பொன்னியின் செல்வன்/மணிமகுடம்/மணிமேகலை

விக்கிமூலம் இலிருந்து

மணிமகுடம் - அத்தியாயம் 6[தொகு]

மணிமேகலை

சம்புவரையரின் செல்வப் புதல்வியான மணிமேகலை குதூகலம் நிறைந்த பெண், தந்தையும் தாயும் தமையன் கந்தமாறனும் அவளைக் குழந்தைப் பிராயம் முதல் அன்பும் ஆதரவுமாய்ப் பேணி வளர்த்து வந்தார்கள். சம்புவரையரின் அரண்மனையில் அவள் கொடுங்கோல் அரசியாக விளங்கி வந்தாள். அவள் இட்டதே மாளிகைக்குள் சட்டமாக நடந்து வந்தது. சில காலத்துக்கு முன்பு வரையில் மணிமேகலையின் வாழ்கை ஆட்டமும் பாட்டமும் களியாட்டமுமாகக் கழிந்து வந்தது. நாலைந்து மாதத்துக்கு முன்னால் அவளுடைய வாழ்க்கையில் முதன் முதலாக ஒரு தடங்கல் ஏற்பட்டது. அவளது விருப்பத்துக்கு விரோதமான காரியத்தை அவள் செய்ய வேண்டும் என்று வீட்டுப் பெரியவர்கள் பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தார்கள். 'பிடிவாதம் உதவாது' என்ற பாடத்தை வீட்டுப் பெரியவர்களுக்கு மணிமேகலை எவ்வளவுதான் உபதேசித்தும் பயன் தராது போலிருந்தது.

இரண்டு மூன்று வருஷமாகக் கந்தமாறன் போர்க்களங்களிலிருந்து திரும்பி வீட்டுக்கு வரும்போதெல்லாம் அவனுடைய சிநேகிதன் வல்லவரையனைப் பற்றி அவளிடம் கூறுவான். அவனுடைய வீர தீர சாமர்த்தியங்களைப் பற்றியும், புத்தி சாதுர்யத்தைப் பற்றியும் வானளாவப் புகழ்வான். அழகில் மன்மதன் என்றும், வீரத்தில் அர்ச்சுனன் என்றும், யுக்தியில் கிருஷ்ண பகவான் என்றும் வியந்து வர்ணிப்பான். "அவன் தான் உனக்குச் சரியான கணவன். துஷ்டத்தனத்தை அடக்கி உன்னைக் கட்டுக்குள் வைத்திருக்கக் கூடியவன்" என்பான். இதையெல்லாம் அடிக்கடி கேட்க வேண்டுமென்று மணிமேகலைக்கு ஆசையாயிருக்கும். அதே சமயத்தில் வெளிப்படையாகக் கந்தமாறன் மீது அவள் எரிந்து விழுவாள்; அவனுடன் சண்டை பிடிப்பாள்.

"இப்படி வெறுமனே சொல்லிக் கொண்டேயிருக்கிறாயே? ஒருநாள் அழைத்துக் கொண்டு தான் வாயேன்! அவன் சாமர்த்தியத்தைப் பார்த்துவிடுகிறேன்" என்பாள்.

"ஆகட்டும்; ஆகட்டும்!" என்று கந்தமாறன் கறுவிக் கொண்டிருப்பான்.

மணிமேகலையும் ஒருவாறு வல்லவரையன் வந்தியத்தேவனைக் கற்பனைக் கண்ணால் கண்டு, மானஸ உலகில் அவனோடு பேசிப் பழகி, சிரித்து விளையாடி, சண்டை போட்டுச் சமாதானம் செய்து, இப்படியெல்லாம் பகற்கனவு காண்பதில் காலம் போக்கி வந்தாள். அவளுடைய அந்தரங்கத் தோழிகளிடம் சில சமயம் தன் தமையனுடைய சிநேகிதனான வாணர் குல வீரனைப் பற்றிப் பேசி மகிழ்ந்தும் வந்தாள். இத்தகைய இனிய பகற்கனவுகளுக்கு நாலு மாதங்களுக்கு முன்னால் எதிர்பாராத ஓர் இடையூறு நேர்ந்தது.

