பொய்யாமொழிப் புலவர் தனிப்பாடல்கள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
பொய்யாமொழிப் புலவர் பாடல்கள்
பாடல் 20
பக்கம் 89 முதல் 92
குறிப்புரை - செங்கைப் பொதுவன்

1-4[தொகு]

வாய்த்த வயிரபுர மாகாளி அம்மையே
ஆய்த்த மணலில் அணிவரையிற்-காய்த்த
கதிரை மாளத் தின்னுங் காளிங்கன் ஏறும்
குதிரை மாளக் கொண்டுபோ. (1)

இவருபாத்தியாயர்

பொதியில் அகத்தியனாய்ப் பொய்யா மொழியாய்ச்
சிதைவில் புலவர் சிகாமணியாய்த் – துதிசேரும்
செங்காட்டங் கோட்டத் துறையூர் எனுந்தலத்தில்
தங்காட்டங் கொண்டிருப்பாய் தான். (2)

அகவல்

வாழி சோழ என் வாய்மொழி கேண்மோ
ஊழி நிலவெறி மாளிகையின் வயிற்
கட்டிளங் கணவன் கவின்பெரு சேக்கை
என்றறி மனைவி நெடிது துயில் கொளச்
செல்லக் கிடமினெனக் கிடந்த் அருகெனைச்
சொல்லிய நண்பன் தனிற் செல்பவனோ
நானும் ஏகுவன் நற்றுணை யவற்கே. (3)

வெண்பா

அன்றுநீ செல்லக் கிடவென்றாய் ஆயிழையோ
டின்றுநீ வானுலகம் ஏறினாய்- மன்றல்கமழ்
மானொக்கும் வேல்விழியார் மாரனே கண்டியூர்
சீனக்கா செல்லக் கிட. (4)

5-8[தொகு]

பூவேந்தர் முன்போல் பரப்பார் இலையெனினும்
பாவேந்தர் உண்டென்னும் பான்மையால்- கோவேந்தன்
மாறனறிய மதுராபுரித் தமிழோர்
வீறணையே சற்றே மித. (5)
உங்களிலே யானொருவன் ஒவ்வுவனோ ஒவ்வேனோ
திங்கள் குலனறியச் செப்புங்கள்- சங்கத்தீர்
பாடுகின்ற முத்தமிழ்க்கு என்பைந்தமிழும் ஒக்குமோ
ஏடெழுதாரே எழுவீர் இன்று. (6)
பொன்போலும் கள்ளிப்பொறி பறக்கும் கானலிலே
என்பேதை செல்லற் கியைந்தனளே –மின்போலும்
மானவேன் முட்டைக்கு மாறாய தெவ்வர் போங்
கானவேன் முட்டைக்கும் காடு. (7)

முருகக் கடவுள்

விழுந்ததுளி அந்தரத் தேவேம் என்றும் வீழின்
எழுந்து சுடர் சுடுமென் றேங்கிச்- செழுங்கொண்டல்
பெய்யாத கானகத்தில் பெய்வளையும் சென்றனளே
பொய்யாம் ஒளிப்பகைஞர் போல். (8)

9-12[தொகு]

ஔவையார்

ஐம்பொருளு நாற்பொருளு முப்பொருளும் பெய்தமைத்த
செம்பொருளை யெம்மறைக்குஞ் சேட்பொருளைத்- தண்குருகூர்ச்
சேய்மொழிய தென்பர் சிலரி யானிவ் வுலகில்
தாய்மொழிய தெனபேன் றகைந்து. (9)
சேய்மொழியோ தாய்மொழியோ செப்பில் இரண்டுமொன்றே
வாய்மொழியை யாருமறை யெனபர்- வாய்மொழிபோல்
ஆய்மொழிகள் சாலவுள எனினும் அம்மொழியுஞ்
சாய்மொழிய வென்பேன் றகைந்து. (10)

மதுரைச் சொக்கநாதர்

கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின்
மயிலியற்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.(11)

