போதி மாதவன்/இளமைப் பருவம்

விக்கிமூலம் இலிருந்து

இரண்டாம் இயல்

இளமைப் பருவம்

‘இன்பம்சார் பெரும்பாரம் ஈரைந்தும் உடனிறைந்து
கன்கன நிலைபெற்ற நாதன்.’

குழந்தையில்லையேயென்று வருந்திக் கொண்டிருந்த மன்னர் சுத்தோதனர், பெற்ற மதலையைப் பேணி வளர்ப்பதில் அதிகக் கவலை கொண்டார். சோதிட நூல் வல்லார் குழந்தையின் சாமுத்திரிகா லட்சணங்கள் அனைத்தையும் கண்டு, சாதகம் கணித்துப் பரிசீலனை செய்து, பலன்களை எடுத்துக் கூறினர். ‘மன்னரின் மைந்தன் மாநிலச் சக்கர வர்த்தியாவான், அல்லது வையகத்து உயிர்களுக்கெல்லாம் உய்யும் வழிகாட்டும் உத்தம புத்தனாவான்’ என்று அவர்கள் உறுதி சொல்லினர். உலக வாழ்வில் பற்றுக் கொண்டால், அவன் அரசர்க்கரசாக அரியாசனத்தில் அமர்ந்திருப்பான்; சமய வாழ்வில் ஏற்றுக்கொண்டால், வாழவு துறந்து போதியடைந்த புத்தனாவான்’ என்பதையும் விளக்கினர். இதனாலேயே மன்னரின் மனம் ஒரு நிலையில் நில்லாது ஏக்கமுற்று வந்தது. மைந்தன் ஒரு காலத்திலும் துறவு என்ற பெயரைக்கூடச் சிந்திக்காத முறையில் அவனைப் பாதுகாத்து வருவது எங்ஙனம் என்பதே அவர் கவலையாயிருந்தது. அரசரின் கவல்ையை மாற்ற அவரு டைய சகோதரர்களும், மற்றச் சாக்கிய குலத் தலைவர் களும் இயன்ற உதவியெல்லாம் அளித்து வந்தனர்.

சாக்கியத் தலைவர்கள் ஏராளமான பரிசுகள் கொணர்ந்து தங்கள் எதிர்காலப் பார்த்திபனுக்குக் காணிக்கையாகச் செலுத்தினர். பொன்னும் மணிகளும் புனைந்து செய்த நகைகள், தந்தத்திலும் தங்கத்திலும் செய்த செப்புக்கள், தேர்கள், யானைகள், மான்கள் குதிரைகள் முதலிய விளையாட்டுப் பொருள்கள் இளவரசற்காக வந்து குவிந்து கொண்டே யிருந்தன. முத்துச் சரங்களும் நவரத்தின மாலைகளும் கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் விளங்கியதைக் கண்ட அன்னை கௌதமி, அவைகளிற் சிலவற்றைச் சித்தார்த்தனுக்கு அணிவித்து இனிபுற வேண்டுமென்று ஆசை கொண்டாள். அவ்வாறே மணி மாலைகளை அவன் கழுத்தில் அணி வித்துக் கைகளில் காப்பு முதலிய அணிகளையும் பூட்டினாள். பூணெல்லாம் பூண்ட புண்ணிய மூர்த்தியை அன்னை ஆவலோடு ஏறிட்டுப் பார்த்தாள். என்ன ஆச்சரியம்! எவ்வளவோ ஒளிவீசிக் கொண்டிருந்த மணிகளும் இழைகளும், சித்தார்த்தனின் உடலிற் சேர்ந்தவுடன், ஒளிமங்கிவிட்டன. அவன் உடலிலிருந்து விரிந்து பரவிய பேரொளியில் அணிகளின் ஒளி மறைந்து விட்டது! அந்த நேரத்தில் விமலையென்ற தேவதை அக்காட்சியைக் கண்டு களிப்புற்று, ‘உலகமெல்லாம் ஒளி நிறைந்த சாம்பூநதப் பொன்னால் இயன்றதெனினும், புத்தரின் ஒளியில் ஓர் இரேகையின் முன் அது ஒளியிழந்து நிற்கும்! தானே தனிச் சுடராக விளங்கும் புத்தனுக்குப் பொன்னும் மணியும் எதற்கு?’ என்ற பொருள்படப் பாடிக்கொண்டே, பிறர் கண்ணுக்குப் புலனாகாதபடி வான வீதியிலே பறந்து சென்றது. உடனே குழந்தைமீது மலர்மழை பொழிந்தது. கௌதமி, உண்மையிலேயே தன் செல்வனுக்கு அணிகள் அவசியமில்லையென்று உணர்ந்து, அவைகளைக் கழற்றி விட்டாள். அவனைப் பார்க்குந்தோறும், அவனைப்பற்றிச் சிந்திக்குந்தோறும், அவள் எல்லையற்ற இன்பமடைந்து வந்தாள்.

