தஞ்சைக் கோட்டைக்கு வெளியே ஒரே ஜனசமுத்திரமாகக் காட்சி அளித்தது. கோட்டையின் வாசற் கதவுகள் திறந்து விடப்பட்டன. கோட்டைக்குள் போவதற்கும் வெளியே வருவதற்கும் முன்னம் இருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. முடிசூட்டு நாளைத் தள்ளி வைத்துக்கொண்டால் சமாளிக்க முடியாத கூட்டம் சேர்ந்து விடும் என்றுதான் தை பிறந்தவுடனே நாள் குறிப்பிட்டிருந்தார்கள். இன்னும் ஜனங்களுடைய சௌகரியத்துக்காக வேறு பல ஏற்பாடுகளும் செய்திருந்தார்கள்.
கொடும்பாளூர் வேளார் தம்முடன் அழைத்துக் கொண்டு வந்திருந்த மாபெரும் தென் திசைப் படையில் மிகப் பெரிய பகுதியைப் பொன்னியின் செல்வர் கட்டளையின் பேரில் திருப்பி அனுப்பிவிட்டார். தம்முடன் ஆயிரம் வீரர்களை மட்டுமே வைத்துக் கொண்டிருந்தார். அவ்விதமே பழுவேட்டரையர் கட்சியைச் சேர்ந்த சிற்றரசர்கள் குடந்தைக்கு அருகில் கொண்டு வந்து நிறுத்தியிருந்த வீரர்களும் திருப்பி அவரவர்களுடைய இடத்துக்கு அனுப்பப்பட்டார்கள். சின்னப் பழுவேட்டரையர் கோட்டைப் பாதுகாப்புக்காக வழக்கமாக வைத்திருந்த வீரர்கள் மட்டுமே இப்பொழுது இருந்தார்கள்.
பழுவூர் வீரர்களும், கொடும்பாளூர் வீரர்களும், வேளக்காரப் படை வீரர்களும் தங்களுடைய பகை மாற்சரியங்களையெல்லாம் மறந்து ஒருவரையொருவர் கட்டித் தழுவிக் கொள்ளவும், கேலி செய்வதும் கூத்தாடிக் குதூகலிப்பதுமாக இருந்தார்கள். முடிசூட்டு விழாவைப் பார்ப்பதற்குத் திரள்திரளாக வந்து குவிந்தவண்ணமிருந்த மக்களுக்கு அவர்கள் கூடிய வரையில் உதவியாக இருந்தார்கள். சில சமயம் வேடிக்கைக்காக வானர சேஷ்டைகளில் அவ்வீரர்கள் ஈடுபட்ட போதிலும் ஜனங்கள் அவற்றைப் பொருட்படுத்தவில்லை.
தஞ்சை கோட்டைக்கு உட்புறமும் புறநகரமும் தேவேந்திரனின் அமராவதி நகரத்தைப் போல் அலங்கரிக்கப்பட்டு விளங்கின. நகரில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் வெளியூரிலிருந்து விருந்தாளிகள் வந்து குவிந்த வண்ணமிருந்தார்கள்.
கடைசியாக மகுடாபிஷேகத்துக்குக் குறிப்பிட்ட தினத்தன்று சூரியன் உதயமாயிற்று. உதிக்கும்போதே பனித்திரளைப் போக்கிக் கொண்டு பொற் கிரணங்களைப் பரப்பிக் கொண்டு தேஜோமயமாக உதித்த சூரியனைப் பார்த்த மாந்தர் அனைவரும், "இன்றைக்குப் பொன்னியின் செல்வருக்கு மகுடாபிஷேகம் அல்லவா! ஆகையால் சூரியனும் பொன்னொளி வீசித் திகழ்கிறான்!" என்று கூறி மகிழ்ந்தார்கள்.
மகுடாபிஷேகத்துக்குரிய வேளை வருவதற்கு வெகு நேரம் முன்னதாகவே, பட்டாபிஷேக மண்டபத்தின் வாசலில் ஜனத்திரள் சேர ஆரம்பித்து விட்டது. மண்டபத்துக்குள்ளே பொதுமக்கள் அனைவரும் இடம் பெறுதல் இயலாத காரியம் அல்லவா? முடிசூட்டு வைபவம் நடந்த பிறகு, பொன்னியின் செல்வர் மண்டபத்திலிருந்து வெளியில் வந்து பட்டத்து யானை மீதேறி வீதி வலம் தொடங்கும்போதுதான் மக்கள் அனைவரும் அவரைக் கண்டு மகிழ முடியும். அதற்காக, நேரம் கழித்து வரமுடியுமா, என்ன? முன்னதாக வந்தால், பொன்னியின் செல்வர் பொன் மகுடம் சூடிக்கொண்டு வெளி வரும்போதே அவரைப் பார்க்கலாமே!
