உள்ளடக்கத்துக்குச் செல்

போதி மாதவன்/மூன்று காட்சிகள்

விக்கிமூலம் இலிருந்து

நான்காம் இயல்

மூன்று காட்சிகள்


‘நிண்றன நின்றன நில்லா என உணர்ந்து
ஒன்றின ஒன்றின வல்லே செயின் செய்க!

—நாலடியார்

சித்தார்த்தருக்கு வயது இருபத்தொன்பது ஆயிற்று. இவ்வுலகில் வாழும் உயிர்களைப் பற்றியோ, அவைகளின் துயரங்களைப் பற்றியோ ஏதும் அறியாமல், மையலிலே சிக்குண்டு, தமது மாபெரும் மாளிகைகளிலே அவர் சிறைப்பட்டிருந்தார், உலகில் காணப்பெறும் நோய் நோக்காடுகள், இன்பதுன்பங்கள், சுய நலம் காரணமாக மக்களிடையே தோன்றும் போட்டிகள், பொல்லாங்குகள், எல்லா உயிர்களுக்கும் பொதுவாக ஏற்படும் பிணி, மூப்பு, சாக்காடு முதலியவைகளைப் பற்றி அவர் சிந்தித்துப் பார்ப்பதற்கே வழியில்லாதபடி பேரரசர் சுத்தோதனர் தடை செய்து வைத்திருந்தார். தளிர் மேனியும், கரிய கூந்தலும், நிலையற்று அலையும் மருண்ட விழிகளும் கொண்ட எழிலுடைய நங்கையர் கூட்டத்தின் நடுவே, இளவரசர் இரவும் பகலும் இசை வெள்ளத்திலே மிதந்து கொண்டிருந்தார். தோகை மயில்களைப் போன்ற மாந்தர்கள் தங்கள் நடனங்களின் மூலம் அவர் கருத்தைக் கவர்ந்து வந்தனர். எந்த நேரத்தில் எது தேவை என்பதை அறிந்து உடனுக்குடன் அவர் எண்ணத்தை நிறைவேற்றி வைக்க ஆயிரக்கணக்கான பணிப்பெண்களும் ஊழியர்களும் காத்து நின்றனர். எழிலரசி யசோதரை தனது சௌந்தரியத்தாலும், பண்பினாலும் அவர் உள்ளத்தைத் தனக்கே உரிமையாக்கிக் கொண்டிருந்தாள். இசை, நடனம், காதல்—காதல், நடனம், இசை என்ற முறையில் அவர் காதுகளுக்கும், கண்களுக்கும், கருத்துக்கும் மாறி மாறி விருந்தளிப்பதையே தொழிலாய்க் ெெரண்டிருந்தனர் அவரைச் சூழ்ந்திருந்த அணங்குகள் அனைவரும்.

நாடு, மக்கள் இனங்கள், உழைப்பு, தொழில்கள், வாழ்வு, வாழ்க்கைப் போராட்டம், வனங்கள், விலங்குகள் முதலிய எதையும் இளவரசர் நேரில் பார்த்தறிய வழியில்லை. இரவு நேரத்தில் அயர்ந்து - துயிலும்போது கனவிலே மட்டும் அவர் பல காட்சிகளைக் காண்பது வழக்கம், அக்காட்சிகளின் முடிவில், ‘அருமை உலகே! அறிந்தேன், அறிந்தேன்! இதோ வந்தேன்!’ என்று அவர் முணு முணுப்பார். இச் சொற்களைக் கேட்டுத் திடுக்கிட்டு விழிக்கும் யசோ தரை அவரை எழுப்பி என்ன நேர்ந்தது என்று கவலையுடன் கேட்பாள். ஏக்க மும் சோகமும் தேங்கிய முகத்துடன் சித்தார்த்தர் அவள் துயரத்தை மாற்றுவதற்காக, ‘ஒன்றுமில்லை!’ என்று வலிந்து புன்னகை புரிவார்.

தேவகீதம்

ஓரு நாள் இரவில் அந்தப்புரத்தில் அமர்ந்திருந்த போது தேன்பிலிற்றுவது போல் தேவகீதம் ஒன்று அவர் செவிகளில் கேட்டது. வாடி நொசிந்த சுடர்க் கொடிகளைப் போலப் பெண்கள் அனைவரும் அயர்ந்து துயிலும் நேரத்தில், வெளியேயிருந்து வீசிய பூங்காற்றில் இசை கலந்து வந்து ஒலித்துக்கொண்டிருந்தது. காற்றைப் போன்றது ககன வாழ்க்கை என்றும், எவ்வளவு தான் உறுதியாய்ப் பற்றியிருப்பினும், இந்த வாழ்வு முடிவில் உளுத்துப்போகும் என்றும், ‘நாம் எங்கிருந்து வந்தோம், எதற்காக வந்தோம், எங்கு செல்கிறோம். எதற்காகச் செல்கின்றோம்?” என்ற செய்திகளை அறியாமல் மன்பதையெல்லாம் மயங்கி நிற்கின்றது என்றும், மா நிலத்தின் துயரையெல்லாம் மாற்ற வந்துள்ள ஞானக் கதிரான சித்தார்த்தர் மேற்கொண்டு காலங்கடத்தாமல் துயில் நீங்கித் துள்ளியெழுந்து வர வேண்டும் என்றும், அந்தத் தேவகீதம் மெல்லிய இசையுடன் முழங்கிக் கொண்டிருந்தது.


‘நித்திய ஆனந்தத்தை-அரசே,
நீயும் அடைவதுண்டோ ?
சித்தத் தெளிவுடையாய் - சிறிது
சிந்தனை செய்திடுவாய்!

சாலவே உலகம்- துயரால்
தளர்ந்து வாடுதையா!
மாலை மாலையாய்க்- கண்ணீர்
வடிய விடுதையா!

“என்று வந்திடுவான்- ரக்ஷகன்
எவ்விடம் தோன்றிடுவான்?”
என்றிப் புவியெல்லாம் - நோக்கி
எதிரே நிற்குதையா!