நடுகை விழா

சித்தார்த்தன் பிறந்து ஐந்து மாதங்கள் சென்றபின்பு, கபிலவாஸ்துவில் நடுகை விழாக் கொண்டாட ஏற்பாடாயிற்று. பண்டைப் பழங்காலத்திலிருந்தே ஒவ்வோர் ஆண்டிலும் விளை நிலங்களில் முதன் முதல் ஏர்கள் பூட்டி உழுவதை விவசாயிகள் பெருந் திருவிழாவாகக் கொண்டாடுதல் இந்தியா, சீனம் முதலிய நாடுகளிலெல்லாம் வழக்கமாயிருந்து வருகிறது. இவ்விழாவிலே பெருஞ் செல்வம் படைத்த பிரபுக்களும், அரசர்களும் கலந்து கொள்வதும் வழக்கம்.

கபிலவாஸ்துவில் நடைபெற்ற விழாவுக்கு அரசர் குழந்தை சித்தார்த்தனையும் தம்முடன் அழைத்துச் சென்றிருந்தார். வயல்களின் அருகே குழந்தையை ஓர் அழகிய கட்டிலில் படுக்கவைத்து, உயரே பலவர்ணப் பட்டுத்துணிகளால் குடைகள் அமைத்து, நாற்புறத்திலும் திரைகளிட்டு, நூறு தாதிகள் அங்கு நின்று இளவரசைக் கவனித்து வரவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

அரசர் அன்று அலங்காரமான உடைகள் அணிந் திருந்தார். ஆயிரம் பிரபுக்கள் அவரைச் சூழ்ந்து நின்றனர். ஒரே சமயத்தில் உழுவதற்கு ஆயிரம் கலப்பைகள் தயாராக வைக்கப் பெற்றிருந்தன. அவைகளில் நூற்றெட்டுச் கலப்பைகள் வெள்ளியிற் செய்தவை ; அரசர்க்கு உரியது மட்டும் தங்கத்திற் செய்தது. அந்த உயர்ந்த ஏர்களை இழுக்கும் எருதுகளும் அலங்கரிக்கப் பெற்றிருந்தன. ஏராளமான பொதுமக்களும் அந்தக் கோலாகலத்தைக் கண்டு களிப்பதற்காகக் குழுமி நின்றனர்.

முதலில் மன்னர் தனது பொன் ஏரைப் பிடித்துக் கிழக்கிலிருந்து மேற்கு முகமாக ஒரு முறை உழுதார். உடனே நூற்றெட்டுப் பிரபுக்கள் வெள்ளி ஏர்களால் மூன்று முறை உழுதனர். உழவர்கள் யாவரும் மற்ற ஏர்கள் அனைத்தையும் பற்றி உழ ஆரம்பித்தனர். பெரிய ஆரவாரத்திடையே, மன்னர் தலைமையில் ஆயிரம் ஏர்கள் ஏக காலத்தில் உழுதமை கண்கொள்ளாக் காட்சியாக இருந்ததால், தூரத்தில் இருந்தவர்களும் அந்த நேரத்தில் கூட்டத்தோடு புலங்களின் அருகே வந்து கலந்து நின்றனர். சித்தார்த்தனைக் கவனித்துக் கொண்டிருந்த தாதியர் அனைவரும் அக்காட்சியைக் காணச் சென்று, அங்கேயே மெய்ம்மறந்து நின்று கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்திற்குப் பின்பு அவர்கள் திரும்பிச் சென்று பார்க்கையில், சித்தார்த்தன் கட்டிலின அருகே, தரைக்குச் சற்று மேலே, காற்றில் அமர்ந்து கொண்டிருந்தான். தரையிலே யாதொரு பற்றுமின்றி அவன் அந்தரத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டு அவர்கள் பேராச்சரியம் அடைந்து, மன்னரிடம் ஓடிச்சென்றனர். ‘இங்கே ஏர் உழும் காட்சி இருக்கட்டும்; அங்கே இளவரசர் காட்சியின் விந்தையை வந்து பாருங்கள்!’ என்று கூவி அழைத்தனர்.