மகுடாபிஷேக மண்டபத்துக்குள் அரண்மனையைச் சேர்ந்தவர்கள் வருவதற்குத் தனியான பின்புறப் பாதை இருந்தது. அதன் வழியாகச் சுந்தர சோழரும், வானமாதேவியும் அவர்களைத் தொடர்ந்து செம்பியன்மாதேவி, மதுராந்தகர், பூங்குழலி, குந்தவைப் பிராட்டி, வானதி ஆகியவர்களும் வந்து சேர்ந்தார்கள். முதன்மந்திரி அநிருத்தர், சின்னப் பழுவேட்டரையர், சம்புவரையர், சேனாதிபதி பூதிவிக்கிரம கேசரி, மலையமான் மிலாடுடையார், மற்றும் சிற்றரசர்கள், சாமந்தகர்கள், வர்த்தக கணத்தலைவர்கள், கோட்டத் தலைவர்கள், பெருந்தர அதிகாரிகள், சிவாச்சாரியார்கள், விண்ணகர பட்டர்கள், தமிழ்ப் பெரும் புலவர்கள் ஆகியோர் வாசலில் கூடியிருந்த பெரும் ஜனக்கூட்டத்தில் புகுந்து முண்டியடித்துக்கொண்டு உள்ளே வந்து சேர்ந்தார்கள். கடைசியில் பொன்னியின் செல்வரும், வல்லவரையன் வந்தியத்தேவனும் தாமரை மலர் போல் அமைந்த திறந்த தங்கரதத்தில் அமர்ந்து மகுடாபிஷேக மண்டபத்தின் வாசலை அடைந்தபோது, பூரண சந்திரனைக் கண்ட அலைகடலைப் போல் அந்த ஜனசமுத்திரம் கரகோஷம் முழக்கி ஆரவாரம் செய்தது.
மகுடாபிஷேகத்துக்குரிய வைதிகச் சடங்குகள் எல்லாம் நடந்தேறின. சோழ குலத்து மன்னர்கள் வழி வழியாகப் பட்டாபிஷேக தினத்தன்று சிரசில் சூட்டிக்கொள்ளும் மணி மகுடம், மார்பில் அணியும் நவரத்தின மாலை, இடையில் தரிக்கும் உடைவாள், கையில் ஏந்தும் செங்கோல் ஆகியவற்றை ஒரு பெரிய சித்திரத் தாம்பாளத்தில் வைத்துச் சபையில் பெரியவர்கள் முன்னாலெல்லாம் கொண்டு போனார்கள். அவர்கள் அத்தாம்பாளத்தைத் தொட்டு ஆசி கூறினார்கள். பின்னர், ஆஸ்தானப் புலவராகிய நல்லன் சாத்தனார் எழுந்து நின்றார். அவருக்குப் பின்னால் கையில் யாழ் பிடித்த மங்கை ஒருத்தி நின்று, யாழின் நரம்புகளை மீட்டி இனிய சுருதியை எழுப்பினாள்.