கந்தமாறன் வேறு ஸ்வரத்தில் பேச ஆரம்பித்தான். "வீடு வாசலும் பதவியும் அந்தஸ்தும் அற்ற அந்த அநாதைப் பையனை மறந்து விடு!" என்று கூறலானான். தஞ்சாவூர்ச் சிம்மாசனத்தில் அவளை ஏற்றி வைக்கத் தீர்மானித்திருப்பதாக ஆசை காட்டினான். பின்னர் ஒருநாள், தெளிவாகவே விஷயத்தைச் சொல்லி விட்டான். ஏற்கனவே சின்னப் பழுவேட்டரையரின் மகளை மணந்தவனான மதுராந்தகனுக்கு இவளையும் மணம் புரிந்து கொடுக்கப் போவதாகவும் கூறினான். மதுராந்தகன் தான் அடுத்த சக்கரவர்த்தியாகப் போகிறான் என்று ஜாடைமாடையாகச் சொன்னான். மதுராந்தகனை மணந்தால் மூன்று உலகங்களுக்கும் மணிமேகலை சக்கரவர்த்தினியாக விளங்குவாள் என்றும், அவள் வயிற்றில் பிறக்கும் பிள்ளையும் ஒருவேளை சாம்ராஜ்யம் ஆளும் பேறு பெறுவான் என்றும் கூறினான். இதற்கெல்லாம் அவளுடைய பெற்றோர்களும் ஒத்துப் பாடினார்கள்.

ஆனால் மணிமேகலைக்கு இந்தப் பேச்சு ஒன்றும் பிடிக்கவில்லை, வந்தியத்தேவனைப் பற்றிக் கேட்டுக் கேட்டு அவள் மனம் அவனிடம் ஈடுபட்டிருந்தது. அதுமட்டுமல்ல மதுராந்தகன் வீரமற்றவன் என்றும், போர்க்களத்தையே பார்த்து அறியாதவன் என்றும், நேற்று வரை உடம்பெல்லாம் விபூதி பூசி ருத்திராட்சம் அணிந்து சாமியார் ஆகப் போவதாகச் சொல்லி வந்தவன் என்றும் அறிந்திருந்தாள். போதாதற்கு ஏற்கெனவே அவனுக்கு ஒரு கலியாணம் ஆகியிருந்தது. தஞ்சாவூர் அரண்மனைப் பெண்களோ மிகவும் கர்வக்காரிகள். தங்களுக்குத்தான் நாகரிகம் தெரியும் என்று எண்ணி மற்ற ஊர்க்காரர்களை அலட்சியம் செய்கிறவர்கள். இதையெல்லாம் எண்ணி மணிமேகலை மிக்க எரிச்சல் கொண்டாள். தஞ்சாவூர்ச் சிம்மாசனம் கிடைப்பதாயிருந்தாலும் சரி, தேவலோகத்துத் தேவேந்திரனுடைய சிம்மாசனமே கிடைப்பதாயிருந்தாலும் சரி, மதுராந்தகனை மணந்து கொள்ள முடியாது என்று அடம்பிடித்தாள்.

அப்புறம் இன்னொரு செய்தி தெரிய வந்தபோது அவளுடைய மன உறுதி வலுவடைந்தது. பெரிய பழுவேட்டரையர் கடம்பூருக்கு வந்திருந்தபோது பின்னோடு இளையராணி நந்தினியும் வந்திருந்ததாகச் சொன்னார்கள். ஆனால் அவள் அந்தப்புரத்துக்குள்ளேயே வரவில்லை. கடம்பூர் அரண்மனைப் பெண்களைப் பார்க்கவும் இல்லை. இது முதலில் வியப்பை அளித்தது. அரண்மனைப் பெண்டிர் அதைப் பற்றி பரிகாசமாகவும் நிந்தனையாகவும் பேசிக் கொண்டார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உண்மை தெரிந்தது. மூடுபல்லக்கில் இளையராணி வரவில்லையென்றும் மதுராந்தகன் வந்திருந்தான் என்றும் அறிந்தபோது மணிமேகலையின் அருவருப்பு அதிகமாயிற்று. "சீச்சீ! இப்படிப் பயந்து கொண்டு மூடுபல்லக்கில் பெண் வேஷம் தரித்துக் கொண்டு வருகிறவனையா நான் மணவாளனாக வரிப்பேன்? ஒருநாளும் இல்லை!" என்று மணிமேகலை உறுதியடைந்தாள்.