‘கண்ணிலா உலகம் - இடறிக்
கவழ்ந்து விழாமல்,
அண்ண லே, எழுந்து - விரைவில்
அருள வேண்டுகின்றோம்!”[1]

தேவகீதத்தைக் கேட்டது முதல் சித்தார்த்தருக்கு நிலை கொள்ளவில்லை. இத்துடன் பணிப் பெண் ஒருத்தி கூறிய கதைகளால் அவருக்கு நாடு நகரங்களையும், பலப்பட்ட மக்களையும், வீதிகளையும், சோலைகளையம் கண்டு வரவேண்டும் என்ற ஆவல் உண்டாயிற்று. முதலில் தமது தலை நகரத்தையும், அதற்கு அணித்தே யிருந்த சோலையையும் பார்க்க வேண்டும் என்று அவர் தீர்மானித்தார். குளிர்ந்த ஏரிகளும் குளங்களும், கொத்துக் கொத்தாக மலர்களுடன் விளங்கும் செடிகளும் கொடிகளும், கனிகள் தொங்கும் மரங்களும், பாடித் திரியும் பல நிறப் பறவைகளும் நிறைந்த மன்னரின் சோலை அவர் உள்ளத்தை ஈர்த்தது. கட்டுத்தறியை விட்டுக் கானகத்தில் சுயேச்சயாகத் திரிய வேண்டு மென்று விரும்பும் களிறு போல், அவர் அரண்மனையை விட்டுச் சிறிது நேரமாயினும் வேண்டும் என்று ஆசைகொண்டார்.

முதற் காட்சி

மைந்தரில் நோக்கத்தைக் கேள்வியுற்ற மன்னர் உடனே அங்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வதில் ஈடுபட்டார். சாலைகள் செப்பஞ் செய்யப் பெற்றன. வீடுகளும் வீதிகளும் அலங்கரிக்கப் பெற்றன. கொடிகளும் தோரணங்களும் ஐயனின் வரவை எதிர்பார்த்து ஆடிக் கொடிருந்தன. நகரமக்கள் யாவரும், உயர்ந்த ஆடை ஆபரணங்களுடன், திருவிழாக் கோலத்தில் திரண்டு நின்றனர். உயர்தரமான நான்கு வெள்ளைப் புரவிகள் பூட்டிய மணித் தேரும் தயாராக வந்து நின்றது. இளவரசர் முகத்தில் இன்பமும் துன்பமும் கலந்த உணர்ச்சிகளைக் கண்டு சுத்தேதானர், ‘வெளியே இன்பக் காட்சிகளைக் கண்டு வந்தால் அவன் உள்ளம் உவகையுறும் என்று கருதி ஆசி கூறி வழியனுப்பினார்.

இரதமும் புறப்பட்டுச் சென்றது. இளவரசரின் எழில் நலத்தைக் காண்பதற்காக மகளிரும் மைந்தரும் ஒருவரையொருவர் முந்திக்கொண்டு ஓடி வந்தனர். நாட்டுப் புறத்திலிருந்தும் திரள் திரளாக மக்கள் வந்தி மத்தார். மாடங்களிலெல்லாம் மகளிரின் மதி முகங்கள் பிரகாசித்துக் கொண்டிருந்தன. மந்திரிகளும் மற்ற அதிகாரிகளும் இரதத்தைச் சூழ்ந்து குழுமியிருந்தனர். ஏழைகள், செல்வர்கள், வயோதிகர்கள், வாலிபர்கள்–யாவருடைய கண்களுக்கும் வள்ளல் சித்தார்த்தரின் திருமுகம் நல்விருந்தாக விளங்கிக் கொண்டிருந்தது. எங்கணும் மலர்ந்த முகங்கள் விளங்கின; வாழ்த்தொலிகள் முழங்கின. சிலர் குதிரைகளின் கழுத்துக்களில் மாலைகள் அணிவித்தனர்; சிலர் உவகையோடு வெற்றிமுழக்கம் செய்து வரவேற்றனர்.

வழியெங்கும் சோகமோ துயரமோ விளைவிக்கும் காட்சி எதுவும் இளவரசர் கண்ணில் தென்பட்டு விடக் கூடாது என்று அரசர் முன்னதாகவே ஆணையிட்டிருந்தார். கூனர், குருடர், செவிடர், - முடவர், நோயாளர் எவரும் வீதிகளில் வராமல் தடை செய்வதற் காகத் தனியாகக் காவலர்கள் நியமிக்கப் பெற்றிருந்தனர். எங்கும் மகிழ்ச்சி நிறைந்திருந்தது; எவர் முகத்திலும் கவலைக் குறியே இல்லை.

மக்களின் மகிழ்ச்சி சித்தார்த்தரையும் பற்றிக் கொண்டது. பொன்னும் மணிகளும் புனைந்து செய்த இரதம் இந்திர விமானம்போல் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அதன்மீது தாம் பவனி வருவதைக் காண்பதில் மக்கள் கொண்ட மகிழ்ச்சியைக் கண்டு, சித்தார்த்தர், அந்த மக்களைக் கொண்ட இராஜ்யத்தைப் பெற்றிருப்பதே பெரும் பேறு என்று கருதினார். அவர் உள்ளமும் உவகையால் மலர்ந்தது. ‘நடந்தால் நாடெல்லாம் உறவு; படுத்தால் பாயும் பகை’ என்ற பழமொழிக்கு ஏற்பத் தாம் வெளியே வந்ததில் மக்கள் தம்மிடம் கொண்டுள்ள நேசத்தை அவர் நேரில் பார்க்க முடிந்தது அதனால், அளவற்ற மகிழ்ச்சி உண்டாயிற்று. இரதம் நகர வாயிலை அடைந்ததும், மேற்கொண்டு சோலையை நோக்கிச் செலுத்தும்படி அவர் பாகனிடம் கூறினார். சாரதி சந்தகன் அவ்வாறே தேரைத் திருப்பினான்.