மன்னரும் விரைந்து சென்று பார்த்தார். குழந்தையின் பேராற்றலைக் கண்டு பிரமித்து, ஆனந்தக் கண்ணீர் பெருக்கி, அவர் அதன் பாதங்களைப் பற்றிக்கொண்டு வணங்கினார். அப்போது காலைச் சூரியன் கீழ்த்திசை யிலில்லாமல், வானத்து உச்சியில் விளங்கிக் கொண்டிருந்தான். சித்தார்த்தன் மீது வெய்யில் படாமல் இருப்பதற்காகக் குழந்தை அமர்ந்திருந்த மரத்திற்கு நேர் உயரே சூரியன் நிலைத்து நின்றான். சுத்தோதனர் தம் செல்வனைப் பார்த்து, ‘ஐய! உன் ஆற்றலையெல்லாம் என்னிடம் ஏன் காட்டுகிறாய்? இதையெல்லாம் பார்த்து ஆனந்திக்கவேண்டியவள் உன் அருமைத் தாய்! அவள் இப்போது இல்லையே!’ என்று கூறி வருந்தினார்.

இவ்வாறு சித்தார்த்தனின் இளமைப் பருவத்தைப் பற்றி எத்தனையோ கதைகள் இருக்கின்றன. ஆயினும், ஆதாரமுள்ள சரித்திரக் குறிப்புக்கள் இல்லை; பெரும்பாலும் நாமாகக் கற்பனை செய்தே கண்டு கொள்ள வேண்டியிருக்கிறது. நாட்டின் செழிப்பும், அரண்மனை, ஆறு, விளை நிலங்கள், நந்தவனங்கள் யாவும் இளமையிலேயே அவன் உள்ளத்தைக் கவர்ந்திருக்கலாம். அரசரின் வீரச் செயல்கள், பராக்கிரமம் மிக்க சாக்கியர்களின் சாகஸங்கள், பாரத நாட்டின் பண்டைய மகரிஷிகளின் மாண்புகள், வீரர்களின் சரிதைகள் ஆகியவைபற்றி அவன் ஏராளமான கதைகளையும் பாடல்களையும் கேட்டு இன்புற்றிருக்கக் கூடும். எல்லாவற்றிற்கும் மேலாக, வானுற ஓங்கி வனப்புடன் திகழ்ந்த வெள்ளிப் பனிவரையாகிய இமயமலையின் தொடர்களையும் சிகரங்களையும் தூரத்திலிருந்தே பார்த்துப் பார்த்து, அவன் மனச் சாந்தியும் மகிழ்ச்சியும் பெற்றிருக்கக் கூடும். குழந்தைப் பருவத்திலிருந்தே சித்தார்த்தனுடைய வாழ்க்கைக்கு ஒழுக்கமே அடிப்படையாக அமைந்து விளங்கியிருக்க வேண்டும். அளவற்ற அன்பினால் அன்னை கௌதமி குழந்தையைக் கெடுத்து விடாத முறையில் சீலம் நிறைந்த சுத்தோதனர் கண்காணித்தும் வந்திருப்பார்.