அகவல்

மதிமலி புரிசை மாடக் கூடற்
பதிமிசை நிலவும் பானிற வரிச்சிற
கன்னம் பயில் மொழியால வாயின்
மன்னிய சிவன்யான் மொழிந்திடு மாற்றம்
பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்
கொருமையி னுரிமையின் உதவி யணிதிகழ்
குருமாமணி திகழ் குலவிய குடைக்கீழ்ச்
செருமா வுகைக்கும் சேரலன் காண்க
பண்பால் யாழ்பயில் பாண பத்திரன்
தன்போல் என்பால் அன்பன் றன்பால்
காண்பது கருதிப் போந்தனன்
மாண்பொருள் கொடுத்துவர விடுப்பதுவே. (12)

13-16[தொகு]

அங்கம் வளர்க்க வரிவாளி னெய்தடவிப்
பங்கப்பட விரண்டு கால்பரப்பிச்- சங்கரனைக்
கீர்கீரென வறுக்கும் கீரனோ என்கவியைப்
பாரிற் பழுதென் பவன். (13)

நக்கீரர்

சங்கறுப்ப தெங்கள் குலஞ் சங்கரர்க்கங் கேதுகுலம்
பங்கமுறச் சொன்னாற் பழுதாமோ- சங்கை
அரிந்துண்டு வாழ்வோம் அரனாரைப் போல
இரந்துண்டு வாழோம் இனி. (14)

திருஞான சம்பந்தமூர்த்தி

கடியுண்ட நெடுவாளை கராவிற் றப்பிக்
கயத்துக்குள் அடங்காமல் விசும்பில் பாய
அடியுண்ட உயர்தெங்கின் பழத்தாற் பூகம்
அலையுண்டு குலைசிதறு மாலிநாடா
படியுண்ட பெருமானைப் பறித்துப் பாடிப்
பதம்பெற்ற பெருமானே தமியேன் பெற்ற
கொடியொன்று நின் பவனிக் கெதிரே சென்று
கும்பிட்டாள் உயிரொன்றும் கொடுவந்தாளே. (15)

திருமங்கை யாழ்வார்

வருக்கை நறுங்கனி சிதறிச் செந்தேன் பொங்கி
மடுக்கரையிற் குளக்கரையின் மதகிலோடப்
பெருக்கெடுத்து வண்டோலஞ் செய்யுங் காழிப்
பிள்ளையார் சம்பந்தப் பெருமாள் கேளீர்
அருட்குலவு மயிலைதனில் அனலால் வெந்த
அங்கத்தைப் பூம்பாவை யாக்கினோமென்
றிருக்குமது தகவன்னு நிலவால் வெந்த
இவளையுமோர் பெண்ணாக்கல் இயல்பு தானே. (16)

17-20[தொகு]

சேமங் குருகையோ செய்யதிருப் பாற்கடலோ

நாமம் பராங் குசனோ- தாமம்
துளவோ வகுளமோ தோளிரண்டோ நான்கோ
உளவோ பெருமான் உனக்கு. (17)

சங்கத்தார் அகவல்

காலை ஞாயிறு கடுங்கதிர் பரப்பி
வேலையும் குளனும் வெடிபடச் சுவறித்
தந்தை தாய் மக்கண் முகம் பாராமல்
வெந்த சாதமும் வெவ்வே றருந்திக்
குணமுடன் நாளும் கொடுத்து உறவாண்ட
கணவனை மகளிர் கண் பாராமற்
பழுத்த வுடலம் பசையற வற்றி
விழித்த விழியெலாம் வேற்றது விழியா.(18)
அறவுரை யன்றி மறவுரை பெருகி
உறவற மொழிந்த ஊழி காலத்தில்
தாயிலார்க்குத் தாயே யாகியும்
தந்தை யிலார்க்குத் தந்தையே யாகியும்
இந்த மாநிலத் திடுக்கண் தீர
வந்து தோன்றிய மாநிதிக் கிழவன்
நீலஞ்சேரி நெடுமால் ஆனான்
ஆலஞ் செறியின் ஆன்ற சடையன்
பிறந்தும் பிறர்கேடு நினையான்
பிறர் பொருள் வவ்வான்
மறந்தும் போகான் வாய்மையும் குன்றான்
இறந்து போகா தெம்மையுங் காத்தான்
வருந்தல் வேண்டாம் வழுதி
இருந்தனம் இருந்தனம் இடர் கெடுத்தன்னே. (19)

திருமழிசையார்

கணிகண்ணன் போவென்றான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீயிங் கிராதே- துணிவுடனே
செந்நாப் புலவன்யான் செல்கின்றேன் நீயும் உன்றன்
பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள். (20)