புலவர் நல்லன் சாத்தனார் சோழ குலத்தின் தொல் பெருமையையும், அக்குலத்தில் பரம்பரையாக வந்து புகழ் பெற்ற வீர மன்னர்களின் வரலாற்றையும் இசையுடன் கலந்த சந்தப் பாடலாகப் பாடலுற்றார். அந்தப் பாடல் மிக நீண்டதாகவும் இந்தக் காலத்தவர் எளிதில் அறிந்து கொள்ள முடியாத அரிய நடையிலும் அமைந்திருந்தபடியால், அதன் சாராம்சத்தை மட்டும் இங்கே குறிப்பிடுகிறோம்:
"சூரிய வம்சத்திலே தோன்றிய மனுமாந்தாதவின் குலத்தில் சிபி என்னும் மன்னர் மன்னன் இருந்தான். அவன் ஒரு புறாவுக்குத் தான் அளித்த வாக்கை நிறைவேற்றி அதன் உயிரைக் காப்பதற்காகத் தன் உடலின் சதையை அறுத்துக் கொடுத்தான். அத்தகைய சிபியின் வம்சத்தில், அவனுக்குப் பின் தோன்றியவர்கள் 'செம்பியன்' என்று குலப்பெயர் சூட்டிக்கொண்டு பெருமையடைந்தார்கள். செம்பியர் குலத்தில் இராஜ கேசரி என்று ஒரு பேரரசன் தோன்றினான். அவன் மகன் பரகேசரி என்று புகழ் பெற்றான். இவர்களுக்குப்பின் தோன்றிய மன்னர்கள் கோஇராஜ கேசரி என்றும், கோப்பரகேசரி என்றும் மாற்றி மாற்றிப் பட்டம் சூட்டிக் கொண்டு வந்தார்கள். பசுவுக்கு நீதி வழங்குவதற்குத் தன் அருமைப் புதல்வனைப் பலி கொடுத்த சோழ மன்னர் மனுநீதிச் சோழன் என்று பெயர் பெற்றான். இவனுக்குப் பிற்காலத்தில் பூம்புகார் நகரில் கரிகால் பெருவளத்தான் என்னும் மன்னன் மூவுலகங்களிலும் தன் புகழைப் பரப்பி விளங்கினான். அவன் சோழ நாட்டுப் பெரும்படையுடன் வடக்கே இமயமலை வரையில் படையெடுத்துச் சென்று, அம்மலையின் பனி மூடிய சிகரத்தில் சோழ குலத்துப் புலி இலச்சினையைப் பொறித்தான். இவன் வழியில் நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, குளமுற்றத்துத் துஞ்சியக்கிள்ளி வளவன், சிவபெருமானுடைய பரம பக்தனாகிய கோப்பெருஞ்சோழன் ஆகியவர்கள் இப்புராதன குலத்துக்குப் பெயரும் புகழும் அளித்துச் சிவபதம் அடைந்தார்கள்."
"உலகத்துக்கெல்லாம் ஒளி அளிக்கும் சூரிய பகவானைக் கூட மாரிக்காலத்து மேகங்கள் மறைத்து விடுவது போல், சூரியனுடைய பரம்பரையில் வந்த சோழர் குலத்தைச் சில காலம் பல்லவ பாண்டியப் பகை மேகங்கள் மறைந்திருந்தன. அந்த மேகங்களைச் சிதற அடிக்கும் வஜ்ராயுதம் ஏந்திய தேவேந்திரனுக்கு இணையாக விஜயாலயச் சோழர் தோன்றினார். அந்தச் சோழர் குலப் புலியைக் கண்டதும் பெரும் பிடுகுமுத்தரையன் என்னும் எலி பீதி கொண்டு மாண்டு மறைந்தது. பின்னர் அந்த மகாவீரர் தஞ்சை நகரைக் கைப்பற்றி துர்க்கா பரமேசுவரிக்குக் கோயில் எடுப்பித்தார். பல்லவர்களும் பாண்டியர்களும் மற்றும் பல அரசர்களும் விஜயாலயச் சோழரின் நட்பைக் கோரி அனுப்பிய தூதுவர்கள் சதா காலமும் அந்த மன்னரின் அரண்மனை முற்றத்தில் காத்திருந்தார்கள். அவ்விதம் உதவி கோரி வந்த அரசர்களுக்கு அபயம் அளித்து உதவி செய்யும் பொருட்டு விஜயாலயச் சோழர் பற்பல போர்க்களங்களுக்குச் சென்று போர் புரிந்து தமது திருமேனியில் தொண்ணூற்றாறு விழுப்புண்களைப் பெற்றவரானார். விஜயாலயச் சோழரின் திருக்குமாரர் ஆதித்த சோழர் மாற்றார்களுடைய சேனா மேகங்களைச் சிதறி ஓடச் செய்யும் மற்றொரு கதிரவனாகவே