பொன்னியின் செல்வன்/மணிமகுடம்/பின்னிரவில்
மணிமகுடம் - அத்தியாயம் 36
[தொகு]பின்னிரவில்
சுந்தர சோழரின் சிரிப்பு ஒலிக் கேட்டுக் கொண்டிருக்கும் போதே பெண்மணிகள் அங்கு வந்தார்கள். முன்னால் மகாராணியும் அவளுக்குப் பின்னால் குந்தவை ஒரு பக்கமும் வானதி ஒரு பக்கமும் பிடித்து இழுத்துக் கொண்டு வர மந்தாகினியும், அவர்களுக்கும் பின்னால் பூங்குழலியும் ஒரு தாதிப் பெண்ணுமாக ஊர்வலம் போல வந்தார்கள். சுந்தர சோழரின் சிரிப்பு அவர்களுக்கும் சிறிது குதூகலத்தை உண்டு பண்ணியிருந்தது. மந்தாகினி அவரை ஒரு கணம் நிமிர்ந்து பார்ப்பதும் மறு கணம் குனிந்து தரையைப் பார்ப்பதுமாயிருந்தாள். அவளுடைய அலங்காரம் இப்போது பூரணம் அடைந்திருந்தது. குந்தவைப்பிராட்டி அலங்காரக் கலையில் இணையில்லாத தேர்ச்சி பெற்றவள் என்று அந்தக் காலத்தில் புகழ் பெற்றிருந்தாள். அதற்காகவே சிற்றரசர்கள் தங்கள் மகளிரை இளையபிராட்டியின் தோழியாயிருப்பதற்கு பழையாறைக்கு அனுப்புவது வழக்கம். குந்தவை தன் முழுத் திறமையையும் ஊமை ராணியை அலங்கரிப்பதில் பயன்படுத்தியிருந்தாள். அடி உள்ளத்தில் தோன்றிய ஏதோ ஓர் உருத்தெரியாத உணர்ச்சியினால் மந்தாகினியின் தலைக் கூந்தலை நந்தினியைப்போல் ஆண்டாள் கட்டுடன் அலங்கரித்திருந்தாள். இந்த அலங்காரம் முடிந்ததும் பெண்கள் எல்லோருக்குமே அவள் தத்ரூபமாக நந்தினியைப் போலிருந்தது தெரிந்து விட்டது. காட்டிலே அலைந்து திரிந்த தேக ஆரோக்கியமுள்ள மாதரசியாதலால் பிராயத்திலே இருந்த இருபத்தைந்து வருஷ வித்தியாசம் கூடத் தெரியவில்லை. மற்றப் பெண்மணிகள் மந்தாகினி தேவியைச் சிறிது பெருமையுடனேயே அழைத்துக் கொண்டு வந்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தினால் பெருமை கொண்டிருந்தார்கள்.
இந்தச் சரித்திரம் நிகழ்ந்த நாட்களில் தமிழகத்துப் பேரரசர்களும் குறுநில மன்னர்களும் பல மனைவியரை மணப்பது சகஜமாயிருந்தது. ஓயாமல் போர்கள் நடந்த வண்ணமாயிருந்தன. அரசிளங் குமாரர்களோ போர் முனையில் எப்போதும் முன்னணியில் இருந்தார்கள். ஆகையால் குலம் நசிக்காமல் பாதுகாப்பதற்காக அரச குலத்தவர் பெண்கள் பலரை மணப்பது வழக்கமாயிருந்தது. பட்ட மகிஷியாயிருப்பவள் மற்ற ராணிகளிடம் அசூயை கொள்ளாமல் அணைத்து ஆதரிப்பது ஒரு சிறந்த நறுங் குணமாகக் கருதப்பட்டது. இந்த முறையிலேயே மலையமான் மகள் உற்சாகமாயிருந்தாள். குந்தவை தன்னுடைய அலங்காரத் திறமையை இவ்வளவு நன்றாகக் காட்ட முடிந்தது பற்றிப் பெருமை கொண்டிருந்தாள். பைத்தியக்காரப் பிச்சியாகத் தோன்றியவளை இணையில்லா அழகு வாய்ந்த இளம் பெண்ணாகத் தோன்றும்படியல்லவா அவள் செய்துவிட்டாள்? பூங்குழலிக்கோ தன் அத்தைக்கு அரண்மனையில் இவ்வளவு இராஜோபசாரங்கள் நடப்பது பற்றிக் களிப்பு உண்டாகியிருந்தது. அவள் எதிர்பார்த்ததற்கெல்லாம் மாறாக இங்கேயுள்ள அரண்மனைப் பெண்கள் நடந்து கொண்டிருந்தார்கள் அல்லவா?
