உள்ளடக்கத்துக்குச் செல்

நாலடியார்

விக்கிமூலம் இலிருந்து

சமண முனிவர்கள் இயற்றிய நாலடியார் மூலமும் உரையும்

[தொகு]

உரையாசிரியர் தமிழ்ப்புலவர் களத்தூர்

[தொகு]

வேதகிரி முதலியாரவர்கள்

[தொகு]

சென்னை- 1940


கடவுள் வாழ்த்து

(நேரிசை வெண்பா)
வானிடு வில்லின் வரவறியா வாய்மையாற்

வான் இடு வில்லின் வரவு அறியா வாய்மையால்

கானிலந் தோயாக் கடவுளை - யாநிலஞ்

கால் நிலம் தோயாக் கடவுளை - யாம் நிலம்

சென்னி யுறவணங்கிச் சேர்துமெம் முள்ளத்து

சென்னி உற வணங்கிச் சேர்தும் எம் உள்ளத்து

முன்னி யவைமுடிக வென்று.

முன்னியவை முடிக என்று.

பதவுரை
வான்= மேகத்தில்; இடு= இடப்பட்ட; வில்லின்= இந்திரவில்லினது (காட்சியொத்த); வரவு= பிறப்பு வரவை; அறியா= அறிந்து; வாய்மையால்= உண்மையினால்; கால்= திருவடிகள்; நிலம்= பூவுலகில்; தோயா= படியாத; கடவுளை= முதற்கடவுளை; யாம்= நாம்; நிலம்= பூமியில்; சென்னி- சிரசானது; உற= பொருந்த; வணங்கி= பணிந்து; எம்= எம்முடைய; உள்ளத்து= இருதயத்தில்; முன்னியவை= நினைந்தனவாகிய (அறம் பொருள் இன்பமென்னு முப்பால்களும்); முடிக என்று= முடியவேண்டும் என்று நினைத்து; சேர்தும்= அடைவோம்.
கருத்துரை
வான வில்லினது தோற்றமும், அழிவும் நிகர்த்த பிறப்பையும் இறப்பையும்அறிந்து, என் மனதில் நினைந்தவை முடிக என்று நினைத்துக், கடவுளை வணங்குவோம்.
விசேடவுரை
'முன்னியவை' என்றதற்கு 'உள்ளத்து நினைந்தவை யாவும்' எனப் பொருள்கொளளினும் பொருந்தும். மேகத்தில் வில்லிடுகிறதும், கெடுகிறதுந் தெரியாமை போலப், பிறப்பு உ்ண்டாதலும் இறப்பு உ்ணடாதலுந் தெரியா; ஆதலால், வில்லைப் பிறப்புக்கு உவமை கூறினார்.
யாம்- எழுவாய்; சேர்தும்- பயனிலை; கடவுளை- செயப்படுபொருள். நாலடியார் என்பதில் 'ஆர்' விகுதி உயர்வுப் பொருட்கண் வந்தது. குறள் வெண்பா இரண்டடி, சிந்தியல் வெண்பா மூன்றடி, பஃறொடை வெண்பா பலவடி, இவை போலாகாமை, இந்நூல் வெண்பா நானூறும் நாலடியாக வந்தமையால் 'நாலடி' என்று காரணப்பெயர் பெற்றது.

அகத்தியம்

தொகுத்த கவியைச் சொற்சொல் லாகப் / தொகுத்த கவியைச் சொல் சொல்லாகப்
பகுத்துப் பொருள்சொலல் பதவுரை யாமே." / பகுத்துப் பொருள் சொலல் பதவுரை ஆமே.

"கவிப்பொருள் சுருக்கிக்காட்ட றாற்பரியம்." (கவிப் பொருள் சுருக்கிக் காட்டல் தாத்பரியம்)

1-ஆவது அறத்துப்பால்

[தொகு]

(அஃதாவது, விதித்தவை கொள்ளலும், விலக்கியவை தள்ளலுமாம்)


துறவறவியல்

[தொகு]

1-ஆம் அதிகாரம் செல்வ நிலையாமை

[தொகு]

(அஃதாவது, செல்வமானது நிலைநில்லாமையாம்)

பாடல்: 01 (அறுசுவை)

[தொகு]
அறுசுவை யுண்டி யமர்ந்தில்லா ளூட்ட

அறு சுவை உண்டி அமர்ந்து இல்லாள் ஊட்ட

மறுசிகை நீக்கி யுண்டாரும் - வறிஞராய்ச்

மறு சிகை நீக்கி உண்டாரும்- வறிஞர் ஆய்ச்

சென்றிரப்ப ரோரிடத்துக் கூழெனிற், செல்வமொன்

சென்று இரப்பர் ஓர் இடத்துக் கூழ் எனில் செல்வம் ஒன்று

றுண்டாக வைக்கற்பாற் றன்று. (1)

உண்டு ஆக வைக்கல் பாற்று அன்று.