அந்த நேரத்தில் சாலை ஓரத்திலே, தேவர்களில் ஒருவன் தன் உருமாறி, ஒரு வயோதிகப் பிச்சைக்காரனாகக் காட்சியளித்தான். அவனுடைய உலர்ந்த உடலும், வற்றிய தோலும், குழிவிழுந்த கண்களும் பார்க்கப் பயங்கரமாயிருந்தன. ‘ஐயா, பிச்சை!’ என்று அவன் கூவும்போதே இருமல் அவனைப் பற்றிக் கொண்டது அவன் கையிலிருந்த கழியின் மேல் உடலைச் சாய்த்துக்கொண்டு, மெல்ல - மெல்லத் தள்ளாடிக் கொண்டே முன்னால் நகர்ந்து வந்தான். சுற்றியிருந்த ஜனங்கள், ‘இளவரசர் வருகிறார்!’ என்று கூறி அவனைக் கண் மறைவாக ஒதுங்கும்படி அழைத்துச் சென்றனர். அதற்குள் சித்தார்த்தர் அந்தக் கிழவனை நன்றாகக் கண்டுகொண்டார். உடனே, அவனை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று பணித்தார்.

அவர் சந்தகனைப் பார்த்து, ‘இவன் எத்தகைய மனிதன்? தலை நரைத்து, கண்கள் பள்ளத்தில் ஆழ்ந்து, உடல் ஒட்டிப் போயுள்ள இவன் யார்? இவனுடைய உடல் வெப்பத்தால் உலர்ந்து போய்விட்டதா? அல்லது பிறவியிலேயே இவன் இவ்வாறு தோன்றியவனா?’ என்று வினவினார். சாரதி திடுக்கிட்டுப் போய், உள்ளதை உள்ளபடி கூற அஞ்சினான். ஆனால், கிழவன் உருக் கொண்டு எதிரே நின்ற தேவனின் தெய்விக ஆற்றலால் அவன் உண்மையையே கூற நேர்ந்தது.

இவன் வயதான கிழவன். நெடுநாள் வாழ்ந்ததில்; உடலின் ஆற்றல் வற்றிவிட்டது; நரம்புகள் தளர்ந்து விட்டன. எண்பது ஆண்டுகளுக்கு முன் இவனும் பச் சிளங் குழந்தையாயிருந்து தன் அன்னையின் அமுதப் பால் பருகி வளந்தவன் தான்! பின்னால் அழகுள்ள வாலிபனாயிருந்து இவன் ஐம்புல இன்பங்களில் ஆழ்ந்திருந்தான். இவனும் நம்மைப் போல் நிமிர்ந்து நடமாடியவன் தான்; வயது ஏற ஏற உடல் தளர்ந்துவிட்டது; முதுமை வந்து விட்டது; இவனுடைய விளக்கில் எண்ணெய் வற்றி விட்டது. இப்போது திரி மட்டும் சிறிது எரிந்து கொண்டிருக்கிறது. அதுவும் விரைவில் அணைந்து போய்விடும்... இதைப்பற்றியெல்லாம் இளவரசர் கவனிப்பானேன்!” என்று சந்தகன் விளக்கிக் கூறினான்

இளவரசர் முகம் வாட்டமடைந்தது. அவர் உள்ளம் உருகிவிட்டது. ‘முதுமையடைந்தவன் இவன் ஒருவன் தானா? அல்லது மற்றவர்களுக்கும் இதே கதி உண்டாகுமா? இவனைப்போல நெடுநாள் வாழ்ந்தால், நானும் இதே தோற்றத்தை அடைவேனே? மூப்பினால் யதோதரைக்கும் நரையும் திரையும் ஏற்படுமோ? மற்றவர்களுக்கும் முதுமை உண்டாகுமோ?’ என்று கேட்டார்.

சாரதி மறுமொழி கூறினான் : ‘ஆம், இளவரசே! பிறவியெடுத்த அனைவருக்கும் முதுமை உண்டு. இளவரசருக்கும் இந்த நிலை ஏற்படுவது இயல்பு. உருவம் மாறும்; இளமைத் தோற்றம் மறைந்து ஒரு சமயம் முதுமை ஏற்படுவதே இயற்கை. மக்கள் யாவருக்கும் இது பொதுவான விதி!’

இதைக் கேட்டதும், சித்தார்த்தரின் சித்தம் சோகத் தால் கலங்கிவிட்டது. நீண்ட பெருமூச்சு விட்டு அவர் தலையை அசைத்துக்கொண்டே, அந்த வயோதிகனையும், அவனைச் சுற்றி ஆரவாரம் செய்து கொண்டிருந்த ஜனங்களையும் பார்த்த வண்ணம் பேசலானார்; ‘முதுமை எல்லோரையுமே அடித்துத் தள்ளிவிடுகின்றது! நமது அழகு, நினைவு, வீரம் எல்லாவற்றையும் தொலைத்து விடுகின்றது! இதை அறிந்த பின்னும் உலகம் கவலையின்றிக் காலங்கழித்து வருகின்றதே!–தனக்கு ஏற்படப் போகும் கதி கண் முன்பு தெரிந்து கொண்டிருந்தும் அது சலனமடையவில்லையே!”

பிறகு அவர் பாகனை விளித்து, ‘முதுமையைப் பற்றிய சிந்னைகள் என் உள்ளத்தில் குமுறிக் கொண்டிருக்கையில், நாம் சோலையிலே சென்று என்ன காட்சியைக் காணப் போகிறோம்! உடனே இரதத்தை அரண்மனைக்குத் திருப்பி விடு!’ என்று கூறினார். அவனும் அவ்வாறே திருப்பிவிட்டான்.

அரண்மனையிலும் சித்தார்த்தரின் உள்ளம் அமைதி பெறவில்லை. எந்த நேரமும் ‘முதுமை, முதுமை, புதுமைப் பருவம்’ என்ற ஒன்றைப்பற்றியே அவர் சிந்தனை சென்று கொண்டிருந்தது. பல்லாண்டுகளாக படலைப் பற்றியோ, உயிரைப்பற்றியோ சிந்தனையற் மிருந்தவர் இப்போது அவைகளைப்பற்றியே ஆராய முற்பட்டார். இதனால், உள்ளத்தின் சாந்தி குலைந்து, சோகம் புகைந்து கொண்டிருந்தது. அரண்மனையிலுள்ள பலரும், எந்தப் பொருளும் அவருக்கு இன்பமளிக்க வில்லை. உண்ணாமலும், துயிலாமலும், அவர் இருந்த இடத்தில் இருந்து கொண்டே, இரவு முழுவதும் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்.