மதுராந்தகன் மூடுபல்லக்கில் அரண்மனைக்கு வந்திருந்த அதே சமயம் கந்தமாறனின் சிநேகிதன் வந்தியத்தேவனும் வந்திருந்தான். அவன் அந்தப்புரத்துக்கு வந்து சற்று நேரம்தான் இருந்தான். எங்கிருந்தோ அப்போது மணிமேகலைக்கு அளவிலாத நாணம் வந்து பற்றிக் கொண்டது. மற்றப் பெண்களின் பின்னாலேயே நின்றாள். வந்தியத்தேவனை நேருக்கு நேர், முகத்துக்கு முகம், நன்றாகப் பார்க்கக் கூடவில்லை. ஆயினும் மற்றவர்களுக்குப் பின்னால் அரை குறையாகப் பார்த்த அவனுடைய களை பொருந்திய, புன்னகை ததும்பிய முகம் அவள் உள்ளத்தில் பதிந்து விட்டது. அவனுடைய குரலும் அவன் பேசிய சில வார்த்தைகளும் அவளுடைய ஞாபகத்தில் நிலைத்துவிட்டன.

ஆகையால் மறுபடியும் தமையன் கந்தமாறனுடன் மணிமேகலை முடிவில்லா விவாதம் தொடங்கினாள். முக்கண் படைத்த சிவபெருமானே வந்து சொன்னாலும் தான் மதுராந்தகனை ஒரு காலும் மணக்க முடியாது என்றாள். வந்தியத்தேவனைச் சிறிது நேரமே பார்த்திருந்த போதிலும் அவனிடம் தன் அந்தரங்கம் சென்று விட்டதையும் அவள் குறிப்பாக உணர்த்தினாள். கந்தமாறனுக்கு இது அளவில்லாத கோபத்தை உண்டாக்கிற்று. முதலில் நல்ல வார்த்தையாகச் சொல்லிப் பார்த்தான் பயன்படவில்லை. பின்னர், "வந்தியத்தேவன் என் சிநேகிதன் அல்ல; என் பரம விரோதி. என்னைப் பின்னாலிருந்து முதுகில் குத்திக் கொல்லப் பார்த்தவன்; அவனை நீ மணந்து கொள்வதாயிருந்தால் உன்னையும் அவனையும் சேர்த்துக் கொன்று விடுவேன்!" என்றான். முதுகில் ஏற்பட்டிருந்த கத்திக் காயத்தைக் காட்டினான். பழுவூர் இளையராணியின் பரிவான சிகிச்சையினால் உயிர் பிழைத்து எழுந்ததையும் கூறினான்.

"என் பேரில் உனக்கு எள்ளத்தனை விசுவாசமாவது இருந்தால், வந்தியத்தேவனை மறந்து விடு!"

இதைக் கேட்டப் பிறகு மணிமேகலையின் மனம் உண்மையில் மாறிவிட்டது. கந்தமாறனிடம் அவள் மிக்க பிரியம் வைத்திருந்தாள். அவனைக் கொல்ல முயற்சி செய்த பகைவனைத் தான் மணந்து கொள்வது இயலாத காரியந்தான். ஆகையால் வந்தியத்தேவனை மறக்க முயன்றாள். ஆயினும் இலேசில் முடிகிற காரியமாயில்லை, அடிக்கடி, எதிர்பாராத சமயங்களில், அவனுடைய புன்னகை ததும்பிய முகம் அவள் மனக்கண்ணின் முன்பு வந்து கொண்டிருந்தது. பகற் கனவுகளிலும் வந்தது, இராத்திரியில் கண்ட கனவுகளிலும் வந்தது!

