போதி மாதவன்/மண வாழ்க்கை

விக்கிமூலம் இலிருந்து

மூன்றாம் இயல்

மண வாழ்க்கை

‘நித்திய ஆனந்தத்தை–அரசே!
நீயும் அடைவதுண்டோ ?
சித்தத் தெளிவுடையாய்!–சிறிது
சிந்தனை செய்திடுவாய்.!

-ஆசியஜோதி

ளவரசனுக்குப் பதினெட்டு வயதான தும், அரசர் அவனுக்காக மூன்று பெரிய மாளிகைகள் கட்டிக் கொடுத்தார். ‘இராமவம், சுராமம், சுபதம் என்னும் பெயருள்ள மூன்று இணையற்ற மாளிகைகள் எனக்கு இருந்தன’[1] என்று பின்னால் புத்தர் பெருமானே குறிப்பிட்டுள்ளார். குளிர் காலத்தில் வசிப்பதற்குரிய மாளிகை யினுள்ளே சுவர்களில் தேவதாரு, சந்தனம் முதலிய மரப் பலகைகள் இழைத்துச் சேர்த்து வைக்கப் பெற்றிருந்தன. கோடை காலத்திற்குரிய மாளிகை பச்சை, நீலம் முதலிய கண்ணுக்கினிய நிறங்களுள்ள பளிங்குக் கற்களால் அமைக்கப் பெற்றது. வசந்த காலத்திற்குரிய மாளிகை செங்கல்லால் கட்டப் பெற்றது; அதன் மேல் முகட்டில் நீல ஓடுகள் பதிக்கப் பெற்றிருந்தன; சுற்றிலும் மலர்ச் செடிசுளும் கொடிகளும் நிறைந்த நந்தவனங்களும் இருந்தன.

மன்னரின் கவலை

சித்தார்த்தன் அடிக்கடி சிந்தனையில் ஆழ்ந்திருப் பதையும், அவன் முகத்தில் சோகம் படர்ந்திருப்பதையும் கவனித்து வந்த சுத்தோதனர், மந்திரிகளைக் கூட்டி வைத்து அவர்களுடன் கலந்து ஆலோசனை செய்தார். மழிலுடைய தக்க நங்கை ஒருத்தியை அவனுக்குத் திருமணம் செய்து, அழகிகள் பலரைப் பணிப்பெண்களாக நியமித்து விட்டால், அவன் மனம் கேளிக்கைகளிலே பாடுபட்டு, உலக வாழ்வில் பற்றுக் கொள்ளும் என்று அவர்கள் கருதினார்கள். சிதறிச் செல்லும் சிந்தனைகளை மைக்குழல் மாதரசி ஒருத்தி ஒருநிலைப்படுத்தித் தன் வசப்படுத்திக் கொள்வாள் என்றும், இரும்புச் சங்கிலிகளாலும் கட்டிப் பிணிக்க முடியாத உள்ளத்தை அவளுடைய மென்மையான கூந்தல் கட்டிவிடும் என்றும் அவர்கள் அபிப்பிராயம் கூறினர். அரசர்க்கும் அது சரியான யோசனையாகத் தோன்றியது. தமது வமிசம் ஆற்றொழுக்குப் போல் உலகில் நீடித்து நிலைத்திருக்க வேண்டுமென்றும், சித்தார்த்தனோடு முடிவடைந்து விடக்கூடாதென்றும் பல்லாண்டுகளாகக் கருதி வந்த நிலையில், அவர் விரைவிலே மைந்தனுக்குத் திருமணம் செய்து வைப்பதே நலமென்று இசைந்தார்.