அவருடைய சோகத்தையும், அதன் காரணத்தையும் அறிந்த சுத்தோதனர் மிக்க வருத்தமும் கவலையும் கொண்டார். எதைச் செய்தாவது கோமகன் சோகத்தை விரைவில் மாற்றவேண்டும் என்று இரவில் நெடுநேரம் ஆலோசனை செய்துகொண்டே கண்ணயர்ந்து விட்டார். துயிலின் நடுவே அவர் கண்ட கனவுகள் வேறு அவர் உள்ளத்தை உளையச் செய்தன. வெள்ளித் தந்தங்களுள்ள மலை போன்ற யானைகள் பத்து உலகம் அதிரும்படி, சுற்றி வருவது போலவும், அவைகளில் ஒன்றின் மீது சித்தார்த்தர் அமர்ந்து செல்வது போலவும், ஒளிவிடும் தங்கமும் மரத்தினங்களும் இழைத்த பெரிய திகிரி ஒன்று கருதற்கரிய சோகத்துடன் சுழல்வது போலவும், நான்கு வெள்ளைப் புரவிகள் பூட்டிய தேர் ஒன்றில் சித்தார்த்தர் எங்கோ சென்று கொண்டிருப்பது போலவும், இடி யோசைபோல் அதிரும்படி அவர் ஒரு பெரிய பேரிகையைக் கொட்டி முழக்குவது போலவும் அக்கனவுகளிலே பல காட்சிகள் தோன்றின.

பொழுது விடிந்ததும் பார்த்திபர் கனவு நூல் வல்லுநர் பலரை அழைத்து விசாரித்தார். ஆனால் அவர் கண்ட கனவுகளின் பொருளை அவர்களால் விரித்துரைக்க முடிய வில்லை. கடைசியாக மான் தோல் உடையுடன் ஒரு வயோதிகத் துறவி அரண்மனைக்கு வந்து அரசர் கண்ட கனவுகளைப் பற்றி விளக்கியுரைத்தார். அரசர் அவைகளை எண்ணித் துயரப்படாமல் மகிழலே வேண்டும் என்று அவர் கூறினார். யானைகள் உலகு அதிரும்படி சென்றது சித்தார்த்தர் பத்து வகை ஞானமும் பெற்று உலகுக்கு அறத்தினை உபதேசிப்பதாகும் என்றும், நான்கு குதிரைகள் பூட்டிய இரதம் நான்கு வகை வாய்மைகளுடன் பொருந்திய அவருடைய தரும இரதம் என்றும், பொன்னாலான திகிரி சுழன்றது அண்ணல் உருட்டப் போகும் அற ஆழியைக் குறிக்கும் என்றும், பேரிகை முழக்கம் அவருடைய அருளறம் பல நாடுகளிலும் வெற்றிகரமாகப் பரவுவதை குறிக்கும் என்றும், அவர் கனவுகளுக்குப் பொருள் கூறி மன்னரைச் சமாதானப்படுத்தினார்.

மேலும், ஏழு நாட்களில் கனவில் கண்ட காரியங்கள் பலிக்க ஆரம்பிக்கும் என்றும், செல்வமும் சிறப்பும் வாய்ந்த இராஜ்யங்களைப் பார்க்கிலும் பெரிய செல்வங்களைச் சித்தார்த்தர் அடைவார் என்றும், அவருடைய துவாரடை பொன்னாடைகளை விடச் சிறப்புடையதாக விளங்கும் என்றும் கூறி, அத்துறவி மிக்க விநயத்துடன் வணக்கம் செய்து விட்டுத் திடீரென்று எழுந்து வெளியே சென்று விட்டார். மன்னர் அவருக்குச் சேர வேண்டிய பரிசுகளைப் பணியாளர் மூலம் அனுப்பி வைத்தார். ஆனால், அவர்கள் அவரைக் கண்டுபிடிக்க முடியாமல் திரும்பி விட்டனர். ‘அவர் ஓர் ஆலயத்துள் நுழைவதைக் கண்டு நாங்களும் உள்ளே சென்று எங்கும் தேடினோம். அவர் எப்படியோ மாயமாய் மறைந்து விட்டார். ஆலயத்துள் ஒரே ஒரு வௌவாலைத் தவிர வேறு உயிர் களையே காணவில்லை!’ என்று அவர்கள் கூறியதிலிருந்து அரசர் அதிலும் ஏதோ அதிசயம் இருப்பதை உணர்ந்தார்

அவருடைய கவலை பன்மடங்கு அதிகமாயிற்று. மேலும் மேலும் இளவரசருக்கு இன்பமளிக்கும் விஷயங்களை ஆராய்ந்து அவற்றைச் செய்து வரும்படி உத்தரவிட்டார். சௌந்தரியம் மிக்க புதிய நடனமாதர் பலரை யும் அனுப்பி வைத்தார். அரண்மனையைச் சுற்றியிருந்த கோட்டை வாயில்களைக் கவனமாய்க் காத்து வரும்படி திறமைமிக்க காவலர் பலரையும் நியமித்தார்.