இவ்வாறு பெருமிதம் பொங்க அந்த அறையினுள் பிரவேசித்த பெண்களின் ஊர்வலத்தைச் சக்கரவர்த்தி பார்த்தார். அவருடைய சிரிப்பு அந்த க்ஷணமே நின்றுவிட்டது. மந்தாகினியின் புதிய தோற்றம் அவருக்கே அளவில்லாத பிரமிப்பை அளித்தது. தாம் கண் முன்னால் பார்ப்பது உண்மைதானா என்று சந்தேகிப்பவர்போல் கண்களைக் கையினால் சிறிது மூடிக் கொண்டும் பின்னர் திறந்தும் உற்று உற்றுப் பார்த்தார். சற்று முன்னால் முதன்மந்திரி சொல்லிக் கொண்டிருந்த விவரங்கள் எல்லாம் அவர் மனத்தில் பதிந்திருந்தன. சில காலமாக நள்ளிரவில் தன் எதிரே தோன்றித் தன்னை வருத்திய பெண் உருவத்துக்கும் மந்தாகினியின் உருவத்துக்கும் உள்ள ஒற்றுமை அவருக்கு நன்கு புலனாயிற்று. அதே சமயத்தில் சில வேற்றுமைகள் இருப்பதையும் கவனித்துக் கொண்டார். இதைப் பற்றிய மர்மத்தை முழுவதும் ஆராய்ந்து உண்மையை அறிய வேண்டும் என்னும் ஆசை அவர் உள்ளத்திலும் உதயமாயிற்று. மந்தாகினி மீது அவருக்கு முதலில் ஏற்பட்டிருந்த அருவருப்பு அப்படியே மாறாமல் இருந்தது. ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமலிருக்கத் தீர்மானித்தார்.
அநிருத்தரிடம் அவர், "முதன்மந்திரி! சற்று முன் உங்களை நான் பைத்தியம் என்றேன். பிரமை, பைத்தியம் எல்லாம் எனக்குத்தான் என்று தோன்றுகிறது. இனிமேல் தினந்தோறும் வைத்தியன் என்னை வந்து பார்ப்பது மட்டும் போதாது; மாந்திரீகனையும் அனுப்பி வைக்க வேண்டியதுதான். பழுவூர் இளைய ராணியைப் பார்க்க வரும் மந்திரவாதியைப் பிடித்து அனுப்பி வைத்தால் கூடப் பாவமில்லை!" என்று மெல்லிய குரலில் கூறினார்.
அநிருத்தரின் உள்ளத்தில் ஒரு சிறிய துணுக்கம் உண்டாயிற்று. "அந்த மந்திரவாதிகளில் எவனும் சக்கரவர்த்தியை நெருங்காமலிருக்கட்டும்" என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டார். பிறகு, "மன்னர் பெரும! மந்திரவாதி எதற்கு? வேறு மந்திரந்தான் எதற்கு? ஸ்ரீ மந் நாராயணனுடைய திருநாமத்தை விடச் சக்தியுள்ள மந்திரம் வேறு ஒன்றுமில்லை!" என்றார்.