பதவுரை
அறு சுவை= அறுவகை ருசியாகிய; உண்டி= உணவை; அமர்ந்து= விரும்பி; இல்லாள்= மனைவி; ஊட்ட= ஊட்டுதல் செய்ய; மறு= மறுக்கப்பட்ட; சிகை= (வன்மையான) பதார்த்தங்களை; நீக்கி= தள்ளி; உ்ண்டாரும்= (மென்மையான பதார்த்தங்களை) உண்டாரும்; வறிஞர் ஆய்= தரித்திரராய்; ஓர் இடத்து= வேறோர் இடத்தில்; சென்று= போய்; கூழ்= கூழினை; இரப்பர் எனில்= யாசிப்பாராகில்; செல்வம்= ஐசுவரியமானது; ஒன்று உண்டு ஆக= ஒரு பொருள் உள்ளதாக; வைக்கல்= வைக்கும்; பற்று= பகுதியுடையது; அன்று= அல்ல.
கருத்துரை
அறுசுவைப் போசன பதார்த்தங்களை மனையாள் ஊட்டுதல் செய்ய உ்ண்ட செல்வர்களும் ஓரிடத்திற்போய்க் கூழை இரந்து உண்பாரானால் செல்வமானது, ஒருபொருளாக வைக்கும் பகுப்பு உடையதல்ல.
விசேடவுரை
"சிகையென் பதுவே பதார்த்த மாகும்
அதுவே வன்மை மென்மை யெனப்படும்." - (அரும்பதக்கொத்து)


இவ்விதியால் சிகையென்பது பொதுப்படப் பதார்த்தமாம். செல்வர்கள் வன்மையான பதார்த்தங்களை வருத்தமுற்றுக் கடித்து உண்ணுதல் அரிதாகலின் 'மறுசிகை நீக்கி' என்றார். இளமை நிலையாமையில்,

"பருவ மெனைத்துள பல்லின்பா லேனை
இருசிகையு முண்டீரோ."

என்றதில் வயதின் அளவையும், பற்களின் வலியின் அளவையும் வினவியவிடத்தும், 'இருசிகை' என்றதற்குப் பொருள், வன்மையான பதார்த்தங்களும் மென்மையான பதார்த்தங்களுமேயாம். சிகை, படைத்த சாதமெனினும், ஒருபிடி சொறு எனினும் பொருந்தும். முற்சிகை நீக்கிப் பிற்சிகை உண்டாரும் எனக் கொள்ளினும் அமையும். செல்வம்- எழுவாய்; வைக்கற்பாற்றன்று- பயனிலை.

பாடல்: 02 (துகடீர்)

[தொகு]
துகடீர் பெருஞ்செல்வந் தோன்றியக்காற் றொட்டுப் /துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க /பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க
அகடுற யார்மாட்டு நில்லாது செல்வஞ் / அகடு உற யார் மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும். / சகடக் கால் போல வரும்.
பதவுரை
அகடு= நடுவுநிலைமை;
உற= பொருந்த,
யார் மாட்டும்= யாவரிடத்தும்,
செல்வம்= ஐசுவரியம்,
நில்லாது= நிற்காது,
சகடம்= தேரின்,
கால்போல்= உருளையைப் போல,
வரும் = (கீழ்மேலாய் மேல் கீழாய்) வரும், (ஆதலால்),
துகள்= குற்றம்,
தீர்= நீங்கிய,
பெரும்= பெரிய,
செல்வம்= சம்பத்தானது,
தோன்றியக்கால்= கிடைத்தால்,
தொட்டு= (கிடைத்தகாலந்)தொடங்கி,
பகடு= ஏர்,
நடந்த= உழுத,
கூழ்= உணவை,
பல்லாரோடு= பற்பலருடன்,
உண்க= நீ யுண்பாயாக.
கருத்துரை
செல்வமானது யாவரிடத்தும் நில்லாது தேர்ச்சக்கரம்போலக் கீழ்மேலாய் மேல்கீழாய் வருமாதலால் செல்வங் கிடைத்தால் பலருடன் உண்ணக்கடவாய்.
விசேடவுரை
`தோன்றியக்கால்` என்பது வினையெச்சமே பெயரெச்சமாகில் ஒற்று மிகாது. `நீ` தோன்றா எழுவாய்; `உண்க` பயனிலை; `கூழ்` செயப்படுபொருள். இதில் `ஐ`யுருபு தொக்கியது. நல்வழியில் வந்த செல்வமென்று அறிதற்குத் `துகடீர்பெருஞ்செல்வம்` என்றார்.