இரண்டு காட்சிகள்

சித்தார்த்தர் மீண்டும் நகரையும், பூஞ்சோலையையும் பார்த்து வர வேண்டும் என்று மன்னரிடம் வந்து விடை கேட்டார். எத்தனையோ இன்பங்கள் நிறைந்ததாகத் தோன்றும் வாழ்க்கை நதி முடிவில் காலமென்னும் பாலை மணலில் பாய்ந்து அவலமாய்ப் போகும் கதியைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்த நிலையில், அவர் தம் நகர மக்களை நேரிலே சென்று பார்க்க விரும்பினார். முன்னறிவிப்பு இல்லாமல், எவ்வித ஏற்பாடுகளும் இன்றி, அவர் மாறுவேடத்திலே சுற்றிவரத் தீர்மானித்திருந்தார். அரசரும் அதற்குச் சம்மதித்தார். மறுமுறை சுற்றி வந்தால், முதல் நாள் நேர்ந்த விபரீதத்தை மாற்றிவிடக் கூடும் என்று அவர் கருதினார். மறுநாள் நண்பகலில் இளவரசரும் தேர்ப்பாகனும் வெளியே சென்று வர ஏற்பாடாயிற்று.

மறு நாள் கோட்டை வாயிலில் அரசருடைய முத்தி ரையைக் காட்டியதும் காவலர்கள் நெடுங் கதவுகளைத் திறந்து ‘வழிவிட்டனர். சித்தார்த்தர் ஒரு வணிகரின் உடை அணிந்திருந்தார். சந்தகன் வணிகரின் பணியாளாக நடித்தான். காவலர் எவரும் அவர்களை இனம் கண்டு கொள்ள முடியவில்லை. அதுபோலவே நகர மக்களும் அவர்கள் எவர்கள் என்பதை உணரவில்லை. எனவே சித்தார்த்தரும் சாரதியும் பல வீதிகளின் வழியாகச் சென்று, வர்த்தகர்கள், தொழிலாளர்கள், மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், படைவீரர்கள், தண்ணீர் கொண்டு செல்லும் பெண்கள் முதலிய பலதிறப்பட்ட மக்களையும் நிதானமாகச் சந்தித்துப் பார்க்க முடிந்தது. கடைத் தெருக்கள், பள்ளிகள், ஆலயங்கள், தொழில் நிலை யங்கள் முதலியவையெல்லாம் சித்தார்த்தருக்குப் புதுமை களாகவேயிருந்தன. எங்கணும் மக்கள் வெள்ளம், எல்லோரும் ஏதேதோ வேலைகளின் மேல் சென்று கொண்டிருந்தனர். காட்சிகள் அனைத்தையும் பார்த்தவண்ணம் சித்தார்த்தரும், சாரதியும் உரோகிணி நதிக்குச் செல்லும் சாலைப் பக்கமாகத் திரும்பிச் சென்றனர்.

அந்தச் சாலையில் திரும்பியதும், தேவர்களின் சூழ்ச்சியால் நோயாளி ஒருவன் அவர்கள் முன்பு தோன்றினான். மெலிந்து, நலிந்து, வயிறு வீங்கியிருந்த அந்த நோயாளி தரைமீது தத்தளித்துக் கொண்டிருந்தான். அருகேயிருந்த புற்களைப் பற்றிக் கொண்டு அவன் எழுந்திருக்க முயன்றான். ஆனால் முடியவில்லை. ‘அம்மா, அப்பா...யாரேனும் உதவமாட்டீர்களா?’ என்று வேதனை தாங்காமல் அவன் மெல்லக் கூவினான். சித்தார்த்தர் ஓடிச் சென்று, அவன் தலையை மெதுவாகத் தூக்கித் தனது மடிமீது வைத்துக் கொண்டு, ‘உனக்கு என்ன செய்கிறது, சகோதரா? நீ ஏன் எழுந்திருக்க முடியவில்லை ?’ என்று கேட்டார். பாகனைப் பார்த்து, ‘சந்தகா! இவன் உடலெல்லாம் நடுங்குகின்றது. வாய் பேச முடியவில்லை. கைகளும் கால்களும் காய்ந்த குச்சிகளைப் போலத் தொங்குகின்றன. உடலே வெறும் எலும்புக் கூடாக இருக்கிறதே! இவன் யார்?’ என்று கேட்டார்.

‘இவன் நோயாளி. ஏதோ ஒரு கொடிய நோய் இவனைப் பற்றிக் கொண்டிருக்கிறது. இவன் அங்கங்களெல்லாம் தளர்ந்து போய் விட்டன. இவன் சாக வேண்டியவன். ஆனால் படவேண்டிய வேதனை எஞ்சியிருப்பதால், குறையையும் அனுபவிப்பதற்காகவே உயிரோடு இருக்கிறான். கோமகனே! தாங்கள் இவனைத் தீண்டுதலும் ஆகாது. இவனது நோய் தங்களையும் பற்றிக்கொள்ளும்!’ என்று கூறினான் சந்தகன்.

‘இந்த நோய் இவனுக்கு மட்டும் ஏற்பட்டதா? இல்லையெனில், எல்லோருக்கும் இது இயற்கையா?’

‘மனிதர் யாவர்க்கும் நோய் பொதுவானது; அது பல உருவங்களில் தோன்றும். உடல் படைத்தவர் எல்லோரும், எந்த இடத்திலும், இதை எதிர்பார்க்கவேண்டியது தான்!’

‘நோய் வருவது முன்னதாக நமக்குத் தெரியாதா?’

‘தெரியாது. இளவரசே! மறைந்திருந்து கொத்தும் நாகம் போன்றது நோய். இடி, எவர்களை விட்டுவிட்டு, எவர்கள் தலைகளில் விழும் என்பதை யாரேனும் அறிந்து கூற முடியுமா?’

‘அப்படியானால் எல்லா மக்களும் நோய்களுக்கு அஞ்சியே வாழ்ந்து கொண்டிருக்கின்றனரா?’

‘ஆம், அரசே!’

‘இந்தத் துயரங்களையெல்லாம் பார்த்த பின்னும் மனித சமூகம் அமைதியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறது. நோயின் கொடூரங்களிலிருந்து கூடத் தப்ப முடியாத மனிதர்கள் புன்னகையோடு திரிவதைக் கவனித்தால், அவர்களுடைய அறிவே சிதறிப் போய்விட்டதாகத் தோன்றுகிறது!’