குந்தவைப்பிராட்டி, "அப்பா! என்னை அழைத்து வரச் சொன்னீர்களாமே? பழையாறைக்குப் போக வேண்டும் என்று கூறினீர்களாமே? நாங்கள் எல்லோருமே போகலாமா?" என்றாள்.
சுந்தர சோழர் அதற்கு மறுமொழி சொல்லாமல் முதன்மந்திரியைப் பார்த்து, "அநிருத்தரே! நான் என் கருத்தை மாற்றிக் கொண்டேன். இந்தப் பெண்கள் எதனாலோ ஒரே உற்சாகமாக இருக்கிறார்கள். வீட்டுக்குப் புதிய மருமகள் வந்தது போலக் களிப்படைந்திருக்கிறார்கள். இச்சமயம் இவர்களைப் பிரிக்க எனக்கு விருப்பமில்லை. தாங்கள் சற்று முன் சொன்னது போல் இவர்கள் எல்லாரும் சில நாள் இங்கேயே தங்கியிருக்கட்டும். செம்பியன் மாதேவி தங்களிடம் மிக்க நம்பிக்கையும் மரியாதையும் உள்ளவர். ஆகையால் தாங்களே நேரில் சென்று அவரை அழைத்துக் கொண்டு வாருங்கள்! தங்கள் சீடனை நாகப்பட்டினத்துக்கு அனுப்புங்கள். பெரிய பழுவேட்டரையரையும் அவருடைய இளைய ராணியையும் உடனே அழைத்து வர ஏற்பாடு செய்யும்படி நானே சின்னப் பழுவேட்டரையருக்குச் சொல்கிறேன்!" என்றார்.
"அப்படியே செய்யலாம், சக்கரவர்த்தி! ஆனால் எல்லாரும் வந்து சேருவதற்குச் சில தினங்கள் பிடிக்கலாம். நேற்று அடித்த புயல் மழை காரணமாக நதிகளில் எல்லாம் பூரணப் பிரவாகம் ஓடிக் கொண்டிருக்கிறது!" என்றார் முதன்மந்திரி.
"அதனால் பாதகம் இல்லை; இத்தனை நாள் பொறுத்த நாம் இன்னும் சில நாள் பொறுத்திருப்பதில் நஷ்டம் ஒன்றுமில்லை. கரிகாலனையும் அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்தால் எல்லா விஷயங்களையும் முடிவு செய்து விடலாம். அவன் இன்னமும் வருவதற்கு மறுத்தால் நானே புறப்பட்டுப் போக வேண்டியதுதான். அதைப் பற்றிப் பிறகு பேசிக் கொள்ளலாம். நீங்கள் நாளைக்கே சென்று பெரிய பிராட்டியை எப்படியாவது கையோடு அழைத்து வாருங்கள்! போகும்போது புயலினால் கஷ்டத்திற்குள்ளான மக்களைப் பற்றியும் கவனியுங்கள். நம்முடைய குடும்ப விவகாரங்களில் கவனம் செலுத்தி அந்த முக்கியமான காரியத்தை மறந்தே விட்டோ ம்" என்றார் சக்கரவர்த்தி.
"இல்லை, பிரபு! அதை நான் மறக்கவே இல்லை. எல்லாக் காரியங்களும் சரிவர நடைபெறும்; தாங்கள் நிம்மதியாயிருக்கலாம்" என்று சொல்லிவிட்டு முதன்மந்திரி விடை பெற்றுச் சென்றார்.