பாடல்: 3 (யானையெருத்தம்)

[தொகு]
யானை யெருத்தம் பொலியக் குடைநிழற்கீழ்ச் யானை எருத்தம் பொலியக் குடை நிழல் கீழ்ச்
சேனைத் தலைவராய்ச் சென்றோரு - மேனை சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - ஏனை
வினையுலப்ப வேறாகி வீழ்வர்தாம் கொண்ட வினை உலப்ப வேறு ஆகி வீழ்வர் தாம் கொண்ட
மனையாளை மாற்றார் கொள. மனையாளை மாற்றார் கொள.
பதவுரை
யானை= யானையினது;
எருத்தம்= பிடரியில்;
பொலிய= பிரகாசிக்க;
குடை= வெண்குடையின்;
நிழல் கீழ்= நீழலின் கீழே;
சேனை= சதுரங்க சேனைக்கும்;
தலைவராய்= முதல்வராய்;
சென்றோரும்= சென்ற அரசர்களும்;
ஏனைவினை= தீவினை;
உலப்ப= கெடுக்க;
வேறாகி= வேறுபட்டு;
தாம்=தாங்கள்;
கொண்ட= இல்வாழ்க்கைக்குத் துணையாகக் கொண்ட;
மனையாளை= மனையவளை;
மாற்றார்= பகைவர்;
கொள= கைக்கொள்ள;
வீழ்வர்= கெடுவர்.
கருத்துரை
சதுரங்கசேனைக்குத் தலைவராய்ச் சென்ற அரசர்களும்,தீவினை கெடுக்க வேறுபட்டுத் தங்கள் மனைவியைப் பகைவன் கைக்கொள்ளக் கெடுவார்கள்.
விசேடவுரை
சென்றோர்- எழுவாய், வீழ்வர்= பயனிலை, உம்மை- சிறப்பும்மை.

பாடல்: 4 (நின்றன)

[தொகு]
நின்றன நின்றன நில்லா வெனவுணர்ந் நின்றன நின்றன நில்லா என உணர்ந்து
தொன்றின வொன்றின வல்லே செயின்செய்க ஒன்றின ஒன்றின வல்லே செயின் செய்க
சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன் சென்றன சென்றன வாழ் நாள் செறுத்து உடன்
வந்தது வந்தது கூற்று. வந்தது வந்தது கூற்று.
பதவுரை
வாழ்நாள்= ஆயுள்கள்;
சென்றன சென்றன= போயின போயின;
செறுத்து= கோபித்து;
உடன்= உடனே;
கூற்று=இயமன்;
வந்தது வந்தது= வந்தான் வந்தான்; (ஆதலால்),
நின்றன நின்றன= நின்றனவாகிய நின்பொருள்கள்;
நில்லா என= நிற்காவென;
உணர்ந்து= அறிந்து;
ஒன்றின ஒன்றின= பொருந்திய ஒருவகை (தருமத்தை);
செயின்= செய்வையாகில்;
வல்லே= சீக்கிரத்தில்;
செய்க= செயக்கடவாய்.
கருத்துரை
ஆயுள்கள் போயின. இயமன் வந்தான். நின்றனவான செல்வங்கள் நில்லாவென அறிந்து, பொருந்திய தருமங்களை நீ செய்தால் சீக்கிரஞ் செய்யக்கடவாய்.
விசேடவுரை
இலக்கணத்திரட்டு
”உயர்திணை யீறுபோ லஃறிணை வருதலும்
அஃறிணை யீறுபோ லுயர்திணை வருதலு
மருகல் விதியென வறைந்தன ரான்றோர்.”
இவ்விதியால் `கூற்று` என்னும் அஃறிணை ஈறு உயர்திணைக்கு வந்தது. `சென்றன சென்றன`, `வந்தன வந்தன` அவை விரைவின்கண் இரட்டித்தன. `நீ`- தோன்றா எழுவாய், `செய்க`- பயனிலை.