இதனாலெல்லாம் சில மாத காலமாக மணிமேகலை அவளுக்கு இயற்கையான குதூகலத்தை இழந்திருந்தாள். சோகமும் சோர்வும் அவளைப் பீடித்தன. கலியாணப் பருவம் வந்துவிட்டது தான் இதற்குக் காரணம் என்று முதியோர் நினைத்தார்கள். பிராய மொத்த தோழிகள் அவளை அது குறித்துப் பரிகாசம் செய்தார்கள். வேடிக்கை விளையாட்டுகள் மூலம் அவளை உற்சாகப்படுத்த தோழிமார்கள் முயன்றார்கள் அது ஒன்றும் பலிக்கவில்லை.

மறுபடியும் சென்ற சில நாளாக மணிமேகலை சிறிது உற்சாகம் கொள்ளத் தொடங்கியிருந்தாள். மதுராந்தகனுக்கு அவளை மணம் செய்து கொடுக்கும் எண்ணத்தை அவள் பெற்றோர்களும் தமையன் கந்தமாறனும் கைவிட்டதை அறிந்ததில் சிறிது உற்சாகம் உண்டாயிற்று. சக்கரவர்த்தியின் மூத்த புதல்வரும் பட்டத்து இளவரசருமான ஆதித்த கரிகாலருக்கு மணிமேகலையைக் கொடுப்பது பற்றி அவர்கள் ஜாடைமாடையாகப் பேசியது அவள் காதில் விழுந்தது.

ஆதித்த கரிகாலரின் வீர, தீர பராக்கிரமங்களைப் பற்றி அறியாதவர்கள், ஆண்களிலோ, பெண்களிலோ தமிழகத்தில் யாரும் இல்லை. அவர் ஏதோ காரணத்தினால் மணம் புரிந்து கொள்ள மறுத்து வருகிறார் என்பதையும் அறிந்திருந்தார்கள். அப்படிப்பட்டவரை மணந்து கொள்வது என்றால், அது கனவிலும் கருத முடியாத பாக்கியம் அல்லவா? இந்தப் பரந்த பரத கண்டம் முழுவதிலும் எத்தனை ராஜகுலப் பெண்கள் அந்தப் பேறு பெறுவதற்காகத் தவம் கிடக்கிறார்கள்; இதையெல்லாம் எண்ணி மணிமேகலை ஒருவாறு உற்சாகம் கொண்டாள்.

காஞ்சியிலிருந்து ஆதித்த கரிகாலரும், தஞ்சாவூரிலிருந்து பெரிய பழுவேட்டரையரும் கடம்பூர் மாளிகைக்கு விருந்தாளிகளாக வரப்போகும் செய்தி அவளுக்கு மீண்டும் பழைய மாதிரி குதூகலத்தை அளித்தது. இந்தத் தடவை பழுவேட்டரையர் தம் இளையராணியையும் அழைத்து வருகிறார். நந்தினிதேவி தன் தமையன் உயிரைக் காப்பாற்றியவள். அவளுடைய அழகையும் குணத்தையும் அறிவாற்றலையும் பற்றி மணிமேகலை கந்தமாறனிடமிருந்து ரொம்பவும் கேள்விப்பட்டிருந்தாள். இந்தப் புதிய கலியாணப் பேச்சுக்குக் காரணமானவளே பழுவூர் இளையராணி தான் என்றும் கந்தமாறன் சொல்லியிருந்தான். அவள் கடம்பூர் அரண்மனையில் இருக்கும்போது அவளைத் தக்கபடி உபசரிப்பதில் மணிமேகலை முன்னால் நிற்க வேண்டும் என்றும் சொல்லியிருந்தான். மணிமேகலையின் உள்ளமும் அதற்குத்தக்க பரிபக்குவம் அடைந்திருந்தது. பழுவூர் ராணியிடம் நல்லபடியாக சிநேகம் செய்து கொண்டு அவளுடைய பழக்கத்தினால் தஞ்சாவூர் அரண்மனைப் பெண்களை நாகரிகத்தில் தோற்கடிக்கக் கூடியவளாகத் தான் ஆகிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டாள்.