கல்விப் பயிற்சி

குழந்தை சிறுவனாகி, வயதும் எட்டாயிற்று. சித்தார்த்தன் பள்ளிக்குச் செல்லவேண்டிய பருவம் வந்தது. அரச குலத்துச் சிறுவர்களுக்குக் கல்வி போதித்து வந்த விசுவாமித்திரரிடமே அவனையும் மன்னர் ஒப்படைத்தார். எழுதுவதற்காக நாற்புறமும் மாணிக்கக் கற்கள் பதித்த சட்டத்துடன் விளங்கிய சந்தனப் பலகையுடன் சித்தார்த்தன் ஆசிரியரிடம் சென்றான். விசுவாமித் திரரைக் கண்டதும், ‘ஆசாரிய! அறுபத்து நான்கு வகை மொழிகளில் எனக்கு இப்போது தாங்கள் கற்றுக் கொடுக்கப்போகும் மொழி எது?’ என்று கேட்டான். கேட்ட துடன் நில்லாது, திராவிட மொழி உள்ளிட்ட அறுபத்து நான்கு மொழிகளையும் வரிசையாகக் கூறி, ‘இவைகளில் நான் முதலில் கற்கவேண்டியது எதுவோ?’ என்று வினவினான்.

ஆசிரியர், எதிரே நின்ற ‘இளைஞன் தம்மிடம் கற்க வரவில்லையென்பதையும், தாமே அவனிடம் கற்கவேண்டுமென்பதையும் உடனே உணர்ந்து கொண்டு, மெய்ம்மறந்து நின்றார். அவன் கூறிய பாஷைகளில் சிலவற்றின் பெயரைக்கூட அவர் கேட்டதில்லை! எழுத்தைப் போலவே சித்தார்த்தன் எண்ணிலும் தேர்ச்சி பெற்றிருந்தான். ஆசிரியர் முதல் நாளில் நூறாயிரம் வரை சொல்லிக் கொடுக்கலாம் என்று கருதித் தாம் சொல்வதைத் தொடர்ந்து சொல்லி வரும்படி கூறி, இலட்சம் வந்ததும் நிறுத்திக் கொண்டார். ஆனால், சித்தார்த்தன் அதற்கு மேலும் பத்து லட்சம், கோடி, பத்துக்கோடி நூறுகோடியென்று. கோடி கோடியாகச் சொல்லிக், கொண்டிருந்தான். அவன் சொல்லி வந்த எண்கள் கடற்கரை மணலையும், வானத்துத் தாரகைகளையும் கணக்கிடக்கூடிய பெருந்தொகைகளாயிருந்தன.

பல கலைகளிலும் தேர்ச்சி பெற்ற மகா பண்டிதரான விசுலாமித்தரர் வெகு நேரம் நின்று அவற்றைக் கேட்டுக் கொண்டிருக்கவில்லை. குழந்தையுருக் கொண்டு விளங்கிய அந்தக் குருநாதனுடைய காலடியில் வீழ்ந்து அவர் வணங்கலுற்றார். ‘ஐயனே! ஆசிரியர்களுக்கு நீயே ஆசிரியன்! உனக்கு நான் குருவல்லன்–நீயே என் குருநாதன்!’ என்று அவர் சித்தார்த்தனைப் பலவகையாகப் பாராட்டிப் புகழ்ந்தார். இளவரசனும் ஆசிரியரிடம் பேரன்பும் பெரும் பணிவும் கொண்டு விளங் கினான். அறிய வேண்டிய அனைத்தையும் அறிந்திருப்பினும், அவனுடைய அடக்கம் யாவர்க்கும் ஓர் எடுத்துக் காட்டாக இருந்தது.