பாடல்: 5 (என்னானும்)

[தொகு]
என்னானும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால் என்னானும் ஒன்று தம் கை உறப் பெற்றக்கால்
பின்னாவ தென்று பிடித்திரா - முன்னே பின் ஆவது என்று பிடித்து இரா - முன்னே
கொடுத்தார் உயப்போவர் கோடில்தீக் கூற்றம் கொடுத்தார் உயப் போவர் கோடு இல் தீக் கூற்றம்
தொடுத்தாறு செல்லும் சுரம். தொடுத்து ஆறு செல்லும் சுரம்.
பதவுரை
என் ஆனும்= யாதாகிலும்;
ஒன்று= ஒருபொருள்;
தம்= தமது;
கை= கையில்;
உற= பொருந்த;
பெற்றக்கால்= பெற்றால்;
பின் ஆவது என்று= பின் கொடுப்போம் என்று;
பிடித்து இரா= பிடித்திராமல்;
முன்னே= முற்காலத்தில்;
கொடுத்தார்= கொடுத்தவர்கள்;
கோடு= தன்செய்கையிற் கோட்டம்;
இல்=இல்லாத;
தீ=பொல்லாத;
கூற்றம்= இயமன்;
தொடுத்து= பாசத்தாற்கட்டி;
செல்லும்= போகும்;
சுரம்= பாலைவனத்தினது;
ஆறு=வழியை (நீக்கி);
உயப் போவர்= பிழைத்துப் போவார்கள்.
கருத்துரை
யாதாகிலும் ஒருபொருள் தம்கையிற் பெற்றால், பின் கொடுப்போம் என்று வைத்திராது முன் கொடுத்தவர்கள், இயமன் கொண்டுபோம்வழியை நீங்கிப் பிழைத்துப் போவார்கள்.
விசேடவுரை
கொடுத்தார் -எழுவாய். உயப்போவார்- பயனிலை, ஆறு- செயப்படுபொருள். இதில் ஐயுருபு தொக்கியது. காலையின் மலர்ந்த மலர், மாலையின் உலர்ந்து அழியுமாறு பொற் செல்வம் அழிதல் பற்றி `முன்னே கொடுத்தார்` என்றார்.

பாடல்: 6 (இழைத்தநாள்)

[தொகு]
இழைத்தநா ளெல்லை யிகவா பிழைத்தொரீஇக் இழைத்த நாள் எல்லை இகவா பிழைத்து ஒரீஇக்
கூற்றங் குதித்துய்ந்தா ரீங்கில்லை - யாற்றப் கூற்றம் குதித்து உய்ந்தார் ஈங்கு இல்லை - ஆற்றப்
பெரும்பொருள் வைத்தீர், வழங்குமின், நாளைத் பெரும் பொருள் வைத்தீர் வழங்குமின் நாளைத்
தழீஇந்தழீஇந் தண்ணம் படும். தழீஇம் தழீஇம் தண்ணம் படும்.
பதவுரை
இழைத்த= தமக்கு அளவுசெய்த;
நாள்= நாள்கள்;
எல்லை= தம் அளவை;
இகவா= கடவா;
கூற்றம்= இயமனை;
பிழைத்து= தப்பி;
ஒரீஇ= நீங்கி;
குதித்து= அவன் குறிப்பைக் கடந்து;
உய்ந்தார்= பிழைத்தவர்கள்;
ஈங்கு= இவ்வுலகத்து;
இல்லை= இல்லை;
நாளை= நாளையே;
தழீஇம் தழீஇம்= தழீம்தழீம் என்னும் ஓசையுடனே;
தண்ணம்= பிணப்பறை;
படும்= சாற்றப்படும்; (ஆகையால்),
ஆற்ற= மிகவும்;
பெரும்= பெரிய;
பொருள்= பொருளை;
வைத்தீர்= தேடி வைத்தவர்களே;
வழங்குமின்= அப்பொருளைத் தானமாகக் கொடுங்கள்.
கருத்துரை
தமக்கு அளவுசெய்த நாள்கள் தம் எல்லையைக் கடவா; இயமனைக் கடந்து பிழைத்தவர்கள் இவ்வுலகத்திலில்லை; நாளையே பிணப்பறை சாற்றப்படும்; பொருளைத் தேடிவைத்தவர்களே நீங்கள் தானம் செய்யுங்கள்.
விசேடவுரை
நீங்கள்- எழுவாய்; வழங்குமின்- பயனிலை. பொருள்- செயப்படுபொருள். இதில் ஐயுருபு தொக்குநின்றது.