ஆனால், சித்தார்த்தனுக்கு ஏற்ற பெண்ணை எப்படித் தேடிக் காண்பது? மன்னர் தேர்ந்தெடுத்த பெண்ணை, அவன் ஏற்பான் என்பது என்ன உறுதி? வனப்பு மிகுந்த பல பெண்களை அவன் முன்பு கொணர்ந்து காட்டினால், எல்லோரையும் பார்த்து விட்டு, ‘இது தானா பெண்ணுலகம்! எனக்குத் திருமணமே வேண்டாம்!’ என்று அவன் கூறிவிட்டால், என் செய்வது? இவ்வாறு பல வினாக்களையும் எழுப்பி, மன்னர் மந்திரி களோடு கலந்து ஒரு முடிவுக்கு வந்தார். நகரிலுள்ள பேரழகிகளை அரண்மனையிலே ஒருநாள் கூட்டி வைத்து, அவர்களிடையே அழகுப்போட்டி முதலிய போட்டிகள் படத்தி, வெற்றி பெற்ற பெண்களுக்குச் சித்தார்த்தன் கையாலேயே பரிசுகள் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே அந்த முடிவு. சித்தார்த்தனுடைய பிறந்த நாளும் நெருங்கி வந்து கொண்டிருந்தது. அந்த நன்னாளையே போட்டிக்குரிய நாளாக வைத்துக் கொள்ளலாம் என்று மன்னர் கருதியிருந்தார்.

முதலில் இளவரசனுடைய கருத்தை அறிய வேண்டும் என்று கருதி, சுத்தோதனர் அவனை அழைத்துப் பேசினார். ‘மைந்த! உனக்குத் திருமணமாகக் கூடிய வயது வந்து விட்டது. உன் மனத்திற்கு உகந்த பெண் யாராவது இருந்தால் என்னிடம் சொல்லலாம்’ என்று கேட்டார். அந்த விஷயமாகச் சிந்தித்து முடிவு சொல்வதற்கு தனக்கு ஒரு வாரம் அவகாசம் வேண்டும் என்று சித்தார்த்தன் கூறினான்.

ஏழு நாட்களாகத் திருமணத்தால் ஏற்படக் கூடிய புதிய நிலைமையைப் பற்றிச் சித்தார்த்தன் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தான். ‘ஆசையிலிருந்து வியைளக் கூடியது எல்லையற்ற, தீமையே. ஆசைக் காட்டில் வளர்ந்து முதிரும் மரங்களின் வேர்கள் துயரத்திலும் கலக்கத்திலும் ஊன்றி நிற்பவை. அம்மரங்களின் இலைகள் நஞ்சு போன்றவை. ஆசை அனலைப் போல் எரிக்கும். வாள் போல் வடுவுண்டாக்கும். நான் பெண்கள் துணை விரும்பிப் பெண்களோடு வாழும் கூட்டத்தைச் சேர்ந்தவனல்லன்; சாந்தி நிறைந்த வனத்திலே ஏகாந்தமாக வசிக்க வேண்டியவன் நான்...ஆயினும், சேற்றிலேயும் தாமரை மலர்கள் மலர்வதில்லையா? மனைவியரோடும் குழந்தைகளோடும் வாழ்ந்தவர்களும் ஞானத்தை அடைய வில்லையா?’ என்றவாறு அவன் ஆலோசனை செய்தான். விவாகம் செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்த பின், தனக்கு மனையாளாக வாய்ப்பலள் பெற்றிருக்க வேண்டிய அழகையும், குணங்களையும் பற்றிய தன் கருத்துக்களையும் தொகுத்து எண்ணிப் பார்த்தான். ஏழாம் நாளில் அரசர் பெருமான் மைந்தனைக் கண்டு அவன் தீர்மானத்தை அறிய விரும்பினார். சித்தார்த்தன் தான் மணஞ் செய்து கொள்வதாயிருந்தால், கீழ்க்கண்ட சிறப்புக்களெல்லாம் ஒருங்கே பொருந்தியுள்ள ஒரு மங்கையையே செய்துகொள்ள முடியுமென்று கூறினான்.