விளங்கினார். திருப்புறம்பயம் போர்க்களத்தில் பல்லவன் அபராஜிதன் பாண்டியனால் முறியடிக்கப்படும் தறுவாயில் இருந்தபோது, ஆதித்த சோழர் முயற்கூட்டதில் புலி புகுவதைப் போல் புகுந்து பாண்டிய சைன்யத்தைச் சின்னாபின்னம் செய்தார். பின்னர், தாம் செய்த உதவியை மதிக்காமல் சிநேகத் துரோகம் செய்த பல்லவனுக்குப் புத்தி புகட்டும் பொருட்டு தொண்டை நாட்டுக்குப் படையெடுத்துச் சென்று அபராஜிதனை அவன் இருந்த யானை மேல் பாய்ந்து வீர சொர்க்கத்துக்கு அனுப்பினார். தமது முன்னோனாகிய கோச்செங்கணானைப் பின்பற்றி, காவேரி நதி உற்பத்தியாகும் சையபர்வதத்திலிருந்து பூம்புகார் நகரம் வரையில் எண்பத்திரண்டு சிவாலயங்களை எடுப்பித்தார். ஆதித்த சோழரின் புதல்வராகிய பராந்தக சோழர் பிறக்கும் போதே தம்முடைய இரு தோள்களிலும் வீரலக்ஷ்மியையும் விஜயலக்ஷ்மியையும் சுமந்து கொண்டு பிறந்தார். வெள்ளூரில் பாண்டியனைப் புறங்கண்ட அம்மன்னர், மதுரையும் ஈழமும் கொண்டதுடன், சேர நாட்டு வேழப்படைக்கு ஒரு சிங்கமாக விளங்கினார். வடக்கே துங்கபத்திரை நதிக்கு அப்பால் இருந்த சளுக்கர்களும் வேங்கி மண்டலத்தாரும் பராந்தக சோழருடைய பெயரைக் கேட்டு சிம்ம சொப்பனம் கண்டவர்கள் போல் நடுநடுங்கினார்கள். அவருடைய புகழைக் கேட்டுப் பொறுக்காமல் பொறாமை கொண்ட இரட்டை மண்டலத்துக் கன்னர தேவன் ஏழு சமுத்திரம் சேர்ந்தது போன்ற மாபெரும் படையைத் திரட்டிக்கொண்டு பராந்தக சக்கரவர்த்தியைப் போரில் புறங்காண வந்தான். பராந்தகரின் மூத்த புதல்வராகிய இராஜாதித்த தேவர் குருக்ஷேத்திரத்தை ஒத்திருந்த தக்கோலப் போர்க்களத்தில் கன்னர தேவனையும் அவனுடைய மாபெரும் கடல் போன்ற சேனையையும் முறியடித்துச் சின்னாபின்னம் செய்த பிறகு யானை மேல் துஞ்சி வீர சொர்க்கம் எய்தினார். பராந்தக சோழர் தில்லைச் சிதம்பரத்து நடராஜப் பெருமான் ஆலயத்தில் பொன் மண்டபம் கட்டிய பின்னர் அப்பெருமானுடைய இணையடிகளை அடைந்தார்! அவருடைய புதல்வர் சிவஞான கண்டராதித்த தேவர் சிவாலயப் பணிகள் செய்வதில் ஈடுபட்டிருந்து சிவ பதத்தை அடைந்தார். அவருடைய காலத்தில் தொண்டை மண்டலத்தைப் பகைவர்களுடைய ஆதிக்கத்திலிருந்து விடுதலை செய்து சீட்புலி நாடு வரையில் புலிக் கொடியை நிலைநாட்டியவரான அரிஞ்சயத் தேவரும் தமது தமையனைப் பிரிந்து அதிக காலம் இருக்க மனமின்றி விண்ணுலகம் எய்தினார். அவருடைய திருப் புதல்வர் சுந்தர சோழ சக்கரவர்த்தி பின்னர் சோழ சிங்காதனம் ஏறினார். தான் ஒளிந்திருந்த பொந்திலிருந்து வெளியில் தலை காட்டிய பாண்டிய நரியின் மீது பாய்ந்து அதை மீண்டும் பொந்துக்குள் ஒளிந்துகொள்ளும்படி செய்தார்! சுந்தர சோழ சக்கரவர்த்தியின் வெண்கொற்றக் குடை நிழலில் மூன்று உலகமும் சிறிதும் கவலையின்றி நிர்ப்பயமாக வாழ்ந்து வருகின்றன."
"இவ்வாறு ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வீரப் புகழ் பெற்று விளங்கும் குலத்தில் வந்த பொன்னியின் செல்வரை எம்மொழிகளால் யாம் போற்ற முடியும்? அவருடைய புகழைச் சொல்வதற்குக் கலைமகளே பிறந்து வந்தால் ஒருவேளை சாத்தியமாகக் கூடும். எம்மைப்போன்ற மிகச் சாதாரண புலவர்களால் இயம்பத் தரமன்று..."