பாடல்: 7 (தோற்றஞ்சால்)

[தொகு]
தோற்றஞ்சான் ஞாயிறு நாழியா வைகலுங் தோற்றம் சால் ஞாயிறு நாழி ஆ வைகலும்
கூற்ற மளந்துநுந் நாளுண்ணு - மாற்ற கூற்றம் அளந்து நும் நாள் உண்ணும் - ஆற்ற
வறஞ்செய் தருளுடையீ ராகுமின் யாரும் அறம் செய்து அருள் உடையீர் ஆகுமின் யாரும்
பிறந்தும் பிறவாதா ரில். பிறந்தும் பிறவாதார் இல்.
பதவுரை
தோற்றம்= உதயம்,
சால்= மிகுந்த,
ஞாயிறு= சூரியனை,
நாழி ஆ= அளவுக்கருவியாக,
வைகலும்= தினந்தோறும்,
கூற்றம்= யமன்,
அளந்து= அளவிட்டு,
நும்= உங்களுடைய,
நாள்= ஆயுளை,
உண்ணும்= உண்பான், (ஆகையால்),
யாரும்= யாவரும்,
பிறந்தும்= (மக்கட்பிறப்பாய்ப்) பிறந்தும் (வீணாகாமல்),
பிறவாதாரில்= பிறவாது மோட்சத்திலிருப்பவரைப் போல,
ஆற்ற= மிகவும்,
அறம்= தருமத்தை,
செய்து= பண்ணி,
அருள் உடையீர் ஆகுமின்= கிருபையுடையீராகுங்கள்.
கருத்துரை
இயமன் சூரியனைப்படியாகக்கொண்டு உங்கள் நாளை யளந்து உண்ணுகிறான்; ஆகையால், தருமத்தைச் செய்து கிருபையுடையீராகுங்கள்.
விசேடவுரை
யாரும்- யாவரும், பிறந்தும்- மனிதப் பிறப்பிற் பிறந்தும் அறஞ்செய்யாராகில், பிறவாதிரில்- பிறவாதவர்களின் வைத்தெண்ணப்படுவர் எனினும் அமையும். நீங்கள் தோன்றா எழுவாய். அருளுடையீராகுமின்- பயனிலை. ஆண்பாலும் பெண்பாலும் என்ற்றிதற்கு `யாரும்` என்றார்.

பாடல்: 8 (செல்வர்யா)

[தொகு]
செல்வர்யா மென்றுதாஞ் செல்வுழி யெண்ணாத செல்வர் யாம் என்று தாம் செல்வுழி எண்ணாத
புல்லறி வாளர் பெருஞ்செல்வ - மெல்லில் புல் அறிவாளர் பெரும் செல்வம் - எல்லில்
கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போற் றோன்றி கரும் கொண்மூ வாய் திறந்த மின்னுப் போல் தோன்றி
மருங்கறக் கெட்டு விடும். மருங்கு அறக் கெட்டு விடும்.
பதவுரை
செல்வர்= செல்வமுள்ளோர்;
யாம் என்று= நாமென்று;
தாம்= தாங்கள்;
செல்வுழி= போமிடத்து;
எண்ணாத= நினையாத;
புல்= அற்ப;
அறிவாளர்= அறிவுடையாரது;
பெரும்= பெரிய;
செல்வம்= ஐசுவரியம்;
எல்லில்= இராக்காலத்தில்;
கரும்= கரிய;
கொண்மூ=மேகமானது;
வாய்திறந்த= வாய்விடப்பட்ட;
மின்னுப் போல்= மின்னலைப் போல்;
தோன்றி= உண்டாகி;
மருங்கு= வழி;
அற= முற்றாக;
கெட்டுவிடும்= கெட்டுப்போம்.
கருத்துரை
செல்வமானது மின்னலைப்போலத் தோன்றியழியும், செல்வம் கெட்டுவிடும்.