‘நான் மணந்து கொள்பவள் கன்னிப் பருவத்து இளம் பெண்ணாயிருக்க வேண்டும்; நான் மணந்து கொள்பவள் அழகின் நறுமலராக விளங்க வேண்டும்; ஆயினும், அவள் இளமையால் ஏற்படும் ஆடம்பரமற்றியிருக்க வேண்டும்; அழகினாலே செருக்கடையாமலிருக்க வேண்டும், நான் மணந்து கொள்பவள் உடன் பிறந்த சகோதரிபோல் அன்புடையவளாயிருப்பாள்; எல்லா உயிர்களிடத்திலும் தாயைப் போல ஆதரவு காட்டுவாள்; பொறாமை அவள் அண்டையிலும் அணுகவொண்ணாது. அவள் தன் கணவனைத் தவிரக் கனவிலும் வேறொர் ஆடவனைக் கருதமாட்டாள். ஒருகாலும் மிடுக்கோடு அவள் பேசமாட்டாள், அடக்கமே அவன் அணியாக விளங்கும், குற்றேவல் செய்யும் பணிப் பெண்ணைப் போல அவள் பணிவுடனிருப்பாள், அவசியமானவை தவிர வீணாகத் தேவைகளைப் பெருக்கிக் கொள்ள மாட்டாள்; தனக்குக் கிடைத்த பாக்கியமே பெரிதெகன்று மன நிறைவு கொண்டிருப்பாள். மதுவகைகளை அவள் விரும்பாள். இனிப்புப் பண்டங்களிலே அவள் மனத்தைப் பறிகொடுக்கமாட்டாள். கானமும், கந்தப் பொருள்களும் அவளைப் பாதிக்க மாட்டா. ஆடல் பாடல்களிலும், விழாக் கொண்டாட்டங்களிலும் அவள் அலட்சியமாயிருந்துவிடுவாள். என் பணியாளர்களிடத்திலும், அவளுடைய பணிப்பெண்களிடத்திலும் அவள் அன்புடன் பழகுவாள். அரண்மனையில் அதிகாலையில் கண் விழிப்பவள் அவளாகவேயிருப்பாள்; இரவில் இறுதியாகத் துயில் கொள்பவளும் அவளாகவே யிருப்பாள். நான் மணந்து கொள்ளும் மாது மனம், வாக்கு, காயம் ஆகியவை அனைத்திலும் பரிசுத்தமாயிருப்பாள்!”[2]

இதைக் கேட்டு உளம் மமிழ்ந்த அரசர், தமது அரண்மனைப் புரோகிதரை அனுப்பி, இளவரசனுக்கு ஏற்ற எழிலுடைய நங்கையர் எங்கெங்கு இருக்கின்றனர் என்று விசாரித்தறியும்படி கோரினார். புரோகிதர். கோலிய மன்னர் சுப்பிரபுத்தரின் குமாரி. எழிலரசி யசோதரா தேவியே சித்தார்த்தன் விரும்பிய பண்புகள் யாவும் பொருந்தியவள் என்று கண்டு, அரசர்க்கு அறிவித்தார். சுப்பிரபுத்தர் மன்னரின் மைத்துனரே. ஆயினும் சித்தார்த்தனுக்குப் பெண் கொடுப்பதை அவர் விரும்பவில்லை. ஏனெனில் இளவரசனின் ஜாதக முறைப்படி அவன் விரைவிலேயே எல்லாவற்றையும் துறந்து வனத்திற்குச் செல்லக்கூடும் என்று சோதிடர்கள் கூறிய செய்தியை அவர் அறிந்திருந்தார். தவிரவும் இளவசரன் மன்னர்க்குரிய வில்வித்தை, வாட்போர், மல்யுத்தம், குதிரையேற்றம் முதலியவற்றில் மற்ற இஞைர்களுடன் போட்டியிட்டு வெற்றி பெறாமல், அரண்மனைகளிலே அடைபட்டிருப்பதாயும் அவர் கருதினார். அவர் கருத்து எப்படியிருப்பினும் பெண் திலகமான யசோதரை, தன்னைத் திருமணம் செய்து கொண்டு மறுநாளே இளவரசன் துறவு பூணுவதாயிருப்பினும். தான் அவனையே கணவனாக அடைய விரும்புவதாகவும், உலகிலே தன்னை மணந்து கொள்ளத் தக்கவர் வேறு எங்கும் இல்லையென்றும் கூறிவந்தாள்.

காதலும் திருமணமும்

இடையில் இளவரசனுடைய பிறந்த நாளும் கிட்டி வந்தது. அன்று நகரிலுள்ள கன்னியர் அனைவருக்கும் அவன் பரிசுகள் அளிப்பதாயும், போட்டிகளில் வென்றவர்களுக்கு விசேடப் பரிசுகள் வழங்குவதாயும் நகரெங்கும் முரசறைவிக்கப் பெற்றது.