எண்ணும் எழுத்தும் கற்றது போலவே அவன் வேறு பல ஆசிரியர்களிடம் வில்வித்தை, குதிரையேற்றம் முதலிய அரசர்க்குரிய கலைகளைப் பயின்று வந்தான். அவனுக்குப் போர்த் தொழில் கற்றுக் கொடுக்க நியமிக்கப் பெற்ற ஆசிரியர் சாந்திதேவர் சாக்கியகுல இளைஞர் பலருக்கும் போதித்து வந்தவர், ஆனால், சித்தார்த்தர் தனியேயிருந்து தானே தனக்குப் போதித்துக்கொண்டு வந்தான். மற்றையோர் பல்லாண்டுகள் பயின்ற கலைகளை அவன் சில நாட்களிலே பயின்று வந்தான் எப்பொருளிலும் உட்பொருளை ஒரு கணத்திலேயே அவன் உணர்ந்து விடுகிறானென்றும், எதையும் எளிதில் விளக்கிவிடுகிறானென்றும், அவன் கேள்விகளே அவனது மேதையைத் தெளிவாகக் காட்டுகின்றனவென்றும் ஆசிரியரே வியந்து பாராட்டினார். யானையேற்றம் தேரோட்டுதல், போர் முறைகள் முதலிய பயிற்சிகளிலெல்லாம் அவன் அஞ்சா நெஞ்சம் படைத்த வீரனாக விளங்கிய போதிலும், அவ்வீரத்தோடு அருளும் அடக்கமும் சேர்ந்து பொருந்தியிருந்தன. அவன் ஏறிச் செல்லும் குதிரை களைத்துப் பெருமூச்சுவிட்டால், உடனே அவன் பாய்ச்சலை நிறுத்தி, அதை ஆதரவோடு தட்டிக் கொடுட்பான். பந்தயக் குதிரை ஓட்டத்தின் நடுவே வியர்வை யொழுகக் களைத்து வருந்தினால், அவன் அப்பிராணியிடம் அன்பு காட்டி ஓட்டத்தை நிறுத்திவிட்டுப் பந்தயத்தை இழக்கத் தயாராவான். வனவிலங்குகவை வேட்டையாடச் செல்லும்போதும், மான் முதலிய ஜந்துக்கள் பதறி மிரண்டு விழிக்கும் பரிதாபத்தைப் பார்த்து, வேட்டையாடாமலே திரும்பிவிடுவான்.

கருணை உள்ளம்

வசந்த காலத்தில் ஒரு சமயம் சித்தார்த்தன் அரண்மனைத் தோட்டத்தில் அமர்ந்திருந்தான். அப்பொழுது உயரே வானவீதியிலே தூய வெண்மையான அன்னப்பறவைகள் வடதிசையில் இமயமால்வரையை நோக்கிப் பறந்து சென்று கொண்டிருந்தன. மலையிலேயுள்ள கூடுகளில் காத்துக் கத்திக்கொண்டிருக்கும் தங்கள் குஞ்சுகளிடம் அளவற்ற அன்புடன் அவைகள் ஏதேதோ கூவிக் கொண்டு சென்றன. சித்தார்த்தன் கண் கொள்ளாத அந்த ஆனந்தக் காட்சியை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில், திடீரென்று ஓர் அன்னப்புள், தன் சிறகெல்லாம் சிவப்பாகி, உடலிலிருந்து உதிரம் ஒழுக, அந்தப் பூம் பொழிலில் அவன் பக்கத்தில் வந்து விழுந்தது. அவன் பதறியெழுந்து, அதை எடுத்து, உதிரத்தைத் துடைத்து, அதன் உடலில் தைத்திருந்த அம்பு ஒன்றை மெதுவாக வெளியே எடுத்தான். அந்த அன்னத்தின் மீது குறி வைத்து யாரோ வெளியேயிருந்து அம்பு தொடுத்திருக்க வேண்டும்.

சித்தார்த்தன் வெளியே எடுத்த அம்பினைத் தன் கையிலே இலேசாகக் குத்திப் பார்த்தான்; கையில் வலியெடுத்தது. அவ்வளவு கூர்மையான கொடிய அம்பு மென்மையான அன்னத்தின் உடலை என்ன பாடு படுத்தி யிருக்கும் என்று அவன் எண்ணி, மனம் வருந்தி, அன்னத்தை மடிமீது வைத்துத் தட்டிக் கொடுத்து, அதன் புண்ணுக்குப் பச்சிலைகளை வைத்துக் கட்டினான்

அன்னத்தை எய்தவன் சித்தார்த்தனின் அம்மானான் சுப்பிரபுத்தரின் குமாரன் தேவதத்தன். அன்னம் சித்தார்த் தன் இருந்த தோட்டத்தில் விழவே, அவன் அதைத் தன்னிடம் தரவேண்டுமென்று கேட்டு ஒரு வேலைக்காரனைச் சித்தார்த்தனிடம் அனுப்பினான்.

