உள்ளடக்கத்துக்குச் செல்

பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்/மனித யானை ஓட்டம்

விக்கிமூலம் இலிருந்து



20. மனித யானை ஒட்டம்


ஆடும் அமைப்பு

விளையாட விரும்புகின்ற குழந்தைகள் அனைவரும் இந்த ஆட்டத்தில் பங்குபெறலாம். ஆட்டத்தை நடத்துபவர் விளையாட இருக்கும் குழந்தை களை சம எண்ணிக்கையுள்ள நான்கு குழுவினர்களாக பிரிக்க வேண்டும். பிறகு 20 அடி நீளமுள்ள நேர் கோடு ஒன்றை போட்டுக் கொள்ள வேண்டும். 5 அடி தூரம் இடைவெளி இருப்பது போல நான்கு குழுவினரையும் தனித்தனியாக நிறுத்த வேண்டும்.

ஒவ்வொரு குழுவிலும் உயரமானவர்கள் முன்னால் நிற்க, அவருக்கு அடுத்தடுத்து உயரம் குறைந்தவர்கள் பின்னால் நிற்க வேண்டும் என்பது தான் நிற்கும் முறையாகும். அந்த நான்கு குழுவினர்க்கும் முன்புறமாக 50 அடி தூரத்தில் ஒரு நேர் கோடு போட்டிருக்கவேண்டும். ஆட்டக்காரர்கள் நிற்கும் முறை


ஒவ்வொரு குழுவிலும் முதலில் நிற்கும் உயரமானவர் கால்களை இயல்பான இடைவெளியில். உறுதியாக வைத்து, உடலின் மேற்பகுதியை சற்று முன்புறமாக வளைத்துக் குனிந்து யானை தும்பிக்கைப் போல கைகளை கீழ்புறமாக தொங்கவிட்டுக் கொண்டிருக்க வேண்டும். அவருக்கு அடுத்து நிற்பவர் முன்னால் நிற்பவருடைய இடுப்பை கைகளால் கோர்த்துக் கட்டிக் கொண்டு குனிந்து நிற்கும் அவர் முதுகின் மீது தன் முகம் படுமாறு வைக்க வேண்டும். பிறகு அடுத்தடுத்து நிற்பவர்கள் இரண்டாமவர் செய்தது . போலவே செய்து கொண்டு நிற்கவேண்டும். இப்பொழுது ஒவ்வொரு குழுவையும் ஒரு போர்வையால் மேற்புறமாக மூடிவிட்டால், யானை ஒன்று நிற்பது போல் இருக்கும். ஒவ்வொரு குழுவிலுமுள்ள சிறுவனை அல்லது உயரம் குறைந்த ஒருவனை மத்தியிலே ஒருவன் மேலே உட்காரவைத்தால், யானை மேலே ஒரு யானைப்பாகன் உட்கார்ந்திருப்பதுபோலத் தோன்ற, இப்போது ஆட்டம் ஆரம்பிக்கிறது.

ஆடும் முறை

ஆட்டம் நடத்துபவரின் விசில் ஒலிக்குப் பிறகு ஆட்டம் ஆரம்பமாகிறது விசில் ஒலித்த பிறகு ஒவ்வொரு குழுவும் எல்லையைநோக்கி ஓடவேண்டும். முதலில் எல்லைக்கோட்டை அடைகின்ற குழுவே. வெற்றி பெற்றது என்று அறிவிக்கப்படும். குறிப்பு :

1. மேலே உட்கார்ந்திருப்பவர் தான் தன்னுடைய குழுவை நடத்திச் செல்ல வேண்டும்.

2. எந்தக்காரணத்தை முன்னிட்டும் ஒருவருக்கொருவர் கோர்த்து இருக்கின்ற பிடியினை விட்டுவிடக்கூடாது. அவ்வாறு அறுத்துக் கொண்டு ஒடுகின்ற குழு வெற்றி பெறும் தகுதியினை இழந்து விடுகிறது.

3. குழுவின் கடைசி ஆட்டக்காரர் எல்லைக் கோட்டை கடந்தால்தான் அந்தக்குழு எல்லையை அடைந்ததாகக் கருதப்படும்.

4. மேற்கூறிய முறையில் நான்கு குழுக்களையும் ஐந்துமுறை ஒடவிட்டு, அந்த ஐந்து முறைகளில் அதிக எண்ணிக்கையில் எந்தக்குழு வெற்றி பெற்றதோ அந்தக் குழுவே வென்றது என்று அறிவிக்கலாம். .