ஆதலின் ஒருவார காலமாக மணிமேகலை ஒரே உற்சாகத்தில் மூழ்கியிருந்ததுடன், பரபரப்புடன் அரண்மனையில் அங்குமிங்கும் ஓடி விருந்தாளிகளுக்கு வேண்டிய வசதிகளை மேற்பார்வை செய்வதில் ஈடுபட்டிருந்தாள். முக்கியமாகப் பழுவூர் இளையராணிக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அரண்மனைப் பகுதியில் சகல வசதிகளும் ஏற்படுத்தி வைப்பதில் அவள் கவனம் செலுத்தினாள். தமையன் வேறு சொல்லியிருந்தான் அல்லவா? ஆகையால் அரண்மனைப் பணியாளர்களை வறுத்து எடுத்து விட்டாள். அவளுடைய தோழிகளையும் வதைத்து விட்டாள். பழுவூர் ராணி தங்கப் போகும் அறையில் ஒவ்வொரு பொருளையும் முப்பது தடவை பெயர்த்து எடுத்து வெவ்வேறு இடத்தில் வைக்கும்படி வற்புறுத்தினாள்.

இளவரசர் ஆதித்த கரிகாலர் தம்முடைய சிநேகிதர்களுடன் தங்கப் போகும் அறைகளையும் அடிக்கடிப் போய்ப் பார்த்து வந்தாள். யாரோ பார்த்திபேந்திரன் என்பவன் அவருடன் வரப் போகிறானாம். அவன் எப்படிப்பட்டவனோ, என்னமோ? இந்தக் காலத்தில் யார் எவ்விதம் மாறுவார்கள் என்று யார் கண்டது? தன் தமையனுடைய சிநேகிதனாயிருந்த வந்தியத்தேவன் ஆதித்த கரிகாலரின் பரிவாரத்தைச் சேர்ந்தவன்தான்! அவன் மட்டும் இத்தகைய சிநேகத் துரோகியாக மாறாதிருந்தால், இப்போது அவனும் வந்து கலந்து கொள்வான் அல்லவா? ஆம்! எவ்வளவுதான் மணிமேகலை வேறு பரபரப்பான காரியங்களில் ஈடுபட்டிருந்தாலும், அந்தச் சிநேகத் துரோகியை அடியோடு மறக்க முடியவில்லை!

பழுவூர் ராணி அன்று இரவே அநேகமாக வந்து விடுவாள் என்று சொன்னார்கள். ஆகையால் கடைசியாக நந்தினியின் அறை அலங்காரத்தை மணிமேகலை மேற்பார்வை செய்து கொண்டிருந்தாள். அப்போது பழுவூர் ராணிக்காகச் சுவர் ஓரமாகப் பொருத்தி வைக்கப்பட்டிருந்த முகம் பார்க்கும் கண்ணாடியின் எதிரில் வந்தாள். தன்னுடைய முகத்தை அதில் பார்த்துக் கொண்டாள். சிறிது நேரம் நிதானமாகவே பார்த்தாள். அப்படியொன்றும் தன் முகம் அழகில் குறைந்ததல்ல என்று தனக்குத்தானே முடிவு செய்து திருப்தி அடைந்தாள். கண்ணாடியை விட்டுப் போக எண்ணிய போது, அதில் இன்னொரு முகமும் தெரிந்தது. அது தன் முகத்தின் வெகு அருகில் வந்து கன்னத்தோடு கன்னம் ஒட்டும் நிலைக்கு வந்து விட்டது. அவள் கனவில் அடிக்கடி தோன்றித் தொல்லை செய்து கொண்டிருந்த வாணர் குல வீரனின் முகந்தான் அது. அவளை அறியாமல் அவளுடைய வாய் குவிந்து, 'கூ!' என்று சத்தமிட்டது. அடுத்த கணம் கண்ணாடியில் அவள் முகம் மட்டுந்தான் தெரிந்தது மற்றொரு முகம் மறைந்துவிட்டது.