பிறந்த நாள் வைபவத்திலே சித்தார்த்தன் ஓர் அரியாசனத்தில் அமர்ந்து பரிசுகள் வழங்கிக் கொண்டிருந்தான். கபிலவாஸ்துவின் கன்னியர் பலரும் தோகை மயில்களைப் போல் அவனைச் சுற்றிக் கூட்டங் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். திரும்பிய இடமெல்லாம் மைதீட்டப் பெற்ற வேல் போன்ற கண்கள்! கன்னங்கரிய கார்மேகம் போன்ற கூந்தல்கள்! சந்திர வதனங்கள்! வண்ண வண்ண மான பட்டுடைகளும், சல்லாக்களும், சால்வைகளும்! பயிர் பெற்று உலவிய அந்த அழகிய ஓவியங்கள் பரிசு பெறும்போது, இளவரசனை ஏறிட்டுப் பார்க்க நாணித் தரையைப் பார்த்துக் கொண்டே நடந்தன. சித்தார்த்தன் ஆடவர் திலகமாய்க் கம்பீரத்தோடு கொலு வீற்றிருந்தான். எனினும், அவன் முகத்தில் ஆசையின் சாயை தென்படவேயில்லை. பெருந்தவ முனிவன் மணிமுடியும் நல்லணிகளும் அணிந்து, சாந்தியோடு திகழ்வது போலவே அவன் காணப் பெற்றான். மானினம் துள்ளிவருவது போலவும், மயிலினம் ஆடி வருவது போலவும், பெண்கள் தொடர்ச்சியாக வந்து அவனிடம் பரிசுகள் பெறும்போது, ‘இவன் நமக்கு எட்டாத கனி!’ என்று எண்ணி அடக்கத் கோடு ஒதுங்கிச் சென்று கொண்டிருந்தனர்.

ஆயிரக்கணக்கான பெண்களுக்கு அப்பால் கடைசி யாக யசோதரை வந்து கொண்டிருந்தாள். மான் மிரள்வது போன்ற அவள் விழிகளும், தண்ணொளி பரப்பிக்கொண்டிருந்த அவள் திருமுகமும், சித்தார்த்தனுடைய கவனத்தை முதலிலேயே கவர்ந்து விட்டன. அவள் நிமிர்ந்த தலையுடன், அண்ணலை ஒருமுறை நேராகப் பார்த்தாள். ‘எனக்கு ஏதாவது பரிசுண்டா ?’ என்று கேட்டுக் கொண்டே, அவள் புன்னகை பூத்து நின்றாள், இளவரசன் முன்னால் வைத்திருந்த பரிசுப் பொருள்கள் யாவும் தீர்ந்து விட்டன. ஆயினும் முதற் பரிசு பெறவேண்டிய பசுங்கிளி அவன் எதிரே காத்து நின்று கொண்டிருந்தது. அவ்வளவில் சித்தார்த்தன், ‘பரிசுகள் தீர்ந்துவிட்டன! ஆயினும், எனது மரகத மாலையை நகரின் அழகு ராணியான நீ ஏற்றுக் கொள்!’ என்று சொல்லிக் கொண்டே, தன் கழுத்திலிருந்த மாலையைக் கழற்றி அவளிடம் கொடுத்தான். இருவருடைய கண்களும் சந்தித்தன. இருவரும் பிரியும்போது எழுச்சியுடன் காணப் பெற்றனர்.

இந்த நிகழ்ச்சியை அறிந்த சுத்தோதனர் தமது கருத்துப்படியே இளவரசன் யசோதரையின்பால் காதல் கொண்டுள்ளான் என்று களிப்படைந்து, மைத்துனரைச் சந்தித்து விவரத்தைக் கூறினார். சுப்பிரபுத்தர் இளவரசனின் வீரத்தையும், பலத்தையும் பரீட்சித்துப் பார்க்க விரும்பினார். ‘அரசே! விரைவில் நகரின் இளைஞர்களை அழைத்துப் போட்டிப் பந்தயங்களுக்கு ஏற்பாடு செய்யலாம். தாங்கள் எதற்கும் கவலையுற வேண்டாம். என் கைவண்ணத்தையும், மக்கள் தெரிந்து கொள்ளச் சந்தர்ப்பம் அளியுங்கள்!’ என்று தைரியமாக வேண்டிக் கொண்டான்.