அன்றிரவு சுந்தர சோழர் உண்மையிலேயே இத்தனை காலமும் அனுபவியாத நிம்மதியை அடைந்திருந்தார். கரையர் குலத்து மந்தாகினி இறக்கவில்லை என்னும் செய்தி மெய்யாகவே அவருடைய நெஞ்சில் வெகு காலமாகக் குடிகொண்டிருந்த ஒரு பெரும் பாரத்தை அகற்றிவிட்டது. அருள்மொழிவர்மன் நாகப்பட்டினத்தில் இருக்கிறான் என்ற செய்தியும் அவருக்கு ஆறுதல் அளித்திருந்தது. சூடாமணி விஹாரம் மிகப் பலமான கட்டிடமாதலால் அதில் உள்ளவர்க்கு அபாயம் ஒன்றும் நேருவதற்கில்லை என்ற தைரியமும் அவருக்கு இருந்தது. பழுவூர் இளைய ராணி அவருடைய புதல்வியாயிருக்கலாம் என்று அநிருத்தர் குறிப்பிட்டதை நினைக்க நினைக்க அவருக்கு வேடிக்கையாயிருக்கிறது. இது சக்கரவர்த்தியின் முகத்திலும் அடிக்கடி குறுநகையை உண்டாக்கியது.
மலையமான் மகள் முதலிய பெண்களுடன் அவர் சிறிது நேரம் உல்லாசமாகப் பேசிக் கொண்டிருந்தார். குந்தவையின் அலங்காரத் திறமையைப் பற்றிப் பாராட்டினார்.
"காட்டுமிராண்டி ஜன்மமாகக் காணப்பட்டவளைத் தேவலோகத்து இந்திராணியாக மாற்றி விட்டாயே? ஆனால் அதற்கெல்லாம் இந்தக் கிழவிதானா அகப்பட்டாள்? வானதியைப் போன்ற சிறு பெண்களிடமல்லவா உன் திறமையைக் காட்ட வேண்டும்?" என்று பரிகாசமும் செய்தார். பிறகு பூங்குழலியிடம் அருள்மொழிவர்மனைப் பற்றி மேலும் விவரங்கள் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
அதன் முடிவில் பூங்குழலி, "சுவாமி, நான் கோடிக்கரைக்குத் திரும்பிப் போக அனுமதி கொடுங்கள். நாளைக்கே நான் புறப்படலாம் அல்லவா? என் அத்தையைப் பற்றிய கவலை இனிமேல் எனக்கு இல்லை!" என்றாள்.
"உன் அத்தை மகன் ஒருவன் காய்ச்சல் வந்து கிடக்கிறான் என்றாயே? அவனைப் பற்றிக்கூடக் கவலை இல்லையா? போவதற்கு நீ இவ்வளவு அவசரப்பட வேண்டாம். சில நாள் இருந்துவிட்டுப் போ!" என்றார் சக்கரவர்த்தி. பூங்குழலி மௌனமாயிருந்தாள்.
அன்றிரவு சுந்தர சோழ சக்கரவர்த்தி நிம்மதியாக உறங்கினார். கனவுகள் கூட அதிகம் காணவில்லை. கண்ட கனவுகளும் துர்ச் சொப்பனங்களாக இல்லை; இன்பமான கனவுகள். அவருக்குப் பக்கத்து அறையிலே படுத்துறங்கிய அரண்மனைப் பெண்டிர்களும் நிம்மதியாகவே தூங்கினார்கள். அவர்களிலே நிம்மதியில்லாமலும் நன்றாகத் தூங்காமலும் இருந்தவள் மந்தாகினி ஒருத்திதான். இன்று நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் அவளுடைய மனதில் பெருங் கிளர்ச்சியை உண்டுபண்ணியிருந்தன. முக்கியமாக அவளுடைய நினைவு பொக்கிஷ நிலவறைக்கும் சுரங்கப்பாதைக்கும் ஊசலாடிக் கொண்டிருந்தது. இராவணனுடைய கரங்களை உடைத்து அந்தச் சுரங்கப்பாதையை மூடிவிடுவதற்குத் தான் செய்த முயற்சி பலிக்காமற் போனது பற்றி எண்ணி எண்ணி அவள் மனம் நிம்மதிகொள்ளாமல் தவித்தது. தூங்கா விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் சுற்று முற்றும் பார்த்துக் கொண்டேயிருந்தாள். முக்கியமாக மேல் மாடங்களின் சாளரங்களை அடிக்கடி உற்று நோக்கிக் கொண்டிருந்தாள்.