சித்தார்த்தன் அன்னம் தன்னுடையதாகிவிட்டது என்று வேலைக்காரனிடம் சொல்லியனுப்பினான். பின்னர் தேவதத்தனே நேரிற் சென்று கேட்டான். அம்பு விடுத்த தில் அன்னம் இறந்திருந்தால், அது எய்தவனின் உடைமை யாகலாம். ஆனால் அது உயிருடன் இருந்ததாலும், தன்னிடம் வந்து விழுந்ததாலும், அதன் உயிரைக் காப்பாற்றிய தனக்கே அது சொந்தம் என்று சித்தார்த்தன் கூறினான்.

இருவரும் ஒரு முதியவரை அண்டித் தங்கள் வழக்கினைத் தீர்த்து வைக்க வேண்டினர். அவர்,

‘உயிரைக் காப்பவனே - என்றும்
உயிர்க்(கு) உடையவனாம்;
அயர்வு வேண்டாமையா - இதுவே
அறநூல் விதிஐயா!’[1]

என்று கூறி, அன்னம் சித்தார்த்தனுடையதே என்று தீர்ப்பளித்தார். அவனியையெல்லாம் தன்னருளால் சொந்த மாக்கிக்கொள்ள அவதரித்த சித்தார்த்தன், அந்த அருளாலேயே வென்ற முதற் பரிசாக அம்புபட்ட அன்னத்தை எடுத்துச் சென்றான். அது குணமடைந்தபின், ஆகாயத்தில் பறந்து தன் இனத்தோடு இன்புற்று வாழும்படி அதை விட்டுவிட்டான். இவ்வண்ணம் இளவயதிலிருந்தே, எப்பொழுதும் எதிலும், சித்தார்த்தனுடைய கருணை துலங்கிக்கொண்டிருந்தது. போதிசத்துவ நிலைக்குரிய பாரமிதைகளாகிய[2] உயர்ந்த பண்பாடுகள் பத்தும் அவனிடம் நிலைபெற்று விளங்கின. பற்பல பிறவிகளிலே சித்தார்த்தன் பயிர் செய்து பெற்ற பண்பாடுகள் இவை என்று பௌத்த நூல்கள் கூறும்.

சித்தார்த்தனுடைய பதினைந்தாம் வயதில் அவனுக்கு மன்னர் இளவரசுப் பட்டம் சூட்டினார்.

  1. ‘ஆசிய ஜோதி’
  2. பத்துப் பாரமிதைகள்–இவை தச பாரமிதைகள் என்று கூறப்பெறும். தானம், சீலம், நிஷ்காமியம், பிரஜ்ஞை, வீரியம், சத்தியம், சாந்தி, அதிஸ்தானம் மைத்திரி, உபேட்சை, ‘நீலகேசி’ நூலில் இவை பின் கண்ட முறையில் குறிக்கப் பெற்றுள்ளன:

    ‘தானம், சீல, மேபொறை, தக்கதாய வீரியம்,
    ஊனமில்தி யானமே, உணர்ச்சியோ(டு), உபாயமும்,
    மானமில் அருளினை வைத்தலே, வலிமையும்,
    ஞான(ம்) ஈ ரைம்பாரமிதை......’

    தானம்–ஈகை; சீலக்–ஒழுக்கம்; நிஷ்காமியம்–சுய நலமற்ற. தியாகம்; பிரஜ்ஞை–மெய்யறிவு; வீரியம்–இடைவிடா முயற்சி; சத்தியம்–வாய்மை; சாந்தி–பொறுமை; அதிஸ்தானம்–உறுதி அல்லது பலம்; மைத்திரி–கருணை; உபேட்சை–உள்ளத்தின் சமநிலை.

    பாரமிதைகள் என்றால், (ஆற்றின்) மறு கரையை அடையத்தக்கவை என்று பொருள்.