பாடல்: 9 (உண்ணானொளி)

[தொகு]
உண்ணா னொளிநிறா னோங்கு புகழ்செய்யான் உண்ணான் ஒளி நிறான் ஓங்கு புகழ் செய்யான்
துன்னருங் கேளிர் துயர்களையான் - கொன்னே துன் அரும் கேளிர் துயர் களையான் - கொன்னே
வழங்கான் பொருள்காத் திருப்பானேல், அஆ வழங்கான் பொருள் காத்து இருப்பானேல் அ ஆ
இழந்தானென் றெண்ணப் படும். இழந்தான் என்று எண்ணப் படும்.
பதவுரை
உண்ணான்= உண்ணாதவனாக;
ஒளிநிறான்= பிரகாசத்தை நிறுத்தாதவனாக;
துன்= பெறுதற்கு;
அரும்= அரிய;
கேளிர்= சுற்றத்தாருடைய;
துயர்= துன்பத்தை;
களையான்= நீக்காதவனாக;
வழங்கான்= கொடாதவனாக;
கொன்னே= பயனில்லாமல்;
பொருள்= திரவியத்தை;
காத்து= காத்துக்கொண்டு;
இருப்பான் ஏல்= இருப்பானானால்;
அ ஆ= ஐயோ!
இழந்தான் என்று= இவன் பொருளை யிழந்தான் என்று;

எண்ணப்படும்= (யாவராலும்) எண்ணப்படுவான்.

கருத்துரை
பொருளைத் தேடிச் செலவிடாது வைத்துக் காத்திருந்தவன், பொருளை யிழந்தானென்று யாவராலும் நினைக்கப்படுவான்.
விசேடவுரை
இவன்- தோன்றா எழுவாய், எண்ணப்படும்- பயனிலை. பொருள்-செயப்படுபொருள். இதில் ஐயுருபு தொக்கது. அ ஆ என்றது அருளின்கட் குறிப்பு. நெருங்கிய உறவினரென்று தோன்றுதற்குத் `துன்னருங் கேளிர்` என்றார்.

பாடல் 10 (உடாஅது)

[தொகு]
உடாஅது முண்ணாதுந் தம்முடம்பு செற்றுங் உடாஅதும் உண்ணாஅதும் தம் உடம்பு செற்றும்
கெடாஅத நல்லறமுஞ் செய்யார் - கொடாஅது கெடாத நல் அறமும் செய்யார் - கொடாது
வைத்தீட்டி னாரிழப்பர், வான்றோய் மலைநாட வைத்து ஈட்டினார் இழப்பர் வான் தோய் மலை நாட
வுய்த்தீட்டுந் தேனீக் கரி. உய்த்து ஈட்டும் தேன் ஈக் கரி
பதவுரை
உடாதும்= உடுக்காமலும்;
உண்ணாதும்= உண்ணாமலும்;
தம்= தங்களுடைய;
உடம்பு= உடலை;
செற்றும்= வருத்தியும்;
கெடாத= கெடுதலில்லாத;
நல்= நன்மையாகிய;
அறமும்= தருமங்களையும்;
செய்யார்= செய்யாதவர்களாய்;
கொடாது= யாதுங் கொடாது;
வைத்தீட்டினார்= பொருளைத்தேடி வைத்தவர்கள்;
இழப்பர்= இழப்பார்கள்;
வான்= வானத்தை;
தோய்= அளாவும்;
மலை= மலைகளடங்கிய;
நாட= நாட்டையுடைய; (பாண்டியனே),
தேன்= மலர்த்தேனை;
உய்த்து= ஆராய்ந்து;
ஈட்டும்= சம்பாதிக்கும்;
ஈ= ஈயல்லவோ;
கரி= சாட்சி.
கருத்துரை
பொருளைத் தேடிக்கொடாது வைத்தவர்கள் தேன் ஈயைப் போல இழந்துவிடுவார்கள்.
விசேடவுரை
ஈட்டினார்- எழுவாய்; இழப்பர்- பயனிலை. பொருளை- செயப்படுபொருள்.


செல்வநிலையாமை முற்றிற்று
[தொகு]

பார்க்க

[தொகு]
நாலடியார்- வேதகிரி முதலியாரவர்கள் உரை
நாலடியார் 1.செல்வநிலையாமை
நாலடியார் 2-ஆம் அதிகாரம் -இளமை நிலையாமை
நாலடியார் 3-ஆம் அதிகாரம் - யாக்கை நிலையாமை
நாலடியார் 4-ஆம் அதிகாரம் - அறன் வலியுறுத்தல்
நாலடியார் 5-ஆம் அதிகாரம் - தூய்தன்மை
நாலடியார் 6-ஆம் அதிகாரம் - துறவு
[[]]
"https://ta.wikisource.org/w/index.php?title=நாலடியார்&oldid=1352130" இலிருந்து மீள்விக்கப்பட்டது