அவ்வாறே ஒரு வாரத்தில் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப் பெற்றது. சாக்கிய குலத் திலகங்களான யுவர்கள் பலரும் அவைகளிலே கலந்து கொண்டனர். குதிரை யேற்றம், வில்வித்தை முதலிய ஒவ்வொரு பந்தயத்திலும் சித்தார்த்தனே வெற்றி பெற்றான். கலைகள் பலவற்றிலும் அவனே முதல்வன் என்றும் நிரூபித்தான். நகரமே அரண்மனையில் திரண்டு நிற்பது போல் கூடியிருந்த மக்களனைவரும் பெருமகிழ்ச்சி கொண்டனர். இளவரசனின் திறமைகளைக் கண்ணாரக் கண்டு சுப்பிரபுத்தரும் தம் அருமை மகள் யசோதரை அவனுக்கே உரியவள் என்று அந்தச் சபையிலேயே அறிவித்தார்.

அவ்வாறு சித்தார்த்தனுக்கும் யசோதரைக்கும் ஒரு. நன்னாளில் திருமணம் கோலாகலமாக நடந்தேறியது.

சில வரலாறுகளில் யசோதரையின் பெயர் பத்த கச்சனா என்று குறிக்கப் பெற்றுள்ளது. சித்தார்த்தன் பிற்காலத்தில் புத்தராகி உபதேசம் செய்கையில், ஆபரணங்களால் அலங்கரிக்கப் பெற்ற நாற்பதாயிரம் பெண்கள் எனக்குப் பணிவிடை செய்து வந்தார்கள்; பத்த கச்சானா எனது மனைவி’ என்று கூறியுள்ளதில், பத்த கச்சானா யசோதரா தேவியே என்று உரையாசிரியர்கள் கூறுகின்றனர். ஒரு சில வரலாறுகளில் கோலி நாட்டுத் தண்டபாணி (சுப்பிரபுத்தரின் சகோதரர்) என்பவரின் மகள் கோபாவைச் சித்தார்த்தன் மணந்து கொண்ட தாகக் காணப் பெறுகின்றது. ஆயினும், பெரும்பாலான வரலாறுகள் யசோ தரையின் பெயரையே கூறுவதால், அவள் ஒருத்தியே சித்தார்த்தனின் மனைவி என்று கொள்ளலாம். யசோதரையே முன்னால் பல பிறவிகளிலும் தமக்கு மனைவியாக விளங்கினாள் என்று புத்தர் பெருமானே பிற்காலத்தில் அறிவித்துள்ளார்.

காதல் வலை

சித்தார்த்தனுக்கு ஏற்ற பேரெழிலுள்ள வாழ்க்கைத் துணைவி வாய்த்து விட்டாள். யசோதரையின் அழகும், குணங்களும், பணிசெய்யும் பண்பும் அவனைப் பரவசப்படுத்தி வந்தன. யாதொரு விகாரமுமில்லாத சுந்தரிகள் பலர் பணிப்பெண்களாக அமர்ந்திருந்தனர். கலைகளிலே தேர்ச்சி பெற்ற மங்கையர் பலர் தங்கள் ஆடல்களாலும் பாடல்களாலும், இசைக் கருவிகளாலும் இளவரசனின் கண்ணுக்கும், செவிக்கும், சிந்தைக்கும் இடைவிடாத விருந்தளித்து வந்தனர். இல்லறத்தை மேற்கொண்ட சித்தார்த்தனுக்குக் காமன் மண்டபம் என்று சொல்லத் தக்க மாபெரும் இன்ப மாளிகையொன்றும் கட்டப் பெற்றது. அதைச் சுற்றிலும் உத்தியான வனம் அமைந்திருந்தது. அதிலேயிருந்த செய்குன்றைச் சுற்றி உரோகிணி ஆறு சிரித்து விளையாடிப் பாய்ந்து கொண்டிருந்தது. குன்றுக்கு வடபால், மோனத்திலே அமர்ந்த முனிவர்களைப் போன்ற இமயமலையின் வெள்ளிய சிகரங்கள் விண்ணையளாவி நிமிர்ந்து நின்று கொண்டிருந்தன. வெள்ளிப் பனிவரையும், சுற்றிலும் பசுமை போர்த்து விளங்கிய வனங்களும், அரண்மனையும், உத்தியானமும்—எல்லாமுமே வெளியுலகை மறக்கச் செய்யும் மாண்புடன் விளங்கின.