நள்ளிரவு கழிந்தது; பின்னிரவு தொடங்கியது. மூன்றாவது ஜாமம் ஏறக்குறைய முடியும் நேரம் ஆகிவிட்டது. அப்போது மேல் மாடத்தின் சாளரம் ஒன்றில் ஒரு தோற்றம் அவளுக்குத் தென்பட்டது. அகோர பயங்கர முகம் ஒன்று அந்தச் சாளரத்தை ஒட்டினாற் போலிருந்த அந்த அறைக்குள்ளே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்டாள். அந்த முகம் இன்னாருடைய முகம் என்பதும் ஒருவாறு அவளுக்குத் தெரிந்துவிட்டது. தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு எழுந்து நின்றாள். மறுபடியும் அந்தச் சாளரத்தை உற்றுப் பார்த்தாள். அங்கே அந்த முகத்தைக் காணவில்லை. பக்கத்து அறை வாசற்படி வரையில் மெள்ள நடந்து சென்று எட்டிப் பார்த்தாள். அங்கே சக்கரவர்த்தி நிம்மதியாக உறங்குவதைக் கண்டாள். அந்த அறையில் மேல் மாடச் சாளரங்களையும் உற்றுப் பார்த்தாள் ஒன்றும் தெரியவில்லை.
திரும்பி வந்து சிறிது சத்தம் செய்யாமல் பூங்குழலியைக் கையினால் தொட்டு அசைத்து எழுப்பினாள். அசந்து தூங்கிய பூங்குழலி கண் விழித்தாள். ஊமை ராணியின் முகத்தோற்றத்தைக் கண்டு திடுக்கிட்டாள். ஊமை ராணி சமிக்ஞையினால் தன்னைத் தொடர்ந்து வரும்படி அவளிடம் சொன்னாள். அத்தையிடம் அளவிலாத பக்தி விசுவாசம் வைத்திருந்த பூங்குழலியும் சத்தம் செய்யாமல் எழுந்து அவளைப் பின்பற்றிச் சென்றாள்.
ஊமை ராணி சிற்ப மண்டபத்தை நோக்கிச் சென்றாள். போகும்போது நடைபாதையில் எரிந்து கொண்டிருந்த தூங்கா விளக்கு ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு நடந்தாள். சிற்ப மண்டபத்தை அடைந்ததும் பூங்குழலிக்குச் சிறிது கவலை உண்டாயிற்று. மறுபடியும் இவள் இராவணச் சிற்பத்தை உடைக்கப் போகிறாளா, என்ன? அப்படியானால் அதனால் ஏற்படும் சத்தத்தில் அரண்மனையில் உள்ளவர்கள் அத்தனை பேரும் விழித்துக் கொள்வார்களே? தன் அத்தை பைத்தியக்காரிதான் என்று ஊர்ஜிதமல்லவா ஆகிவிடும்?
அத்தை அந்த முயற்சியில் இறங்கினால் தான் அதைத் தடுத்தேயாக வேண்டும். சுத்தியைப் பலவந்தமாகப் பிடுங்கியாவது தடுத்தாக வேண்டும்... இப்படி எண்ணிக் கொண்டே அத்தையைத் தொடர்ந்து சிற்ப மண்டபத்துக்குள் பூங்குழலி பிரவேசித்தாள். ஆ! இது என்ன! அந்த இராவணச் சிற்பத்தின் தலை ஒன்று அசைகிறதே? இல்லை, இல்லை! இராவணன் தலை அசையவில்லை. இராவணனுடைய தலைகளுக்கும், மேலே உள்ள கைலாச மலைக்கு மத்தியில் வேறொரு மனிதனின் தலை மாதிரி தெரிந்தது! உடனே அது மறைந்துவிட்டது. வீண் பிரமை! தூக்கக் கலக்கம்! விளக்கின் ஒளியில் உண்டாகும் சிற்பங்களின் நிழல் தோற்றமாயிருக்க வேண்டும்!...