சித்தார்த்தருடைய மனவேதனையை உணர்ந்து சந்தகனும் வருந்தினான். காணகூடாத காட்சி எதிர்ப் பட்டுவிட்டது! உண்மையை ஒளித்துக் கூறும் துணிவும் அவனுக்கு ஏற்படவில்லை. சித்தார்த்தர் நோயாளியின் முகத்தைக் கருணையோடு உற்றுப் பார்த்துக் கொண்டே. ‘சந்தக!’ இந்தப் பிணிக்கு அப்பால் மனிதருக்கு என்ன நேரிடும்?’ என்று வினவினார்.

‘ஒரே முடிவு தான்-மரணம்!’

‘மரணமா?’ என்று திடுக்கிட்டுக் கேட்டார் சித்தார்த்தர்.

அந்தக் தேள்விக்கு மறுமொழி கூறுவதுபோல் சிறிது தூரத்தில் ஒரு சங்கின் அலறல் கேட்டது. ஒருவன் தலை விரி கோலமாகக் கைகளில் தீச்சட்டி ஏந்தி வந்து கொண்டிருந்தான். அவனுக்குப் பின்னால் நான்கு மனிதர்கள் ஒரு பாடையைத் தூக்கிக்கொண்டு வருவதையும் சித்தார்த்தர் கண்டார். சோகம் தேங்கிய முகங்களுடன் கண்ணீர் பெருக்கிக் கொண்டே வேறு சிவரும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர்.

இது என்ன ஊர்வலம்?’ என்று சித்தார்த்தர் பாகனைக் கெட்டார்.

‘எவனோ ஓர் ஏழை இறந்து போய்விட்டான். அவனுடைய உதிரம் உறைந்து, உடல் பசையற்றுப் போய் விட்டது. அந்த உடலின் கண்களினின்றும் பார்வை ஒழிந்தது; செவிகளினின்றும் கேள்வி ஒழிந்தது; நாசியினின்றும் மோப்ப உணர்ச்சியும் அகன்று விட்டது. இப்போது அது மரக் கட்டை மாதிரிதான். ஆற்றோரமாகக் காட்டத்தில் வைத்து எரிப்பதற்காக உறவினர்கள் அதைத் துணியில் சுற்றி எடுத்துச் செல்கிறார்கள். இனி, அந்த உடலுக்குத் துன்பமும் இல்லை, இன்பமும் இல்லை அதற்கு நீரும் ஒன்று தான், நெருப்பும் ஒன்றுதான்!’

‘சாவு என்பது இவனுக்கு மட்டுந்தானா? அல்லது எல்லோருக்குமே ஏற்படுவதா?

‘பிறந்தவர் எல்லோரும் இறக்க வேண்டியவர்களே. பலசாலிகள், வாலிபர்கள், வயோதிகர்கள்-யாராயிருந்தாலும் முடிவு இதுதான்!’

இதைக் கேட்டதும் சித்தார்த்தருக்கு மூச்சு விடுவதே கடினமாகிவிட்டது. ‘ஆள் பார்த்து உழலும் அருளில் கூற்றின்’ தன்மை அவருக்கு வெட்ட வெளிச்சமாகி விட்டது. ஏற்கனவே துயருற்றிருந்த மனம் மேலும் கலங்கி விட்டது. பதறுகின்ற குரலில் சில வார்த்தைகளே அவருடைய தொண்டையிலிருந்து வெளிவந்தன. ‘உலக மக்களே! எவ்வளவு அநியாயமாக நீங்கள் ஏமாறியிருக்கிறீர்கள்! எந்த உடலும் சாம்பலாகி விடுவதை எல்லா இடங்களிலும் கண்ட பின்னரும், கருத்தேயில்லாமல் வரழ்கிறீர்களே! இதயம் என்பது கல்லா, கட்டையா? எல்லாம் மறையும் என்ற உண்மையைப் பற்றி அது ஏன் சிந்திப்பதில்லை?’ இவ்வாறு சொல்லிக்கொண்டே, அவர் வானத்தையும் பூமியையும் மாறிமாறிப் பார்வை யிட்டார். அந்தப் பார்வையிலிருந்து ஏதோ ஓர் உன்னத லட்சியம் அவர் உள்ளத்தில் உதயமாகியிருப்பது போல் தோன்றியது.

அன்று சித்தார்த்தர் கண்ட காட்சிகளின் முடிவில் நோயும் சாக்காடும் வந்து குறுக்கிட்டதை எண்ணி, எப்படியும் சோலையிலே சிறிது நேரம் தங்கியிருந்தால் அவர் உள்ளம் மாறிவிடும் என்று கருதிச் சந்தகன் அவரை வற்புறுத்தி அங்கே அழைத்துச் சென்றான்.

சித்தார்த்தரின் சோகம்

இயற்கை அழகு நிறைந்த சோலையிலே மன்னரின் ஆணைப்படி உதாயி[2] என்ற தோழன், ஆடல் பாடல்களில் தேர்ந்த கட்டழகிகள் பலருடன், சித்தார்த்தரின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தான். இளவரசர் அங்கு வந்தவுடன் இசையும் நடனமும் ஆரம்பமாயின. சிறிது நேரத்திற்குப் பின் மாதர்கள் கூட்டங் கூட்டமாக அவரைச் சூழ்ந்து மொய்த்துக் தொண்டனர். ஆனால், வழக்கமாக அவர்கள் பார்த்திருந்த இளவரசர் அன்று இல்லை. மாநிலத்தின் சோகத்தை யெல்லாம் தமமி மதிமுகத்தில் தேக்கிக் கொண்டு, ஒரே சிந்தனையில் ஆழ்ந்து நின்றார் சித்தார்த்தர். கை வளையல்களின் ஒலியோ, கால் சிலம்புகளின் சதங்கை ஒலியோ, கிள்ளைகள் போல் கொஞ்சும் சுந்தரிகளின் குரலோ அவரைக் கவர முடியவில்லை.