புதிய அரண்மனை சாக்கிய நாட்டுச் சிற்பக்கலைக்கு எடுத்துக் காட்டாக விளங்கிற்று. அதன் கதவுகள் தந்தம் பதித்த சந்தன மரத்தாலானவை; உயரமான மண்டபங்களும், சிற்பங்களும், சிலைகளும், சித்திரங்களும் காண் போர் மனத்தைக் கொள்ளை கொண்டன. வெளியே உலாவிவருவதற்கான நடைபாதைகளில் பளிங்குக் கற்கள் பாவப் பெற்றிருந்தன. பளிங்குக் கற்களால் அமைந்த படிக்கட்டுகளுள்ள தடாகங்கள், பூங்கொடிப் பந்தர்கள், வசந்த மண்டபங்கள் பலப்பல ஆங்காங்கே அமைந்திருந்தன. புறாக்களும், கிளிகளும், மற்றும் பன்னிறப் பறவைகளும் அரண்மனையைச் சூழ்ந்து பறந்தும் கூவியும் இன்புறுத்தி வந்தன. மான்களும் மயில்களும் ஏராளமாய்க் கவலையற்றுத் திரிந்து கொண்டிருந்தன.

இவ்வாறு இயற்கை யழகும், மனிதர் கைபுனைந்து இயற்றிய எழிற் காட்சிகளும், மகளிர் அளித்த இசைகளும் இன்பங்களும் சித்தார்த்தனின் சித்தத்தைச் சிறைப்படுத்தி பவைத்துக் கொண்டிருந்தன. அரசர் சுத்தோதனர் அதனால் மனச் சாந்தி பெற்றுத் தாம் மட்டும் உள்ளத் துறவு பூண்டு, ஒழுக்கம் பேணி, உயரிய முறையில் அரசு புரிந்து வந்தார். சித்தார்த்தன் தங்கியிருந்த அரண்மனைக்கு வெளியே வெகு தூரத்திற்கு அப்பால் ஒரு பெரிய கோட்டை கட்டி, அதன் நடுவே உள்வாயில், நடுவாயில், வெளிவாயில் என்று மூன்று வாயில்களை அமைத்து, அவ்வாயில்களில் காவலுக்காகத் திறமைமிக்க வீரர்களை அவர் நியமித்திருந்தார். யாரும் அவ்வாயில்களைக் கடந்து செல்ல முடியாது. இளவரசனைக் கூட அவ் வாயில்களில் அனுமதிக்கக்கூடாது என்று அங்கிருந்த காவலர்களுக்குக் கண்டிப்பாக ஆணையிடப் பெற்றது. எனவே வெளியுலகிலுள்ள துயரம், சோகம் எதையும் காண முடியாத நிலையில், வாழ்வே முடிவில்லாத ஒரு காதற் கீதம் என்று இளவரசன் கருதிக் கொண்டிருக்கும் படியே, சூழ்நிலை யாவும் பொருந்தியிருந்தன.

இவ்வண்ணமாக நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகிக் கழிந்து கொண்டிருந்தன. சித்தார்த்தன் முன்னம் பல பிறவிகளிலே மனிதனாயும், விலங்காயும், அருகத்தாயும், போதி சத்துவராயும் தான் நோற்ற நோன்புகளையும், இயற்றிய தவங்களையும், ஆற்றிய அறங்களையும் மறந்திருந்தவன் போல், காதல் வலையின் மென்மையான கண்ணிகளிடையே பத்து ஆண்டுக் காலம் கட்டுண்டிருந்தான்.

  1. ‘புத்த வம்சம்’
  2. ஹெரேகல்ட் என்ற பெரஞ்சு ஆசிரியர் எழுதிய ‘புத்தர் வாழ்க்கைச் சரிதை'- ‘The Life of Buddha’ by A. Ferdinand Herold - translated from the French by Paul C Blum.
"https://ta.wikisource.org/w/index.php?title=போதி_மாதவன்/மண_வாழ்க்கை&oldid=1283879" இலிருந்து மீள்விக்கப்பட்டது