மந்தாகினிக்கும் அந்தத் தோற்றம் புலப்பட்டதோ என்னமோ, தெரியவில்லை; ஆனால் அவள் இராவணன் சிலையை நெருங்கித்தான் சென்றாள். நல்ல வேளையாகப் பக்கத்தில் கிடந்த சுத்தியின் மீது அவள் கவனம் செல்லவில்லை. இராவணன் தலைகள் - கைகளுக்கும் அவை தாங்கிக் கொண்டிருந்த கைலாசகிரிக்கும் நடுவிலிருந்த இருளடர்ந்த பகுதியில் தீபத்தைத் தூக்கிப்பிடித்துக் காட்டினாள். அங்கே ஒரு துவாரம் இருந்தது தெரிந்தது. பூங்குழலி முன்னமேயே ஊகித்தது சரிதான். அங்கே ஒரு சுரங்கப்பாதையின் வெளித்துவாரம் இருக்கிறது. யாரும் சந்தேகிக்க முடியாதபடி அவ்வளவு சாமர்த்தியமாக அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சுரங்கப்பாதையின் துவாரத்தை மூடிவிடுவதற்கே முன்னிரவில் தன் அத்தை பிரயத்தனப்பட்டாள். அதை அறிந்து கொள்ளாமல் மற்றவர்கள் தடுத்து விட்டார்கள்.
இவ்விதம் பூங்குழலி எண்ணிக் கொண்டிருக்கும்போதே ஊமை ராணி தன் மருமகளுக்குத் தன்னைப் பின் பற்றி வரும்படி சமிக்ஞை செய்து விட்டுக் கையில் விளக்குடனே அந்தத் தூவரத்தில் சிரமப்பட்டுப் புகுந்து அதில் இறங்கிச் செல்லத் தொடங்கினாள். சிறிது சிறிதாக அவள் உடம்பு மறைந்து வந்து தலையும் மறைந்து கையில் பிடித்திருந்த விளக்கும் மறைந்தது. கொஞ்சம் வெளிச்சம் மட்டும் தெரிந்தது. பிறகு பூங்குழலியும் உடம்பை நெளித்து வளைத்துத் தலையில் மோதிக் கொள்ளாமல் ஜாக்கிரதையாக அந்தச் சுரங்கத் துவாரத்துக்குள் இறங்கினாள். சில கணங்களுக்கெல்லாம் அவளும் மறைந்தாள். பின்னர், விளக்கின் ஒளியும் மறைந்தது சிற்ப மண்டபத்தில் அந்தகாரம் குடிகொண்டது.
காலையில் மலையமான் மகளும் குந்தவையும் வானதியும் எழுந்து பார்த்தபோது ஊமை ராணியையும் பூங்குழலியையும் அவர்கள் படுத்திருந்த இடத்தில் காணாமல் திடுக்கிட்டார்கள். அரண்மனை முழுவதும், தோட்டத்திலும், சிற்ப மண்டபத்திலும் தேடிப் பார்த்தும் அவர்கள் அகப்படவில்லை. அவர்கள் எப்படி மாயமாய் மறைந்தார்கள் என்பதை யாராலும் ஊகிக்க முடியவில்லை. சக்கரவர்த்தியிடம் கூறிய போது முதலில் அவர் சிறிது கவலைப்பட்டார். பின்னர், "அந்தப் பைத்தியங்கள் போய்த் தொலைந்ததே நல்லது! எப்படி தொலைந்தால் என்ன?" என்றார். எனினும் அவர் உள்ளத்தினுள்ளே இனந்தெரியாத கவலையும் பயமும் குடிகொண்டன.