‘மூப்பு, பிணி, சாக்காடு! உலகத்தின் துயரம் கடலை விடப் பெரிது! கடலைவிட ஆழமானது! ஒரே துன்ப வெள்ளம்! துக்கத்திற்கும் மரணத்திற்கும் பாலம் அமைத்தது போலவே வாழ்க்கை விளங்குகின்றது! இன்பங்கள் எல்லாம் துன்பங்களிலேயே முடிகின்றன. மோகம் ஊட்டும் இளமை முதுமையிலே முடிகின்றது; காதலெல்லாம் பிரிவிலேயே முடிகின்றது; வாழ்க்கை வெறுக்கத் தகுந்த மரணத்திலேயே முடிகின்றது! இந்த ஏமாற்றத்திலேயே நானும் இவ்வளவு காலமாக ஆழ்ந்திருந்து விட்டேன்! இதோ என் கண்களை மறைத்திருந்த திரை கிழிந்து வீழ்ந்து விட்டது. எனக்கும், என்னைப் போன்ற சடல மெடுத்த சகவருக்கும் உதவியாக நான் உண்மையை உணர்ந்து கொள்வேன்! தெய்வங்களை நினைத்து இரங்கி ஏங்குவதில் பயனில்லை. பிரமனே இவ்வுலகைப் படைத்தான் எனில், இதை ஏன் இவ்வளவு துயரத்தில் ஆழ்த்தி வைக்க வேண்டும்?'–இவ்வாறு சிந்தனையில் ஆழ்ந்திருந்த சித்தார்த்தரின் கண்கள் அன்றலர்ந்த தாமரை மலர்களைப் போன்ற ஆயிழையர் முகங்களை ஏறிட்டுப் பார்க்க மறுத்தன.

‘சொற்பல பேசித் துதித்து நீங்கள் நச்சிச் செல்லும் நரகவாயில்’ என்றோ , ‘காதள வோடிய கலகப் பாதகக் கண்ணியர்’ என்றோ அவர் அம்மங்கையரை வெறுத்துரைக்கவில்லை. ‘மறலி விட்ட தூதுவர்’ என்றும், கருவிளை கழனிகள் என்றும், ‘காமப் பாழிகள்’ என்றும் பொதுவாகத் துறவிகள் பெண்களைப் பழிப்பது போல் அவர் பழிக்கவில்லை ஆனால் அப்பெண்கள் வாழ்க்கையைப் பற்றிய சிந்தனையேயில்லாமல், அறியாமையில் ஆழ்ந்திருப்பதைப் பற்றியே எண்ணிப் பரிதாபப்பட்டார். இந்தப் பெண்கள் அனைவரும் இளமை நீங்கி விரைவிலே முதுமையடையப் போகின்றார்கள்; நோயும், மரணமும் இவர்களை எதிர்பார்த்துக் காத்து நிற்கின்றன; இந்த உண்மையைக் கூட உணராமல் இவர்கள் சிரித்து விளை யாட எப்படி முடிகின்றது? முதுமை, பிணி, மரணம் மூன்றையும் பார்த்த ஒருவர், பின்னால் அமைதியாக நிற்கவோ, அமரவோ, துயிலவோ முடியாதே! ஆனால், இவர்கள் கேளிக்கைகளிலே ஈடுபட்டு எப்படிச் சிரிக்கிறார்கள்?’ என்று அவர் தமக்குள்ளேயே கேட்டுக் கொண்டார்.

அவருடைய சோகத்தைக் கண்டறிந்த உதாயி அருகே வந்து பல தேறுதல் மொழிகள் கூறினான். இளமை இன்பத்திற்காகவே ஏற்பட்ட பருவம் என்றும், காதல் மிகுதியால் களித்து வந்து அபயம் கேட்கும் அபலைகளை உதறித் தள்ளுதல் மரியாதையன்று என்றும், தான் கட்டி வைத்திருந்த நீதிகளையெல்லாம் அவர் முன்பு விரித்துரைத்தான்.

சித்தார்த்தர் பொறுமையோடு அவன் சொற்பொழிவைக் கேட்டு விட்டு, ‘நான் உலகப் பொருள்களில் எதையும் உதறித் தள்ளவில்லை. மனித குலம் முழுதும் அவைகளோடு தொடர்பு கொண்டிருக்கின்றது. ஆயினும் இந்த நெடிய உலகிலே எதுவும் நிலையில்லை. நிலையாமை ஒன்றே இங்கு நிலைத்திருக்கின்றது! அதனால் தான் உலகப் பொருள்களிலே நான் இன்பம் காண முடியவில்லை! உலகமே தீப்பற்றி எரிவது போல் எண்ணும் எனக்கு, மனச்சாந்தி எப்படி ஏற்படப் போகிறது!’ என்று மறுமொழி கூறினார்.

கதிரவனும் மேற்றிசையிலே மலைவாயை அடையும் தருணமாயிற்று. மாதர்கள் அனைவரும் மனமுடைந்து நகரை நோக்கிச் சென்று விட்டனர். அந்தி மாலையை நோக்கிய வண்ணம் அரசிளங் குமரர் உலகின் நிலையாமையைப் பற்றி நெடுநேரம் சிந்தித்துக் கொண்டிருந்தார். பின்னர் அவரும் தேர்ப்பாகனும் நகருக்குத் திரும்பிச் சென்றனர்.

நகருக்குள் நுழையும் போதே சில தூதுவர்கள் ஓடி வந்து, இளவரசருக்கு ஆண் மகவு பிறந்திருப்பதாக, ஒரு நற்செய்தியைக் கூறினர். அதைக் கேட்ட சித்தார்த்தர், ‘மகனா பிறந்திருக்கிறான்! எனக்கு மேலும் ஒரு தளை–இராகுலன்[3]–பிறந்திருக்கிறான்!’ என்றார். வேதனையில் அவர் கூறிய பெயரே பின்னால் அக்குமாரனுக்கு நிலைத்து விட்டது.

இரவு முழுதும் இளவரசர் உறக்கம் கொள்ள வில்லை. உடலைப் பற்றியோ, வாழ்க்கையைப் பற்றியோ, கருத்கில்லாமல் காலங்கழித்து வரும் கோடிக்கணக்கான மக்களைப் பற்றி அவர் சிந்தித்துக் கொண்டேயிருந்தார்.