இவ்விதம் நல்லன் சாத்தனார் சோழ குலப் பெருமையைப் பாடி முடித்தார். அவருக்குப் பிறகு வடமொழிப் புலவர்களும், புத்தபிக்ஷுக்களும், சிவாச்சாரியார்களும், வைஷ்ணவ ஆச்சாரியர்களும் வாழ்த்துக் கூறுவதற்குக் காத்திருந்தார்கள். இவர்களை எப்படிச் சுருக்கமாக முடிக்கச் செய்வது என்பது பட்டாபிஷேக முகூர்த்தம் வைத்திருப்பவர்களுக்குப் பெரும் கவலையாகப் போய்விட்டது. அப்படிக் கவலைப்பட்டவர்களில் சின்னப் பழுவேட்டரையரும் ஒருவர். அவர் தமது கரத்தினால் சோழர் குலத்துப் புராதன கிரீடத்தை எடுத்துப் பொன்னியின் செல்வரின் சிரசில் சூடுவதற்கு ஆயத்தமாயிருந்தார். புலவர்களையும் பண்டிதர்களையும் எப்படி விரைவில் பாடி முடிக்கச் செய்வது என்று எண்ணிச் சுற்று முற்றும் பார்த்த சின்னப் பழுவேட்டரையரின் சமீபத்தில் புதிய ஆள் ஒருவன் திடுதிப்பென்று வந்தான். தெரு வீதியில் மொய்த்து நின்று கொண்டிருந்த அவ்வளவு ஜனக் கூட்டத்தாரையும் தாண்டி அவன் எப்படி ஆஸ்தான மண்டபத்துக்குள் வந்தான் என்பது பலருக்கும் வியப்பு அளித்தது. ஆனால் வந்தியத்தேவனுக்கு அது வியப்பு அளிக்கவில்லை. மாறுவேடம் பூண்டிருந்தவன் ஆழ்வார்க்கடியான்தான் என்பதை அறிந்திருந்த வந்தியத்தேவன் பொன்னியின் செல்வரை நோக்கினான். அவரும் அந்த சமிக்ஞையைத் தெரிந்து கொண்டவராகத் தோன்றினார்.
சின்னப் பழுவேட்டரையரின் காதில் ஆழ்வார்க்கடியான் என்ன இரகசியச் செய்தியைச் சொன்னானோ, தெரியாது. உடனே அவருடைய முகத்தில் பெரும் கவலையும், கலக்கமும் குடிகொண்டன. ஒரு கணம் தயங்கி நின்று விட்டு அவனை அழைத்துக் கொண்டு அச்சபா மண்டபத்தில் அதிகக் கூட்டமில்லாத ஒரு பக்கத்துக்குச் சென்றார்.
இதைக் கவனித்தார் பொன்னியின் செல்வர், நல்லன் சாத்தனார் சோழர் குலப் பெருமைக் கூறி வந்தபோதெல்லாம் கைகூப்பி நின்று வணக்கத்துடன் கேட்டுக்கொண்டு வந்தவர், இப்போது அந்தப் புலவரை நோக்கி, "ஐயா! புலவரே! இத்தனை நேரமும் தாங்கள் கூறி வந்த புகழெல்லாம் என் முன்னோரைப் பற்றியவை அல்லவோ? இந்தப் புராதனப் பெருமை வாய்ந்த சிங்காதனத்தில் அமர்ந்து மணி மகுடம் சூட்டி கொள்வதற்குத் தகுதியுள்ளவனாக நான் என்ன காரியம் செய்திருக்கிறேன்? அதைப் பற்றிக் கூறுவதற்குக் கலைமகள் இங்கே இப்போது பிரசன்னமாவது சாத்தியமில்லையாதலால் தங்களால் இயன்ற வரையில் சற்று எடுத்து இயம்பலாமே?" என்றார்.
புலவர் திகைத்து நின்றதைப் பார்த்த பொன்னியின் செல்வர், "ஐயா! தாங்கள் திகைத்து நிற்பது இயல்பே, தங்கள் பேரில் குற்றம் இல்லை. அவ்வாறு என்னுடைய புகழைப் பாட்டில் அமைத்துப் பாடும்படியாக நான் இன்னமும் ஒரு காரியமும் செய்யவில்லை. இன்றுதான் தொடங்கப் போகிறேன்!" என்றார்.