நூறு ஆண்டுகள் மனிதன் உலகில் வாழ்ந்தாலும், அவற்றில் பாதி உறக்கத்திலே கழிகின்றது. பதினைந்து ஆண்டுகள் பாலப் பருவத்தில் பறந்தோடுகின்றன. எஞ்சிய நாட்களிலும் பிணி, பசி, மூப்பு, துன்பம்- இது கான் வாழ்க்கையா? தாள்களில் அணிந்த சிலம்பகள் ஆர்க்கும்படி தவழ்ந்து திரியும் குழந்தைகள் கடைசியில்


‘சொல் தளர்ந்து, கோல் ஊன்றிச்
சோர்ந்த நடையினராய்ப்
பல் கழன்று பண்டம் பழிகாறும்’[4]

நிலைக்கு வந்து விடுகின்றனர். நெடுமரம்போல ஆறடி உயரம் நிமிர்ந்து வளர்ந்த மனிதர்கள், முதுகு வளைந்து கூனிக்குறுகி, உடல் தளர்ந்து, தலை நடுங்கி, தண்டு ஊன்றி விழுந்து இறக்கின்றனர்.

உடல் கல்வினும் வலிதாக என்றும் நிலைத்திருப்பது போல எண்ணித் திரிகின்றனர் மக்கள். ஆனால் உடலின் உண்மையான தன்மை என்ன? அது ‘மரணப் பஞ்சரம்';[5]

காற்றிற் பறக்கும் கானப் பட்டம்; ‘காமக் கனலிலே கருகிடும் சருகு’[6], பாவக்கொடி பற்றிக்கொண்டு வளர்வதற்கு ஏற்ற கொழுகொம்பாக அது விளங்குகின்றது. தோன்றியதிலிருந்து அழியும் வரை அதன் கவலை புலராக் கவலையாகவே உளது.

இந்த உடலில் தோன்றும் நோய்கள் எத்தனை! தோலில் ஒரு துளி கிழிந்து விட்டாலும், அந்தப் புண்ணை ஆற்றுவதற்கு என்ன பாடுபட வேண்டியிருக்கிறது?

‘ஈச்சிற கன்னதோர் தோல் அறினும் வேண்டுமே
காக்கை கடிவதோர் கோல்.’

ஆற்றங்கரையிலுள்ள மரம் போன்றது உடல். எப்போதும் அலையடித்து அதன் வேரிலுள்ள மண்ணை நாள் தோறும் கரைத்துக் கொண்டேயிருக்கின்றது.

வாழ்க்கை நிலைப்பதில்லை. ‘புல் நுனிமேல் நீர்போல் நிலையாமை’. மணப்பறையைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது, அதுவே பிணப்பறையாக மாறிவிடுகின்றது. தந்தை, தாய், தாரம், தமர், மக்கள் எல்லோரும் சந்தையிலே கூடியுள்ள கூட்டம் எவரும் உயிரைப் பிரியாமல் பிடித்து வைத்துக்கொள்ள முடியாது.

‘நின்றான், இருந்தான், கிடந்தான், தன்
கேள் அலறச் சென்றான்...’

என்பதே மனிதனின் சரித்திரம்! ஆகவே, ‘இருப்பது பொய், போவது மெய்’ என்ற உண்மை சித்தார்த்தரின் உள்ளத்தில் பசுமரத்திற் பதிந்த ஆணிபோல் நிலைத்து விட்டது. இன்பம் துன்பத்திலும், அன்பு பிரிவிலும், வாழ்வு மரணத்திலும், மரணம் புதுப் பிறவிகளிலும் முடிவடைகின்றன. பிறவி தோறும் உயிர்கள் பொய்ம்மை மயக்கத்தில் ஆழ்ந்திருக்கின்றன. மரணத்திற்குக் காரணம் எது? மனிதன் மரணமற்ற வாழ்க்கையைப் பெறுவது எப்படி? மனிதன் துக்கம் நீங்கிச் சுகம் பெறுவது எக்காலம்? இத்தகைய கருத்துக்களை அவர் மனம் ஆராய்ந்து கொண்டிருந்தது.

இளவரசர் வெளியே சென்ற பிறகு நிகழ்ந்த செய்திகள் அனைத்தையும் மன்னர் உதாயி மூலம் கேட்டறிந்து உள்ளம் துடித்தார். பேரிடிகள் பல ஒரே சமயத்தில் தம்மைத் தாக்கியது போல வருந்தினார். பெரியதொரு விபத்து தம்மை நோக்கி வேகமாக வந்துகொண்டிருப்பதை எண்ணி எண்ணி அவர் இரங்கினார். வைகறை வரையில் அவரும் கண்ணை மூடவேயில்லை.

  1. ‘ஆசிய ஜோதி.’
  2. உதாயி. அரண்மனைப் புரோகிதரின் மைந்தன்.
  3. இராகுலன் முன்னதாகவே பிறந்திருந்தான் என்று அசுவகோஷர் குறித்துள்ளார். பின்னால் சித்தார்த்தர் கானகத்தில் கடுந்தவம் இயற்றி வருகையில், அவர் உடல் மெலிந்து இறந்து போனார் என்ற வதந்தியைக் கேட்டுக் கபிலவாஸ்துவில் மன்னரும் மற்றோரும் சோகத்தில் ஆழ்ந்திருந்த சமயத்தில் அவன் பிறந்தான் என்றும் சில வரலாறுகள் உண்டு.
    இராகுலன் என்ற பெயருக்குத் தளை அல்லது விலங்கு போன்றவன் என்று சிலர் பொருள் கூறுவர். இராகு என்னும் பாம்பினால் விழுங்கப் பெற்ற மதி போன்றவன் என்பதால் அவனுக்கு இராகுலன் என்று பெயர் வந்ததாகவும், மதி இராகுவால் பீடிக்கப்பெற்ற சமயம் அவன் பிறந்ததால் அப்பெயர் அமைந்ததாகவும் வேறு சிலர் கூறுவர்.
  4. நாலடியார்
  5. பஞ்சரம்-கூடு
  6. நாலடியார்